காணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்


கடந்த திங்கட்கிழமை ஜெனீவாக் கூட்டத் தொடர் நடந்துகொண்டிருந்த ஒரு கால கட்டத்தில் குறிப்பாக கத்தோலிக்கர்கள்; உபவாசமிருக்கும் தவக்காலத்தில் யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியில் ஓர் அடுக்குமாடிக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேனா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். கத்தோலிக்கத் திருச்சபையின் நிர்வாகத்தின் கீழ் வரும் இக்கல்லூரியின் மேற்படிக் கட்டடம் பழைய மாணவர்களின் நிதிப் பங்களிப்போடு கட்டப்பட்டது. இந் நிகழ்வுக்கு அரசுத் தலைவர் அழைக்கப்பட்டதை ஒரு பகுதி பழைய மாணவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள்.

இக்கல்லூரியின் முதல்வராக இருந்த பிரான்சிஸ் யோஸப் அடிகளார் இறுதிக்கட்டப் போரின் போது காணாமல் போய்விட்டார். அவர் இக்கல்லூரியில் பத்து ஆண்டுகளுக்குக் குறையாமல் முதல்வராக இருந்திருக்கிறார். ஓய்வு பெற்ற பின் தமிழீழ கல்விக் கழகத்தின் போசகராக இருந்து வந்துள்ளார். இயக்கப் போராளிகளுக்கு ஆங்கிலம் கற்பித்துள்ளார். இறுதிக்கட்டப் போரின் போது ஒரு தொகுதிப் புலிகள்இயக்க இடைநிலை முக்கியஸ்தர்கள் சரணடைந்த போது பிரான்சிஸ் யோசப் அடிகளாரும் அவர்களோடு காணப்பட்டிருக்கிறார். ஆங்கிலம் தெரிந்தவரும் மூத்தவருமாகிய ஒரு மதகுருவின் தலைமையில் சரணடைந்தால் அதிகம் பாதுகாப்புக் கிடைக்கும் என்று அப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் நினைத்திருக்கலாம். ஆனால் பிரான்சிஸ் அடிகளாரின் வெள்ளை உடுப்போ, மூப்போ, ஆங்கில அறிவோ மேற்படி இயக்க உறுப்பினர்களைப் பாதுகாக்கவில்லை. அவரையும் பாதுகாக்கவில்லை. காணாமல் போன நூற்றுக்கணக்கான இயக்க உறுப்பினர்களோடு அடிகளாரும் காணாமல் போய்விட்டார்

.
இது தொடர்பில் கத்தோலிக்கத் திருச்சபையின் உயர்மட்டம் இன்று வரையிலும் உத்தியோகபூர்வ எதிர்ப்பெதையும் காட்டியிருக்கவில்லை. பிரான்சிஸ் அடிகளார் புலிகள் இயக்கத்தோடு சேர்ந்து இயங்கியிருந்திருந்தால் அவரை ஒரு நீதிமன்றத்தில் நிறுத்தி அது தொடர்பாகாக விசாரித்து முடிவெடுத்திருந்திருக்க வேண்டும். மாறாக அவரைக் காணாமல் ஆக்க முடியாது. எனவே எந்தவொரு சட்ட ஏற்பாட்டுக்கூடாகவும் அவர் விசாரிக்கப்படவில்லை என்பதையும் அவருக்கு என்ன நடந்தது என்பது இன்று வரையிலும் தெரியாமலிருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டி அரசாங்கத்திடமும் அனைத்துலக அமைப்புக்களிடமும் நீதி கேட்;க வேண்டிய ஒரு பொறுப்பு திருச்சபைக்கு உண்டு. இது தொடர்பில் யாழ் மறைமாவட்டச் சேர்ந்தவர்கள் நீதி சமாதான ஆணைக்குழுவுக்கூடாக ஒர் ஆட்கொணர்வு மனுவை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார்கள்.

அக்கல்லூரியின் முன்னாள் முதல்வர் ஒருவர் காணாமல் போன கால கட்டத்தில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவரே இப்போதுள்ள அரசுத்தலைவர் ஆகும். எனவே கல்லூரிக் கட்டடத்தை அவர் திறந்து வைக்கும் போது அவரிடம் நீதி கேட்க வேண்டுமென்று ஒரு தொகுதி பழைய மாணவர்கள் போராட்டம் நடாத்தினார்கள். அரசுத் தலைவரை அழைப்பது என்ற முடிவை இப்போதுள்ள நிர்வாகம் எடுக்கவில்லை என்றும் புதிய முதல்வர் பதவியேற்று சிறிது காலமே ஆகிறது என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது. நிதி உதவி வழங்கிய பழைய மாணவர்கள் சிலரின் விருப்பப்படியே அரசுத்தலைவர் அழைக்கப்பட்டதாக ஒரு தகவல் உண்டு.


கல்லூரியின் முதல்வர் தனது உரையில் காணாமல் ஆக்கப்பட்ட முன்னாள் முதல்வரைப் பற்றி குறிப்பிடிருக்கிறார். அக்கல்லூரியை இப்படிக் கட்டியெழுப்பவேண்டும் என்பது பிரான்சிஸ் யோஸப்பின் கனவு என்றும் கூறியுள்ளார்.அரசுத்தலைவர் தனது உரையில் காணாமல் ஆகப்பட்டவர்களுக்கான அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதாகவும் இனி அது விடயங்களைக் கவனித்துக் கொள்ளும் என்றும் எனவே அந்த இடத்தில் காணாமல் போனவர்களின் விடயத்தைக் குறித்து அதிகம் பேசுவதற்கு தான் விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். அந்த அலுவலகத்தை ஒரு பெரிய அடைவாக மேற்கு நாடுகளும், ஐ.நாவும் காட்டுகின்றன.

அரசுத் தலைவரோடு கொழும்புப் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தும் வருகை தந்திருந்தார்;. அண்மையில் அம்பாறை மற்றும் கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களைக் குறித்து கருத்துத் தெரிவித்த பேராயர் அவற்றை இனமுரண்பாடுகளாகப் பார்க்கக் கூடாது என்று அறிக்கை விடுத்திருந்தார். அது போலவே சில மாதங்களுக்கு முன்பு புதிய யாப்பில் பௌத்தத்திற்கு முதலிடம் தரப்படுவது தொடர்பான விவாதங்களின் போது யாப்பில் பௌத்தத்திற்கு முதலிடம் தரப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை அவர் ஆதரித்ததாக ஓர் அவதானிப்பு உண்டு

.
விக்னேஸ்வரன் தமிழில் உரை நிகழ்த்திய பொது அரசுத்தலைவர் அது தொடர்பாக கர்தினால் மல்கம் ரஞ்சித்திடம் கேட்டிருக்கிறார். கர்தினால் அதை அருகிலிருந்த மதகுருவிடம் கேட்டிருக்கிறார். அப்பொழுது கல்லூரிக்கு என்னென்ன தேவைகள் உண்டு என்றும் கேட்டிருக்கிறார். பின்னர் அவரே மைத்திரியிடம் கல்லூரியில் நீச்சல் தடாகம் இல்லை என்றும் கூறியுள்ளார்.அதற்கு அரசுத்தலைவர் ஒரு நீச்சல் தடாகத்தைக் கட்டித்தர ஒப்புக்கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்தன. ஒரு பகுதி தமிழ் மக்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடிக்கொண்டிருககிறார்கள். இன்னொரு பகுதியினர் நிலங்களை மீட்பதற்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக மன்னார் முள்ளிக்குளத்தில் தமது வீடுகளைக் கேட்டுப் போராடும் மக்களை அரசாங்கம் வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றி வருகிறது.அதில் பாதிக்கப்பட்டிருப்பது கத்தோலிக்கர்களே என்பதையும் அப்போராட்டத்தில் அதிகளவு கத்தோலிக்கக் குருமார்கள் காணப்பட்டார்கள் என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட வேண்டும். இப்படிப்பட்டதோர் அரசியற் பின்னணியில் பத்திரிசியார் கல்லூரிக்கு இப்பொழுது நீச்சல் தடாகம்தான் அவசியமா? என்று சில மதகுருக்கள் விசனப்பட்டார்கள்.

மேற்படி நிகழ்விற்கு எதிர்ப்புக் காட்டியவர்களுள் ஒரு பகுதியினர் கல்லூரியின் பழைய மாணவர்களாகும். இவர்களுள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் சிலரும் காணப்பட்டார்கள். இவர்களைத் தவிர யாழ் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் அதில் காணப்பட்டார்கள். இவர்களோடு அங்லிக்கன் திருச்சபையைச் சேர்ந்த அருட்தந்தை சக்திவேலும் அங்கிருந்தார். இது போல ஓர் எதிர்ப்பு சில மாதங்களுக்கு முன்பு. யாழ் இந்துக்கல்லூரிக்கு அருகே காட்டப்பட்டது. அதில் ஒப்பீட்டளவில் அதிக தொகை அரசியல்வாதிகள் பங்குபற்றினார்கள். அவ்எதிர்ப்பை அரசுத்தலைவர் சமயோசிதமாக எதிர்கொண்டார். ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் இறங்கி அவர்களோடு உரையாடினார். பின்னர் சந்திக்கிறேன் என்று கூறி விழாவிற்கு சென்றார். ஆனால் பின்னர் சந்திக்கவேயில்லை. இம்முறை பத்திரிசியார் கல்லூரியில் முன்னரை விடக் கெட்டித்தனமாக அவர் ஆர்ப்பாட்டத்தை எதிர்கொண்டிருக்கிறார்.


பொலிசார் ஆர்ப்பாட்டக்காரர்களை அணுகி அவர்களில் மூன்று பேர்களோடு அரசத்தலைவர் பேச விரும்புவதாகக் கூறியிருக்கிறார்கள். பாதர் சக்திவேலும், ஒரு பழைய மாணவரும் அதே சமயம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர சபை வேட்பாளருமாகிய தீபனும், பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணும் அச்சந்திப்புக்குச் சென்றிருக்கிறார்கள். மூவரையும் பாதுகாப்புத் தரப்பு சோதனை செய்திருக்கிறது. பாதர் சக்திவேல் என்னையும் சோதனை செய்கிறீர்களா? என்று கேட்டிருக்கிறார். அரசுத் தலைவர் விழாவில் பேசுவதற்கு முன்னரே அவரைச் சந்திக்க வேண்டுமென்று அவர்கள் கேட்டிருக்கிறார்கள். ஆனால் அவர் பேசி முடிந்த பின்னும் சந்திப்புக்;கொன்று இடமோ, நேரமோ குறித்தொதுக்கப்படவில்லை.

அரசுத்தலைவர் நடந்தபடியே கதைத்திருக்கிறார். பாதர் சக்திவேலைக் கண்டதும் அவரைப் பற்றி அருகில் இருந்த ஒருவரிடம் அவர் ஏதோ கேட்டிருக்கிறார். பாதர் எந்தத் திருச்சபையைச் சேர்ந்தவர். என்று விசாரித்திருக்கலாம். அவர் பாதரோடு கதைக்கவில்லை. பழைய மாணவருடைய கையிலும் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கையிலும் இருந்த சுலோக அட்டைகளை வாங்கிப் பார்த்திருக்கிறார். சுலோக அட்டையைக் கையளிக்கும் போது அப் பழைய மாணவரின் கையை பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பிடித்து இழுத்து அவரைப் பின்னுக்கு நகர்த்தியிருக்கிறார். வாக்களித்தபடி சந்திப்பு நடக்கவில்லை என்று கூறி பாதிக்கப்பட்ட பெண் குரலை உயர்த்திக் கதைத்திருக்கிறார். பாதுகாப்புப் பிரிவு அவரை அப்படியே அழைத்துக் கொண்டு போய் ஓர் அறைக்குள் வைத்து கதவைப் பூட்டியிருக்கிறது. பல நிமிடங்களுக்குப் பின்னரே அவரை விடுவித்திருக்கிறார்கள். இது தொடர்பாக பாதர் சக்திவேல் ஓர் அறிக்கை விட்டிருந்தார். அதற்கு ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு ஒரு மறுப்பறிக்கை விட்டிருக்கிறது.

ஒரு கல்லூரியில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வராக இருந்து காணாமல் போன ஒரு மூத்த மதகுருவிற்காக நீதி கேட்டுப் போராடியோர் மத்தியில் ஓர் அங்கிலிக்கன் மதகுரு மட்டுமே காணப்பட்டிருக்கிறார்.

ஈழப்போரில் இதுவரையிலும் இரண்டுக்கும் மேற்பட்ட கத்தோலிக்கக் குருக்கள் காணாமல் போயிருக்கிறார்கள்.இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார். தமிழ் மக்களின் அரசியற் செயற்பாட்டிலும், உளவளத்துணைச் செயற்பாட்டிலும் மனித உரிமைகள் தொடர்பான செயற்பாட்டிலும் கத்தோலிக்கத் திருச்சபையானது பெரிய பங்களிப்பைச் செய்திருக்கிறது. பெரும்பாலான பங்குத்தந்தைமார் தமது பங்கு மக்களின் காயங்கள், துக்கங்கள், கோபங்களின் பக்கமே நின்றிருக்கிறார்கள். மனித உரிமைச் செயற்பாட்டில் தீவிரமாகச் செயற்பட்டு அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாகியிருக்கிறார்கள். சிலரை இலக்கு வைத்து அவர்களுடைய வசிப்பிடத்திற்கு கழிவு ஒயில் வீசப்பட்டிருக்கிறது.

குறிப்பாக 2009ற்குப் பின் சிவில் சமூக நடவடிக்கைகளில் கத்தோலிக்கக் குருமார் துணிச்சலாகவும், முன்மாதிரியாகவும் நடந்திருக்கிறார்கள். ஆட்சி மாற்றத்திற்கு முன்பு வரை யாழ்;ப்பாணத்தில் இடம்பெற்ற அரசியல் மற்றும் சிவில் சமூகக் கலந்துரையாடல்களிற் பல யாழ் மறைக்கல்வி நிலையத்திலேயே நடந்திருக்கின்றன. யாழ் பல்கலைக்கழத்தி;ல் கூட அவ்வளவு சந்திப்புக்கள் நடந்திருக்கவில்லை.

மகிந்தவின் காலத்தில் குரலற்ற மக்களின் குராக ஒலித்த தமிழ் சிவில் சமூக அமையத்தில் பல கத்தோலிக்க மதகுருமார் தீவிரமாகச் செயற்பட்டிருக்கிறார்கள். எழுக தமிழ் போன்ற அரசியற் செயற்பாடுகளிலும் கத்தோலிக்கக் குருமார்களையும், கன்னியாஸ்திரிகளும் காணப்பட்டார்கள். ஆயுத மோதல்கள்; முடிவிற்கு வந்த பின்னரான ஒரு காலகட்டத்தில் அச்சத்திலிருந்தும் அவமானகரமான தோல்வியிலிருந்தும் கூட்டுக் காயங்களிலிருந்தும், கூட்டு மனவடுக்களிலிருந்தும் விடுபடாத ஒரு சமூகத்தில் துணிச்சலாகவும் முன்மாதிரியாகவும் ஒலித்த ஒரு கலகக் குரலாக முன்னாள் மன்னார் ஆயரான இராயப்பு யோசப் ஆண்டகையைக் குறிப்பிடலாம்.

உலகின் மிகச் சிறிய அரசு என்று வத்திக்கான் வர்ணிக்கப்படுகிறது. மென்சக்தி ஆற்றல் பற்றி உரையாடும் அறிஞர்கள் வத்திக்கானை ஒரு முன்னுதாரணமாகக் காட்டுவதுண்டு. படையணிகள் இல்லாத ஓர் அரசு அது. ஆனால் உலகெங்கிலுமுள்ள கத்தோலிக்கர்களின் இதயங்களை அது கைப்பற்றி வைத்திருக்கிறது. படைப்பலம் இன்றி மக்களின் மனங்களை கைப்பற்றி வைத்திருக்கும் ஒரு மென்சக்தி அரசாக அது வர்ணிக்கப்படுகிறது. ஆனால் அதற்கென்று ஓர் அரசியல் உண்டு. வெளியுறவுக் கொள்கையுண்டு.

உலகம் முழுவதிலுமுள்ள கத்தோலிக்க ஆதீனங்கள் அந்த அரசியலைப் பின்பற்றுகின்றன. அதே சமயம் உள்நாட்டு ஆதீனங்களும், உள்;ர் பங்குகளும் உள்நாட்டு உள்;ர் யதார்த்தங்களைப் பிரதிபலிப்பதுண்டு. 1980களில் தமிழ் மக்களால் விரும்பிக் கேட்கப்பட்ட ஒரு வானொலி வெரித்தாஸ் வானொலி ஆகும். கத்தோலிக்கத் திருச்சபையால் நிர்வகிக்கப்பட்ட இவ் வானொலியின் தமிழ்ச்சேவையானது தமிழ் இயக்கங்களை போராளிகள் என்று விழிக்கும். அதே சமயம் சிங்களச் சேவையானது ரஸ்தவாதிகள் – பயங்கரவாதிகள் என்று விழிக்கும் அதாவது அந்நாட்களில் திருச்சபையானது இன ரீதியாக பிளவுண்டிருந்ததான ஒரு தோற்றத்தை அது காட்டியது.

2009 மேக்குப் பின் இனப்படுகொலைக்கு நீதி கேட்டு தமிழ்க் குருமார்களில் ஒரு தொகுதியினர் வத்திக்கானுக்கு விண்ணப்பம் ஒன்றை அனுப்பியதாக ஓரு தகவல் உண்டு. அதே சமயம் மற்றொரு தொகுதியினர் அதற்கு மாறான நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததாகவும் ஒரு தகவல் உண்டு. எனினும் 2009 மேக்குப் பின் தமிழ் மக்கள் மத்தியில் பெரும்பாலானவர்கள் பயந்து பயந்து கருத்துத் தெரிவித்த ஒரு காலகட்டத்தில் துணிச்சலாக முன்வந்து கருத்தைத் தெரிவித்த தரப்புக்களில் கத்தோலிக்கத் திருச்சபையின் குருமார்கள் முக்கியமானவர்கள். ஆயுத மோதல்கள் முடிவிற்கு வந்தபின்னரான எல்லா எதிர்ப்புப் போராட்டங்களிலும் முன்னணியில் கத்தோலிக்க மதகுருமாரையும் கன்னியாஸ்த்திரிகளையும் காண முடியும். எழுக தமிழ் நிகழ்வுகளிலும் கத்தோலிக்கக் குருமார்களையும், கன்னியாஸ்திரிகளையும் காண முடிந்தது. இவர்களுக்கெல்லாம் ஆதர்சமாகவும், உள்;க்கியாகவும் முன்னாள் மன்னார் ஆயர் இராயப்பு யோசப் காணப்பட்டார்.

ஆனால் காணாமல் போன ஒரு மதகுரு பத்து ஆண்டுகள் முதல்வராக இருந்த ஒரு பள்ளிக்கூடத்தில் அவர் காணாமல் போன கால கட்டத்தில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் பிரதம விருந்தினராக வருகை தந்த பொழுது காட்டப்பட்ட எதிர்ப்பில் ஒரு கத்தோலிக்க மதகுருவையும் காண முடியவில்லை. அதேசமயம் அந்தத் திறப்பு விழாவில் அரசுத்தலைவரோடு சம்பந்தரும் விக்னேஸ்வரனும் பங்குபற்றியிருந்தார்கள். இத்தனைக்கும் இது ஒரு தவக்காலம்.

Related Articles

1 Comment

Avarage Rating:
  • 0 / 10
  • Sam Pratheepan , 27/03/2018 @ 7:45 PM

    – ஒரு தமிழ்க் கத்தோலிக்கனின் ஒப்பாரி –

    ஓ என் கல்லூரி வாசலே!
    இருபத்தைந்து ஆண்டுகளின் முன்
    நீ தன்மானம் தந்து தயாரித்து அனுப்பிய
    ஒரு தமிழ்மகன் நான்.
    ஓ என் கத்தோலிக்க பீடமே!
    விடுதலை இறையியல் ஊட்டி
    நீ இல்லறத்தில் தரையிறக்கம் செய்த
    ஒரு கத்தோலிக்க தமிழ்மகன் நான்.
    உன்னை நான் பழிப்பேனா?

    உன் வாசல்களில்
    இப்போதெல்லாம் பிண வாடை அடிக்கிறது என
    கூற்றுவனே வந்து சொல்கிறான் என்னிடம்.
    உன் பலிப்பீடங்களில் நரபலியாளனே
    பூஜைகள் செய்கிறானாம் இப்போதெல்லாம்.
    இருந்தும் உன்னை நான் பழிப்பேனா?

    துச்சாதணன் வீடு வரை வந்தானாம் என்று
    அரக்குமாளிகை வரை பேச்சு.
    பாஞ்சாலி வம்சத்து குலமகளிரெல்லாம்
    இந்திரபிரசித்தத்தில்
    ஆராத்தி எடுத்ததாய் அறிந்தேன்.
    எமக்கெல்லாம் வில்வித்தை தந்த
    துரோணர் எட்டு வருடமாய்
    எங்குமே இல்லை.
    எங்கே என்று
    அத்தினாபுரத்தில் ஒருவர் கூட கேட்கவில்லையாமே!
    கேட்காவிட்டால் என்ன
    உன்னை நான் பழிப்பேனா?

    லூசிப் பேயின் நல்லாட்சி குறித்து
    இயேசுவின் முற்றத்தில்
    இராயப்பர் நீட்டி முழங்கினாராம்,
    பரபாஸ் வந்து இப்போதுதான்
    காதுக்குள் சொல்லிவிட்டு போகிறான்.
    என்றாலும் உன்னை நான் பழிப்பேனா?

    வேதசாட்சிகளையெல்லாம் ஓட ஓட
    வெட்டிச் சரித்த உரோமைய தலைவனை
    இத்தனை நெருக்கமாய் உட்கார வைத்ததாய்
    கைப்பாசு கூறித்திரிகிறான்.
    நூற்றுவர் தலைவனும் பிள்ளையார் சுழியும்
    திருச்சபையின் பாறைகளுக்கு அருகே
    கம்பீரமாய் நின்றது பெருமை எமக்கு.
    இருந்தும் என்ன
    உடன்படிக்கைப் பேழையின்
    கட்டளைகள் ஒன்றையேனும்
    நிறைவேற்றாதது பற்றி
    மூச்சுக்கூட விடவில்லையாமே!
    நமக்கென்ன
    உன்னை நான் பழிப்பேனா?

    எங்கள் இரட்சணிய சேனையில் இருந்து
    பபிலோனிய அடிமைத்தனத்துக்கு
    விடுதலை கேட்டுப் போன
    அத்தனை சீடனையும் அடித்தார்களே!
    அடித்தது ஒரு கன்னத்தில் அல்ல
    ஓராயிரம் கன்னங்களில்.
    மறு கன்னத்தை காட்டுங்கள் என்று
    ஒருபோதும் கூறாதீர்கள்
    இப்போது இயேசு கூட
    அதை விரும்புவதில்லை.
    காரியமில்லை
    எது எப்படியோ
    ஓ என் கல்லூரி வாசலே!
    ஓ என் கத்தோலிக்க பீடமே!
    உன்னை நான் பழிப்பேனா?

    – சாம் பிரதீபன் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *