மாகாண ஆளுனர் எனப்படுபவர் அரசுத் தலைவரின் முகவரைப் போன்றவர். இலங்கைத் தீவின் மாகாணக் கட்டமைப்பைப் பொறுத்தவரை அவர் கொழும்பு மைய அரசாங்கத்தின் நலன்களைப் பேணும் ஒருவர். எனவே ஓர் ஆளுனரைப்பற்றி மதிப்பிடுவதென்றால் முதலில் அவரை நியமிக்கும் அரசுத் தலைவரை மதிப்பிட வேண்டும். அவருடைய அரசியல் இலக்குகள் எவையெவை என்று மதிப்பிட வேண்டும். மைத்திரிபால சிறிசேன இன்னமும் ஓர் ஆண்டு வரை தான் பதவியிலிருக்கப் போகிறார். கடந்த ஒக்ரோபர் மாதம் அவர் ஆட்சிக் கவிழ்ப்பு ஒன்றைச் செய்திருந்தார். அதில் அவர் தனக்கு வாக்களித்த சிங்கள தமிழ் முஸ்லிம் மக்களுக்குப் பொறுப்புக் கூறும் விதத்தில் நடந்து கொள்ளவில்லை. அவராக ஒப்புக்கொண்டு உருவாக்கிய 19ஆவது திருத்தத்திற்கும் யாப்பிற்கும் பொறுப்புக் கூறவில்லை. கூட்டரசாங்கத்தின் நாடாளுமன்றத்திற்கும் பொறுப்புக் கூறவில்லை. முடிவில் உச்ச நீதிமன்றம் அவரை யாப்புக்குப் பொறுப்புக்கூற வைத்தது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அவருடைய முடிவுகளுக்கு எதிராக வந்தது. நிறைவேற்று அதிகாரமுடைய ஒரு அரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் பொறுப்பை உணர்த்த வேண்டி வந்தது. இதுவே மேற்கத்தய ஜனநாயக நாடுகள் என்றால் குறிப்பிட்ட தலைவர் உடனே பதவியைத் துறந்திருப்பார். ஆனால் மைத்திரி அப்படியெல்லாம் வெட்கப்படவில்லை. பதிலாக மகிந்த முன்பு செய்ததுபோல தாய்லாந்துக்குப் போய் மனதைத் திடப்படுத்தும் தியானப் பயிற்சிகளைப் பெற்றுவிட்டு வந்து வழமைபோல சிரித்துக்கொண்டு திரிகிறார்.
ஆயின் வட, கிழக்கு ஆளுனர்களை மைத்திரி எவ்வாறான ஒரு நோக்கு நிலையிலிருந்து நியமித்திருப்பார்? அவர் இப்பொழுது யாருடைய நலன்களைப் பிரதிபலிக்கிறாரோ அவர்களுடைய நோக்கு நிலையிலிருந்தே நியமித்திருப்பார். ஒக்ரோபர் ஆட்சிக் குழப்பத்திற்குக் காரணம் மைத்திரி தன்னுடைய லிபறல் முகமூடியைத் தூக்கி வீசிவிட்டு சிங்கள பௌத்த பெருந்தேசியவாதத்துடன் கூட்டுச் சேர்ந்தமைதான். எனவே சிங்கள–பௌத்த பெருந் தேசிய வாதத்தின் நோக்கு நிலையிலிருந்துதான் அவர் ஆளுநர்களை நியமித்திருப்பார். ஒக்ரோபர் குழப்பத்தின் போது கூட்டமைப்பும் முஸ்லிம் தலைமைகளும் அவருக்கு எதிராக காணப்பட்டன. தமிழ், முஸ்லிம் தலைமைகளை விலைக்கு வாங்க மைத்திரி – மகிந்த அணியால் முடியவில்லை. இதனால்தான் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி முடிவில் தோற்கடிக்கப்பட்டது.
எனவே தன்னைத் தோற்கடித்த தமிழ் – முஸ்லிம் தரப்புக்களை பலவீனப்படுத்த வேண்டும் என்றே அவர் சிந்திப்பார். இது விடயத்தில் ஒன்றில் முஸ்லிம் மக்களை அரவணைத்து தமிழ் மக்களுடன் மோத விடலாம். அல்லது தமிழ் மக்களுக்குள்ளேயே பிரிவினைகளை ஊக்குவிக்கலாம். முஸ்லிம்களின் வாக்குகள் மகிந்தவுக்குத் தேவை. தென்னிலங்கையில் அவர் ஏற்கெனவே அதற்காக உழைக்கத் தொடங்கி விட்டார். கிழக்கில் தமிழ் முஸ்லிம் முரண்பாடுகளை ஊக்குவிப்பதால் ஒரு புறம் தமிழ் மக்களைப் பலவீனப்படுத்தலாம். இன்னொருபுறம் முஸ்லிம் மக்களை வசப்படுத்த முடியுமா என்று முயன்று பார்க்கலாம். நியமிக்கப்பட்ட புதிய ஆளுநருக்கு எதிராக மட்டக்களப்பில் தமிழ்ப்பகுதிகளில் நேற்று முன்தினம் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வடக்கில் ஒரு தமிழரை ஆளுனராக்கியதன் மூலம் அவர் தமிழ் மக்களின் இதயங்களைக் கவர முயற்சிக்கிறாரா? அல்லது தமிழ் மக்களுக்குள்ளேயே முரண்பாடுகளைத் தூண்டிவிடப் பார்க்கிறாரா?
ஆனால் கலாநிதி சுரேன் ராகவன் நியமிக்கப்பட்ட விதம்பற்றி நன்கு தெரிந்த சுரேனுக்கு நெருக்கமான தமிழ்த்தரப்புக்கள் தரும் தகவல்களின்படி தேசியவாதம் தொடர்பாகவும், சமஷ்டி முறைமை தொடர்பாகவும் சுரேனின் புலமை நிலைப்பாடுகள் எவை என்பதைக் குறித்த போதிய விளக்கங்கள் இன்றி அரசுத்தலைவர் அவரை ஆளுநராக நியமித்திருப்பதாகக் கருதப்படுகிறது.
ஏற்கெனவே இரண்டு முஸ்லிம் ஆளுநர்களை நியமித்திருந்த பின்னணியில் வடக்கிற்கு ஒரு தமிழரை ஆளுநராக நியமிக்க வேண்டுமென்று அவரது ஆலோசகர்கள் அவருக்கு கூறியிருக்கிறார்கள். அதன் பிரகாரம் அவர் டக்ளஸ் தேவானந்தாவை அவ்வாறு நியமிக்க விரும்பியதாகக் கூறப்படுகிறது. ஆனால் டக்ளஸ் தேவானந்தா தவராசாவை அல்லது இணைந்த வடக்குக் கிழக்கின் மாகாணசபைக்குச் செயலராக இருந்த கலாநிதி விக்னேஸ்வரனை நியமிக்குமாறு பரிந்துரை செய்திருக்கிறார். ஆனால் மைத்திரி அவர்களை நியமிக்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அங்கஜன் அவருடைய தந்தையைக் கொண்டுவர விரும்பியதாகவும் ஆனால் மைத்திரி அதையும் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. அதே சமயம் அவர் டான் ரீவியின் அதிபர் குகநாதனை நியமிக்க விரும்பியிருக்கிறார். ஆனால் குகநாதன் அப்பதவியை ஏற்க விரும்பவில்லை. இந்நிலையில் முன்னாள் ஆளுநர் குரேயை மீள நியமிப்பதற்கு மைத்திரி முடிவெடுத்திருக்கிறார். அதற்காக அவரைத் தனது அலுவலகத்திற்கு வருமாறும் அழைத்திருக்கிறார். பதவியேற்பு நிகழ்ந்த அன்று மத்தியானம் வரையிலும் அப்படித்தான் நிலமை இருந்திருக்கிறது. எனினும் கடைசி நேரத்தில் சுரேனை நியமிப்பது என்று முடிவெடுத்திருக்கிறார்.
சுரேன் ஒக்ரோபர் ஆட்சிக்கவிழ்ப்பின் பின் மைத்திரியின் அலுவலகத்தில் ஊடகப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். ஒரு சிங்களப் பெரு வர்த்தகரான சுரேனின் நண்பர் அந்த நியமனத்தைப் பெறுவதற்கு உதவியிருக்கிறார். பின்னர் அவரைத் தமிழ் விவகாரங்களுக்கான ஆலோசகராகவும் மைத்திரி நியமித்திருக்கிறார். சுரேன் சில வாரங்கள் மைத்திரியோடு வேலை பார்த்ததால் ஏற்பட்ட நெருக்கமும் அவருடைய நியமனத்துக்கு ஒரு காரணம். அதோடு சுரேனின் புலமைப் பரப்பு பௌத்தத்தோடு தொடர்புடையதாக இருந்ததால் சிங்களப் பொதுப் புத்திக்கும் சிங்கள அரசியல்வாதிகளுக்கும் அவரை நியமிப்பதில் பெரியளவில் ஆட்சேபனைகள் இருக்கவில்லை.
கலாநிதி சுரேன் ராகவன் ஒரு புலமையாளர். பௌத்த நிறுவனங்களுக்கும் இன முரண்பாடுகளுக்கும் இடையில் உள்ள தொடர்பை தனது ஆய்வுப் பரப்பாகக் கொண்டவர். சிங்களத்தையும், ஆங்கிலத்தையும் அதிகம் புழங்கும் கொழும்பு மைய வாழ்க்கை முறைக்குரியவர். அவருடைய முகநூலில் கூடுதலாகச் சிங்களமும் அதற்கு அடுத்தாக ஆங்கிலமும் புழக்கத்தில் உள்ளன. தமிழைக் காண முடியவில்லை. அவருடைய நெருங்கிய நட்பு வட்டத்திற்குள் கூடுதலாக, சிங்களப் புலமையாளர்களே உண்டு. தமிழ் புலமையாளர்கள் சிலரும் உண்டு. சுரேன் சினிமாவில் அதிகம் ஈடுபாடு கொண்டவர். எந்த மொழியையும் மற்றவர்களைக் கவரும் விதத்தில் பேசக்கூடியவர்.
சுரேனின் அம்மம்மா ஒரு சிங்களப்பெண் தாத்தா கேரளத்தைச் சேர்ந்தவர். எனினும் சுரேனின் தாயார் தமிழ் முறைப்படியே வளர்க்கப்பட்டதாகத் தெரிய வருகிறது. அவருடைய தகப்பனும் கேரளத்தவர்தான். தகப்பன் ஓர் இடதுசாரி என்றும் தெரிய வருகிறது. 83யூலைத் தாக்குதல்களின்போது அவர்களுடைய கொழும்பு வீடு தாக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய அயலவர்களான சிங்களப் பொதுமக்கள் அவர்களைப் பாதுகாத்திருக்கிறார்கள். அதன் பின் அந்தக் குடும்பம் கிறிஸ்தவத்திற்கு மதம் மாறியதாகவும் ஒரு தகவல் உண்டு. அவருடைய கேரளப் பூர்வீகம் காரணமாக அவர் மலையாளம் பேசுவார். தவிர தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மூன்று மொழிகளும் தெரியும். அவருடைய புலமைப் பரப்புக் காரணமாக அவர் கொழும்பில் உள்ள சிங்களப் புலமையாளர்களுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருக்கிறார்.
திருமதி.சந்திரிக்கா, மங்கள சமரவீர ஆகியோருக்கு ஊடாக சிறீலங்கா சுதந்திரக் கட்சியோடு தொடர்புபட்டுள்ளார். 1990களின் நடுப்பகுதியில் ஐ.ரி.என் தொலைக்காட்சியின் சிங்களப் பிரிவிற்கு பணிப்பாளராகவும் இருந்திருக்கிறார். கடந்த ஆண்டு யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு கருத்தரங்கிற்காக யாழ்ப்பாணம் வந்திருந்தார். கொழும்பு பல்கலைகழகத்தைச் சேர்ந்த ‘எக்ஸ் குரூப்’ எனப்படும் புலமையாளர்கள் மத்தியில் அவர் காணப்பட்டுள்ளார். ‘எக்ஸ் குழு’ எனப்படுவது விமர்சன பூர்வமாகவும் தீவிரமாகவும் சிந்திக்கும் புத்திஜீவிகளைக் கொண்டிருந்த ஓர் அமைப்பு. ஒக்ரோபர் ஆட்சிக் குழப்பத்தின் போது சுரேன் மைத்திரியின் ஊடகப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டதை அவருடைய நண்பர்களான சில லிபரல் சிங்களப் புத்திஜீவிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் சிலர் அவருடைய முகநூல் பக்கத்திலிருந்து தம்மை நட்பு நீக்கம் செய்து கொண்டார்கள். இவ்வாறு லிபரல் சிங்கள புத்திஜீவிகளால் நட்பு நீக்கம் செய்யப்பட்ட ஒருவரை வடக்கின் ஆளுநராக மைத்திரி நியமித்திருக்கிறார். மாகாண சபைகளுக்கான தேர்தல் முதலில் நடக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்புக்களின் மத்தியில் இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது.
இன முரண்பாடுகளுக்கும் பௌத்த நிறுவனங்களுக்கும் இடையில் உள்ள தொடர்புகளைத் தனது புலமை ஆய்வுப் பரப்பாகக் கொண்ட ஒருவர் தனது ஆய்வு ஒழுக்கத்துக்கு நேர்மையாகவும் விஞ்ஞானபூர்வமாகவும் செயற்படுவாராக இருந்தால் நிச்சயமாக அவர் இனஒடுக்கு முறையின் வேர்களை தெளிவாகக் கண்டுபிடித்து விடுவார். அவ்வாறு சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தின் இனஒடுக்கல் பண்பைக் கண்டுபிடித்திருந்தால் அவர் எப்படி மைத்திரியின் ஊடகப் பணிப்பாளராகச் சேர்ந்தார்? அதுவும் மைத்திரி யாப்பை அளாப்பிக்கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில்? இப்படிப்பட்ட ஒருவரை ஆளுனராக நியமித்ததன் மூலம் மைத்திரி கூட்டமைப்புக்குக் காட்டும் சமிக்ஞை என்ன? தமிழ் மக்களுக்குக் காட்டும் சமிக்ஞை என்ன? அனைத்துலக சமூகத்திற்குக் காட்டும் சமிக்ஞை என்ன? மைத்திரியின் காலம் இன்னும் கிட்டத்தட்ட 11 மாதங்கள்தான். யாப்பு அதற்கிடையில் மாற்றப்படாவிட்டால் அடுத்த அரசுத்தலைவருக்கான தேர்தலை டிசம்பரில் நடத்த வேண்டும். புதிய அரசுத்தலைவர் சுரேனை தொடர்ந்தும் ஆளுனராக இருக்க விடுவாரா?
சுரேன் ஒரு தொழில்சார் நிர்வாகியல்ல. அரசியல்வாதியும் அல்ல. வடக்கின் நிலமைகள் அவருக்குப் புதியவை. அவரைச் சுற்றி இருப்பவர்களையே அவர் முதலில் அதிகம் தங்கியிருக்க வேண்டியிருக்கும். வடக்கை அதன் உள்ளோட்டங்களுக்கூடாகக் கண்டுபிடிக்கத் தேவையான அறிவியல் ஒழுக்கம் அவருக்கு உண்டு. ஆனால் எந்த அரசியல் ஒழுக்கத்தினூடாக அவர் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பதே இங்குள்ள பிரச்சினையாகும். ஒக்ரோபர் ஆட்சிக் கவிழ்ப்பிற்கு மைத்திரியை ஊக்குவித்த சிங்களப் புத்திஜீவிகள் தொடர்பான ஒரு கெட்ட முன்னுதாரணத்தின் பின்னணியில் ஓரு புலமையாளரான தமிழர் சர்ச்சைக்குரிய ஒரு மாகாணசபைக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார். தேசியவாதம் தொடர்பாகவும் சமஷ்டி முறைமை தொடர்பாகவும் சுரேனிற்கு இருக்கக்கூடிய புலமைசார் விளக்கமானது மாகாணக் கட்டமைப்பிற்குள் இருக்கும் போதாமைகளை விளங்கிக் கொள்ள உதவக்கூடும். அப்போதாமைகளுக்கு மூல காரணமாக இருப்பது அவருடைய ஆராய்ச்சிப் பொருளாக இருக்கும் சிங்கள – பௌத்த பெருந்தேசியவாத மனோநிலைதான். அந்த மனோநிலைக்கு விசுவாசமாக இருப்பார் என்று நம்பியே அவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
மாகாணசபைகளுக்கான தேர்தல் முதலில் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்புக்கள் உண்டு. வடக்கில் கடந்த முறை போல இம்முறையும் கூட்டமைப்பு ஏகபோக வெற்றியைப் பெறுமா என்பது சந்தேகமே. அக்கட்சியின் வெற்றியைப் பங்கிட இப்பொழுது விக்னேஸ்வரனும், கஜேந்திரகுமாரும் மேலெழுந்து விட்டார்கள். எனவே வடக்கின் இரண்டாவது மாகாணசபை எனப்படுவது முதலாவதைப் போல இருக்குமா? என்பது சந்தேகமே. இவ்வாறானதோர் பின்னணிக்குள்தான் சுரேன் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் பதவியேற்ற பின் யாழ்ப்பாணத்தில் ஆற்றிய உரையானது அவருடைய மும்மொழிப் புலமையை நிரூபிக்கும் நோக்கிலானதாகக் காணப்பட்டது. இனப்பிரச்சினை எனப்படுவது ஒரு விதத்தில் மொழிப் பிரச்சினையும்தான். ஆனால் அதற்காக அதைத் தொடர்பாடல் பிரச்சினையாக மட்டும் குறுக்கிவிட முடியாது. அதைவிட ஆழமாக அது சிங்கள பௌத்த பெருந்தேசிய மனோநிலையின் விளைவாகும்.
சுரேன் ஒரு நல்ல ரசிகராக இருக்கலாம். புலமைச்சிறப்பு மிக்கவராகவும் இருக்கலாம். ஆனால் அவருடைய நியமனம் இந்த இரண்டு தகமைகளுக்காகவும் வழங்கப்படவில்லை. சிங்கள – பௌத்த மனோநிலைக்கு பாதகமானவர் அல்ல என்ற எடுகோளின் பிரகாரமே அவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இதுவரை காலமும் கொழும்பில் இருந்து கொண்டு வடக்கைப் பார்த்த ஒருவருக்கு வடக்கை அதன் உள்ளோட்டங்களுக்கூடாக கற்கக் கிடைத்த ஒரு சந்தர்ப்பம் இது. விக்னேஸ்வரனுக்கு அப்படி ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட்ட பொழுது அவர் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேர்மையானவராக மாறினார். கொழும்பிலிருப்பவர்கள் முன் கணித்திராத ஒரு திருப்பத்தை அடைந்தார். சுரேன் எப்படி மாறுவார்? ஆளுநராக நியமிக்கப்பட்டதும் அவர் தமிழ் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பொங்கலுக்கு முதல்நாள் விடுமுறை அறிவித்திருக்கிறார். தமிழ் மக்கள் கேட்பது விடுமுறை நாட்களையல்ல. சிங்கள பௌத்த பெருந்தேசிய மனோநிலையிலிருந்து விடுவிக்கப்பட்ட பல்லினத்தன்மை மிக்க ஓரழகிய இலங்கைத் தீவைத்தான்.
1 Comment