வடமாகாண சபையை ஒரு அதிகார மையமாகக் கட்டியெழுப்ப முடியுமா?

ஐ.நா.வின் சிறப்புத் தூதுவர் கலாநிதி பியானி வடக்கிற்கு வந்தபோது வடமாகாண சபையின் முதலமைச்சரைக் கண்டுவிட்டே சென்றிருக்கிறார். வடமாகாண சபை உருவாக்கப்பட்ட பின் நாட்டுக்கு வரும் சிறப்புத்தூதுவர்கள் அல்லது வெளிநாட்டுப் பிரதிநிதிகள் அல்லது பன்னாட்டுப் பிரதிநிதிகள் அல்லது வெளிநாட்டுத் தலைவர்கள் போன்றோரில் பெரும்பாலானவர்கள் வடக்கிற்கு வந்து முதலமைச்சரைச் சந்தித்துவிட்டே போகிறார்கள். இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கும் இப்படியாக வரக்கூடும் என்று ஒரு செய்தி அண்மையில் வெளிவந்தது.

இவற்றையெல்லாம் தொகுத்துப் பார்க்கும்போது வடக்கு ஒரு அதிகார மையமாக எழுச்சி பெற்று வருவதாக ஒரு தோற்றம் உருவாகி வருகிறது. குறிப்பாக, அண்மையில் பிரிட்டிஷ் பிரதமர் வடக்கிற்கு வந்தபோது பிரிட்டிஷ் மீடியாக்களும் உட்பட மேற்கத்தைய மீடியாக்கள் வடக்கிற்கு வழங்கிய முக்கியத்துவம் அசாதாரணமானது. இது காரணமாகவே சில விமர்சகர்கள் இலங்கைத் தீவில் இரண்டு அரசியல் மையங்கள் உருவாகியிருப்பதாகச் சுட்டிக்காட்டியுமிருந்தார்கள்.

SJV042613Dஇப்படியாக இலங்கைத் தீவில் இரண்டு அரசியல் மையங்கள் அல்லது அதிகார மையங்கள் காணப்படுவதாகக் கூறப்படுவது இதுதான் முதற்தடவையல்ல. ஏற்கனவே, ஒரு தசாப்த காலத்திற்கு முன்பு ரணில் – பிரபா உடன்படிக்கை உருவாகியபோது இப்படிப்பட்ட கருத்துக்கள் கூறப்பட்டன. குறிப்பாக, வன்னியிலிருந்து வெளிவந்த ஈழநாதம் பத்திரிகையில் இதுபோன்ற கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. அதாவது, இலங்கைத் தீவில் இரண்டு அதிகார மையங்கள் இருப்பது அனைத்துலக சமூத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுவிட்டது என்று கூறப்பட்டது.

ஆனால், அப்பொழுது அப்படிக் கூறியது ஒரு ராஜீய யதார்த்தமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஏனெனில், அப்பொழுது விடுதலைப்புலிகள் இயக்கத்திடம் படை பலமும், கட்டுப்பாட்டுப் பிரதேசமும் இருந்தன. அக்கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அவர்கள் ஒரு அரை அரசை நிர்வாகித்தும் வந்தார்கள். அந்த அடிப்படையில் அப்பொழுது இலங்கைத் தீவில் இரண்டு அதிகார மையங்கள் இருக்கின்றன என்று கூறியது ஒரு படைத்துறை அரசியல் மற்றும் ராஜிய நடைமுறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், இப்பொழுது நிலைமை அப்படியா?

நிச்சயமாக இல்லை. ஏனெனில், விடுதலைப்புலிகள் கட்டியெழுப்பி வைத்திருந்த அதிகார மையம் எனப்படுவது ஒரு இராணுவ யதார்த்தம். அது அவர்களுடைய படை பலத்தினால் கட்டியெழுப்ப்பட்டது. சமாதான காலத்தில் மேற்கு நாடுகள் அதை ஓரளவுக்கு அங்கீகரித்திருந்தன. அது ஒரு தூலமான அதிகார மையம்.

ஆனால், இப்பொழுது வடமாகாண சபையின் நிலைமை அப்படிப்பட்டது அல்ல. இது ஒரு விதத்தில் அரூபமான ஒரு தோற்றப்பாடே. கூட்டமைப்புக்கு மக்கள் வழங்கிய மக்கள் ஆணையொன்றே அதற்குள்ள பிரதான பேரம் பேசும் சக்தியாகும். அந்தப் பேரம் பேசும் சக்தி காரணமாக அது அனைத்துலக சமூகத்தின் அங்கீகாரத்தை விடுதலைப்புலிகளை விடவும் கூடுதலான அளவுக்கு வென்றெடுக்கக் கூடியதாயிருக்கிறது.

விடுதலைப்புலிகளிடம் ஒரு தூலமான அதிகார மையம் இருந்தது. ஆனால், அதற்கு அனைத்துலக சமூகத்தில் முழு அளவிற்கு அங்கீகாரம் இருக்கவில்லை. மேற்கின் அனுசரணையுடனான சமாதானத்தை ஏற்றுக்கொண்டது வரை அந்த அதிகார மையத்திற்கு மேற்கின் அங்கீகாரம் ஓரளவுக்குக் கிடைத்தது. ஆனால், அது வரையறுக்கப்பட்ட ஒரு அங்கீகாரம்தான். அதாவது, அந்த இயக்கத்தின் மீதான தடைகளை அகற்றாமலே தரப்பட்ட ஓர் அங்கீகாரம். இன்னொரு விதமாகச் சொன்னால் அது நிபந்தனைக்குட்பட்ட அங்கீகாரம் எனலாம்.

ஆனால், கூட்டமைப்பு ஜனநாயக ரீதியாக தெரிந்தெடுக்கப்பட்டிருக்கிறது. அதற்குக் கிடைத்த மிகப் பெரிய மக்கள் ஆணைதான் அதன் அடிப்படைப் பலம்.அது காரணமாக அதற்குக் கிடைத்துவரும் அனைத்துலக அங்கீகாரம் விடுதலைப்புலிகளுக்குக் கிடைத்ததை விட அதிகமானது. அதேசமயம் மாகாண சபையோ கோறையானது. மேற்கு நாடுகளும், இந்தியாவும் அதற்கு செயற்கைச் சுவாசம் வழங்கி அதற்கொரு மிகைத்தோற்றத்தை உருவாக்கி வருகின்றன.

ஒருபுறம் முதலமைச்சர் தனக்கு இல்லாத அதிகாரங்களைப் பற்றியும் அதிகாரிகளின் விசுவாசமின்மை பற்றியும் அரசாங்கத்தின் கபடத்தனமான அணுகுமுறைகள் பற்றியும் முறைப்பாடுகளைப் பட்டியலிடத் தொடங்கிவிட்டார். ஆனால், இன்னொருபுறம் மேற்கு நாடுகளும், இந்தியாவும் அவரை தவிர்க்கப்படவியலாத ஒரு மையமாக கட்டியெழுப்ப முற்படுகின்றன. இல்லாத அதிகாரங்களோடு வடமாகாண சபையானது ஒரு மையம்போல உருப்பெருக்கப்படுகிறது. இது ஒரு ராஜதந்திர பில்ட்அப் தான்.

வரும் மார்ச் மாதம் வரையிலும் வடமாகாண சபையை உருட்டிச் செல்ல வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் அரசாங்கத்திற்கு உண்டு. இந்த நிர்ப்பந்தத்தை ஒரு பிடியாகப் பற்றிக்கொண்டு வடமாகாண சபைக்கு ஒரு ராஜீயக் கவசத்தை கட்டியெழுப்ப மேற்கு நாடுகளும் இந்தியாவும் முற்படுகின்றன. இது காரணமாக வடக்கில் ஒரு அதிகார மையம் உருவாகியிருப்பதாக ஒரு தோற்றம் ஏற்பட்டு வருகிறது.

உண்மையில் அது ஒரு தோற்றம்தான். நடைமுறையில் அது ஒரு முழுஅளவிலான அதிகார மையமாக எழுச்சி பெறுவது கடினமானது. அதற்குப் பின்வரும் காரணங்கள் உண்டு.

முதலாவது, மாகாணக் கட்டமைப்பு கோறையானது அதிகாரமற்றது.

இரண்டாவது, கூட்டமைப்பு ஒருவித அரை நல்லிணக்க அரசியலிற்குரிய அரங்காகவே மாகாண சபையைப் பார்க்கிறது. அரை நல்லிணக்க அரசியலைப் பொறுத்த வரை மாகாண சபையை ஒரு முழு நிறைவான அதிகாரமையமாகக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை இல்லை. கொழும்பில் உள்ள முதன்மை மையத்தின் உப மையங்களில் ஒன்றாக இருந்தாலே போதும்.

மூன்றாவது, கூட்டமைப்பின் உயர்பீடம் கொழும்பு மையத்திலிருந்து சிந்திக்கின்றது. இப்படிக் கொழும்பு மையத்திலிருந்து சிந்திக்கும் தலைமைகள் வடக்கில் மற்றொரு அதிகார மையத்தை கட்டியெழுப்ப முடியுமா?

நாலாவது, வடமாகாண சபைக்கு அதன் வல்லமைக்கு மிஞ்சிய ராஜீய முக்கியத்துவத்தை வழங்கி அதை ஒரு நெம்பு கோலாகக் கையாண்டு அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க மேற்கும், இந்தியாவும் முற்படுகின்றன. அதாவது, அரசாங்கத்தை முறிக்காமல் வளைக்க முற்படும் ஓர் அணுகுமுறையின் ஒரு பகுதியே இது. இதை இன்னும் கூராகச் சொன்னால், இந்தியா மற்றும் மேற்கு நாடுகளின் வியூகத்தின் ஒரு பகுதியாக வடமாகாண சபை காணப்படுகிறது.

எனவே, இதில் மேற்கு மற்றும் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்குள் தமிழ் மக்கள் தமது நிரலைக் கொண்டுபோய்ப் பொருத்தினால்தான் மேற்கினாலும், இந்தியாவாலும் கையாளப்படுவதற்குப் பதிலாக இயன்றளவுக்கு மேற்கையும் இந்தியாவையும் வெற்றிகரமாகக் கையாள முயலலாம்.

ஆனால், அதற்கொரு அரசியல் தரிசனமும் அரசியல் திடசித்தமும் வேண்டும். தமது இறுதி இலக்கு எது என்பதில் மிகத்தெளிவாயிருக்க வேண்டும். அந்த இலக்கை அடைவதற்குரிய முலோபாயம் எதுவென்பதிலும் தெளிவாயிருக்க வேண்டும். ஆனால், கூட்டமைப்பின் கடந்த நான்காண்டுகளுக்கு மேலான அரசியலை வைத்துப் பார்த்தால் அப்படிப்பட்ட தெளிவான அரசியல் வழி வரைபடம் எதுவும் அவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை.

எனவே, அவர்களிடம் எதிர்காலத்தைக் குறித்த ஒரு தெளிவான வழி வரைபடம் இல்லையென்றால் அவர்களால் வடக்கையோ அல்லது கிழக்கையோ அல்லது வடக்கையும், கிழக்கையும் இணைத்தோ முழுஅளவிலான ஒரு அரசியல் மையமாக அல்லது அதிகார மையமாகக் கட்டியெழுப்ப முடியாது.

ஒரு நிலத்தை மையமாகக்கொண்டு அல்லது அரசியற் செயற்பாட்டுக் களத்தை மையமாகக் கொண்டு ஒரு அரசியல் மையத்தை அல்லது அதிகார மையத்தைக் கட்டியெழுப்புவதென்றால் முதலில் தலைமைத்துவம் அந்த மையத்தில் வேர் கொண்டெழ வேண்டும். அப்படி அந்த நிலத்தை மையமாகக் கொண்டு சிந்திக்கும் ஒரு அமைப்பே அந்த நிலத்தின் மீது நிர்ணயகரமான மாற்றங்களை ஏற்படுத்த முடியும். ஈழத்தமிழ் வரலாற்றில் இதற்கு துலக்கமான இரண்டு முன்னுதாரணங்கள் உண்டு. முதலாவது அமெரிக்க மிஷன் என்றழைக்கப்பட்ட தென்னிந்தியத் திருச்சபை. இரண்டாவது விடுதலைப்புலிகள் இயக்கம்.

அமெரிக்க மிஷனின் தலைமை ஆதீனம் வட்டுக்கோட்டையில் இருந்தது. ஆனால், கத்தோலிக்கத் திருச்சபையின் உயர் பீடம் வற்றிக்கானில் இருந்தது. அங்கிலிக்கன் திருச்சபையின் உயர் பீடம் கன்ரபரியில் இருந்தது. ஏனைய புரட்டஸ்தாந்துத் திருச்சபைகளின் உயர் பீடங்கள் ஐரோப்பிய நாடுகளில் இருந்தன. யாழ்ப்பாணத்தில் தனது தலைமை ஆதீனத்தை கொண்டிருந்த அமெரிக்கன் மிஷனே நவீன யாழ்ப்பாணத்தை உருவாக்கிய காரணிகளில் முதன்மையானது. ஏனைய திருச்சபைகள் தமது மையங்களையும், பாடசாலைகளையும் கேந்திரமான இடங்களில் கட்டியெழுப்பின. ஆனால், அமெரிக்கன் மிஷனோ வட்டுக்கோட்டையில் வேர்விட்டெழுந்து உட் கிராமங்களை நோக்கிக் கிளை பரப்பலாயிற்று.

தென் ஆசியாவின் முதலாவது பெண்கள் பாடசாலையை அது உடுவிலில் கட்டியெழுப்பியது. தமிழின் முதலாவது பத்திரிகையான உதய தாரகையை அது வெளியிட்டது.

அமெரிக்கன் மிஷனும், ஏனைய மிஷன்களும் யாழ்ப்பாணத்தில் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடங்களும், அவற்றுக்குப் போட்டியாக இந்து நிறுவனங்கள் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடங்களும் சேர்ந்து உருவாக்கிய ஒரு கல்விச் சூழல் ஆயிரத்து எண்ணூறுகளிலிருந்து தொடங்கி யாழ்ப்பாணத்தின் சமூகப் பொருளாதார பண்பாட்டுருவாக்கத்தில் மிகப்பெரிய பாய்ச்சலை நிகழத்தின. ஆயிரத்து எண்ணூறுகளில் நாட்டின் ஏனைய பகுதிகளோடு ஒப்பிடுகையில் நாட்டின் மொத்தப் பள்ளிக்கூடங்களில் ஏறக்குறைய அரைவாசிப் பள்ளிக்கூடங்கள் (49 விகிதமானவை) யாழ்ப்பாணத்தில் காணப்பட்டதாக அண்டர்சன் ஆணைக்குழுவின் அறிக்கை தெரிவித்திருக்கிறது. இவ்விதமாக இயல்பான பருமனுக்கு கூடுதலாக யாழப்பாணத்தில் பாடசாலைகள் உருவாக்கப்பட்டதன் தொடர் விளைவுகளில் ஒன்றே தரப்படுத்தலுக்கு எதிரான மாணவர்களின் எதிர்ப்பும் ஆயுதப் போராட்டமும் என்று ஒரு முறை லலித் அத்துலத்முதலி நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.

இலங்கைத்தீவில் முதலாவது மாணவர் அமைப்பைக் கட்டியெழுப்பி வழி நடாத்திய ஹன்ரி பேரின்ப நாயகமும், தமிழ்த் தேசியத் தந்தை என்று தமிழரசுக் கட்சியால் அழைக்கப்படும் எஸ்.Nஐ.வி.செல்வநாயகமும் அமெரிக்க மிஷனால் உருவாக்கப்பட்டவர்களே என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

மேற்கண்டவைகளின் அடிப்படையில்தான் நவீன யாழ்ப்பாணத்தைச் செதுக்கியதில் அமரிக்கன் மிஷனின் பங்கு ஓப்பீட்டளவில் நிர்ணயகரமானது என்று கூறப்படுகிறது.

இவையெல்லாம் எப்படிச் சாத்தியமாகின? அமெரிக்கன் மிஷன் யாழ்ப்பாணத்தை தலைமையகமாகக் கொண்டு செயற்பட்டதாற்தான். அப்படித்தான் விடுதலைப்புலிகள் இயக்கமும். அதன் தலைமையகம் அது செயற்பட்ட களத்திலேயே வேர் கொண்டிருந்தது.

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வடக்கு மையச் செயற்பாடுகளை யாழ்மைய வாதமாக விமர்சிக்கும் தரப்புகள் உண்டு. இக்கட்டுரை அந்த விவாதப் பரப்பிற்குள் இறங்கப்போவதில்லை. ஆனால், அந்த இயக்கத்தின் இராணுவப் புவியியல் நோக்கு நிலை காரணமாக அது தனது பிரதான கட்டுப்பாட்டு நிலத்தை மையமாகக் கொண்டே சிந்தித்தது என்பதும் அதனாலலேயே அதன் பிரதான அதிகார மையம் வடக்கை மையமாகக் கொண்டு கட்டியெழுப்பட்டது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

அமெரிக்கன் மிஷனைப் போல தனது செயற்பாட்டுக் களத்தையே மையத் தளமாகக் கொண்டிருந்த காரணத்தினால் விடுதலைப்புலிகள் இயக்கமானது ஈழத்தமிழர்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் சக்திமிக்கதாக ஒரு கட்டத்தில் எழுச்சி பெற்றது. அது பற்றி இங்கு விரிவாகக் கூறவேண்டிய அவசியம் இல்லை. அது ஒரு அண்மைக்கால வரலாறு.
அமெரிக்கன் மிஷனும் விடுதலைப்புலிகள் இயக்கமும் எந்தக்களத்திலிருந்து செயற்பட்டனவோ அந்தக் களத்திலேயே அவற்றின் தலைமைத்துவத்தையும் கொண்டிருந்தன. என்பதால்தான் அவை இரண்டும் யாழ்ப்பாணத்தை இலங்கைத் தீவில் மற்றொரு மையமாகக் கட்டியெழுப்புவதில் வெற்றியும் பெற்றன.

ஆனால், கூட்டமைப்பின் நிலைமை அப்படியல்ல. கூட்டமைப்பின் உயர் பீடம் கொழும்பை மையமாகக்கொண்டது. அதன் பிரதானிகளில் ஒருபகுதியினருக்கு இந்தியாவில் சொத்துக்களும் சுகங்களும் உண்டு. வடக்குக் கிழக்கிற்கு வெளியே சொத்துக்களையும் சுகங்களையும் கொண்டிருக்கும்போது நிலையான நலன்களும் அந்தச் சொத்துச்சுகங்களைச் சுற்றியே பிணைக்கப்பட்டிருக்கும். எனவே, கொழும்பு மையத்திலிருந்துகொண்டு வடக்கை அல்லது கிழக்கை அல்லது வட-கிழக்கை ஒரு மையமாகக் கட்டியெழுப்புவது எப்படி? இந்தியாவில் சொத்துக்களையும், சுகங்களையும் கொண்டிருக்கும் தலைவர்கள் எந்த மையத்திலிருந்து முடிவுகளை எடுப்பார்கள்? தமது சொத்துச் சுகங்களையும் நிலையான நலன்களையும் தியாகம் செய்துவிட்டு தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்ட இலட்சியவாத அரசியல் வழிமுறை ஒன்றைக் குறித்துச் சிந்திக்க அவர்களால் முடியுமா?

இல்லை. கொழும்பு மையத்திற்கும் வடக்கு மையத்திற்கும் இடையில் இரண்டாகக் கிழிபடத்தான் அவர்களால் முடியும்.வடக்கை மையமாகக் கொண்டு சிந்திக்க அவர்களால் முடியாது. மேற்கு நாடுகளும், இந்தியாவும் எவ்வளவுதான் செயற்கைச் சுவாசம் கொடுத்தாலும் குறிப்பாக, இந்தியாவானது வடமாகாண சபையை எதுவிதத்தில் தத்தெடுத்தாலும் அதை ஒரு முழுஅளவிலான அதிகார மையமாகக் கட்டியெழுப்பவதில் அடிப்படையான வரையறைகள் உண்டு. இப்பொழுது வந்துபோகும் வெளிநாட்டுத் தலைவர்கள், பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், சிறப்புத் தூதுவர்கள் மற்றும் ராஜதந்திரிகளின் வரிசையில் ஒரு வேளை கடவுளே வந்தாலும்கூட வடக்கை ஒரு அதிகார மையமாகக் கட்டியெழுப்ப இலங்கைத்தீவில் இப்போதுள்ள அரசியல் யதார்த்தம் இடம்கொடுக்காது. அதோடு கூட்டமைப்பின் செயற்பாட்டு ஒழுக்கமும் அதன் உயர் மட்டத்தினரின் நிலையான நலன்களும் இடம்கொடுக்காது. குறைந்த பட்சம் மாகாண சபையை ஒரு அரசியல் மையமாக வேண்டுமானால் கட்டியெழுப்பலாம். அவ்வளவுதான்.

06-12-2013

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *