தமிழ் வேட்பாளர்களை நோக்கி முப்பது பகிரங்க கேள்விகள்

நீங்கள் எந்த கட்சியைச் சேர்ந்தவராக இருக்கலாம் ஆனால் ஆயுதப் போராட்டத்துக்குப் பின்னரான கடந்த 11 ஆண்டுகால அரசியலை முன்வைத்து உங்களிடம் சில கேள்விகளை கேட்க வேண்டியிருக்கிறது உங்களுடைய அரசியல் நிலைப்பாடுகள் வேறுபடலாம். ஆனால் உங்களுடைய வாக்காளர்கள் பெரும்பாலானவர்கள் தமிழ் மக்களே எனவே தமிழ் மக்களின் நிரந்தர பிரச்சினைகள் தொடர்பாகவும் அன்றாட பிரச்சினைகள் தொடர்பாகவும் உங்களிடம் இருக்கக்கூடிய வழி வரைபடம் என்ன ?அதை அடைவதற்கான அரசியல் உபாயம் என்ன ?என்பதை நீங்கள் பகிரங்கப்படுத்த வேண்டும் அந்த அடிப்படையிலேயே இக் கேள்விகள்கேட்கப்படுகின்றன.

கேள்வி ஒன்று -மிகவும் அடிப்படையான கேள்வி தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமா அல்லது சிறுபான்மை இனமா?

கேள்வி 2-தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்றால் எந்த அடிப்படையில் அவர்களை நீங்கள் தேசிய இனம் என்று வரையறுக்கிறீர்கள் ?அப்படி இல்லை என்றால் இந்த அடிப்படையில் அவர்களை சிறுபான்மை இனம் என்று வரையறுக்கிறீர்கள்?

கேள்வி 3 -தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்றால் இச்சிறிய தீவில் ஒன்றுக்கு மேற்பட்ட தேசங்கள் இருப்பதனை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?

கேள்வி நாலு -அவ்வாறு ஏற்றுக் கொண்டால் தமிழ் மக்கள் ஒரு தேசம் என்பதன் அடிப்படையில் எப்படிப்பட்ட ஒரு தீர்வை நீங்கள் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக முன் வைக்கிறீர்கள்?

கேள்வி 5 -தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்றால் 2009 மே மாதம் வரையிலும் நடந்தவற்றை இனப்படுகொலை என்று ஏற்றுக் கொள்கிறீர்களா?அதற்குப் பின்னரும் அரச திணைக்களங்களுக்கூடாக நடைபெற்று வருகின்றவை நன்கு திட்டமிடப்பட்ட கட்டமைப்பு சார் இனப்படுகொலை தான் என்பதனை ஏற்றுக் கொள்கிறீர்களா?

கேள்வி 6 -அப்படி அது இனப்படுகொலை என்று ஏற்றுக்கொண்டால் அந்த இனப்படுகொலையை நிரூபிக்கத் தேவையான சான்றாதாரங்களை நீங்கள் எப்படிப்பட்ட அனைத்துலக பொறிமுறை ஒன்றுக் கூடாக விஞ்ஞானபூர்வமாக திரட்டி வைத்திருக்கிறீர்கள்?

கேள்வி எழு – இனப்படுகொலைதான் நடந்தது என்பதனை நிரூபிக்கத் தேவையான சான்றாதாரங்களை கடந்த 11 ஆண்டுகளில் அனைத்துலக சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட விஞ்ஞானபூர்வமான ஒரு முறைமைக் கூடாக திரட்டவில்லையென்றால் ஏன் திரட்ட முடியவில்லை ?இனி வரும் ஐந்தாண்டுகளில் அப்படி திரட்டுவதற்கான வழி வரைபடம் ஏதும் உங்களிடம் உண்டா?

கேள்வி 8- நடந்தது இனப்படுகொலை என்றால் இனப்படுகொலைக்கு எதிரான பரிகார நீதியே இனப்பிரச்சினைக் கான தீர்வும் ஆகும் என்பதனை நீங்கள் கொள்கை அளவிலும் செயல் பூர்வமாகவும் ஏற்றுக்கொள்கிறீர்களா?

கேள்வி 9- அவ்வாறு பரிகார நீதிதான் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்று நம்பினால் அதைக் குறிப்பாக உங்களுடைய தேர்தல் அறிக்கையிலும் பிரச்சாரங்களிலும் முன் வைப்பீர்களா?

கேள்வி 10- அவ்வாறு முன்வைக்கும் போது பரிகார நீதியை வென்றெடுப்பதற்கான செயல் பூர்வ வழி வரைபடத்தை உங்கள் தேர்தல் அறிக்கைகளில் முன் வைப்பீர்களா ?

கேள்வி 11-தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் கேட்பது பரிகார நீதியை. ஆனால் உலக சமூகம் தமிழ் மக்களுக்கு தர முன்வந்திருப்பது நிலை மாறு கால நீதியை. அப்படி என்றால் நிலை மாறு கால நீதியிலிருந்து பரிகார நீதியை நோக்கி செல்வதற்குரிய உங்களுடைய வழி வரைபடம் என்ன?

கேள்வி 12-குறிப்பாக ராஜபக்சவின் இரண்டாவது ஆட்சியில் நிலைமாறுகால நீதியையே அரசாங்கம் நிராகரிக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகம் உண்டு. ஆயின் நிலைமாறுகால நீதியை வென்றெடுப்பதற்கு தேர்தல் வழிமுறைகளுக்கும் அப்பால் உபாயங்கள் உண்டா ? அவை யாவை?

கேள்வி13- நடந்தது இனப்படுகொலை இல்லை என்றால் அது என்ன ? அதை எந்த அடிப்படையில் இனப்படுகொலை இல்லை என்று கூறுகிறீர்கள்?

கேள்வி 14- தேசிய விடுதலை தான் சமூக விடுதலையும் என்று உறுதியாகக் கூறுவீர்களா?

கேள்வி 15- அப்படி கூறுவீர்களா ஆயின் உங்களுடைய வேட்பாளர்களில் எத்தனை பேர் பிற்படுத்தப்பட்ட சமூக பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்?

கேள்வி 16- உங்களுடைய வேட்பாளர்களில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் வெற்றிவாய்ப்பை கொண்டவர்கள் ?அவர்களை நீங்கள் நட்சத்திர அந்தஸ்துடைய கட்சி பிரமுகர் ஒருவர் வெல்வதற்காக தனது சமூகத்தின் வாக்குகளை வாங்கித் தந்துவிட்டு தோல்வியுறும் ஒரு பலியாடாகத்தான் பயன்படுத்தவில்லை என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?

கேள்வி17-அப்படி நிரூபிப்பது என்றால் ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் போட்டியிடும் தொகுதியில் இருந்து நட்சத்திர அந்தஸ்துடைய கட்சி பிரமுகரை அகற்றுவீர்களா? அல்லது குறைந்தபட்சம் அவர் வென்றாலும் தோற்றாலும் தேசியப் பட்டியலில் அவருக்கு இடம் வழங்கப்படும் என்று உறுதியாகக் கூற உங்களில் எத்தனை பேர் தயார்?

கேள்வி 18- இனப்பிரச்சினைக்கு உரிய நிரந்தர தீவுக்கும் அப்பால் யுத்தத்தின் விளைவாக தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அன்றாடப் பிரச்சினைகளுக்கு உங்களுடைய தீர்வுக்கான வழி வரைபடம் என்ன?

கேள்வி 19-அரசியல் கைதிகளுக்கு எப்படி விடுதலை பெற்று கொடுப்பீர்கள்?

கேள்வி 20-ஆக்கிரமிக்கப்பட்ட இருக்கும் காணிகளை எப்படி முழுமையாக விடுவித்துக் கொடுப்பீர்கள்?

கேள்வி 21-காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு எப்படி நீதியையும் நிவாரணத்தையும் பெற்றுக் கொடுப்பீர்கள்?

கேள்வி 22- 2009க்கு பின்னரும் அரச திணைக்களங்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் கட்டமைப்பு சார் இனப்படுகொலையை தடுப்பதற்கு உடனடியான வழிவகைகள் என்ன ? அதற்குரிய வழி வரைபடம் என்ன?

கேள்வி 23- தமிழ் மக்களை ஒரு தேசமாக ஏற்றுக்கொண்டால் தமிழ் மக்களின் தேசத்துக்கு உரிய வெளியுறவுக் கொள்கை என்ன? அந்த வெளியுறவுக் கொள்கையை பகிரங்கமாக முன்வைப்பீர்களா ?

கேள்வி 24- தமிழ் மக்களின் பிரச்சினைகள் அனைத்துக்குமான தீர்வை பிரதிநிதித்துவ அரசியல் என்ற ஒரே வழிமுறைக்கூடாக மட்டும் அடைந்து விடலாமா ?அல்லது ஒரு தமிழ் தேசிய இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டிய தேவை உண்டா ?அப்படியோரு தமிழ்த் தேசியக் கட்டமைப்பை தேசியப் பேரியக்கத்தை கடந்த 11 ஆண்டுகளாக நீங்கள் ஏன் கட்டவில்லை ?இனிமேலும் அவ்வாறு கட்டி எழுப்புவீர்கள் என்று எப்படி நம்புவது?

கேள்வி 25- இனப்பிரச்சினை சாராம்சத்திலும் நடைமுறையிலும் ஒரு உள்நாட்டு பிரச்சினை அல்ல. அது ஒரு அனைத்துலக பிரச்சினை. அதற்கு அனைத்துலக அளவிலும் பிராந்திய அளவிலும் உருவாக்கப்படும் ஒரு தீர்வே நிரந்தரமாக அமையும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

கேள்வி 26-அப்படி நம்பினால் தீர்வை அடைவதற்கு தாயகம் தமிழகம் புலம்பெயர்ந்த தமிழர்கள் என்ற மூன்று கட்டமைப்புகளையும் ஒன்றிணைத்து போராட வேண்டிய அவசியத்தை ஏற்றுக் கொள்கிறீர்களா? ஆயின் அதற்குரிய வழி வரைபடம் என்ன?

கேள்வி 27- கடந்த பதினோரு ஆண்டுகளாக அப்படி ஒரு வழி வரைபடம் உங்களிடம் இருந்ததா? அதன்மூலம் நீங்கள் சாதித்தவை என்ன ? சாதிக்க முடியாதவை என்ன? சாதிக்க முடியாதவறுற்க்குக் காரணம் என்ன? இனிமேலும் வரும் 5 ஆண்டுகளில் அதை சாதிப்பீர்கள் என்று எப்படி நம்புவது?

கேள்வி 28- கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீங்கள் மக்கள் பிரதிநிதிகளாக இருந்திருந்தால் உழைத்திருப்பீர்கள் தானே ? உங்களுடைய மொத்த சொத்து விபரம் என்ன?

கேள்வி 29- ஆயுதப் போராட்டத்தை உங்களுடைய பிரச்சார நடவடிக்கைகளில் எந்த அடிப்படையில் பயன்படுத்துகிறீர்கள்?

கேள்வி 30- உங்களுடைய பிரச்சார நடவடிக்கைகளில் பயன்படுத்தும் பொழுது அதை நீங்கள் ஒரு வேஷமாக அல்லது முகமூடியாக அல்லது ஊன்று கோலாக அல்லது ஊறுகாய் போல பயன்படுத்தவில்லை என்று உங்களால் நிரூபிக்க முடியுமா? குறிப்பாக கடந்த 11 ஆண்டுகளில் நீங்கள் ஆயுதப் போராட்டத்தை விசுவாசமாகவும் இதயசுத்தியுடனும் பயன்படுத்தினீர்கள் என்பதற்கு ஆதாரங்களை காட்டுவீர்களா?

மேற்கண்ட கேள்விகளுக்கு நீங்கள் பதில் கூறலாம் கூறாமல் விடலாம். ஆனால் கேள்விகள் உங்களை நோக்கி மட்டும் தொடுக்கப்படவில்லை. உங்களுக்கு வாக்களிக்கப் போகும் மக்களை நோக்கியும் தொடுக்கப்படுகின்றன. அவர்களுடைய புத்திசாலித்தனத்தை நோக்கியும் மறதியை நோக்கியும் மனச்சாட்சியை நோக்கியும் இக்கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.

Related Articles

1 Comment

Avarage Rating:
  • 0 / 10
  • மகேந்திரன் , 30/06/2020 @ 1:04 AM

    இதிலுள்ள எந்தவொரு கேள்விக்கும் எந்தத் தமிழ் அரசியல்வாதியிடமிருந்தும் சரியான பதில் கிடைக்கப்போவதில்லை. எல்லோருமே கூட்டுக் களவாணிகள். யார் கூடுதல் கொள்ளை அடிப்பது என்றுதான் போட்டியே. அந்தப் பலப் பரீட்சையைத்தான் தேர்தலிற் காட்ட முனைவார்கள். தமிழ் மக்களைப் பொறுத்த மட்டில் எங்கே தமக்கு ஒரு எலும்புத்துண்டு கிடைக்குமென்றுதான் பார்ப்பார்கள். ஏனெனில் அவர்கள் இழந்தது இறைச்சி. இப்போது இருக்கிற பசிக்கு ஒரு எலும்புத்துண்டு கிடைத்தாலும் போதுமென நினைப்பார்கள். மக்களில் மிகச் சிலரே தமிழ்த் தேசியம் என்ற கொள்கை உறுதியுடன் இருக்கிறார்கள், ஆனால் எந்தவொரு தமிழ்க் கட்சியிடமோ அல்லது வேட்பாளரிடமோ “தமிழ்த் தேசியம்” என்ற கொள்கையோ நிலைப்பாடோ இல்லை. இனிச் சிங்கள அரசாங்கங்களையோ ஆட்சியாளர்களையோ தமிழ் மக்கள் நம்புவதில் எந்தப்பயனும் இல்லை.

    “சிங்கள பௌத்த நாடு” என்று சொல்லிச் சொல்லியே இனவாதத்தினை வளர்த்தெடுப்பதில் சிங்கள அரசியல்வாதிகளும் ஆட்சியாளர்களும் முனைப்புடன் இருக்கிறார்கள். இதில் முழுமையான வெற்றி கண்டுவிட்டார்கள். பொதுத் தேர்தலும் அதையே உறுதி செய்யுமென நம்பலாம்.

    தமிழ் மக்கள் இனிமேல் சிங்கள, தமிழ் அரசியல்வாதிகளையும் அயல், உலக நாடுகளையும், ஐ.நாவையும் நம்புவதை விடுத்துத் தம்மைத் தாமே நம்புவதே சிறந்தது. ஒவ்வொரு ஊர்களிலும் உள்ள மக்கள் “நம் ஊரை நாமே மேம்படுத்துவோம்” என்ற கொள்கை உறுதியுடன் செயற்பட்டு, ஒவ்வொரு ஊர் மக்களையும் வறுமையின் பிடியிலிருந்து விரட்டி, ஊரைச் செழிப்படையச் செய்து “தற்சார்புப் பொருளாதாரத்திற் தன்னிறைவு” காண வேண்டும். ஒவ்வொரு குடும்பமும் அரசையோ அல்லது தனிப்பட்ட எவரையுமோ சாராது வாழ முயற்சி எடுக்க வேண்டும். கல்வி, வேலை வாய்ப்பு இவைகட்கு வேண்டிய எல்லா வசதிகளையும் அந்தந்த ஊர் மக்களே தாமாகச் செய்ய வேண்டும். ஒவ்வொரு குடும்பமும் மேம்படும்போது ஊர் மேம்படும். ஒரு ஊர் மேம்படும்போது எல்லா ஊர்களும் மேம்படும். இப்படி ஊர், நகரம், மாவட்டம், மாகாணம் என்று சென்றால் தமிழ் மக்கள் வாழும் பகுதிகள் அத்தனையும் மேம்படும்.

    30 வருட காலத்தை ஆயுதப் போராட்டத்துக்குக் கொடுக்கவில்லையா? அதே 30 வருட காலத்தை நமக்கு நாமே கொடுக்கக் கூடாதா? இலங்கை அரசை நம்பவேண்டாம். தமிழ் அரசியல்வாதிகளையும் நம்பவேண்டாம், நம்மை நாமே நம்புவோம். தமிழ் இளையோர் அற்பணிப்புடன் ஈடுபட்டால் ஒவ்வொரு ஊரையும் ஏற்றம் பெறச் செய்யலாம். புலம் பெயர்ந்தோர், பணம் படைத்தோர், குணம் படைத்தோர், மனம் படைத்தோர் எல்லோரும் ஒன்றிணைந்தால் முடியாத காரியம் இல்லை.

    தமிழ் மக்கள் ஒன்றிணைய வேண்டிய காலமிது. ஒரே வேலைத் திட்டத்தில் ஒவ்வொரு ஊர் மக்களும் ஒன்றிணைய வேண்டும். கல்வி, பொருளாதாரம் இவைகளிற் தமிழ் மக்கள் மேம்பாட்டு ஒரு புதிய வரலாற்றினை உண்டாக்கினால், நாம் யாரையும் நம்பி வாழ வேண்டிய அவசியமில்லை. தற்சார்புப் பொருளாதாரமும், தன்னிறைவுமே இப்போது தமிழ் மக்களுக்கு வேண்டியது.

    ‘புதியதோர் உலகம் செய்வோம்!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *