தென்னாபிரிக்க முயற்சிகள் வெற்றிபெறுமா?

தென்னாபிரிக்காவின் துணை ஜனாதிபதியும் விசேட தூதுவருமாகிய சிறில் ரமபோஷா இலங்கை வந்து போயிருக்கிறார். ஐ.நா.மனித உரிமை ஆணையகத்தின் விசாரணைக் குழு அதன் செயற்பாட்டை தொடங்கவிருக்கும் ஒரு பின்னணியில் அவருடைய விஜயம் நிகழ்ந்திருக்கிறது. மற்றொரு தென்னாபிரிக்கரான நவிப்பிள்ளையின் வருகையை எரிச்சலோடு எதிர் கொண்ட அரசாங்கம் ரமபோஷாவை அமைதியாக வரவேற்றிருக்கிறது.

Rama mahinda_CIஒரு அரசியல்வாதி என்பதற்கும் அப்பால் ரமபோஷா ஒரு வெற்றிபெற்ற தொழிற்சங்கவாதியும் செயற்பாட்டாளரும் பெரு வணிகருமாவார். தென்னாபிரிக்காவின் சுரங்கத் தொழிலாளர்களுக்கான ஆகப் பெரிய தொழில் சங்கத்தை அவர் கட்டியெழுப்பினார். அதேசமயம், சுரங்கத் தொழில்துறையும் உட்பட தொலைத் தொடர்பு, வங்கிகள், காப்புறுதி, நில வாணிபம் மற்றும் சக்தி வளத்துறை போன்ற இன்னோரன்ன துறைகளில் முதலீடு செய்திருக்கும் தென்னாபிரிக்காவின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவராகவும் காணப்படுகிறார். அவருடைய சொந்த வர்த்தக சாம்ராஜ்யமான ~hண்டுகா வணிக குழுமத்தின் நிர்வாக இயக்குநராகவும் வேறு பல வணிக குழுமங்களின் நிர்வாக சபை உறுப்பினராகவும், கொக்கக்கோலா, யூனிலீவர் ஆகிய உலகளாவிய பெரு வணிக குழுமங்களின் அனைத்துலக ஆலோசகர் சபை உறுப்பினராகவும் உள்ளார். அவருடைய சொத்துக்களின் மொத்த பெறுமதி 675 மில்லியன் டொலர்கள் என்று மதிப்பிடப்படுகிறது.

இது காரணமாகவே அவருடைய இலங்கை விஜயத்திற்கு வேறொரு விளக்கமும் கொடுக்கப்பட்டது. இத்தீவில் முதலீடு செய்யத் தயாராக இருக்கும் உலகளாவிய பெரு வணிக குழுமங்களின் நலன்களைப் பிரதிபலிப்பவராகவும் அவர் இங்கு வந்து போனதாக கூறப்படுகிறது.

இது தவிர 2012இல் தென்னாபிரிக்காவில் நிகழ்ந்த ஒரு படுகொலை தொடர்பாகவும் அவர் விமர்சிக்கப்படுகிறார். மரிகானா என்னுமிடத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுரங்கத் தொழிலாளர்கள் மீது பொலிஸார் சுட்டத்தில் 34 பேர் கொல்லப்பட்டார்கள். இவர்களில் அநேகர் முதுகுப்புறமிருந்தே சுடப்பட்டதாக விசாரணைகளின் போது தெரிய வந்தது. இதற்கான பழி ரமபோஷாவின் மீது வீழ்கிறது.

இத்தகைய எல்லா விமர்சனங்களுக்கும் அப்பால் அவர் பல துறைசார் ஒழுக்கங்களின் கூட்டுக் கலவையாகப் பார்க்கப்படுகிறார். ஒரு தொழில் சங்க வாதியாகவும், செயற்பட்டாளராகவும் அரசியல் வாதியாகவும் பெருவணிகராகவும், சமரசப் பேச்சுவார்த்தைகளில் நிபுணத்துவம் பெற்றவராகவும் அவர் பிரபல்யம் அடைந்திருக்கிறார்.

அவர் என்றைக்குமே ஆபிரிக்க கொம்யூனிஸ்ற் கட்சியில் உறுப்பினராக இருந்ததில்லை. எனினும் தன்னை ஒரு செயற்படும் சோசலிஸ்ட் என்று அழைத்துக் கொள்வாராம்.
இப்படியாக பல்வேறு ஒழுக்கங்களின் ஒரு நூதனக் கலவையாகக் காணப்படும் ரமபோஷா இலங்கைத்தீவின் நல்லிணக்க முயற்சிகளில் எத்தகையதொரு பாத்திரத்தை வகிக்கப் போகிறார்?

அவருடைய வருகை தொடர்பாக பல்வேறு வகைப்பட்ட ஊகங்கள் நிலவியபோதும், அவர் வந்து சென்ற பின் கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில் தென்னாபிரிக்காவானது இலங்கைத்தீவிற்கு பின்வரும் விவகாரங்களில் உதவி புரியக் கூடும் என்று தோன்றுகின்றது.

01. நல்லிணக்க முயற்சிகளில் தென்னாபிரிக்க அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது.

02. அரசாங்கத்திற்கும், கூட்டமைப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் தென்னாபிரிக்காவின் அனுவபங்களின் அடிப்படையில் உதவி புரிவது.குறிப்பாக இறுதித் தீர்வொன்றை நோக்கிய நகர்வில் இலங்கைத்தீவின் அரசியல் யாப்பில் செய்யப்படக்கூடிய மாற்றங்கள் தொடர்பில் தென்னாபிரிக்க அனுபவங்களின் அடிப்படையில் உதவி புரிவது.

இவ்விரண்டையும் சற்று ஆழமாகப் பார்க்கலாம்.

முதலில் ஒன்றை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். நல்லிணக்க முயற்சிகள் எனப்படுபவை பெரும்பாலும் பிணக்குக்குப் பிந்திய (post conflict) கால கட்டத்திற்கு உரியவை. இது தொடர்பான உலகப் பொது அனுபவம் அவ்வாறு தான் உள்ளது. ஆனால், இலங்கைத்தீவில் இப்பொழுது நிலவுவது பிணக்குக்குப் பின்னரான ஒரு கால கட்டமா?

சில அனைத்துலக நிறுவனங்கள், குறிப்பாக, அரச சார்பற்ற நிறுவனங்களும், அரச நிறுவனங்களும் அவ்வாறு தான் அழைக்கின்றன. இலங்கை விவாகாரங்களில் அதிக தேர்ச்சி மிக்க அவதானிகளும் நிறுவனங்களும் இக்கால கட்டத்தை போருக்குப் பின்னரான காலம் (post war) என்று அழைக்கின்றனர். ஆனால், இலங்கைத்தீவில் இப்போது நிலவுவது பிணக்குக்குப் பின்னரான ஒரு கால கட்டமும் அல்ல போருக்குப் பின்னரான ஒரு காலகட்டமும் அல்ல. போர் அதன் மெய்யான பொருளில் முடிவுக்கு வந்திருந்தால் உயர் பாதுகாப்பு வலயங்களுக்கு தேவையிருந்திருக்காது. சிவில் வாழ்வில் படைத்துறை பிரசன்னத்திற்கும் தேவையிருந்திருக்காது. கூட்டமைப்பானது தென்னாபிரிக்க உப ஜனாதிபதியிடம் படைத்துறை மய நீக்கம் பற்றி உரையாட வேண்டிய தேவையும் வந்திருக்காது.

2009 மேக்கு பி;ன்னரும் படைத்துறை மய நீக்கம் செய்ய முடியாத ஓர் அரசியல் சூழலை யுத்தத்திற்குப் பின்னரான ஒரு சூழல் என்று அழைக்க முடியாது. இறந்தவர்களை இப்பொழுதும் கணக்கெடுக்க முடியாத ஒரு அரசியற் சூழலை போருக்குப் பிந்திய சூழல் என்று கூறமுடியாது. நாட்டின் ஒரு பகுதியினர் இறந்தவர்களை நினைவு கூர முடியாத ஓர் அரசியற் சூழலை போருக்குப் பிந்தியது என்று அழைக்க முடியாது.

எனவே, மிகச் சரியான பொருளிற் கூறின் இப்போது நிலவுவது ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான ஒரு கால கட்டமே. பௌதீக அர்த்தத்தில் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்துவிட்டன. ஆனால், உளவியல் அர்த்தத்தில் போர்ச் சூழல் முற்றாக நீக்கவில்லை. மனதளவில் நாடு வென்றவர்களுக்கும் தோற்றவர்களுக்குமிடையில் இப்பொழுதும் இரண்டாகப் பிளவுண்டே இருக்கின்றது. எனவே, இது பிணக்குக்குப் பிந்திய கால கட்டமும் அல்ல. போருக்குப் பிந்திய கால கட்டமும் அல்ல. ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான ஒரு கால கட்டம்தான்.

இதை இன்னும் விரித்துக்கூறலாம். 2009 மே மாதம் தோற்கடிக்கப்பட்டது ஒரு மூல காரணம் அல்ல. அந்த இயக்கம் ஒரு விளைவு மட்டுமே. மூல காரணம் அந்த இயக்கம் தோன்ற முன்னரே இருந்தது. அந்த இயக்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் இருக்கிறது. அண்மையில் முஸ்லிம்களின் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளிலும் அதன் சாயல் தெரிந்தது. இப்படியாக மூலகாரணம் அப்படியே இருக்கத்தக்கதாக ஒரு விளைவே தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. மூலகாரணம் – அதாவது பிணக்கு இன்னமும் தீர்க்கப்படவில்லை என்பதால் தான் இக்கால கட்டத்தை பிணக்குக்குப் பின்னரான கால கட்டம் என்று அழைக்க முடியாதுள்ளது.

பிணக்குக்குப் பின்னரான ஒரு கால கட்டத்தில்தான் அல்லது பிணக்கின் வேர்களை களைய முற்படும் ஒரு கால கட்டத்தில் தான் நல்லிணக்கத்தைப் பற்றிச் சிந்திக்கலாம். பிணக்கும் நல்லிணக்கமும் ஒரே இடத்தில் இருக்க முடியாது. இந்த விளக்கத்தின் அடிப்படையில் பார்த்தால் இலங்ஙைகத் தீவானது நல்லிணக்கத்திற்குத் தேவையான அடிப்படைத் தகுதியை இன்னமும் பெறவில்லை. இந்த லட்சணத்தில் தென்னாபிரிக்க அனுபவம் மட்டுமல்ல, வேறெந்த அனுபவத்தைக் கற்றுக்கொண்டாலும் கூட இலங்கைத்தீவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியுமா?

இதுவொரு அடிப்படைக் கேள்வி. இதைவிட மற்றொரு முக்கிய கேள்வியும் உண்டு. இலங்கையும் தென்னாபிரிக்காவும் ஒன்றா?

நிச்சயமாக இல்லை. இரண்டும் முற்றிலும் வேறான களங்கள். தென்னாபிரிக்காவில் பெரும்பான்மை கறுப்பினத்தவர்களை சிறுபான்மை வெள்ளையர்கள் ஒடுக்கி வந்தார்கள். அதற்கு மேற்குலகின் ஆதரவும் இருந்தது. கெடுபிடிப் போரின் முடிவையடுத்து உலக ஒழுங்கு குலைந்த போது கறுப்பினத்தவர்கள் விடுதலை பெற முடிந்தது. எனவே, அங்கு வெற்றிபெற்றது ஒடுக்கப்பட்ட மக்களே. அரசியல் அதிகாரம் அவர்களிடமே கையளிக்கப்பட்டது. இந்நிலையில் தங்களை மிருகங்களைப் போல அவமதித்து ஒடுக்கி வந்த வெள்ளையார்களை வெற்றிபெற்ற கறுப்பினத்தவர்கள் எவ்வாறு நடாத்தினார்கள் என்பதே நல்லிணக்கத்திற்கான தென்னாபிரிக்க முன்னுதாராணம் ஆகும். அவர்கள் வெள்ளையர்களை பெருமளவிற்குப் பழிவாங்கவில்லை. மனித குலத்திற்கு எதிரான குற்றச் செயல்களைப் புரிந்த வெள்ளையர்கள் கூட மன்னிக்கப்படும் ஒரு நிலை அங்கே காணப்பட்டது. பழி வாங்கலை விடவும் தண்டிப்பதைவிடவும் மன்னிப்பின் மூலம் நல்லிணக்கத்திற்கான அடித்தளத்தைப் பலப்படுத்த முடியும் என்பதே தென்னாபிரிக்க முன்னுதாராணம் ஆகும்.

இது காரணமாக உள்நாட்டுச் சட்டங்களின் படியும், அனைத்துலக சட்டங்களின் படியும் தண்டிக்கப்பட வேண்டிய பல குற்றவாளிகள் மன்னிக்கப்பட்டார்கள். அங்கே நீதி எனப்படுவது சட்டத்தின் பாற்பட்டதாக இருக்கவில்லை. நல்லிணக்கத்தின் பாற்பட்டதாகவே இருந்தது. மன்னிப்பே தென்னாபிரிக்க நல்லிணக்கத்தின் ஊற்று மூலமாகும்.

உதாரணமாக, தென்னாபிரிக்க கிரிக்கெட் குழுவில் ஆதிக்கம் பெற்றிருந்த வெள்ளையர்கள் உடனடியாக அகற்றப்படவில்லை. படிப்படியான இயல்பான மாற்றத்திற்கே அங்கு முன்னுரிமை தரப்பட்டது. இன்று வரையிலும் தென்னாபிரிக்க கிரிக்கெட் குழுவானது பெரியளவிலான மாற்றங்களுக்கு உள்ளாகவில்லை என்பதை இங்கு சுட்டிக்காட்டவேண்டும்.

இதையெல்லாம் செய்வதற்கு அங்கே ஒரு மண்டேலா இருந்தார். மன்னிப்பே நல்லிணக்கத்திற்கான நீதி என்று வாழ்ந்து காட்டிய காரணத்தால் அவர் காந்திக்கு அடுத்தபடியாக காந்தியத்தின் அடுத்த கட்ட உதாரணமாக போற்றப்படுகிறார். ஆனால், இலங்கைத்தீவின் கள யதார்த்தம் அத்தகையதா?

தென்னாபிரிக்காவில் ஒடுக்கப்பட்டவர்கள் வெற்றி பெற்றார்கள். அந்த வெற்றிதான் அவர்களுக்குக் கிடைத்த நீதி. அந்த நீதியின் பின்னணியில் அவர்கள் தம்மை ஒடுக்கியவர்களை மன்னிக்கத் தயாராக இருந்தார்கள். ஆனால், இலங்கைத்தீவில் நிலைமை அத்தகையதா? நிச்சயமாக இல்லை. இங்கு வெற்றிபெற்றிருப்பது பெரும்பான்மை. தோல்வியுற்றிருப்பது சிறுபான்மை. வெற்றிபெற்றிருப்பது ஒடுக்கிய தரப்பு. தோல்வியுற்றிருப்பது ஒடுக்கப்பட்ட தரப்பு. எனவே, இங்கு வெற்றி என்பதே ஒடுக்கு முறையின் உச்ச கட்டவளர்ச்சி தான். ஆயின் ஒடுக்கு முறையின் உச்சக் கட்ட வளர்ச்சி எப்படி நீதியாகும்? இந்த நீதியில் இருந்து தொடங்கி எப்படி நல்லிணக்கத்தை அடைய முடியும்? மாறாக, தோற்கடிக்கப்பட்ட தரப்பாகவும்; ஒடுக்கப்பட்ட தரப்பாகவும், சிறுபான்மையாகவும் உள்ள தமிழர்களுக்கு நீதி வழங்கப்படுவதில் இருந்தே இலங்கைத்தீவில் நல்லிணக்கத்தை அதன் சரியான பொருளில் தொடங்க முடியும். இது தென்னாபிரிக்க அனுபவத்திலிருந்து முற்றிலும் வேறானாது. எனவே, தென்னாபிக்காவிடமிருந்து இலங்கை தீவு எதைத்தான் கற்றுக்கொள்ள முடியும்?.

இங்கு வருகை தர முன்பு, ரமபோஷா குழு கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையில் சொந்தமாக அரசமைப்புச் சீர்திருத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு உதவுவதே எமது நோக்கமாகும் என்று கூறியிருந்தது. இதற்கு பல மாதங்களுக்கு முன்னரும் தென்னாபிரிக்கத் தூதரகத்தில் தமிழ் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனான சந்திப்பு ஒன்றின் போது தென்னாபிரிக்க ராஜதந்திரிகள் இதை ஒத்த கருத்தைத் தெரிவித்திருந்தார்கள். அதாவது, தென்னாபிரிக்க நல்லிணக்க முயற்சிகளின் போது அரசியலமைப்பு சீர்திருத்தமானது எத்தகைய முக்கியமான பாத்திரத்தை வகித்தது என்பதை அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தார்கள்.

உண்மைதான். பிணக்கிற்குப் பின்னரான ஓர் அரசியல் சூழலில் யாப்பு உருவாக்கம் அல்லது யாப்பை மறுசீரமைப்பது என்பது எல்லாவற்றிற்கும் அடிப்படையானது. இது தொடர்பில் யாப்பியலானது அண்மை தசாப்தங்களில் பரந்து விரிந்த மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. குறிப்பாக, கெடுபிடிப் போருக்குப் பின்னரான ஓர் உலகச் சூழலில் யாப்பியல் எனப்படுவது பல்துறை ஒழுக்கங்களையும் ஒன்றிணைக்கும் ஒரு கூட்டு அறிவியல் ஒழுக்கமாக புதிய வளர்ச்சிகளைப் பெற்று வருகிறது. இத்தகையதொரு பின்னணியில் தென்னாபிரிக்காவின் அரசமைப்பு சீர்திருத்திருத்தமானது ஆழமாகக் கற்கப்பட வேண்டியதொன்று. ஆனால், இது எந்த வகையில் இலங்கைக்கு உதவ முடியும்?

பிணக்கிற்குப் பின்னரான ஓர் அரசியற் சூழலில் தான் யாப்பு உருவாக்கம் பற்றியோ அல்லது யாப்பை த்திருத்துவது பற்றியோ சிந்திக்க முடியும். ஆனால், இலங்கைத்தீவில் இப்பொழுது இருப்பது பிணக்கிற்குப் பின்னரான ஒரு கால கட்டம் அல்ல. இப்போதிருக்கும் அரசாங்கம் முழுக்க முழுக்க சிங்கள மக்களின் வாக்குகளிலேயே தங்கியிருக்கிறது. அது தமிழர்களுடைய வாக்குகளில் தங்கியில்லை. எதிர்காலத்தில் முஸ்லிம்களின் வாக்குகளையும் அது எப்படிப் கையாளும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். இவ்விதமாக பெரும்பான்மை மக்களின் வாக்குகளில் தங்கியிருக்கின்றதும் அந்த பெரும்பான்மை வாக்குகளை கவர்வதற்காக வெற்றிவாதத்திற்குத் தலைமை தாங்குகின்றதுமாகிய ஓர் அரசாங்கம் இப்போதுள்ள யாப்பை தனக்குச் சாதகமாகத் திருத்துமா? அல்லது பாதகமாகத் திருத்துமா? கடந்த ஐந்தாண்டு கால அனுபவத்தை வைத்துப் பார்த்தால், இலங்கைத்தீவின் யாப்பானது மேலும் மேலும் மூடுண்டு செல்லக் காணலாம்.இனப்பிரச்சினைக்கான தீர்வைப்பொறுத்தவரை இலங்கைத்தீவின் யாப்பே ஒரு பிரதான தடை என்பதை ஏற்கனவே யாப்பியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

யாப்பியல் நிபுணர்கள்; சிறுபான்மையினருடைய நலன்கள் சம்பந்தப்பட்ட முடிவுகளை எடுக்கும் போது பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையிலான ஜனநாயகத்தை ஏற்றுக் கொள்வதில்லை. யாப்பை உருவாக்கும்போதோ அல்லது திருத்தும் போதோ பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையிலான ஜனநாயகத்திற்கும் சிறுபான்மை யினருடைய நலன்களுக்கும் இடையில் மோதல்கள் ஏற்படுவதை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். பெரும்பான்மை ஜனநாயகத்திற்கூடாக முடிவுகளை எடுத்தால் அது யாப்பு உருவாக்கத்தின்போது அல்லது யாப்பை மறுசீரமைக்கும் போது சிறுபான்மையினரைப் பலியிடுவதாக அமைய முடியும் என்பது அவர்களுடைய வாதமாயுள்ளது.இலங்கைத்தீவின் யாப்பு வரலாறு எனப்படுவது அப்படித்தான் காணப்படுகிறது. இலங்கைத்தீவின் யாப்பு வரலாறு எனப்படுவது பன்மைத்துவத்திற்கும் பல்லினத்தக்மைக்கும் எதிரான திசையிலேயே நகர்ந்து வந்திருக்கிறது. குறிப்பாக கடந்த அய்ந்தாண்டுகளில் இலங்கைத்தீவின் அரசியலானது மேலும் மேலும் ஓரினத்தன்மை மிக்கதாக ஒற்றைப்படைத்தன்மை மிக்கதாக தட்டையானதாக மாறிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், வெற்றி வாதத்திற்கு தலைமை தாங்கும் ஓர் அரசாங்கமானது தென்னாபிரிக்காவிடமிருந்து கற்பதற்கு என்ன இருக்கிறது?
எனவே, மேற்கண்டவை அனைத்தையும் தொகுத்துப்பார்த்தால் ஒரு விடயம் படிகம் போலத் தெளிவாகத் தெரியும். அதாவது, தென்னாபிரிக்கத் துதுக்குழுவின் விஜயமானது எதிர்பார்க்கப்படும் விளைவுகளைத் தரப்போவதில்லை.

மனித உரிமைகள் ஆணையகத்தின் விசாரணைகளால் உருவாகப் போகும் நெருக்கடிகளிலிருந்து தப்புவதற்கு அரசாங்கம் இதைப் பற்றிக்கொள்ள எத்தனிக்கலாம். சில சமயம் மேற்கு நாடுகளே அதை விரும்பவும் கூடும். ஒரு புறம் அழுத்தங்களைப் பிரயோகித்துக் கொண்டு மறுபுறம் அதிலிருந்து விடுபடுவதற்கான புதிய தெரிவுகளையும் உருவாக்கிக் கொடுப்பது என்பதை ஓர் உத்தியாகவும் விளங்கிக்கொள்ளலாம்.

ஆனால், தென்னாபிரிக்க அனுபவங்களிலிருந்து எதையும் கற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு நாடு மூடப்பட்டிருக்கிறது. பிணக்கும் நல்லிணக்கமும் ஒன்றாகப் பயணம் செய்ய முடியாது என்பதை ரமபோஷாவுக்கு யார் எடுத்துக்கூறுவது?

11-07-2014

Related Articles

1 Comment

Avarage Rating:
  • 0 / 10
  • Rajan Chelliah , 14/07/2014 @ 10:59 AM

    Dear Nilanthan, Please translate/ rewrite this article in English, and try to publish it anywhere. This article deserves to be read by policy makers and influential People. Thanks. – Rajan norway

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *