நாடு கடந்தார்கள்.
அடுத்த தலைமுறை
மெல்ல மெல்ல மொழி இழக்கும்
தருணத்தில்
தீராப் பெருவலி எழுந்து எம்மை இணைக்கிறது.
சேரனின் கவிதை.
சில வாரங்களுக்கு முன்பு தினக்குரலில் நான் எழுதிய தமிழ்ச் சிந்தனைக் குழாம் என்ற கட்டுரை தொடர்பாக நாட்டுக்கு உள்ளிருந்தும், வெளியிலிருந்தும் நண்பர்கள் பலர் கருத்துத் தெரிவித்திருந்தார்கள். அக்கட்டுரையின் முடிவில் ஒரு தமிழ்ச் சிந்தனைக் குழாம் உருவாகக் கூடிய அகபுற நிலைமைகள் தமிழ் டயஸ்பொறாவில் தான் அதிகம் காணப்படுவதாக நான் எழுதியதற்கு பல தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் வந்தன. தமிழ் டயஸ்பொறாவைக் குறித்த மிகை மதிப்பீடு அது என்று பலரும் கருத்துத் தெரிவித்திருந்தார்கள். தமிழ்ச் சிந்தனைக் குழாம் எனப்படுவது தாய் நாட்டிலேயே உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்தே தூக்கலாகத் தெரிந்தது.
இது உண்மை தானா? தமிழ் டயஸ்பொறா தொடர்பாக உருவாக்கப்பட்ட சித்திரம் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்றா?
ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்பு யுத்தமெனப்படுவது வேறொரு தளத்திற்கு நகர்ந்துவிட்டதாகவும், அது வன்னியிலிருந்து டயஸ்பொறாவிற்கு மைய நகர்ச்சி அடைந்து விட்டதாகவும் ஒரு கருத்து தமிழ் டயஸ்பொறாவிடம் உண்டு. இப்பொழுது நடந்துகொண்டிருப்பது ஒரு இராஜதந்திரப் போர் என்று வர்ணிப்பவர்களும் உண்டு. ஈழத் தமிழ் அரசியலை ஒரு அஞ்சலோட்டத்தோடு ஒப்பிடும் டயஸ்பொறா தமிழர்களில் ஒரு பகுதியினர் மே 18 இற்குப் பின் அஞ்சலோட்டக் கோலானது டயஸ்பொறாவிடமே கையளிக்கப்பட்டுவிட்டதாகவும் விசுவாசமாக நம்புகின்றார்கள். கடந்த சில ஆண்டுகளாக ஜெனிவாவில் இடம்பெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைக் கூட்டத் தொடர்களின் போது தமிழ் டயஸ்பொறாவில் உள்ள மேற்சொன்ன தரப்பினர் அந்த நம்பிக்கையோடு செயற்படுவதை காணக்கூடியதாக உள்ளது. இலங்கை அரசாங்கமும் அப்படி ஒரு சித்திரத்தையே உருவாக்க முயற்சிக்கின்றது. போரெனப்படுவது இப்பொழுது அரசாங்கத்திற்கும் புலம்பெயர்ந்த புலிகளுக்கும் இடையிலானது என்ற விதமான ஒரு சித்திரம் தென்னிலங்கையில் ஆழப்பதிந்துவிட்டது.
ஆனால், தமிழ் டயஸ்பொறா எனப்படுவது தட்டையான ஒற்றைப் பரிமாணத்தைக் கொண்ட ஒரு சமூகம் அல்ல. அதில் பல்வேறு அடுக்குகள் உண்டு. நுண் அடுக்குகளும் உண்டு. அங்கு முழு நேர அரசியல் செயற்பாட்டாளர்களும் உண்டு. பகுதி நேர அரசியல் செயற்பாட்டாளர்களும் உண்டு. அரசியல் அபிலாஷைகள் அற்ற பெருந்தொகுதி பொதுசனங்களும் உண்டு. தீவிர தேசியவாதிகளும் உண்டு. தீவிர எதிர்த்தேசிய வாதிகளும் உண்டு. இவற்றுடன் தீவிர இடதுசாரிகளும் உண்டு. மித இடதுசாரிகளும் உண்டு. தீவிரதலித்தியவாதிகளும் உண்டு. இவை தவிர இங்கு குறிப்பிடப்படாத நுண் அடுக்குகளும் உண்டு. எனினும் பெரும்பான்மையாகக் காணப்டுவது அரசியல் அபிலாஷைகள் அதிகமில்லாத ஆனால், இனப்பற்றும் மொழிப்பற்றும் மிக்க சாதாரண பொதுசனங்களே. அதிலும் பெரும் தொகுதியினர் முதலாம் தலைமுறை புலம்பெயரிகளே.
கடந்த பல ஆண்டுகளாகத் தமிழ் டயஸ்பொறாவில் உள்ள பல தரப்பட்டவர்களோடும் நேரடியாகவும் தொலைபேசியிலும்; உரையாடும் போது நான் ஒரு கேள்வியைக் கேட்பதுண்டு. நீங்கள் நாட்டுக்குத்திரும்பிவரத் தயாரா? ஆயின் எப்பொழுது? இக்கேள்வியை நான் தீவிர தேசிய வாதிகளிடமும் கேட்டிருக்கிறேன். தீவிர எதிர்த்தேசிய வாதிகளிடமும் கேட்டிருக்கிறேன். அதிருப்தியாளர்களிடமும் கேட்டிருக்கிறேன். தலித்தியவாதிகளிடமும் கேட்டிருக்கிறேன். இவை தவிர போராட்டத்திற்கு வரிகொடுப்போராக இருந்த சாதாரண பொதுசனங்களிடமும் கேட்டிருக்கிறேன். இதில் தீவிர தேசியவாதிகளாகவும், செயற்பாட்டாளர்களாகவும் காணப்படும் ஒரு தரப்பினர் மட்டுமே நாடு திரும்பும் தாகத்தோடு காணப்பட்டார்கள். இதில் தற்பொழுது நாட்டுக்கு வர முடியாதவர்களும் உண்டு அல்லது பிறகொரு காலம் தங்களுக்கு விருப்பத்துக்குரிய ஓர் அரசியல் சூழல் உருவாகும்போது நாடு திரும்பலாம் என்று சிந்திப்பவர்களும் உண்டு. இவர்களைத் தவிர மிச்சமுள்ள அதேசமயம் பெருந்தொகையாகவுள்ள வரிகொடுத்த பொதுசனங்களைப் பொறுத்தவரை அவர்களுடைய அரசியல் சாய்வு எதுவாக இருந்தாலும் அவர்கள் கூறும் பதிலானது ஏறக்குறைய ஒரே தன்மையுடையதாகவே காணப்பட்டது. அவர்கள் எல்லாரும் கூறுகிறார்கள் இரண்டாம் தலைமுறை புலம்பெயரிகள் அதாவது, அவர்களுடைய பிள்ளைகளின் அல்லது பேரப்பிள்ளைகளின் எதிர்காலம் ஒரு பாதுகாப்பான வளர்ச்சியை அடையும் வரை தாங்கள் அங்கிருந்து வரமுடியாது என்று.விருந்தினர்களாக வந்து போவதற்கும் அப்பால் அல்லது குடும்பத்தில் நிகழும் நல்லது கெட்டதுகளுக்கு வந்து போவதற்கும் அப்பால் நிரந்தரமாக நாட்டுக்குத் திரும்புவதில் அவர்களுக்கு நடைமுறை சார்ந்த தடைகள் இருப்பதாகக் கூறுகிறார்கள். நடைமுறை சார்ந்த தடைகள் எனப்படுபவை அதிக பட்சம் இரண்டாம் தலைமுறையின் எதிர்காலத்தைப் பற்றிய கரிசனைதான். அதோடு தனிப்பட்ட உடலாரோக்கியம் பற்றிய கவலைகளும் உண்டு.
இரண்டாம் தலைமுறை புலம்பெயரிகளை எல்லாவிதத்திலும் ‘‘செற்றில்” பண்ணிய பின் தமது இறுதிக் காலத்தை நாட்டில் கழிக்த விரும்புவோரும் உண்டு.
எனவே, பொதுப் போக்காகவும், பெரும்போக்காகவும் காணப்படுவது எதுவெனில் முதலாம் தலைமுறை புலம்பெயரிகளில் அநேகமானவர்கள் இழந்து வந்த தாய் நாட்டை பற்றிய நினைவுகளுக்கும் இரண்டாம் தலைமுறையின் எதிர்காலத்தைக் குறித்த கரிசனைகளுக்குமிடையே இரண்டாகக் கிழிபடுகிறார்கள் என்பதே. அதாவது தாய் நாட்டிற்கும் இரண்டாம் தலைமுறையினருக்கும் இடையே ஈரூடகமாக தத்தளிக்கிறார்கள் என்று பொருள்..
இதில் இரண்டாம் தலைமுறை பற்றிய கரிசனை என்பது கூட வழமையான ஈழத்தமிழ் மனோநிலையிலிருந்தே உருவாகிறது. ஒரு விதத்தில் இது பிள்ளைகளின் மீதான உடமை உணர்வு என்று கூடச் சொல்லலாம். எதுவாயினும் அவர்களால் நினைத்த வேகத்தில் நாடு திரும்ப முடியாதுள்ளது என்பதே யதார்த்தம்.
இவ்விதம் ஈரூடகமாக சிந்திக்கும் ஒரு சமூகமானது தாய்நாட்டின் அரசியலை பொறுத்தவரை எத்தகைய ஒரு பாத்திரத்தை வகிக்க முடியும்? அதிலும் குறிப்பாக ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான ஓர் அரசியல் சூழலில் அஞ்சலோட்டக் கோலை தானே வைத்திருப்பதாக நம்பும் ஒரு சமூகமானது எத்தகைய ஒரு பாத்திரத்தை வகிக்க வேண்டும்? ஒரு பலமான தமிழ் லொபி என்பதற்கும் அப்பால் அல்லது ஒரு பலமான நிதிப் பின்தளம் என்பதற்கும் அப்பால் ஒரு பிரதான தளமாக அவர்களால் செயற்பட முடியுமா?
மேற்கண்ட கேள்விகள் அனைத்தையும் பின்வருமாறு தொகுத்துக்கேட்கலாம்.
தமிழ் டயஸ்பொறா எனப்படுவது ஒரு மையத்தளமா? அல்லது உப தளமா?
இக்கேள்விக்குரிய விடையைக் கண்டறியும் போதே தமிழ் டயஸ்பொறாவானது தனது கள யதார்த்தத்திற்கு அமைய சிந்திக்கவும் செயற்படவும் கூடியதாயிருக்கும்.
ஆனால், கடந்த நாண்காண்டுகளாக ஈழத்தமிழ் அரசியலின் கூர் முனையாகத் தோற்றமளிப்பது டயஸ்பொறாதான். தமிழ்த் தேசிய அரசியலின் அதிகம் வெளிப்பாட்டுத்தன்மை மிக்க அரங்காக அது எழுச்சி பெற்றிருக்கிறது. நாட்டு நிலைமைகளோடு ஒப்பிடுகையில் அதிகளவு சுதந்திரத்தோடும் போதியளவு நிதிப்பலத்தோடும் காணப்படும் டயஸ்பொறாவானது ஈழத்தமிழர்களின் மெய்யான விருப்பங்களை தடையின்றி வெளிப்படுத்தும் ஓர் அரங்காகக் காணப்படுகிறது. இத்தகைய பொருள்படக் கூறின் கடந்த நான்காண்டுகளாக தமிழ்த் தேசிய நெருப்பை அணையவிடாது பேணிப் பாதுகாத்ததில் டயஸ்பொறாவின் பங்களிப்பு பெரியது எனலாம்.
ஆனால், அதேசமயம் தமிழ்த் தகவல் பெருமையம் ஒன்றை உருவாக்கவோ அல்லது தமிழ் ஆவண பெருங்காப்பகம் ஒன்றை உருவாக்கவோ அல்லது தமிழ் அறிவியல் மையம் ஒன்றை உருவாக்கவோ தமிழ் டயஸ்பொறா தவறிவிட்டது. ஒப்பீட்டளவில் பாதுகாப்பான சூழலில் தொடர்புகள் அதிகமுடையதும் வளங்கள் அதிகமுடையதும், விசாலமான இடை ஊடாட்டப் பரப்பினை உடையதுமாகிய டயஸ்பொறாவிலிருந்துதான் தமிழ்த் தகவல் பெருமையமோ அல்லது தமிழ் ஆவணப் பெருங்காப்;பகமோ அல்லது தமிழ் அறிவியல் மையங்களோ உருவாகி இருந்திருக்க வேண்டும். மேற்கத்தேய புலமை ஒழுக்கங்களை உடைய முதலாம் தலைமுறை மற்றும் இரண்டாம் தலைமுறை தமிழ் புலமையாளர்கள் பலர் அங்கு உண்டு. தேவையான நிதியைத் திரட்டுவது டயஸ்பொறாவிற்கு ஒரு பொருட்டே அல்ல. ஆனால், ஒரு பொதுத்தமிழ் நிதியத்தை இதுவரையும் உருவாக்க முடியவில்லை. ஒருபொதுத் தமிழ் அறிவியல் மையத்தை அல்லது பல்வேறு சிந்தனைப் பள்ளிகளைச் சேர்ந்த அறிவியல் மையங்களை உருவாக்க முடியவில்லை. அனைத்துலக அரங்கில் ஏற்றுக்கொள்ளத்தக்க விஞ்ஞான பூர்வமான தகவல்களைத் தரவல்ல அங்கீகரிக்கப்பட்ட தகவல் நடுவங்களையோ அல்லது ஆவணக் காப்பகங்களையோ உருவாக்க முடியவில்லை. தமிழ் நிதி சிதறிக் கிடக்கிறது. தமிழ் அறிவு சிதறிக் கிடக்கிறது. தமிழ் சக்தி சிதறிக்கிடக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் அனைத்துலக அனர்த்தக் குழுவின் அறிக்கை ஒன்றில் கூறப்பட்டபடி தமிழ் டயஸ்பொறாவிற்கும் தாய்நாட்டிலுள்ள தமிழர்களுக்குமிடையே பிளவு (னுiஎனைந) காணப்படுகிறது. இரு தரப்பாலும் ஏற்றுக்கொள்ளத்தக்க பொதுவான அரசியல் நிகழ்ச்சி நிரல் எதையும் உருவாக்க முடியவில்லை. எனவே, இரு தரப்பினாலும் ஏற்றுக்கொள்ளப்படும் ஜனவசியம் மிக்க தலைமைத்துவங்களும் உருவாக முடியவில்லை.
தமிழ்த்தேசிய நெருப்பை கடந்த நான்காண்டுகளாக அணையவிடாது பாதுகாத்ததோடு ஒரு பலமான தமிழ் லொபியை முன்னெடுத்துச் சென்றதே கடந்த நான்காண்டுகளிலும் தமிழ் டயஸ்பொறாவின் முக்கிய பங்களிப்பாகக் கூறப்படுகிறது. ஆனால், அறிவியல் ஆராய்ச்சிநடுவங்களை அல்லது தகவல் பெருமையங்களை அல்லது ஆவணப் பெருங் காப்பகங்களை உருவாக்க முடியாத ஒரு டயஸ்பொறாவால் பலமான ஒரு லொபியை எப்படி முன்னெடுக்க முடியும்? அனைத்துலக அரங்கில் ஏற்றுக்கொள்ளப்படத்தக்க விஞ்ஞான பூர்வமான ஆவணங்களைத் தயாரிப்பதென்றால் தமிழ் லொபியின் உள்ளடக்கம் அதிகமதிகம் அறிவினால் விசாலிக்கப்படவேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு தமிழ் லொபியின் ஜனநாயக அடித்தளம் பலப்படுத்தப்படுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு களத்திற்கும், புலத்திற்கும் இடையிலான பிளவைக் குறைக்க முடியும். ஜனநாயக அடித்தளம் ஒன்றின் மீது தான் களமும் புலமும் சந்திக்க முடியும். களமும் புலமும் சந்தித்தால்தான் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு பொதுவான நிகழ்ச்சி நிரலை உருவாக்கலாம். அப்பொழுதுதான் எல்லாத் தரப்பாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பேராளுமைகள் எழுத்தக்க அகப்புறநிலைமைகள் கனியும்.
ஈழத் தமிழர்கள் குறிப்பாக, படித்த தமிழர்கள் தங்களை எப்போதும் யூதர்களோடு ஒப்பிட்டுப் பெருமைப்படுவதுண்டு. இக்கட்டுரையானது யூதர்கள் பலஸ்தீனத்தின் மீது மேற்கொண்ட ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், உலகின் மிக மூத்த ஒரு டயஸ்பொறா என்ற அடிப்படையிலும் உலகின் வினைத்திறன் மிக்க ஒரு லொபி என்ற வகையிலும்; இங்கு யூத லொபி எடுத்துக் காட்டப்படுகிறது. பலஸ்தீனரான அமரர் எட்வேர்ட் செய்ட் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு ஆளுமையாக கருதப்பட்டவர். ஆனால், யூத லொபியானது எட்வேர்ட் செய்ட்டிற்கு எதிராக இணையத்தள பிரசார இயக்கம் ஒன்றை முன்னெடுத்தது. எட்வேர்ட் செய்ட் அனைத்துலக அளவில் மதிக்கப்பட்ட ஒருவராக இருந்தபோதிலும் அவருக்கு எதிராக செயற்படத் துணியுமளவுக்கு யூத லொபியானது சக்தி மிக்கதாக காணப்பட்டது. படித்த ஈழத் தமிழர்களிற் பலர் கருதுகிறார்கள், யூதர்களுடைய படைத் துறைச் சாதனைகளும் வினைத்திறன் மிக்க புலனாய்வுக் கட்டமைப்பும் அறிவியல் சாதனைகளும் தான் அவர்களுடைய அடிப்படைப் பலம் என்று. ஆனால், அரசியலில் யூதர்களின் மெய்யான பலமெனப்படுவது அவர்களுடைய அக ஜனநாயகம்தான். யூத டயஸ்பொறாவின் மிக அரிதான ஒரு கனி அது. யூத டயஸ்பொறாவானது ஏறக்குறைய இரண்டு ஆயிரம் ஆண்டுகளைவிட அதிகமானது. ஆனால், தமிழ் டயஸ்பொறாவோ குறிப்பாக, இரண்டாம் அலை டயஸ்பொறாவானது கிட்டத்தட்ட மூன்று தசாப்த கால வயதினையே உடையது.
தமது இரண்டு ஆயிரம் ஆண்டு கால புலப்பெயர்ச்சியின் கனியாக அகஜனநாயகத்தை யூதர்கள் தாய்நாட்டிற்கும் கொண்டுவந்தார்கள். வயதால் மிக இளையதும் ஆனால் குறுகிய காலத்துள் உலகின் கவனத்தை ஈர்த்ததுமான தமிழ் டயஸ்பொறாவும் ஜனநாயக விழுமியங்களை தாய்நாட்டிற்கு கொண்டு வரலாம். தாய் நாட்டிற்கு பணப் பரிவர்த்தனை செய்வது போல ஜனநாயக விழுமியங்களையும் பரிவர்த்தனை செய்யலாம். இப்போதுள்ள நிலைமைகளின்படி ஜனநாயக அடித்தளம் ஒன்றின் மீதுதான் தமிழர்கள் மத்தியில் உள்ள எல்லாத்தரப்புகளும் ஏதோ ஒரு புள்ளியில் சந்திக்கலாம்;. ஜனநாயகஅடித்தளம் ஒன்றைத் தவிர வேறெந்தத் தளத்திலும் தமிழ் ஐக்கியத்தைக் கட்டியெழுப்ப முடியாது. ஐக்கியத்தைக் கட்டியெழுப்பவில்லையென்றால் புலம்பெயர்ச்சியின் கிடைத்தற்கரிய கனிகள் யாவும் அழுகிப்போய் விடும். புலம்பெயர்ச்சியின் இறுதி விளைவாக நீர்த்துப்போன இனங்களின் பட்டியலில் ஈழத்தமிழர்களும் இணைய வேண்டியிருக்கும்.
30-05-2013