நாளை, ஆட்சி மாற்றத்தின் பின்னரான முதலாவது மே 18 ஆகும். இறுதிக்கட்டப் போரில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூரும் நிகழ்வுகள் கடந்த வாரத்தில் இருந்து ஆங்காங்கே நடந்து வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை குறியீட்டுத் தன்மை மிக்கவை. சிறுதொகையினரே இவற்றில் பங்கு பற்றி வருகிறார்கள். அவர்களிற் பெரும்பாலானவர்கள் அரசியல்வாதிகளே. ஆனால் இறுதிக்கட்டப் போரில் கொல்லப்பட்டதாகக் கூறப்படுவோரின் உறவினர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்வாக ஒழுங்கமைக்கப்பட்டால் அது பல்லாயிரக்கணக்கானோர் பங்குபற்றும் ஓர் அரசியல் வணக்க நிகழ்வாகவே இருக்கும். சிறீலங்காவின் சுதந்திர தின விழாவில் பங்குபற்றிய தமிழ்த் தலைவர்கள் கொல்லப்பட்ட தமது மக்களை நினைவு கூர முன்வருவார்களா?
இக்கட்டுரை எழுதப்படும் இந்நாள் வரையிலும் நடந்த எந்தவோர் நினைவு கூரும் நிகழ்விலும்; யாரும் வன்முறையை வெளிப்படையாகப் பிரயோகித்து அல்லது அச்சுறுத்தி தடுத்ததாகச் செய்திகள் எதுவும் வரவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்.நூலக கேட்போர் கூடத்தில் நடந்த நினைவு கூர்தலுக்கான உரிமை தொடர்பான கருத்தரங்கிலும் மண்டபம் நிறைந்த பார்வையாளர்கள் பங்குபற்றினார்கள். ஆட்சி மாற்றத்திற்கு முன்பு இவ்வாறு ஒரு நிகழ்வு நடந்திருந்தால் அதை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கண்காணிக்கின்ற அல்லது அச்சுறுத்துகின்ற சம்பவங்கள் நடைபெறுவதுண்டு. ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒப்பீட்டளவில் கூட்டம் சுமூகமாக நடைபெற்றதென்றே கூறவேண்டும். மாற்றத்தின் பின்னரான அதிகரித்து வரும் சிவில் வெளியை இது காட்டுகிறதா?
விடுதலைப் புலிகளை நினைவு கூர முடியாது என்று அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கிறது. ஆனால் பொது சனங்களை நினைவு கூர்வதற்குத் தடைகள் எதுவும் கிடையாது என்று கூறப்படுகிறது. அதாவது யாரை நினைவுகூரப் போகிறோம் என்று சுட்டிப்பாக அறிவிக்காமல் பொதுப்படையாக நினைவுகூருமிடத்து அதை உத்தியோகபூர்வமாக தடுக்கக் கூடிய நிலைமைகள் குறைந்துவிட்டன என்றே பொருள். அதுதான் யதார்த்தமும். இப்போதுள்ள அரசாங்கத்தால் நினைவு கூரலை ஒட்டுமொத்தமாகத் தடுக்க முடியாது. அது இந்த அரசாங்கத்தை பின்னிருந்து இயக்கிப் பாதுகாக்கும் சக்திமிக்க நாடுகளுக்குச் சங்கடத்தைக் கொடுக்கும். ஏனெனில் மேற்கத்தேய நாடுகள் நினைவு கூரலுக்கு கொள்கை அளவில் ஆதரவாகக் காணப்படுகின்றன. மேலும் அவ்வாறு உத்தியோகபூர்வமாகத் தடுத்தால் அது இந்த அரசாங்கத்தின் நண்பர்களான கூட்டமைப்புக்கும் வரவிருக்கும் தேர்தலில் பாதகமான பின்விளைவுகளை ஏற்படுத்தும். எனவே மாற்றத்தைக் குறித்து தமிழ் மக்கள் மத்தியில் சாதகமான ஒரு விம்பத்தை ஏற்படுத்தக் கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தை அரசாங்கம் கவனமாகவும் நுட்பமாகவும் கையாழ்வதாகவே தோன்றுகின்றது.
அதே சமயம் அரசாங்கம் நினைவு கூரலை உத்தியோகபூர்வமாக அனுமதிக்கவும் போவதில்லை. அவ்வாறு அனுமதித்தால் அது ராஜபக்ச சகோதரர்களுக்கே சாதகமாக திரும்பிவிடும் என்று ஓர் அச்சமும் உண்டு. நினைவு கூர்தலை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அனுமதித்தால் அதை வைத்தே ராஜபக்ச அணி சிங்களக் கடும் போக்காளர்களைத் தூண்டிவிட முடியும். விடுதலைப் புலிகளை நினைவு கூர்வதற்கு அரசாங்கம் அனுமதித்துவிட்டது என்று அவர்கள் வியாக்கியானப்படுத்துவார்கள். ஏற்கனவே ராஜபக்ச அணியானது அவ்வாறான பிரச்சாரங்களை முன்னெடுக்கத் தொடங்கிவிட்டது. எனவே நினைவு கூரும் நிகழ்வுகளை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அனுமதிக்கப்போவதில்லை.
இந்த இடத்தில் தமிழர்கள் என்ன செய்யலாம்? மாற்றத்தின் விரிவை சோதிப்பதே தமிழ் மக்கள் இப்போதைக்கு செய்யக் கூடியதொன்றாகும். மேற்கு நாடுகளும் இந்தியாவும் மாற்றத்தை பலப்படுத்த விளைகின்றன. அதே சமயம் தமிழ் மக்கள் தமது நோக்கு நிலையில் இருந்து மாற்றத்தின் விரிவை பரிசோதிக்கலாம். மாற்றத்தை ஒரு பரிசோதனைக் களமாக்கினால் அடுத்தகட்டம் மேலும் துலக்கமாகத் தெரியக்கூடும்.
ரசாங்கம் நினைவு கூரலை உத்தியோக பூர்வமாக பொதுப்படையாகத் தடுக்கப்போவதுமில்லை. அதேசமயம் உத்தியோகபூர்வமாக பொதுப்படையாக அனுமதிக்கப்போவதுமில்லை. அதாவது மைத்திரியின் வழி நடுவழியாகவே இருக்கும் என்று பொருள். இங்கு நடுவழி எனப்படுவது கௌதமபுத்தர் சொன்ன நடுவழி அல்ல. மாற்றத்தின் பின்னரான இலங்கைத்தீவின் யதார்த்தத்தை ஒட்டி கடைப்பிடிக்கப்படும் துலக்கமற்ற கலங்கலான ஒரு வழியே இது. அதன் மெய்யான பொருளிற் கூறின் இது மைத்திரியின் வழியும் அல்ல. அவரைத் தத்தெடுத்து பின்னிருந்து பாதுகாக்கின்ற சக்திமிக்க நாடுகளின் தெரிவே இது. 2009 இன் மே இற்குப் பின்னரான இலங்கைத்தீவின் பிரதான அரசியல் போக்குகளை கவனத்தில் எடுத்து வகுக்கப்பட்ட ஒரு வழிவரைபடம் இது. இதைச் சிறிது ஆழமாகப் பார்க்கலாம்.
2009, மே இற்குப் பின் சிங்கள மக்கள் மத்தியில் மகிந்த ராஜபக்ச ஒரு நவீன துட்டகைமுனுவாக எழுச்சிபெற்றுவிட்டார். சிங்கள மக்களின் நவீன வரலாற்றில் இதற்கு முன்பிருந்த எந்தவோர் அரசுத் தலைவரும் பெற்றுக்கொடுத்திராத ஒரு வெற்றி அது. எனவே அந்த வெற்றிக்கு ராஜபக்ச வம்சத்தினர்; என்றென்றும் உரிமை கோருவார்கள். சிங்களக் கடும்போக்காளர்களும் அந்த வெற்றிக்காக ராஜபக்ச வம்சத்தின் மீது அபிமானத்தோடு இருப்பார்கள். அந்த வம்சத்தின் அடுத்த டுத்த தலைமுறையினரும்; அந்த வெற்றிக்கு உரித்துக்கொண்டாட முடியும். அவ்வாறு உரித்துக் கொண்டாடி நாமல் ராஜபக்சவும் பதவிக்கு வரமுடியும் என்ற அச்சம் காரணமாகவே 19 ஆவது திருத்தத்தில் அதைத் தடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதாவது சிங்கள மக்கள் மத்தியில் வெற்றிவாதத்திற்குத் தொடர்ந்தும் இடம் இருக்கும் என்று அஞ்ச வேண்டிய ஒரு நிலையிலேயே தென்னிலங்கை அரசியல் காணப்படுகின்றது. நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் அதைத்தான் நிரூபித்திருக்கின்றது. பெரும்பான்மை மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட ஓர் தலைவரை சிறுபான்மை சமூகங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து தோற்கடித்துவிட்டன என்ற ஒரு கருத்து சிங்களக் கடும்போக்காளர்கள் மத்தியில் காணப்படுகின்றது. அதாவது தனிச்சிங்கள வாக்குகள் என்று பார்த்தால் ராஜபக்சதான் அவர்களுடைய தெரிவு. இதுதான் தென்னிலங்கையில் உள்ள பிரதான அரசியல் போக்கு.
மறுவளமாக தமிழ் முஸ்லிம் மக்களைப் பார்;த்தால் அவர்களில் பெரும்பாலானவர்கள் தலைகீழாகச் சிந்திக்கக் காணலாம். குறிப்பாகத் தமிழ் மக்களைப் பொறுத்தவரை ராஜபக்ச வம்சத்தின் மீதான கோபம் எனப்படுவது ஒரு தீராக் கோபமாகவே காணப்படுகின்றது. இதற்கு முந்திய எந்தவொரு சிங்களத் தலைவரும் ஏற்படுத்தியிராத சேதத்தையும் தோல்வியையும் அவமானத்தையும் மகிந்த ராஜபக்ச தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறார். இதற்கு முந்திய சிங்களத் தலைவர்கள் யுத்த களங்களில் தமிழ் மக்களை தோற்கடித்திருக்கிறார்கள்தான். இடம்பெயர வைத்திருக்கிறார்கள்தான். ஆனால் அதே யுத்த களங்களில் விடுதலைப் புலிகள் இயக்கம் அந்த அரசாங்கங்களோடு மோதி வெற்றிகளையும் பெற்றிருக்கின்றது. யுத்த களத்தில் தோற்ற அரசாங்கங்கள் தேர்தல் களத்திலும் தோற்றுப்போவதே 2009இற்கு முன்னரான சுமார் 38 ஆண்டுகால அரசியல் யதார்த்தமாக இருந்து வந்துள்ளது. ஆனால் நாலாம் கட்ட ஈழப்போரின் போது ராஜபக்ச சகோதரர்கள் புலிகள் இயக்கத்தையே நிர்மூலமாக்கிவிட்டார்கள். எனவே தமிழ் மக்களின் கூட்டுக்கோபமானது தீர்க்கப்படாமலே நீடித்திருக்கிறது. இப்போதைக்கு தேர்தல்களின் மூலம்தான் அந்தக் கோபத்தை தமிழ் மக்களால் வெளிப்படுத்த முடிகிறது. ராஜபக்ச வம்சத்தைச் சேர்ந்த அடுத்தடுத்த தலைமுறையினரின் மீதும் அந்தக் கோபம் நீடித்திருக்கக் கூடும்.
இத்தகையதோர் பின்னணியிலேயே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ராஜபக்சவுக்கு எதிராக வாக்களித்தார்கள். ராஜபக்சக்களின் மீது தமது தீராக் கோபத்தைத் தீர்த்துக் கொள்வதற்குத் தேர்தலை ஒரு வழிமுறையாக தமிழ் மக்கள் கருதுகிறார்கள். இது தமிழ் மக்கள் மத்தியில் உள்ள ஒரு பொதுப் போக்கு.
இவ்வாறு சிங்கள மக்கள் மத்தியில் ராஜபக்ச ஒரு நவீன துட்டகைமுனுவாக போற்றப்படும் ஒரு பெரும் போக்கும் தமிழ் மக்கள் மத்தியில் அவரைப் பழிவாங்கத் துடிக்கும் ஒரு போக்குமாகிய இருபெரும் போக்குகளும்தான்; இலங்கைத்தீவின் இப்போதுள்ள அரசியலைத் தீர்மானிப்பவைகளாகக் காணப்படுகின்றன. வரக்கூடிய பொதுத் தேர்தலிலும் இவ்விரு போக்குகளும்தான் முடிவுகளைத் தீர்மானிக்கப் போகின்றன. சக்திமிக்க வெளிநாடுகள் இதைச் சரியாகக் கணித்திருக்கின்றன. வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் மக்களின் வாக்குகள் ஜனாதிபதித் தேர்தலின்போது பழிவாங்கும் வாக்குகளாகவே வெளிப்பட்டன. அதாவது தமிழ் மக்களின் கோபத்தை யாரெல்லாமோ தங்களுடைய வியூகத் தேவைகளுக்கேற்ப பயன்படுத்திவிட்டுப் போகிறார்கள். கடந்த ஆறு ஆண்டுகளாகத் தமிழ் மக்களின் கோபத்தை அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமைகள் வெற்றிகரமாகப் ஒருங்குவித்துக் கையாளத் தவறியதன் விளைவே இது எனலாம். வரக்கூடிய பொதுத் தேர்தலின் போதும் பேரம் எதையும் செய்யத் தவறின் வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள் பழிவாங்கும் வாக்குகளாகவே பிரயோகிக்கப்படும்.
சக்திமிக்க வெளிநாடுகளும் தென்னிலங்கையில் உள்ள ராஜபக்ச வம்சத்தின் எதிரிகளும் தமிழ் மக்களின் கோபத்தைப் பயன்படுத்தி மாற்றத்தைக் கொண்டுவந்துவிட்டார்கள். அதன் பின் மாற்றத்தைப் பலப்படுத்துவதற்கும் தமிழ் மக்களையே பயன்படுத்திவருகிறார்கள். வரக்கூடிய பொதுத் தேர்தலின் போதும் இதுவே நடக்கக் கூடும். தமது கூட்டுத் துக்கத்தை வெளிப்படுத்தவியலா சிறிய மக்கள் கூட்டம் ஒன்றின் கூட்டுக் கோபத்தை யாரெல்லாமோ பயன்படுத்துகிறார்கள். தமிழ் மக்களின் கூட்டுக் கோபத்தை தமது நோக்கு நிலையிலிருந்து கையாண்டு வரும் அவர்கள் தமிழ் மக்கள் தமது கூட்டுத்துக்கத்தை வெளிப்படுத்த அனுமதிப்பார்களா?
தமிழ் மக்கள் தமது நோக்கு நிலையிலிருந்து மாற்றத்தின் விரிவைச் சோதிக்கும்போதே அடுத்தகட்டம் வெளிக்கும். கொல்லப்பட்டவர்களை நினைவுகூர்வதும் அப்படியொரு பரிசோதனைதான்