உத்தேச ஜெனிவாத் தீர்மானத்தின் முதல் வரைவு வெளிவந்துவிட்டது. அது தொடர்பான பிரதிபலிப்புக்களை உற்று நோக்கின் ஒரு முக்கியமான போக்கினை அடையாளங்காண முடியும். தமிழர்கள், சிங்களவர்கள் ஆகிய இரண்டு தரப்புமே அதை எதிர்க்கின்றன. சிங்கள மக்கள் அதை மேற்கின் மிரட்டல் என்று எதிர்க்கிறார்கள். தமிழர்களோ தாங்கள் நம்ப வைக்கப்பட்டு ஏமாற்றுப்பட்டுவிட்டதாக கருதி எதிர்க்கிறார்கள். குறிப்பாக, டயஸ்பொறாவிலும் தமிழகத்திலும் நடந்து கொண்டிருப்பவற்றின் அடிப்படையிற் கூறின் இம்முறை ஜெனிவாத் தீர்மான வரைவுக்கு எதிரான பிரதிபலிப்புக்கள் ஒப்பீட்டளவில் தமிழ்ப் பரப்பில்தான் அதிகமாகக் காணப்படுகின்றன எனலாம்.
ஒன்றில் அமெரிக்காவுக்கு எதிராக அல்லது ஐ.நா.வுக்கு எதிராக கோஷங்கள் முன்வைக்கப்படுகின்றன. கடந்த சுமார் மூன்று ஆண்டுகளிற்கும் மேலாக, மேற்கை நோக்கிக் காத்திருந்ததில் ஏற்பட்ட ஏமாற்றமும், சலிப்பும், விரக்தியும் இம்முறை ஒப்பீட்டளவில் அதிகரித்த அளவிற் வெளிப்படுவதைக் காணக் கூடியதாயுள்ளது.
இப்பிரதிபலிப்புக்கள் சரியா? அல்லது பிழையா என்று கூறுவது இன்று இக்கட்டுரையின் நோக்கமன்று. மாறாக, இப்பிரதிபலிப்புக்களின் பின்னாலிருக்கும் பொதுத் தமிழ் உளவியலை முன்வைத்தே இன்று இக்கட்டுரை எழுதப்படுகிறது.
காத்திருப்பின் அளவே ஏமாற்றத்தின் அளவையும் தீர்மானிக்கின்றது. ஈழத் தமிழர்கள் காத்திருந்து ஏமாற்றமடைவது இதுதான் முதற்தடவையும் அல்ல. ஏறக்குறைய கால்நூற்றாண்டுக்கு முன்பு 1987இல் இலங்கை – இந்திய உடன்படிக்கையின்போதும் இதே மாரிதியான ஒரு பிரதிபலிப்புத்தான் காணப்பட்டது.
இந்தியாவை நோக்கிய மிக நீண்ட காலக் காத்திருப்பு ஏமாற்றத்தின் முடிந்தபோது அப்போது ஏற்பட்ட விரக்தி, சலிப்பு, கோபம் என்பன இப்போது ஏற்பட்டிருப்பதைவிடவும் கூடுதலானவை. ஏனெனில், இந்தியாவை ஈழத் தமிழர்கள் தங்களிடமிருந்து பிரித்துப் பார்க்கவில்லை. இந்திய உபகண்டப் பெரும் பண்பாட்டின் ஓரலகாகவே ஈழத்தமிழ்ப் பண்பாடும் காணப்படுகிறது. தமிழகத்தில் உள்ள ஆறு கோடித் தமிழர்களுடன் தங்களை இணைத்து அடையாளம் காண்பதன் மூலம் ஈழத் தமிழர்கள் ஒருவித பாதுகாப்புணர்வை அனுபவித்ததுண்டு. சில மேற்கத்தைய ஆய்வாளர்கள் இதைத்தான் ”இலங்கைத்தீவில் சிறுபான்மையினர் பெரும்பான்மை உளச்சிக்கலுடன் majority complex காணப்படுவது’ என்று வர்ணித்திருக்கிறார்கள். மறுவளமாக, இப்படித் தமிழர்கள் தங்களைப் பெரிய தமிழகத்துடன் சேர்த்து அடையாளம் காணும்போது சிங்களவர்கள் தங்களைச் சிறுபான்மையாகக் கருதுகிறார்கள் என்றும், இதனால் இலங்கைத்தீவில் பெரும்பான்மையினர் ‘சிறுபான்மை தாழ்வுச் சிக்கலோடு’ (minority complex) காணப்படுவதாகவும் மேற்படி அறிஞர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். இப்படியாகத் தமிழ் மக்களிடம் காணப்படும் பெரும்பான்மை உளவியல் சிக்கல் அயதழசவைல majority complex விளைவே மேற்படி காத்திருப்பு அரசியலும் எனலாம்.
ஏறக்குறைய கால்நூற்றாண்டின் பின், அதுவும் ஒரு பேரழிவுக்கும் பெரும் தோல்விக்கும் பின் அதே கேள்வி வேறு ஒரு அரங்கில் கேட்கப்படுகிறது.
இப்பொழுது இக்கட்டுரை தமிழர்களை நோக்கி ஒரு கேள்வி கேட்கிறது. கடந்த சுமார் கால்நூற்றாண்டுக்கும் மேலாக ஒரே கேள்வியைத் திரும்பத் திரும்ப வெவ்வேறு தரப்புக்களிடம் கேட்க வேண்டிய ஒரு நிலைமை தமிழர்களுக்கு எப்படி வந்தது?
இக்கேள்விக்கான பதில் மிகவும் எளிதானது. வெளிப்படையானது. காத்திருப்பு அரசியலின் விளைவே இதுவெனலாம். தமிழர்கள் எப்பொழுதும் வெளித்தரப்புக்களை நோக்கி காத்திருக்கிறார்கள். அதாவது நம்பிக் காத்திருக்கிறார்கள். இதுதான் இங்கு பிரச்சினை. நம்பிக் காத்திருப்பது என்பது.
ஒரு காலம் இந்தியாவைத் தாயகம் என்றும், இந்திரா காந்தியைத் தாய் என்றும் நம்பிக் காத்திருந்தார்கள். இப்பொழுது ஜெனியாவை நம்பிக் காத்திருக்கிறார்கள். இங்கு பிரச்சினை வெளியாரை நம்புவதுதான். ஆனால், தமிழர்கள் எவ்வளவுக்கெவ்வளவு வெளியாரை நம்புகிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு எல்லா வெளித் தரப்புக்களும் தமிழர்களுடைய தலையைத்தான் உருட்டி விளையாட முற்படுகின்றன. ஏனெனில், அவர்களுக்கு அவர்களுடைய புவிசார் அரசியல் நலன்களே முக்கியம். தமிழர்களுடைய அபிலாசைகள் இரண்டாம் பட்சம்தான்.
ஜெனிவா எனப்படுவது அதன் முதலாவது பொருளில் ஒரு நீதிமான்களின் மன்றம் அல்ல. அங்கே நீதியை விடவும் புவிசார் அரசியல் நலன்களே முக்கியம். மேற்கு மற்றும் இந்தியக் கூட்டின் தென்னாசியப் பிராந்தியத்துக்கான வியூகம் ஒன்றில் தமிழர்களை அவர்கள் கருவிகளாகக் கையாண்டு வருகிறார்கள் என்பதே சரி.
எனவே, கருவியானது கர்த்தாவை எப்படிக் கையாள்வது? என்ற கேள்விக்கான விடையே தமிழர்களைச் சரியான இடத்தில் கொண்டு வந்து நிறுத்தும் கருவி எப்படிக் கர்த்தாவைக் கையாள்வது?
அதற்கு முதலில் தமிழர்கள் கர்த்தாக்களை நம்புவதை நிறுத்தவேண்டும். இப்பிராந்தியத்தில் எல்லாக் கர்த்தாக்களும்; தமிழர்களுடைய தலைகளைத் தான் உருட்டி விளையாடுகிறார்கள். எனவே, தமிழர்கள் கர்த்தாக்களை நம்புவதை நிறுத்தவேண்டும். யாரையும் நம்பவும் கூடாது. யாரையும் நிராகரிக்கவும் கூடாது. ராஜதந்திரத்தின் பாலபாடம் இது.
யூதர்கள் மத்தியில் ஒரு கதை உண்டு. ஈழத்தமிழர்களில் ஒரு பகுதியினர் இக்கதையை ரசித்துக் கூறுவதுமுண்டு. இக்கட்டுரை பலஸ்தீனர்கள் தொடர்பில் யூதர்களின் அரசியலை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் யாரையும் நம்புவது ராஜதந்திரத்தின் பால பாடத்திற்கு முரணானது என்பதை ஆழமாக விளங்கிக்கொள்ள இந்தக் கதை உதவும் என்பதால் இங்கு அந்தக் கதை கூறப்படுகிறது.
ஒரு தந்தை தனது மகனுக்கு மரத்திலிருந்து குதிக்க பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தார். பையன் ஒவ்வொரு முறையும் மரத்தில் ஏறிய பின் குதிப்பான். அவன் குதிக்க முன்பு தந்தை சொல்வர், ”கவனமாகக் கேள் யாரையும் நம்பாதே. இந்த பூமியில் உன்னைத்தவிர வேறு யாரையும் நம்பக்கூடாது’ என்று. பிறகு மகன் குதிப்பான். தந்தை அவன் தரையில் விழ முன்பு பத்திரமாகக் கைகளில் ஏந்திக் கொள்வார். இது தொடர்ச்சியாக நடந்துகொண்டிருந்தது. திடீரென்று ஒரு தடவை தகப்பன் மகனை ஏந்தவில்லை. மகன் தரையில் தொப்பொன்று விழுந்தான். அதிர்ச்சியோடு எழுந்து நின்றவன் கேட்டான், ”ஏனப்பா என்னைப் பிடிக்கவில்லை?’. தகப்பன் சிரித்துக்கொண்டு சொன்னாராம், ”நான்தான் சொன்னேனே யாரையும் நம்பக்கூடாது என்று… என்னையும் நம்பக்கூடாது…’ என்று.
எனவே, இப்பூமியில் உள்ள அநேகமாக எல்லாச் சக்திமிக்க நாடுகளினதும் புவிசார் அரசியல் நலன்களுக்காக பலியிடப்பட்ட ஒரு மக்கள் கூட்டமாகக் காணப்படும் தமிழர்களும் இப்பூமியில் யாரையும் நம்ப முடியாது. ஆனால், அதற்காக யாரையும் நிராகரிக்கவும் முடியாது. மாறாக, எல்லாரையும் கையாளத்தக்க ஒரு தொடர்பில் வைத்திருக்கவேண்டும். இங்கு தொடர்புகளே முக்கியம். எவ்வளவுக்கெவ்வளவு தொடர்புகள் அதிகமோ அவ்வளவுக்கவ்வளவு கையாளத்தக்க தரப்புக்களின் தொகையும் அதிகரிக்கும். கையாளப்படும் தரப்புக்களின் தொகை அதிகரித்தால் engage பண்ணும் பரப்பும் அதிகரிக்கும்.
தகவல் தொடர்பு யுகத்தில் தொடர்புகள் தான் பிரதான பலம். தொடர்புகள் தான் பிரதான சக்தி. தொடர்புகள் தான் ஆயுதம். தொடர்புகளின் அடிப்படையிற்தான் பேரம்பேசும் சக்தியும் தீர்மானிக்ப்படுகிறது. வர்த்தகத்திலும், அரசியலிலும் தொடர்புகளே முதலீடு. இதற்கு ஆகப் பிந்திய பிரகாசமான ஓர் உதாரணத்தைக் எடுத்துக்காட்டலாலாம்.
அண்மையில் whats app நிறுவனத்தை முகநூல் நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது. இதன்போது வட்ஸ் அப் நிறுவனத்தின் பெறுமதி பத்தொன்பது பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிடப்பட்டது. வட்ஸ் அப் உபகரணத்தை ஒரு மாதத்திற்கு ஏறக்குறைய 400 மில்லியன் அதாவது 40 கோடி வினைத்திறன் மிக்க பயனாளர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். அதாவது இந்த உபகரணம் 40 கோடி பயனாளர்களை தொடர்பு படுத்துகிறது. பயனாளர்களின் தொகையை வைத்தே அதன் விலை மதிப்பிடப்பட்டது. அதாவது 40 கோடி நபர்களை தொடர்பில் வைத்திருப்பதற்கே அந்த விலை. வட்ஸ் அப் நிறுவனத்தை உருவாக்கியவர் இப்பொழுது கொந்தளித்துக்கொண்டிருக்கும் உக்ரைனைச் சேர்ந்த jan koum – யான் கோம். அவர் ஒரு யூதர் என்பது இங்கு மேலதிக தகவல். சோவியத் யூனியனின் சிதைவுக்குப் பின் அங்கிருந்து புலம் பெயர்ந்த கோம் புலம்பெயர்ந்த புதிதில் தனது தாய் நாட்டுடன் தொடர்பு கொள்வது எவ்வளவு கடினமானதாகவும், செலவு மிக்கதாகவும் இருந்தது என்பது வட்ஸ் அப்வைக் கண்டுபிடிப்பதில் பகுதியளவிற்கு அகத்தூண்டலாக அமைந்தது என்று கூறியுள்ளார்.
எவ்வளவு தொகை பயனாளர்கள் அதாவது எவ்வளவு பரந்த தொடர்புகள் என்பதே வட்ஸ் அப்பின் சந்தைப் பெறுமதியைத் தீர்மானித்தது. வர்த்கத்திற்கு மட்டுமல்ல, அரசியலுக்கும் இது பொருந்தும். இலங்கை அரசாங்கம் ஓர் அரசுடைய தரப்பு. அதனால் அதற்கு தொடர்புகள் அதிகமுண்டு. அரசிற்கும் – அரசிற்கும் இடையிலான கட்டமைப்பு சார் தொடர்புகளே அதன் பிரதான பலம். இக்கட்டமைப்பு சார் தொடர்புகளிற்கூடாக அது அரசுகளுடன் டீல்களுக்குப் போக முடியும். ஆனால், தமிழர்கள் அரசுடைய தரப்பு அல்ல. எனவே, அரசற்ற தரப்பாகவும் அதேசமயம், அனைத்துலக வியூகமொன்றின் தவிர்க்கப்படவியலாத கருவிகளாகவும் காணப்படும் தமிழர்கள் அனைத்து மட்டங்களிலும் எல்லா அடுக்குளிலும், எல்லா முனைகளிலும் தொடர்புகளை உருவாக்க வேண்டும். இதற்கு கறுப்பு- வெள்ளையாக சிந்திப்பதை முதலில் நிறுத்த வேண்டும். கறுப்பு-வெள்ளையாகச் சிந்தித்தால் தொடர்புகள் ஒற்றைப்படையாகிவிடும். அதில் பல்வகைமை இருக்காது. ஆனால், ராஜதந்திரம் எனப்படுவதே பல்வகைமைகளின் என்கேஜ்மன்ற் தான்.
கறுப்பு-வெள்ளையாகப் பார்த்தால் இப்பொழுது ஜெனிவாவில் ஆதரவாகக் காணப்படும் எல்லா நாடுகளும் ஒரு காலம் அதாவது ஜெயவர்;த்தனவின் காலத்தில் தமிழர்களுக்கு எதிராக நேரடியாகவும், நாலாம் கட்ட ஈழப்போரின் போது மறைமுகமாகவும் செயற்பட்டவைதான். இலங்கை அரசாங்கம் சீனாவை நோக்கி அதன் வரையறையை மீறிச் சாயும் வரைக்கும் நந்திக் கடற்கரையில் நடந்தவற்றை பக்கச் சேதங்களாகவே– collateral damage –மேற்படி நாடுகள் பார்;த்தன என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். எனவே, கறுப்பு-வெள்ளையாகச் சிந்தித்தால் இப்பூமியில் தமிழர்களுக்கு எதிரிகளே அதிகம் இருப்பர். தமிழர்கள் யாரோடும் தொடர்பு வைக்க முடியாது. தொடர்புகள் குறையக் குறைய என்கேஜ்மன்ற் பரப்பும் குறையும். அப்பொழுது கருவியானது கர்த்தாவைக் கையாள்வது பற்றி சிந்திக்கவே முடியாது. தமிழர்கள் இறந்த காலத்தில் இருந்து பாடம் கற்பது என்பது கறுப்பு-வெள்ளையாக சிந்திப்பதிலிருந்து வெளியில் வருவதுதான்.
அப்படி வெளிவருமிடத்து தமிழர்கள் அனைத்துலக அரங்கில் மூன்று தளங்களில் செயற்பட வேண்டியிருக்கும். இதை தமிழ் ராஜதந்திர செய்முறைக்கான மூன்று தடச் செயற்பாட்டு பொறிமுறை எனலாம்.
இதன்படி முதலாவது தடம் அனைத்துலக பொதுசனங்களை நோக்கி செல்ல வேண்டும். இது ஓரளவுக்கு ஏற்கனவே செய்யப்பட்டு வருகிறது. பொதுசன அபிப்பிராயங்கள் உடனடியாக கொள்கை வகுப்பாளர்களின் அரசியல் தீர்மானங்களாக மாறிவிடுவதில்லை. அதற்குக் காலம் எடுக்கும். ஆனால், இதுதான் நலன் சாராத மெய்யான நீதியின் பாற்பட்ட ஒரு தடம் . மனித குலத்தின் மனச்சாட்சி இது. வரலாற்றில் இறுதியிலும் இறுதியாக நிலைக்கப்போவதும் இதுதான். கடந்த ஆண்டு கனடாவில் தனது நூலை வெளியிட்டு வைத்த பிரான்சிஸ் ஹரிசன், ஒரு விசயத்தைச் சுட்டிக்காட்டியிருந்தார். தமிழர்களிடம் இவ்வளவு ஆதாரமர்ன காணொளிகள், செய்திகள் என பல சான்றுகள் இருந்தபோதும் அது உலகத்தின் மனச்சாட்சியை அசைக்கவில்லை என்றால் தமிழர்கள் வேறுவிதமாக முயற்சித்துப் பார்க்க வேண்டும் என்றும். இப்பொழுது செய்யப்படுவற்றைவிட வேறுவிதமாக முயற்சிப்பதன் மூலம் உரிய செய்திகள் ஈழத்தில் நடந்தவற்றைக் குறித்து அறியாத மக்களிடம் போய்ச் சேர முடியும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இரண்டாவது தடம்: மனித உரிமை இயக்கங்கள் மனிதாபிமான தொண்டு நிறுவனங்கள், அபிப்பிராயத்தை உருவாக்கவல்ல அமைப்புக்கள், தனிநபர்கள், ஊடகங்கள், மத நிறுவனங்கள், படைப்பாளிகள், செயற்பாட்டாளர்கள் போன்ற சகல தரப்புக்களையும் நோக்கிச் செல்ல வேண்டும். இதுவும் கொள்கை வகுப்பாளர்களை சடுதியாக சென்றடைவதில்லை. ஆனால், இது நிலைமைகளை நொதிக்கச்செய்ய வல்லது. ஜெனிவாவைச் சூழ நிலைமைகளைக் கனியச்செய்வதில் இத்தடத்தைச் சேர்ந்தவர்களின் பங்களிப்பு அதிகம் உள்ளது. ஏற்கனவே, கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக இத்தடத்திற்குரியவர்கள் செயற்பட்டு வருகின்றார்கள். தமிழர்கள் என்பதற்காகவல்ல. மனிதர்கள் என்பதற்காகவும், பாதிக்கப்பட்ட ஓரு மக்கள் கூட்டம் என்பதற்காகவும் தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய நீதியை நோக்கி உழைக்கும் தமிழர் அல்லாத பலரும் இத்தடத்தில் ஏற்கனவே செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
மூன்றாவது தடம், கொள்கை வகுப்பாளர்களை நோக்கிச் செல்கிறது. இது முழுக்க முழுக்க புவிசார் அரசியல் நலன்களோடு சம்பந்தப்பட்ட ஒரு தடம். இங்கு குறிப்பிடப்படும் மூன்று தடங்களோடும் ஒப்பிடுகையில், இதயமற்றவர்கள் அதிகமுடைய ஒரு தடம் இது. ஆனால், இதுதான் அரசியல் தீர்மானங்களை எடுக்கிறது. இத்தடத்தில் நீதி, நியாயம், அறநெறிகள் என்பவை எல்லாம் கிடையாது. தமிழர்களுடைய பேரம் பேசும் சக்தியை தீர்மானிக்கும் நலன்களை முன்வைத்தே இங்கு காய்களை நகர்த்தலாம். சீனாவுக்கு எதிரான உலகளாவிய வியூகம் ஒன்றில் தமிழர்கள் தவிர்க்கப்படவியலாத ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதே இங்கு தமிழர்களுக்குள்ள கவர்ச்சியும், பேரம் பேசும் சக்தியுமாகும். இப்பேரம் பேசும் சக்தியை தமிழர்கள் மேலும் பலப்படுத்த வேண்டும். அதாவது தொடர்புகளை அதிகரிக்கவேண்டும். மேற்கை நோக்கியும், என்கேஜ் பண்ண வேண்டும். புதுடில்லியை நோக்கியும் என்கேஜ் பண்ணவேண்டும். பக்கத்திலிருக்கும் பேரரசே சிறிய இனங்களையும், நாடுகளையும் பொறுத்த வரை இறுதி முடிவுகளை எடுக்கிறது என்பதற்கு கிரீமியா ஓர் ஆகப்பிந்திய உதாரணம். இன்று கிரிமியா ரஷ்யாவுடன் இணைவதா? இல்லையா என்பதற்கான பொதுசன வாக்கெடுப்பு ஒன்று நடக்கிறது. எனவே, தமிழ் லொபி எனப்படுவது மேற்கையும் இந்தியாவையும் நோக்கி வெற்றிகரமாக தொடர்புகளை உருவாக்கி என்கேஜ் பண்ணுவதன்; மூலம் தான் கருவியானது கர்த்தாவைக் கையாளத்தக்க ஒரு பொறிமுறை அதன் முழுமையான பிரயோக வடிவத்தைப் பெறும்.
15-03-2014