ஈழத் தமிழர்கள் நரேந்திர மோடியை எப்படிக் கையாளப் போகிறார்கள்?

narendra-modi-feb-1கடந்த வாரம் தமிழ் நாட்டில் உள்ள படைப்பாளிகள் மற்றும் செயற்பாட்டாளர்களில் ஒரு தொகுதியினர் பாரதீய ஜனதாக் கட்சியின் முதன்மை வேட்பாளராகிய நரேந்திர மோடிக்கு எதிராக ஒரு பகிரங்க அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த அறிக்கைக்கு ஆதரவாகக் கையெழுத்திட்டிருப்பவர்களில் தமிழ்த் தேசிய ஆதரவாளர்களும் உண்டு. அதை விமர்சிப்பவர்களும் உண்டு. ஈழத் தமிழர்கள் தரப்பில் குறிப்பாக, புலம்பெயர்ந்து வாழும் படைப்பாளிகளில் ஒரு பகுதியினர் இதில் கையெழுத்திட்டிருக்கிறார்கள். தமிழ் நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் உள்ள புத்திஜீவிகள், படைப்பாளிகள், செயற்பாட்டாளர்களில் ஒரு தொகுதியினர் மோடிக்கு எதிராகவே காணப்படுகிறார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு முகநூலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் ஒருவர் – இவர் இப்பொழுது ஒரு வேட்பாளர் – இது தொடர்பாக தெரிவித்திருந்த சில கருத்துக்கள் தொடர்ச்சியாக விவாதிக்கப்பட்டன. தமிழ்த் தேசிய சக்திகளில் ஒரு பகுதியினர் மோடியை நெருங்கிப்போகக் கூடும் என்ற சந்தேகங்களின் அடிப்படையில் அவர் கருத்துத் தெரிவித்திருந்தார். அந்த வாதப்பிரதிவாங்களின் போது தமிழ்த் தேசிய வாதிகளாகத் தோன்றிய சிலர் மோடிக்கு கிட்டவாக வந்ததை பார்க்கக்கூடியதாகவிருந்தது.

தவிர தீவிர தமிழ்த் தேசிய சக்திகளான வை.கோ. போன்றவர்கள் இம்முறை மோடியுடன் நிற்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

அதேசமயம், இந்திய கொமியூனிஸ்ற் கட்சியின் மாநிலப் பொதுச் செயலரான மகேந்திரன் மற்றும் சென்னை பல்கலைக்கழகத்தின் அரசறிவியற்றுறைத் தலைவரான பேராசிரியர் மணிவண்ணன் போன்றவர்கள் ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் பாரதீய ஜனதா கட்சியை ஓரளவுக்குக் கையாண்டு பார்க்கலாம் என்று நம்புவதாகத் தெரிகிறது. இப்போதுள்ள கொங்கிரஸ் அரசாங்கமானது இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாகக் காணப்படுகிறது. ஆனால், பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வந்தால் அது இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகத் திரும்புமோ இல்லையோ குறைந்த பட்சம் அது கொங்கிரஸ் கட்சி போல இலங்கை அரசாங்கத்துக்கு ஆதரவானதொரு நிலைப்பாடு எடுப்பதைத் தடுத்தாலே போதும் என்று அவர்கள் சிந்திப்பதாகவும் தெரிகிறது.

ஆனால், அதேசமயம், படித்த நடுத்தர வர்க்கத்தினர் மத்தியிலிருந்து தோன்றிய சேவ் தமிழ்;,மே பதினேழு போன்ற செயற்பாட்டு இயக்கங்களும் மோடியைத் தீவிரமாக எதிர்ப்பதைக் காண முடிகிறது.

ஆக மொத்தத்தில் தமிழ் நாட்டில் உள்ள தமிழ்த் தேசிய சக்திகள், மோடியின் விடயத்தில் முரண்பட்ட நோக்கு நிலைகளுடன் காணப்படுவது தெரிகிறது. சிலர் மோடியுடன் நிற்கிறார்கள். சிலர் மோடிக்கு எதிராக நிற்கிறார்கள். சிலர் மோடிக்கு வெளியில் நிற்கிறார்கள். இப்படியாக தமிழ்த் தேசிய சக்திகள் தங்களுக்கிடையில் ஓர் ஐக்கியப்பட்ட முடிவுக்கு வாரமலிருப்பது ஒரு அடிப்படைப் பலவீனமாகக் கருதப்பட்டாலும் மோடி வெற்றிபெறுமிடத்து அவரை வெற்றிகரமாகக் கையாள்வதற்கு இந்த முரண்பாடுகளும் உதவக்கூடும் என்று ஒரு வாதம் முன் வைக்கப்படுகின்றது. அதாவது, மோடியுடன் பங்காளிகளாக இருப்பவர்கள் உள்ளிருந்து தமது செல்வாக்கைப் பிரயோகிக்க, வெளியில் நிற்பவர்களும் எதிராக நிற்பவர்களும் ஆட்சிக்கு வெளியிலிருந்தபடி அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியும் என்றும், இதனால், ஈழத் தமிழர்கள் விவகாரத்தை ஒப்பீட்டளவில் வெற்றிகரமாகக் கையாள முடியும் என்றும் வாதாடப்படுகிறது.

ஆனால், இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட படைப்பாளிகளும் மனித உரிமை ஆர்வலர்களும், சமூகச் செயற்பாட்டாளர்களும் மேற்படி; தந்திரங்களை நோக்கிக் கடுமையாகக் கேள்வியெழுப்புகிறார்கள்.

உலக சமூகத்திடம் நீதி கேட்டுப் போராடிவரும் ஈழத்தமிழர்கள், குஜாரத்தில் நீதி மறுக்கப்பட்ட மக்களின் பக்கம் நிற்கப்போகிறார்களா அல்லது நீதியை மறுத்தவரின் பக்கம் நிற்கப்போகிறார்களா? என்பதே அவர்களுடைய பிரதான கேள்வியாக காணப்படுகிறது.

இன்று இக்கட்டுரையானது இக்கேள்வியின் மீதான ஒரு விவாதப் பரப்பைத் திறப்பதை நோக்கமாகக் கொண்டு எழுதப்படுகின்றது.

உலக சமூகத்திடம் நீதி கோரிப் போராடும் ஒரு சிறிய தோற்கடிக்கப்பட்ட மக்கள் கூட்டமானது தன்னைப் போன்ற ஏனைய நீதி மறுக்கப்பட்ட தரப்புக்களுடன் சகோதரத்துவத்தைப் பேணிப் பாதுகாக்க வேண்டுமா? அல்லது அந்த நீதி நெறிகளைப் பொருட்படுத்தாது புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார நலன்களை மையமாகக் கொண்டு தனது அரசியல் பேரத்தை முன்னெடுக்க வேண்டுமா? எது சரி?.

இக்கேள்விகளுக்கு விடை காண்பதாக இருந்தால் முதலி;ல் மிக அடிப்படையான ஒரு மூலக் கேள்விக்கு விடை கண்டாக வேண்டும். அதாவது, அரசியலில் அறம் அல்லது நீதிநெறிகள் என்று ஏவையாவது உண்டா? அல்லது அரசியலில் அறநெறிகளின் அல்லது நீதி நியாயங்களின் பங்கு எத்தகையது?

நவீன அரசியலில் மட்டுமல்ல, பூர்வ காலங்களிலும்கூட அரசியலை அறநெறிகள் வழிப்படுத்தியதில்லை. குறிப்பாக, நவீன அரசியலில் முழுக்க முழுக்க புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார நலன்களே அரசியலைத் தீர்மானித்தன. குறிப்பாக, ராஜியச் செயற்பாடுகளின்போது புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார நலன்களுக்காக முதலில் பலியிடப்பட்டவை அறிநெறிகளும் நீதி நெறிகளும்தான். அறநெறிகளின் பாற்பட்டு முடிவுகள் எடுக்கப் பட்டிருந்திருந்தால் செச்சினியர்களுக்கும், பலஸ்தீனர்களுக்கும், குர்திஷ்களுக்கும் எப்பொழுதோ விடுதலை கிடைத்திருக்க வேண்டும்.

கடந்த நூற்றாண்டின் இறுதியில் ரஷ்யா செச்சினியர்களை வேட்டையாடியபோது மேற்குநாடுகள் அதை ரஷ்யாவின் உள்நாட்டு விவகாரமாகவே வர்ணித்தன. 2000ஆம் ஆண்டு புட்டினைச் சந்தித்த பின் கருத்துத் தெரிவித்த ரொனி பிளேயர், ”செச்சினியா கோசோவோ அல்ல’ என்று கூறியிருந்தார். ஆனால், சரஜேவோ முற்றுகையை விடவும் ஸ்ரெபெரினிக்கா படுகொலைகளை விடவும் மோசமான நிலைமைகள் செச்சினியாவில் காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செச்சினியாவை ரஷ்யாவின் உள்நாட்டு விவகாரமாகப் பார்த்த மேற்கு நாடுகள் கிரிமியாவில் ரஷ்யா தலையிட்டபோது கொதித்தெழுந்தன. இங்கு செச்சினியர்களுக்கு ஒரு நீதி, உக்ரெய்னுக்கு ஒரு நீதி. இதில் எது சரியான நீதி?

நீதி நெறிகளின் படி பார்த்தால், நீதி மறுக்கப்பட்ட மக்களுடன் தான் பலஸ்தீனர்கள் தமது சகோதரத்துவத்தைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். ஆனால், கடந்த ஆண்டு பலஸ்தீன அதிகார சபையானது தனது உயர் விருதாகிய ஸ்டார் ஒவ் பலஸ்ரீன் விருதினை இலங்கைத்தீவின் அரசுத் தலைவருக்குத்தானே வழங்கியது?

தென்சூடானியர்கள் விடுதலைக்காகப் போராடி சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்துபோய் தனிநாட்டை உருவாக்கினார்கள். இப்படிப் பார்த்தால் அவர்கள் தமிழர்களுடன் தான் நிற்க வேண்டும். ஆனால், கடந்த ஜெனிவாத் தீர்மானத்தின்போது தென்சூடான் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாகத்தான் வாக்களித்தது.

தென்சூடான் மட்டுமல்ல, சில லத்தீன் அமெரிக்க நாடுகளின் நிலைப்பாடும் அத்தகையதுதான். இந்த நாடுகள் அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகளுக்கு எதிராகத்தான் முடிவுகளை எடுத்தனவே தவிர நீதி கோரி நிற்கும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக அல்ல.

எனவே, ராஜிய உறவுகள் நீதி நெறிகளின் மீது கட்டியெழுப்பப்படுவதில்லை. அவை முழுக்க முழுக்க புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார நலன்களின் மீதே கட்டியெழுப்பப்பட்டுள்ளன.

இத்தகைய ஒரு குரூரமான பூகோளப்; பின்னணியில் ஈழத்தமிழர்கள் நீதிமான்களிடம் தான் நீதி கேட்க வேண்டுமென்றால் யாரிடம் நீதி கேட்பது?. ஜெனிவாவில் தமிழர்களுக்கு ஆதரவாகத் தீர்மானத்தைக் கொண்டு வரும் அமெரிக்காதான் உலகின் மிகப் பெரிய இனப் படுகொலையாளி என்று ஓர் குற்றச்சாட்டு உண்டு. ஏனெனில், அமெரிக்கப் பூர்வ குடிகளான செவ்வந்தியர்களின் புதை மேட்டின் மீதே அமெரிக்கா கட்டியெழுப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, ‘நூரம்பேர்க் தீர்ப்பாயத்தின் முன் கொண்டு வந்து நிறத்தப்பட்டால் இரண்டாம் உலக மகாயுத்தத்திற்கு பின் அமெரிக்காவை ஆண்ட எல்லா அரசுத் தலைவர்களையும் தூக்கில் போட வேண்டியிருக்கும்” என்று அமெரிக்க அறிஞராகிய நோஆம் சொம்ஸ்கி கூறுகிறார்.

ஜெனிவாக் கூட்டத் தொடர்களில் இலங்கைத்தீவில் இடம்பெற்றது இனப்படுகொலையே என்று நிரூபிப்பதற்காக தமிழர்கள் தீவிரமாகச் செயற்பட்டு வருகிறார்கள். ஆனால், இனப்படுகொலை மற்றும் மனித குலத்துக்கெதிரான குற்றச் செயல்கள் போன்றவை தொடர்பான தொடக்க கால விவாதங்களின் போது அமெரிக்காவின் தென்பகுதியைச் சேர்ந்த செனற்றர்கள் இனப்படுகொலை என்ற வார்த்தையைத் தவிர்க்க விரும்பியதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். ஏனெனில், கறுப்பின மக்களுக்கு அவர்கள் இழைத்த கொடூமைகளுக்கு எதிராக அந்தச் சொல் பிரயோகிக்கப்படக்கூடும் என்ற அச்சமே காரணம்.

எனவே, தமிழர்கள் நீதிமான்களிடம் தான் நீதிகேட்க வேண்டும் என்றால், தேவராஜ்ஜியம் என்ற ஒன்று வரும் வரை காத்திருக்க வேண்டியதுதான். ஆனால், அதற்கிடையில் தோற்கடிக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் இனத்துவம் நீர்த்துப்போய் விடக்கூடும்.

ஏன் அதிகம் போவான். ஈழத் தமிழர்கள் மத்தியில் தோன்றிய ஆயுத இயக்கங்கள் தங்களுக்கிடையில் மோதியபோதும் ஒன்று மற்றவற்றை தோற்;கடித்தபோதும் தமது அரசியல் எதிரிகளைத் தண்டித்த போதும், முஸ்லிம் மக்களைக் கையாண்டபோதும் மேற்படி அரசியல் அறமும் நீதி நெறியும் முழுமையாகப் பின்பற்றப்பட்டனவா? என்ற கேள்விக்கு என்ன பதில்? விளைவுகள் வழிவகைகளை நியாயப்படுத்திவிடும் என்பது தானே பொதுவான ஒரு விளக்கமாகக் காணப்பட்டது? ‘நாய் விற்ற காசு குரைக்காது” என்று தானே நியாயம் கூறப்பட்டது?

எனவே, பாதிக்கப்பட்டவர்களும் அரசற்ற தரப்புமாக உள்ள மக்கள் கூட்டங்கள் குற்றவாளிகளிடம் தான் நீதி கேட்கவேண்டிய ஒரு குரூரமான பூகோள யதார்த்தமே இப்பொழுது நிலவுகிறது. மனுநீதி கண்;ட சோழனின் கதையை வேண்டுமானால் பாடப் புத்தகத்தில் போடலாம். ஆனால், நவீன அரசியல் வாரலாற்றில் அதற்கு இடமில்லை.

அரசியல் அதிகாரத்திறகும் நீதி நெறிகளுக்கும் இடையில் ஏதாவது ஒரு சமநிலையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று அரசியல்வாதிகள் முயற்சிக்கப்போவதில்லை. அதை தத்துவஞானிகளும் புத்திஜீவிகளும், படைப்பாளிகளும், செயற்பாட்டாளர்களும், ஊடகவியலாளர்களும் முடியுமானால் மத நிறுவனங்களும் தான் செய்ய வேண்டியிருக்கிறது. பிளாட்டோ கனவு கண்டது போல ஞானிகள் அதாவது, அறிஞர்களே தலைவர்களாகும் ஒரு காலம் வருமாயிருந்தால் அரசியல் அதிகாரத்துக்கும் அறநெறிக்கும் இடையிலான தூரம் ஒப்பீட்டளவிற் குறையக்கூடும். அல்லது கோட்பாட்டு அடித்தளத்தின் மீது அல்லது ஆன்மீக எழுச்சிகளின் மீது அரசுகள் அல்லது பேரசுகள் கட்டியெழுப்பப்படும்போது நிலைமைகள் சாதகமாக மாறக்கூடும். கொமியூனிசத்தின் எழுச்சியையடுத்து உலகம் இரு துருவங்களாகப் பிளவுண்டிருந்தபோது அரசற்ற தரப்புகளுக்கு ஏதாவது ஒரு துருவத்தின் பாதுகாப்பு இருந்ததை இங்கு சுட்டிக்காட்டலாம்.

பலவீனமான நலிந்த மக்கள் கூட்டங்கள் இரு துருவ இழுவிசைகளுக்கிடையில் சுழித்துக்கொண்டோடக்கூடிய ஒரு பரப்பு அப்பொழுது இருந்தது. அமெரிக்க ராஜதந்திரியான சமந்தா பவர் 2001ஆம் ஆண்டு அற்லான்ரிக் சஞ்சிகையில் ஒரு கட்டுரையில் எழுதியதுபோல, இனப்படுகொலைகளுக்கு by stander ஆக நிற்கும் ஐ.நா. மன்றம் அப்பொழுது இருக்கவில்லை.

அதாவது, துருவ இழுவிசைகள் அதிகரிக்கும்போது உலகின் அரசற்ற தரப்புகளுக்குப் பாதுகாப்பு ஒப்பீட்டளவில் அதிகம் எனலாம். உலக ஒழுங்கு எனப்படுவது அரசுகளின் ஒழுங்குதான். அரசற்ற தரப்புக்களின் ஒழுங்கல்ல. அனைத்துலகச் சட்டம், அனைத்துலக நீதி என்பவையெல்லாம் அரசுகளால் உருவாக்கப்பட்டவைதான். அரசற்ற தரப்புகளால் அல்ல. எனவே, அரசுகளால் உருவாக்கப்பட்ட ஒரு உலக ஒழுங்கு அதிகபட்சம் அரசுகளுக்கே சேவகம் செய்யும். அரசற்ற தரப்புகளுக்கு அல்ல.

இந்நிலையில், இரு துருவ அல்லது பல துருவ உலக ஒழுங்கு எனப்படுவது அரசற்ற தரப்புகளிற்கு ஒப்பீட்டளவிற் அதிகரித்த வாய்ப்புக்களை வழங்குகிறது. அரசு ஒரு துருவத்தை ஆதரித்தால் அதன் எதிர்த்துருவம் அரசற்ற தரப்பை ஆதரிக்கும். அப்படிப்பட்ட ஓர் அரசியற் சூழலில் அரசற்ற தரப்பு தன்னை எப்படியாவது சுதாகரித்துக் கொள்ளக்கூடியதாயிருக்கும். ஆனால், கெடுபிடிப் போர் முடிவுக்கு வந்தபோது ஒரு புறம் சிறிய புதிய பல நாடுகள் உருவாகின. இன்னொரு புறம் அரசற்ற தரப்புகள் பல வேட்டையாடப்பட்டன.

இத்தகையதொரு பின்னணியில்தான் ஐ.நா. மன்றம் இனப்படுகொலைகள் மற்றும் சிவில் யுத்தங்களின் பார்வையாளராக மாறியது. இக்கட்டுரை எழுதப்படும் இந்நாளிலும் அது சூடான், தென்சூடான், மத்திய ஆபிரிக்க குடியரசு, சிரியா, உக்ரெய்ன் ஆகிய நாடுகளில் பார்வையாளராகவே காணப்படுகிறது. சிரியாவில் மாதமொன்றுக்கு 5000 பேர் வரையில் கொல்லப்படுகிறார்கள்.

அண்மையில் ருவண்டாப் படுகொலைகளின் 20ஆவது ஆண்டை நினைவு கூர்ந்தபோது ஐ.நா. செயலர் வெளியிட்ட அறிக்கைக் கூடாகக் கிடைக்கும் சித்திரமும் அதுதான். கடந்த சுமார் இருபது ஆண்டு காலமாக ஐ.நா. ஒரு கையாலாகாத பார்வையாளராகத்தான் காணப்படுகிறது என்பது.. எனவே, துருவ இழுவிசைகள் உருவாகும் போது சில சமயம் அரசற்ற தரப்புகளுக்கு வாய்ப்பான பரப்புகள் திறக்கப்படலாம். அல்லது குறைந்த பட்சம் ஆபிரிக்க ஒன்றியத்தைப் போன்ற பிராந்திய ஒன்றியங்கள் உருவாகும் போதும் நிலைமைகள் அரசற்ற தரப்புகளிற்கு ஒப்பீட்டளவில் பரவாயில்லாமல் அமையலாம். மற்றும்படி அறநெறிகளுக்கும் அரசியல் அதிகாரத்திற்கும் இடையில் மனுநீதி கண்ட சோழன் பாணியில் ஒரு சமநிலையை உருவாக்குவது கடினமானது.

உலகளாவில் இந்தப் படிப்பினைகளின் அடிப்படையிற்தான் ஈழத் தமிழர்கள் சிந்திக்க முடியும். நரேந்திர மோடி வந்தாலென்ன யார் வந்தாலென்ன இந்தியப் பேரரசு எனப்படுவது ஈழத்தமிழர்களைப் பொறுத்த வரை கையாளப்பட வேண்டிய இன்றியமையாத ஒரு தரப்புத்தான். அதை நட்பு சக்தியாகவோ பகைச் சக்தியாகவோ பார்த்தால் தான் பிரச்சினை. மாறாக, கையாளப்பட வேண்டிய ஒரு தரப்பாகப் பார்த்தால் பிரச்சினையே இல்லை.

18-04-2014

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *