கடந்த திங்கட்கிழமை சம்பந்தர் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை சந்தித்திருக்கிறார். இச் சந்திப்பின்போது யாப்புருவாக்கம் பற்றி கதைக்கப்பட்டிருக்கிறது. இவ்வுரையாடலில் சம்பந்தர் அண்மை மாதங்களாக திரும்பத் திரும்பக் கூறிவரும் ஒரு விடயத்தை க்கதைத்திருக்கிறார். அதாவது அனைத்து இன மக்களினதும் பங்களிப்போடு உருவாக்கப்படும் ஒரு யாப்பு இதுவென்று மகிந்தவிற்கு சுட்டிக்காட்யிருக்கிறார். எல்லாவற்றையும் கேட்டபின் மகிந்த சாதகமாகப் பதிலளிக்கவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. அண்மை வாரங்களில் சம்பந்தர் மகிந்தவைச் சந்தித்திருப்பது இது இரண்டாவது தடவை. அவ்வாறு சந்திக்குமாறு அரச தரப்பு அவரைத் தூண்டியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. யாப்புருவாக்கத்திற்கான வழிநடத்தற்குழுவின் இடைக்கால அறிக்கை எட்டு மாதங்களுக்கு மேலாக இழுபட்டு வருகின்றது. அது வரும்சில நாட்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. அது கடந்த எட்டு மாதங்களாக இழுபடுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினரே காரணம் என்று கூறப்படுகின்றது. குறிப்பாக மகிந்தஅணி இது விடயத்தில் ஏதோ ஒரு சாட்டைச் சொல்லி நாட்களைக் கடத்துவதாகவும் கடந்த எட்டுமாத கால இழுபறிக்கு அவர்கள் தான் முக்கிய காரணம் என்று கூறப்படுகின்றது. இத்தகையதோர் பின்னணிக்குள்தான் சம்பந்தரின் சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. இச்சந்திப்பில் சம்பந்தர் குறிப்பிட்ட அனைத்து இன மக்களினதும் பங்களிப்போடு உருவாக்கப்படும் ஒரு யாப்பு என்ற கருத்தை சற்று ஆழமாகப் பார்க்க வேண்டும்.
இனப்பிரச்சினைக்கான தீர்வில் அனைத்து இன மக்களும் பங்களிப்பது என்றால் என்ன? இதை மேலும் ஆழமாகக் கேட்டால் எந்த அடிப்படையில் பங்களிப்பது? என்று கேட்கலாம். அதாவது இனப்பிரச்சினைக்கான தீர்வு என்று வரும் பொழுது சம்பந்தப்பட்ட தரப்புக்களிடையே முதலில் ஒரு சமாதான உடன்படிக்கை செய்யப்பட வேண்டும். தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு முன்மொழிவில் இது பற்றிப் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அப்படி ஒரு சமாதான உடன்படிக்கை செய்யப்படாமலேயே ஒரு தீர்வையும் உள்ளடக்கிய யாப்புருவாக்கம் நடந்து வருகிறது. பல தசாப்தங்களாக போரில் ஈடுபட்ட தரப்புக்களிடையே முதலில் ஓர் உடன்பாடு காணப்பட வேண்டும். தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்குமிடையிலும், தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்குமிடையிலும், சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையிலுமாக ஒரு முக்கூட்டு உடன்படிக்கை செய்யப்படவில்லை. அப்படிச் செய்யப்படும் பொழுதுதான் இச்சிறிய தீவில் இம்மூன்று இனங்களுக்குமிடையிலான நல்லிணக்கத்திற்கான அடிப்படைகள் எவை என்பது பற்றி சிந்திக்கப்பட்டிருக்கும்.
சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் ஆகிய மூன்று தரப்பும் இச் சிறிய தீவின் சக நிர்மாணிகள் (co founders) என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டால் மட்டுமே இலங்கைத் தீவில் பல்லினத்தன்மை மிக்க ஒரு யாப்பை உருவாக்கலாம். நல்லிணக்கத்தையும் நிலைமாறுகால நீதியையும் அவற்றின் சரியான பொருளில் ஸ்தாபிக்கலாம். மாறாக ஆயுத மோதல்கள் முடிவிற்கு வந்தபின் மோதலில் ஈடுபட்ட ஒரு தரப்பு தோற்கடிக்கப்பட்டிருக்கும் ஒரு பின்னணிக்குள் எந்தவொரு சமாதான உடன்படிக்கையுமின்றி நல்லிணக்க முயற்சிகளும் யாப்புருவாக்க முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதாவது தமிழர்களும், சிங்களவர்களும் முஸ்லிம்களும் சகநிர்மாணிகள் என்ற அடிப்படையில் அல்ல. மாறாக வென்றவர்களும், தோற்றவர்களும் என்ற அடிப்படையின் மீதுதான் இம்முயற்சிகள் யாவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இலங்கைத் தீவில் இனப்பிரச்சினையைத் தீர்ப்பது என்பது அதன் முதலாவது பொருளில் இனவாதத்தை வெற்றிகரமாகக் கையாள்வதுதான். தமிழர்களும் முஸ்லிம்களும்; இச் சிறிய தீவின் சக நிர்மாணிகள் என்பதைச் சிங்களத் தலைமைகள் ஏற்றுக்கொள்வதுதான். ஆனால் தேர்தல் காலங்களில் வாக்குவேட்டை அரசியலுக்காக இனவாதப் பூதத்தை தட்டியெழுப்பும் அதே அரசியல்வாதிகள் சமாதான முயற்சிகள் அல்லது யாப்புருவாக்க முயற்சிகளின் போது தாங்கள் உருவேற்றிய அதே பூதத்தை கட்டுப்படுத்த முயல்வது என்பது ஓர் அடிப்படை அக முரணாகும். பைபிளில் ஒரு வசனம் உண்டு. உங்களுக்கு சமாதானம் வேண்டுமானால் நீங்கள் அதற்கு முதலில் தயாராக இருக்க வேண்டுமென்று. ஆனால் கடந்த எட்டு ஆண்டுகளாக அவ்வாறான தயார்ப்படுத்தல்கள் ஏதும் நிறுவன ரீதியிலாக முன்னெடுக்கப்பட்டுள்ளனவா? பேராசிரியர் ஜெயதேவ உயாங்கொட கூறுவது போல ஆட்சி மாற்றத்தின் பின்னரும் கட்டமைப்பு மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை.
கடந்த மாதம் 21ஆம் திகதியிரவு ஜனாதிபதியின் தலைமையில் யாப்புருவாக்கம் தொடர்பில் கலந்துரையாடப்பட்ட பொழுது ஒரு விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒரு பொதுசன வாக்கெடுப்பிற்கு சிங்களப் பொது உளவியலை எப்படித் தயார்ப்படுத்துவது என்பதே அது. பல ஆண்டுகளுக்கு முன்பு திருமதி. சந்திரிக்காவின் ஆட்சிக்காலத்தில் வெண்டாமரை இயக்கத்தை வழி நடத்திய மங்கள சமரவீரவிடம் இது தொடர்பாக கருத்துக் கேட்கப்பட்டுள்ளது. வெண்டாமரை இயக்கம் தொடர்பாக தமிழ் மக்களுக்கு வேறொரு மனப்பதிவு உண்டு. அது ஒரு குரூரமான அசிங்கமான இரத்தம் வடியும் பொய் என்றே தமிழ் மக்கள் நம்புகிறார்கள். எனினும் ஒரு சமாதானச் சூழலை நோக்கி சிங்களப்பொது உளவியலைத் தயார்ப்படுத்துவதே அந்த இயக்கத்தின் நோக்கம் என்று பிரகடனம் செய்யப்பட்டது. இப்பொழுதும் யாப்புருவாக்கத்தின் இறுதிக் கட்டத்தில் ஒரு பொதுசன வாக்கெடுப்பை நோக்கி சிங்களப் பொது உளவியலைத் தயார்ப்படுத்துவதற்கு அவ்வாறு வெண்டாமரை இயக்கத்தைப் போன்ற ஒரு மக்கள் மைய நிறுவனமயப்பட்ட செயற்பாட்டைக் குறித்து சிந்திக்கப்படுகிறது.
ஓர் அரசியல்த் தீர்வை நோக்கி பொது உளவியலை தயார்ப்படுத்துவதற்கு இப்படிப்பட்ட முயற்சிகள் தேவைதான். ஆனால் அதை ஆட்சி மாற்றம் நிகழ்ந்த உடனேயே தொடங்கியிருந்திருக்க வேண்டும். ஆட்சி மாற்றம் நிகழ்ந்த கையோடு சூட்டோடு சூடாக ஒரு சமாதான உடன்படிக்கைக்குரிய அடிப்படைகளை ஏற்படுத்தியிருந்திருக்க வேண்டும். ஆட்சி மாற்றத்தின் போது ஓரளவிற்கு தோற்கடிக்கபட்டிருந்த கடும்போக்கு இனவாதிகள் தங்களை சுதாகரித்துக் கொள்வதற்கு அவகாசத்தை வழங்காது சில துணிச்சலான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தால் இப்பொழுது சிங்களப் பொதுஉளவியலைத் தயார்ப்படுத்துவது குறித்து சிந்திக்க வேண்டி வந்திருக்காது. ஒரு புறம் மைத்திரியும், ரணிலும் ஒரு புதிய யாப்பை நோக்கி சிங்களப்பொது உளவியலை தயார்ப்படுத்தும் பொழுது இன்னொரு புறம் மகிந்த அணி யுத்த வெற்றிவாதத்தை முன்வைத்து தன் அரசியலை முன்னெடுக்கும். அவர்கள் அதற்காக “எலிய”– வெளிச்சம் என்ற பெயரில் ஒரமைப்பை உருவாக்கியிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆயின், எல்லாத் தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு யாப்பு எனப்படுவது எப்படிப்பட்டதாக அமையும்?
யாப்புருவாக்கத்திற்கான உபகுழு ஒன்றின் தலைவராக உள்ள சித்தார்த்தன் சொன்னார் எஸ்.எல்.எவ்பியின் மத்தியகுழு பதின்மூன்றவாது திருத்தச் சட்டத்தை தாண்டிப் போகாத ஒரு தீர்வை ஏற்றுக்கொள்ளும் என்று அமைச்சர் ஜோன் செனவிரட்ண தன்னிடம் கூறியதாக. பதின்மூன்றாவது திருத்தத்திற்கு வெளியில் போகும் ஒரு தீர்வை நீங்கள் எதிர்பார்க்கக்கூடாது என்ற தொனிப்பட ஜோன் செனவிரட்ண சித்தார்த்தனிடம் கூறியிருக்கிறார். அப்பொழுது சித்தார்தன் கேட்டாராம் அப்படியென்றால் எதற்காகப் புதிய யாப்பு? இருக்கின்ற யாப்பையே முழுமையாக அமுல்படுத்தலாமே என்று. அதற்கு ஜோன் செனவிரட்ண சொன்னாராம் இல்லை இல்லை வேறு விடயங்களும் சேர்க்கப்பட வேண்டும் என்று. அதாவது தேர்தல் முறைமைகளில் மாற்றம் செய்வதே அவர்களுடைய பிரதான இலக்காகக் காணப்படுகிறதாம். இத்தகையதோர் பின்னணியில் எல்லாத் தரப்புக்களையும் பங்காளிகளாக்கும் ஒரு யாப்பெனப்படுவது ஒன்றில் கடும்போக்கு இனவாதிகளை தவிர்த்துவிட்டு உருவாக்கப்பட வேண்டும். அல்லது அவர்களையும் பங்காளிகளாக்க வேண்டும். அவர்களைப் பங்காளிகளாக்கினால் பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தையும் தாண்டிச் செல்ல முடியாது. அவர்களை எதிர்ப்பதென்றால் தமிழ் முஸ்லிம் வாக்குகளில் அதிகம் தங்கியிருக்க வேண்டி வரும்.
அப்படி ஒரு நிலை வரும் பொழுது தமிழ் பொது உளவியலை தயார்ப்படுத்தும் வேலைகளை சம்பந்தர் சுமந்திரன் அணியே செய்ய வேண்டியிருக்கும். ஒரு மாற்று அணி பலமாக மேலெழாத ஒரு பின்னணிக்குள் அதைச் செய்வது அவர்களுக்கு பெரியளவிற்கு கஸ்ரமாக இருக்காது. கிடைக்கக்கூடிய ஒப்பீட்டளவில் நியாயமான ஒரு தீர்வு இது என்ற ஒரு வாதத்தை அவர்கள் முன்வைக்கக்கூடும். மகிந்தஅணி மறுபடியும் ஆட்சிக்கு வருவதைத் தடுப்பதற்கு இதுதான் ஒரே வழி என்றும் அவர்கள் கூறக்கூடும். இது விடயத்தில் அவர்களுக்கு ஒப்பீட்டளவில் அச்சுறுத்தலான ஒரு சவால் விக்னேஸ்வரன்தான். தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதியளித்த ஒரு தீர்வை விட குறைந்தளவு தீர்வை ஏற்கக்கூடாது என்று விக்னேஸ்வரனும் தமிழ் மக்கள் பேரவையும் மாற்று அணியைக்குறித்துச் சிந்திக்கும் தரப்புக்களும் ஒன்று திரண்டு எதிர்க்கும் ஒரு நிலை வரலாம். எனவே விக்னேஸ்வரனைச் சமாளித்து விட்டால் நிலமைகளைப் பெருமளவிற்குக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம் என்று சம்பந்தர் சிந்திக்கக்கூடும்.
சம்பந்தர் அவ்வாறு சிந்திப்பதற்குரிய நிலமைகளே தற்பொழுது காணப்படுகின்றன. விக்னேஸ்வரன் சம்பந்தருக்கெதிராக செங்குத்தாகத் திரும்புவார் என்று நம்பத்தக்க நிலமைகள் இன்னமும் வளர்ச்சி பெற்றிருக்கவில்லை. சம்பந்தரை சமாளிக்கலாம் என்று விக்னேஸ்வரன் நம்புகிறார். விக்னேஸ்வரனை சமாளிக்கலாம் என்று சம்பந்தரும் நம்புகிறார். வடமாகாண சபைக்குள் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படுவதற்காக முயற்சிகள் எடுக்கப்பட்ட பொழுது சமரச முயற்சிகளுக்காக சம்பந்தர் அனுப்பிய ஒருவரிடம் அவர் பின்வரும் தொனிப்படச் சொல்லியிருக்கிறார். “என்னைப் பொறுத்தவரை விக்னேஸ்வரனும் தோற்கக்கூடாது. தமிழரசுக்கட்சியும் தோற்கக்கூடாது” என்று. இதுதான் சம்பந்தர்.விக்னேஸ்வரனைத் தன்னால் கையாளப்படத்தக்க ஓரெல்லைக்குள் வைத்திருக்கும் வரை அரசியல்த் தீர்வொன்றைக் கொண்டுவரும் தனது முயற்சிகளுக்குப் பெரிய தடைகளிருக்காது என்று சம்பந்தர் நம்பக்கூடும்.அப்படியொரு நிலை உள்ளவரை விக்னேஸ்வரன் ஒரு மாற்றுஅணியை நோக்கிப் போக மாட்டார்;. பலமான ஒரு மாற்று அணி உருவாகாத வரை சம்பந்தர் தான் கொண்டுவர முற்படும் ஓரரசியல்த் தீர்வை நோக்கித் தமிழ் மக்களை வளைத்தெடுப்பதற்குப் பெரிய தடைகளிருக்காது.
வழிநடத்தற் குழுவின் இடைக்கால அறிக்கை இன்னும் சில நாட்களில் சமர்ப்பிக்கப்படுமோ இல்லையோ தெரியாது. அவ்வறிக்கையில் என்ன இருக்கிறது என்பது அதில் பங்குபற்றும் சம்பந்தருக்கும், சுமந்திரனுக்கும் மட்டுமே தெரியும். கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்கள் எவருக்குமே தெரியாது. வழிநடத்தற் குழுவானது இதுவரை அறுபது தடவைகளுக்கு மேல் கூடிவிட்டது. அதில் என்ன நடக்கிறது என்பதைப்பற்றி பங்காளிக்கட்சிகளுக்கு போதியளவு விளக்கம் எதுவும் கொடுக்கப்படவில்லை. இது தொடர்பில் பங்காளிக்கட்சிகள் வற்புறுத்திக் கேட்டுக்கொண்டதால் ஒரேயொரு தடவை மட்டும் கூட்டம் வைத்து அது தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதிலும் வெளிப்படையாக தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. ஒரு கதைக்காக வாற கிழமை இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது என்று வைத்துக்கொண்டாலும்; அது இறுதியாக்கப்படுவதற்கு மேலும் காலம் எடுக்கும். நாடாளுமன்றத்தில் அது வாக்கெடுப்பிற்கு விடப்படுவதற்கு இடையில் எதுவும் நடக்கலாம். அந்த வாக்கெடுப்பைத் தாண்டினால் அது ஒரு பொதுசன வாக்கெடுப்பிற்கு விடப்படும். இவையெல்லாம் சில மாதங்களுக்குள் நடந்தேறக்கூடிய காரியங்கள் அல்ல.மைத்திரி கூறுவதுபோல இலங்கைக்கே உரிய பாணியில் மெதுமெதுவாக முன்னெடுக்கப்பட்டால் சம்பந்தர் தமிழ் மக்களுக்கு வாக்களித்தபடி இந்த ஆண்டின் இறுதிக்குள் ஒரு தீர்வைக் காட்டுவது எவ்வளவு தூரத்திற்குச் சாத்தியம்? யாப்புருவாக்க முயற்சிகள் இழுபட்டுக்கொண்டே போனால் அடுத்த ஆண்டிலாவது உள்;ராட்சி சபைத் தேர்தல்களை நடத்தலாமா? என்பதும் சந்தேகமே. யாப்புருவாக்கத்திற்கான பொதுசன வாக்கெடுப்பு ஒன்றை அரசாங்கம் இப்போதைக்கு நடத்தத் துணியாது. அதற்கு முன் பல ஒத்திகைத் தேர்தல்களை நடத்தி அதில் கிடைக்கும் முடிவுகளை வைத்தே அரசாங்கம் அப்படியொரு பொதுசன வாக்கெடுப்பை நடாத்தத் துணியும்.
புதிய யாப்பைக் குறித்தும் குறிப்பாக அரசியல்த் தீர்வைக் குறித்தும் ஒரு துலக்கமான சித்திரம் வெளித்தெரியும் வரையிலும் தமிழ் அரசியலானது இப்போதிருக்கும் தேக்கத்தை உடைத்துக் கொண்டு வெளிப்பாயாது என்றே தோன்றுகிறது. 2009ற்குப் பின்னரான தமிழ் அரசியல் எனப்படுவது கொழும்பிலும், வெளிநாட்டுத் தலைநகரங்களிலும் எடுக்கப்படும் முடிவுகளிற்கு பதிற்குறி காட்டும் ஓர் அரசியலாகவே காணப்படுகிறது. தமிழ்த்தலைவர்கள் தாமாக ஒரு நகர்வை மேற்கொண்டு அதற்கு கொழும்பையும், வெளித்தரப்புக்களையும் பதிற்குறி காட்டும் ஒரு நிலைக்கு தள்ளும் ஓர் அரசியல்ப் போக்கு இன்னமும் உருவாக வில்லை. இப்போதிருப்பது ஒருவித தற்காப்பு அரசியல்ப் போக்குத்தான்.
இந்நிலையில் ஒன்றில் யாப்புருவாக்கப் பணிகளின் அடுத்தகட்டமே தமிழ் அரசியலை அடுத்த கட்டத்தை நோக்கி நொதிக்கச் செய்யும். அல்லது ஓர் அரசியல்த் தீர்வை எதிர்கொள்ளும் விதத்தில் தமிழ் மக்களை முன்கூட்டியே தயார்ப்படுத்தும் போது அது இப்போதிருக்கும் தற்காப்பு அரசியலை விட்டு வெளியே வர உதவக்கூடும். மைத்திரியும் மகிந்தவும் தங்கள் தங்கள் நோக்கு நிலையிலிருந்து சிங்கள மக்களைத் தயார்படுத்த முயற்சிக்கிறார்கள். இந்நிலையில் தமிழ் மக்கள் ஒரு யாப்புப் பெறிக்குள் அதாவது ஒரு தீர்வுப் பொறிக்குள் சிக்குவதைத் தடுப்பது யார்?தடுப்பது எப்படி?
இவ்வாறு ஓர் அரசியல்த் தீர்வை எதிர்கொள்ளும் நோக்கத்தோடு தமிழ்மக்கள் பேரவையானது வரும் 5ம்திகதி யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் ஒரு கருத்தரங்கை ஒழுங்குபடுத்தியுள்ளது. இது போன்ற கருத்தரங்குகளை நகர மையங்களில் நடத்துவதோடு மட்டுமன்றி கிராமங்களை நோக்கியும் நகர்த்த வேண்டும். எப்படிப்பட்ட ஒரு தீர்வு தமிழ் மக்களுக்குத் தேவை என்பதைக் குறித்து அவர்களை விழிப்பூட்ட வேண்டும். எவ்வளவிற்கு எவ்வளவு தமிழ் மக்கள் விழிப்படைகிறார்களோ அவ்வளவிற்கவ்வளவு யாப்பும் அரசியல்த்தீர்வும் பொறியாக மாறுவதைத் தடுக்கலாம்.
01.09.2017