கொமன் வெல்த் மாநாடு: கற்றுக்கொண்ட பாடங்கள்

ஈழத் தமிழ் அரசியலைப் பொறுத்து இந்தியா மற்றும் மேற்கத்தைய நாடுகளின் அணுகுமுறை மூன்று தடங்களைக் (Tracks) கொண்டது. முதலாவது சீன விரிவாக்கத்திற்கு எதிரான தடம். இரண்டாவது லிபரல் ஜனநாயகத்தை உலகம் முழுவதும் பரப்பும் ஒரு தடம். மூன்றாவது உள்நாட்டில் உள்ள தமிழ் வாக்காளர்களைக் கையாளும் ஒரு தடம் இம்மூன்று தடங்களையும் உள்ளடக்கியே மேற்கத்தைய மற்றும் இந்திய அணுகுமுறைகள் அமையும். இவற்றைச் சிறிது விரிவாகப் பார்க்கலாம்.

முதலாவது சீன விரிவாக்கத்திற்கு எதிரான தடம். இது ஓர் உலகளாவிய வியூகம். சீனாவின் செல்வாக்கு மண்டலத்துள் காணப்படும் இலங்கை அரசாங்கத்தை அதிலிருந்து வெளியில் எடுப்பதற்குரிய ஒரு கருவியாக இங்கு தமிழ் அரசியல் பயன்படுத்தப்படுகின்றது.

அரசாங்கத்தை வளைத்தெடுக்க முற்படும் இந்நிகழ்ச்சி நிரலுக்கும் தமது நிகழ்ச்சி நிரலுக்கும் இடையில் சமநிலைப் புள்ளிகளைக் கண்டுபிடிக்கவேண்டியது ஈழத்தமிழர்களே. மேற்சொன்ன மூன்று தடங்களிலும் ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை ஒப்பீட்டளவில் பலவீனமான ஒரு ராஜிய வெளி காணப்படுவது இத்தடத்தில் தான். ஏனெனில், இத்தடத்தின் இறுதி இலக்கு சீன விரிவாக்கத்திற்கு எதிரான முன் தடுப்புக்களை உருவாக்குவது தான். இதில் ஈழத் தமிழர்கள் முன் தடுப்புக்களாகத் தான் பாவிக்கப்படுகிறார்கள். அரசாங்கம் சீனாவிடமிருந்து விலகி வருமாயிருந்தால் மேற்கும், இந்தியாவும் ஈழத்தமிழர்களை முதன்மைப்படுத்தாது. நடுவழியில் கைவிட்டுவிடும். ஏற்கனவே, நந்திக் கடற்கரையில் கைவிட்டதைப் போல.

இரண்டாவது தடம், லிபரல் ஜனநாயகத்தைப் பரப்பும் ஒரு உலகளாவிய வியூகம் ஆகும். இது ஒரு விதத்தில் முதலாவது தடத்தின் இணைத்தடம்தான். இது பெருமளவுக்கு மேற்கு நாடுகளின் நிகழ்ச்சி நிரல்தான். மேற்கத்தைய விரிவாக்கம் அல்லது நேட்டோ விரிவாக்கத்தை புனிதப்படுத்தும் ஒரு கோட்பாட்டாக்க உத்தியே இதுவெனலாம். முரட்டு அரசுகள் அல்லது மேற்கிற்குக் கீழ்படியாத அரசுகளின் மீது பலத்தைப் பிரயோகித்து அவற்றைத் தோற்கடித்த பின் அங்கெல்லாம் லிபரல் ஜனநாயகத்தை ஸ்தாபித்துவிட்டதாக ஒரு தோற்றம் கட்டியெழுப்பப்படுகிறது. ஆனால், அதன் மெய்யான பொருளில் அதன் இறுதி விளைவைக் கருதிக் கூறுமிடத்து, இது நேட்டோ விரிவாக்கத்திற்கு வெள்ளையடிக்கும் வேலைதான். உலகம் முழுவதும் லிபரல் ஜனநாயகம் குறித்து போதிக்கும் மேற்கத்தைய நாடுகள் மேற்காசியாவில் தமக்கு நெருக்கமாயிருக்கும் மன்னர் ஆட்சி நாடுகளில் இது குறித்து வகுப்பெடுப்பதில்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்டவேண்டும்.

ஆனால், சூதான உள்நோக்கமுடையதே யெனினும், லிபரல் ஜனநாயகக் கோட்பாடானது அடக்கப்படும் மக்களைப் பொறுத்தவரை தற்காலிகமாகவேனும் ஒரு மீட்சியாகக் காணப்படுவதை இங்கு சுட்டிக்காட்டவேண்டும்.

இலங்கைத் தீவைப் பொறுத்த வரை இங்கு லிபரல் ஜனநாயகத்தை ஸ்தாபிப்பது என்பது இப்போதுள்ள அரசாங்கத்தை மாற்றுவதுதான்.(சுநபiஅந ஊhயபெந) ஆனால், வெற்றிவாதத்திற்குத் தலைமை தாங்கும் ஒரு அரசாங்கத்தை தேர்தல் வழிமுறைகளின் மூலம் மாற்றுவது மிகக் கடினமானது. எவ்வளவுக்கெவ்வளவு மேற்கு நாடுகள் இந்த அரசாங்கத்தை நெருக்குமோ அவ்வளவுக்கவ்வளவு சாதாரண சிங்கள் மக்கள் இந்த அரசாங்கத்தை நெருங்கிச் செல்வார்கள். எனவே, தேர்தல் வழி முறைகளின் மூலம் இந்த அரசாங்கத்தை மாற்றியமைத்து ஒபபீட்டளவில் லிபரல் ஜனநாயகத் தன்மை மிக்க மற்றொரு அரசாங்கத்தைப் பதவிக்குக் கொண்டு வருவது என்பது சிரமசாத்தியமானதே.

மேலும் அப்படியொரு லிபரல் ஜனநாயக பண்பு அதிகமுடைய அரசாங்கம் பதவிக்கு வருமிடத்து அல்லது இப்போதுள்ள அரசாங்கம் மேற்கிற்கு குறிப்பிடத்தக்க அளவுக்கு வளைந்து கொடுத்து தன்னைச் சுதாகரித்துக்கொள்ளுமிடத்து அந்த லிபரல் ஜனநாயகப் பண்புமிக்க அரசாங்கத்தால் வழங்கப்படும் அரைகுறைத் தீர்வு ஒன்றோடு ஈழத்தமிழர்கள் திருப்திப்படவேண்டியிருக்கும். அதாவது மேற்கிற்கு இணக்கமான ஒரு அரசாங்கம் ஈழத்தமிழர்களிற்குத் தரக்கூடிய எந்தவொரு தீர்வையும் மேற்கும் ஆதரிக்கும். அத்தீர்வுடன் திருப்திப்படுமாறு தமிழர்களை நிர்ப்பந்திக்கும்.

எனவே, உலகம் முழுவதும் லிபரல் ஜனநாயகத்தைப் பரப்பும் மேற்கத்தைய வியூகத்தைப் பொறுத்த வரை அதில் ஈழத்தமிழர்களிற்கு அனுகூலங்களும் உண்டு. பிரதிகூலங்களும் உண்டு. தமது அரசியலின் அகஜனநாயகத்தை இயன்றளவுக்கு அனைத்துலகக் கவர்ச்சி மிக்கதாகக் கட்டியெழுப்புவதன் மூலம் ஈழத்தமிழர்கள் மேற்கின் வியூகத்தை வெற்றிகரமாகக் கையாளக் கூடிய ராஜிய வெளியும் அதிகரிக்கும்.

இத்தகைய பொருள்படக்கூறின் ஈழத்தமிழர்கள் தமது நிகழ்ச்சி நிரலிற்கும் அனைத்துலக நிகழ்ச்சி நிரலுக்கும் இடையில் பொதுவான சமநிலைப் புள்ளிகளைக் கண்டுபிடிக்கக் கூடிய வாய்ப்பெனப்படுவது முதலாவது தடத்தை விடவும் இரண்டாவது தடத்தில் அதிகமுள்ளது. தமிழ்த் தேசியத்தின் ஜனநாயக இதயம் எந்தளவுக்குப் பலப்படுகிறதோ அந்தளவுக்கு அது அனைத்துலகக் கவர்ச்சி மிக்கதாகவும் மாறும்.

மேற்படி முதலிரு தடங்களும் அனைத்துலகப் பரிமாணம் கொண்டவை. பல நாடுகளின் மிகச் சிக்கலான ராஜிய நலன்களோடு சம்பந்தப்பட்டவை. ஆனால், மூன்றாவது தடம் அத்தகையது அல்ல. அது முழுக்க முழுக்க உள்நாட்டுப் பரிமாணம் உடையது. முன்னைய இரு தடங்களோடும் ஒப்பிடுகையில் அதிகம் உணர்ச்சிகரமானது.

இந்தியாவிலும் தமிழ் டயஸ்பொறாவிலும் உள்ள தமிழ் வாக்காளர்களை அந்தந்த நாடுகளின் அரசாங்கங்கள் கையாள்வதற்குரிய தடம் இது. எனவே, இது அதிகமதிகம் உள்நாட்டுத் தன்மை மிக்கது. கொமென் வெல்த் மாநாட்டில் கலந்துகொள்வதில்லை என்று கனடா எடுத்த முடிவும் இதில் கலந்துகொண்டு இலங்கை அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலைக் குழப்புவது என்று பிரித்தானியா எடுத்த முடிவும் இத்தடத்திற்குரியவைதான். அதுபோலவே இந்தியப் பிரதமரும் மொறிசியஷ் பிரதமரும் எடுத்த முடிவுகளும் இத்தடத்தின் பாற்பட்டவைதான். அதாவது, தாயகத்திற்கு வெளியே வாழும் தமிழ்ச் சமுகங்களின் பேரம் பேசும் சக்தியை மேற்படி முடிவுகள் வெளிக்காட்டின. அதேசமயம், அவுஸ்ரேலியா விலகலானதொரு முடிவை எடுத்ததையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

கனேடியப் பிரதமர் மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை. அதேசமயம், அவருடைய பிரதிநிதியாகக் கலந்துகொண்டவர் ஆனையிறவில் தனியாளாக அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றிருக்கிறார். இவையெல்லாம் கனடாவில உள்ள சக்திமிக்க தமிழ் டயஸ்பொறாவிற்குள் இருக்கக்கூடிய வாக்கு வங்கியை திருப்திப்படுத்தக் கூடியவை.

அதுபோலவே, தமிழ்நாட்டில் உள்ள வாக்கு வங்கியைப் பகைக்க அஞ்சியே மன்மோகன்சிங் மாநாட்டைப் புறக்கணித்தார். உண்மையில் கொமென் வெல்த் மாநாடு பொறுத்து இந்தியாவுக்கு ஒரு கூட்டுப் பொறுப்பு இருந்தது. அம்மாநாட்டை நடாத்துவதற்கு ஒத்துழைப்புத் தருவதென்றல் இலங்கை அரசாங்கம் வடமாகாண சபைத் தேர்தலை நடாத்த வேண்டும் என்று இந்தியா ஒரு முன் நிபந்தனை விதித்தாக ஒரு செய்தி உண்டு. எனவே, இந்தியாவுக்கு வாக்களித்தபடி, இலங்கை அரசாங்கம் வடமாகாண சபையை உருவாக்கிக் காட்டிவிடடது. இதன்படி இலங்கை அரசாங்கத்திற்கு வாக்களித்ததன் பிரகாரம் இந்தியா மாநாட்டில் கலந்துகொண்டிருந்திருக்க வேண்டும். ஆனால், வருமாண்டில் தேர்தல் நடக்கவிருக்குமொரு பின்னணியில், இந்திய மத்திய அரசாங்கம் தமிழ் நாட்டின் உணர்ச்சிகளைப் புறக்கணித்துவிட்டு ராஜியக் கடப்பாடுகளை நிறைவேற்ற முடியாது போயிற்று.

கனேடியப் பிரதமரும், இந்தியப் பிரதமரும் மொறிஷியஸ் பிரதமரும் வராமல் விட்டதன் மூலம் இலங்கை அரசாங்கத்திற்குக் கொடுத்து அழுத்தத்தைவிடக் கூடுதலான ஒரு அழுத்தத்தை பிரிட்டிஷ் பிரதமர் இங்கு வந்ததின் மூலம் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்.

கமரூன் மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்றே எதிர்க்கட்சியும், தமிழ் டயஸ்பொறாவும் கேட்டிருந்தன. இங்கு வருவதற்கு முன்பு தமிழ் டயஸ்பொறாப் பிரதிநிதிகளை அவர் சந்தித்தபோதும் இது கேட்கப்பட்டது. ஆனால், கனடா, இந்தியாவைப் போல பிரிட்டன் முடிவுகளை எடுக்க முடியாது என்று அதன் முடிவுகளை நியாயப்படுத்துவோர் கூறுகிறார்கள். கொமென் வெல்த்தின் மையநாடு என்ற ரீதியில் பிரிட்டன் அதைப் புறக்கணிக்க முடியாது என்றுமவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

1115-Sri-Lanka-Commonwealth-Cameron_full_600எனவே, லண்டனில் உள்ள சக்திமிக்க தமிழ் டயஸ்பொறாவின் வேண்டுகோளை மீறி இலஙகைக்கு வருவது என்று முடிவெடுத்த கமரூன் இங்கு வைத்து தமிழ் டயஸ்பொறாவின் இதயத்தைக் கவரும் விதத்தில் அல்லது அவரை விமர்சிப்பவர்கள் கூறுவது போல பிரிட்டனிலுள்ள சுமார் மூன்று இலட்சம் தமிழர்களைக் கொண்ட தமிழ் டயஸ்பொறாவிற்குள் உள்ள வாக்காளர்களைக் கவர்வதற்காக. இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகித்துவிட்டுச் சென்றிருக்கிறார்..

இப்படிப் பார்த்தால் கமரூனின் இலங்கை விஜயத்தின்போது நடந்தவை அநேகமானவை சக்திமிக்க தமிழ் டயஸ்பொறாவின் உழைப்பிற்குக் கிடைத்த மறைமுக வெற்றிதான். பிரிட்டனில் உள்ள பலமான சீக்கிய சமூகத்தின் வாக்குகளைக் கவர்வதற்காக அவர் இவ்வாண்டு பொற்கோயிலுக்கு விஜயம் செய்ததைப் போலவே இங்கு யாழ்ப்பாணத்திற்கும் வந்துபோயுள்ளார்.

பொதுவாக அவரைப் போன்ற பிரமுகர்களின் விஜயங்களின்போது அவர்களுடைய நிகழ்ச்சி நிரலை அவர்களுடைய நாட்டின் தூதரகமும் விஜயம் செய்யப்படும் நாட்டின் வெளிவிவகார அமைச்சும் சில சமயங்களில் பாதுகாப்பு அமைச்சும் சேர்ந்து முடிவெடுப்பதுண்டு. கமரூன் யாழப்பாணத்தில் மக்களைச் சந்திப்பதைத் தடுக்கவேண்டும் என்று அரசாங்கம் திட்டமிட்டிருக்க வாய்ப்புண்டு. முத்தவெளியில் வந்திறங்கிய ஷெலிகொப்டரில் அவர் வருகிறார் என்றே அங்கு கூடியிருந்த மக்கள் முதலில் நம்பினார்கள். ஆனால், அதில் வந்தது மீடியாக்கார்களே. சில நாட்களுக்கு முன்பு புகையிரதம் மூலம் வந்து இடையில் நடந்த ஆர்ப்பாட்டங்களால் பயணத்தைத் தொடர முடியாது திரும்பிச் சென்ற சனல் நாலைச் சேர்ந்தவர்களும் உள்ளடக்கலாக மீடியாக்காரர்கள் கமரூனோடு சேர்ந்து யாழ்ப்பாணத்திற்கு வரக்கூடியதாயிருந்தது. அவர்கள் வந்து சேர்ந்ததும் கமரூனிற்காகக் காத்திருந்த மக்கள் தமது கண்ணீரால் அவர்களைக் கரையச் செய்துவிட்டார்கள். தேற்றப்படவியலாச் சனங்களின் துக்கம் வந்த மீடியாக்காரரையும் தொற்றிக்கொண்டுவிட்டது. அதிலொருவர் சனங்களோடு சேர்ந்து அழுமளவுக்கு நிலைமை உணர்ச்சிகரமாக இருந்தது. இது அன்றிரவே அனைத்துலக மீடியாப் பரப்பில் குறிப்பாக பிரிட்டிஷ் மீடியாப் பரப்பில் யாரும் எதிர்பாராத உணர்ச்சிகரமான விளைவுகளை ஏற்படுத்தியது.

அந்த இடத்தில் கமரூன் வந்திருந்தால் அப்படியேதும் நடந்திருக்குமா என்று ஒரு கேள்வியும் உண்டு. அவர் நூலக மேல்மாடியில் கூட்டமைப்புத் தலைவர்களுடன் நின்றபடி நடந்தவற்றைப் பார்த்திருக்கிறார். அவர் நினைத்திருந்தால் மாடியிலிருந்து இறங்கி தரைக்கு வந்திருக்கலாம். அல்லது கூட்டமைப்புத் தலைவர்கள் நினைத்திருந்தால் கமரூனை தரைக்கு வருமாறு தூண்டியிருக்கலாம். ஆனாலது நடக்கவில்லை. ஒரு அரசியல்வாதியான கமருன் நிலைமைகளை இதயத்தால் விளங்கிக் கொள்வார் என்று எதிர்பார்க்க முடியாது. அரசியல்வாதிகளின் இதயம் அநேகமாகக் கல்லால் ஆனது. தேற்றப்படவியலாத் தாய்மாரின் துக்கம் அதைக் கரைப்பதில்லை. ஆனால் அன்னையரின் கண்ணீரை வாக்குகளாக மாற்றும் ரசவாதம் அவர்களுக்குத் தெரியும். இதில் கமரூனும் விதிவிலக்கல்ல. கூட்டமைப்பும் விதிவிலக்கல்ல. அரசியல்வாதியான கமரூனை விடவும் சாட்சிகளான மீடியாக்கார்கள் சனங்களின் கண்ணீரிற்குக் கிட்டவாக வந்துவிட்டார்கள். எனவே, அந்த இடத்தில் மீடியாக்கார்கள் வந்ததே கிளைமாக்ஸ் எனலாம்.

மீடியாக் கார்களை வான்வழியாகக் கொண்டுவந்து இறக்கிச் சனங்களைத் திசை திருப்பிவிட்டு கமரூனைத் தரை வழியாக வாகனத்தில் மறைவாகக் கொண்டு வந்தது எதிர்பாராத பின்னுதைப்புக்களைக் கொடுத்துவிட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் கமரூனைச் சந்திப்பதைத் தடுப்பதற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளும் ஏற்கனவே, நன்கு திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால், சனங்களைத் திசை திருப்ப எடுக்கப்பட்ட முயற்சி சனங்களுக்கே சாதகமாக மாறியது. அது சனங்களுடைய கவன ஈர்ப்புப் போராட்டத்தை எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகமாக உலக அளவில் பிரசித்தப்படுத்திவிட்டது. கொமென் வெல்த்தை நோக்கிக் குவிந்திருந்த கவனம் சடுதியாக யாழ்ப்பாணத்தை நோக்கித் திரும்பியது. கமருனைப் பொறுத்த வரை அது மிகப் பெரிய வெற்றி. சக்தி மிக்க தமிழ் டயஸ்பொறாவின் இதயத்தில் அவரால் இடம்பிடிக்க முடியும்.
எனவே, மேற்கண்டவைகளைத் தொகுத்துப் பார்த்தால் ஒன்று தெரியவரும். அதாவது, மேற்சொன்ன மூன்று தடங்களிலும் மூன்றாவதே ஈழத்தமிழர்களுக்கு அதிகம் வாய்ப்பான ராஜியப் பரப்புக்களைத் திறக்குமொன்றாகக் காணப்படுகிறது. தமிழ் டயஸ்பொறாவும், தமிழகமும் ஈழத் தமிழர்களின் இருபெரும் பின் தளங்களாகக் காணப்படுகின்றன. இவையிரண்டும் கொந்தளிக்கும்போது ஏற்படும் விளைவுகள் நாடுகளின் வெளியுறவுக் கொள்கைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு வளர்ச்சிக்குப் போகும்போதே தமிழ் அரசியலின் அடுத்த கட்டம் வெளிக்கும். தாயகத்துக்கு வெளியில் வசிக்கும் தமிழர்களின் பேரம்பேசும் சக்தி எதுவென்பது கொமென் வெல்த் மாநாட்டில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதில் அரசாங்கத்திற்கு மட்டுமல்ல, கூட்டமைப்புக்கு மிகக் கூரான ஒரு செய்தியிருக்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *