கோவிட் -19 இலங்கை தீவில் இரண்டு மீடியாத் தளங்கள் இருப்பதனை நிரூபித்திருக்கிறது. இரண்டு மீடியாத் தளங்கள் என்பதை விடவும் இலங்கைத்தீவில் இரண்டு நோக்கு நிலைகள் உள்ளன என்பதனையும் இரண்டு கருத்துருவாக்க மையங்கள் உண்டு என்பதனையும் இரண்டு அபிப்பிராய மையங்கள் உண்டு என்பதனையும் கோவிட் -19 நிரூபித்திருக்கிறது.
இதை அதற்குரிய அரசியல் அடர்த்தியோடு சொன்னால் வைரஸ் தொற்றானது இலங்கைத் தீவில் இரண்டு தேசங்கள் இருப்பதனை ஓரளவுக்கு நிரூபித்திருக்கிறது எனலாமா ?
ஏனெனில் கோவிட் -19 தொற்றத் தொடங்கியதிலிருந்து இலங்கைத் தீவில் இரண்டு மீடியா அப்டேட்கள் தொடர்ச்சியாக வெளி வந்தன ஒன்று கொழும்பு மைய ஊடகத் தளம். இதில் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரமுடைய அலுவலர்கள் ஒவ்வொரு நாளும் கோவிட் -19 தொடர்பான புள்ளிவிவரங்களை தொடர்ச்சியாக பிரசுரித்து வந்தார்கள்.
அதே சமயம் மற்றொரு ஊடகத் தளம் வடக்கில் இயங்கியது. அங்கே யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் கோவிட் -19 தொடர்பான புள்ளி விவரங்களை வெளியிட்டுக் கொண்டிருந்தார். தவிர அவ்வப்போது ஊடகவியலாளர்களை சந்தித்து நோய்த் தொற்று தொடர்பான சர்ச்சைக்குரிய கேள்விகளுக்கு பதில்களையும் வழங்கிக் கொண்டிருந்தார்.
அக்காலகட்டத்தில் மருத்துவர் சத்தியமூர்த்தியின் செயற்பாடானது சமூகத்தின் அச்சத்தை தணிக்கும் நோக்கிலும் சமூகத்திற்கு நம்பிக்கையூட்டும் நோக்கிலும் அமைந்திருந்தது. இலங்கைத்தீவின் வேறெந்த மருத்துவ நிர்வாகப் பிராந்தியத்திலும் இப்படி ஒரு ஊடகத் தளம் கொரோனாக் காலத்தில் செயற்படவில்லை.
தமிழ் சூழலில் கடந்த 11 ஆண்டுகாலப் பகுதிக்குள் சத்தியமூர்த்தி இரண்டாவது தடவையாக அப்படி ஒரு பாத்திரத்தை வகித்திருக்கிறார். முதலாவது தடவையாக கடைசிக் கட்டப் போரின் போது அவர் சமூகத்தின் பேச்சாளர்களில் ஒருவர் போல செயற்பட்டார். அந்நாட்களில் அவர் நிர்வகித்த ஆஸ்பத்திரிகளில் இருந்து சில நூறு மீட்டர் தொலைவில் கூடாரங்களில் வசித்த மக்கள் பி.பி.சி போன்ற உலக ஊடகங்களுக்கு சத்தியமூர்த்தி தெரிவிக்கும் தகவல்களுக்கு ஊடாகவே தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்ற விபரங்களை அறிய முடிந்தது. அதுவும் ஒரு தகவல் யுகத்தில்?
அந்நாட்களில் வெளியுலகத்தில் இருந்து துண்டிக்கப்பட்டு மூடப்பட்டிருந்த அல்லது முற்றுகை இடப்பட்டிருந்த ஒரு சமூகத்தின் பேச்சாளர்களில் ஒருவராக சத்தியமூர்த்தி மேலெழுந்தார்.அந்நாட்களில் முற்றுகையிடப்பட்ட ஒரு சமூகத்தின் வெளி உலகத்துக்கான வாசலாக ஆஸ்பத்திரி காணப்பட்டது. ஆஸ்பத்திரி ஏறக்குறைய சமூகத்தின் அனைத்துலக வாசலாக காணப்பட்டது. ஆஸ்பத்திரியிலிருந்து காயப்பட்டவர்களை பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பல்கள் அவ்வப்போது எடுத்துச் சென்றன. இதனால் ஆஸ்பத்திரிகள் தான் சமூகத்தின் ஒரே பிரதான வெளி வாயிலாகக் காணப்பட்டன. அப்படிப்பட்ட ஒரு காலத்தில் சமூகத்தின் பேச்சாளர்களில் ஒருவராக சத்தியமூர்த்தி மேலெழுந்தார்.
இப்பொழுதும் சரியாக 11 ஆண்டுகளின் பின் ஒரு நோய்த் தோற்று காலத்தில் சத்தியமூர்த்தி வடக்கின் பேச்சாளராக மாறினார். அனர்த்த காலங்களில் சமூகத்தின் பேச்சாளராக மாறும் ஒரு ராசி அவருக்கு.
சத்தியமூர்த்தி வடக்கை மட்டுமே பிரதிபலித்தார். அவர் கிழக்கைப் பிரதிபலிக்கவில்லை. எனவே அவருடைய அறிக்கைகள் முழுத் தமிழ்ச் சமூகத்தையும் பிரதிபலிக்கவில்லை. அதுபோலவே யாழ்ப்பான ஊடகத் தளம் எனப்படுவது முழுத் தமிழினத்தையும் பிரதிபலித்ததா? என்ற கேள்வி உண்டு. இது தனியாக ஆராயப்பட வேண்டும். அதோடு வடக்கு ஊடகத் தளமானது கோவிட் -19 தொடர்பான செய்திகளை நிதானமாகக் கையாண்டதா? என்ற கேள்விக்கும் தனியாக ஒரு கட்டுரை எழுத வேண்டும்.
இவ்வாறு ஒரு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ஊடகங்களுக்கு தொடர்ச்சியாக தகவல் தெரிவிப்பது என்பது தாபன விதிக்கோவைகளின்படி ஒரு வளமை அல்ல என்று சுட்டிக்காட்டப்படுகிறது. எனினும் இதில் இருக்கக்கூடிய தாபன விதிக்கோவை வளமையை மீறி ஒரு புதிய வளமையை யாழ் போதனா வைத்தியசாலை உருவாக்கியிருக்கிறது.
ஒருபுறம் இலங்கை அரசாங்கத்தின் சுகாதார அமைச்சு கோவிட் -19 க்கு எதிரான நடவடிக்கைகளை ஒரு கிளர்ச்சி முறியடிப்பு நடவடிக்கைகள் போல பெயரிட்டு அதற்கு படைத் தளபதியை பொறுப்பாக நியமித்தது. படையினரை நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் முன்னணியில் நிறுத்தி ஏறக்குறைய அதை ஒரு யுத்தம் போல முன்னெடுத்தது. தென்னிலங்கை ஊடகங்களில் சுகாதார அலுவலர்களோடு சேர்ந்து படைப் பிரதானிகளும் பேச்சாளர்களாக செயற்பட்டார்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மருத்துவர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகளோடு படைப் பிரதானிகளும் ஒன்றாக அமர்ந்து இருந்து கலந்துரையாடல்களில் பங்குபற்றினார்கள்.இவ்வாறான ஒரு சமூக மருத்துவ ராணுவத் சூழலில்தான் யாழ்ப்பாணம் இலங்கைத் தீவின் மற்றொரு ஊடகத் தளம் என்பது நிரூபிக்கப்பட்டது.
இது தற்செயலாக நிகழ்ந்தது அல்ல அதற்கு ஒரு நீண்ட கால பாரம்பரியம் உண்டு அது என்னவெனில் இலங்கைதீவில் கொழும்பு ஊடகத் தளத்துக்கு வெளியே மற்றொரு பிராந்திய ஊடகத் தளமாக யாழ்ப்பாணம் பல தசாப்த காலமாக ஒரு நடைமுறையாக இருந்து வருகிறது. இது கிறீஸ்தவ மிசனெரிகளின் காலத்திலிருந்து தொடங்குகிறது.
கொழும்பு மைய ஊடகங்கள் தமிழ் மக்களின் அபிலாசைகளையும் நோக்கு நிலைகளையும் போதிய அளவுக்கு பிரதிபலிக்கவில்லை என்று கருதிய ஒரு காரணத்தால் வடக்கில் ஏற்கனவே இருந்த ஒரு ஊடகத் தளம் அரசியல் நோக்கு நிலையில் பலப்படுத்தப்பட்டது. தமிழ் மக்கள் ஒரு தேசமாக சிந்திக்கிறார்கள் என்பதன் மற்றொரு குறி காட்டியாக அது வளர்ந்து வந்தது.
ஆயுதப் போராட்டத்தின் எழுச்சியோடு மற்றொரு அதிகார மையம் கொழும்புக்கு வெளியே கட்டி எழுப்பப்பட்டது. ஆயுதப் போராளிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் ஒரு மாற்று அதிகார மையம் கட்டி எழுப்பப்பட்டது. ரணில் -பிரபாகரன் உடன்படிக்கையானது இலங்கைத் தீவில் இரண்டு அதிகார மையங்கள் இருப்பதனை வெளிக் கொண்டு வந்தது என்று அப்பொழுது வன்னியில் இருந்து வெளிவந்த ஈழநாதம் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் எழுதப்பட்டிருந்தது.
இப்படிபட்டதொரு பாரம்பரியத்தின் பின்னணியில்தான் ஓர் அனர்த்த காலத்தில் அதாவது வைரஸ் தொற்றுக் காலத்தில் யாழ் ஊடகத்தளம் மீண்டும் ஒருதடவை துருத்திக் கொண்டு மேலெழுந்தது. இது தமிழ் மக்கள் ஒரு தேசமாக சிந்திக்கிறார்கள் என்பதனை ஓரளவுக்கு உணர்த்தும் ஓர் ஊடகக் குறிகாட்டி ஆகும் .கோவிட் -19 அதை மீண்டும் ஒருதடவை உறுதிப்படுத்தியுள்ளது .