இலங்கைத் தீவின் விதி

lanka-from-spaceநந்திக் கடலில் தோற்கடிக்கப்பட்டது விடுதலைப்புலிகள் இயக்கம் மட்டுமல்ல. இலங்கைத் தீவில் அரசாங்கத்திற்கு சவாலாக இருக்கக்கூடிய ‘எதிர்ப்பு வெளி” எனப்படுவதும் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் எனப்படுவது அரசாங்கத்திற்கு எதிரான ஒரு தூலமான இருப்பைக் கொண்டிருந்தது. விடுதலைப்புலிகளை ஏற்றுக்கொண்ட மற்றும் ஏற்றுக்கொள்ளாத அரசுக்கு எதிரான எல்லா சக்திகளுக்கும் அது ஒரு தூலமான, திட்டவட்டமான முன்னுதாரணமாகக் காணப்பட்டது. ஆனால், அந்த இயக்கம் தோற்கடிக்கப்பட்டபோது, அப்படிப்பட்ட ஓர் இயக்கமே தோற்கடிக்கப்படலாம் எனில் மற்றவை எல்லாம் எம்மாத்திரம் என்றதொரு நிலை தோன்றிவிட்டது.

யுத்தத்தில் வெற்றிபெறுவதற்காக அரசாங்கம் மேற்கொண்ட வழிமுறைகள் மூலம் அது தென்னிலங்கையிலுள்ள தீவிரவாத சக்திகளை எல்லாம் மிஞ்சிவிட்டது. இதனால், ஜே.வி.பி. போன்ற தீவிர சக்திகள் அரசாங்கத்தை விட தீவிரம் குறைந்தவையாகிவிட்டன. இதற்கு முன்பிருந்த எந்தவொரு அரசாங்கத்தினாலும் முடியாதிருந்த ஒன்றை இந்த அரசாங்கம் நந்திக் கடலில் சாதித்துக் காட்டியதால் எந்த ஓர் எதிர்க்கட்சியும் அந்த வெற்றிக்கு முன் நின்றுபிடிக்க முடியாது போய்விட்டது. எனவே, எதிர்க்கட்சிகள் யாவும் அரசாங்கத்திற்கு கீழ்ப்பட்டவையாயின. இப்படியாக வெகுஜன அரசியலை முன்னெடுக்கவல்ல மைய நீரோட்டத்திலுள்ள பெரும் கட்சிகளும், இனத் தீவிரவாத சக்திகளும் தலையெடுக்க முடியாத ஓர் அரசியற் சூழலில் மைய நீரோட்டத்திற்கு வெளியே காணப்பட்ட மாற்றுக் குரல்களும் மேலெழ முடியாத படிக்கு ஒரு பெரும் யுத்த வெற்றிவாதம் தென்னிலங்கையை மூழ்கடித்துவிட்டது. இதனால், அரசாங்கத்திற்கு சவாலான எதிர்ப்பு வெளி என்ற ஒன்று அநேகமாக இல்லாதுபோய்விட்டது.

விடுதலைப்புலிகளுக்கு எதிராக அரசாங்கம் பெற்றுக்கொடுத்த வெற்றி எனப்படுவது சாதாரண சிங்கள மக்களைப் பொறுத்த வரை தாங்கமுடியாத ஒரு வெற்றி. இலங்கை தீவின் நவீன வரலாற்றில் வேறெந்த சிங்களத் தலைவர்களும் பெற்றுக்கொடுத்திராத வெற்றியை இப்போதுள்ள தலைவர்கள் பெற்றுக்கொடுத்திருக்கின்றார்கள். எனவே, இந்த வெற்றி ஒன்றே போதும் அவர்களும், அவர்களுடைய வம்சமும் மேலும் சில சதாப்தங்களுக்கு இச்சிறு தீவை ஆட்சி புரிய முடியும்.

இப்படியொரு வெற்றியைப் பெற்ற அரசாங்கத்தைப் பொறுத்தவரை அதற்கு எதிராக எழுக்கூடிய எந்தவொரு எதிர்ப்பும் பொருட்டில்லை. பிரபாகரனையே தோற்கடித்த ஓர் அரசாங்கத்திற்கு எந்தவொரு எதிர்ப்பும் பொருட்டில்லை என்ற ஒரு மனோநிலை கொழும்பில் பலமாக ஸ்தாபிக்கப்பட்டுவிட்டது. இத்தகைய ஒரு மனோநிலைக்கு முன் இலங்கைத் தீவில் அரசாங்கத்திற்கு சவாலாக யாரும் அல்லது எதுவும் நின்றுபிடிக்க முடியாத ஒரு நிலை தோன்றிவிட்டது. என்பதால்தான், அந்த வெற்றியின் பங்காளியான சரத் பொன்சேகாவே கூர் மழுங்கிப்போனார். அவர் மட்டுமல்ல, சக்தி மிக்க நாடுகளின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் அவுஸ்ரேலியாவிலிருந்து இறக்கப்பட்ட குமார் குணரட்ணத்தாலும் எதுவும் செய்யமுடியவில்லை. தொழிற்சங்கப் போராட்டங்கள், பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டங்கள், பல்கலைக்கழக ஆசிரியர்களின் போராட்டங்கள் உள்ளிட்ட அனைத்துப் போராட்டங்களும் அவற்றின் இறுதி வெற்றியைப் பெற முடியவில்லை. யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தையும் இப்பின்னணியில் வைத்தே விளங்கிக்கொள்ள வேண்டும்.

அதாவது, பிரதம நீதியரசர், கல்விமான்கள், புத்திஜீவிகள் மற்றும் உயர் கல்வி கற்கும் மாணவர்கள் உள்ளிட்ட எந்தவொரு தரப்பாலும் இலகுவாக அசைக்க முடியாத அளவிற்கு அரசாங்கம் சக்தி மிக்கதாக காணப்படுகின்றது.
இத்தகைய ஓர் விளக்கத்தின் அடிப்படையில் கூறின், இலங்கைத் தீவின் நவீன வரலாற்றில் ஆட்சியிலிருந்த அரசாங்கங்களில் உள்நாட்டில் மிகவும் சக்தி வாய்ந்த அரசாங்கங்களில் ஒன்றாக இப்போதுள்ள அரசாங்கத்தைக் கூற முடியும். இந்த அரசாங்கத்தை நாடாளுமன்றத்திற்குள்ளும் தோற்கடிப்பது கடினம், நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் தோற்கடிக்கப்படுவது கடினம்.

தமிழர்கள் தரப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு கட்டத்திற்கும் மேல் செல்ல முடியாதிருப்பதும் இதனால்தான். தமிழ்த் தேசிய விடுதலை முன்னணி ஒரு கட்டத்திற்கும் மேல் போராட முடியாமல் இருப்பதும் இதனால்தான்.

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் வாக்கியம் ஒன்று உண்டு. ‘எந்தப் பெரிய பலத்திற்குள்ளும் ஏதோ ஒரு பலவீனம் இருக்கும்” என்று. நாலாம் கட்ட ஈழப்போரின்போது புலிகளுக்கு இது பொருந்தியது. நந்திக் கடலில் பெற்ற வெற்றிக்குப் பின் இப்பொழுது அரசாங்கத்திற்கும் இது பொருந்துகிறது. இந்த அரசாங்கம் உள்நாட்டில் சக்தி மிக்கதாகக் காணப்படுகின்றது. ஆனால், சர்வதேச அளவில் பலவீனமானதாகக் காணப்படுகின்றது. எனினும், பிராந்திய அளவில் அது இடைநிலைப் பலத்தோடு காணப்படுகின்றது. அதாவது, உள்நாட்டளவிற்குப் பலமாகவும் இல்லை, சர்வதேச அளவிற்குப் பலவீனமாகவும் இல்லை.

பிராந்தியப் பலம்தான் இந்த அரசாங்கத்தின் மெய்யான பலம். அல்லது இதனுடைய பலத்தின் உயிர் நிலை அது எனலாம். பிராந்தியத்தில் தனக்குள்ள கவர்ச்சியான பேரம் பேசும் சக்தியை வைத்து இருபெரும் பிராந்திய பேரரசுகளுக்கிடையில் கயிற்றில் நடக்கும் அரசாங்கம் இது. ஒருபுறம் சீனாவின் உலகளாவிய எழுச்சியை ரசித்து, ஆதரிக்கும் இந்த அரசாங்கம் இன்னொருபுறம் இந்தியாவிற்கு நெருக்கமானது போலக் காணப்படுகின்றது. இந்தியாவுடன் அது கொண்டிருக்கும் உறவு எனப்படுவது ஒருவித நிர்ப்பந்த உறவு. அதவாது பிராந்தியத்தில் மிக அருகில் இருக்கும் ஒரு பேரரசு என்பதாலும், தமிழர்களை இலகுவாகக் கையாளக்கூடிய வாய்ப்புக்களை அதிகம் பெற்றிருக்கும் ஒரு; அயல்நாடு என்பதாலும் இந்தியாவுடன் அனுசரித்துப் போகவேண்டியிருக்கின்றது. ஆனால், இதயம் சீனாவிடம்தான் இருக்கிறது. இது இந்தியாவிற்கும் தெரியும்.

இந்தப் பிராந்தியத்தில் இலங்கை அரசாங்கம் தனக்குள்ள வரையறைகளை உதாசினம் செய்துவிட்டு சீனாவை நோக்கி முழு அளவிற்கு சாய்ந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் புதுடில்லி கொழும்பை நோக்கி நெருக்கி நெருங்கி வருகின்றது. அதற்காக தமிழர்களைப் புறக்கணிக்கவும் தயாராகக் காணப்படுகின்றது. இப்பிராந்தியத்தின் வரலாற்றிலேயே இந்தியாவின் தெற்கு மூலையில் சீனர்கள் இத்துணை செறிவாகப் பிரசன்னமாகியிருப்பது இது தான் முதற்தடைவ.

இந்தியாவும், அமெரிக்காவும் இதனை கவலை கலந்த எச்சரிக்கையோடு கவனித்து வருகின்றன. சீனாவோடு மட்டும் கொழும்பு தேன்நிலவைக் கொண்டிருந்தால் அதைப் பகை நிலையில் வைத்துக் கையாள முடியும். இந்தியாவோடும் கொழும்பு தேன்நிலவை வைத்திருக்கின்றது. எனவே, நிலமைகளை பகைமை எல்லைக்குள் தள்ளாமல் அதாவது, கொழும்பை முறிக்காமல் வளைத்தொடுக்க முடியுமா என்று இந்தியாவும், அமெரிக்காவும் முயற்சிக்கின்றன. ஒரே நேரத்தில் இரு பெரும் பகைச் சக்திகளை தன்னை நோக்கி ஈர்த்து வைத்திருக்கக்கூடிய அளவிற்கு தனது பேரம் பேசும் சக்தியின் கவர்ச்சியை தொடர்ந்து தக்கவைத்திருப்பதில் இந்த அரசாங்கம் இன்று வரையிலும் குறிப்பிடத்தக்க அளவிற்கு சுழித்தோடியிருக்கிறது.
இந்தியாவை தன்னை நோக்கி ஈர்த்து வைத்திருப்பதில் தான் இந்த அரசாங்கத்தின் வெற்றிகளில் அநேகமானவை தளமிடப்பட்டிருக்கின்றன. நந்திக் கடல் வெற்றிகளில் தொடங்கி இந்த அரசாங்கம் பெற்றுவரும் எல்லா வெற்றிகளும் அது இந்தியாவை தன்னை நோக்கி ஈர்த்துவைத்திருப்பதால் பெறப்பட்டவைதான். மேற்கு நாடுகளின் மத்தியில் ஒப்பிட்டளவில் பலவீனமானதாகக் காணப்பட்டபோதிலும் இந்தியாவிற்கு நெருக்கமானதாகக் காணப்படுவதால்தான் எல்லா எதிர்ப்பையும் சமாளிக்க முடிகின்றது. ஏனெனில் இந்தப் பிராந்தியத்தில் சீனாவிற்கு எதிரான அமெரிக்கா வீயூகத்தின் முற்தடுப்பாக (டீரககநச) இந்தியாவே காணப்படுகின்றது. எனவே, இந்தியாவிற்கு கதவுகளைத்திறந்து விடுவதன் மூலம் இலங்கை அரசாங்கமானது மேற்கு நாடுகளின் எதிர்ப்பை குறிப்பிடத்தக்க அளவிற்குத் தணிக்க முடிகின்றது.
ஆக மொத்தம், இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையில் தனது பேரம் பேசும் சக்தியின் கவர்ச்சியை தக்கவைத்திருப்பதன் மூலம் இலங்கை அரசாங்கம் உள்நாட்டில் சக்தி மிக்கதாக எழுச்சிபெற்றுவிட்டது. இருபெரும் பிராந்திய இழுவிசைகளுக்கு இடையில் சுழித்தோடும் இந்த அபாயகரமான விளையாட்டில் சறுக்கும்போதுதான் இந்த அரசாங்கம் பலவீனப்படும். இலங்கைத்தீவில் இப்போது நிலவும் அரசியல் போக்கிலும் மாற்றங்கள் ஏற்படும்.

அதாவது பிராந்திய இழுவிசைகளுக்கு இடையிலான வலுச்சமநிலையில் ஏற்படக்கூடிய மாற்றங்களால் மட்டுமே இலங்கைத் தீவின் உள்நாட்டு அரசியலில் புதிய திருப்பங்களை ஏற்படுத்த முடியும். இதை இன்னும் நுணுக்கமாக விளங்கிக்கொள்வதானால், நாம் இப்போதுள்ள சர்வதேசச் சூழலை அதன் உள்ளோட்டங்களோடு சிறிது ஆழமாகப் பார்க்கவேண்டும்.

இப்போதுள்ள உலகச் சூழலை அமெரிக்காவின் நோக்கு நிலையிலிருந்து கூறின் ‘பச்சை ஆபத்திற்கு” எதிரான போரின் இறுதிக் கட்டம் என்று வர்ணிக்கலாம். சில மேற்கத்தைய ஆய்வாளர்கள் கடந்த நூற்றாண்டில் ரஷ்யா தலைமையிலான கொம்யூனிச நாடுகளுக்கு எதிராக நடந்த கொடுபிடிப்போரை சிவப்பு ஆபத்திற்கு எதிரான போர் என்று வர்ணித்தார்கள். சிவப்பு ஆபத்திற்கு எதிரான போரின் முடிவில் அமெரிக்கா உலகின் ஏகப்பெரும் வல்லரசாக எழுச்சி பெற்றது. அந்த போரின்; இறுதிக் கட்டத்தில் பச்சை ஆபத்து என்று அவர்கள் அழைக்கும் இஸ்லாமிய்த் தீவிரவாதம் முன்னிலைக்கு வந்தது. ஏறக்குறைய ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நிகழ்ந்து வரும் இந்தப் பச்சை ஆபத்திற்கு எதிரான போரின் முடிவானது மஞ்சள் ஆபத்திற்கு எதிரான போரின் தொடக்கமாக அமையலாம் என்றும் மேற்படி ஆய்வாளர்கள் விளக்கமளிக்கின்றார்கள்.

மஞ்சள் ஆபத்து என்று இங்கு கூறப்படுவது மஞ்சள் அல்லது மங்கோலிய இனமான சீனர்களைத் தான். எனவே, இப்போது நிலவும் பச்சை ஆபத்திற்கு எதிரான போரின் இறுதிக் கட்டமே மஞ்சள் ஆபத்திற்கு எதிரான போராக விரிவடையக்கூடிய ஏது நிலைகள் ஊகிக்கப்படுகின்றன. பச்சை ஆபத்திற்கு எதிரான போரின் இறுதிக் கட்டத்தில் சிரியாவும், ஈரானும் மிச்சமுள்ளன. சிரியா ஏற்கனவே, சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. எனவே, இறுதி இலக்காக ஈரான்தான் காணப்படுகின்றது. ஈரானை முறியடிப்பது என்பது ஏற்கனவே, அரபு நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ‘அரப் ஸ்பிறிங்” எனப்படும் தூண்டப்பட்ட உள்நாட்டுக் கிளர்ச்சிகளின் மூலம் மட்டும் சாத்தியப்படாது என்பது சிரிய அனுபவத்திலிருந்து தெரியவந்துவிட்டது. எனவே, அது உள்நாட்டுக் கிளர்ச்சி என்பதற்கும் அப்பால் இரு அல்லது பல நாடுகளுக்கிடையிலான நேரடி மோதலாக அமையக்கூடும் என்ற அச்சம் பரவலாகக் காணப்படுகின்றது. இது விசயத்தில் இஸ்ரேல் ஒரு கருவியாக பயன்படுத்தப்படலாம்.
இவ்விதம் ஈரானுக்கு எதிரான மோதலானது ஒரு பிராந்திய போராக விரியுமிடத்து அதன் இறுதிக் கட்டத்தில் உலகளாவிய ஒரு பேரழிவுப் போராக அது விரிவடையுமா இல்லையா என்பது சீனாவின் கைகளில்தான் தங்கியுள்ளது. சீனா இப்போது இருப்பதைப்போல 21ஆம் நூற்றாண்டின் முதலாளித்துவத்திற்கு தலைமை தாங்கும் வேட்கையோடு மோதல்களைத் தவிர்த்து ஒதுங்கியிருந்து முன்னேறும் ஒரு உத்தியை தொடர்ந்தும் பேணுமாக இருந்தால் நிலைமை வேறாயிருக்கும். எனினும் சீனாவானது மேற்காசிய மோதல்களிலிருந்து ஓதுங்கி நிற்பது என்பது அது மறைமுகமாக அமெரிக்காவின் மேலான்மையை அங்கீகரிப்பதாகவே எடுத்துக்கொள்ளப்படும்.

மாறாக, சீனாவும் களத்தில் இறங்கினால் நிலைமை பேரழிவுதான். அமெரிக்கா தலைமையிலான மேற்குநாடுகளும், இஸ்ரேலும் ஏற்கனவே, ஈரானைக் குறிவைத்துவிட்டன. பச்சை ஆபத்திற்கு எதிரான இறுதிக் கட்டப் போரை எப்பொழுது தொடங்குவது என்பது பெரும்பாலும் சிரியாவின் வீழ்ச்சிப் பின்னரே தீர்மானிக்கப்படும்.

அப்படியொரு தருணத்தில் பச்சை ஆபத்திற்கு எதிரான போரில் இறுதிக் கட்டமே மஞ்சள் ஆபத்திற்கு எதிரான போராக விரிவடையுமா இல்லையா என்பதை சீனாதான் தீர்மானிக்கவேண்டியதாயிருக்கும். சீனாவின் முடிவிற்கு ஏற்ப பிராந்தியத்தில் தற்போது நிலவும் வலுசமநிலை குலையக்கூடும். இவ்வாறு பிராந்திய வலுச்சமநிலை குலையும் போதுதான் இலங்கைத் தீவில் இப்போதுள்ள அரசியல் நிலைமைகளில் ஏதும் பெரிய திருப்பங்களை எதிர்பார்க்கலாம். அதாவது இலங்கை தீவின் விதி எனப்படுவது இப்போதுள்ள நிலைமைகளைப் பொறுத்த வரை சீனப் பேரரசின் எழுச்சி அல்லது வீழ்ச்சியோடு பிரிக்கப்படவியலாதபடி பிணைக்கப்பட்டிருக்கின்றது.

10-01-2013
உதயன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *