இலங்கை இனப்பிரச்சினை முதலும் கடைசியுமாக ஒரு பிராந்தியப் பிரச்சினைதான். இரண்டாவதாகத்தான் அது ஒரு அனைத்துலகப் பிரச்சினை. சுமாராக கால் நூற்றாண்டுக்கு முன்பு இந்திய இலங்கை உடன்படிக்கை உருவாகியபோது அது பிரதானமாக ஒரு பிராந்திய பிரச்சினையாகவே காணப்பட்டது. அதன் பின் நிகழ்ந்த திருப்பகரமான மாற்றங்களால் அது அதன் தர்க்க பூர்வ விளைவாக ஓர் அனைத்துலக பிரச்சினையாக மாறியது.
முதலாவது திருப்பம், ரஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டமை. இதிலிருந்து தொடங்கி புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. அதோடு அதன் முதலிரு தலைவர்களும் இந்தியாவில் சட்டப்படி தேடப்படும் குற்றவாளிகளாகினர். எனவே, ரஜீவ் கேஸிலிருந்து தொடங்கி புலிகள் இயக்கத்திற்கும் புதுடில்லிக்கும் இடையில் ஒரு சட்டப்பூட்டு உருவாகிவிட்டது. இதிலிருந்து தொடங்கி இனப்பிரச்சினையானது பிராந்தியமயப்படுவதில் குறிப்பிடத்தக்க அளவிற்கு நடைமுறைத் தடைகள் ஏற்பட்டன. இது முதலாவது காரணம்.
இரண்டாவது காரணம் ஏறக்குறைய இதே காலப்பகுதியில் அமெரிக்காவானது ஏகப்பெரு வல்லரசாக எழுச்சி பெற்றமையாகும். கெடுபிடிப் போரின் கடைசிப் படை விலகல்களில் ஒன்றாக ஐ.பி.கே.எப்இன் படை விலகல் காணப்படுகிறது. கெடுபிடிப் போரின் முடிவையடுத்து உருவான ஒரு துருவ உலக ஒழுங்கின் கீழ் உலகில் காணப்பட்ட எந்த ஒரு மோதலும் ஏதோ ஒரு விகிதமளவிற்கு அமெரிக்க மயப்படுத்த வேண்டிய ஓர் உலகச் சூழல் உருவாகியது. இது இரண்டாம் காரணம்.
மூன்றாவது காரணம் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் எழுச்சியாகும். சுமார் கால் நூற்றாண்டுக்கு முன்பு இலங்கை இந்திய ஒப்பந்தம் உருவாகிய போது முன்னணிக்கு வந்திருக்காத ஒரு தோற்றப்பாடு இது. தமிழ்ப் புலப்பெயர்ச்சியின் மூன்றாவது அலை எனப்படுவது 1980 களின் முற்கூறுகளிலிருந்து தொடங்குகின்றது. இது 1990களில் அதன் பிரமிப்பூட்டும் வளர்ச்சியை பெறலாயிற்று. இயல்பாகவே விடா முயற்சியும் உழைப்பார்வமும் சேமிப்பார்வமும் மிக்க ஈழத்தமிழ்ச் சமூகமானது மிகக் குறுகிய காலகட்டத்துள் நிதிப்பலமுடைய நாட்டுப்பற்று மிக்க ஒரு புலம்பெயர் சமூகமாக எழுச்சிபெற்றது. தொடக்கத்தில் வேரற்ற அடையாளமற்ற ஓர் உதிரிச் சமூகமாகக் காணப்பட்ட புலம்பெயர்ந்த தமிழர்கள் நிதி ரீதியாக பலமடையத் தொடங்கிய கால கட்டத்தில் புலம்பெயர்ந்த நாடுகளில் தமது கூட்டு இருப்பை ஸ்திரப்படுத்தவும், கௌரவப்படுத்தவும் வேண்டிய தேவை ஏற்பட்டது. இதே காலப்பகுதியில் தாய்நாட்டில் தனிப்பெரும் சக்தியாக எழுச்சி பெற்று வந்த புலிகள் இயக்கமும் அது கட்டியெழுப்பிய அரைச் சிற்றரசும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு, அவர்களுக்குத் தேவையாக இருந்த கூட்டு அடையாளங்களை அல்லது தேசிய அடையாளங்களை வழங்கலாயின.
இது படிப்படியாக புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகமும் புலிகளின் சிற்றரசும் ஒன்று மற்றதில் தவிர்க்கவியலாமல் தங்கியிருக்கும் ஒரு வளர்ச்சிக்கு இட்டுச் சென்றது. புலிகளின் வீழ்ச்சியையடுத்து தமிழர்களின் அடுத்த கட்ட அரசியல் தங்களிடம் தான் கையளிக்கப்பட்டிருக்கிறது என்று புலம்பெயர்ந்த தமிழர்களில் ஒரு பகுதியினர் நம்புமளவிற்கு இப்பொழுது நிலைமைகள் காணப்படுகின்றன. ஈழத்தமிழர்களின் அரசியலை ஓர் அஞ்சலோட்டத்துடன் ஒப்பிடும் ஒருபகுதி புலம் பெயர் தமிழர்கள் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின் அஞ்சலோட்டக் கோல் தங்களிடமே கையளிக்கப்பட்டிருப்பதாக மிக விசுவாசமாக நம்புகிறார்கள்.
புலம்பெயர்ந்த தமிழர்களின் எழுச்சியோடு ஈழத்தமிழ் அரசியலானது இரண்டு பின்தளங்களைப்பெற்றுவிட்டது. முதலாவது தமிழ்நாடு. இரண்டாவது புலம்பெயர்ந்த தமிழர்கள். இலங்கை இந்திய ஒப்பந்த காலத்தில் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் ஒரு பின்தளமாக பூரண வளர்ச்சி பெற்றிருக்கவில்லை. ஆனால், ஒரு துருவ உலக ஒழுங்கின் எழுச்சியோடு புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகமானது ஒரு பலமான இரண்டாவது பின்தளமாக மேலெழுந்துவிட்டது. இதனால், ஈழத்தமிழர் பிரச்சினையானது திரும்பி வர முடியாத அளவிற்கு மேற்கு மயப்பட்டுவிட்டது. அதாவது, மேற்குமயமாதல் எனப்படுவது அதன் மிகத் தூலமான வடிவத்தை அடைந்துவிட்டது.
மேற்சொன்ன மூன்று காரணங்களின் விளைவாக தமிழர் பிரச்சினை மேற்கு மயப்பட்டு வந்த ஒரு காலச் சூழலில் தான் ரணில் – பிரபா உடன்படிக்கை கைச்சாத்திட்டப்பட்டது. மேற்படி உடன்படிக்கையின் மூலம் இலங்கை இனப்பிரச்சினையானது பிராந்திய அரங்கிற்கு வெளியே போய்விட்டது போலத் தோன்றியது. ஆனால், அனுசரணையாளராக செயற்பட்ட சொல் ஹொய்ம் பேச்சுவார்த்தைகளின் போது கொழும்புக்கு வரமுன்போ அல்லது கொழும்பிற்கு வந்தபின்போ இந்தியாவிற்குச் சென்று பேச்சுவார்த்தைகளின் விபரங்களை அங்கு தெரிவித்து வந்ததை இங்கு சுட்டிக்காட்டலாம். ஒரு துருவ உலக ஒழுங்கின் கீழ் இந்தியாவும் அமெரிக்காவும் பூகோளப் பங்காளிகளாகிவிட்டன. எனவே, தனது ஆடுகளத்தில் தீர்க்கப்படவேண்டிய பிரச்சினை ஒன்று தனது பங்காளியின் ஆடுகளத்திற்கு மையப்பெயர்ச்சி அடைந்ததை இந்தியா ஓரளவிற்கு சுதாகரித்துக்கொண்டது. புலிகள் இயக்கத்திற்கும் புதுடில்லிக்கும் இடையிலிருந்தது உண்மையில் ஒரு சட்டப்பூட்டு அல்ல. அது ஒரு அரசியல் பூட்டுத்தான். அதைத் தொடர்ந்தும் ஒரு சட்டப்பூட்டாகவே பேணுவது என்று இந்தியா எடுத்த முடிவானது ஓர் அரசியல் தீர்மானம் தான். எனவே, மத்தியஸ்தம் மேற்கு நாடுகளிடம் சென்றது. ஒரு தர்க்கபூர்வவிளைவே. ஆனால், புலிகள் இயக்கத்தின் வீழ்ச்சிக்குப் பின் சட்டப்பூட்டிற்கான அவசியம் குறைந்துவிட்டது. எனினும் மேற்குலக அரங்கிலேயே பிரச்சினை தொடர்ந்தும் கையாளப்பட்டு வருகின்றது.
புலிகள் ஆதிக்கத்தில் இருந்தவரை இலங்கைத்தீவில் இந்தியாவிற்கும் தெரிவுகள் சுருங்கிக் காணப்பட்டன. புலிகளின் சரிவுக்குப் பின்னரும் நிலைமைகள் அப்படியொன்றும் பிரகாசமாக இல்லை. தமிழர்களைப் புறக்கணிப்பதன் மூலம் கொழும்புடன் தேனிலவைப் பேணுவதால் சீனாவின் பிரசன்னத்தை குறைக்கலாமென்று இந்தியா சிந்தித்தது. ஆனால், பீஜிங்குடனும், புதுடில்லியோடும் ஒரே நேரத்தில் தேனிலவைக் கொண்டாடுவதற்கு கொழும்பு தயாராகக் காணப்படுகிறது. எந்த நோக்கத்தோடு புதுடில்லியானது தமிழர்களை உதாசீனம் செய்துவிட்டு கொழும்பை நெருங்கி வந்ததோ அது ஈடேறவில்லை. இத்தகைய பொருள்படக் கூறின் இந்தியா தனக்கு விருப்பமான தெரிவுகளை இலங்கைத்தீவில் உருவாக்க முடியாமல் இருக்கிறது என்றே அர்த்தம்.
அதாவது, தொகுத்துக் கூறின், மிகச் சிறிய மக்கள் கூட்டமாகிய ஈழத்தமிழர்கள் மத்தியிலிருந்து தோன்றிய சிறிய விடுதலைப்புலிகள் இயக்கமானது உலகின் சக்திமிக்க நாடுகளின் நிகழ்ச்சி நிரல்களையெல்லாம் வெற்றிகரமாக குழப்பிவிட்டு இறுதியில் தானும் வீழ்ச்சியுற்றுவிட்டது.
இப்பொழுது புலிகள் இயக்கம் அரங்கில் இல்லாத இலங்கைத்தீவில் உலகின் ஏகப்பெரு வல்லரசும் பிராந்திய வல்லரசும் தமக்கான தெரிவுகளை உருவாக்குவதற்கு முயற்சித்து வருகின்றன. அதற்கான அரங்கே ஜெனிவாவில் நடக்கும் மனித உரிமை கூட்டத்தொடர் ஆகும்.
ஆனால், இங்குள்ள துயரம் என்னவெனில், எந்தவொரு தரப்பு பிரதான நடிகர்களில் ஒருவராக இருக்கவேண்டுமோ அந்தத்தரப்பு அதாவது, தமிழ் தரப்பு பார்வையாளர்களாக அல்லது நொதியங்களாக அல்லது அமுக்கக் குழுக்களாக அதாவது ‘‘லொபியாக” சுருங்கிக் காணப்படுகிறது. எந்தத் தரப்பு பிரதான மத்தியஸ்தராக இருக்கவேண்டுமோ அந்தத் தரப்பு அதாவது இந்தியாவானது கிரிக்கெட்டில் வரும் மூன்றாவது அம்பயரைப் போல நிலைமைகளை மௌனமாக கவனித்துக்கொண்டிருக்கின்றது.
ஜெனீவாவில் எத்தகைய முடிவு எடுக்கப்பட்டாலும் அது அதன் இறுதி வடிவத்தைப்பெறமுன் புதுடில்லியோடு கலந்தாலோசிக்கப்பட வேண்டியே இருக்கும். இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் இறுதி முடிவுகளை இந்தியாதான் எடுக்கமுடியும். பூகோளப் பங்காளியை மேவி இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்கா தனது எந்தவொரு முக்கிய முடிவையும் எடுக்காது. இத்தகைய பொருள்படக்கூறின் ஈழத்தமிழரைப் பொறுத்த வரையில் புதுடில்லி தான் ஜெனிவா.
இலங்கை அரசாங்கம் இதை நன்கு விளங்கிவைத்திருக்கிறது என்பதனால் தான் அவர்கள் முதலில் இந்தியாவை கையாள முற்பட்டார்கள். ஒரு இந்தியரான சுப்பிரமணிய சுவாமியை கையாள முற்பட்டார்கள். ஆனால், சனல் 4 தமிழ் நாட்டில் உருவாக்கியுள்ள கொந்தளிப்பான உளவியலை நிதானமாக கையாள வேண்டி இருப்பதனால் இந்தியா தன்னுடைய மூன்றாவது அம்பயர் என்ற வகிபாகத்தை தொடர்ந்து தந்திரமாகப் பேணியபடி அமெரிக்காவுடன் பேசுமாறு கொழும்பிற்கு ஆலோசனை கூறியது. கொழும்பானது இந்த ஆலோசனையின் பிரகாரம் இரு முனைகளைத் திறந்தது. ஒன்று புலம்பெயர் தமிழர்களுக்கு அல்லது தமிழ் ‘‘லொபிக்கு” எதிரான சுப்பிரமணிய சுவாமியின் நகர்வு. மற்றது ஜப்பான்.
ஜெனிவாவில் நிகழ்வது இலங்கை அரசாங்கத்திற்கும் புலம்பெயர்ந்த புலிகளின் லொபிக்கும் இடையிலான ஒரு பலப்பரீட்சையே என்ற சித்திரத்தை சுப்பிமணிய சுவாமியும் கொழும்பிலுள்ள சில ஊடகங்களும் ராஜதந்திரிகளும் அரசியல்வாதிகளும் உருவாக்கி வருகிறார்கள். ஜெனிவா தீர்மானத்தின் மூலம் புலிகள் இயக்கம் மீள உயிர்ப்பதற்குத் தேவையான ஓக்சிஜன் வழங்கப்படக்கூடாது என்ற கருத்தை வலியுறுத்துவதன் மூலம் மேற்கு நாடுகளின் முடிவுகளில் மாற்றங்களை ஏற்படுத்த இவர்கள் முயற்சிக்கிறார்கள். இது ஒரு முனை.
மற்றொரு முனை ஜப்பானில் திறக்கப்பட்டிருக்கிறது. ஜப்பான் இலங்கைத்தீவின் பாரம்பரிய நண்பன். முன்பொருமுறை அனைத்துலக அரங்கில் ஜே.ஆர். ஜெயவர்த்தன ஜப்பானுக்காக பரிந்து பேசியிருக்கிறார். அமெரிக்காவுக்கு மிக நெருக்கமான நாடு ஜப்பான். எனவே, ஜப்பானுக்கூடாக அமெரிக்காவை கையாளலாமா என்று இலங்கை அரசாங்கம் எத்தனிக்கிறது.
இந்த இடத்தில் ஒன்றைச் சுட்டிக்காட்டலாம். இலங்கை அரசாங்கம் இந்தியாவிற்கு ஊடாகவே நிலைமைகளைச் சுதாகரிக்க முற்படுகிறது. ஒருபுறம் கொந்தளிக்கும் தமிழ்நாடு இன்னொரு புறம் முறிக்கப்படவியலாத் தேனிலவு. இரண்டுக்குமிடையே கிழிபடுகிறார் மூன்றாவது அம்பயர். ஆனால், அரசினை உடைய தரப்பாகவும், பெரும்பான்மை இனமாகவும் வெற்றிபெற்ற தரப்பாகவும் காணப்படும் ஒரு தரப்பானது முன்வளமாக அரங்கைத் திறக்கிறது. அதாவது இந்தியாவுக்கு ஊடாக நிலைமைகளை கையாள முற்படுகிறது. ஆனால், அதேசமயம் அரசற்ற தரப்பாகவும் சிறுபான்மை மக்களாகவும் தோல்வியுற்ற தரப்பாகவும் காணப்படும் ஒரு தரப்பானது பின்வளமாக அதாவது மேற்கு வாசல்களுக்கு ஊடாக நிலைமைகளை கையாள வேண்டியிருக்கிறது என்பது ஒரு துயரமான முரண்தான்.
15-03-2013