தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர் அதன் உருவாக்கத்திற்குப் பின்னால் இருந்தவர்களில் ஒருவரான சிவராம், வீரசேகரி வாரப் பத்திரிகையில் கட்டுரை எழுதியிருந்தார். அதில் ‘‘தமிழ் மக்களாகிய நாம் கட்சிகளுக்கு அல்ல கொள்கைகளுக்கே வாக்களிக்க வேண்டும்” என்று எழுதியிருந்தார். கட்டுரை வெளிவந்த சில நாட்களின் பின் அவரை ஏ-9 சாலையில் கண்டபோது நான் கேட்டேன், ‘‘வழமையாக நீங்கள் எழுதும்போது ஒரு மூன்றாம் ஆளாக சாட்சி நிலையில் இருந்து எதையும் சொல்வதுண்டு. ஆனால், இம்முறை தன்னிலைப்பட்டு ‘நாங்கள் கொள்கைக்கு வாக்களிக்க வேண்டும்’ என்று கேட்டிருந்தீர்கள். சாட்சி நிலையிலிருந்து நீங்கி தன்னிலையிலிருந்து எழுதக் காரணம் என்ன” என்று சிவராம் அதற்கு நேரடியாகப் பதில் சொல்லவில்லை. சிரித்துக் கொண்டு நின்றார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட போது அதன் பின்னிருந்து உழைத்தவர்கள் ஒரு கொள்கையின் மீதே அதைக் கட்டியெழுப்புவதாக நம்பினார்கள். தமிழ்த் தேசிய அரசியலை வன்னிக்கு வெளியிலும் அனைத்துலக அரங்கிலும் முன்னெடுப்பதே அக் கொள்கையாகும். இதை அதன் பிரயோக நிலையிலிருந்து கூறின் விடுதலைப்புலிகளால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட தமிழ்த் தேசிய அரசியலை வன்னிக்கு வெளியிலும் சர்வதேச அரங்கிலும் பலப்படுத்துவது என்று பொருள் கொள்ளலாம். யுத்தமற்ற ஓர் சூழலில் அதாவது, ரணில் – பிரபா உடன்படிக்கை காலத்தில் விடுதலைப்புலிகள் இயக்கம் இலங்கைத்தீவில் ஒரு தரப்பாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. தமிழ்த் தேசிய அரசியலில் விடுதலைப்புலிகளின் மேலாண்மையை ஏற்றுக்கொண்டே அது உருவாக்கப்பட்டது. அப்போது விடுதலைப்புலிகள் இயக்கமே மையமாகக் காணப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டழைமப்பு அல்ல. விடுதலைப்புலிகள் என்ற மையத்தின் ஒரு மிதவாத நிழலாக அது காணப்பட்டது. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் கூட்டமைப்புக்கு என்று ஒரு அலுவலகம் இருக்கவில்லை.. தமது ஆட்சிப் புலத்தில் கூட்டமைப்பினர் அரசியல் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று விடுதலைப்புலிகள் கருதியிருக்கலாம்.
மூன்று பிரதான கூறுகளை உள்ளடக்கி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. முதலாவது – பாரம்பரிய மிதவாதிகள். இரண்டாவது – தீவிரவாதத்திலிருந்து மிதவாதத்திற்கு மாறியவர்கள். மூன்றாவது – விடுதலைப்புலிகளின் அலைவரிசையில் சிந்திப்பவர்கள் அல்லது அவர்களுக்கு நம்பிக்கையானவர்கள். இதில் மிதவாதப் பாரம்பரியமானது ஆயுதப் போராட்டத்தின் எழுச்சியோடு ஈழத்தமிழ் அரசியலில் பின்னரங்குக்குத் தள்ளப்பட்ட ஒரு பகுதியாகும். அதைப் போலவே முன்னாள் தீவிரவாதிகள் என்று அழைக்கப்படுவோரும் விடுதலைப்புலிகளால் அரங்கிலிருந்து அகற்றப்பட்டு இலங்கை – இந்திய உடன்படிக்கையின் கீழ் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு மிதவாதிகளானவர்களாகும்.
எனவே, இத்தகைய பொருள்படக் கூறின் தமிழ்த் தேசிய அரசியல் பாதையில் உருவாக்கப்பட்ட ஒப்பீட்டளவில் ஆகக்கூடிய பட்ச சாம்பல் பண்பு மிக்க (Grey) ஒரு ஐக்கிய ஏற்பாடாக கூட்டமைப்பைக் கூறமுடியும். இதனால், ஓப்பிட்டளவில் அதிகம் தேசியத் தன்மை மிக்கதொரு கூட்டமைப்பாகவும் அது காணப்பட்டது. அத்தகையதொரு கூட்டமைப்பிற்கு கிழக்கைச்சேர்ந்த ஒருவர் கேள்விக்கிடமற்ற தலைவராக உருவாகியமை என்பதும் ஆயுதப் போராட்டத்தின் பின்னணியிலேயே சாத்தியமாகியது. வுழமையான மிதவாதப் பாரம்பரியத்தில் இப்படியொரு கிழக்கு மையத்தலைமையானது வடக்கு மையத் தலைமைகளை மேவி எழுவது எவ்வளவு கடினமானது என்பதற்கு தமிழ் மிதவாதப் பாரம்பரியத்தில் முன்னுதாரணங்கள் உண்டு.
ஆனால், விடுதலைப்புலிகளின் வீழ்ச்சிக்குப் பின் அப்படியொரு கூட்டமைப்பிற்கான தேவைகள் குறைந்து போய்விட்டன என்பதையே கடந்த நான்காண்டு கால தமிழ் அரசியல் நிரூபித்திருக்கிறது. விடுதலைப்புலிகள் பலமாக இருந்த வரையில் அவர்கள் தான் தமிழ் அரசியலின் மையமாக காணப்பட்டனர். கூட்டமைப்பு ஒரு நிழல்தான். ஆனால், புலிகளின் வீழ்ச்சிக்குப் பின் நிழலே மையமாக வேண்டிய ஒரு நிலைமை உருவாகியது. இது அடிப்படையில் ஒரு பண்பு மாற்றம்தான்.
நிழல் போலிருந்த ஓர் அமைப்பு தன்னை ஒரு மையமாக கட்டியெழுப்ப வேண்டியிருந்தது. ஆனால், எந்த மையத்தில் நிழலாக அது காணப்பட்டதோ அந்த மையத்தின் அதே அரசியலை முன்னெடுக்க கூட்டமைப்பால் முடியாது. ஏனெனில், விடுதலைப்புலிகள் இயக்கத்திடம் படைபலம் இருந்தது. ஒரு கட்டுப்பாட்டுப் பிரதேசம் இருந்தது. ஒரு சர்வதேசக் கட்டமைப்பு இருந்தது. எனவே, இவை எவையும் இல்லாத கூட்டமைப்பானது விடுதலைப்புலிகளின் அதே அரசியலை முன்னெடுக்க முடியாது. புலிகள் இயக்கமும் கூட்டமைப்பும் முன்னெடுத்த அரசியல் ஏறக்குறைய ஒன்றுதான் என்றாலும் அவை இரண்டும் அவற்றின் இயல்பைப் பொறுத்தவரையில் இரு வேறு ஒழுக்கங்களுக்கு உரியவை. குறிப்பாகக் கூட்டமைப்பானது ஒரு மிதவாத ஒழுக்கத்துக்குரியது. எனவே, தோல்விக்குப் பின்னரான ஓர் அரசியல் வெற்றிடத்தில் தோற்கடிக்கப்பட்ட தரப்பின் வெளி நீட்சியாகக் காணப்பட்ட ஒரு மிதவாத அமைப்பானது வெற்றிவாதம் கோலோச்சும் ஒரு அரசியல் சூழலில் தோற்கடிக்கப்பட்ட தரப்பின் அரசியலை அப்படியே முன்னெடுக்க முடியாது.
மேலும் நிழலாக இருந்து ஒரு மையமாக உருவாகும் போது தலைமைத்துவ உருவாக்கத்திலும் அடிப்படைப் பண்பு மாற்றம் தேவை. நுpழலாக இருந்த வரை மேலிருந்து கீழ் நோக்கித் தரப்பட்ட உத்தரவுகள் அல்லது அறிவுறுத்தல்கள் அல்லது ஆலோசனைகளின்; படி இயங்க முடியும். ஆனால், மையமாக மாறும்போது அந்த இடத்தில் தலைமைத்துவப் பண்பை நிரூபிக்க வேண்டியிருக்கும். தொடர்ச்சியான தலைமைத்துவங்களை ஒன்றன்பின் ஒன்றாக உருவாக்கவல்ல ஒரு வெற்றிகரமான பாரம்பரியத்தையும் கட்டியெழுப்ப வேண்டியிருக்கும்.
மேற்சொன்ன ஒரு பண்பு மாற்ற காலகட்டத்திற்கு உரிய சவால்களை கூட்டமைப்பானது எவ்வாறு எதிர்கொண்டது? புலிகளின் பின்னரான மிதவாத அரசியலில் அதன் இறுதி இலக்கு எது? அந்த இலக்கை அடைவதற்கான அதன் மூலோபாயம் எது?
கடந்த நான்காண்டு கால நடைமுறைகளை வைத்துப் பார்க்கும்போது கூட்டமைப்பின் தலைமையானது திட்டவட்டமான சில முடிவுகளை எடுத்துவிட்டதாகவே கருதவேண்டியுள்ளது. கூட்டமைப்பில் முதலில் ஏற்பட்ட பிளவானது அது தன்னை புலி நீக்கம் செய்ய முற்பட்டதையே காட்டுகிறது. அதாவது விடுதலைப்புலிகளின் அரசியல் தடத்திலிருந்து கூட்டமைப்பு சில ஆண்டுகளுக்கு முன்னரே விலகத் தொடங்கிவிட்டது. ஆனால், அதை ஒரு பகிரங்க அரசியல் விவாதமாக அவர்கள் நடத்த தயாரில்லை. தமது வாக்கு வங்கியை அது பாதிக்கலாம் என்று கருதக் கூடும். மேலும் தமிழ் டயஸ்பொறாவை பகைக்க விரும்பாததும் ஒரு காரணம். இப்பொழுது தலைமையோடு முரண்படும் தரப்பினர் அப்பொழுது தலைமையைப் பலப்படுத்தியதை இங்கு சுட்டடிக்காட்டவேண்டும்.
இப்பொழுது தோன்றியிருக்கும் சர்ச்சையானது முதலாவதாக ஒரு தலைமைத்துவப் பிரச்சினை அல்லது ஆளுமைப் பிரச்சினைதான். ஆனாலும், மிதவாதம்-தீவிரவாதம் என்று திசை திருப்பப்படுகிறது. ஈழத்தமிழ்த் தேசிய அரங்கில் தூய மிதவாதிகள் என்று யாரும் கிடையாது. முழு நிறைவான அஹிம்சாவாதிகளும் கிடையாது. அஹிம்சை அல்லது சத்தியாக்கிரகம் எனப்படுவது ஒரு வாழ்க்கை முறை. அது ஒரு போராட்ட முறை அல்ல. என்பதால் தான் காந்தி எனது வாழ்க்கையே எனது செய்தி என்று கூற முடிந்தது. அஹிம்சை என்பது சாகத்துணிந்தவனின் வாழ்க்கை முறையாகும். அது சாகப் பயந்தவனின் போராட்ட உத்தி அல்ல. அல்லது செயலற்றவர்கள் எடுத்தணியும் முகமூடியுமல்ல. காந்தி முன்னெடுத்த சத்தியாக்கிரகம் அத்தகையதே. எனவே, இத்தகைய பொருள்படக் கூறின் தமிழ் மிதவாதிகளின் சத்தியாக்கிரகம் எனப்படுவது ஒரு வகை போராட்ட உத்தியாகவே சுருங்கிக் காணப்பட்டது. அவர்களிடம் முழு நிறைவான ஒரு சத்தியாக்கிரகப் பாரம்பரியம் என்றைக்குமே இருந்ததில்லை.இது ஒருபுறம்.
இன்னொரு புறம்இ எப்பொழுது மேடைகளில் வைத்து இளைஞர்களை ஆயுதம் ஏந்தத் தூண்டினார்களோ அப்பொழுதே வன்முறை தொடங்கிவிட்டது. ஒரு விமர்சகர் கூறுவதுபோல அது ஒரு வேர்பல் வயலன்ஸ்தான் (ஏநசடியட ஏழைடநnஉந). அமிர்தலிங்கத்தை தளபதி என்று அழைத்ததும் அவர் வீரமாகாளியம்மன் கோயிலில் வாளை உருவிக்கொண்டு நின்றதும் எப்படி அஹிம்சையாகும்? என்று மேற்படி விமர்சகர் கேட்டார். எப்பொழுது மேடைகளில் இரத்தத்திலகம் வைக்கப்பட்டதோ அப்பொழுதே யுத்தம் தொடங்கிவிட்டது.
எனவே, தூய மிதவாதப் பாரம்பரியம் என்று எதுவும் இங்கு கிடையாது. பதிலாக யாருடைய கைகளில் குறைய இரத்தம் ஒட்டிக்கொண்டிருக்கிறது என்று வேண்டுமானால் உரையாடலாம். மற்றும்படி கூட்டமைப்பை ஒரு தேர்தல் கூட்டு என்பதற்கும் அப்பால் அதை ஒரு கொள்கைக் கூட்டாகப் பேணத் தேவையான அரசியல் திடசித்தம் (Pழடவைiஉயட றுடைட) அதன் தலைமையிடம் இல்லை என்பதே இங்கு மெய்நிலை. அதாவது கூட்டமைப்பு காலாவதியாகிவிட்டது. அதை இன்னும் பொருத்தமான வார்த்தைகளிற் கூறின் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்னரான ஓர் அரசியற் சூழலுக்கேற்ப தன்னை பண்பு மாற்றம் செய்வதில் கூட்டமைப்பு தோல்வியுற்றுவிட்டது எனலாம். ஓர் அமைப்புக்குள் அல்லது கட்சிக்குள் தோன்றும் பிணக்குகளை அக்கட்சியின் தலைமையால் தீர்க்க முடியாதிருப்பதும் வெளிச்சக்திகள் தலையிட்டு மத்தியஸ்தம் செய்ய வேண்டியிருப்பதும் கூட்டமைப்பானது கலகலத்துப் போய்விட்டது என்பதையே காட்டுகின்றன.
கூட்டமைப்பில் உள்ள பெரியதும் பலமானதுமாகிய தமிழரசுக் கட்சியானது கூட்டமைப்பின் ஒவ்வொரு அங்கமாகக் கழட்டிவிடுவதன் மூலம் தன்னைப் பலப்படுத்தி வருகிறது. முதலில் அது தன்னைப் புலி நீக்கம் செய்து கொண்டது. இப்பொழுது தமிழரசுக் கட்சி தன்னை வன்முறை நீக்கம் செய்ய முற்படுவதான ஒரு தோற்றத்தைக் காட்டி வருகிறது. அதேசமயம் இப்பொழுது முரண்பட்டு நிற்கும் கட்சிகளைச் சேராத ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தமிழரசுக் கட்சியானது தனது உறுப்பினர்களாக்கியதன் மூலம் அது கூட்டமைப்பில் உள்ள தனிப் பெருங்கட்சியாகவும் உருவாகிவிட்டது. இவ்விதம் நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழரசுக் கட்சிக்குள் ஈர்த்துக் கொண்டதை எதிர்த்தரப்பினர் ‘ஆட்பிடி’ அரசியல் என்று வர்ணிக்கின்றார்கள். அண்மையில் மன்னாரில் ஆயரின் ஏற்பாட்டில் நிகழ்ந்த சந்திப்பின்போது இக்குற்றச்சாட்டு பகிரங்கமாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவற்றுடன் கூட்டமைப்பின் பிந்திய சேர்க்கைகளான புளொட் அமைப்பும் ரி.யு.எல்.எவ். உம் கட்சியின் முக்கியத்துவமற்ற உதிரிப்பாகங்களாகவே காணப்படுகின்றன.
இந்நிலையில் நடைமுறையில் தமிழரசுக் கட்சியானது தன்னைப் படிப்படியாக பலப்படுத்தி வருவதைக் காண முடிகிறது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சிதைவின் மீதே இது சாத்தியமாகியுள்ளது. தமிழரக் கட்சி பெருக்கப் பெருக்க தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சிறுத்துக்கொண்டே போகிறது. இப்பொழுது சிறுபான்மையாகக் காணப்படும் ஒரு தரப்புக்கே கூட்டமைப்புத்தேவைப்படுகிறது. அந்த தரப்பிற்குள்ளும் ரெலோ அமைப்பானது சற்றுத்தடுமாறுவது போலத் தோன்றுகிறது.
அதாவது, பலவீனமான ஒரு தரப்புக்கே கூட்டமைப்புத்தேவைப்படுகிறது. இத்தகைய பொருள்படக் கூறின் கூட்டமைப்பு காலாவதியாகிறது எனலாம். தமிழ் மிதவாத அரசியலில் கறுப்பு வெள்ளைச்சிந்தனை முறையை ஓரளவுக்கேனும் கடந்து உருவாக்கப்பட்ட ஓப்பீட்டளவில் சாம்பல் பண்பு (Grey) அதிகமுடைய ஒரு கூட்டமைப்பானது காலாதியாகிறது.
இந்நிலையில் ஒரு புதிய காலத்தின் புதிய தேவைகளுக்கேற்ப ஒரு புதிய கூட்டமைப்பை நோக்கி தமிழரசுக் கட்சியும் ஏனைய கட்சிகளும் சிந்திக்க வேண்டிய ஒரு தேவை உருவாகி வருகிறதா?
15-05-2013