தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள பிரதான கட்சியும் பெரிய கட்சியுமான தமிழரசுக் கட்சியில் சில மூத்த முன்னாள் பேராசிரியர்கள் உண்டு. தவிர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அரசியலறிஞர்கள். ஆய்வாளர்கள், விமர்சகர்கள் போன்றோருடன் தொடர்பில் இருக்கின்றார்கள். இவைதவிர தமிழ் புலமைப் பரப்பிலும் ஊடகப் பரப்பிலும் ரி.என்.ஏ.க்கு ஆதரவான பலர் உள்ளனர். ஆனால், இவர்கள் அனைவரும் ஒன்றிணைக்கப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்டு ஒரு சிந்தனைக் குழாம் – திங் ராங் – (Think Tank) எனப்படும் அளவிற்கு ஒரு அமைப்பாக காணப்படவில்லை.
ஈ.பி.டி.பி.யானது தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்கவில்லை. எனினும் கட்சியின் தலைவர் ஓய்வாயுள்ள பின்மாலை வேளைகளில் ஸ்ரீதர் தியேட்டரில் தனக்கு நெருக்கமான முன்னாள் நிர்வாக அதிகாரிகள், கல்வித்துறையை சேர்ந்தவர்கள், புலமை ஒழுக்கத்தை உடையவர்கள் போன்றோரை ஒன்று கூட்டி உரையாடுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதுவும் ஒரு திங் ராங் அல்ல.
தமிழ் மக்கள் மத்தியிலுள்ள எந்தவொரு கட்சியிடமும் திங் ராங் இல்லை. இதை இன்னும் கூராகவும், துலக்கமாகவும் கூறின் தமிழ் அரசியலில் திங் ராங் எனப்படும் பாரம்பரியமே கிடையாது எனலாம். ஒரு பேரழிவுக்கும் பெருந்தோல்விக்கும் பின்னரான கடந்த நான்கு ஆண்டுகளில் கூட அது பற்றி தீவிரமாக சிந்திக்கப்படவில்லை என்பதே இங்குள்ள சோகம்.
திங் ராங் எனப்படுவது ஒரு மேற்கத்தேய பொறிமுறைதான். அரசியல், பாதுகாப்பு, பொருளாதாரம் போன்ற இன்னோரன்ன துறைகளில் முடிவுகளை எடுக்கும் பொறுப்பிலிருப்பவர்களுக்கு ஆலோசனை பகரும் அமைப்பே அது. அதாவது, அறிவுக்கும் – செயலுக்கும் அல்லது அறிவுக்கும் – அதிகாரத்துக்கும் இடையிலான பொறுப்புக் கூறவல்ல ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட பொறிமுறையே அது.
கீழைத்தேய சமூகங்களில் மன்னராட்சிக் காலங்களில் மன்னர்கள், ராஜகுருக்களையும், ரிஷிகளையும் மந்திரிகளையும் தமக்கு அருகே வைத்திருந்தார்கள். பிளேட்டோ கூறுவது போல, ஞானிகளாக அரசர்கள் இருந்தார்களோ இல்லையோ ஞானிகளை மதிக்கும் அரசர்கள் மகிமைக்குரியவர்களாக கணிக்கப்பட்டார்கள். எனினும் மன்னர்கள் காலத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு மதியுரைப் பொறிமுறை காணப்படவில்லை. அதாவது, அறிவுக்கும் அதிகாரத்திற்கும் இடையிலான ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட, பரஸ்பரம் பொறுப்புக் கூறவல்ல ஓர் இடை ஊடாட்டப் பரப்பாக அது ஸ்தாபிக்கப்பட்டிருக்கவில்லை.
திங் ராங் அல்லது சிந்தனைக்குழாம் எனப்படும் ஒரு நவீன தோற்றப்பாடு குறிப்பாக, கடந்த நூற்றாண்டில்தான் பெருவளர்ச்சி பெற்றது. அதிலும் குறிப்பாக, தகவல் புரட்சியின் பின்னணியில் தான் அது ஒப்பீட்டளவில் சுயாதீனமான இப்போதுள்ள வளர்;ச்சிகளைப் பெற்றது. தொடக்க காலங்களில் அது அதிகபட்சம் அதிகாரத்தின் செல்வாக்கு வலயத்துக்குள்ளேயே இருந்தது. அதிகாரத் தரப்பினால் போஷிக்கப்படும் ஓர் அமைப்பாகத்தான் அது காணப்பட்டது. ஆனால், மேற்கத்தேய ஜனநாயக பண்பாட்டின் வளர்ச்சியின் பின்னணியில் படிப்படியாக சிந்தனைக் குழாங்கள், அறிவியற் சுயாதீனம் மிக்கவைகளாக வளர்ச்சியடையலாயின.
தகவல் புரட்சியோடு அறிவு முன்னெப்பொழுதையும் விட அதிகமதிகம் விடுதலையடையத் தொடங்கியது. மனித குல வரலாற்றில் அறிவு இவ்வாறாக ஓரிடத்தில் திரட்டப்பட்டதும் இந்தளவிற்கு விடுதலை அடைந்ததும் இதுதான் முதற் தடவை. எனவே, மூளை உழைப்பாளிகளால் உருவாக்கப்பட்ட திங் ராங்கும் ஓப்பீட்டளவில் அதிகம் சுயாதீனமடைந்தது இன்ரநெற் புரட்சியோடு தான். அதாவது, அதிகாரத்திற்கும் அறிவுக்கும் இடையிலான உறவில் அறிவானது கூடியபட்ச சுயாதீனத்தோடு செயற்படக் கூடிய வாய்ப்புக்களை தகவல் புரட்சியே வழங்கியது. எனவே, அறிவுக்கும் அதிகாரத்துக்கும் இடையிலான பரஸ்பர தங்கு நிலையானது புதிய வளர்ச்சிகளை பெறலாயிற்று. அதாவது, அறிவானது அதிகபட்சம் அதிகாரத்தில் தங்கியிராது சுயாதீனமாக தொழிற்படும் ஒரு வளர்ச்சிக்குரிய ஆகக்கூடியபட்ச சாத்தியக் கூறுகளை தகவல் புரட்சி உருவாக்கியது.
தற்பொழுது அனைத்துலக அரங்கில் அதிகாரத்திற்கு விசுவாசமான அல்லது ட்ரான்ஸ் நஷனல் கோப்பரேஷன்களால் (ரி.என்.சி.) போஷிக்கப்படும் சிந்தனைக் குழாம்களும் உண்டு. அதேசமயம் அதிகபட்சம் சுயாதீனமாக தொழிற்படும் சிந்தனைக் குழாம்களும் உண்டு. இத்தகைய ஒரு பூகோளப் பின்னணியில் வைத்தே தமிழ்த் தேசியத்துக்கான சிந்தனைக் குழாம்களின் முக்கியத்துவத்தைக் குறித்து சிந்திக்க வேண்டியிருக்கின்றது.
தமிழில் வீரத்திற்கும் – அறிவிற்கும் இடையில் செயலுக்கும் – அறிவிற்க்கும் இடையில் மகத்தான சமன்பாடுகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. தமிழ்த் தேசிய பாரம்பரியத்தைப் பொறுத்தவரையில் ஆரம்பகால மிதவாதிகளிடமிருந்து தொடங்கி இப்போதுள்ள மிதவாதிகள் வரையிலுமான சுமார் அரை நூற்றாண்டுக்கும் மேலான காலப்பகுதியில்; அறிவுக்கும் – செயலுக்கும் இடையில் அல்லது அறிவுக்கும் – வீரத்திற்கும் இடையில் வெற்றிகரமான ஒரு பிரயோகச் சமநிலை கண்டுபிடிக்கப்படவே இல்லை.
இது விஷயத்தில் தமிழ் மிதவாதிகள் மட்டுமல்ல, ஆயுதமேந்திய இயக்கங்களும் கூட தமக்குரிய சிந்தனைக்குழாம்கள் குறித்து தீவிரமாக சிந்தித்திருக்கவில்லை. சில இயக்கங்களில் அறிவுஜீவிகள் உறுப்பினர்களாக அதாவது, ஓர்கானிக் இன்ரலெக்ஸ்ஸூவலாக இருந்திருக்கின்றார்கள். இதில் சிலர் பின் நாட்களில் தலைமைத்துவத்தோடு முரண்பட்டுக் கொண்டு வெளியேறியுமிருக்கின்றார்கள். ஆனால், எந்தவொரு இயக்கத்திடமும் பிரகாசமான ஒரு முன்னுதாரணம் என்று சொல்லத்தக்க திங் ராங் வளர்ச்சியடைந்திருக்கவில்லை.
குறிப்பாக, விடுதலைப்புலிகள் இயக்கத்தைப் பொறுத்த வரை அதன் அரசியல் ஆலோசகராக அன்ரன் பாலசிங்கம் இருந்தார். தமிழர் தரப்பில் ஓரளவிற்கு அரசுடைய தரப்பாகவும் அந்த இயக்கம் இருந்தது. அந்த இயக்கம் ஒரு அரை அரசை நிர்வகித்தது. ஆனால், அன்ரன் பாலசிங்கத்தின் தலைமையிலோ அல்லது அமைப்பிற்கு வெளியிலோ சிந்தனைக் குழாம் என்று வர்ணிக்கத்தக்க வளர்ச்சி எதுவும் அங்கிருக்கவில்லை. குறிப்பாக, ரணில்-பிரபா உடன்படிக்கை காலத்தில் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழ்த் தேசிய ஆதரவாளர்களான புத்திஜீவிகள் மற்றும் மூளை உழைப்பாளிகளுக்கும் வன்னிக்கும் இடையிலான இடை ஊடாட்டங்கள் பிரகாசமாகக் காணப்பட்டன. இவ்வாறான இடை ஊடாட்டங்களின் விளைவுகளில் ஒன்றே இடைக்கால தன்னாட்சி அதிகார சபைக்கான வரைபு ஆகும். ஆனால், ஈழப்போரின் இறுதிச் சமாதான முயற்சிகளின்போது திறக்கப்பட்ட கதவுகளின் வழியாக நிகழ்ந்த இடை ஊடாட்டங்களின் விளைவாகவும் அத்தகைய இடை ஊடாட்டங்களின் தொடர்ச்சியைத் தக்கவைக்கும் ஒரு அத்தியாவசிய பொறிமுறையாகவும் ஒரு சிந்தனை குழாத்தை உருவாக்குவது பற்றி சிந்திக்கப்படவேயில்லை. ஒரு சிந்தனைக் குழாத்திற்குரிய வெற்றிடத்தை பேணியபடியே தமிழர்களின் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டுவிட்டது. தோல்விக்கு அந்த வெற்றிடமும் ஒரு காரணமா?
இப்பொழுது ஆயுதப்போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின் மேலெழுந்திருக்கும் மிதவாதிகளும்; அந்த வெற்றிடத்தை பேணி வருவதைக் காண முடிகிறது. இவ்வாறாக கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ்த் தேசிய அரசியலானது தனக்கென ஒரு சிந்தனைக் குழாத்தை உருவாக்க முடியாமல்போனதற்குரிய காரணங்கள் எவை?
மூன்று பிரதான காரணங்களைக் கூறமுடியும். முதலாவது தமிழர்கள் ஒரு அரசற்ற தரப்பாக இருப்பது. இரண்டாவது நாட்டில் பிரயோகத்திலிருக்கும் கல்வி முறையின் தோல்வி. மூன்றாவது தமிழ்த் தேசியத்தின் உள்ளடக்கப் போதாமை.
இம்மூன்று காரணங்களும் ஒன்று மற்றதுடன் தொடர்புடையவை. ஓன்று மற்றதின் விளைவாக உருவானவை. நாட்டில் பிரயோகத்தில் உள்ள கல்வி முறையானது அதிகபட்சம் சுயநல மையக் கல்வி முறை என்பது ஒரு பொதுவான விமர்சனம் ஆகும். அக்கல்வி முறையானது தன் சமூகம் சார்ந்து சிந்திக்கின்ற அர்ப்பணிப்பும், தியாக சிந்தையுமுடைய மூளை உழைப்பாளிகளை உருவாக்குவதில் போதிய வெற்றியைப் பெறவில்லை எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது. சமூகத்துக்கு வெளியில் இருக்கும் எஜமானர்களுக்கு சேவகம் செய்யும் அல்லது அவர்களுடைய அலைவரிசையில் சிந்திக்கும் ஒரு அறிவியல் ஒழுக்கத்தையே இக்கல்வி முறையானது உருவாக்குவதால் அத்தகைய ஒழுக்கத்தைக் கொண்ட புத்திஜீவிகள் தமது சமூகத்திற்கு அர்ப்பணிப்போடு சேவையாற்ற முன்வருவதில்லை. என்பதும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
சிங்கள மக்கள் அரசுடைய தரப்பு என்பதால் அங்கு உருவாகும் புத்திஜீவிகள் அரசாங்கததிற்கு ஆதரவான சிந்தனைக் குழாம்களில் செயற்பட முடிகிறது.அதில் அவர்களுக்குப் பாதுகாப்பும், புகழும் அரசபோகங்களும் கிடைக்கும். பதவி உயர்வு மேற்படிப்புக் குறித்த உத்தரவாதங்களும் உண்டு.
ஆனால், அரசற்ற தரப்பாகிய தமிழர்களைப் பொறுத்தவரை தமிழ்த் தேசிய ஆதரவாளராக இருப்பது சில சமயங்களில் உயிராபத்தானது. அதோடு பதவி உயர்வு மேற்படிப்பு போன்றவற்றிற்கும் அரசாங்கத்தையே சாந்திருக்க வேண்டும். ஆகக்கூடிய பட்சம் அரசியல் நீக்கம் செய்யப்பட்ட அறிவியல் ஒழுக்கத்தை உடையவர்களாக தங்களைக் காட்டிக் கொள்வதன் மூலம் தமது நிலையான நலன்களை (Vested interest) பாதுகாப்பதற்கே பெரும்பாலான தமிழ் புத்திஜீவிகள் முயல்வதாக ஒரு கருத்தும் உண்டு. இது காரணமாக தம் சமூகத்தை சார்ந்து அர்ப்பணிப்புமிக்க முடிவுகளை எடுக்கத் தயாரற்ற அறிவுஜீவிகள் தமிழ்த் தேசியத்திற்கான சிந்தனைக் குழாமொன்றை உருவாக்க பின்னடிக்கின்றார்கள். இதில் மிக அரிதான புறநடைகளே உண்டு. இந்த இடத்தில் தான் தமிழ் அறிவும் – செயலும் ஒன்று மற்றதை இட்டு நிரப்புவதில் தடைகள் ஏற்படுகின்றன. இது காரணமாகவே ஆயுதமேந்திய தமிழ் இயக்கங்கள் அறிவு ஜீவிகளை ”கதை காரர்கள்’ என்றும் ”சாகப்பயந்தவர்கள்’ என்றும் வர்ணிக்கும் ஒரு நிலையும் காணப்பட்டது. மேலும் தமிழ்த்தேசியத்தின் அடித்தளமானது இனமானம், மொழி மானம் போன்ற உணர்ச்சிகரமான அம்சங்களால் வனையப்பட்டிருந்த ஒரு பின்னணியில் அதை அதிகபட்சம் அறிவுபூர்வமான விஞ்ஞான பூர்வமான அம்சங்களால் பிரதியீடு செய்ய முற்பட்டபோது ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் காரணமாகவும் தமிழ் புத்திஜிவிகளில் ஒரு பகுதியினர் ஆயுதப் போராட்டத்தை நெருங்கிச் செல்ல தயங்கினர். சிலர் கள்ளப்பெண்டாட்டி உறவைப் பேணினர்.
மேற்சொன்ன காரணங்களின் விளைவாக தமிழ் புத்திஜிவிகளிற் கணிசமான தொகையினர் ஒரு வித தற்காப்பு நிலைப்பட்ட முடிவுகளையே எடுத்தனர். எவ்வளவுக்கெவ்வளவு அவர்கள் தற்காப்பு நிலைப்பட்டுச் சிந்தித்தார்களோ அவ்வளவுக்கவ்வளவு தீவிர தமிழ்த் தேசியவாதத்திருந்தும் விலகி நிற்க முற்பட்டார்கள். இதனால், தமிழ்த் தேசியத்திற்கான ஒரு சிந்தனைக் குழாம் உருவாக முடியாது போயிற்று.
ஆனால், இப்பொழுது ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டு நான்கு ஆண்டுகளாகிவிட்ட பின்னரும் தமிழ்த்தேசியத்திற்கான சிந்தனைக் குழாம் ஒன்றைக் குறித்து சம்பந்தப்பட்ட எந்த ஒருதரப்பும் தீவிரமாகச் சிந்திப்பதாகத் தெரியவில்லை. இலங்கைத் தீவில் அப்படியொரு சிந்தனைக் குழாத்தைஉருவாக்கத் தடையாகக் காணப்பட்ட காரணிகள் இப்பொழுதும் பலமாகத்தான் காணப்படுகின்றன.
ஆனால், போதியளவு ஜனநாயக வெளிக்குள் போதியவு நிதிப் பலத்தோடும், போதியளவு தொடர்புகளோடும் காணப்படும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தில் அதாவது தமிழ் டயஸ்பொறாவில் (Diaspora) நிலைமை அவ்வாறில்லை. இது விஷசத்தில் தமிழ் டயஸ்பொறாவால் ஒரு முன்னோடிப் பாத்திரத்தை வகிக்க முடியும். ஒரு தமிழ்ச் சிந்தனைக் குழாத்தை உருவாக்கத் தடையாகக் காணப்படும் இரு பிரதான காரணிகள் டயஸ் பொறாவில் இல்லை. முதலாவது – ஒரு அரசற்ற தரப்பாக இருந்து சிந்திப்பதில் உள்ள ஆபத்துக்கள் அங்கில்லை. இரண்டாவது – இலங்கைத்தீவின் கல்வி முறைக்கு வெளியே சென்று சிந்திக்கத் தேவையான அளவுக்கு மேற்கத்தையே கல்விமுறைக்கூடாக உருவாக்கப்பெற்ற பல அறிவுஜிவிகள் முதலாம் தலைமுறை டயஸ் பொறாவிலும் உண்டு. இரண்டாம் தலைமுறை டயஸ் பொறாவிலும் உண்டு.
எனவே, ஒரு சிந்தனைக் குழாத்தை உருவாக்கத் தேவையான அதிகபட்ச அனுகூலமான அரசியல், சமூக, பொருளாதார மற்றும் அறிவியற் சூழல் டயஸ் பொறாவில்தான் உண்டு.
தமிழ் டயஸ் பொறா எனப்படுவது தமிழ்த்தேசியத்தின் மேற்கு மயப்பட்ட ஒரு கூறாகும் ஒப்பீட்டளவில் விசாலமான ஜனநாயகச் சூழலில் வாழும் தமிழ் டயஸ் பொறாவிற்கே ஜனநாயகத்தின் ருசி மிகத் தெரியும். ஜனநாயகத்தின் அருமை அதிகம் தெரிந்த டயஸ்பொறாதான் அதை மாற்றவர்களோடு பகிர முன்வரவேண்டும். இந்த அடிப்படையிற் கூறின் தமிழ்த் தேசியத்தின் ஜனநாயக அடிக்கட்டுமானத்தைப் பலப்படுத்த வேண்டிய பொறுப்பும், அதற்குத் தேவையான வளங்களும் பின்னணியும் தமிழ் டயஸ் பொறாவிற்கே உண்டு. எனவே, தமிழ்ச் சிந்தனைக் குழாம் அல்லது தமிழ் அறிவியல் நடுவம் எனப்படுவது முதலில் டயஸ்பொறாவிலிருந்தே தொடங்கப்பட வேண்டும். தமிழ் தேசியத்தின் ஜனநாயக அடித்தளத்தை பலப்படுத்துவதற்கான தமிழ் டயஸ்பொறாவின் தவிர்க்கப்படவியலாத ஒரு பங்களிப்பாக அது இருக்கும். அது டயஸ்பொறாவின் தேசியக் கடமையும் கூட. ஏனெனில், தமிழ்த் தேசியத்தின் ஜனநாயக அடித்தளத்தைப் பலப்படுத்தினாற்றான் ஈழத்தமிழர்கள் தமது இறந்த காலத்தின் நற்கனிகளைப் பாதுகாக்கலாம். தோல்விகளற்ற ஓளி மிகுந்த எதிர்காலமொன்றையும் கட்டியெழுப்பலாம்.
17.04.2013