கடந்த வாரம் கொழும்பில் யுத்த வெற்றி ;கொண்டாடப்பட்ட அதே நாளில் யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும்; இறுதிக் கட்டப் போரில் கொல்லப்பட்டவர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. நாட்டின் ஒரு பகுதியில் வெற்றியாகக் கொண்டாடப்பட்டது இன்னொரு பகுதியில் துக்கமாக அனுஷ்டிக்கப்பட்டது. அதாவது, நாடு வென்றவர்களுக்கும், தோற்றவர்களுக்கும் இடையே இரண்டாகப் பிளவுபட்டிருக்கின்றது என்று பொருள். ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரும் நாடு பிளவுண்டேயிருக்கின்றது. வென்றவர்கள் கூறுகின்றார்கள் நாட்டைப் பிரிக்க முயன்ற சக்திகளைத் தோற்கடித்து நாட்டை ஒன்றிணைத்துவிட்டதாக. ஆனால், வெற்றியைக் கொண்டாடிய நாளிலேயே நாடு மனதளவில் இரண்டாகப் பிளவுண்டு காணப்பட்டது. ஆயின் இதில் வெற்றி எனப்படுவது எது?
அரசாங்கம் யுத்த வெற்றிக்குத் தலைமை தாங்குவது என்று தீர்மானித்துவிட்ட பிறகு, நல்லிணக்கத்திற்கு இடமே இல்லாதுபோய்விட்டது. ஏனெனில், வெற்றிக்குத் தலைமை தாங்குவது என்பது வென்றவர்களுக்குத் தலைமை தாங்குவதுதான். வென்றவர்களுக்குத் தலைமை தாங்கும்போது தோற்றவர்களுடன் எப்படி நல்லிணக்கத்திற்கு வர முடியும்?
தேசிய நல்லிணக்கம் எனப்படுவது ஒரு கூட்டு சிகிச்சைப் பொறிமுறையாகும். போரால் ஏற்பட்ட ஒரு சமுகத்தின் கூட்டுக் காயங்களுக்கும், கூட்டு மனவடுக்களுக்கும் உரிய ஒரு கூட்டுச் சிகிச்சையாக அது அமையவேண்டும். அதன் படி அரசாங்கமானது நாட்டின் மிகப் பெரிய மருத்துவராகச் செயற்படவேண்டும். ஆனால், யுத்த வெற்றிகளுக்குத் தலைமை தாங்கும் ஒரு அரசாங்கத்தால் அப்படியொரு கூட்டுச் சிகிச்சையை வழங்க முடியாது. மாறாக, இருக்கின்ற காயங்களும், மனவடுக்களும் மேலும் மேலும் பெருகவே அது உதவும்.
வெற்றிவாதம் எனப்படுவது வெற்றிக்குத் தலைமை தாங்குவதுதான். அதாவது, வெற்றிபெற்ற தரப்பிற்கு தலைமை தாங்குவதுதான். ஆனால், நல்லிணக்கம் எனப்படுவது சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்பிற்கும் தலைமை தாங்குவதுதான். அப்பொழுதுதான் அரசாங்கமானது நாட்டின் மிகப் பெரிய மருத்துவராகத் திகழ முடியும். தென்னாபிரிக்காவில் ஏறக்குறைய இதுதான் நடந்தது.
நல்லிணக்கச் செயற்பாடுகளைப்பொறுத்த வரை தென்னாபிரிக்காவும், சிறிலங்காவும் ஒன்றல்ல. இரண்டும் இரு வேறு வரலாற்று அனுபவங்களை உடையவை, இருவேறு கள யதார்த்தங்களை உடையவை. எனினும், வெற்றி பெற்ற தரப்பிடமிருந்து வரும் நல்லிணக்கமே நிலையானதும், நீதியமானதுமான ஒரு சமாதானத்தை கட்டியெழுப்ப உதவும் என்பதற்கு தென்னாபிரிக்கா ஒரு பிரகாசமான முன் உதாரணமாகக் கருதப்படுகின்றது. அங்கே கொடுமை இழைக்கப்பட்டது. பெரும்பான்மையினரான கறுப்பினத்தவர்களுக்குத்தான். முடிவில் வெற்றிபெற்றதும் அவர்கள்தான். ஆனால், தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்குக் காரணமானவர்களை அவர்கள் பழிவாங்க முற்படவில்லை. அப்படி அவர்கள் பழிவாங்க முற்பட்டிருந்தால் வெள்ளையினத் தலைவர்களில் பலர் தண்டிக்கப்பட்டிருப்பார்கள். மாறாக, அங்கே நல்லிணக்கப் பொறிமுறைக்கூடாக குற்றமிழைத்தவர்கள் மன்னிக்கப்பட்டார்கள். முறைப்படி அனைத்துலகச் சட்டத்தின் கீழ் விசாரணைகள் நடத்தப்பட்டிருந்திருந்தால் அவர்களின் பலர் தப்பிடியிருக்க முடிந்திருக்காது. ஆனால், குற்றவாளிகளைத் தண்டிப்பதற்குப் பதிலாக அவர்களை மன்னிப்பது என்பது அங்கு ஒரு நல்லிணக்க பொறிமுறையாக பின்பற்றப்பட்டது. ஒரு தூய சட்டப் பிரச்சினையாக அல்ல.
தென்னாபிரிக்காவைப் போலவே, இலங்கைத்தீவிலும் நல்லிணக்கமானது வெற்றிபெற்ற தரப்பிடமிருந்தே வரவேண்டுமெனியில் அது கொழும்பிலிருந்தே தொடங்கப்படவேண்டும். அதேபோல, தமிழ் – முஸ்லிம் சமுகங்களுக்கிடையிலான நல்லிணக்கமானது தமிழர்களிடமிருந்தே தொடங்கப்படவேண்டும். ஏனெனில், இதில் தமிழர்களே பெரும்பான்மை. அதேசமயம், தமிழர்கள் – முஸ்லிம்கள் என்று பார்க்கும்போது தமிழர்கள் பெரும்பான்மைதான் என்றாலும் முஸ்லிம் தலைவர்கள் வெற்றிபெற்ற தரப்புடன் நிற்பதால், தோற்கடிக்கப்பட்ட தமிழ் தரப்பிடமிருந்து எப்படி நல்லிணக்கத்தைத் தொடங்குவது என்று கேட்போரும் உண்டு. ஆனால், தமிழ்த் தேசியமானது, தனது ஜனநாயக உள்ளடக்கச் செழிப்பை அல்லது விரிவை நிரூபித்துக்காட்டவேண்டிய இடம் இது என்பதன் அடிப்படையில் கூறின் தமிழ்- முஸ்லிம் சமுகங்களுக்கிடையிலான நல்லிணக்கமானது தமிழர்களிடமிருந்தே தொடங்கப்படவேண்டும்.
ஆனால், அதுவும் சிரமசாத்தியம் என்றே தோன்றுகிறது. ஏனெனில், தென்னிலங்கையில் வெற்றிவாதம் கோலோச்சும் வரை பிரதான நல்லிணக்கக் கதவு மூடப்பட்டே இருக்கும். இந்நிலையில், உப கதவைத் திறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் பிரகாசமாய் இருக்காது. பிரதான கதவைத் திறப்பதென்றால் அதற்கு அரசாங்கமானது, வெற்றிவாதத்தைக் கைவிடவேண்டும். ஆனால், அது நடக்காது. ஏனெனில், இந்த அரசாங்கம் தனது சொந்த வெற்றியின் கைதியாகிவிட்டது. வெற்றிக்குத் தலைமை தாங்குவதன் மூலம்தான் அது தனது ஆட்சித் தொடர்ச்சியைப் பேண முற்படுகின்றது. வெற்றிதான் இந்தஅரசாங்கத்திற்குள்ள ஒரே முதலீடு.
உண்மையில் இந்த அரசாங்கத்தை முதலில் தேர்ந்தொடுத்தது தமிழர்கள்தான். இல்லை. இன்னும் துலக்கமாகக் கூறின் விடுதலைப்புலிகள் இயக்கம்தான். தமிழர்களை வாக்களி;ப்பில் கலந்துகொள்ளவிடாது தடுத்ததன் மூலம் ரணில் விக்கிரமசிங்காவை தோற்கடிப்பதே புலிகளின் இயக்கத்தின் பிரதான நோக்கமாய் இருந்தது. ஏனெனில், ரணில் கொண்டுவந்த சமாதானத்தை ஒரு தர்மர் பொறி என்றே விடுதலைப் புலிகள் இயக்கம் பார்த்தது. எனவே, சூதான சமானாத்திற்குப் பதிலாக வெளிப்படையான கடும் தேசிய வாதிக்கு அரங்கமைத்துக்கொடுப்பதன் மூலம் தமது அரசியலின் அடுத்த கட்டத்திற்குரிய புதிய தெரிவுகளை உருவாக்கலாமா என்று அந்த இயக்கம் சிந்தித்தது. எனவே, இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆனால், எந்த இயக்கத்தால் இந்த அரசாங்கமானது ஆட்சிக்கு வந்ததோ அந்த இயக்கத்தை தோற்கடித்துப் பெற்ற வெற்றியின் மூலம் முழுக்க முழுக்க சிங்கள மக்களுக்கே தலைமை தாங்குவது என்ற அடுத்த கட்ட வளர்ச்சிக்கு வந்துவிட்டது. அதாவது, யுத்த வெற்றியை முதலீடாக்கி தனது ஆட்சித் தொடர்ச்சியைத் தக்கவைக்க முயல்கின்றது. எனவே, இந்த அரசாங்கம் முதலில் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கே நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில், அந்த இயக்கம் பலமாக இருந்தபோது இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வர மறைமுகமாக உதவியது. பின்னர் அது தோற்கடிக்ப்பட்டதன் மூலம் இந்த அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியிலிருப்பதற்கு உதவியிருக்கின்றது.
இலங்கைத்தீவின் நவீன வரலாற்றில் வேறெந்த தலைமைத்துவமும் சிங்கள மக்களுக்கு பெற்றுக்கொடுத்திராத வெற்றி அது. அந்த வெற்றியின் மூலம் தென்னிலங்கையில் தனக்கு சவாலாக எழக் கூடிய எல்லா எதிர் தரப்புக்களையும் தோற்கடிக்கும் அளவிற்கு சக்தி மிக்கதாக இந்த அரசாங்கம் எழுச்சிபெற்றுவிட்டது. கடந்த வாரம் அரசாங்கத்திற்கு எதிராக அழைப்பு விடுக்கப்பட்டிருந்த பொதுவேலை நிறுத்தம் தோற்றுப்போனதை இங்கு சுட்டிக்காட்டலாம். ஏனெனில், யாராலும் கற்பனை செய்ய முடியாதிருந்த ஒரு வெற்றியை இந்த அரசாங்கம் சிங்கள மக்களுக்கு பெற்றுக்கொடுத்திருக்கின்றது. எனவே, அப்படியொரு வெற்றியைப்பெற்ற இந்த அரசாங்கத்திற்கு யாரும் வகுப்பெடுக்க முடியாது என்றும் அது நம்புகின்றது. தான் பெற்ற வெற்றியின் பிரமாண்டம் காரணமாக உள்நாட்டில் மட்டுமல்ல அனைத்துலக அரங்கிலும் வகுப்பெடுக்கும் தகுதி தனக்கிருப்பதாக இந்த அரசாங்கம் நம்புகின்றது. வெற்றிவாதத்தின் உளவியல் எப்பொழுதும் அப்படித்தான் இருக்கும். அனைத்துலக அரங்கில் இந்த அரசாங்கத்தின் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் அதற்கு ஒருபொருட்டல்ல. அத்தகைய விமர்சனங்கள் கொழும்பு ஏழில்; வசிக்கும் சிங்கள உயர் குழாத்தினருக்கு ஒரு பிரச்சினையாக இருக்கலாம். சிங்கள உயர் குழாத்தினர் இந்த அரசாங்கத்தை குறித்து அதிருப்தியோடு காணப்படுகின்றார்கள். முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச அரசாங்கத்தையும் அவர்கள் அங்கீகரிக்கவில்லைத்தான். ஆனால், இந்த அரசாங்கமானது சிங்கள உயர் குழாத்தினரால் தீர்மானிக்கப்படும் ஒரு அரசாங்கமல்ல. எனவே, சிங்கள உயர் குழாத்தின் மான, அவமானப் பிரச்சினைகளையிட்டு இந்த அரசாங்கம் அதிகம் அலட்டிக்கொள்ளாது. அனைத்துலக சமுகமானது சிங்கள உயர் குழாத்தின் விருப்பு வெறுப்புக்களுக்கூடாக இந்த அரசாங்கத்தைப் புரிந்துகொள்ள முடியாது. சிங்கள உயர் குழாத்தின் மத்தியிலுள்ள அதிருப்தியை மட்டும் அளவுகோலாகக் கொண்டு இந்த அரசாங்கத்தின் எதிர்காலத்தைக் குறித்து முடிவுகளை எடுக்கவும் முடியாது.
எனவே, இந்த அரசாங்கம் அதுவாக விரும்பினாலும்கூட வெற்றிவாதத்தின் உச்சிக் கோபுரத்திலிருந்து இறங்கிவர முடியாது. வெற்றிபெற்றவர்களுக்குத் தலைமை தாங்கும் வரை மெய்யான அர்த்தத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் முடியாது. நல்லிணக்கம் ஏற்பாடாத வரை தோற்கடிக்கப்பட்ட தரப்பானது பிரதான நீரோட்டத்தில் இணைய மறுத்து விலகியே நிற்கும். அது எப்பொழுதும் வெளியாரின் உதவியோடு எதிர்;த் தரப்பைத் தோற்கடிப்பது பற்றியோ அல்லது தண்டிப்பது பற்றியோதான் சிந்திக்கும். எவ்வளவுக்கெவ்வளவு நல்லிணக்கத்தின் ஊற்றுக் கண்கள் அடைக்கப்படுகின்றவோ அவ்வளவுக்கவ்வளவு நாடு வென்றவர்களுக்கும், தோற்றவர்களுக்குமிடையே பிளவுண்டே இருக்கும். எவ்வளவுக்கெவ்வளவு பிளவு ஆழமாகின்றதோ அவ்வளவுக்கவ்வளவு அது வெளியாருக்கே வசதியாக அமையும். எவ்வளவுக்கெவ்வளவு வெளி அழுத்தம் கூடுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு இந்த அரசாங்கத்தை அடிமட்ட சிங்கள மக்கள் பலப்படுத்துவார்கள். ஆக மொத்தம் இது ஒரு விசச் சுழல். இதை ஒரு சிறுவர் கதை மூலம் மேலும் ஆழமாக விளங்கிக்கொள்ளலாம். அக்கதை வருமாறு,
ஒரு கை மட்டும் நுழையக்கூடிய அளவு சிறிய வாயினையுடைய ஒரு போத்தலுக்குள் மிகச் சுவையான இனிப்புக்களை வைத்துவிட்டு அதை எடுக்கும்படி சிறுவர்களிடம் கூறினால் கையைவிட்டு இனிப்புக்களை எடுக்கும் ஒருவர், கைக்குள் இனிப்புக்களைப் பொத்திவைத்துக் கொண்டு முஸ்ரியை போத்தலின் சிறிய வாய்க்கூடாக வெளியில் எடுக்க முடியாது. இனிப்பு வேண்டுமானால், கையை மூடவேண்டும். கையை மூடினால் அதைப் போத்தலுக்கு வெளியே எடுக்க முடியாது. ஒன்றில் இனிப்பைக் கைவிட வேண்டும் அல்லது போத்தலை உடைக்கவேண்டும்.யுத்த வெற்றிவாதத்தின் நிலையும் இத்தகையதே.
வெற்றிக் கொண்டாட்டம் நடந்து முடிந்து சரியாக ஐந்தாவது நாளில் வெசாக் பண்டிகை வந்தது. வடக்கில் வெற்றி வளைவுகளும், தோரணங்களும் கட்டப்பட்டிருந்த ஏறக்குறைய அதே இடங்களில்தான் வெசாக் கூடுகளும் கட்டப்பட்டன. அல்லதுஇ வெற்றி வளைவுகளைக் கட்டிய அதே தரப்புத்தான் வெசாக் கூடுகளையும் கட்டியது. சிங்கள பௌத்த பண்பாட்டின் கலைச் செழுமையை வெளியார் கண்டு பிரமிக்கும் இடங்களில் வெசாக் கூடுகள் குறிப்பிடத்தக்கவை. ஆனால், வெற்றி வளைவுகளுக்கும், வெசாக் கூடுகளுக்கும் ஏதும் தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை. சரியாகச் சொன்னால், வெற்றிவளைவுகள் இருக்கும் இடத்தில் வெசாக் கூடுகள் இருக்க முடியாது. இந்த முரணிலிருந்துதான் இலங்கைத் தீவின் துயரமனைத்தும் ஊற்றெடுக்கின்றது.
இலங்கைத் தீவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது என்றால் அதற்கு ஆணைக்குழுக்கள் தேவையில்லை. வெளியார் வந்து வகுப்பெடுக்கவும் தேவையில்லை. அஹிம்சா மூர்த்தியான கௌதம புத்தரின் போதனைகளே போதும். நல்லிணக்கத்தை அங்கிருந்து தொடங்கினாலே போதும். அல்லது ஆகக்குறைந்த பட்சம் வெற்றி வளைவுகளும், வெசாக் கூடுகளும் ஏன் ஒரிடத்தில் இருக்க முடியாது என்ற முரண்பாட்டைக் கண்டுபிடித்தாலே போதும். அதுவே நல்லிணக்கத்தின் ஊற்றுக் கண்ணாய் அமைந்துவிடும். வெற்றிவிழாவும், வைகாசி விசாகமும் நெருங்கிய இடைவெளிக்குள் வரும் ஒரு வாரத்தில் அரசியல் கட்டுரை ஒன்றை இப்படியாக ஆன்மிகப் போதனையில் கொண்டுவந்து முடிப்பதென்பதே ஒரு காலக்கொடுமைதான்.
23-05-2013