ஓய்வூதியர்களின் தேசியம்?

வலிகாமம் பகுதியைச் சேர்ந்த ஓர் ஓய்வு பெற்ற மருத்துவர் தனக்குத் தெரிந்த ஒருவரோடு பின்வரும் தொனிப்படக் கதைத்திருக்கிறார். ‘‘நான் ஓய்வு பெற்றுவிட்டேன். எனது மகன் இப்பொழுது மருத்துவராகிவிட்டான். கைநிறைய உழைக்கிறான். எனக்கு இப்பொழுது நிறைய ஓய்வும் உண்டு. காசும் உண்டு. ஆனால், பொழுதுதான் போகவில்லை. அரசியலில் ஈடுபடலாம் என்று யோசிக்கிறேன். தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த……. என்ற பிரமுகரோடு கதைத்து வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடலாம் என்று யோசிக்கிறேன்” என்று.

ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின் தமிழ் மிதவாத அரசியல் என்பது எத்தகைய போக்குகளைக் கொண்டுள்ளது என்பதை இது காட்டுகிறது. வடமாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் பதவிக்கு தகுதியான நபர்கள் என்று பிரஸ்தாபிக்கப்படும் சில பெயர்களை வைத்துப் பார்க்கும்போது தமிழ் மிதவாத அரசியலானது ஓய்வூதியர்களின் அரசியலாக மாறப்போகிறதா? என்று கேட்கத்தோன்றுகிறது.

சிங்கள மக்கள் மத்தியிலுள்ள பிரமுகர்கள் அல்லது கனவான்களிற்பலர் அதிகாரத்தில் இருக்கும் வரை இனச்சாய்வு அரசியலை தீவிரமாக பின்பற்றுவார்கள். ஆனால், ஓய்வுபெற்ற பின் திடீரென்று ஞானோதயம் பெற்று நல்லிணக்க அரசியல் கதைப்பதுண்டு. கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன போன்ற சில அரிதான புற நடைகளைத் தவிர தென்னிலங்கை அரசியலைப் பொறுத்த வரை இன நல்லிணக்கத்தைப் பற்றி கதைப்பது அநேகமாக ஓய்வூதியர்கள் தான். பதவியில் உள்ள வரை தமிழ் மக்களின் நியாயங்களைக் கதைக்கப்போய் தமது நிலையான நலன்களையோ அல்லது அரச போகங்களையோ அல்லது பதவி உயர்வுகளையோ இழக்கத்தயாரற்று காணப்படும் பலரும் ஓய்வுபெற்ற பின் திடீரென்று தாராண்மைவாதிகளாக மாறுவதுண்டு.

ஆனால், தமிழ் மிதவாத அரசியலைப் பொறுத்த வரை இப்போக்கானது தலைகீழாகக் காணப்படுகிறது. பதவியில் உள்ள வரை தமது நிலையான நலன்களையும், பதவி உயர்வுகளையும் அரச போகங்களையும் பாதுகாக்கும் பொருட்டு கொழும்பு மைய அரசியலுக்கு முண்டு கொடுக்கும் பலரும் அல்லது மௌனமாக எல்லாவற்றையும் சகித்துக்கொண்டிருந்த பலரும் ஓய்வுபெற்ற பின் தேசியவாதிகளாவதுண்டு. முன்பு வகித்த பதவிகளின் காரணமாக பெற்றிருக்கக் கூடிய பிரபல்யமானது இவர்களுக்கு அரசியல் முதலீடாக அமைவதுண்டு. ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான கடந்த நான்காண்டுகளிலும் இப்போக்கானது முனைப்பு பெற்று வருகின்றது.

pension_5567CDE0வயதால் மூத்தவர்கள் அல்லது அனுபவஸ்தர்கள் அல்லது சர்வதேச அளவில் பிரபல்யமானவர்கள் அல்லது தகைசார் சான்றோர் என்று கூறத்தக்கவர்கள் அரசியலில் ஈடுபடுவது என்பது வரவேற்கத்தக்க ஒன்று தான். சீனாவில் தலைவர்களாக வருபவர்கள் பெரும்பாலும் ஐம்பது வயதைக் கடந்தவர்களாகவே காணப்படுவார்கள். அங்கே இளந்தலைவர் என்று அழைக்கப்படுபவர் எங்களுரில் ஓய்வூதியரின் வயதிலிருப்பார். ஆனால், அது அனுபவத்தில் பழுத்தவர்களின் ஆட்சி. அரசியலையே தமது வாழ்வொழுக்கமாக கொண்டிருப்பவர்கள் படிப்படியாக கட்சியின் மேல் மட்டத்திற்கு உயர்ந்து தலைவராகிறார்கள். அவர்கள் வானத்திலிருந்து கட்சிக்குள் குதிப்பதில்லை. அவர்கள் கட்சி செயற்பாடுகளின் மூலமே பிரபல்யமடைகிறார்கள். பிரபல்யம் காரணமாக கட்சியால் தத்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல. அதாவது சீனத் தலைமைத்துவம் எனப்படுவது மிகப் பலமான ஒரு பாரம்பரியத்திலிருந்து உருவாகிறது. அதற்குத் தேவையான ஒரு கட்சிக் கட்டமைப்பும் உண்டு. ஆனால், தமிழ் மிதவாத அரசியலைப் பொறுத்த வரை அதிலும் குறிப்பாக, கடந்த நான்காண்டுகளைப் பொறுத்தவரை அத்தகைய பாரம்பரியத் தொடர்ச்சியினடியாக கட்சியில் முன்னிலைக்கு வந்தவர்களை மிக அதிதாகவே காண முடிகிறது.

ஏற்கனவே, தமிழ் மிதவாதப் பாரம்பரியம் எனப்படுவது கறுப்புக் கோட்டு அரசியல் என்றே அழைக்கப்பட்டது. தொழில்சார் வழக்கறிஞர்களாகவும், அதேசமயம் பெரும்பாலும் பகுதிநேர அரசியல்வாதிகளாகவும் காணப்பட்டவர்களின் ‘அப்புக்காத்து’அரசியல் அது. நாடாளுமன்றத்தில் திறமையாக வாதிடுவதே தலைமைத்துவ தகுதியாகக் கருதப்பட்டது. அதாவது தமிழ் அரசியல் எனப்படுவது ஒரு சட்டப்பிரச்சினையாகவே பார்க்கப்பட்டது. ஆனால், தமிழ்ச் சட்டவாளர்களை விடவும் சிங்களச் சட்டவாளர்கள் கெட்டிக்காரர்களாக இருந்து வந்துள்ளார்கள் என்பதையே கடந்த அறுபதாண்டு கால அரசியல் நிரூபித்துள்ளது. இப்பொழுது அப்புக்காத்து அரசியலானது பென்சனியர்களின் அரசியலை நோக்கி நகரப்போகின்றதா என்றதொரு கேள்வி எழுகிறது.

ஓய்வூதியர்கள் தமிழ்மிதவாத அரசியலுக்குள் நுழைய பல காரணங்கள் உண்டு. முதலாவது காரணம் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான வெற்றிடம். அதாவது சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்பது நந்திக் கடற்கரையில் நிரூபிக்கப்பட்டு விட்டதாக சில தமிழ் மிதவாதிகளும், பிரபலஸ்தர்களான ஓய்வூதியர்களும் கருதுகிறார்கள். கறுப்புக் கோட்டு அரசியலை பின் தள்ளிவிட்டே ஆயுதப் போராட்டம் முன்னிலைக்கு வந்தது. ஆனால், ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின் கறுப்புக் கோட்டு அரசியலின் மிச்ச சொச்சங்களாக இருப்பவர்கள் தங்களுடைய வழியே சரியானது என்று நம்புவதாகத் தோன்றுகிறது. இது முதலாவது காரணம்.

இரண்டாவது காரணம், தமது பதவி நிலைகள் அல்லது அந்தஸ்தின் காரணமாக பெற்ற பிரபல்யமானது மிதவாத அரசியலில் ஒரு பலமான முதலீடாக அமையும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். தமிழ் அரசியல் எனப்படுவது ஒப்பீட்டளவில் உயிரச்சம் குறைந்ததாக மாறிவிட்டது என்றுமவர்கள்; நம்புகிறார்கள். மேலும் தாம் முன்பு வகித்த பதவி நிலை காரணமாகவும், அந்தஸ்து காரணமாகவும் தமக்கிருக்கக்கூடிய மேட்டுக்குடி உறவுகளை கையாண்டு மிதவாத அரசியலை முன்னெடுக்கலாம் என்றுமவர்கள் நம்புகிறார்கள். இதில் அவர்களுடைய ஆங்கில மற்றும் சிங்கள மொழிப்புலமையும் தங்களுக்குள்ள கூடுதல் தகைமையென்றும் அவர்கள் நம்புகிறார்கள்.

மூன்றாவது காரணம், ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான ஒரு மிதவாத அரசியல் எனப்படுவது எப்படியிருக்க வேண்டும் என்பதில் அவர்களிற்பலரிடம் சரியான விளக்கம் இருப்பதாகத் தெரியவில்லை. சிலர் கருதுகிறார்கள் உயிரச்சம் குறைந்ததோர் சூழலில் யாருக்கும் பொறுப்புக்கூறத் தேவையில்லாத, யாருக்கும் கணக்குக் காட்டத் தேவையில்லாத ஒருவித தொழில்சார் அரசியலே முன்னிலைக்கு வந்திருப்பதாக. அதாவது, இலட்சியவாதிகளின் அரசியல் முடிவுக்கு வந்துவிட்டதாகவும், இனி தொழில் சார் அரசியல்வாதிகளே தமிழ் மிதவாத அரசியலை முன்னெடுக்கவேண்டும் என்று அவர்கள் நம்புகிறார்கள். தங்களுக்கு கிடைக்கக்கூடிய அரச போகங்கள், ஆளணி, வாகன சுகம் என்பவற்றை குறிவைத்து அவர்களிற் சிலர் ஏற்கனவே, செயற்படத் தொடங்கிவிட்டார்கள். வேறு சிலர் கருதுகிறார்கள் வாக்குவேட்டை அரசியலுக்கேற்ப இனமான உணர்;ச்சியைத் தூண்டுவதன் மூலம் இறந்த காலத்தையும் தத்தெடுக்கலாம். அதேசமயம் தமது தனிப்பட்ட புகழையும் நிலையான நலன்களையும் பாதுகாக்கலாம் என்று.

எனவே, மேற்சொன்ன மூன்று காரணங்களையும் தொகுத்துப் பார்க்கும்போது ஒரு விடயம் மிகத்தெளிவாகத் தெரியும். அதாவது, அரசியல் அபிலாஷைகளோடு காணப்படும் ஓய்வுபெற்ற மற்றும் ஒய்வு பெறாத பிரபல்யங்கள் அல்லது ஓய்வுபெறும் வயது வந்த பின்னரும் பதவிகளில் ஒட்டிக்கொண்டிருப்பவர்கள் ஆகிய மூன்று வகையினரும் தமிழ் மிதவாத அரசியலை ஒரு கனவான் அரசியலாகவே கருதுகிறார்கள். வாக்கு வங்கிகளைப் பலப்படுத்துவதற்கும் அப்பால் வேறெந்தப் புனிதமான இலட்சியங்களும் அவர்களுக்குக் கிடையாது. தேர்தலுக்கு முன் வேட்டியை மடித்துக் காட்டி தேர்தல் முடிந்த பின் வேட்டியை அவிழ்த்து விடும் ஒரு தீவிரவாதமே அவர்களுக்கு இப்பொழுது தேவை. அரசியலில் ஈடுபடுவது ஒப்பீட்டளவில் உயிராபத்தற்றது என்பதை திட்டவட்டமாக முடிவெடுத்த பின்னரே அவர்கள் அரசியலில் இறங்கியிருக்கிறார்கள் அல்லது இறங்கப்போகிறார்கள். அதாவது ரிஸ்க் எடுக்கத் தயாரற்ற தேசியவாதிகள் அவர்கள். இதற்கு முன்னரும் அவர்கள் ரிஸ்க் எடுக்கவில்லை. எடுத்திருந்தால் பதவிகளையும், அந்தஸ்தையும் பாதுகாத்திருக்க முடியாது. எனவே, ரிஸ்க் எடுக்கத் தேவையில்லாத அதாவது, இலட்சியப் பற்றோடு செயற்படத் தேவையில்லாத ஒரு மிதவாத அரசியலே அவர்களுடைய தெரிவு. இதை இன்னும் கூராகச் சொன்னால், அவர்களை பங்களிக்கத் தயாரற்ற தேசியவாதிகள் எனலாம். (Non Committed Nationalist) தமது அரசியலின் இறுதி இலக்கு எதுவென்பதைக் குறித்தும் அவர்களுக்குக் கவலையில்லை. இறுதி இலக்கு தெளிவற்று இருக்கும் வரை அதை அடைவதற்கான மூலோபாயமும் தெளிவற்றே இருக்கும். அதாவது, கடந்த நான்காண்டு கால தமிழ் மிதவாத அரசியலின் பெரும் போக்கையே அவர்கள் பிரதிபலிக்கிறார்கள் எனலாம். இன்னொரு விதமாகச் சொன்னால் தமிழ் மிதவாத அரசியலில் இப்பொழுது எது பெரும் போக்காகக் காணப்படுகிறதோ அதுதான் இவர்களை அரசியலில் ஈடுபடத் தூண்டியது என்றும் சொல்லலாம்.

ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான தமிழ் மிதவாத அரசியலின் பெரும் போக்கு எனப்படுவது தெளிவற்ற கலங்கலான ஒரு சித்திரம்தான். தமிழ் மிதவாதிகள் மத்தியில் இரண்டு கட்சிகள் மட்டுமே தெளிவான இறுதி இலக்குகளுடன் காணப்படுகின்றன. ஒன்று ஈ.பி.டி.பி. மற்றது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி. ஈ.பி.டி.பி.யானது இணக்க அரசியலை பேசுகிறது. தமிழர்கள் மத்தியிலுள்ள ஒடுக்கப்பட்ட சமூகங்களை அதிகம் பிரதிபலிக்க முயற்படுகிறது. இணக்க அரசியலின் பிரகாரம் அது அரசாங்கத்தோடு நிற்கிறது. அதாவது தெளிவாக ஒரு பக்கம் நிற்கிறது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது இன்னொரு பக்கம் நிற்கிறது. அது ‘‘ஒரு நாடு இரு தேசம்” என்று கூறுகிறது. அதில் விட்டுக் கொடுப்பின்றியும் காணப்படுகிறது. நாடாளுமன்ற அரசியலுக்கு ஊடாக அந்த இறுதி இலக்கை அடைய முடியாது. ஆனால், நாடாளுமன்றத்துக்கு வெளியே எத்தகைய ஓர் அரசியல் வழிமுறைக்கு ஊடாக அதை அடையப்போகிறது என்பதைக் குறித்த தெளிவான சித்திரம் எதையும் அக்கட்சியானது இதுவரையிலும் வெளிக்காட்டி இருக்கவில்லை.

இவ்விரு கட்சிகளையும் தவிர ஏனைய பெருங்கட்சிகளான கூட்டமைப்பும், தமிழரசுக் கட்சியும் தமது இறுதி இலக்கு எதுவென்பதைக் குறித்து மங்கலான, கலங்கலான ஒரு சித்திரத்தையே இதுவரையிலும் வெளிக்காட்டி வந்திருக்கின்றன. ஒன்றில் ஒரு தெளிவான இறுதி இலக்கை கண்டுபிடிப்பதற்கு தேவையான கொள்ளளவு அவர்களிடம் இல்லை. அல்லது ஏதோவொரு மறைவான நிகழ்ச்சி நிரலை வெளிப்படுத்தாமல் இருப்பதற்காக கள்ளமௌனம் சாதிக்கிறார்கள் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

எதுவாயினும், தமிழ் மிதவாதிகள் தெளிவற்ற இலக்குகளுடன் தடுமாறும் ஒரு வெற்றிடத்தில்தான் ஓய்வூதிர்கள் அல்லது கட்சிக்கு வெளியிலிருக்கும் பிரபல்யங்கள் தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்கக் கூடும் என்ற ஊகங்கள் எழுகின்றன. அல்லது அப்படி ஒரு வெற்றிடத்தில் இருந்துதான் வெளியாருக்காக காத்திருக்கும் ஒரு போக்கும் பலமடைந்து வருகிறது என்றும் சொல்லலாம். ஆயின் தமிழ்த் தேசியம் எனப்படுவது செயலற்றவர்கள் எடுத்தணியும் ஒரு முகமூடியாக மாறிவருகிறதா?

07-06-2013

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *