தேசியம் எனப்படுவது இனமான உணர்ச்சியா?

சிங்கள மக்கள் மத்தியில் அதிகம் பிழையாகப் புரிந்துகொள்ளப்பட்ட ஒரு வார்த்தை சமஷ்டி எனலாம். அதுபோலவே தமிழர்கள் மத்தியில் சரியாகப் புரிந்துகொள்ளப்படாத ஒரு வார்த்தை தேசியம் எனலாம். ஈழத் தமிழர்கள் மத்தியில் இரண்டு கட்சிகளின் பெயர்களில் தேசியம் என்ற வார்த்தை உண்டு. இப்பொழுது மாகாண சபைத் தேர்தலுக்கான பிரசாரத்தின் போதும் தேசியம் என்ற வார்த்தை அடிக்கடி பிரயோகிக்கப்படுகின்றது. இதில் கூட்டமைப்பில் உள்ள தீவிரமானவர்கள் போலத் தோன்றுபவர்களும் தேசியம் பற்றிக் கதைக்கிறார்கள். மிதமானவர்கள் போலத் தோன்றுபவர்களும் தேசியம் கதைக்கின்றார்கள்.குறிப்பாக இணையத் தளப் பிரசாரங்களில் ‘‘தேசியம் வெல்ல வாக்களிப்போம்” என்றெல்லாம் சுலோகங்கள் வருகின்றன.

சில மாதங்களிற்கு முன்பு எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் நினைவு நாள் கொண்டாடப்பட்டபோது யாழ். நகரில் அவருடைய நினைவுத்தூபியைச் சுற்றியிருக்கும் மதிலில் கட்டப்பட்டிருந்த ஒரு பதாகையில் ‘‘தேசியத் தந்தை” என்று எழுதப்பட்டிருந்தது.

எனக்குத் தெரிந்த சில இளம் ஊடகவியலாளர்களிடம் ஒரு நாள் கேட்டேன், உங்களுடைய ஊடகக் கொள்கை எது என்று. தேசியத்தைப் பாதுகாத்தால் சரி என்று சொன்னார்கள். நான் தொடர்ந்து கேட்டேன், ‘‘தேசியம்” என்றால் என்ன? என்று. அவர்களால் துலக்கமான பதிலைச் சொல்ல முடியவில்லை.

அவர்கள் மட்டுமல்ல இன்று தமிழ் மக்கள் மத்தியில் உள்ள தீவிர தேசியவாதிகள் என்று அடையாளப்படுத்தப்படும் பலரிடமும் இக்கேள்வியை நான் கேட்டிருக்கிறேன். தேசியம் என்றால் என்ன? என்று. அவர்கள் கூறிய பதில்கள் வருமாறு…….. ஒரு பகுதியினர் சொன்னார்கள் அது ஒரு இனமான உணர்ச்சி என்று.

இன்னொரு பகுதியினர் சொன்னார்கள், அது அடக்குமுறைக்கு எதிரான இன எதிர்ப்புணர்ச்சி என்று.

வேறு சிலர் சொன்னார்கள் அது தம்மை ஒரு தேசமாகக் கட்டமைத்துக் கொள்ள முற்படும் ஒரு மக்கள் கூட்டத்தின் திரட்டப்பட்ட உணர்ச்சி என்று.

மேற்கண்ட பதில்களனைத்தையும் தொகுத்து அவற்றின் சாராம்சத்தின் அடிப்படையிற் கூறின் தேசியம் என்று அவர்கள் விளங்கி வைத்திருப்பது இனமானம் சார்ந்த ஒரு கூட்டு எதிர்ப்புணர்ச்சிதான். இது சரியா? அல்லது தேசியம் எனப்படுவது அதைவிட அழமானதா?

தேசியம் எனப்படுவது அதைவிட ஆழமானதுதான். அது அதிக பட்சம் அறிவுபூர்வமானது. அதைவிடக் குறைந்த அளவே உணர்சசிகரமானது. ஆனால், பிரயோக நிலையில் அது அதிகபட்சம் உணர்ச்சிகரமானதாகவே காணப்படுகிறது. இக்கட்டுரையானது தேசியம் தொடர்பான புலமைசார் கோட்பாடுகளிற்குள் அதிகம் இறங்கப்போவதில்லை. ஒரு வாரப் பத்திரிகை அதற்குரிய இடமுமல்ல. பதிலாக, தேசியத்தை அதன் பிரயோக வடிவத்தில் வியாக்கியானம் செய்யும் அல்லது வரை விலக்கணம் செய்யும் ஒரு முயற்சியே இது. தூயதேசியம் பற்றியல்ல பிரயோக தேசியம் பற்றியே இங்கு உரையாடப்படுகின்றது. ஒரு தொடர் விவாதத்திற்கான தொடக்கப்புள்ளியாக இதை எடுத்துக் கொள்ளலாம். சரி. தேசியம் என்றால் என்ன?

தேசியம் எனப்படுவது ஒரு மக்கள் கூட்டத்தின் கூட்டுப் பிரக்ஞை ஆகும்.

எந்தவொரு பொது அடையாளத்தின் நிமித்தம் ஒரு மக்கள் கூட்டம் பெருமைப்படுகின்றதோ அல்லது எந்தவொரு பொது அடையாளத்தின் பேரால் ஒரு மக்கள் கூட்டத்தை ஒரு அரசியற் சக்தியாகத் திரட்டக் கூடியதாக உள்ளதோ அல்லது எந்தவொரு பொது அடையாளத்தின் பெயரால் ஒரு மக்கள் திரள் ஒடுக்கப்படுகின்றதோ அல்லது அவமதிக்கப்படுகின்றதோ அந்த ஒரு அல்லது பல பொது அடையாளங்களின் பாற்பட்ட ஒரு கூட்டுப் பிரக்ஞையே தேசியம் என்பதாக பிரயோக நிலையில் காணப்படுகின்றது.

19ஆம் நூற்றாண்டின் மேற்கத்தையே நாகரிகத்தை அங்கு தோன்றிய தேசிய அலைகளே பெரிதும் வடிவமைத்தன.

கைத்தொழில் புரட்சியின் விளைவாக ஏற்பட்ட தொடர் வளர்ச்சிகள் காரணமாக போக்குவரத்துத் துறையில் வசதிகள் பெருகின. இதனால் வாழ்க்கை இலகுவாக்கப்பட்டது. சமுகம் ஒன்று திரட்டப்பட்டது. அச்சு இயந்திரத்தின் வருகையோடு அறிவும் தகவல்களும் முன்னெப்பொழுதையும்விட அதிகரித்த அளவிலும் அதிகரித்த வேகத்திலும் பரிமாறப்பட்டன, மக்கள் மயப்பட்டன. இவ்விதமாக தகவலும், அறிவும் மக்கள் மயப்பட்டு வந்த ஒரு பின்னணியில் சமூகமானது விரைவாக ஒன்று திரட்டப்பட்டு, சமூக ஊடாட்டம் முன்னெப்பொழுதையும் விட வேகமாக நிகழ்ந்தபோது அங்கெல்லாம் தேசிய அலைகள் எழுச்சி பெறலாயின. அதாவது மக்களின் கூட்டுப் பிரக்ஞையானது விழிப்படைந்து சிலிர்த்தெழலாயிற்று.

அமெரிக்க சுதந்திரப் போர், பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாகத் தோன்றிய மூன்றாவது நெப்போலியனின் ஆட்சிக் காலம், இத்தாலியின் ஒருங்கிணைப்பு, ஜேர்மனியின் ஒருங்கிணைப்பு மற்றும் ரஷ்யாவில் மேற்கொள்ளப்பட்ட நவீன மயமாக்கல் செயற்பாடுகள் போன்ற திருப்பகரமான மாற்றங்கள் எல்லாவற்றையும் அங்கு தோன்றிய தேசிய அலைகளே பெரிதும் வழி நடத்தின.

ஒருங்கிணைக்கப்பட்ட ஜேர்மனியும், இத்தாலியும் ஐரோப்பாவில் இரு பெரும் புதிய சக்திகளாக எழுச்சி பெற்றன. இதனால் ஐரோப்பாவின் வலுச் சமநிலை குலையலாயிற்று. இருபதாம் நூற்றாண்டில் வெடித்த இரு உலகமகா யுத்தங்களிற்கு இதுவும் ஒரு காரணம். மேலும் நாஸிஸம், பாஸிஸம் போன்ற விகார வளர்ச்சிகளையும் இந்தப் பின்னணியில் வைத்து வியாக்கியானம் செய்வோரும் உண்டு.

மேற்கைரோப்பாவானது பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட யுத்தங்களிற்; கூடாக தேசிய அலைகளைக் கடந்து வந்தபோதிலும்கூட அதை அதன் சரியான பொருளிற் கூறின் இரண்டாம் உலக மகா யுத்தத்துடன்தான் அது பெருமளவுக்குச் சாத்தியமாகியது எனலாம். ஆனால், கிழக்கைரோப்பாவானது அதற்கும் பல தசாப்தங்களின் பின்னரே அதைக் கடந்தது.

மார்க்சியத்தின் எழுச்சியையடுத்து தேசிய அரசுகளைக் கடந்து சர்வதேசியம் பற்றிய ஒரு சிந்தனை பலமாகவும் தூலமாகவும் ஸ்தாபிக்கப்பட்டுவிட்டதற்கும் பின்னரே கிழக்கைரோப்பா அதன் தேசிய அலைகளைக் கடந்துவந்தது. கெடுபிடிப் போரின் முடிவையடுத்து கிழக்கைரோப்பாவில் தோன்றிய தேசிய அலையானது ஒருபுறம் அங்கே புதிய அரசுகளைத் தோற்றுவித்தது. மறுபுறம் மிகப்பயங்கரமான கொலைக் களங்களைத் திறந்துவிட்டது. முடிவில் நேட்டோ விரிவாக்கத்தின் பின்னணியில் அங்கு பெருமளவிற்குத் தேசிய அலைகள் கடக்கப்பட்டுவிட்டன.

ஆனால், அமெரிக்க ஐரோப்பிய அனுபவமும் ஆசிய, ஆபிரிக்க, லத்தின் அமெரிக்க அனுபவங்களும் ஒன்றல்ல. ஆசிய, ஆபிரிக்க நாடுகள் பலவற்றில் இப்பொழுதும் தேசிய உணர்ச்சிகள் எரிபற்று நிலையிற்தான் காணப்படுகின்றன.

ஐரோப்பாவின் தேசிய அலையெனப்படுவது அதன் இயல்பான சமூகப் பொருளாதார வளர்ச்சிப் போக்கில் திரண்டெழுந்த ஒன்றாகும். ஆனால், ஆசிய ஆபிரிக்க, லத்தின் அமெரிக்க நாடுகளின் நிலைமை அவ்வாறில்லை. இங்கெல்லாம் இருபதாம் நூற்றாண்டின் தேசிய எழுச்சிகளில் அநேகமானவை வெளியாரின் ஆக்கிரமிப்புக்கு எதிரானவைதான். அதாவது காலனிய ஆதிக்கத்திற்கு எதிரான சுதந்திரப் போராட்டங்கள்தான்.

ஆசிய ஆபிரிக்க, லத்தின் அமெரிக்க அனுபவங்களைப் பொறுத்தவரை இங்கு தோன்றிய அநேகமான தேசிய எழுச்சிகள் ஏகாதிபத்தியத்துக்கு எதிரானவை அல்லது ஒடுக்குமுறைக்கு எதிரானவை என்பதற்காக முற்போக்கானவைகளாகக் கருதப்பட்டன.

எனினும்;, தேசிய எழுச்சிகளுக்குப் பின்னாலிருந்த கூட்டுப் பிரக்ஞைகள் யாவும் எல்லாக் களங்களிலும், எல்லாக் காலங்களிலும் எல்லா நிலைமைகளின்போதும் முழு அளவிற்கு முற்போக்கானவைகளாகத்தானிருந்தன என்பதற்கில்லை. ஏனெனில், ஒரு மக்கள் திரளின் கூட்டுப் பிரக்ஞையானது அதன் வேர் நிலையில் முற்போக்கானதாகத்தான் இருக்க வேண்டும் என்பதிற்கில்லை. அது குறிப்பிட்ட சமூகத்தின் சமூகப் பொருளாதார, பண்பாட்டு வளர்ச்சிகளின் பாற்பட்ட ஒன்றாகும். சில சமூகங்களில் அக்கூட்டுப் பிரக்ஞையானது ஒரு இனப்பிரக்ஞையாகவோ அல்லது மொழிப் பிரக்ஞையாகவோ இருந்தது. சில சமூகங்களில் அது மதப் பிரக்ஞையாகவோஅல்லது பிராந்தியப் பிரக்ஞையாகவோ காணப்பட்டது.அதன் வேர்கள் மிகப்புராதன காலமொன்றின் இருண்ட இடுக்குகளிற்குள்ளிருந்து புறப்பட்டு வரக்கூடும். அந்தந்தக் களத்திற்குரிய தனித்துவமான தேசிய சூழலுக்குட்பட்டு சில சமயங்களில் அது இனவெறியாகவோ, மொழிவெறியாகவோ அல்லது மதவெறியாகவோ அல்லது வேறெந்த வெறியுமாகவோ உருவாக முடியும். ஒரு சமூகத்தின் சமூகப் பொருளாதார பண்பாட்டுச் சூழலே அதைப் பெரிதும் தீர்மானிக்கின்றது. ‘‘கருத்து மக்களைப் பற்றிக் கொண்டால் அது சக்தியாக உருவெடுக்கும்” என்று மார்க்சியர்கள் கூறுவார்கள். ஆனால், கசப்பான யதார்த்தம் எதுவென்றால், கருத்து மக்களைப் பற்றிக்கொள்ள முன்பு, மதம், மொழி, இனம் போன்ற இன்னோரன்ன எப்பொழுதும் எரிபற்று நிலையிலிருக்கும் விவகாரங்கள் விரைவாக பொதுசனங்களைப் பற்றிக் கொள்கின்றன என்பதுதான். குறிப்பிட்ட சமூகத்தின் அகஜனநாயகச் சூழல் பண்பாட்டுச் செழிப்பு மற்றும் அடக்கு முறையின் தீவிரம், அனைத்துலகச் சூழல் போன்ற காரணிகள் இதைப் பெரிதும் தீர்மானிக்கின்றன. எனவே, ஒரு தேசிய பிரக்ஞையானது பொதுவாக அதன் வேரில் அதிகபட்சம் உணர்ச்சிகரமான விவகாரங்களால் கட்டமைக்கப்பட்டிருக்கக்கூடும்.

இந்த இடத்தில்தான் குறிப்பிட்ட தேசிய பிரக்ஞைக்குத் தலைமை தாங்கும் அமைப்பு அல்லது கட்சியின் முக்கியத்துவம் பற்றிக் கூறவேண்டியிருக்கிறது. பொதுசனங்கள் எப்பொழுதும் உணர்ச்சிகரமான விவகாரங்களின் பின்தான் செல்கின்றார்கள். சிக்கலான கோட்பாடுகளை விடவும் உணர்ச்சிகரமான சுலோகங்கள் அவர்களை இலகுவாகப் பற்றிக்கொள்கின்றன. இடதுசாரி அரசியலிலும் இதுவே நடந்தது. ஆனால், அந்த அரசியலுக்குத் தலைமை தாங்கும் அமைப்பும், அதன் பிரதானிகளும் கோட்பாட்டு விளக்கத்துடனிருக்க வேண்டும். கோர்பச்சேவ் ஒரு முறை சொன்னார். லெனினிற்குப் பின் சோவியத் யூனியனின் உயர் பீடத்தில் லெனின் அளவுக்கு புத்திஜீவிகள் தலைமைப் பொறுப்பிலிருக்கவில்லை என்று. இந்த உலகத்தின் அறிவனைத்தையும் கிரகித்துக் கொண்டால் தவிர ஒரு மார்க்சிஸ்டாக இருக்க முடியாது என்று மாரக்;சிய மூலவர்கள் கூறுவதுண்டு. சாதாரண ஜனங்களால் இது முடியாது. அவர்களை இயன்றளவுக்கு அரசியல் மயப்படுத்தலாம். ஆனால், தலைமைத்துவம் கட்டாயமாக கோட்பாட்டுத் தெளிவுடன் இருக்க வேண்டும். பிளாட்டோ இதைத்தான் வேறு வார்த்தைகளில் ‘‘ஞானிகளே தலைவர்களாக இருக்க வேண்டும்” என்றார்.

எனவே, ஒரு சமூகத்தின் தேசியப் பிரக்ஞைக்குத் தலைமை தாங்கும் அமைப்பானது குறிப்பிட்ட கூட்டுப் பிரக்ஞை அதன் வேர் நிலையில் எவ்வளவுதான் பிற்போக்கானதாக காணப்பட்டாலும் அதை முற்போக்கானதாக பண்பு மாற்றம் செய்ய வேண்டும். அதாவது கிழிருந்து மேலெழும் உணர்ச்சிகரமான அடி நிலைத் தேசிய உணர்வை மேலிருந்து கிழிறக்கப்படும் ஜனநாயக ஒளியின் மூலம் இருள் நீக்கம் செய்ய வேண்டும். வேர் நிலை உணர்ச்சிகரமான மூலக் கூறுகளை சாத்தியமான அளவு ஜனநாயக உள்ளடக்கத்தால் பிரதியீடு செய்யவேண்டும். அதாவது, மேற்கத்தைய அறிஞர்கள் கூறுவதுபோல், ‘‘தேசியததின் உள்ளடக்கம் ஜனநாயகமாக இருக்க வேண்டும்”. இதை இன்னும் அழுத்தமாக செய்முறை விளக்கமாகக் கூறின் ஒரு சமூகத்தின் தேசிய அரசியலை முன்னெடுக்கும் அமைப்பு அல்லது கட்சியானது அந்த அரசியலின் அடித்தளம் ஜனநாயகமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

எந்தவொரு தேசியப் பிரக்ஞையும் அதன் வேரில் இனமானம், இனத்தூய்மைவாதம்,இன மேலாண்மை வாதம், இனவீரம், இன எதிர்ப்பு, மொழித்தூய்மை, மதத் தூய்மை, சாதி அசமத்துவம், பால்அசமத்துவம் போன்ற இன்னோரன்ன உணர்ச்சிகரமான அம்சங்களின் சிக்கலான கலவையாகவே காணப்படுவதுண்டு.

ஆனால், இந்த உணர்ச்சிகரமான அம்சங்களை அறிவினால் அதாவது சாத்தியமான அளவு ஜனநாயகத்தால் பிரதியீடு செய்ய வேண்டிய பொறுப்பு, அத்தேசியப் பிரக்ஞைக்குத் தலைமை தாங்கும் அமைப்புக்கே உரியது. நோய்க்கூறான அம்சங்களை ஒரு ஜனநாயக இடை ஊடாட்டப் பரப்பிற் கூடாகத்தான் கடந்து செல்ல முடியும்.

அத்தகைய ஜனநாயகத்தை உள்ளடக்கமாகப் பெற்ற ஒரு தேசிய அரசியல்தான் அதன் ஒரு கட்ட முதிர்ச்சிக்குப் பின் சர்வதேசியமாக விரியும். இல்லையெனில் அது தானே தன்னுள் உட்சுருங்கும் குறுத்தேசிய வாதமாகத் தறுக்கணித்துப்போய்விடும்.

இதெல்லாம் குறிப்பிட்ட தேசிய உணர்சசிக்குத் தலைமை தாங்கும் அமைப்பு அல்லது கட்சியின் ஜனநாயக உள்ளடக்கத்திற்தான் பெருமளவுக்குத் தங்கியிருக்கின்றது. அந்தக் கட்சியிடம் இல்லாதது அது முன்னெடுக்கும் அரசியலிலும் இருக்காது.

இந்த விளக்கத்தின் பின்னணியில் வைத்தே தமிழ்த் தேசியத்தையும் பார்க்க வேண்டும். இந்த விளக்கத்தின் அடிப்படையில் இறந்த காலத்தையும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். அதிலிருந்து பாடங்களைக் கற்கத் துணிய வேண்டும்.

தேசியத்திற்கும் ஜனநாயகத்திற்குமிடையிலான பிரிக்கப்பட முடியாத வேர் நிலை உறவு குறித்து தமிழில் மிக அரிதாகவே நூல்கள் வெளிவந்துள்ளன. இவற்றுள் 1999இல் மு. திருநாவுக்கரசு எழுதிய நூலைத் தமிழ்த் தேசியர்கள் அவசியம் வாசிக்க வேண்டும்.

‘‘தேசியமும் ஜனநாயகமும்” என்ற அந்த நூல் ஈழத்தமிழ் வாசகர்களை அதிகம் வந்தடையவில்லை என்றே தெரிகிறது. அந்நூலில் மு. திருநாவுக்கரசு பின்வருமாறு கூறுகிறார்.

‘‘தேசியம் என்பது வரலாற்றில் ஒரு புது அம்சமாக பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் எழத்தொடங்கியது. அதாவது இனம் பழையது அது முன்னரே இருந்தது. மொழி பழையது அதுவும் முன்னரே இருந்தது. அவ்வாறு முன்னரே பழமையதானதாயிருந்த அந்த இனத்தோடு அல்லது மொழியோடு ஜனநாயகம் எனும் புதிய அம்சம் சேரும்போது அது தேசியம் என்றாயிற்று. அதலால் தேசியம் என்பது ஜனநாயகம் என்னும் புதிய அம்சத்தின் வரவைத் தன் உள்ளடக்கமாகக் கொண்ட ஒரு புரட்சிகர வரலாற்று அம்சமாகும். ஜனநாயகத்திற்கான பயணத்தில் தேசியவாதம் ஒரு கட்டம் ஆகும். தேசிய வாதமானது ஜனநாயகத்தை அடைவதற்கான ஒரு வடிவமும் ஜனநாயகத்தைக் காவிச் செல்லும் ஒரு வாகனமும் ஆகும்”

எனவே, தேசியம் தொடர்பில் உணர்ச்சிகரமான ஒரு சித்திரத்தை வரைந்து வைத்துக் கொண்டிருக்கும் அனைவரும் குறிப்பாக, அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள், ஆய்வாளர்கள், ஊடகவியலாளர்கள், படைப்பாளிகள் போன்ற அபிப்பிராயத்தை உருவாக்கவல்ல தரப்பினராகக் காணப்படும் அனைவரும் தமிழ்த் தேசியம் தொடர்பில் அதிக பட்சம் அறிவுபூர்வமான விவாதக் களங்களைத் திறக்க முன்வர வேண்டும். அவை விவாதக் களங்களாகவும், அதேசமயம் பிரேத பரிசோதனைக் களங்களாகவுமிருக்க வேண்டும். ஏனெனில், இறந்த காலத்தை வெட்டித் திறந்து பார்க்கவில்லை என்றால், இறந்த காலத்திலிருந்து பாடங்களைக் கற்கவில்லையென்றால் தமிழ்த் தேசியம் எனப்படுவது செயலுக்குப் போகத் திராணியற்ற நடிப்புச் சுதேசிகள் பயன்படுத்தும் வெற்றுச் சுலோகமாகச் சுருங்கிப்போய்விடும்.

15-08-2013.

Related Articles

1 Comment

Avarage Rating:
  • 0 / 10
  • […] ஆனால், தேசியம் எனப்படுவது அதைவிட ஆழமானது. ஒரு மக்கள் கூட்டத்தின் கூட்டுப் பிரக்ஞையே தேசியம் எனப்படுகிறது. இது ஒரு பிரயோக நிலை விளக்கம்தான். எந்தவொரு கூட்டு அடையாளத்தின் பெயரால் ஒரு மக்கள் திரள் ஒடுக்கப்படுகிறதோ அந்தக் கூட்டு அடையாளத்தின் பேரால் வரும் ஒரு கூட்டுப் பிரக்ஞைதான் தான் தேசியம். எல்லாக் கூட்டுப் பிரக்ஞைகளும் முற்போக்கானவைகளாகத்தான் இருக்கும் என்பதில்லை. அவை அவற்றின் வேரில் பிற்போக்கானவைகளாகவும் இருக்க முடியும். ஆனால், அத்தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் அமைப்பு அல்லது கட்சிதான் குறிப்பிட்ட கூட்டுப் பிரக்ஞையின் உள்ளடக்கத்தை ஜனநாயக ஒளி கொண்டு இருள் நீக்கம் செய்ய வேண்டும். அதாவது, தேசியத்தின் உள்ளடக்கம்; ஆகக் கூடிய பட்ச ஜனநாயகமாக இருக்க வேண்டும். (பார்க்க:http://www.nillanthan.com/?p=180). […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *