தமிழர்கள் பதின்மூன்றாவது திருத்தத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதே இந்தியாவின் தெரிவாகவுள்ளது. கூட்டமைப்புடனான சந்திப்புகளின்போதும் சரி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடனான சந்திப்புகளின்போதும் சரி, ஏனைய சிவில் அமைப்புகள் மற்றும் திருச்சபைப் பிரதிநிதிகளைச் சந்திக்கும்போதும் சரி இந்தியத் தூதுவர்களும், ராஜதந்திரிகளும், கொள்கை வகுப்பாளர்களும் அதைத்தான் வற்புறுத்தி வருகிறார்கள்.
அதாவது, உலகப் பேரரசு ஆகிய அமெரிக்காவும், பிராந்திய பேரரசு ஆகிய இந்தியாவும் ஈழத்தமிழர்களைப் பொறுத்து ஏறக்குறைய ஒரே நிலைப்பாட்டுடன்தான் காணப்படுகின்றன. அந்த நிலைப்பாட்டின் சாராம்சம் வருமாறு…
1) ஈழத்தமிழர்கள் தேர்தல் வழிமுறைக்கூடாகவே தமது பேரம் பேசும் சக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும். தேர்தலைப் பகிஷ்கரிக்கக்கூடாது.
2) தாயகம், தேசியம், சுயநிர்ணயம் போன்றவற்றை கைவிடவேண்டும்.
இது ஒருபுறம் இருக்க, இன்னொருபுறம் இந்தியா உட்பட மேற்கு நாடுகளுடைய வெளிநாடுகளுக்கான நிதி உதவித் திட்டங்களை எடுத்துப் பார்த்தால் ஒரு விடயம் தெட்டத்தெளிவாகத் தெரியவரும். அதாவது, போருக்குப் பின்னரான நல்லிணக்க முயற்சிகளைப் பலப்படுத்துவது என்ற பொதுவான தொனிப் பொருளின் கீழ் தமிழ் மக்கள் மத்தியில் சிவில் அமைப்புக்களின் பங்களிப்பை ஊக்குவிப்பது, நல்லாட்சியை ஊக்குவிப்பது, புனர்வாழ்வு, புனரமைப்புப் பணிகளில் ஒத்துழைப்பது என்பவற்றுடன் உட்கட்டுமான அபிவிருத்திக்கு உதவுவது போன்ற செயற்பாடுகளுக்காக அவை இலங்கை அரசாங்கத்திற்கு நிதி, தொழில்நுட்ப, நிபுணத்துவ உதவிகளையும் வழங்கி வருகின்றன.
அண்மையில் நோர்வேயிலிருந்து வந்த ஒரு நண்பர் சுட்டிக்காட்டினார்…. நோர்வே அரசாங்கமானது உள்நாட்டில் உள்ள தமிழ் டயஸ்பொறா அமைப்புகளுக்கு, குறிப்பாக, தாய் நாட்டில் பாதிக்கப்பட்டவர்களிற்கு உதவி புரியும் அமைப்புக்களிற்குக் கொடுக்கும் நிதி உதவித் தொகையை இலங்கை அரசாங்கத்திற்குக் கொடுக்கும் நிதி உதவித் தொகையுடன் ஒப்பிடுமிடத்து அதிர்ச்சியூட்டும் அளவிற்கு ஏற்றத் தாழ்வைக் காண முடியும் என்று. இது தொடர்பாகச் சில தமிழ் அமைப்புகள் நோர்வே அரசாங்கத்திற்குச் சுட்டிக்காட்டியதாகவும் அவர் சொன்னார்.
நோர்வே மட்டுமல்ல, அவுஸ்ரேலியா போன்ற நாடுகளும் அவ்வாறு தான் நடந்து கொள்கின்றன. அரசுக்கும் – அரசுக்கும் இடையிலான கட்டமைக்கப்பட்ட உறவுக்கூடாக போருக்குப் பின்னரான புனர்நிர்மாணம், புனர்வாழ்வு, நல்லிணக்கம், நல்லாட்சி போன்ற இன்னோரன்ன துறைகளில் அரசாங்கத்தை ஊக்குவிக்கும் விதத்தில் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும் அமெரிக்கா போன்ற சக்திமிக்க நாடுகள் தமது உதவித் திட்டங்களுக்கூடாக தமிழ்ப் பகுதிகளில் ஜனநாயகக் கட்டமைப்புக்களை மீளக் கட்டியெழுப்பும் நோக்கத்தோடு சிவில் சமூகங்களையும், சிந்தனைக் குழாம்களையும் ஊக்குவிப்பதில் அதிகம் அக்கறை காட்டி வருகின்றன.
மேற்சொன்னவைகளைத் தொகுத்துப் பார்த்தால், ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான இலங்கைத்தீவு பொறுத்து குறிப்பாகத் தமிழ் அரசியல் பொறுத்து இந்தியாவும் அமெரிக்காவும் உட்பட அனைத்துலக சமூகத்தில் உள்ள சக்தி மிக்க நாடுகளின் அணுகுமுறையானது சாராம்சத்தில் பின்வருமாறு காணப்படுகிறது.
ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரும் அநேகமான நாடுகளில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடை நீக்கப்படவில்லை என்பதோடு, புலிகளோடு தொடர்புடையதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கைகளும் தொடர்கின்றன.
1) தமது நாடுகளை நோக்கி வரும் புகலிடந்தேடிகளின் விடயத்தில் கண்டிப்பான நடைமுறைகளைப் பின்பற்றுவது.
2) தமிழ்ப் பகுதிகளில் ஜனநாயகக் கட்டமைப்புக்களை மீளக்கட்டியெழுப்பத் தேவையான அகப்புற நிலைமைகளை ஊக்குவிப்பது.
3) அரசாங்கத்தின் நல்லிணக்க முயற்சிகளை அரசாங்கத்திற்கும் தமிழர்களிற்கும் பொறியாக மாற்றி, ஆயுத மோதல்களுக்குத் திரும்பிச் செல்ல முடியாத வளர்ச்சிகளை உருவாக்குவது.
எனவே, மேற்கண்ட அனைத்தையும் தொகுத்துப் பார்க்கும்போது, அதாவது, அனைத்துலக சமூகமானது தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மற்றும் அமைப்புகளிடம் எதை எதிர்பார்க்கிறது அல்லது எதை வற்புறுத்துகிறது என்பதையும், அதோடு, ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான தமிழ்ச் சமூகத்தில் எதைக் கட்டியெழுப்ப முற்படுகின்றது என்பதையும் தொகுத்துப் பார்க்குமிடத்து மிகத் தெளிவான ஒரு சித்திரம் கிடைக்கும். அது எதுவெனில் தமிழர்களின் மத்தியில் மென்சக்திகளை (Soft Power) ஊக்குவித்து வளர்த்தெடுப்பதே அனைத்துலக சமூகத்தின் இப்போதைக்கான தெரிவாக உள்ளது என்பதே.
சில மாதங்களிற்கு முன்பு இப்பகுதியில் நானெழுதிய ‘மென்தேசியவாதம்” என்ற கட்டுரையை வாசித்துவிட்டு, பிலிப்பைன்ஸ் நாட்டில் சமாதான முயற்சிகளில் ஈடுபடும் ஒரு நண்பரும் ஏறக்குறைய இதே கருத்தையே தெரிவித்தார். அதாவது, தமிழ் மென்தேசிய சக்திகளைப் பலப்படுத்தும் ஒரு அனைத்துலக நிகழ்ச்சி நிரலைப் பற்றி.
அரசியலில் ‘மென்சக்தி – Soft Power என்ற பதம் கடந்த இரு தசாப்த காலமாகவே அதிகளவு முக்கியத்துவம் பெற்றுவருகிறது. அமெரிக்காவின் ஹாவார்ட் கெனடி ஸ்கூலைச் சேர்ந்த ஜோசப் நை (Joseph Nye) என்பவரால் இது ஆரம்பத்தில் ஒரு அரசறிவியற் பதமாகவே பிரயோகிக்கப்பட்டது. இது தொடர்பில் ஜோசப் நை 1990 இல்Bound to lead : the changing nature of American power என்றொரு நூலையும் 2004இல் Soft power –the means to success in world Politics என்று ஒரு நூலையும் எழுதினார்.
வன் சக்தி எனப்படுவது அரசியலில் தனது எதிரியை வன்முறையைப் பிரயோகித்து அழிப்பதன் மூலம் அல்லது தோற்கடிப்பதன் மூலம் தான் விரும்புவதைச் சாதிக்கிறது. ஆனால், மென்சக்தியெனப்படுவது அவ்விதம் வன்முறையைப் பிரயோகிப்பதில்லை. மாறாக, தான் எதை விரும்புகிறதோ அதை மற்றவர்களும் விரும்புமாறு செய்கிறது. அதாவது, தனது விருப்பத்தை நோக்கி மற்றவர்களை வளைக்கிறது. மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும் விதத்தில் தனது ஈர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்வதன் மூலம் அரசியலில் மென்சக்தியானது தான் நினைத்ததைச் சாதிக்க முடியும் என்பதே மென்சக்தியை ஆதரிப்பவர்களுடைய வாதமாகும்.
அரசியலில் மென்சக்தி பற்றிய சிந்தனைப்பள்ளி எனப்படுவது ஒரு மேற்கத்தையக் கண்டுபிடிப்புப் போலத் தோன்றக்கூடும். ஆனாலது உண்மையல்ல. மென்சக்தி பற்றிய வரைவிலக்கணங்களின் படி பார்த்தால் அது காந்தியின் அஹிம்சைக் கோட்பாட்டிற்குக் கிட்டவாக வருகிறது. கௌதம புத்தரிடம் ஆன்மீகச் செய்முறையாக இருந்த அஹிம்சையானது காந்தியிடம் ஒரு அரசியல் போராட்ட வழிமுறையாக உருவாகியது. அஹிம்சையின் மூலத் தத்துவத்தை தகவல் புரட்சியின் விளைவாக உருவாகிய புதிய நிலைமைகளுடன் பொருத்திச் சிந்தித்தபோது உருவாகியதே மென்சக்தி பற்றிய கருத்துருவம் எனலாம். அதாவது, தகவல் ஒரு சக்தியாகவும் அறிவு ஓர் ஆயுதமாகவும் எழுச்சி பெற்றுவருமொரு காலச்சூழலை இது பிரதிபலிக்கின்றது எனலாம். தகவல், சிந்தனைக் குழாம், கலாசாரம், மற்றும் சிவில் சமுகங்கள் போன்றன அரசியலில் மென்சக்தியின் அடித்தளங்களாக கருதப்படுகின்றன.
மென்சக்தி பற்றி தனியாக விரிவாக ஒரு கட்டுரை எழுதப்பட வேண்டும். ஒரு வாரப் பத்திரிகையின் அரசியல் கட்டுரையில் அதற்கு வரையறைகள் உண்டு. ஈழத்தமிழர்கள் பொறுத்து அனைத்துலக சமூகத்தின் தெரிவு மென்சக்திகளைப் பலப்படுத்துவதுதான் என்ற விளக்கத்தின் அடிப்படையில் மென்சக்தி பற்றிய அறிமுகமாகவே இக்கட்டுரை எழுதப்படுகிறது. மேலும், சில மாதங்களிற்கு முன்பு, கூட்டமைப்பானது தனது முதன்மை வேட்பாளராக ஓய்வுபெற்ற நிதியரசரை தெரிந்தெடுத்தபோது தயான் ஜெயதிலக அவரை ‘’தமிழ்மென்சக்தி” என்று விழித்திருந்ததையும் இங்கு சுட்டிக்காட்டலாம். தயான் மட்டுமல்ல, அனைத்துலக சமூகமும் அப்படித்தான் சிந்திக்கிறதா என்பது பற்றி விவாதிப்பது இக்கட்டுரையின் நோக்கமல்ல. ஆனால், வடமாகாண சபை உருவாக்கப்பட்டதோடு, தமிழ் மென் சக்திகளைப் பலப்படுத்துவற்கான பரப்பு மேலும் அதிகரித்திருப்பதாக அனைத்துலக சமூகம் கருத முடியும் என்பதை இக்கட்டுரை ஏற்றுக்கொள்கிறது.
இத்தகையதொரு பின்னணியில், பின்வரும் கேள்விகள் எழுகின்றன. 1, அனைத்துலக சமூகம் ஏன் தமிழ் மென்சக்திகளை ஊக்குவிக்கின்றது?
2) தமிழ் மென்சக்திகளால் தமிழ் அரசியலை அதன் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியுமா?
முதலாவது கேள்வியைப் பார்க்கலாம். அனைத்துலக சமூகம் தமிழ் மென்சக்திகளைப் பலப்படுத்துவதன் மூலம் தமிழ்த் தேசியத்தின் வன் சக்திகள் மறுபடியும் பலமடையக்கூடாது என்று விரும்புகின்றது. விடுதலைப்புலிகள் இயக்கம் எனப்படுவது முழு உலகிற்குமே ஒரு நூதனமான அனுபவம்தான். அந்த அனுபவத்திலிருந்து பெற்ற படிப்பினைகளின் அடிப்படையில் தமிழர்கள் மத்தியில் வன்சக்திகள் பலமடையக்கூடாது என்பதே அவர்களுடைய தெரிவாயுள்ளது. தீவிர தமிழ்த் தேசிய சக்திகள், கூட்டமைப்பைவிடவும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கே ஆதரவாகக் காணப்படுகின்றன. குறிப்பாக, தமிழ் டயஸ்பொறாவில் கூட்டமைப்புடன் ஒப்பிடுகையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கே நண்பர்கள் அதிகமுண்டு. நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்களில் ஒரு பகுதியினர் கூட்டமைப்பை நோக்கி நகர்ந்திருக்கிறார்கள். அதேசமயம் டயஸ்பொறாவில், கூட்டமைப்பிடம் பரிவோடிருந்த ஒரு பகுதியினர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை நோக்கித் திரும்பியிருப்பதாக ஒரு தகவல் உண்டு.
இத்தகையதொரு பின்னணியில் தீவிர தமிழ்த் தேசிய சக்திகளைக் கையாள்வதற்கும், குறிப்பாக, டயஸ்பொறாவைக் கையாள்வதற்கும் அனைத்துலக சமூகமானது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் ஓர் உரையாடற் பரப்பை தொடர்ந்தும் பேணி வருகின்றது. அந்தக் கட்சியைப் புறக்கணிப்பதன் மூலம் தீவிர தமிழ்த் தேசிய சக்திகளுடனான உரையாடற் பரப்பை மூடிவிட அவர்கள் தயாரில்லை. தீவிரதேசிய வாதிகள் தம்மால் கையாளப்பட முடியாத ஒரு வளர்ச்சியைப் பெறுவதை அவர்கள் விரும்பவில்லை.
குறிப்பாக, இந்தியாவைப் பொறுத்தவரை, பதின் மூன்றாவது திருத்தத்தை உயிர்த் துடிப்புடன் வைத்திருக்க வேண்டிய தேவை அதற்;குண்டு. ஏனெனில், சீன விரிவாக்கத்தின் பின்னணியில் காலாவதியாகிக் கொண்டிருக்கும் இந்திய – இலங்கை உடன்படிக்கையின் தப்பிப் பிழைத்திருக்கும் பகுதி அதுதான். எனவே, அதைத் தொடர்ந்தும் உயிர்துடிப்புடன் வைத்திருந்தால்தான் இலங்கை – இந்திய உடன்படிக்கையும் உயிர்துடிப்புடனிருக்கும். அந்த உடன்படிக்கை உயிர்துடிப்புடனிருந்தால்தான் இந்தியாவானது இச்சிறுதீவின் மீது தலையிடுவதற்கான சட்ட ரீதியிலான உரிமையும் உயிர்த்துடிப்புடனிருக்கும்.
அதேசமயம், தமிழ்த் தேசிய சக்திகள் தன்னால் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு எல்லை வரை உயிர்த்துடிப்புடனிருப்பதையும் இந்தியா விரும்பும். ஏனெனில், இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங் கொடுப்பதற்குரிய ஒரு கருவியாகத் தமிழ் அரசியலை இந்தியா எப்பொழுதும் கையாள முடிந்திருக்கிறது.
எனவே, வன்சக்திகள் மேலெழாத படிக்கு தமிழ் அரசியலில் மென்சக்திகளை அல்லது மென் சக்திகள் போலத் தோன்றும் மிதவாதிகளை பலப்படுத்த வேண்டும் என்பதே இப்போதைக்கு அனைத்துலக சமூகத்தின் தெரிவாகக் காணப்படுகிறது. ஆனால், இங்கே தான் ஒரு பிரச்சினையுமிருக்கிறது. எல்லாப் பேரரசுகளும் வன்சக்திகளாயிருந்து கொண்டு தோற்கடிக்கப்பட்ட ஒரு சிறிய மக்கள் கூட்டத்தை நோக்கி மென்சக்தியாக இரு என்று உபதேசிக்கின்றன. அண்மையில் தாரிக் அலி மிக ஆழமான ஒரு பேட்டியை வழங்கியிருந்தார். இதில், ஜேர்மனியப் பத்திரிகையான Der Spiegel தற்போதுள்ள அமெரிக்க அரசாங்கத்தை மென் எதேச்சாதிகாரம் ( Soft totalitarianism) என்று வர்ணித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
இது ஒரு குரூரமான முரண்பாடு. ஒரு காந்தியோ அல்லது மண்டேலாவோ அல்லது மார்ட்டின் லூதரோ அல்லது கற்பனைக்காகவேனும் ஒரு போதிசத்துவரோ சக்திமிக்க அரசுகளின் தலைவராக இருக்க முடியாத இக்குரூர உலகில் தோற்கடிக்கப்பட்ட, சிறிய இனங்கள் மென்சக்திகளையே முழுக்க முழுக்க நம்பவேண்டியிருப்பது என்பது. இது முதலாவது கேள்விக்கான விடை.
இனி இரண்டாவது கேள்வி – தமிழ் மிதவாதிகள் அல்லது மென்சக்திகளால் தமிழ் அரசியலை அதன் அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்துச் செல்ல முடியுமா? என்பது.
இந்த இடத்தில்தான் கடந்த மாகாண சபை தேர்தல் பிரசாரக் களத்தில் காணப்பட்ட ஒரு அகமுரண்பாட்டைச் சுட்டிக்காட்ட வேண்டும். கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் அதிகமதிகம் அனைத்துலக சமூகத்தின் தெரிவுகளுக்கு நெருக்கமாகக் காணப்பட்டது. ஆனால், பிரசாரக் களத்தில் முன்வைக்கப்பட்ட சுலோகங்களில் ‘‘தாயகம், தேசியம், சுயநிர்ணயம்” ஆகிய சொற்கள் மந்திரம்போல திரும்பத் திரும்ப உச்சரிக்கப்பட்டன. இது ஒரு இடைவெளி. அதாவது அனைத்துலக சமூகம் எதைக் கைவிடக் கேட்கிறதோ அதுதான் பிரசாரத்தில் மந்திரம்போல உச்சரி;க்கப்பட்டது.
ஆயின் அனைத்துலக சமூகத்தின் எதிர்பார்ப்புக்கும் தமிழ் மக்களுடைய ஆகப் பிந்திய ஆணைக்கும் இடையில் இடைவெளி இருக்கிறது என்றுதானே அர்த்தம்? அல்லது அது கூட்டமைப்பின் பிரசார உத்திக்கும் அதன் மெய்யான நிகழ்ச்சி நிரலுக்கும் இடையிலான தூரமா? இந்த இடைவெளியைக் கூட்டமைப்பு எப்படிக் கடக்கும்?
அனைத்துலக சமூகம் விரும்புகிறதோ இல்லையோ இப்பொழுது தமிழர்களிடம் வன்சக்தி இல்லை. மென்சக்திதான் இப்போதைக்குள்ள ஒரே சாத்தியமான வழி. ஒரே தெரிவு. கிறிஸ்துவுக்கு முன் சீனாவில் வாழ்ந்த சென் சூ. எனப்படும் ஒரு ஞானி ஒரு தீர்க்கதரினமுரைத்;திருந்தார். ‘‘அறிவு ஒரு நாள் சக்தியாக மாறும்……அப்பொழுது அறிவை ஆயுதமாகப் பயன்படுத்தி கத்தியின்றி ரத்தமின்றி யுத்தங்கள் வெல்லப்படும்….” என்று.
தமிழர்களைப் பொறுத்த வரை சுமார் நான்காண்டுகளுக்கு முன் வரை உயிரை ஆயுதமாகப் பயன்படுத்திய ஒரு இயக்கம் அவர்கள் மத்தியில் இருந்தது. அது ஒரு வன்சக்தி. அது இப்பொழுது இல்லை. அனைத்துலக சமூகம் அந்த வெற்றிடத்தை மென்சக்திகளால் நிரப்ப முயன்று வருகிறது.
இந்நிலையில், யுத்த வெற்றிவாதத்திற்குத் தலைமை தாங்கும் வன்சக்திகளின் மத்தியில், ஜாதகக் கதைகளில் மட்டும் போதிசத்வர் பிழைத்திருக்கும் ஒரு நாட்டிலே, அறிவை ஆயுதமாகக் கையாண்டு தமது கனவை நோக்கி யதார்த்தத்தை வளைக்கப்போகும் ஒரு மென்சக்திக்காகவா தமிழர்கள் காத்திருக்கிறார்கள்….?
04-10-2013