ஒரு சிப்பாய் கண்ட கனவு

 

 

புத்த பகவான் ராஜபோகங்களையும் குடும்பத்தையும் துறந்து சன்னியாசி ஆகியவர்.ஆனால் அவர் இலங்கைத் தீவில் நிலாவரையில் ராணுவ முகாமில் உள்ள ஒரு சிப்பாயின் கனவில் தோன்றி தனது சிலையை நிலாவரையில் வைக்குமாறு கூறியதாக அந்த சிப்பாய் கடந்தகிழமை கூறியுள்ளார். ரவூப் ஹக்கீம் முன்பொருமுறை கூறியது போல நாட்டில் புத்தர் சிலைகள் எல்லைக் கற்களாக மாற்றப்பட்டு விட்டன.

அந்தச் சிப்பாய் நிலாவரையில் யாருக்காக நிலத்தை பாதுகாக்கின்றாரோ, அந்த மக்கள் மத்தியில் உள்ள மூளைசாலிகள் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.அவர்களை அவ்வாறு வெளியேற வேண்டாம் என்று நாட்டின் ஜனாதிபதி மன்றாடிக் கொண்டிருக்கிறார்.யாருடைய நிலத்தை யாரிடமிருந்து பாதுகாப்பதற்காக அந்த சிப்பாய் நிலாவரையில் குந்திக் கொண்டிருக்கிறார்?

இலங்கைத்தீவின் மொத்த படைத் தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பகுதி தமிழ்ப் பகுதிகளில் நிலைகொண்டிருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.மிகச்சிறிய இலங்கைத்தீவு தனது அளவுப் பிரமாணத்திற்கு அதிகமாக படையினரைக் கொண்டிருக்கிறது. இப்படையில் மூன்றில் இரண்டு பகுதி வடக்கு கிழக்கை படைமயப்படுத்த நிறுத்தப்பட்டிருக்கிறது என்று ஒரு புள்ளிவிபரம் உண்டு.நாட்டின் பொதுத்துறை ஊதியத்தில் சுமார் 50%படைத்தரப்புக்கு வழங்கப்படுகிறது என்றும், உலகில் 100 பேர்களுக்கு எத்தனை படைவீரர்கள் என்ற விகிதத்தில் இலங்கை பத்தாவது இடத்தில் உள்ளது என்றும் நிஷான் டி மெல்- வெரிற்றே ரிசேர்ச் இன்ஸ்ரிரியூட்டின் பணிப்பாளர்-கூறுகிறார்.இலங்கைத்தீவின் பாதுகாப்புச் செலவினம் நாட்டின் கல்வி மற்றும் சுகாதாரச் செலவினங்கள் இரண்டையும் கூட்டிவரும் தொகையைவிட அதிகமாக இருப்பதும் பொருளாதார சீரழிவுக்கு ஒரு காரணம் என்று நிஷான் கூறுகிறார்.

சிறிய இலங்கைத் தீவு பாகிஸ்தானைப் போலவே தனது பருமனை விடப் பெரிய படைக்கட்டுமானத்தைக் கொண்டிருக்கிறது.பாகிஸ்தானிலும் இப்பொழுது பொருளாதார நெருக்கடி. சில நாட்களுக்கு முன் பாகிஸ்தானிய ஊடகங்களில் வந்த செய்திகளின்படி, அங்கு படையினருக்கு ஒதுக்கப்பட்ட சிறப்பு நிதி குறைக்கப்பட்டதால்,அங்கே படையினருக்குச் மூன்று வேளையும் சாப்பாடு போடக் காசில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் இலங்கைத்தீவில் 13ஆவது திருத்தத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டஞ் செய்யும் பிக்குகளுக்கு மூன்று வேளையும் சாப்பாடு கிடைக்கிறது.நிலாவாரையில் கனவுகண்ட சிப்பாய்க்கும் மூன்று வேளை சாப்பாடு கிடைக்கிறது .

நாட்டின் பெருமளவு செல்வத்தையும் தலைப்பேறானவற்றையும் அனுபவிக்கும் படைக்கட்டமைப்பின் ஆட்தொகையைக் குறைத்தாலே போதும் நாட்டின் செல்வத்தில் பெரும் பகுதியை  மிச்சப்படுத்தலாம். அவ்வாறு படைதரப்பில் ஆட்குறைப்பை செய்ய வேண்டும் என்பது ஐ.எம்.எஃப்பின் நிபந்தனைகளில் ஒன்று என்று  முன்பு கூறப்பட்டது.ஆனால்,அண்மையில் கண்டியில் உரையாற்றிய பொழுது ஜனாதிபதி ஐ.எம்.எஃப் விதித்த 15 நிபந்தனைகளை நிறைவேற்றியது பற்றிப் பேசியிருக்கிறார்.ஆனால் அதில் படை ஆட்குறைப்பு தொடர்பாக எதுவும் பேசவில்லை.சிங்கள பௌத்த பெருந்தேசியவாத அரசியலில் படை ஆட்களின் எண்ணிக்கையை குறைக்க முற்படுவது அரசியல் தற்கொலைக்கு நிகரானது என்பது ரணிலுக்கு தெரியும்.அதனால் அவர் அதனை அடக்கி வாசிக்கின்றாரா, அல்லது 13-வது திருத்தத்தை எதிர்த்து வீதியில் இறங்கியதுபோல படை ஆட்குறைப்பைச் செய்தால் அதற்கும் எதிராகவும் பிக்குகளும் எதிர்க்கட்சிகளும் வீதியில் இறங்கலாம் என்ற ஒரு சாட்டைக்கூறி அந்த விவகாரத்தை ஒத்திவைத்து வருகிறாரா?

ஆனால் படையினரை ஆட்குறைக்காமல் தமிழ்ப் பகுதிகளை ராணுவ மயநீக்கம் செய்யமுடியாது.எனவே பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை அரசாங்கத்தை பிணையெடுக்க முற்படும் ஐ.எம்.எஃப்  போன்ற தரப்புகள் படை ஆட்குறைப்பை ஒரு நிபந்தனையாக முன் வைக்கவில்லையா? அதை ஒரு நிபந்தனையாக முன்வைக்கும்படி தமிழ்த்தரப்பு குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகம் மேற்கு நாடுகளை வற்புறுத்தவில்லையா? படையினரை ஆட்குறைக்காமல் பொருளாதாரத்தை நிமிர்த்த முடியுமா? படை ஆட்களின் எண்ணிக்கையை குறைக்காமல் ஐ.எம்.எஃப்பின் ஏனைய நிபந்தனைகளை நிறைவேற்றலாம் என்று அரசாங்கம் நம்புகின்றதா?

ஆனால்  அரசாங்கம் ஐ.எம்.எஃப்பின்  ஏனைய நிபந்தனைகளைப்  பூர்த்தி  செய்வதற்காக மானியங்களை வெட்டி,உரத்தின் விலை மின்கட்டணம்,வங்கி வட்டி விகிதம்  போன்றவற்றை உயர்த்தியதனால் அடிமட்ட மக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.இன்னொருபுறம்  அரசாங்கம் புதிதாக விதித்திருக்கும் வரியினால் படித்த நடுத்தர வர்க்கம் அதாவது நாட்டில் அதிக வருமானத்தை பெறும் வகுப்பினர்  பதட்டமடையத் தொடங்கியுள்ளார்கள்.

உரமானியத்தை வெட்டியதனால் உரத்தின் விலை கூடியது.அதனால் விவசாயிகள் நெல்லின் விலையைக் கூட்டினார்கள்.நெல்லை வாங்கி விற்கும் வியாபாரிகள் தங்களுடைய லாபத்தையும் சேர்த்து மேலும் விலையைக் கூட்டினார்கள்.அதாவது மானிய வெட்டு, வரி உயர்வு, வங்கி வட்டி அதிகரிப்பு   போன்றவற்றின் சுமைகள் அனைத்தும் சாதாரண மக்களின் தலைகளிலேயே சுமத்தப்படுகின்றன. அதனால்தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜே.வி.பி ஒழுங்குபடுத்திய ஆர்ப்பாட்டத்தில் பெருமெண்ணிக்கையான சிங்களமக்கள் பங்குபற்றினார்கள். அதுபோலவே கடந்த புதன்கிழமை 40க்கும்  குறையாத தொழிற்சங்கங்கள் இணைந்து தமது எதிர்ப்பை காட்டின.இது ஒருபுறம். இன்னொருபுறம் அரசாங்கம்  விதித்திருக்கும் புதிய வரியினால்  நாட்டின் படித்த மேல் நடுத்தர வர்க்கம் நாட்டை விட்டுத்  தப்பியோடத் தொடங்கியுள்ளது.

                              கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜே.வி.பி.திரட்டிய கூட்டம்

கடந்த ஒரு வருடத்தில் மின்சார சபையின் 72 பொறியியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் அவர்களில் 22 பேர் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் பணிபுரிவதாகவும் மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் இணைச் செயலாளர் இசுரு கஸ்தூரிரத்ன கூறியுள்ளார்.நுரைச்சோலை மின்உற்பத்தி நிலையத்தை வழமையாக நடத்துவதற்கு 123 பொறியியலாளர்கள் பணியாற்ற வேண்டும், ஆனால் இன்று 100 பேரே பணிபுரிவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும்,இந்த பொறியியலாளர்கள் பற்றாக்குறையால், வருங்காலத்தில் ஆலையை நிறுத்த வேண்டிய நிலைகூட ஏற்படலாம் என்றும், அப்படி நடந்தால், மின் நெருக்கடி கடுமையாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமில் விஜேசிங்க பின்வருமாறு கூறியுள்ளார்…..“இந்த மாதத்தில் மாத்திரம் 50 முதல் 60 வரையிலான அரச வைத்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். குறிப்பாக,சில வைத்தியர்கள் விடுமுறை பெறாமல் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இருப்பினும், நாட்டை விட்டு வெளியேறியுள்ள மருத்துவ நிபுணர்களின் பெயர் விபரங்களும் எண்ணிக்கையும் சுகாதார அமைச்சினால் இதுவரையில் வெளியிடப்படவில்லை.எமக்கு கிடைக்கப்பெற்றுள்ள தகவலுக்கு அமைவாக மொத்தமாக 1,000க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன”…

“அதேவேளை, கிராமமட்ட மற்றும் நகர்ப்புற  வைத்தியசாலைகளில் வைத்தியர்களின் வெளியேற்றத்தால்  வைத்தியசாலை நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.எனினும்,கொழும்பு தேசிய வைத்தியசாலை, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை மற்றும் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை போன்றன இதுவரை மருத்துவ நிபுணர்களின்  பற்றாக்குறையால் பாதிக்கப்படவில்லை….மேலும், அங்கு விசேட வைத்திய நிபுணர்கள் வைத்தியசாலையில் காணப்பட்ட போதிலும், தாதியர்கள் மற்றும் ஏனைய சுகாதார ஊழியர்கள் வைத்தியசாலைகளை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தொழில்நிமித்தம் சென்றுள்ளனர். அதேவேளை,அதிகளவிலான வைத்திய ஆலோசகர்களும் வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர்” என்று சமில் விஜேசிங்க கூறுகிறார்.

இவ்வாறு ஒருபுறம்,மூளைசாலிகளும் படித்தவர்களும் நாட்டைவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.இன்னொருபுறம்,அண்மையில், அமெரிக்க யுத்தவிமானங்கள் படை அதிகாரிகளோடு நாட்டுக்குள் வந்து போயுள்ளன.திருகோணமலையில் அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து ஒரு கூட்டுத்தளத்தை உருவாக்கப் போவதாக “ஸ்ரீலங்கா கார்டியன்” எனப்படும் இணைய இதழ் கடந்த மாதம் 14ஆம் திகதி ஒரு கட்டுரையைப் பிரசுரித்திருந்தது.ஏற்கனவே இந்திய பாதுகாப்புத்துறை ஆலோசகரும் உளவுத்துறையின் தலைவரும் ரகசியமாக இலங்கைக்கு வந்து போனதாக செய்திகள் கிடைத்தன.

பிச்சையெடுத்த போதிலும் இச்சிறிய தீவு அதன் கேந்திர முக்கியத்துவம் காரணமாக இப்பொழுதும் அதன் கவர்ச்சியை இழக்கவில்லை. அதனால்தான் பேரரசுகள் இச்சிறிய தீவைத் தேடிவருகின்றன. ஏற்கனவே சீனா அம்பாந்தோட்டையில் 99ஆண்டுகளுக்கு நிரந்தரமாக குந்திவிட்டது. கொழும்புத் துறைமுகத்தில் ஒரு பட்டினத்தை கட்டியெழுப்பி விட்டது. சீன விரிவாக்கத்துக்கு எதிராக இந்தியா இலங்கையில் எங்கு தனது கால்களைப்  பரப்பலாம் என்று தீவிரமாக உழைக்கின்றது.வடக்கில் கடலட்டை ஒரு ராஜதந்திரப் பொருளாக மாறிவிட்டது.இச்சிறிய தீவு பேரரசுகள் பங்கிடும் அப்பமாக  எப்பொழுதோ மாறிவிட்டது. ஒருபுறம் இச்சிறிய தீவைப்  பேரரசுகள் தேடி வருகின்றன. இன்னொருபுறம் இச்சிறிய தீவின் படித்த மூளைசாலிகளோ நாட்டை விட்டுத் தப்பிச் செல்கிறார்கள். யாருடைய நிலத்தை யாரிடமிருந்து பாதுகாப்பதற்காக அந்த சிப்பாய் நிலாவரையில் முகாமிட்டிருந்து கனவு காண்கிறார்?

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *