கிழக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு நண்பர் அண்மையில் கேட்டார். “கேப்பாபுலவு போராட்டத்தையும் அதைப் போன்ற ஏனைய போராட்டங்களையும் இப்பொழுது வழி நடத்துவது யார்? அவற்றுக்கு ஊடகங்கள் ஏன் இப்பொழுது முன்னரைப் போல முக்கியத்துவம் கொடுப்பதில்லை? ” என்று. அண்மையில் கேப்பாபுலவு மக்கள் தமது போராட்டத்தை கொழும்பிற்கு எடுத்துச் சென்றார்கள். சமவுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் ஓர் ஆர்ப்பாட்டம் கொழும்பில் ஒழுங்குபடுத்தப்பட்டது. 500க்கும் குறையாதோர் அதில் பங்குபற்றியிருந்தார்கள். வட மாகாண சபைக்குள் ஏற்பட்ட குழப்பத்தை விடவும் மேற்படி செய்தி குறைந்தளவே கவனிப்பைப் பெற்றது.
கேப்பாபுலவிலும், முல்லைத்தீவிலும், வவுனியா, கிளிநொச்சி, மருதங்கேணி, இரணைதீவிலும், திருகோணமலையிலும் மக்கள் தொடர்;ச்சியாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டம் அதன் நூறாவது நாளைக் கடந்த பொழுது கிளிநொச்சியில் ஓர் ஆர்;ப்பாட்டம் ஒழுங்குசெய்யப்பட்டது. தமிழ் சிவில் சமூக அமையமும் உட்பட செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் போன்றோர் அதில் கலந்து கொண்டார்கள். அரசுத் தலைவரோடு ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்து தருவதாக ஆளுநர் உறுதியளித்ததைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் முடிவிற்கு வந்தது. வாக்களித்தபடி அரசுத்தலைவர் போராட்டக்காரர்களைச் சந்தித்தார். சுமார் 42 நிமிடங்கள் அச்சந்திப்பு நிகழ்ந்தது. தொடக்கத்தில் அரசுத் தலைவர் அதை வழமைபோல அணுக முற்பட்டாராம்.ஆனால்; பாதிக்கப்பட்ட மக்கள் அழுத்தமாக தமது நிலைப்பாட்டை முன்வைத்த பொழுது அரசுத்தலைவர் ஒரு கட்டத்தில் சில நடவடிக்கைகளை உடனடியாகச் செய்வதாக உறுதியளித்தாராம்.. உறுதியளித்த படியே அவர் சில நகர்வுகளை மேற்கொண்டார். ஆனால் அதற்குப் பின் பெரிய திருப்பங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று சம்பந்தப்பட்ட மக்கள் கூறுகிறார்கள். எனவே அவர்கள் அரசுத் தலைவருக்கு அண்மையில் ஒரு மின்னஞ்சலை அனுப்பியிருக்கிறார்கள். அம்மின்னஞ்சலுக்கு வரக்கூடிய பதிலை வைத்து அவர்கள் அடுத்த கட்டத்தைத் தீர்மானிப்பார்கள்.
முள்ளிக்குளத்திலும், இரணைதீவிலும் ஓர் அரச சார்பற்ற நிறுவனம்தான் போராட்டத்திற்கான தொடக்க வேலைகளை ஒழுங்கமைத்தது. போராட்டம் சூடு பிடிக்கத் தொடங்கிய பொழுது திருச்சபையும், அரசியல்வாதிகளும், செயற்பாட்டாளர்களும் அந்த மக்களோடு இணைந்தார்கள். போராட்டம் அதிகரித்த கவனிப்பை பெறத் தொடங்கிய பொழுது அரசாங்கம் காணிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டது. ஆனால் ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஒப்புக்கொண்டபடி காணிகள் விடுவிக்கப்படவில்லை. மக்களுடைய வீடுகளில் தொடர்ந்தும் படையினரே குடியிருக்கிறார்கள்.
இரணைதீவில் போராடும் மக்களை துணைப்பாதுகாப்பு அமைச்சர் சென்று சந்தித்தார். உரிய பதிலைத் தருவதற்கு பதினான்கு நாட்கள் அவகாசம் கேட்டிருக்கிறார்கள். வரும் புதன் கிழமையோடு அந்த அவகாசம் முடிவடைகிறது.
மயிலிட்டியில் அண்மையில் துறைமுகப் பகுதி கோலாகலமாக விடுவிக்கப்பட்டது. ஆனால் விடுவிக்கப்பட்டிருப்பது துறைமுகத்தின் மேற்குப் பகுதியும், இறங்கு துறையும் மட்டும்தான். கிழக்குப் பகுதி விடுவிக்கப்படவில்லை. கடலில் ஒரு எல்லைக்கு மேல் போக முடியாத படி தடைகள் ஏற்படுத்தப்பட்டு சிவப்புக்கொடி நடப்பட்டு எல்லையிடப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். வளம் பொருந்திய கிழக்குப் பகுதி படையினரின் பிடிக்குள்ளேயே இருக்கிறது. அது மட்டுமல்ல ஊரை விடுவிக்காமல் இறங்கு துறையை மட்டும் விடுவித்தால் வாழ்க்கை எப்படி சுமுக நிலைக்கு வரும்? மீனவர்கள் ஒதுங்குவதற்கு கரை வேண்டும். தங்கியிருந்து தொழில் செய்வதற்கு கரை வேண்டும். அதாவது விடுவிக்கப்பட்டிருப்பது படகுத்துறை மட்டுமே. முழுக் கிராமமும் அல்ல. கிராமத்தை விடுவித்தால்தான் வாழ்க்கை மறுபடியும் தொடங்கும்.
திருமலையில் போராடும் மக்களை அவர்களுடைய சொந்த அரசியல்வாதிகளே சந்திப்பதில்லை என்று மக்கள் முறையிடுகிறார்கள். கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் அதிகம் பயணம் செய்யும் ஒரு வழியில் ஆளுநரின் அலுவலகத்திற்கு முன்பாக அந்த மக்கள் குந்தியிருந்து போராடுகிறார்கள். ஆனால் அந்த மக்களின் பிரதிநிதிகளில் அநேகர் அந்தப் போராட்டத்தை பொருட்படுத்தவில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. சில மாதங்களுக்கு முன் தமிழ் மக்கள் பேரவை திருமலையில் தனது கூட்டம் ஒன்றை நடாத்தியது. அதற்கென்று சென்ற சில அரசியல்வாதிகள் அங்கு போராடும் மக்களைச் சந்தித்திருக்கிறார்கள்.
திருமலைப் போராட்டம் மட்டுமல்ல. வடக்கில் நிகழ்ந்து கொண்டிருக்கும் பெரும்பாலான போராட்டங்களில் இப்பொழுது அரசியல்வாதிகளை காண முடிவதில்லை. ஊடகவியலாளர்களையும் காண முடிவதில்லை. மேற்படி போராட்டங்கள் தொடங்கிய புதிதில் அரசியல்வாதிகள் அங்கு கிரமமாகச் சென்று தமது வருகையைப் பதிவு செய்தார்கள். ஊடகங்களும் ஒவ்வொரு நாளும் இது போராட்டத்தின் எத்தனையாவது நாள் என்று செய்திகளை வெளியிட்டு போராட்டங்களை ஊக்குவித்தன. ஆனால் அண்மை மாதங்களாக மேற்படி போராட்டக் களங்களில் ஒருவித தொய்வை அவதானிக்க முடிகிறது. அரசியல்வாதிகளோ, ஊடகங்களோ அந்தப் பக்கம் போவது குறைந்து விட்டது. சில செயற்பாட்டாளர்கள் மட்டும் அந்த மக்களோடு தொடர்ச்சியாக தொடர்பில் இருக்கிறார்கள். இது இப்படியே போனால் இப்போராட்டங்கள் தேங்கி நிற்கக் கூடிய அல்லது நீர்த்துப் போகக்கூடிய ஆபத்து உண்டு. ஜல்லிக்கட்டு எழுச்சியின் பின்னணியில் அதிகம் எதிர்பார்ப்போடு பார்க்கப்பட்ட இப்போராட்டங்களின் இப்போதிருக்கும் நிலைக்குக் காரணங்கள் எவை?
மூன்று முதன்மைக் காரணங்களைக் கூறலாம். முதலாவது அரசாங்கம் திட்டமிட்டு இப் போராட்டங்களை சோரச் செய்கிறது. அல்லது நீர்த்துப் போகச் செய்கிறது. இரண்டாவது போராடும் அமைப்புக்களுக்கிடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லை. மூன்றாவது இப் போராட்டங்களுக்கு தலைமை தாங்கவல்ல ஓர் அமைப்போ, கட்சியோ தமிழ் மக்கள் மத்தியில் இல்லை. இவற்றை சற்று விரிவாகப் பார்க்கலாம்.
அரசாங்கம் திட்டமிட்டு வௌ;வேறு உத்திகளைக் கையாண்டு இப்போராட்டங்களை சோரச் செய்கிறது. சில சமயங்களில் அவர்கள் தற்காலிகத் தீர்வை அல்லது அரைத் தீர்வை வழங்குகிறார்கள். உதாரணம் பிலக்குடியிருப்பு. பிலக்குடியிருப்பு மக்கள் இப்பொழுதும் உயர் பாதுகாப்பு வலயத்தின் நிழலில்தான் வசிக்கிறார்கள். படைநீக்கம் செய்யப்படாத முழுமையான ஒரு சிவில் வாழ்வு ஸ்தாபிக்கப்படாத ஒரு பிரதேசமே அது.
வவுனியாவில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை அரசாங்கம் தந்திரமாக முறியடித்தது. உண்ணாவிரதத்தை நிறுத்துவதற்காக துணைப் பாதுகாப்பு அமைச்சர் களத்திற்கு விரைந்தார். அரசுத் தலைவரை சந்திக்கலாம் என்று வாக்குறுதி வழங்கப்பட்டது. ஆனால் உண்ணாவிரதம் நிறுத்தப்பட்ட பின் நடந்த சந்திப்பில் அரசுத் தலைவர் பங்குபற்றவில்லை. அச் சந்திப்பில் கவனத்தில் எடுப்பதாகக் கூறப்பட்ட விடயங்களும் பின்னர் கைவிடப்பட்டன.
முள்ளிக்குளத்தில் போராட்டம் சூடு பிடிக்கத் தொடங்கியதும் காணிகளை விடுவிக்க அரசாங்கம் ஒப்புக்கொண்டது. ஆனால் இன்று வரையிலும் காணிகள் விடுவிக்கப்படவேயில்லை.
இவ்வாறாக ஒன்றில் அரைகுறைத் தீர்வுகளின் மூலம் அல்லது நிறைவேறா வாக்குறுதிகளின் மூலம் போராட்டத்தின் வேகம் தற்காலிகமாக தணிய வைக்கப்படுகிறது. அது மட்டுமல்ல அரசுத் தலைவரை சந்திக்கலாம், பேசித் தீர்க்கலாம் என்று நம்பிக்கைகளை ஊட்டுவதன் மூலம் போராடும் மக்களை எதிர்பார்ப்போடு காத்திருக்க வைப்பதும் ஓர் உத்திதான். அரசுத் தலைவரை சந்தித்தால் பிரச்சினைகள் தீரும் என்று போராடும் மக்கள் நம்பத் தொடங்கினால் அது அரசாங்கத்திற்கு வெற்றிதான்.
இது தவிர மற்றொரு உத்தியையும் அரசாங்கம் கையாளுகிறது. போராடும் மக்கள் மத்தியிலுள்ள சமூகத் தலைவர்களை வசப்படுத்தும் ஓர் உத்தி. வலிகாமத்தில் உள்ள இடம் பெயர்ந்தோர் முகாம்களில் வேலை செய்த ஒரு செயற்பாட்டாளர் சொன்னார். “வலி வடக்கை மீட்பதற்காக போராடிய மக்கள் மத்தியிலிருந்த சில தலைவர்கள் முன்பு மகிந்தவின் காலத்தில் நடக்கும் சந்திப்புக்களில் மாவை சேனாதிராசாவை போற்றிப் புகழ்வார்கள். ஆனால் அண்மைக் காலங்களில் அவர்கள் இராணுவத் தளபதிகளின் பெயர்களைச் சொல்லி அவர்களைப் போற்றிப் புகழக் காணலாம்” என்று. சில தளபதிகளின் தனிப்பட்ட கைபேசி இலக்கங்களை அவர்கள் வைத்திருக்கிறார்கள். அவர்கள் அழைத்தால் தளபதிகள் உடனடியாகப் பதில் சொல்கிறார்கள். “நாங்கள் கை பேசியில் அழைத்தால் எங்களுடைய தலைவர்கள் அதற்குப் பதில் சொல்வதில்லை. ஆனால் மாவட்டத் தளபதி பதில் சொல்கிறார்” என்று ஒரு சமூகத் தலைவர் சொன்னார். இப்படியாக போராட வேண்டிய ஒரு தரப்பை தன்வசப்படுத்தியதன் மூலம் நிலங்களை விடுவிப்பதற்காக போராடத் தேவையில்லை, தளபதிகள் உரிய காலத்தில் அதைச் செய்து தருவார்கள் என்று நம்பும் ஒரு போக்கை உருவாக்குவதும் ஓர் உத்திதான்.
இரண்டாவது காரணம் போராடும் அமைப்புக்களுக்கிடையே பொருத்தமான ஒருங்கிணைப்போ சித்தாந்த அடிப்படையிலான கட்டிறுக்கமான நிறுவனக் கட்டமைப்போ கிடையாது என்பது. இந்த எல்லா அமைப்புக்களுமே பாதிக்கப்பட்ட மக்களை மையமாகக் கொண்டவை. கோட்பாட்டு மைய அமைப்புக்கள் அல்ல. இவற்றில் சிலவற்றை கையாள முற்படும் வெளித்தரப்புக்கள் இந்த அமைப்புக்கள் ஒரு பொது அணியாகத் திரள்வதை விரும்பவில்லை. சில மாதங்களுக்கு முன் வடமாகாண முதலமைச்சரின் தலைமையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சங்கங்களை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. இதில் தாங்கள் அழைக்கப்படவில்லை எனக் கூறி வவுனியாவைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்களில் ஒரு தரப்பினர் எதிர்ப்பறிக்கை விட்டிருந்தார்கள். கோட்பாட்டு அடித்தளம் ஒன்றின் மீது நிறுவனமயப்பட்டிராத காரணத்தினால் தனிநபர் விருப்பு வெறுப்புக்கள், கையாள முற்படும் தரப்புக்களின் அரசியல் அபிலாசைகள், இவற்றோடு பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டத்தின் கனிகளை பறித்துச் செல்லக் காத்திருக்கும் அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்றிட்டங்கள் போன்ற பல காரணிகளினாலும் இந்த அமைப்புக்கள் தங்களுக்கிடையே ஓர் ஒருங்கிணைப்பை பேண முடியாதவைகளாகக் காணப்படுகின்றன.
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகப் போராடும் அமைப்புக்கள் சிலவற்றை சில மாதங்களுக்கு முன்பு கிளிநொச்சியில் தமிழ் மக்களை பேரவையைச் சேர்ந்தவர்கள் சந்தித்தார்கள். அதில் பங்குபற்றிய வவுனியாவைச் சேர்ந்த ஒரு பிரதிநிதி “நாங்கள் போராடத் தொடங்கி இவ்வளவு காலத்தின் பின் நீங்கள் வந்திருக்கிறீர்கள்” என்ற தொனிப்பட கருத்துத் தெரிவித்துள்ளார். சில அரசியல் கட்சிகள் போராட்டங்களை பின்னிருந்து ஊக்குவித்தன. ஆனால் இது விடயத்தில் மாவட்டத்திற்கு மாவட்டம் நிலமைகள் ஒரே நிலமையாகக் காணப்படவில்லை. கட்சிகளுக்கிடையிலான போட்டியும் ஒரு காரணம்.
இவ்வாறாக ஒரு சித்தாந்த அடித்தளத்தின் மீது ஐக்கியப்பட முடியாத அளவிற்கு மேற்படி அமைப்புக்கள் பெரும்பாலும் சிதறிக் காணப்படுகின்றன. இது இரண்டாவது காரணம்.
மூன்றாவது காரணம் பாதிக்கப்பட்ட மக்கள் மைய அமைப்புக்களை சித்தாந்த மைய அமைப்பாகக் காணப்படும் ஓர் அரசியல் இயக்கமோ அல்லது அரசில் கட்சியோ வழிநடத்தவில்லை என்பது. மாக்ஸ்ஸிஸ்ற்றுக்கள் கூறுவது போல புரட்சிகரமான அரசியலை முன்னெடுப்பதென்றால் ஒரு புரட்சிகரமான அமைப்பு வேண்டும். புரட்சிகரமான அமைப்பை கட்டியெழுப்ப வேண்டுமென்றால் ஒரு புரட்சிகரமான சித்தாந்தம் வேண்டும். அப்படிச் சித்தாந்த அடித்தளத்தின் மீது கட்டியெழுப்பப்படவில்லை என்றால் பாதிக்கப்பட்டவர்களின் போராட்டங்களை என்.ஜி.ஓக்கள் தூக்கிச் சென்று விடும். அக்ரிவிசம் எனப்படுவது புரொஜெக்றிவிசமாக மாற்றப்பட்டு விடும்.
இங்கு போராடும் மக்கள் ஒரு சமூகத்தின் கூட்டுக் காயங்களையும், கூட்டு மனவடுக்களையும் பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள். எனவே இவர்களுக்குரிய இறுதித் தீர்வு எனப்படுவது அக் கூட்டுக் காயங்களுக்கு கூட்டுச் சிகிச்சையாக அமையவல்ல ஓர் அரசியல் தீர்வில்தான் தங்கியிருக்கிறது. எனவே இது விடயத்தில் ஓர் ஒட்டுமொத்தத் தரிசனத்தைக் கொண்ட அமைப்பு ஒன்றினால்தான் போராட்டங்களுக்குரிய சரியான வழி வரைபடம் ஒன்றை வரைய முடியும். அந்த வழி வரைபடமானது மேற்படி போராட்டங்களுக்கான வழித்தடத்தை உருவாக்குவது மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் அரசியலின் போக்கையும் தீர்மானிப்பதாக அமைய வேண்டும். அதாவது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டமும், நில மீட்பிற்கான போராட்டமும் ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற ஒட்டுமொத்த போராட்டத்தின் ஒரு பகுதியாகவே அமைய வேண்டும். இப்படிப் பார்த்தால் அந்த வழிவரைபடம் எனப்படுவது 2009 மேக்குப் பின்னரான தமிழ் அரசியல் எப்படி அமைய வேண்டும் என்பதற்கான ஒரு வழிவரைபடம்தான்.
இப்படி ஒரு வழி வரைபடம் தொடர்பில் இன்று வரையிலும் தமிழ் மக்கள் மத்தியில் ஏதும் விவாதங்கள் நடந்ததாகத் தெரியவில்லை. குறிப்பாக 2009 மேக்குப் பின்னரான தமிழ் மிதவாத அரசியல் எப்படி அமைய வேண்டும் என்பது தொடர்பில் காய்தல் உவத்தலற்ற கோட்பாட்டு விமர்சனங்களோ, ஆய்வுகளோ தமிழ் மக்கள் மத்தியில் இன்று வரையிலும் செய்யப்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்களை முன்னிறுத்தியாவது இது தொடர்பான விவாதங்களை எப்பொழுதோ தொடங்கியிருந்திருக்க வேண்டும். அது மட்டுமல்ல. ஒரு மாற்று அணியை உருவாக்குவது தொடர்பான கோட்பாடு மற்றும் செய்முறை உத்திகள் தொடர்பான விவாதங்களும் இங்கிருந்துதான் தொடக்கப்பட வேண்டும்.
ஒரு மாற்று அணியை உருவாக்குவது என்றால் முதலாவது கேள்வி அது ஏன் என்பது? இரண்டாவது கேள்வி அது என்ன செய்யப் போகிறது? என்பது. ஒரு மாற்று அணி ஏன் தேவை என்பது பற்றி ஏற்கெனவே எழுதப்பட்டு வருகிறது. அது ஒரு நடைமுறை அனுபவமாகும். ஆனால் அந்த அணி என்ன செய்யப் போகிறது என்பது தொடர்பில் எத்தனை பேரிடம் சரியான ஒரு செய்முறைத் தரிசனம் உண்டு? மாற்று அணியினர் மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்படுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் இப்போதுள்ள மக்கள் பிரதிநிதிகளை விடவும் குறிப்பாக விக்கினேஸ்வரனைப் போன்றவர்களை விடவும் கூடுதலாக எதைச் செய்யப் போகிறார்கள்? எதிர்ப்பு அரசியல் எனப்படுவது மேடைப் பேச்சுக்களும் தீர்மானங்களும், பிரகடனங்களும், விட்டுக்கொடுப்பற்ற நேர்காணல்களும் மட்டும்தானா? அல்லது கடையடைப்பு, உண்ணாவிரதம், வீதி மறிப்பு, புறக்கணிப்பு, தேர்தல் பகி~;கரிப்பு போன்றவை மட்டும்தானா? இவற்றுக்குமப்பால் புதிய படைப்புத் திறன் மிக்க வெகுசனப் போராட்ட வடிவங்கள் இல்லையா?
அவ்வாறான புதிய படைப்புத்திறன் மிக்க மக்கள் மைய போராட்ட வடிவங்களைக் கண்டு பிடிக்கும் பொழுதே பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்களுக்கும் அடுத்த கட்டம் வெளிக்கும். அதோடு 2009ற்குப் பின்னரான மக்கள் மைய அரசியலுக்கான துலக்கமான ஒரு வழி வரைபடமும் கிடைக்கும். அதுதான் ஒரு மாற்று அணிக்கான வழித்தடமாகவும் இருக்கும்.