ஸ்கொட்லாந்தின் அனுபவத்திலிருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டியவை

scotlandஸ்கொட்லாந்து பிரித்தானியாவிடமிருந்து பிரிந்து போக வேண்டுமா, இல்லையா என்பதற்கான வாக்கெடுப்பின் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் பின்னணியில் இக்கட்டூரை எழுதப்படுகிறது. ஸ்கொட்டிஷ; மக்களின் முடிவு எதுவாகவும் இருக்கலாம். ஆனால் தமது தலைவிதியை அவர்களே தீர்மானிப்பதற்குரிய ஓர் உரிமை அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பதே இங்கு முக்கியம். தென்சூடானியர்களுக்கும் கிழக்குத் தீமோரியர்களுக்கும் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள சில மக்கள் கூட்டத்தினருக்கும் அவ்வாறு தமது தலைவிதியை தாமே தீர்மானிப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. ஈழத்தமிழர்களுக்கும் அப்படியொரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்றும், அதில் புலம்பெயர்ந்த தமிழர்களும் வாக்களிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்றும் தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் ஈழத்தமிழர்களுக்கு இன்று வரையிலும் அப்படியொரு சந்தர்ப்பம் வழங்கப்படவே இல்லை.

ஸ்கொட்டிஷ் வரலாறும் ஈழத்தமிழர்களின் வரலாறும் ஒன்றல்ல. ஆனால் இரண்டு இனங்களுக்குமிடையில் பல ஒற்றுமைகள் உண்டு. முன்பொரு காலம் தனித்தேசமாக இருந்து பின்னாளில் அன்னியர்களின் ஆதிக்கத்தால் அரசை இழந்த மக்கள் என்பது ஒரு பிரதான ஒற்றுமை.

இரண்டாவது ஒற்றுமை – இரண்டு இனங்களுமே தமக்குரிய கூட்டு அடையாளங்களையும் பாரம்பரிய தாயக பிரதேசத்தையும், அப்பிரதேசத்தில் தமக்கேயான ஒரு பலமான பொருளாதார இருப்பையும், பண்பாட்டு இருப்பையும் வரலாற்று தொடர்ச்சியையும் கொண்டிருக்கும் மக்கள் கூட்டங்களாக காணப்படுவது.

மூன்றாவது ஒற்றுமை- தமது கூட்டு அடையாளங்களின் பெயரால் ஒடுக்கப்பட்டதும், அந்த ஒடுக்குமுறைக்கு எதிராக போராடியதும்.

இம்மூன்று பிரதான ஒற்றுமைகள் தவிர வேறு பல உப ஒற்றுமைகளும் உண்டு. அதே சமயம் வேற்றுமைகளும் உண்டு. ஸ்கொட்டிஷ; மக்களைப் போலவே ஈழத் தமிழர்களும் வீரமாக போராடியவர்கள் தான். எனினும் படைத்துறைச் சாதனைகள் படைத்துறைக் கட்டமைப்புக்கள் மற்றும் தமது கட்டுப்பாட்டு பிரதேசத்தில் ஒரு நடைமுறை அரசை வெற்றிகரமாக கட்டியெழுப்பியமை போன்ற பல விடயங்களில் ஈழத் தமிழர்கள் முழு உலகத்திற்கும் ஒரு புதிய அனுபவத்தை கொடுத்தார்கள். அதைப்போலவே தமிழர்களின் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட போது கொத்துக்கொத்தாக தமிழர்கள் கொல்லப்பட்டதை ஒரு இனப்படுகொலையாக அனைத்துலக சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழர்களில் கணிசமானவர்கள் கருதுகிறார்கள்.

இனப்படுகொலைக்குள்ளாகிய மக்கள் என்று பார்த்தால் ஸ்கொட்டிஷ் மக்களை விடவும் ஈழத் தமிழர்கள் பெற்ற கூட்டுக் காயங்களும் கூட்டு மனவடுக்களும் ஒப்பீட்டளவில் பெரியவை அதிகமானவை. முன்னாள் யுகோஸ்லாவியாவில், செர்பெனிக்காவில் நிகழ்ந்த இனப்படுகொலையில் மொத்தமாக கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 8372. ஆனால், ஈழத் தமிழர்களின் ஆயுதப்போராட்டம் ஒடுக்கப்பட்ட போது கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை அதைவிட பல மடங்காகும். எனவே இனப்படுகொலைக்கு எதிரான நீதி எனப்படுவது. பிரிந்து செல்வதே என்று ஈழத் தமிழர்களில் கணிசமான பகுதியினர் நம்புகிறார்கள்.

ஸ்கொட்டிஷ் மக்கள் ஈழத் தமிழர்கள் அளவிற்கு இனப்படுகொலைக்கு ஆளாகவில்லை. ஆனாலும் பிரிந்து போவதா இல்லையா என்பது குறித்து முடிவெடுக்கும் கூட்டுரிமை அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

எனவே, ஒரு மக்கள் கூட்டம் இனப்படுகொலைக்கு ஆளாகிறதா இல்லையா என்பதை மட்டும் வைத்து அவர்களுக்கு பிரிந்து செல்வதா இல்லையா என்பதை தீர்மானிக்கும் உரிமை வழங்கப்படுவதில்லை. அல்லது ஒரு மக்கள் கூட்டம் தனக்கென்று ஒரு பாரம்பரிய தாயக பிரதேசத்தையும் சமூக, பொருளாதார, பண்பாட்டு இருப்பையும், வரலாற்று தொடர்ச்சியையும், கொண்டிருப்பதால் மட்டும் அவர்கள் பிரிந்து போவதா இல்லையா என்பதை தீர்மானிக்கும் உரிமை அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை.

அல்லது ஒரு மக்கள் கூட்டம் எத்துணை வீரமாக போராடியது என்பதை வைத்தோ, அல்லது எத்துணை தியாகங்களை செய்திருக்கிறது என்பதை வைத்தோ அவர்களுக்கு பிரிந்து போவதா இல்லையா என்பதை தீர்மானிக்கும் கூட்டுரிமை வழங்கப்படுவதில்லை.

ஆகமொத்தம், மேற்கண்டவைகளின் அடிப்படையில் கூறின் ஒரு மக்கள் கூட்டத்தின் தேசிய இருப்பை அங்கீகரிப்பதால் மட்டும் அதற்கு பிரிந்து போவதா இல்லையா என்பதை தீர்மானிக்கும் கூட்டுரிமை வழங்கப்படுவதில்லை.

மாறாக இவை எல்லாவற்றையும் விட வேறு ஏதோ ஒரு அல்லது, பல நிர்ணயகரமான காரணிகளின் அடிப்படையிலேயே ஒரு மக்கள் கூட்டமானது சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் பிரிந்து போவதா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்குரிய கூட்டுரிமை வழங்கப்படுகிறது. ஆயின் அக்காரணிகள் யாவை?

கிழக்கு ஐரோப்பாவில் புதிய சிறிய நாடுகள் உருவானதை நேட்டோ விரிவாக்கமாகவே பார்;க்க வேண்டும். முன்னாள் ரஷ்யா பேரரசின் பாதுகாப்பு கவசத்தை உடைத்தெறியும் ஒரு வியூக நகர்வே அது. கொசோவோ, மொண்டிநீக்ரோ, போன்ற புதிய நாடுகளின் உருவாக்கத்தை இந்த விளக்கத்தின் வெளிச்சத்தில் வைத்தே பார்க்க வேண்டும். அதாவது நேட்டோ விரிவாக்கம். நேட்டோ விரிவாக்கத்திற்கு எதிராக ரஷ்யா உருவாக்கி வரும் முற் தடுப்பு அரண்களின் ஒரு பகுதியே கிரிமியா. ஆனால் இங்கு ஒன்றை சுட்டிக்காட்ட வேண்டும். கிரிமியர்கள் பிரிந்து போக வேண்டுமா இல்லையா என்பதை தீர்மானிக்கும் உரிமையை அவர்களுக்கு வழங்கிய ரஷ்யாவானது அதே உரிமையை செச்னியர்களுக்கு வழங்க மறுக்கிறது. செச்சினியர்களின் கூட்டுத் துயரம் ஈழத் தமிழர்களின் கூட்டுத் துயரைப் போன்றதே.

மற்றது சூடானும் கிழக்குத் தீமோரும். இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிரான மேற்கு நாடுகளின் வியூகத்தின் ஒரு பகுதியாகவே இவ்விரு நாடுகளும் பிரிக்கப்பட்டன. அப்படிப்பார்த்தால் அவை கூட நேட்டோ விரிவாக்கத்தின் ஒரு பகுதியே.

கடந்த மார்ச் மாதம் பிலிப்பைன்ஸில் முஸ்லிம் போராளிகளோடு பிலிப்பைன்ஸ் அரசாங்கம் இணக்கம் ஒன்றுக்கு வந்திருக்கிறது. இஸ்லாமிய தீவிர வாதம் புதிய பிரதேசங்களுக்கு மேலும் பரவிச் செல்வதை தடுக்கும் நோக்கத்தோடு தான் அங்கே அந்த உடன்படிக்கை செய்யப்பட்டது. அந்த உடன்படிக்கையின் பிரகாரம் மோறோ போராளிகள் தமது தன்னாட்சிப் பிராந்தியத்தில் வாழும் முஸ்லிம்களுக்கு இஸ்லாமிய ஷரியச் சட்டங்களை அமுல்படுத்துவதற்கும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அந்த உடன் படிக்கை கூட உலகளாவிய இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிரான மேற்கு நாடுகளின் வியூகத்தின் ஒரு பகுதி தான்.

மேற்கண்டவைகளின் அடிப்படையில் கூறின் ஒரு மக்கள் கூட்டம் பிரிந்து செல்வதா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்குரிய கூட்டுரிமையை அவர்களுக்கு வழங்குவது என்பது அந்த மக்கள் கூட்டத்தின் புவியியல் அமைவிடத்தின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகிறது என்பதை காணலாம். ஒரு மக்கள் கூட்டத்தின் புவியியல் அமைவிடத்தின் பாற்பட்ட புவிசார் அரசியல் நலன்களின் அடிப்படையிலேயே அந்த மக்கள் கூட்டத்தின் தலைவிதி தீர்மானிக்கப்படுகிறது. ஸ்கொட்டிஷ் அனுபவத்தின் அடிப்படையில் மட்டுமல்ல அதற்கும் சில மாதங்களுக்கு முன்னரான கிரிமிய அனுபவத்தின் அடிப்படையிலும் ஈழத்தமிழர்கள் இதை விளங்கிக் கொள்ள வேண்டும். கிரிமியர்களின் பிரிந்து செல்லும் உரிமையை ஏற்றுக்கொள்ளும் அதே ரஷ்யா தான் செச்சினியர்களின் தேசிய இருப்பை நசுக்கப்பபார்க்கிறது. இது முழுக்க முழுக்க கிரிமியா தொடர்பிலான ரஷ்யாவின் புவிசார் அரசியல் நலன்களின் அடிப்படையிலான ஒரு முடிவு தான்.

ஸ்கொட்லாந்தை பொறுத்த வரை அதன் வடகடலில் காணப்படும் எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற வளங்களின் காரணமாகவும் அதன் வங்கித்துறை மற்றும் மதுபானத்துறை போன்ற இன்னோரன்ன தொழிற்றுறைகளின் காரணமாகவும் அது மேற்கத்தைய திறந்த சந்தை பொருளாதார கட்டமைப்பின் பிரிக்கப்பட இயலாத ஒரு பகுதியாக காணப்படுகிறது.

அதே சமயம் பிரித்தானியாவின் ஜனநாயக பாரம்பரியத்தின் விளைவாகவும் ஸ்கொட்டிஷ் தேசிய வாதிகளின் தொடர்ச்சியறாத உழைப்பின் பேறாகவும் கிடைத்ததே கடந்த வாரம் நிகழ்ந்த வாக்கெடுப்பு ஆகும். அதாவது, ஸ்கொட்லாந்தின் அமைவிடம் காரணமாக ஸ்கொட்டிஸ் மக்கள் தமது சுயநிர்ணய உரிமையை பிரயோகிப்பதற்குரிய வாய்ப்பை பெற்றார்கள்.

எனவே, ஒரு மக்கள் கூட்டத்தின் அமைவிடமும் அந்த அமைவிடத்தின் பாற்பட்ட புவிசார் அரசியல் நலன்களுமே அந்த மக்கள் கூட்டத்தின் தலைவிதியை தீர்மானிக்கின்றன. இதிலும் குறிப்பாக குறித்த பிராந்தியத்தில் காணப்படும் சக்தி மிக்க அரசோ அல்லது பேரரசோ தான் சிறிய மக்கள் கூட்டங்களின் சுயநிர்ணய உரிமை தொடர்பில் இறுதியிலும் இறுதியான முடிவுகளை எடுக்கின்றன.

உதாரணமாக கிழக்குத் தீமோரில் பல ஆண்டுகளுக்கு முன்பு இப்படியொரு வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது வாக்கெடுப்பின் முடிவுகளை ஏற்றுக்கொள்ளாத இந்தோனேஷ்ய அரசு, கிழக்குத் தீமோர் பிரிந்து செல்வதை சகித்துக் கொள்ளாது தனது படைகளையும் துணை இராணுவக் குழுக்களையும் ஏவி விட்டது. ஆயிரக்கண்கான கிழக்குத் தீமோரியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி அவுஸ்திரேலியா அங்கே தலையிட்டது. முடிவில் கிழக்குத் தீமோர் பிரிக்கப்பட்டது.

எனவே சிறிய மக்கள் கூட்டங்களின் தலைவிதியை இறுதியிலும் இறுதியாக தீர்மானிப்பது அப்பிராந்தியத்தில் உள்ள சக்தி மிக்க அரசுகளோ அல்லது பிராந்திய பேரரசுகளோ தான். இவையெல்லாம் அச்சிறிய மக்கள் கூட்டத்தின் புவியியல் அமைவிடம் எது என்பதிலேயே தங்கியிருக்கின்றன.

இந்த விளக்கத்தின் அடிப்படையில் இனி தென்னாசியாவை நோக்கித் திரும்பலாம். இந்து சமுத்திரப் பிராந்தியம் எனப்படுவது. இந்திய பேரரசின் பிராந்தியம் தான் இரண்டாம் உலக மகா யுத்தத்திற்குப் பின்னரான கடந்த சுமார் அரை நூற்றாண்டுக்கும் மேலான காலப்பகுதியில் இப்பிராந்தியத்தில் எழுச்சி பெற்ற, அநேகமாக எல்லாப் போராட்டங்களும் ஒன்றில் நசுக்கப்பட்டிருக்கின்றன. அல்லது முறியடிக்கப்பட்ட பின் அரைகுறைத் தீர்வொன்றுக்குள் பெட்டி கட்டப்பட்டிருக்கின்றன. இந்திய மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட பிரிவினைப் போராட்டங்கள், இலங்கைத் தீவில் மேற்கொள்ளப்பட்ட ஜே.வி.பியின் இரண்டு கிளர்ச்சிகள், ஈழத் தமிழர்களின் ஆயுதப்போராட்டம், போன்ற அநேகமாக எல்லாப் போராட்டங்களும் ஒடுக்கப்பட்டிருக்கின்றன.

அதாவது போராடும் இனங்களின் புதைமேடாகவே இப்பிராந்தியம் காட்சியளிக்கிறது. போரடும் இனங்களை பொறுத்த வரை இது ஒரு பகைப் பிராந்தியமாகவே காணப்படுகிறது.

பிராந்திய பேரராசாக காணப்படும் இந்தியாவே அதற்குப் பிரதான காரணம். கடந்த சுமார் அரை நூற்றாண்டுக்கும் மேலான காலப்பகுதிக்குள் இப்பிராந்தியத்தில் ஒரே ஒரு பிரிவினை போராட்டமே வெற்றி பெற்றிருக்கிறது. அது பாகிஸ்தான் பிரிவினையாகும். அங்கேயும் கூட அதை பங்காளதேஷன் விடுதலை என்று பார்ப்பதை விடவும் பாகிஸ்தானை உடைத்து பலவீனப்படுத்தியமை எனறே பார்க்க வேண்டும். அதாவது, இந்தியா தனது சக்தி மிக்க அயல் நாடொன்றை உடைத்து இரண்டாக்கியது என்று பொருள்.

எனவே, கடந்த சுமார் அரை நுற்றாண்டுக்கும் மேலான பகைப் பிராந்திய யதார்த்தத்துள் ஈழத் தமிழர்களின் அரசியல் சிக்குண்டிருக்கிறது. இது ஸ்கொட்டிஷ் மக்களுக்கு கிடைத்த ஒரு பிராந்திய யதார்த்தத்தை போன்றதல்ல. ஈழத் தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தால் இப்பகைப் பிராந்திய யதார்த்தத்தை வெற்றி கொள்ள முடியவில்லை.

இப்பொழுது நரேந்திர மோடியின் அரசாங்கம் ஈழத் தமிழர்களை 27 ஆண்டுகள் பின்னோக்கி வருமாறு கேட்கிறது. 27 ஆண்டுகளுக்கு முன்பு ஈழத் தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட 13ஆவது திருத்தத்தை ஏற்றுக் கொள்ளுமாறு இந்தியா கேட்கிறது.

ஒரு காலம் இந்திரா காந்தி பங்களாதேiஷ பிரித்தது போல் தமிழீழத்தையும் பிரித்து தருவார் என்று ஈழத் தமிழர்கள் நம்பியதுண்டு. அந்த நம்பிக்கைகள் பொய்த்த போது ஈழத் தமிழர்களுடைய வீட்டுச் சுவர்களிலும், பொது இடங்களிலும் தொங்க விடப்பட்டிருந்த காந்தி, நேரு போன்றோரின் புகைப்படங்கள் அகற்றப்பட்டு விட்டன. இப்பொழுது இந்திய – சீன முரண்பாடுகளை அல்லது அமெரிக்க தலைமையிலான மேற்கு நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையிலான முரண்பாடுகளை வெற்றிகரமாக கையாளுவதன் மூலம் தமது அடுத்த கட்ட அரசியலுக்குரிய புதிய தெரிவுகளை உருவாக்கலாம் என்று நம்புவோர் ஈழத் தமிழர்கள் மத்தியில் உண்டு. ஆனால் உலக ஒழுங்கானது துருவ நிலைப்படுவதற்குப் பதிலாக, பலதுருவ இழுவிசைகளின் கூட்டிருப்பாய் அமையக் கூடிய பல்லரங்க துருவ ஒழுங்கொன்றை நோக்கி செல்கிறதா? போன்ற கேள்விகள் அதிகரித்து வருகின்றன.

இலங்கைக்கும் இந்தியாவுக்குமான சீனத் தலைவரின் விஜயமும் நரேந்திர மோடிக்கு அவர் வழங்கிய பிறந்த நாள் பரிசும் இப்பிராந்தியமானது எதிர்த் துருவங்களாக பிளவுறும் ஒரு நிலைமை உடனடிக்கு உருவாகுமா? என்ற ஐயங்களை தோற்றுவிக்கின்றன.

ஸ்கொட்டிஷ் மக்கள் பிரிந்து போவதா இல்லையா என்பதை தீர்மானிக்கும் உரிமையை அனுபவித்த அதே காலப்பகுதியில் ஈழத் தமிழர்களின் அரசியல் 27 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றிருக்கிறது. இதற்குக் காரணமாயுள்ள பகைப் பிராந்திய யதார்த்தத்தை மீறி எழத் தேவையான துணிச்சலும், தந்திரமும், திடசித்தமும், தீர்க்க தரிசனமும் இல்லையென்றால் ஈழத் தமிழர்களை கடவுளாலும் காப்பாற்ற முடியாது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *