பொழுது போக்கிகளின் காலத்தில் தேசமாகத் திரள்வது


அண்மையில் நிமிர்வு ஊடகத்தால் வெளியிடப்பட்ட ஒரு காணொளியை பார்த்தேன். அது யாழ்ப்பாணத்தில் கந்தர்மடம் பழம் வீதியில் அமைந்திருக்கும் பண்பாட்டு மலர்ச்சிக் கூடத்தை பற்றிய ஒரு காணொளி. பண்பாட்டு மறுமலர்ச்சி கூடத்தின் நிறுவுனர் கலாநிதி க. சிதம்பரநாதன் அதில் கதைக்கும் போது ஒரு விடயத்தை சுட்டிக்காட்டினார்.

“நாங்கள் கிராமங்களுக்குள் இறங்கிய பொழுது அங்கே தெருக்களில் மக்களை காணவில்லை. முன்னைய காலங்களில் நமது கிராமத்து தெருக்களில் எப்பொழுதும் சனங்களை காணலாம். ஆனால் இப்பொழுதோ சனங்கள் தங்கள் வீடுகளுக்குள் முடங்கிக் இருக்கிறார்கள் ” என்று.

காணொளியை பார்த்தபின் அவரிடம் நான் கேட்டேன் “ சனங்கள் வீடுகளுக்குள் முடங்கக் காரணம் என்ன? வீடுகளுக்குள் அவர்கள் என்ன செய்கிறார்கள் ?” என்று. அவர் சொன்னார் “தொலைக்காட்சியை பார்க்கிறார்கள் என்பது பொதுவாக எல்லாரும் சொல்லும் காரணம் எனினும் அதற்கும் அப்பால்
சனங்கள் நித்திரை கொள்கிறார்கள் சோம்பேறித்தனமாக எதையாவது செய்து கொண்டிருக்கிறார்கள” என்று.

யுத்த காலங்களில் தெருக்களில் திரிவது ஆபத்தானதாக மாறிய பொழுது சனங்கள் வீடுகளுக்குள் முடங்டங்கினார்கள். அந்தப் பழக்கமே இப்பொழுதும் நீள்கிறதா? அல்லது சனங்கள் வீடுகளுக்குள் முடங்குவதற்கு வேறு காரணங்கள் உண்டா?வீடுகளில் சனங்கள் என்ன செய்கிறார்கள்? பெருமளவிற்கு திரைத் தொடர்களை பார்க்கிறார்கள். குறிப்பாக நடுத்தர வயதுக்கு மேலானவர்கள் தொலைக்காட்சியை சுற்றி இருக்கிறார்கள். அவர்களை விட வயது குறைந்தவர்கள் கணினி,ரப், ஸ்மார்ட் போன் போன்ற இலத்திரனியல் உபகரணங்களோடு இருக்கிறார்களா ?

ஸ்மார்ட்போனின் வருகையோடு மனிதர்கள் பொழுது போக்கிகளாக மாறிவிட்டார்கள். பொழுது போக்குவதில் தவறில்லை. ஆனால் உழைக்கும் நேரத்தில், வாசிக்கும் நேரத்தில், யோசிக்கும் நேரத்தில், ஒன்று கூடும் நேரத்தில் பொழுதை வீணே போக்குவது என்பது சரியா?

தகவல் தொழில்நுட்ப புரட்சியானது மனிதரை இலத்திரனியல் இன்பம் நுகரிகளாக மாற்றியிருக்கிறது. இதனால் மனிதர்கள் தனித்தனியே குந்தியிருந்து இலத்திரனியல் இன்பத்தை நுகரத் தொடங்கிவிட்டார்கள். சில தசாப்தங்களுக்கு முன்பு எந்த ஓரு பன்னாட்டு விமான நிலையத்திலும் விமானத்துக்கு காத்திருக்கும் பயணிகள் அனேகமாக எதையாவது வாசித்துக் கொண்டிருப்பார்கள். விமானப் பயணத்தின் போதும் வாசித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் இப்பொழுது விமான நிலையங்களில் இலத்திரனியல் கருவிகளில் மூழ்கி இருப்பவர்களே அதிகம். இவர்களில் ஒரு பகுதியினர் வாசிக்கிறார்கள் என்பதும் உண்மை. ஆனால் பெரும்பகுதியினர் பொழுது போக்குகிறார்கள் என்பது என்பதும் உண்மை.

இவ்வாறு இலத்திரனியல் இன்பம் நுகரும் பொழுது போக்கிகளாக மனிதர்கள் மாறியதால் அவர்கள் மனதாலும் கெட்டுப் போகிறார்கள் உடலாலும் கெட்டுப் போகிறார்கள்.மனதால் அவர்கள் மேலும் தனியன்கள் ஆகிறார்கள். தனியன்கள் இலத்திரனியல் இன்பம் நுகர்ந்து சமூகமாக வாழ்வதாக மாயையில் உழல்கிறார்கள். இதனால் சமூக ஊடாட்டம் குறைகிறது. அதேசமயம் இலத்திரணியல் இன்பம் நுகர்வோர் அனேகமாக ஆழமான வாசிப்புக்கோ யோசிப்புக்கோ போவதில்லை அவர்கள் கோட்பாடுகளை நாடிச் செல்வதில்லை.மாறாக அப்ளிகேஷன்களின் கைதிகள் ஆகிவிடுகிறார்கள். இது நாளடைவில் அவர்களை பலவீனமடையச் செய்கிறது. இவ்வாறு பொழுதுபோக்கிகளாக இருப்பவர்கள் செயற்பாட்டாளராக இருக்க முடியாது. மிக நல்ல உதாரணம் முகநூல் தேசியர்களும் எதிர் தேசியர்களும் இவர்களுக்கு தேசியமும் ஒரு பொழுதுபோக்கு.

இவ்வாறு தனியன்களாவதால் சமூக இடை ஊடாட்டம் மட்டும் குறைவதில்லை. அதோடு சேர்த்து ஒன்று கூடி உடலை அசைத்து விளையாடுவது போன்ற உடலியக்க விளையாட்டுக்கள் குறைந்துவிடுகின்றன. இதனால் உடல் ஆரோக்கியம் கெடுகிறது. தொப்பை வளர்கிறது.கெட்ட கொழுப்பு வளர்கிறது.

பொழுதுபோக்குக்காக இலத்திரனியல் கருவிகளை நுகர்வோர்கள் ஆழமான வாசிப்பு களிலோ ஆழமான உரையாடல்களிலோ ஆழமான கிரகிப்புகளிலோ இறங்குவதில்லை. அவர்கள் எல்லாவற்றையும் மேலோட்டமாகவே நுகர்கிறார்கள். எல்லாவற்றையும் “ஸ்குரோல்” பண்ணிக் கடந்து போய்விடுகிறார்கள்.

இதனால் ஆழமான வாசிப்பு குறைகிறது. ஆழமான யோசிப்பு குறைகிறது. அதைவிட முக்கியமாக மனிதர்கள் ஒன்று கூடக் கூடிய சந்தர்ப்பங்கள் குறைகின்றன. சமூக இடையூடாட்டம் குறைகிறது. குடும்ப இடையூடாட்டம் குறைகிறது. குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இலத்திரனியல் கருவியோடு மினக்கெடும் பொழுது அங்கு குடும்ப உறுப்பினர்களுக்கு இடையிலான இடை ஊடாட்டம் குறைந்துவிடுகிறது.

அப்படித்தான் சமூகத்திலும் இலத்திரனியல் இன்பம் நுகர்வது என்பது மனிதர்களை தனித்திருக்க செய்கிறது. அவர்கள் சமூகமயமாவதற்குப் பதிலாக தனித்திருக்க விரும்புகிறார்கள். இத்தனிமையாக்கம் சமூகமயமாதலுக்கு எதிரானது. இதனால் சமூகச் சந்திப்புக்கள் சமூக ஒன்று கூடல்கள் குறைந்து செல்கின்றன. இதைத்தான் சிதம்பரநாதன் கிராமத்தின் தெருக்களில் ஜனங்களை காணவில்லை என்று கூறுகிறாரா?

முன்னொரு காலம் கிராமங்களில் எங்காவது ஒரு சந்தியில் ஏதாவது ஒரு நிழலில் அல்லது மதகில் அல்லது திண்ணையில் அல்லது தேர் முட்டியில் அல்லது சனசமூக நிலையத்தில் அல்லது விளையாட்டு மைதானத்தில் அல்லது குறைந்தபட்சம் தவறணையில் ஜனங்கள் கூடுவார்கள். கூடியிருந்து எதையாவது கதைப்பார்கள். அல்லது தாயம் விளையாடுவார்கள். கரம் விளையாடுவார்கள். அல்லது சீட்டுக்கட்டு விளையாடுவார்கள்.
ஆனால் இப்படிப்பட்ட காட்சிகளை இப்பொழுது நமது கிராமங்களில் காண முடிவதில்லை. சிதம்பரநாதன் கூறியதுபோல மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் இருக்கிறார்கள். அங்கே ஒன்றில் சோம்பி இருக்கிறார்கள். அல்லது இலத்திரணியல் இன்பம் நுகர்கிறார்கள். அதாவது பொழுது போக்கிகளாக மாறிவிட்டார்கள்.

என்னுடைய வீட்டிலிருந்து சற்று தள்ளி ஒரு கடைக்கு முன் இளைஞர்கள் கூடி இருப்பார்கள். குறிப்பாக மாலை வேளைகளிலும் இரவு வேளைகளிலும் கூடியிருந்து பம்பல் அடிப்பார்கள். ஆனால் சிலசமயங்களில் ஆளுக்காள் தனியே குந்தியிருந்து கைபேசியை நோண்டிக் கொண்டிருப்பார்கள்.

அண்மையில் அவதானித்தேன் அவர்கள் ஒரு வீட்டின் முன் விறாந்தையில் ஒன்றுகூடி இருந்து ஆனால் ஒவ்வொருவரும் தனித்தனியாக ஸ்மார்ட் போன்களில் எதையோ செய்து கொண்டிருக்கிறார்கள். என்னவென்று விசாரித்தேன் pubg என்றழைக்கப்படும் ஒரு ஒண்லைன் விளையாட்டில் அவர்கள் மூழ்கி இருக்கிறார்கள் .ஒருவரை ஒருவர் தொட்டுக்கொண்டு நெருக்கமாக அமர்ந்திருக்கிறார்கள். ஆனால் இன்டர்நெட் மூலம் இணைந்து விளையாடுகிறார்கள். இதையே தொடமுடியாத தூரத்தில் வேறு நாடுகளில் இருந்து கொண்டும் விளையாடலாம் என்று கூறுகிறார்கள். ஆனால் இங்கு நான் கூற வருவது என்னவென்றால் ஒருவரை மற்றவர் தொடும் தூரத்தில் இருந்தபடி இன்டர்நெட் மூலம் விளையாட்டில் இணைகிறார்கள் என்பதைத்தான். அப்படி என்றால் அவர்கள் தூரமாக இருக்கிறார்களா? அல்லது கிட்டவாக இருக்கிறார்களா? ஒருவிதத்தில் இலத்திரனியல் ரீதியாக அவர்கள் ஒருவர் மற்றவரோடு இணைக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் பௌதீக அர்த்தத்தில் இணைக்கப்படாதிருக்கிறார்கள்.

இலத்திரனியல் இன்பம் நுகரிகளாய் காணப்படும் குடும்ப உறுப்பினர்களின் நிலையும் இப்படித்தான். இதனால் குடும்பங்களில் உறுப்பினர்களுக்கு இடையே இடையூடாடம் குறைகிறது. சமூகத்தில் ஒருவருக்கும் மற்றவருக்கும் இடையிலான இடையூடாட்டம் குறைகிறது. இதனால் சமூக சந்திப்புக்கள் பெறுமதி இழக்கின்றன சந்திகளில் மதகுகளில் மர நிழல்களில் விளையாட்டுத் திடலில் இன்ன பிற இடங்களில் கூடியிருந்து குதூகலிப்பபதில் காணும் இன்பத்தை விடவும் இலத்திரனியல் கருவிகள் தரும் இன்பத்தை நாடுபவர்களாக மானிடர் மாறிவிட்டார்கள்.

இது ஓர் உலகப் பொதுப் போக்கு. ஆனால் ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை அவர்கள் இனப்படுகொலைக்கு எதிராக திரட்ச்சியுற வேண்டும் என்றெல்லாம் கூறுகிறோம். அதனால் ஒரு தேசமாக திரள வேண்டும் என்று கூறுகிறோம். ஆனால் நடைமுறையில் ஒரு கிராமமாக திரண்டிருக்கிறோமா ? அல்லது குறைந்தது ஒரு குடும்பமாக ஆவது திரண்டிருக்கிறோமா?
ஒரு குடும்பமாக திரண்டு இருந்திருந்தால் அங்கு பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே போதைப்பொருள் நுழைய இடம் இருக்காது. பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே வாளேந்திய நபர்கள் நுழையக் இடமிருக்காது. அதாவது பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே எங்கேயோ இடைவெளி உருவாகும் போது தான் அந்தக் இடைவெளிக்குள் போதைப் பொருள் நுழைகிறது. வாளேந்திகள் நுழைகிறார்கள்.

இப்படித்தான் கிராமங்களிலும். கிராமங்கள் கிராமங்களாக இருந்தால் அங்கு நுண்கடன் நிதி நிறுவனங்கள் உள் நுழைய முடியாது. பிளாஸ்டிக் வியாபாரிகள் உள்நுழைய முடியாது. தீய நோக்கோடு உள் நுழையும் பிறத்தியார் வர முடியாது. யாழ்பாணத்தில் பன்னாலைக் கிராமம் நுண்கடன் நிதி நிறுவனங்கள் நுழைவதை எப்படித் தடுத்தது என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

எனவே தேசமாகத் திரள்வது, தேசமாக வாழ்வது, தேசமாக சிந்திப்பது என்பவையெல்லாம் கிராமமாக வாழ்வதிலும் குடும்பமாக வாழ்வதிலும் இருந்தே தொடங்குகிறது. குடும்பமாக கிராமமாக வாழ்வது என்பது குடும்பத்திலும் கிராமத்துக்கும் உள்ள சமத்துவமின்மைகளோடு வாழ்வது அல்ல. தேசியத்தின் அடிச் சட்டம் ஜனநாயகம் என்பதன் அடிப்படையில் திரளாகுவதுதான். இலத்திரனியல் இன்பம் நாடிகளாய் வீண் பொழுது போக்கிகளாய் சிதறிப்போகும் ஒரு சமூகத்தை முதலில் குடும்பம் ஆகவும் கிராமம் ஆகவும் திரட்டுவதில் இருந்தே தேசமாக வாழ்வது தொடங்குகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *