

கோவிட் -19காலத்தில் வீட்டுத் தோட்டத்த்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டதைப் போல கூட்டுறவு வாழ்க்கை குறித்தும் இயற்கைக்கு மீளத் திரும்புவது குறித்தும் உரையாடத் தொடங்கியுள்ளோம். குறிப்பாக சமூகத்தின் அன்றாடங் காய்சிகளுக்கும் நலிவுற்ற பிரிவினருக்கும் பாரபட்சமற்ற விநியோகத்தை மேற்கொள்வதற்கு கூட்டுறவுச் சங்கங்களை புதுப்பிக்க வேண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன..
உண்மைதான். யுத்த காலங்களில் சங்கக் கடை மைய வாழ்க்கை ஒன்று இருந்தது. அந்நாட்களில் கூப்பன் கார்ட்டும் அடையாள அட்டையும் தொலைக்க முடியாத ஆவணங்களாக காணப்பட்டன. குடும்ப அட்டை என்பது நிவாரண அட்டையாகவும் நீட்சி பெற்றிருந்தது. குடும்ப அட்டைகளிலும் பல வகைகள் இருந்தன.. எல்லாவிதமான நெருக்கடிகளின் மத்தியிலும் அன்றைக்கிருந்த கூப்பன்கடை மைய வாழ்வில் ஒப்பீட்டளவில் நிவாரணம் ஏற்றத்தாழ்வின்றி சமமாக வழங்கப்பட்டது.
ஆனால் படிப்படியாக சமூகம் சங்க கடைகளை விட்டுவிலகி பல்பொருள் அங்காடிகளை நோக்கி நகர்ந்து விட்டது. எனக்கு தெரிந்து திருநெல்வேலியில் ஆடியபாதம் வீதியில் ஒரு கோப் சிட்டி இருந்தது. ஆனால் அந்த கடைக்கு பொருள் வாங்க வருபவர்களின் தொகை அதிகமாக இருப்பதில்லை. 2009க்கு பின் சில ஆண்டுகள் அந்த கடை இயங்கியது. இப்பொழுதும் அந்த கடை அங்கே உண்டு. அந்தக் கடைக்கு சற்று விலகி எதிர்த்;திசையில் ஒரு தனியார் பல்பொருள் அங்காடி திறக்கப்பட்டுள்ளது. இப்பொழுது நுகர்வோர் பெருமளவுக்கு அந்த பல்பொருள் அங்காடியை நோக்கியே போகிறார்கள். கோப் சிட்டி கட்டடம் வேறு தேவைக்கு மாற்றப்பட்டு விட்டது.
இதுபோலவே திருநெல்வேலி சந்தியில் முகப்பில் ஒரு நியாயவிலைக் கடை உண்டு அங்கேயும் பெருந்தொகையான மக்களை காண முடியாது. அதுமட்டுமல்ல உரும்பிராய் சந்தியில் ஒரு நியாய விலைக் கடை உண்டு. அங்கேயும் நுகர்வோரை அதிகம் காண முடியாது. நியாய விலைக் கடைகளை நோக்கி ஏன் மக்கள் வருவதில்லை என்று கேட்டேன். அங்கே விற்கப்படும் பொருட்கள் தரம் இல்லை என்று ஓர் அபிப்பிராயம் உண்டு அதனால்தான் என்று பதில் சொல்லப்பட்டது.


கூட்டுறவு சங்கங்கள் தமது விற்பனை நிலையங்களில் தரமற்ற பொருட்களை விற்று வருகின்றனவா? நிச்சயமாக இல்லை. அதே திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் கூட்டுறவுச் சங்கத்தால் நிர்வகிக்கப்படும் சாப்பாட்டுக் கடை ஒன்று உண்டு. ஏனைய எல்லாக் கடைகளை விடவும் அங்கே சாப்பாடு மலிவு. திருநெல்வேலி சந்தையில் வேலை செய்யும் அன்றாடக் கூலி உழைப்பாளிகள் பலர் அங்கேயேதான் சாப்பிடுவார்கள். அது மலிவான சாப்பாடு மட்டுமல்ல தரமானது. கூட்டுறவு சங்கத்தின் நியாய விலைக் கடைகளோடு ஒப்பிடுகையில் மேற்படி சாப்பாட்டுக் கடையில் ஜனத்திரள் அதிகம். அந்த சாப்பாட்டுக் கடையில் மட்டுமல்ல மாகாணசபையால் நடாத்தப்படும் அம்மாச்சி சாப்பாட்டு கடையிலும் வாடிக்கையாளர் அதிகம் தான். காரணம் அதன் தரம். தரமானது என்று நிரூபிக்கப்பட்டால் ஜனங்கள் அதை நோக்கி வருவார்கள் என்பதற்கு அம்மாச்சி கடைகளும் வன்னியிலுள்ள அதுபோன்ற எனைய கடைகளும் மிகச்சிறந்த முன்னுதாரணங்கள்.
இன்னும் ஒரு உதாரணத்தைக் கூறலாம். பலாலி வீதியில் ஆஸ்பத்திரி சந்தியில் இருந்து ஆஸ்பத்திரியை நோக்கி சில அடிகள் எடுத்து வைத்ததும் இடப்பக்கமாக சதோசா கடை ஒன்று உண்டு.கொரோனாவுக்குமுன்பு அந்தக் கடைக்கு ஆட்கள் பெருந்தொகையாகச் செல்வதில்லை. அங்கே அதிகமாகச் சொல்பவர்கள் யாரென்று பார்த்தால் யாழ் பல்கலைக்கழகத்திலும் ஏனைய கல்வி நிறுவனங்களிலும் கல்வி கற்கும் சிங்கள மாணவ – மாணவிகளே. எனினும் கோவிட்-19 க்குப்பின் இப்பொழுது அந்த கடையில் அதிக தொகை நுகர்வோரைக் காணமுடிகிறது. அரசாங்கம் விலை குறைத்த டின் மீன் பருப்பு போன்றன அங்கேதான் முதலில் கிடைத்ததும் ஒரு காரணமா?
இந்த உதாரணங்களில் இருந்து ஒன்றைக் கற்றுக்கொள்ளலாம். சங்கக் கடையில் தரமான பொருள் விற்கப்பட்டால் மக்கள் தேடி வருவார்கள். நியாய விலைக் கடையில் விற்கப்படும் பொருட்கள் மலிவாகக் கொள்வனவு செய்யப்பட்ட தரமற்ற பொருட்கள் என்ற அபிப்ராயத்தை மாற்ற வேண்டும். எப்படி மாற்றுவது ? பல்பொருள் அங்காடிகளோடு மோதிக்கொண்டு அதைச் செய்யவேண்டும். யார் செய்வது?


இந்த இடத்தில்தான் கூட்டுறவு என்றால் என்ன என்பதை அதன் ஆழமான பொருளில் விளங்கிக் கொள்ள வேண்டும். கூட்டுறவு எனப்படுவது உள்ளூர் உற்பத்தியாளர்கள் சந்தை சுரண்டலுக்கு எதிராக பொருட்களை நியாய விலையில் கொள்வனவு செய்வதற்கும் விநியோகிப்பதற்கும் ஏற்படுத்திக் கொண்ட ஒரு கட்டமைப்பு. தரமானதையும் மலிவானத்தையும் பெற வேண்டுமென்றால் சமூகத்தின் கூட்டுறவை வளர்க்க வேண்டும் என்பதே கூட்டுறவு தத்துவம். எவ்வளவுக்கெவ்வளவு சமூகம் ஐக்கியப்பட்டு இயங்குமோ அவ்வளவுக்கு அவ்வளவு கூட்டுறவு இயக்கமும் செழிப்படையும். கூட்டுறவு இயக்கம் பலமாக இயக்கினால் அங்கே தரமான பொருள் மலிவாக கிடைக்கும்.
யாழ்ப்பாணத்தில் இவ்வாறு மகத்தான வெற்றிகளைப் பெற்ற கூட்டுறவுச் சங்கங்களைக் காட்டலாம். கடற்றொழிலாளர் மத்தியிலும் சீவல் தொழிலாளர் மத்தியிலும் ஏனைய தொழிலாளர்கள் மத்தியிலும் வெற்றிகரமாக கூட்டுறவுச் சங்கங்கள் கட்டியெழுப்பப்பட்டன. பனை தென்னை வள உற்பத்திக் கூட்டடுறவுச் சங்கம், நீர்வேலி காமாட்சியம்மன் உருக்கு உற்பத்திக் கூட்டடுறவுச்சங்கம், நீர்வேலி வாழைக்குலை உற்பத்தியாளர் கூட்டடுறவுச் சங்கம் போன்ற உதாரணங்களை காட்டலாம். அங்கெல்லாம் சமூகத்தை ஒரு திரளாக கூட்டிக் கட்டுவதே கூட்டுறவு என்றழைக்கப்பட்டது. இது அதன் இறுதி விளைவைப் பொறுத்தவரை தேசியத் தன்மை மிக்கது. ஒரு நேர்மையான தேசிய வாதிதான் கூட்டுறவாளராக இருக்கலாம். அல்லது நேர்மையான எல்லாக் கூட்டுறவாளர்களும் பெரும்பாலும் தேசியவாதிகளே. அதனால்தான் தமிழ் மக்கள் மத்தியில் தோன்றிய கூட்டுறவாளர்கள் பலர் பின்னாளில் இயக்கங்களில் சேர்ந்தார்கள். அதாவது ஒரு துணிச்சலான நேர்மையான மெய்யான கூட்டுறவாளர் மெய்யான தேசியவாதியமாவார். ஏனெனில் தேசியம் எனப்படுவது ஒரு சமூகத்தைப் திரளாகக் கூட்டி கட்டுவது.
இது காரணமாகவே தமிழ் மக்கள் மத்தியில் தோன்றிய சில மகத்தான கூட்டுறவாளர்கள் பின்னாளில் கொல்லப்பட்டார்கள். இப்படியாக ஆயுதப் போராட்டமும் கூட்டுறவு இயக்கத்தின் எழுச்சி வீழ்ச்சிகளுக்கும் காரணமாக அமைந்தது. ஒரு கட்டம் வரையிலும் ஆயுதப் போராட்டம் கூட்டுறவு அமைப்பின் எழுச்சிக்கு உதவி புரிந்தது. ஆனால் ஒரு கட்டத்திற்குப் பின் கூட்டுறவு சங்கத்தின் தனித்துவமான இயல்பான சுதந்திரமான இயக்கத்துக்கு ஆயுதப் போராட்டமும் சவாலாக அமைந்தது. அதோடு ஆயுதப்போராட்டத்தோடு சேர்த்து அடையாளங் காணப்பட்ட சில வெற்றிகரமான கூட்டுறவாளர்கள் பின்னாளில் கொல்லப்பட்டார்கள்.
இடப்பெயர்வுகளின் போதும் கூட்டுறவுச் சங்கங்கள் மகத்தான பணி புரிந்தன. அப்பொழுதெல்லாம் கூட்டுறவுச் சங்கங்கள் ஆயுதப் போராட்டத்தின் உதவி அமைப்புகள் போல செயற்பட்டன. தமிழ்க் கூட்டுறவு இயக்கம் போர்க் காலத்தில் தனது உச்சமான பங்களிப்பைச் செய்தது என்று மூத்த சிவில் அதிகாரியான செல்வின் தெரிவித்தார்.முடிவில் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட போது கூட்டுநவுக் கட்டமைப்பும் ஓரளவுக்குச் சிதைந்து விட்டது. இது தனியாக ஆராயப்பட வேண்டிய ஒரு ஆய்வுப் பரப்பு. கூட்டுறவுச் சங்கங்களின் மீது ஆயுதப் போராட்டம் செலுத்திய தாக்கம்.
ஆயுதப் போராட்டத்தின் வீழ்ச்சியோடும் பல் பொருள் அக்காடி மைய வாழ்க்கையின் எழுச்சியோடும் கூட்டுறவு வீழ்ச்சியுற்றது. இப்பொழுது பல்பொருள் அங்காடி மைய வாழ்வில் கூட்டுறவு அமைப்பு பொலிவை இழந்து விட்டது. அதை மறுபடியும் கட்டியெழுப்புவது என்றால் அதற்குத் துணிச்சலான அர்ப்பணிப்பு மிக்க கூட்டுறவாளர்கள் வேண்டும். அதாவது நேர்மையான தேசியவாதிகள் வேண்டும்.