இந்தியாவின் மாறாத இந்நிலைப்பாட்டிற்கு காரணம் என்ன? விடுதலைப்புலிகள் தான் காரணம் என்றால் அவர்கள் அரங்கிலிருந்து அகற்றப்பட்ட பின் இந்தியா தன் நிலைப்பாட்டை மாற்றியிருந்திருக்க வேண்டும். எனவே, விடுதலைப்புலிகள் அல்லாத வேறொரு பலமான காரணமே இந்தியாவின் அணுகுமுறையை தீர்மானிக்கின்றது என்ற முடிவுக்கு வரலாம். ஆயின் அது என்ன?
முதலில் ஈழத்தமிழர்கள் ஒன்றை விளங்கிக்கொள்ள வேண்டும். ராஜீய உறவுகளில் சென்ரிமென்ற்களுக்கு இடமில்லை. அவை அநேகமாக நலன் சார் உறவுகள் தான். இந்தியா ஈழத்தமிழர்களை தனது புவிசார் நலன்களுக்கூடாகவே பார்க்கிறது. தமிழர்களிடத்தில் அதற்கு தனிப்பட்ட ரீதியில் காதலோ வெறுப்போ கிடையாது. ஆனால், தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்களை தேர்தல் நோக்கு நிலையிலிருந்து கையாள வேண்டிய ஒரு தேவை இருக்கிறது. ஆனால், தமிழ் நாட்டிற்கும் ஈழத் தமிழர்களுக்குமிடையில் உணர்ச்சிகரமான ஒரு பிணைப்பு உண்டு. இது காரணமாகவே ஈழத்தமிழர்களைக் கையாளும் போது தமிழ் நாட்டையும் கவனத்தில் எடுக்கவேண்டிய தேவை இந்திய மைய அரசுக்கு உண்டு. இதுகூட ஒரு நலன் சார் அணுகுமுறை தான்.
கெடுபிடி போர் காலத்தில் அமெரிக்காவை நோக்கி சாந்திருந்த ஜெயவர்த்தன அரசாங்கத்தை வழிக்கு கொண்டு வரவேண்டிய தேவை மொஸ்கோவுக்கு நெருக்கமாக இருந்த இந்தியாவிற்கு ஏற்பட்டது. எனவே, இலங்கை இனப்பிரச்சினையை அது கையில் எடுத்தது. இந்திய இலங்கை உடன்படிக்கை மூலம் தனது நோக்கம் நிறைவேற்றப்பட்டதும் அது இனப்பிரச்சினையை கைவிட்டது.
ஆனால், விடுதலைப்புலிகள் இயக்கம் விட்டுக்கொடுப்பின்றி போராடியதால் இந்தியாவின் நிகழ்ச்சி நிரல் குறிப்பிடத்தக்க அளவிற்கு குழம்பியது. கெடுபிடிப் போர் கால கட்டத்தின் இறுதிப் படை விலகல்களில் ஒன்றாக ஐPமுகுஇன் படை விலகல் அமைந்தது.
ராஜீவ்காந்தி கொல்லப்பட்டதோடு இந்தியாவிற்கும் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்திற்கும் இடையில் ஒரு சட்டப்பூட்டு போடப்பட்டுவிட்டது. இதில் ஈழத்தமிழர்கள் குறித்து இந்தியாவின் தெரிவுகள் மிகவும் சுருங்கிக் காணப்பட்டன. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவரும் அதன் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளரும் இந்தியாவில் தேடப்படும் நபர்களாயினர். அதற்குப் பின் விடுதலைப்புலிகள் இயக்கத்தால் இந்தியாவோடு எத்தகைய ஒரு வெளிப்படையான உத்தியோகபூர்வ உறவையும் பேணமுடியாது போயிற்று. ராஜீவ் கொலை எனப்படுவது மெய்யான விளக்கத்தின் அடிப்படையில் ஒரு சட்ட விவகாரம் அல்ல. அது ஒரு அரசியல் விவகாரமே. ஆனால், இந்தியா அதை ஒரு சட்ட விவகாரமாகவே அணுகியது. அது ஒரு அரசியல் தீர்மானம் தான்.
விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் நிலைமைகளை சீர்செய்வதற்குப் பல தடவைகள் முயற்சித்தார். குறிப்பாக ரணில் – பிரபா உடன்படிக்கையின்போது அவர் இந்தியாவில் வந்திறங்குவதற்கு அனுமதிகேட்கப்பட்டது. ஆனால், அதற்கு சட்டப்பூட்டு தடையாக இருந்தது. நாலாம் கட்ட ஈழப் போரை ஓட்டிய காலங்களிலும் பாலசிங்கம் சில முன் முயற்சிகளை மேற்கொண்டதாக கூறப்படுகின்றது. குறிப்பாக, இந்திய ஊடகமொன்றிக்கு ராஜீவ் கொலை தொடர்பில் அவர் வழங்கிய கருத்துக்கள் வன்னியில் பெரும் சர்ச்சையை கிளப்பின. அதன் விளைவாக இயக்கத்தில் அவருடைய முதன்மை ஸ்தானம் குறைக்கப்பட்டதாகவும் ஒரு தகவல் உண்டு. அதனால் மனமுடைந்து காணப்பட்ட நாட்களிலேயே அவருக்குப் புற்றுநோய் தீவிரமடைந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்குப் புற்றுநோய் என்று கண்டுபிக்கப்பட்ட பின் விடுதலைப்புலிகளின் தலைவரும் பிரதானிகளும் அவருடன் அதிகம் பரிவோடும் மதிப்போடும் நடந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், தான் சார்ந்த இயக்கத்pற்கும் இந்தியாவின் புவிசார் நலன்களுக்குமிடையே போடப்பட்டிருந்த சட்டப்பூட்டை திறக்க முடியாத ஆற்றாமையோடும் நிராசையோடும்தான் அன்ரன் பாலசிங்கம் இறந்துபோனார். நந்திக் கடற்கரையில் புலிகளின் வீழ்ச்சியோடு அந்தச் சட்டப்பூட்டு திறக்கப்பட்டது.
இப்பொழுது சட்டப்பூட்டு இல்லை. ஆனாலும் இந்தியா அதன் அணுகுமுறையை மாற்றிக்கொள்ளவில்லை. ஏன்?
விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரு ‘அரசல்லாத தரப்பாக| (ழேn ளவயவந) இருந்தபோதிலும்கூட இந்தப் பிராந்தியத்தில் சக்திமிக்க அரசுகளின் நிகழ்ச்சி நிரல்களை வெற்றிகரமாக குழப்பியிருக்கிறது. முதலில் இந்திய இலங்கை உடன்படிக்கையை முறித்ததன் மூலம் இந்தியாவின் நிழ்ச்சி நிரலை குழப்பினார்கள். அதன் பின்னர் ரணில் – பிரபா உடன்படிக்கையை முறிக்கும் விதத்தில் நிலைமைகளை நகர்த்தியதன் மூலம் அதாவது ரணில் விக்கிரமசிங்காவைத் தோற்கடித்ததன் மூலம் மேற்கு நாடுகளின் நிகழ்ச்சி நிரலை குழப்பினார்கள். ரணில் தோற்கடிக்கப்பட்டபோது இலங்கைத் தீவில் மேற்கிற்கான கதவுகள் குறிப்பிடத்தக்க அளவிற்கு மூடப்பட்டன. அதேசமயம் சீனாவிற்கான கதவுகள் அகலத் திறக்கப்பட்டன.
சீனாவின் செல்வாக்கு மண்டலத்துள் கொழும்பானது மேலும் ஈர்க்கப்படுவதை தவிர்ப்பதே அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் முன்னுள்ள சவால்களாகும். கொழும்பை முறிக்காமல் வளைத்தெடுக்க இவ்விரு நாடுகளும் முயற்சிக்கின்றன. இம்முயற்சியில் கொழும்பிற்கும் தனக்குமான நெருக்கத்தை தொடர்ந்தும் பேணுவதற்காகவே புதுடெல்லியானது தமிழர்களிடமிருந்து விலகி நிற்பதாக காட்டிக்கொள்ள முற்படுகின்றது.
இது காரணமாகவே நந்திக் கடலில் சட்டப்பூட்டு உடைக்கப்பட்ட பின்னரும் இந்தியாவானது அதற்கு முன் கடைப்பிடித்த அதே அணுகுமுறையைத் தான் தொடர்ந்தும் கடைப்பிடித்து வருகின்றது. இலங்கைத்தீவில் மேற்குநாடுகளின் நிகழ்ச்சி நிரல் குழப்பப்பட்டதால் உடனடியாக அதிகம் நன்மைபெற்ற தரப்பாக சீனாவே காணப்படுகிறது.
ஆனால், எந்த நோக்கத்திற்காக புதுடெல்லியானது கொழும்பை தொடர்ந்தும் ஆரத்தழுவி வருகின்றதோ அந்த நோக்கத்தில் இன்று வரையிலும் அவர்களால் பூரண வெற்றியைப் பெறமுடியவில்லை. இதனால், இடையிடை சில மென் அழுத்தங்களை பிரயோகித்தபோதிலும்கூட இலங்கை தொடர்பான அதன் அணுகுமுறையில் அடிப்படை மாற்றங்கள் எதுவும் தென்படவில்லை. கடந்த மார்ச் மாதம் இந்தியா ஜெனீவாவில், அமெரிக்கா இலங்கைக்கு எதிராக கொண்டுவந்த பிரேரணையை ஆதரித்தது. எனினும் சில பல ஊடல்கள், முகமுறிவுகள் போன்ற எல்லாவற்றிற்கும் அப்பால் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான தேனிலவு முறியாது தொடர்கிறது.
இந்த இடத்தில் ஈழத்தமிழர்கள் ஒரு ராஜீய யதார்த்தத்தை விளங்கிகொள்வது நல்லது. இந்தியாவோ அமெரிக்காவோ சீனாவோ எந்தவொரு சக்திமிக்க நாடும் இலங்கை அரசாங்கத்தை தான் ஒரு மையமாக கருதுகின்றன. தமிழர்களையல்ல. இலங்கை அரசாங்கத்தை கையாள்வதில் நெருக்கடிகள் ஏற்படும் போது தமிழர்களை ஒரு கருவியாகப் பயன்படுத்தி அரசாங்கத்தை வழிக்குக் கொண்டு வருவதே இலங்கைத் தீவின் நவீன வரலாற்றின் பெரும் போக்காய் உள்ளது. இப்போக்கில் அவ்வப்போது சிறு விலகல்கள் ஏற்பட்டிருந்தாலும் கூட தமிழர்களை ஒரு மையமாக கருதி கையாள்வது என்பது ஒரு பலமான போக்காகவே காணப்படவில்லை. இந்திய இலங்கை உடன்படிக்கை என்பது தமிழர்களை ஒரு மையமாகவே பொருட்படுத்தவில்லை. ஆனால், ரணில் – பிரபா உடன்படிக்கையானது தமிழ் மையத்தை ஏற்றுக்கொண்டது. ஆனால், அது மேற்கு நாடுகளின் அணுகுமுறைதான். இந்தியா இன்றளவும் கொழும்பைத் தான் ஒரு மையமாக கருதுகிறது.
எனவே, கொழும்பை வென்றெடுப்பதற்காக அவ்வப்போது தமிழர்கள் பிரச்சினை கையிலெடுக்கப்படுகிறது. மேலும் தமிழ் நாட்டில் மைய அரசுக்கு எதிரான உணர்வலைகள் அதிகரித்து வருவதையும் அவர்கள் கவனத்தில் எடுக்க வேண்டியுள்ளது.
வன்னியில் விடுதலைப்புலிகள் ஒரு மையத்தை கட்டியெழுப்பினார்கள். ஆனால், அது நந்திக் கடற்கரையில் தகர்க்கப்பட்டுவிட்டது. அது அதிகபட்சம் படைத்துறைப் பரிமாணங்களைக் கொண்ட ஒரு மையம். குறைந்தளவு சர்வதேச அங்கீகாரமே அதற்கு இருந்தது. அதற்கு பிரதான காரணம் இந்தியாதான். இந்தியாவிற்கும் விடுதலைப்புலிகளின் பாதி அரசிற்கும் இடையிலிருந்த சட்டப்பூட்டின் விளைவாக அப்பாதி அரசிற்கு குறைந்தளவு சர்வதேச அங்கீகாரமே கிடைத்தது. ஆனால், இப்பொழுது தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஒப்பீட்டளவில் விடுதலைப்புலிகளை விடவும் கூடுதலான சர்வதேச அங்கீகாரம் உண்டு. தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஜனநாயக இருப்பே இதற்குக் காரணம்.
ஜனநாயக ரீதியாகத்தெரிந்தெடுக்கப்பட்ட அமைப்பு என்பதே அதன் பிரதான பலமாகும். ஆனால், அது தன் பலத்தையும் வரலாற்றுப் பாத்திரத்தையும் எந்தளவுக்கு விளங்கி வைத்திருக்கிறது? இலங்கைத்தீவில் தன்னை ஒரு தவிர்க்கப்படவியலாத மையமாகக் கட்டியெழுப்பும் விதத்தில் அதன் நிகழ்ச்சி நிரல் காணப்படுகிறதா? இந்தியாவுக்கும் தனக்குமுள்ள சுமுகமான உறவை தங்குநிலை உறவு என்ற நிலையிலிருந்து நலன்சார் பரஸ்பர உறவு என்ற வளர்ச்சியை நோக்கி இட்டுச்செல்லவல்ல தீர்க்கதரிசனமும் உரிய நிகழ்ச்சி நிரலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உண்டா?
13ஆவது திருத்தச் சட்டத்தைக் கடந்துபோவதென்றால் இந்தியா தமிழர்களை ஒரு மையமாகக் கருதினால்தான் அது முடியும். ஈழத்தமிழர்களை இந்தியா ஒரு மையமாக அங்கீகரித்தாற்றான் உலக சமூகம் அவ்விதம் செய்யும். இந்தியாவை மீறி ஈழத்தமிழர்களை யாரும் தத்தெடுத்துவிட முடியாது. தென்னாசியாவின் புவிசார் அரசியல் யதார்த்தம் அது. இந்திய – இலங்கை உடன்படிக்கை கைச்சாத்தாகி ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களின் பின்னரே யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் துணைத்தூதரகம் திறக்கப்பட்டது. கலை பண்பாட்டுத்தளங்களில் அது ஓர் இடை ஊடாட்ட மையமாகத்திகழ்வதற்கு இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. தமிழர்களின் அபிப்பிராயத்தை உருவாக்கவல்ல, படித்த, நடுத்தர வர்க்கத்தின் இதயத்தை அது மேலும் நெருங்கிச் செல்லவேண்டியிருக்கிறது.
முன்பொரு காலம் யாழ்ப்பாணத்தின் படித்த நடுத்தர வர்க்கத்தின் கல்வீடுகளிலும் சலூண்களிலும் சனசமூக நிலையங்களிலும் இந்திய தலைவர்களான காந்தி, நேரு நேதாஜி மற்றும் ஆன்மீக வாதிகளான சுவாமி விவேகானந்தர், ரமணர் போன்றோரின் படங்கள் கொழுவப்பட்டிருந்தன. அப்பொழுது யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத் தூதரகம் இருக்கவில்லை. இப்பொழுது யாழ்ப்பாணத்தில் விசா வழங்கும் அந்தஸ்துடைய துணைத் தூதரகம் உண்டு. ஆனால், யாழ்ப்பாணத்தின் கல்வீடுகளில் காந்தி, நேரு போன்றோரின் படங்களைக் காண முடிவதில்லை.
27.01.2013
உதயன்