தமிழ்க் கட்சித் தலைவர்களுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்

ஒரு பொதுத் தேர்தலை நோக்கி நீங்கள் தயாராகிக் கொண்டிருந்த பொழுது அதற்கென்று காசு திரட்டி, சுவரொட்டி அடித்து, ஒட்டி, சின்ன சின்ன கூட்டங்களை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் உங்களுடைய தேர்தல் வியூகங்கள் எல்லாவற்றையும் கோவிட்-19 குழப்பி விட்டது.

இதனால் உங்களுக்குப் புதிய செலவுகள் ஏற்பட்டன. பழைய நிகழ்ச்சி நிரலை மாற்ற வேண்டி வந்தது எனினும் அதை நீங்கள் ஒரு நட்டமாக பார்க்கவில்லை என்றே தெரிகிறது. ஏனெனில் கோவிட்-19 கொண்டு வந்திருக்கும் அனர்த்த நிலைமைகளைக் கையாண்டு நீங்கள் தேவைப்படும் மக்களுக்கு உதவிகளை வழங்கி வரருக்கிறீர்கள். அதைப் படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் பரப்புகிறீர்கள்.அதனால் அது நிவாரண அரசியல் என்று விமர்சிக்கப்படுகிறது. ஆனாலும் நீங்கள் நல்லது செய்கிறீர்கள்  அதைப் பாராட்ட வேண்டும். அப்படி நிவாரணம் வழங்குவதன் மூலம் உங்களுடைய வாக்கு வங்கியை நீங்கள் பலப்படுத்தலாம். அது ஓர் அனர்த்த காலத்தில் தேங்கி நிற்கும் உங்களுடைய தேர்தலுக்கான நிகழ்ச்சிநிரலை வேறொரு வடிவத்தில்  முன்னெடுக்க உதவக் கூடும்.

எனவே கோவிட்-19 உங்களுக்கு ஒருவிதத்தில் நன்மையும் தான். அதுமட்டுமல்ல மொத்த தமிழ் அரசியற் போக்கு என்று பார்க்கும் பொழுது அந்த வைரஸ் ஒரு பாரதூரமான சிதைவு அரசியலை சிலமாதங்களுக்காவது ஒத்தி  வைத்திருக்கிறது என்பதும் ஒரு நன்மைதான். கடந்த பத்தாண்டுகளில் முன்னைய தேர்தல்களோடு ஒப்பிடுகையில் தமிழ் வாக்குகள் அதிகம் சிதறக்கூடிய வாய்ப்புக்களை அதிகமாகக் கொண்ட ஒரு தேர்தலே இவ்வாறு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் அரசியற் பரப்பில் மூன்று தேசிய கட்சிகளும் அதற்கு மேற்பட்ட சுயேச்சைக் குழுக்களும் கூட்டு முன்னணிகளும் களத்தில் இறங்கும் ஒரு தேர்தல் களம் அது. யாழ்ப்பாணத்தில் மட்டும் மூன்றுக்கும் குறையாத சுயேச்சைக்  குழுக்கள் குறிப்பாக சில சமூகங்களை மையப்படுத்தி போட்டியிட இருந்தன. வன்னியில் இரண்டு சுயேச்சைக் குழுக்கள் மதங்களை மையப்படுத்தி போட்டியிட இருந்தன. கிழக்கில் ஒரு கூட்டு முன்னணி பிரதேசத்தை முதன்மைப்படுத்தி போட்டியிடுகிறது.  சுயேச்சைக் குழுக்களில்  தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் போன்ற சிலவற்றைத் தவிர பெரும்பாலானவை மதங்களை சாதிகளை பிரதேசவாதத்தை முன்னிலைப்படுத்துவதால் தமிழ்த்  தேசிய கட்சிகளுக்கு எதிர்த்திசையிலேயே நிற்கின்றன.

இதனை எதிரியின் உற்பத்தி என்று சொல்லிவிட்டு இலகுவாகக்  கடந்து போய்விட முடியாது.  தமிழ் மக்களின் தேசியத்  திரட்சியை சிதறடிக்க விரும்பும் தரப்புக்களால்  இயக்கப்படும் அளவுக்கு தமிழ் மக்களில் சில பிரிவுகள் தேசிய நீரோட்டத்திற்கு வெளியே காணப்படுகின்றன என்ற உண்மையை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களை தேசிய நீரோட்டத்தில் கரைத்துக் கொள்ள உங்களால் முடியவில்லை என்பதனையும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.சாதி ஏற்றத் தாழ்வுகள், மதப் பூசல்கள், பிரதேசவாதம் போன்ற தமிழ் மக்களின் தேசியத் திரட்சியை சிதறடிக்கும் அம்சங்களைக் குறித்து உங்களில் பலரிடம் ஒரு தேசியத் தரிசனம் இல்லை. நீங்கள் விட்ட இடைவெளிக்குள் தான் சாதி வாதிகளும் சமய வாதிகளும் பிரதேசவாதிகளும் ஆணாதிக்கவாதிகளும்  உள்நுழைகிறார்கள்.

தாழ்த்தப்பட்ட சமூகங்களை முழுமையாக தேசிய நீரோட்டத்தில் கரைக்க உங்களில்  பலரால் முடியவில்லை. இப்பொழுதும் தாழ்த்தப்பட்ட சமூகங்களின் வாக்குகளைப் பெற்று நட்சத்திர அந்தஸ்துடைய ஒரு பிரமுகரை வெல்ல வைப்பது எப்படி என்று தான் உங்களில் பலர் யோசிக்கிறார்கள். நட்சத்திர அந்தஸ்துள்ள ஒரு வேட்பாளரை வெல்ல வைப்பதற்காக சில சமூகங்களைப்  பிரதிநிதித்துவபடுத்தும்  வேட்பாளர்களைத் நீங்கள் தேடி எடுக்கிறீர்கள். மாறாக உங்களில் யாராவது அந்த வேட்பாளருக்கு வெற்றியை நிச்சயப்படுத்தி தேசியப்பட்டியல் ஆசனத்தை வழங்க தயாரா? இது தொடர்பில் மனந்திறந்து  விவாதிக்க உங்களில் எத்தனை பேர் தயார்?

இப்படித்தான் சமயப்பூசல்களின் போதும் நீங்கள் கள்ளமௌனம் காக்கிறீர்கள். வெளிப்படையாகத் துணிச்சலாகக் கருத்துக் கூற உங்களில் எதனை பேர் தயார்? திருகேதீஸ்வரம் வளைவு விவகாரத்தை உங்களில் ஒருவராலும் வெற்றிகரமாக கையாள முடியவில்லை. அது நீதிமன்றத்துக்குப் போனதே உங்களுடைய தோல்விதான்.அதன் விளைவுதான் இப்பொழுது இந்து மத குருமார்கள் ஒரு சுயேச்சையாக நிற்கிறார்கள். மற்றொரு சுயேச்சைக் குழு,சில கத்தோலிக்க மதகுருக்களின் பின் பலத்தோடு  முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்கத்தவர்களை முன் வைத்துக் களமிறக்கப்பட்டுள்ளது.

திருக்கேதீஸ்வரம் வளைவு விவகாரம் மட்டுமல்ல கோவிட்-19இற்குப்  பின்னரான சுவிஸ் போதகரின் விவகாரத்தையும் நீங்கள் சரியாகக் கையாளவில்லை.தீர்க்கதரிசனமாகக் கையாளவில்லை. அது உங்களுடைய பிரச்சினை அல்ல என்பது போல நீங்கள் மௌனமாக இருக்கிறீர்கள். சிவபூமி  அறக்கட்டளையின் தலைவர் ஆறு திருமுருகன் முன்வந்து ஓர் அறிக்கை விட்ட அளவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் யாரும் அதைப் பற்றிப் பேசவில்லை.

கோவிட்-19 ஓர் உலகப் பெரும் தொற்றுநோயாக பிரகடனப்படுத்தப்பட்ட அடுத்த நாள் சுவிஸ் போதகர் யாழ்ப்பாணத்துக்கு வந்தார். சமூக ஒன்று கூடல்களைத் தவிர்த்து தனியாள் இடைவெளிகளை அதிகரிப்பது பற்றி சமூக நிறுவனங்கள் சிந்திக்க வேண்டியிருந்த ஒரு காலகட்டத்தில் அவர் ஓர் ஆராதனையை நடத்தியது விபரீதமாக முடிந்து விட்டது. யாழ்ப்பாணத்துக்கான ஊரடங்கு சட்டம் நீடிக்கப்படும் ஒவ்வொரு மணித்தியாலமும் சாதாரண யாழ்ப்பாணத்தவர்கள் அந்த போதகரைத்தான் ஒரு குற்றவாளியாகப்  பார்க்கிறார்கள். அவர் வந்திருக்காவிட்டால் யாழ்ப்பாணத்துக்கு இப்படி ஒரு நெருக்கடி வந்திருக்காது என்று அவர்கள் நம்புகிறார்கள்.

சாதாரண ஜனங்கள் அப்படித்தான் சிந்திப்பார்கள். ஆனால் இந்த விவகாரத்தை ஆவிக்குரிய சபைகள் அனைத்துக்கும் எதிரான அவதூறுப்  பிரச்சாரமாக ஒரு பகுதியினர் முன்னெடுத்து வருகிறார்கள். அவர்கள் மத்தியில் உங்களுடைய கட்சிக்காரர்கள் பலருண்டு. உங்களுடைய உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், மாவட்ட அமைப்பாளர்கள்,  தாயகத்திலும் புலம்பெயர்ந்த தரப்பிலும் உங்களுக்கு ஆதரவாக காணப்படும் சிலர்,உங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நெருக்கமாக நின்று படம் எடுப்பவர்கள், இப்போதும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுடன்  நிவாரணம் வழங்குபவர்கள் என்று பலரும் உண்டு. அவர்களுடைய முகநூல் பக்கங்களைப் பாருங்கள். ஆவிக்குரிய சபைகளைக் குற்றவாளிகளாகக் காட்டுகிறார்கள். குறிப்பாக அல்லேலூயா என்ற வார்த்தையை ஒரு தகாத வார்த்தையாக பயன்படுத்துகிறார்கள்.

சுவிஸ் போதகர் தனியாள் இடைவெளிகளைப் பேணவேண்டிய ஒரு காலகட்டத்தில் ஆராதனை நடத்தியது தவறு. ஆனால் அதை அவர் வேண்டுமென்று செய்ததாக கூறுவது தமிழ் மக்களின்  புத்திக்கூர்மையை அவமதிப்பதாக அமைகிறது. மட்டுமல்ல அப்படிக் கூறுவது தமிழ்த் தேசியத்தின் மதப்பல்வகைமைக்கு எதிரானது. அதைவிட முக்கியமாக தமிழ் தேசியத்திரட்சியை சிதைக்க உழைக்கும்  சக்திகளின்  பொறிக்குள் குருட்டுத்தனமாக விழுவது.

ஒரு போதகர் தன்னை அறியாமல் செய்த ஒரு தவறுக்காக எல்லா ஆவிக்குரிய சபைகளையும் அல்லேலுயா கூட்டம் என்று கூறி அவதூறு செய்வது என்பது இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அவதூறுக்கு எந்த வகையிலும் குறைவானது அல்ல. ஒரு நோயாளியை நாங்கள் குற்றவாளியாக காட்டுகிறோம். நோயை ஒரு குற்றமாக காட்டுகிறோம். அதை வைத்து மதமாற்றத்துக்கு எதிராகவும் ஆவேசமாக பேசுகிறோம்.

உங்களுக்குத் தெரியுந்தானே மதமாற்றத்தின் அடிப்படைகள் எங்கே இருக்கின்றன என்று? வறுமை, அறியாமை, சமூக ஏற்றத்தாழ்வு, போருக்கு பின்னரான உளவியல் போன்றவையே அதற்கு அடிப்படை. உலகம் முழுவதும் என்.ஜி.ஒ.க்களுக்கு பின்னாலும் புதிய மத அமைப்புகளுக்குப் பின்னாலும் உள்நோக்கமுடைய நிகழ்ச்சிநிரல்கள் இருக்கக்கூடும். ஆனால் அவ்வாறான மதம்மாற்றும் சபைகள் உங்களுடைய சமூகத்தில் இறங்கி வேலை செய்யக்கூடிய இடைவெளிகளை நீங்களும் நிரப்பவில்லை  என்பதே  உண்மை. எனவே முதல் தவறு உங்களுடையது.

இது விடயத்தில் உங்களுடைய கட்சிக்காரர்களை ஏன் நீங்கள் இதுவரையிலும் சரியாக வழிநடத்தவில்லை ? அவர்களுடைய சமூக வலைத்தளப் பக்ககங்களைச் சென்று பாருங்கள். அங்கு அவர்கள் என்ன எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்று. அது தமிழ் தேசியத் திரட்சிக்கு எதிரானது என்பதனை அவர்களுக்கு நீங்கள் சுட்டிக்காட்டுவதில்லையா? அல்லது ஆவிக்குரிய சபைகளில் உங்களுக்கு வாக்காளர்கள் இல்லையா? அல்லது ஆவிக்குரிய சபை உட்பட கிறிஸ்தவ வாக்குகள் உங்களுக்கு தேவை இல்லையா? அப்படி என்றால் தனிச் சிங்கள வாக்குகளால் மட்டும் வெல்லலாம் என்று நம்பும் ராஜபக்சக்களுக்கும் உங்களுக்கும் இடையில் என்ன வேறுபாடு ? சிங்கள பௌத்த தேசியவாதத்தைப் போலவே தமிழ் தேசியமும் ஒரு மதத்  தேசியம்தான் என்று கூறப் போகிறீர்களா?

சிங்கப்பூரின் பிரதமர்  நாட்டுக்கு உரையாற்றும் போது மலேசியாவில் நடந்த மத நிகழ்வில் பங்குபற்றியவர்களிடமிருந்தும் நோய் தொற்றியது என்பதை எப்படி ஒரு குறிப்பாக மட்டும் கூறிவிட்டுக் கடந்து போகிறார் என்று பாருங்கள். உங்களில் ஒருவருக்கும் அந்தத் துணிச்சல் இல்லையா?

உகண்டாவின் 75 வயதான ஜனாதிபதி லொக் டவுண் காலத்தில் நாட்டு மக்களுக்கு முன்மாதியாக உடற் பயிற்சி செய்து காட்டுகிறார்.

சுவிஸ் போதகரின் விவகாரம் ஒரு குறியீடு மட்டுமே. அதுபோல பல விடயங்கள் உண்டு.  கூட்டமைப்பும் மாற்று அணியும் அதிகமதிகம் மையங் கொண்டிருப்பது வடகில்தான்.  மாற்று எனப்படுவது அதிகபட்சம் வடக்கு மையமாகவே காணப்படுகிறது. வடக்கு-கிழக்கு இணைந்த தாயகம் என்ற கோஷம் தேர்தல் கால சுலோகமாக மாறி வருகிறது. கிழக்கு மையத்திலிருந்து தாயகத்தை கட்டியெழுப்பும் பொருத்தமான அரசியல் தரிசனங்கள் எவையும் உங்களிடம் இருப்பதாக தெரியவில்லை. இந்த வெற்றிடத்தில் தான் கிழக்கை மையப்படுத்தி குறிப்பாக வடக்கு முதன்மைக்கு எதிராகக்கு கூட்டுக்கள் உருவாக்கப்படுகின்றன. அதாவது தமிழ் தேசியத் திரட்சியை கட்டி எழுப்பும் விதத்தில் பொருத்தமான வேலைத்திட்டங்கள் உங்களிடம் குறைவு என்பதனால்தான் வடக்கையும் கிழக்கையும் பிரிக்கும் கட்சிகள் மேலெழுகின்றனவா?

இவ்வாறாக மதத்தை மையப்படுத்தி சாதியை மையப்படுத்தி பிரதேசவாதத்தை மையப்படுத்தி கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடும் ஒரு நிலைமை தீவிரமடைவது என்பது கடந்த பத்தாண்டுகளாக நீங்கள் தோல்வியுற்று வருவதைக் காட்டவில்லையா?

இவ்வாறு  தமிழ் அரசியல் பரப்பில் நான்குக்கும் மேற்பட்ட கட்சிகளும் பல்வேறு சுயேச்சைக்  குழுக்களும் போட்டியிட இருந்த ஒரு தேர்தல் களத்தை கோவிட்-19 ஓத்தி வைத்திருக்கிறது. அப்படி பார்த்தால் அது ஒரு நன்மையைச் செய்திருக்கிறது. கோவிட்-19க்கு பின்னரான அரசியலில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதனை நின்று நிதானமாக சிந்திப்பதற்கு உரிய ஒரு கால அவகாசத்தை அது உங்களுக்கு தந்திருக்கிறது. இந்த ஒத்திவைக்கப்பட்ட காலத்தை ஆழமாக சிந்திப்பதற்கும் தீர்க்கதரிசனமாக முடிவெடுப்பதற்கும் பயன்படுத்துகிறீர்களா? அல்லது தேர்தல் வெற்றியை மட்டும் இலக்காகக் கொண்டு நிவாரண அரசியலிலேயே உங்களுடைய முழுச் சக்தியையும்  செலுத்துவீர்களா ?

அங்கேயும் கூட ஒவ்வொரு கட்சியும் தன்பாட்டில் நிவாரணத்தை வழங்குகின்றது. அதற்கென்று ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு பொறிமுறை இல்லை. ஓரனர்த்த  காலத்திலாவது நீங்கள் எல்லாரும் இணைந்து ஓர் ஒன்றிணைந்த பொறிமுறையைக் கண்டுபிடிப்பீர்களா?

கோவிட்-19 பூகோள அரசியல் போக்கில், பொருளாதாரதில் எதிர்பாராத இடைநிறுத்தத்தைச்  செய்திருக்கிறது. ஒரு பூகோள நெருக்கடியை முன்வைத்து நீங்கள் குளோபலாகவும் லோக்கலாகவும்  சிந்திப்பதற்கு அருமையான ஒரு தருணம் இது. கோவிட்-19ற்குப்பின் பூகோள மயமாதலைக்  குறித்தும் தேசியவாதத்தை குறித்தும் புதிய உரையாடல்கள் தொடங்கப் போகின்றன. இப்பொழுது புகையில்லாத வானம் நிர்மலமாக இருப்பது போல உங்களுடைய மனதையும்  நிர்மலமாக மாற்றி  ஆறஅமர இருந்து ஆழமாக யோசியுங்கள்.

உலகம் முழுவதுக்கும் ஒரு  பொது ஆபத்தாக மேலெழுந்த கோவிட்-19 தமிழ் மக்களுக்கும் ஒரு புதிய அனுபவம்தான். இத்தருணத்தில் நிவாரணம் கொடுப்பதற்கும் அப்பால் நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்? சுனில் ரத்நாயக்க விடுவிக்கப்பட்ட பொழுது எல்லாக் கட்சிகளும் அதற்கு எதிராக அறிக்கை விட்டீர்கள். அதேசமயம் கோவிட் -19 கொண்டுவந்திருக்கும் புதிய சவால்களை எதிர்கொள்வதற்கு உங்களுடைய சமூகத்தைத்  தயார்படுத்தும் நோக்கில் நம்பிக்கையூட்டி வழிகாட்டும் விதத்தில் உங்களில் எத்தனை பேர் இதுவரையிலும் பேசி இருக்கிறீர்கள் ? பெருந்தமிழ்ப்  பரப்பில் தாயகத்தை விடவும்  புலம்பெயர்ந்த  தமிழர்கள் மத்தியில் கோவிட்-19 அதிகம் உயிர்களை எடுத்திருக்கிறது.உங்களில் எத்தனை பேர் தமிழ் டயஸ்பொறாவோடு கூட்டொருமைப்பாட்டைக் காட்டியுள்ளீர்கள்?

ஒரு புலம் பெயர்ந்த தமிழ் நண்பர் கேட்டார் தொழில் சார் மருத்துவர்களாக உள்ள சில அரசியல்வாதிகள் நிவாரணப்  பொதிகளோடு படம் போடுகிறார்கள். இப்பொழுது ஏற்பட்டிருக்கும் ஆபத்தில் முன்னணிப் படையாக நிற்பவர்கள் மருத்துவர்களே. அரசியல்வாதிகளாக இருக்கும் தமிழ் மருத்துவர்கள் தமது தொழில்சார் உதவிகளை ஆஸ்பத்திரிகளுக்கு வழங்கலாமே என்று. ஓய்வு பெற்ற மருத்துவர்கள் சேவைக்குத் திரும்புமளவுக்கு இங்கு நோய்த்தொற்று தீவிரமாகவில்லைத்தான்.

அதேசமயம், அயர்லாந்தின் பிரதமர் லியோ வரட்கார் தற்காலிகமாக தனது மருத்துவத் தொழிலுக்கு திரும்பிச் சென்றுவிட்டார்.  இங்கிலாந்தில்  அழகு ராணியாக  வந்த பார்ஷா முகர்ஜீ தனது மருத்துவத் தொழிலுக்குத் திரும்பிச் சென்றிருக்கிறார். அரசியல்வாதிகளாக இருக்கும் தமிழ் மருத்துவர்களோ நிவாரணப் பொதிகளுடன் நிற்கிறார்கள்.

ஸ்பானியாவின் மாட்ரிட் நகரில் இருந்து ஒரு மருத்துவர் கூறினார் கோவிட்-19 இற்கு முன்னே நாங்கள் நிர்வாணமாக நிற்கிறோம் என்று. ஆனால் இப்பொழுது மெய்யாகவே நிர்வாணமாக  நிற்பது கடவுளின் முகவர்கள்தான் என்று எனது நண்பன் ஒருவன் கூறினான். அவ்வாறு கடவுளின் முகவர்கள் நிர்வாணமாக நிற்கும் ஒரு காலத்தில் மருத்துவர்கள் சமூகத்தின் பேச்சாளர்களாக மாறுகிறார்களா?

ஆம். மருத்துவர்கள் மட்டுமல்ல ஒவ்வொரு துறை சார்ந்தவர்களும் அவரவருக்குரிய கடமையைச் செய்ய வேண்டும். அரசியல்வாதிகள் இப்படிப்பட்ட நெருக்கடியான அசாதாரண சூழ்நிலையில் தமது மக்களுக்கு தைரியத்தைக் கொடுக்க வேண்டும். அவர்களுடைய கூட்டு உளவியலைச் சோர விடாமல், சிதைய விடாமல் பாதுகாக்க வேண்டும். ஒரு உலகப்பொது நோயை எதிர்கொள்வதற்கு தேவையான சமூக நோய் எதிர்ப்புச்சக்தி என்பது சமூகத்தின் தன்னம்பிக்கையிலும் தங்கியிருக்கிறது. ஒரு மக்கள் கூட்டத்தின் கூட்டு உளவியலைக் கட்டியெழுப்ப முதன்மையாக அரசியல் தலைவர்கலாலும் ஆன்மீகத் தலைவர்களாலும்தான் முடியும். ஒரு உலகப்பெரும் தோற்று நோய்க்கு எதிராக சமூகக் கூட்டு  நோய் எதிர்ப்புச் சக்தியை  மருத்துவர்கள் மட்டும் கட்டியெழுப்ப முடியாது. அதற்கு ஆன்மீகத் தலைவர்கள் ,அரசியல் தலைவர்கள், மருத்துவர்கள், சிவில்சமூகங்கள், கருத்துருவாக்கிகள், படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள் போன்ற எல்லாத் தரப்பினரும் கூட்டாக உழைக்க வேண்டும். அது ஒரு கூட்டுச் சிகிச்சையாக அமைய வேண்டும். தமிழ் கட்சித் தலைவர்களே அப்படி ஒரு கூட்டுப் பொறிமுறையை  உருவாக்குவீர்களா?

கோவிட்-19இன் தாக்கம் குறையும் பொழுது உலகில் ஒரு தொகுதி தலைவர்கள் நிறுவப்பட்டிருப்பார்கள். ஒரு தொகுதி தலைவர்கள் கழித்து விடப்பட்டிருப்பார்கள். தமிழ்க் கட்சித் தலைவர்களே  நீங்கள் இதில் எந்த வகைக்குள் அடங்கப் போகிறீர்கள்?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *