வற்றிய குளத்தின் நிலப்பொருக்கிடைகளில் மக்கிக்கிடக்கும் நண்டுக் கூடு

ஒரு புலம்பெயரிலின் துக்கமும், தத்தளிப்புமே இக்கவிதைகளின் பிரதான உளவியல் ஊற்று மூலம் எனலாம். பெரும்பாலான புலம்பெயரிகளைப் போலவே நெற்கொழுதாசனும் திரும்பக்கிடைக்காத ஓர் இறந்த காலத்தை அல்லது அவரே சொல்வது போல ”போகாதிருக்கும் நினைவுகளை’ உறைபதனிட்டு வைத்திருக்கிறார் அல்லது மம்மியாக்கம் செய்து வைத்திருக்கிறார் அல்லது இலண்டனில் உள்ள ஒரு செயற்பாட்டாளர் கூறியபோல, இறந்த காலத்தை ஊறுகாய்போட்டு வைத்திருக்கிறார்.

1545167_803539733006014_1094058661_nஇது, புலம்பெயர்வின் ஆரம்ப ஆண்டுகளுக்குரிய ஒரு பொதுவியல்புதான். குறிப்பாக, ஈழப்புலம்யெர்ச்சியைப் பொறுத்தவரை பெரும்பாலானவர்கள், பொருள் தேடிகளாகக் கருதப்பட்டாலும்கூட சொந்த நாட்டில் பொருளீட்ட முடியாத ஒரு பாதுகாப்பற்ற அல்லது நிச்சயமற்ற நிலை காரணமாகவே புலம்பெயர நேரிட்டது. எனவே, தாய் நிலத்தை எந்தக் காலகட்டத்தில் விட்டுப் பிரிந்து வந்தார்களோ அந்தக் காலகட்டத்தை அப்படியே உறை பதனிட்டு பேணுவதும், திரும்பப் பெறவியலாத அந்த இறந்த காலத்தை அசைபோட உதவும் எதற்கும் அளவுக்கு மிஞ்சிய முக்கியத்துவம் கொடுப்பதும் இயல்பானதே.

கனடாவில் வசிக்கும் ஒரு படைப்பாளி சொன்னார், 80களில் நாட்டைவிட்டுப் பிரிந்த ஒருவர் அந்நாட்களில் ஹிட்டாக இருந்த ஒரு படத்தையும், அதன் பாடல்களையுமே அற்புதமானவை என்கிறார். ஆனால், 90களில் புலம்பெயர்ந்தவர் அக்காலகட்டத்துப் படத்தையும் பாடல்களையும் போற்றுகிறார். அதேசமயம், 90களின் பின் வந்தவர், பிந்தி வந்த ஒரு படத்தையும், பாடல்களையும் போற்றுவார். இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்னில் இம்மூன்று புலம்பெயரிகளும் ஒரே நட்சத்திர நடிகரின் ரசிகர்களாக இருப்பதுதான். எனவே, இங்கு எந்தப் படம், எந்தப் பாடல் என்பதெல்லாம் குறிப்பிட்ட புலம்பெயரி உறை பதனிட்டு வைத்திருக்கும் இறந்த காலம் எது என்பதில் தான் தாங்கியிருக்கிறது.

மேலும், தாய் நிலத்தில் நிலைமைகள் மோசமடையும்போதும், புகலிட நாட்டில் வேர்கொள்ள முடியாதபோதும் திரும்பக்கிடைக்காத இறந்த காலத்தின் மீதான தாகம் மேலும் அதிகரிக்கிறது. தாய் நிலத்துடனான வேரை அறுக்கவும் முடியாமல் புகலிட நாட்டிற் தன்னைப் பதிவைக்கவும் முடியாமல் ஈரூடகமாகத் தத்தளிக்கும் எல்லாருக்கும் இது பொருந்தும்.

புலம் பெயர்ந்த புதிதில் பெரும்பாலான படைப்பாளிகள் இதை பிரதிபலித்தார்கள். எனினும், காலப்போக்கில், டயஸ்பொறாவில் தமக்கொரு கூட்டு இருப்பையும் கூட்டு அடையாளத்தையும் கண்டுபிடிக்கத் தொடங்கியபின் அவர்கள் மேற்படி, உறைபதனிட்ட இறந்த காலத்தைக் கடந்துவரத் தொடங்கினார்கள்.

இப்படியாக பதனிடப்பட்ட இறந்த காலத்தைக் கடந்து வந்து பதிவைக்கப்பட்ட புகலிடத்தின் யதார்த்தங்களையும் உள்வாங்கி அதன் மூலம் தமிழ்த் துக்கத்தை அனைத்துலக மயப்படுத்தும் படைப்புகளே அவற்றின் அடுத்த கட்டக் கூர்ப்பை வந்தடைகின்றன. இதை இன்னொரு விதமாகச் சொன்னால், ஒரு புகலிடப் படைப்பாளி எந்தளவிற்கு செற்றில்ட் ஆகிறார், எப்படி செற்றில்ட் ஆகினார் என்பதைப் பொறுத்தே அவருடைய படைப்பும் அனைத்துலக மயப்படுகிறது. படைப்பாளி தற்பொழுது நாட்டிற்கு வந்து போகக்கூடியவராக இருக்குமிடத்து, அவருடைய உறைய வைக்கப்பட்ட இறந்த காலத்தை மூடிப்படர்ந்திருக்கும் பனி உருகக்கூடும். இவ்விதமாக நாட்டுகுவந்துபோகக் கூடிய படைப்பாளிகள் பலரிடத்தும் மாற்றங்களைக் காண முடிகிறது. அதேசமயம், புகலிட நாட்டில் உரிய ஆவணங்களைப் பெற்றிராத காரணத்தலோ அல்லது அரசியற் காரணங்களாலோ வந்துபோக முடியாதிருக்கும் பலரிடத்தும் பதனிடப்பட்ட இறந்த காலம் இறுகிக் கெட்டியாகவும் கூடும். சில சமயம் உறைய வைக்கப்பட்ட இறந்த காலம் உருவாக்கிய முற்கற்பிதங்களோடு நாட்டுக்கு வரும் சிலர் விரக்தியும், சலிப்புமடைய இடமுண்டு. எனவே, தாய் நாட்டைக் குறித்த ஒரு புலம் பெயர் படைப்பாளியின் பார்வை எனப்படுவது அவரது இறந்த காலம், அவர் எப்படியாக எந்தளவுக்கு செற்றில்ட் ஆகியிருக்கிறார் என்பவற்றுடன் முக்கியமாக எதிர்காலத்தைக் குறித்த அவருடைய நம்பிக்கைகளினாலும் வடிவமைக்கப்படுகிறது.

இந்த விளக்கத்தின் பின்னணியில் வைத்தே, நெற்கொழு தாசனையும் விளங்கிக்கொள்ள வேண்டும். வடமராட்சியில் கடற்காற்றை நுகரும் ஒரு விவசாயக் கிராமத்தைச் சேர்ந்தவர் அவர். நாலாம் கட்ட ஈழுப்போரின் தொடக்கத்தில் பாதைகள் மூடப்பட்டபோது 2006இல் அவர் புலம்பெயர்;ந்தார். இப்படிப் பார்த்தால் அவருடைய புலம்பெயர்வானது எழு ஆண்டுகள்தான். எனவே, அவரிடமிருக்கும் பதனிடப்பட்ட இறந்த காலம் மிகவும் கெட்டியானது. அந்த இறந்த காலத்தில் இருந்து கொண்டே அவர் நிகழ்காலத்தைப் பார்க்கிறார். திரும்பி வரமுடியாத நாடு. திரும்பக் கிடைக்காத இறந்த காலம். இவற்றால் உண்டாகும் துக்கம் அல்லது தத்தளிப்பு. இவைதான் அவருடைய கவிதைகளின் அடித்தொனி….. ”ஓவென்று ஆழவேண்டும் போலிருக்கிறது இந்தத் தனிமையை எண்ணி’… என்று அவர் எழுதுகிறார்.

இறந்த காலத்தை இரை மீட்கும் போதெல்லாம் சுற்றுச் சூழலை நோக்கிய அவருடைய கூர்ந்த கவனிப்பு வியக்கத்தக்கது. ஒரு கலைப்படத்தின் கமரா நகர்வை அங்கு காணலாம். அவர் விட்டுப் பிரிந்த கிராமத்தை, வீட்டை அவற்றின் நுட்பவிபரங்களுக்கூடாக பின்வருமாறு நினைவு கூர்கிறார்…
எப்பவோ துளைத்து
கறள் ஏறிய சன்னங்களையும்,
எறிகணை சிதைத்து சிராம்பு கிளம்பிய
வளை மரங்களையும்
அண்ணாவைத் தொடர்ந்து
எனது கீறல்களையும் சுமந்த
வைரமரக் கதவுகளையும்
மஞ்சற்பூக்கொடிமரம் சுற்றிப் படர்ந்து
மங்கலமாய் நின்ற தூண்களையும்
சுமந்த என் வீடு……………….
………நார்க்கடகங்களும், சாக்குகளும்
மக்கி மண்னேறிப்போகிறது.
வண்டில் சில்லுகளில் வலைபின்னி
சிலந்தி கிடக்கிறது……..

……சுவரில் மாட்டிய அழகியின் படத்தில்
கூடுகட்டிய வண்டு
ஆணியடித்த தடத்தில் உறங்கிக் கிடக்கும்
ஆடை கொழுவியில்
அமைதியாய் இரைதேடிக்கிடக்கும் சிலந்தி.
கதவில் ஒட்டிய படம்
மக்கிப்போயிருக்கும் அந்த
கதவும் கொஞ்சம் இறங்கிப்போயிருக்கும்.
மேசையும், கதிரையும், புத்தகங்களும்
தூசிகளில் கிடக்கும்.
மையிறுகிப் பேனையும்,
தோல் வெடித்த காலணியும்
சக்குப்பிடித்த எண்ணைப் போத்தலும்
அந்தந்த இடத்திலேயே கிடக்கும்.

கதவுகளில் சிலந்தி வலைகளும்,
சாவித் துவாரங்களில் மண் கூடுகளும்
கைப்பிடிகளில் கறல்களும்
சருகுகளுள் மறைந்து கிடந்த மிதியடியும்
சூழ்ந்திருந்த அமைதியை
கோரமாக்கிக் கொண்டிருந்தன.

கண்ணாடியில்
ஒட்டியிருந்த பொட்டும்
சீப்பில் சிக்கியிருந்த முடிகளும்
அடு;ப்பின் ஓரத்தில்
காய்ந்து கிடந்த எண்ணைச் சட்டியும்
வெள்ளைக் கரித்துணியும்
அழகிய சாமிப் படங்கள்
அபூர்வ சங்கு மக்கிப்போன ஊதுபத்தி………
……எல்லையோர ஒற்றைப் பனையும்,
வேலிக் கிழுவையில் படர்ந்த கொவ்வையும்
செம்பருத்தியும் நித்திய கல்யாணியும்
நாலு மணிப்பூச்செடியும்
முற்றத்து மண் அள்ளி
கொட்டியுலவிய காற்றும்
உறைந்துபோய்தான் கிடக்குமோ?
நானிருந்த வீட்டில்……………………

ஆனால், துயரம் என்னவெனில், அவர் விட்டுப் பிரிந்த நெற்கொழு கிராமம் மெல்ல உருமாறிக் கொண்டிருக்கிறது என்பதுதான். சந்தியில் இருந்து பருத்தித்துறை வரையிலும் கடற்சாலை நெடுக இடைக்கிடை பாழடைந்த அல்லது கைவிடப்பட்ட வீடுகளை இப்பொழுது காணலாம். காரைநகரில் கசூரினாக் கடற்கரைக்குப் போகும் வழியிலும் நயினாதீவுக்குப் போகும் வழியில் புங்குடுதீவிலும் கைவிடபபட்ட பாழடைந்த வீடுகளை இப்பொழுதும் ஆங்காங்கே காணலாம். ஆனாலும், தடையற்ற பயணம், தடையற்ற இணையம், தடையற்ற நிதி மூலதனப் படர்ச்சி என்பவற்றால் இலஙகைத்தீவு ஓரலாகாக மாறி வருகிறது.

நெற்கொழுவை நோக்கி காப்பற் சாலைகள் வந்துகொண்டிருக்கின்றன. லீசிங் கொம்பனிகளும் வங்கிகளும் சிறு பட்டினங்களை நோக்கி வந்துகொண்டிருக்கின்றன. தென்னிலங்கையிலிருந்து வர்த்தகர்கள் வீடு தேடி வந்து பண்டங்களை விற்கின்றார்கள். கிழுவை வேலிகளை கிராமங்கள் இழக்கத் தொடங்கிவிட்டன. யாழ்ப்பாணத்தின் அடையாளம் என்று கருதத்தக்க முள் முருங்கின் இலைகளை ஏதோ ஒரு பூச்சி அரித்துத் தின்றுவிட்டது. நாலுமணிப்பூக்களும், முள்முருங்கையும் இல்லாத ஒரு யாழ்ப்பாணம் உருவாகி வருகிறது. நெற்கொழு தாசன் பிறகொரு காலம் ஊர் திரும்பும்போது பெரும்பாலான குருவிகளும், பூக்களும், பூச்சிகளும் ஏன் வாழ்க்கை முறையும் கூட அவருடைய கவிதைகளில் மட்டும்தான் மிஞ்சியிருக்கும். அவருடைய கவிதை வரிகளிற் சொன்றால் ”வற்றிய குளத்தின் நிலப்பொருக்கிடைகளில் மக்கிக்கிடக்கும் சிறு வெண்நண்டுக் கூட்டைப் போல…’

ஒரு முகநூல் நண்பராகவே அவரை முதலில் எனக்குத் தெரியும். சில அல்லது பல கவிதை வரிகளோடு இடைகிடை வந்துபோவார். அவருடைய வயதொத்த அல்லது அவரைவிட மூத்த அல்லது இளைய படைப்பாளிகள் பலரும் இப்படியாக முகநூலில் கவிதை வரிகளைப் பிரசுரிப்பதுண்டு. அடைகாக்கப்படுமிடத்து மகாத்தான கவிதைகளாக வரக்கூடிய பல கவிதைக் கருக்கள் முகநூலில் வீணே சிந்தப்படுவதைக் காணமுடிகிறது. பிரசுரித்த உடன் கிடைக்கும் லைக்குகளுக்காக கவிதைக் கருக்களை முகநூலில் சிந்துவது என்பது ஏறக்குறைய சுயமைதுனத்தில் விந்;தைச் சிந்துவதைப் போன்றதுதான். சிந்தப்படும் விந்து கருக்கட்டுவதுமில்லை. அடைகாக்கப்படுவதும் இல்லை. அடைகாக்கப்படாத கவிதை கருவிலேயே கலைந்துவிடுகிறது. தமிழ்ச் சக்தி விரயமாகும் இடங்களில் முகநூலும் ஒன்றுதான்.
நெற்கொழுதாசன் முகநூலில் கவிதைகளைச் சிந்தும் வகையினர் அல்ல. இணையப் பரப்பில் அண்மைக் காலங்களில் துருத்திக்கொண்டு மேலெழும் இளம் படைப்பாளிகளில் அவரும் ஒருவர். அரசியல் விமர்சனக் கட்டுரைகளும் எழுதுகிறார். ஓர் இளம் புலம்பெயரி என்பதால் அவர் அவருக்கேயான ”போகாத நினைவுகளை’ கடந்து வரக் காலம் எடுக்கும். அவர் எந்தளவுக்கு செற்றில்ட் ஆகிறார் என்பதைப் பொறுத்து அவர் பாடும் தமிழ்த் துக்கமானது அனைத்துலக மயப்படும். எவ்வளவுக்கெவ்வளவு அடை காக்கப்படுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அவருடைய எழுத்தும் அதன் அழகியல் உச்சங்களைத் தொடும்.

நிலாந்தன்,
யாழ்ப்பாணம்,

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *