போர்க் காலத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் மற்றும் சொத்திழப்புகள் ஆகியவை குறித்த ஒரு கணக்கெடுப்பு கடந்த வியாழக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஒரு சிறப்புச் செயலணிக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
வரும் ஜெனிவாக் கூட்டத் தொடரை முன்னிட்டு அரசாங்கம் செய்துவரும் மற்றொரு வீட்டு வேலையே இது. மூன்று தசாப்தங்களுக்கும் மேலான போரில் ஏற்பட்ட இழப்பு விபரங்களைக் குறித்து திருத்தமானதும், விஞ்ஞானபூர்வமானதும் அனைத்துலகப் பெறுமனங்களிற்கு அமைவானதுமாகிய புள்ளி விபரங்களைக் காட்டவேண்டிய ஒரு தேவை அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருக்கின்றது.
உண்மையை அங்கீகரிப்பதிலிருந்தே நல்லிணக்கம் ஆரம்பமாகின்றது. புள்ளி விபரங்கள் உண்மையின் தவிர்க்கப்படவியலாத பகுதியாகக் காணப்படுகின்றன. எனவே, அனைத்துலகப் பெறுமானங்களுக்கு அமைவான புள்ளி விபரங்களைத் திரட்டுவது என்பது நல்லிணக்கத்துக்கான ஒரு இன்றியமையாத தொடக்கப் புள்ளி ஆகும். இந்த அடிப்படையில் தான் அனைத்துலக சமூகம் அதிகபட்சம் நம்பகத் தன்மைமிக்க புள்ளி விபரங்களைக் கேட்கிறது. இக்கோரிக்கையை எதிர்க்கொண்டு நல்லிணக்க ஆணைக்குழு வழங்கிய பரிந்துரைக்கு அமைவாக மேற்படி சிறப்புச் செயலணிக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
ஹேபர்ட் மார்க்யூஸ் கூறியதுபோல புள்ளிவிபரங்கள் குருதி சிந்துவதில்லைத்தான். ஆனால், ஈழப்போரில் புள்ளிவிபரங்களே அரசியலாகிவிட்டன. அரசியல் நீக்கம் செய்யப்பட்ட புள்ளி விபரங்களைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாத ஒரு குரூரமான போர்ப் பரப்பு இது. இதன் உச்சமே நாலாங்கட்ட ஈழப்போரின் இறுதியில் ஏற்பட்ட உயிரிழப்புக் குறித்து சரியான எண்ணிக்கையைக் கண்டுபிடிக்க முடியாதிருப்பதும் ஆகும். இதைத்தான் பிரான்சிஸ்; ஹரிஸன் ”இப்பொழுதும் இறந்தவர்களை எண்ணிக் கொண்டிருப்பது’ என்று வர்ணித்திருக்கின்றார். இப்போக்கின் ஆகப் பிந்திய ஒரு செயற்பாடே மேற்படி கணக்கெடுப்பு ஆகும்.
இது கூட ஒரு அரசியல்தான். ஏனெனில், ஜெனிவாவை நோக்கிச் செய்யப்படும் ஒரு வீட்டு வேலை இது. புள்ளி விபரங்களைச் சிதைப்பது, திரிப்பது, மிகைப்படுத்துவது, மறைப்பது என்று வந்த ஒரு பாரம்பரியத்தில் இப்பொழுது அனைத்துலக சமூகத்தைத் திருப்திப்படுத்தும் விதத்தில் ஒரு கணக்கெடுப்பு நடாத்தப்படுகிறது. எனவே, இங்கேயும் அரசியல் நீக்கம் செய்யப்பட்ட தூய புள்ளிவிபரங்களைப் பெறுவது கடினமாகவே இருக்கும்.
இலங்கைத் தீவில் மட்டுமல்ல, உலகம் பூராகவுமே அரசியல் நீக்கம் செய்யப்பட்ட தூய புள்ளிவிபரங்களைப் பெறுவதில் நிறையச் சவால்கள் உண்டு. எனினும் தகவல் புரட்சியின் பின்னணியில், குறிப்பாக, விக்கிலீக்ஸ், ஸ்னோடோன் போன்ற ஆகப் பிந்திய வளர்ச்சிகளின் பின்னணியில் உண்மைக்கு ஆகக் கூடிய பட்சம் நெருக்கமாக வரும் புள்ளிவிபரங்களைத் தேடிச் செல்லும் ஒரு போக்கு பலமடைந்து வருகிறது. இப்புதிய ஆனுபவங்களையும் உள்வாங்கியே ஈழப்போரின் இழப்பு விபரங்கள் பற்றிய புள்ளிவிபரங்களைத் திரட்ட முற்பட வேண்டும்.
ஈழப்போரின் புள்ளி விபரப் பாரம்பரியம் என்பது தொடக்கத்திலிருந்தே பக்கச் சாய்வானதுதான். ஆதாவது, அரசியல் மயப்பட்டதுதான். போரில் சம்பந்தப்பட்ட தரப்புகளின் பிரசாரத்தின் ஒரு பகுதியாகவே அங்கு புள்ளி விபரங்கள் பயன்படுத்தப்பட்டன. இதில் சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்பிற்கும் பொறுப்பு உண்டு. அரசுடைய தரப்பிற்கே இதில் கூடுதல் பொறுப்பு உண்டு என்பதன் அடிப்படையில் கூறின், இப்புள்ளி விபரப் பாரம்பரியத்தை ”லங்கா புவத் நோய்க்கூறு’ எனலாம். முதலாம் ஈழப் போர்க் காலத்தில் அதிகம் பிரசித்தமாகிய ஒரு பெயர் லங்கா புவத். போர்க்களம் பற்றிய அதன் புள்ளி விபரங்களைத் தமிழர்கள் அநேகமாக நம்பியதேயில்லை.
லங்கா புவத் தரும் தகவல்களின் அடிப்படையில் கூட்டிக் கழித்துப் பார்த்தால் தமிழர்களின் மொத்த சனத் தொகையில் கால்வாசிக்கு மேல் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்று வேடிக்கையாகக் கூறப்படுவதுண்டு. இது போலவே தமிழ் இயக்கங்கள் தரும் புள்ளி விபரங்களின் அடிப்படையில் கொல்லப்பட்ட படை வீரர்களின் எண்ணிக்கையைக் கூட்டிப் பார்த்தால் சிறிலங்காப் படைத் தரப்பில் அரைவாசிக்கு மேல் அழிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் வேடிக்கையாகக் கூறப்படுவதுண்டு. அதாவது, அரசாங்கமும் சரி, தமிழ் இயக்கங்களும் சரி, ஏன் இந்தியாவும் கூடத்தான் தமது பிரசாரத் தேவைகளுக்காகச் சேத விபரங்களைத் திரித்துக் கூறிய ஒரு போர்ப் பரப்பு அது.
முதலாம் கட்ட ஈழப்போரின்போது குறிப்பாக, இந்திய – இலங்கை உடன்படிக்கை வரையிலும் இந்திய ஊடகங்கள் தமிழர்களுக்குச் சார்பாகப் புள்ளி விபரங்களைத் திரித்துக் கூறின. அதே ஊடகங்கள் உடன்படிக்கைக்குப் பின் தலைகீழாகச் செயற்பட்டன. அதாவது, தமிழர்களிற்கு எதிராக புள்ளிவிபரங்களைத் திரித்தும் கூறின. நேசக் கரங்கள், அன்பு மாலை போன்ற நிகழ்ச்சிகளையும் இங்கு சுட்டிக்காட்டலாம். இத்தகையதொரு புள்ளி விபரவியற் சூழலில்தான் தமிழர்கள் அதிகமதிகம் பி.பி.சி.தமிழோசை மற்றும் வெரித்தாஸ் வானொலிகளைத் தேடிச் சென்றார்கள்.
இதில் எல்லாருடைய நோக்கமும் ஒன்றுதான். அதாவது, தமது பிரசாரத் தேவைகளுக்காக உண்மையைப் பலியிடுவது. இதனால், புள்ளிவிபரங்கள் ஒன்றில் தணிக்கை செய்யப்பட்டன அல்லது மிகைப்படுத்தப்பட்டன. இப்படிப் பார்த்தால் ஈழப்போரில் சம்பந்தப்பட்ட எல்லாருமே புள்ளி விபரங்களோடு விளையாடியவர்கள்தான்.
எனவே, லங்கா புவத் நோய்க்கூறு எனப்படுவது அரசாங்கத்தை மட்டும் குறிக்கவில்லை. அது இந்தியாவுக்கும் தமிழ் இயக்கங்கள் எல்லாவற்றுக்கும் பொருந்தும். இயக்கங்களிற்குள் உள் முரண்பாடுகள் தோன்றிய போது கொல்லப்பட்டவர்கள் அல்லது காணாமற்போனவர்களை அந்நாட்களில் ”டம்ப்’ பண்ணப்பட்டவர்கள் என்று கூறப்படுவதுண்டு. சில இயக்கங்களில் இத்தொழிலில் தேர்ச்சி பெற்றவர்களின் பெயருக்கு முன் ”டம்பிங்’ என்ற சொல் ஒரு அடைமொழியாகப் பயன்படுத்தப்ட்டது. இயக்கங்களுக்குள் தோன்றிய அக முரண்பாடுகளின் போதும் இயக்கங்களிற்கிடையில் தோன்றிய சகோதரச் சண்டைகளின் போதும் ”டம்ப்’ பண்ணப்பட்டவர்கள் பற்றி புள்ளி விபரம் இதுவரையிலும் தொகுக்கப்படவேயில்லை. தமிழர்கள், தமிழர்களை ‘டம்ப்’ பண்ணிய கணக்கு துண்டு துண்டாகத்தான் பதிவிலிருக்கிறது. இது தொடர்பில் முழுமையான ஒரு சித்திரம் என்றைக்குமே கிடைக்கப்போவதில்லை.
பொதுவாக எல்லா இயக்கங்களிடமும் தியாகிகள் பட்டியல் ஒப்பீட்டளவிற் ஒழுங்காக உண்டு. ஆனால், துரோகிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுக் கொல்லப்பட்டவர்களின் பட்டியலை யாரிடம் கேட்பது? கொன்றவர்களைக் கொன்றவனும், கொல்லப்பட்டுவிட்ட ஓரு அரசியலில் திருத்தமான புள்ளி விபரங்களைப் பெறுவது கடினமானதே. அதிருப்தியாளர்களிற்கூடாக வெளிப்படுத்தப்பட்ட உதிரியான தகவல்களைத் தவிர எந்த ஒரு இயக்கமும் உத்தியோகபூர்வமாக இப்படிப்பட்ட புள்ளிவிபரங்களை வெளியிட்டதில்லை.
இத்தகையதொரு புள்ளி விபரவியற் பாரம்பரியத்தின் பின்னணியிற்தான் வன்னியில் நாலாங்கட்ட ஈழப்போரின் போது சிக்குண்ட பொதுசனங்கள் தொடர்பிலும் விஞ்ஞானபூர்வமான புள்ளி விபரங்களைப் பெறுவது இன்று வரை சிரமமாகவுள்ளது. இதில் மிக எளிமையான ஒரு கணிப்பு முறை உண்டு. அதன்படி வன்னியில் கடைசிக் கட்டப் போரின்போது வாழ்ந்த சனங்களின் மொத்தத் தொகையிலிருந்து மே19இற்குப் பின் முகாம்களில் பதிவு செய்யப்பட்ட மொத்த எண்ணிக்கையைக் கழித்தால் அதில் அண்ணளவாக ஒரு புள்ளி விபரம் கிடைக்கும். முகாம்களில் பதியாமலே தப்பிச் சென்ற ஒரு தொகையும் உண்டு. அத்தொகையைக் கருத்திலெடுத்தே மேற்படி புள்ளி விபரம் தோராயமானது என்று கூற வேண்டியுள்ளது.
ஆனால், இங்கேயுள்ள பிரச்சினை என்னவென்றால், வன்னியில் கடைசிக் கட்டப் போரின்போது வாழ்ந்த பொதுசனங்களின் மொத்தத் தொகை தொடர்பிலான புள்ளி விபரங்களின் மீது எழுப்பப்படும் கேள்விகளே.
ஏனெனில், உலக உணவுத் திட்டத்தின்
(WFP) நிவாரணத்தைப் பெறுவதற்காக வன்னியின் குடித்தொகை தொடர்பாக உள்நோக்கமுடைய புள்ளிவிபரங்கள் வழங்கப்பட்டதாக ஒரு பரவலான குற்றச்சாட்டு உண்டு. அதாவது, கூடுதலான நிவாரணத்தைப் பெறுவதற்காக குடித்தொகைப் புள்ளி விபரங்கள் கூட்டிக் காட்டப்பட்டதாக மேற்படி குற்றச்hட்டை முன்வைப்பவர்கள் கூறி வருகின்றார்கள். அரச அலுவலகங்களில் புழக்கத்திலிருந்த அநேகமான புள்ளிவிபரங்கள் இந்த வகைப்பட்டவைதான் என்றுமவர்கள் கூட்டிக்காட்டுகின்றார்கள். இறுதிக் கட்டத்தில் ஏற்பட்ட உயிர்ச் சேதம் பற்றிய புள்ளி விபரக் கணக்கு இங்கிருந்துதான் பிழைக்கத் தொடங்குகின்றது.
இப்படிப் பார்த்தால் திருத்தமான புள்ளி விபரம் எனப்படுவது விடுதலைப்புலிகள் இயக்கத்திடம் மட்டும்தான் இருந்திருக்கும். அந்த இயக்கம் குடும்பத் கார்ட் முறைமை ஒன்றை நடைமுறையில் வைத்திருந்தது. அந்தக் குடும்பக் கார்ட்டோடு தொடர்புடைய தகவுடைய யாராவது வாய் திறந்தால் மட்டுமே மிகத் திருத்தமான ஒரு புள்ளி விபரம் கிடைக்கும்.
நாலாம் கட்ட ஈழப்போர் மூண்டபோது இரண்டு தரப்புமே தேவை கருதிய புள்ளி விபரங்களையே வெளியிட்டன. ஒரு தரப்பு தன்னிடம் சரணடைந்தவர்களின் எண்ணிக்கையில் கூடுதல் கவனம் செலுத்தியது. மற்றத் தரப்பு கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையில் கூடுதல் கவனம் செலுத்தியது. அதாவது, இரண்டு தரப்புமே புள்ளிவிபரங்களைத் தேவை கருதி குறைத்தும், கூட்டியும் கூறின. இதன் இறுதி விளைவாக இறுதிக் கட்டத்தில் பொதுசனங்களிற்கும், விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் ஏற்பட்ட உயிர்ச்சேதம் தொடர்பில் திருத்தமான புள்ளி விபரத்தைத் திரட்டுவது மேலும் கடினமாகியது.
யுத்தம் தொடங்கியபோது அரசாங்கம் வன்னியில் மொத்தம் 70,000 பொதுசனங்களே வாழ்வதாக ஒரு புள்ளிவிபரத்தை வெளியிட்டது. ஆனால், 2013 மே மாதத்திற்கு முன்பு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கிச் சென்ற பொதுசனங்களின் எண்ணிக்கை 70.000விட அதிகமானதாகும். குறிப்பாக, பொக்கணை, மாத்தளன் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஒரு தனியான படை நடவடிக்கையின் போது மட்டும் சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேலான சனங்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை நோக்கிச் சென்றார்கள்.
இது தொடர்பாக அந்நாட்களில் ஆனந்த சங்கரி ஒரு அறிக்கை விட்டிருந்தார். அதில் வன்னியிலிருந்த மொத்த சனத் தொகை மூன்று இலட்சத்திற்கும் அதிகமானது என்றுமவர் குறிப்பிட்டிருந்தார். வன்னியிலிருந்த அரச உயர் அதிகாரிகளிடமிருந்து பெற்ற தகவல்களின் அடிப்படையில்தான் அவர் இவ்வாறு கூறியதாக நம்பப்படுகிறது.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த அரச அலுவலகங்களில் பேணப்பட்ட புள்ளி விபரங்களை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. அதேசமயம், அரசாங்கம் தெரிவித்த புள்ளி விபரங்களோ யதார்த்தத்திற்கு வெகுதூரத்தில் இருந்தன என்பதோடு;, யுத்தத்தின் தொடக்கத்தில் தான் கூறிய புள்ளி விபரங்களை யுத்தத்தின் முடிவில் தானே மறுதலிக்கும் ஒரு நிலை அரசாங்கததிற்கு ஏற்பட்டது. ஆனால், விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு அப்படியொரு நிலை தோன்றவில்லை. ஏனெனில், அந்த இயக்கம் அதன் புள்ளி விபரங்களோடு அரங்கிலிருந்து அகற்றப்பட்டுவிட்டது.
எனவே, இப்பொழுது கூறப்படுபவற்றில் பெரும்பாலானவை அனுமானங்கள்தான். இறுதிக் கட்டத்தில் வன்னி கிழக்கில் தற்காலிக வைத்தியசாலைகளே இயங்கின. அவை எவற்றிலும் பிரேத அறை இருக்கவில்லை. எனவே, பிரேதங்களிற்குப் பதிவுகளும் இருக்கவில்லை. ஆனால், காயக்காரர்களிற்குப் பதிவுகள் இருக்கும் என்று இது தொடர்பான நிபுணர்கள் சிலர் கூறுகின்றார்கள்.
ஏனெனில், காயப்பட்டவர்கள் எதுவிதத்திலாவது சிகிச்சை பெற வேண்டி ஆஸ்பத்திரிகளைத் தேடி வருவார்கள். எனவே, ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றவர்கள் குறிப்பாக, ஐ.சி.ஆர்.சி. மூலம் வன்னிக்கு வெளியே கொண்டு வரப்பட்ட காயக்கார்களிற்குத் திருத்தமான பதிவு இருக்கும். இப்பதிவுகளின் பிரகாரம் காயங்களின் தன்மை மற்றும் பருமன் என்பவற்றின் அடிப்படையில் இறப்பு விகிதம் தொடர்பாக அண்ணளவாகக் கணிக்கும் ஒரு கணிப்பு முறை இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். இது போன்ற சில கணிப்பீட்டு முறைகளிற்கூடாகவே ஐ.நா. தனது அண்ணளவான புள்ளி விபரங்களை வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இங்கேயும் ஒரு கேள்வி உண்டு. யுத்தத்தின் இறுதி நாட்களின்போது ஒரு கட்டத்தில் கப்பற் போக்குவரத்து நிறுத்தப்பட்டுவிட்டது. எனவே, அதன் பின்னரான காயக்காரர்களிற்குப் பதிவு இருந்திருக்காது. பிணங்களிற்கோ அல்லது காயக்காரர்களிற்கோ பதிவு பேணப்படாத அந்நாட்களிற்குரிய புள்ளி விபரங்களை எப்படிக் கணிப்பது?
எனவே, இன்று வரையிலும் கிடைத்திருக்கக் கூடிய எந்தவொரு புள்ளிவிபரமும் ஏதோவொரு விகிதமளவிற்கு அனுமானங்களின் அடிப்படையிலானதுதான். இதனால்தான் அனைத்துலக நியமங்களுக்கு அமைவான அதிகபட்சம் விஞ்ஞான பூர்வமான புள்ளி விபரங்களின் தேவை வற்புறுத்தப்படுகிறது.
அரசாங்கமோ அல்லது தமிழ்த் தரப்போ தனித்தனியாகவோ அல்லது சேர்ந்தோ செயற்பட்டாலும் கூட முழு அளவிற்குத் திருத்தமான புள்ளி விபரங்கள் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். ஒரு மூன்றாவது தரப்பின் தொழில்சார் நிபுணத்துவத்தின் வழிகாட்டல் மற்றும் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படும் ஒரு கணக்கெடுப்பே ஒப்பீட்டளவில் விஞ்ஞானபூர்வமானதாக இருக்கும். அப்படியொரு மூன்றாவது தரப்பின் பிரசன்னம் இருந்தால்தான் திருத்தமான புள்ளி விபரங்களைத் திரட்டத் தேவையான முன் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படும். அதாவது, உண்மையை அச்சமின்றி வெளிப்படுத்தும் அரசியற் சூழல் ஒன்று உறுதி செய்யப்படவேண்டும். அப்பொழுதுதான் புள்ளி விபரங்கள் பேசும். அங்கிருந்துதான் மெய்யான பொருளில் நல்லிணக்கத்தைப் பற்றியும் சிந்திக்கக் கூடியதாயிருக்கும்.
29-11-2013