கிழக்கு மைய அரசியல் எனப்படுவது தெற்கை நோக்கிப் போவதா ? பகுதி -2

கிழக்கு மைய அரசியல் எனப்படுவது தெற்கை நோக்கிப் போவதா ? ( https://www.nillanthan.com/4554/) என்ற தலைப்பில் தினக்குரல் இணையத்தளத்தில் நான் எழுதிய கட்டுரையில்  எழுப்பியிருந்த ஒரு கேள்விக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையானின் ஆலோசகர் என்று கருதப்படும் ஸ்டாலின் ஞானம் முகநூலில்  பதிலளித்திருந்தார்.

யாழ் மேலாதிக்க வாதம் என்று ஸ்டாலின் கருதுவது எதனை என்ற எனது கேள்விக்கான அப் பதிலில் என்னைப் பற்றிய அறிமுகக் குறிப்பில் தவறு உண்டு. இதுபோன்ற தவறுகள் அந்த நீண்ட பதிலில் உள்ள வேறு தகவல்களிலும் இருக்கக்கூடும். ஆனால் அந்த நீண்ட பதிலின் மூலம் அவர் கூற வரும் விடயம்  தொடர்பில் எனக்குப் பெரிய முரண்பாடு கிடையாது.

அது என்னவெனில் யாழ் மேலாதிக்க வாதம் தொடர்பான அவருடைய குற்றச்சாட்டுகளில் பெரும்பாலானவை கவனத்தில் எடுக்கப்பட வேண்டியவை.  யாழ் மையத்திலிருந்து கிழக்கைப் பார்ப்பவர்கள் அதற்குப் பதில் கூறவேண்டும் .

ஏற்கனவே எனது முதல் கட்டுரையில் அது கூறப்பட்டிருக்கிறது. மேலாதிக்கம்  எந்த திசையில் இருந்து வந்தாலும் எந்த வடிவத்தில் வந்தாலும் அதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.

இரண்டாவதாக தேசியவாதம் தொடர்பில் எனது கருத்துக்கள் மிகவும் தெளிவானவை. வெளிப்படையானவை. எனது இணையத் தளத்திலும் ஏனைய ஊடகங்களிலும் அடிக்கடி அதை நான் எழுதி வருகிறேன். குறிப்பாக தேசியமும் சாதியும் ;(https://www.nillanthan.com/2931/)தேசியமும் சமயமும் (https://www.nillanthan.com/2899/https://www.nillanthan.com/3502/https://www.nillanthan.com/3649/ , https://www.nillanthan.com/4057/); தேசியமும் பால் அசமத்துவமும்; தேசியமும் பிரதேச முரண்பாடுகளும்; தேசியமும் ஜனநாயகமும் (https://www.nillanthan.com/180/) தொடர்பில் எனது கட்டுரைகளை எனது இணையதளத்தில் பார்க்கலாம்.

நான் தேசியம் என்று கருதுவது ஒரு பெரிய மக்கள் திரட்சியை. அந்த திரட்சியை சாதியின்  மீதோ  சமயத்தின் மீதோ பிரதேசவாதத்தின்  மீதோ  அல்லது வேறு எந்த அசமத்துவத்தின் மீதோ கட்டி எழுப்ப முடியாது. மாறாக ஜனநாயகம் என்ற அடிச்  சட்டத்தின் மீது ஒருவர் மற்றவருக்கு சமம் என்ற அடிப்படையில் தான் தேசியத் திரட்சியைக்  கட்டி எழுப்ப வேண்டும். அது சர்வதேசியமாக விரியக்கூடியது. உட்சுருங்காது வெளி விரியும். 

ஸ்டாலினும் ஓரளவுக்கு இதையொத்த கருத்தைத்தான் தனது பதிலில் தெரிவித்திருக்கிறார். எனவே இது பற்றி மேலதிகமாக விவாதிக்க தேவையில்லை. மேற்கண்ட தேசியவாதம் தொடர்பான அளவுகோல்களின் அடிப்படையில் வைத்துப் பார்த்தால் ஸ்டாலின் சுட்டிக்காட்டும் வடக்கு மைய தலைவர்கள் பலரையும் தேசியத் தலைவர்களாக  ஏற்றுக்கொள்ள முடியாது. சிலரிடம் தேசிய பண்புகள் இருந்தன. அல்லது தேசியவாதத்தின் கருக்கள் இருந்தன. ஆனால் தேசியம் என்று மேற்கண்ட விளக்கத்தின் அடிப்படையில் பார்த்தால் தமிழ் தலைவர்களில் பலரை தேசியத்திற்கு எதிரானவர்களாகவே வகைப்படுத்த வேண்டியிருக்கும். எனவே இது விடயத்தில் ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்களோடு பெரியளவில் முரண்பட இடமில்லை.

ஆனால்  தேசியப்  பண்பு குறைந்த அந்தத் தலைவர்களை முன் வைத்து யாழ் மேலாதிக்க வாதத்தையே தமிழ் தேசியமாக உருவகிப்பது சரியா? மேலும் தமிழ்த் தேசியம் எனப்படுவது யாழ்பாணத்து மேலாதிக்கத்தின் உருவகம் என்பது சரியா?அது இன  ஒடுக்குமுறையின் விளைவு இல்லையா? இன ஒடுக்கு முறை என்பது வடக்குக்கு வேறு கிழக்குக்கு வேறா?

ஆனால் எனது கட்டுரையில் நான் கேட்டது என்னவென்றால் இவ்வளவு பலமான யாழ் மேலாதிக் கட்சியாகிய கூட்டமைப்பு கடந்த 11 ஆண்டுகளாக கிழக்கு மைய தலைவர் ஆகிய சம்பந்தரை எப்படி  தலைவராக ஏற்றுக் கொண்டது என்பதுதான். இத்தனைக்கும் சம்பந்தர் ஒரு தலையாட்டி பொம்மை அல்ல. ஆளுமை மிக்கவர். அப்படிப்பட்ட ஒருவரை எப்படி யாழ் மேலாதிக்கம் தனது தலைவராக ஏற்றுக் கொண்டது? அண்மையில் மாவை சேனாதிராசாவை  அகற்றுவதற்கு கலையரசனை  நியமித்தது கூட பிரதேச உணர்வுகளை தமது தலைமைப்  போட்டிக்கு சாதகமாகப்  பயன்படுத்திய மிகப் பிந்திய ஒரு உதாரணம் தான். ஆனால் அதற்கு சம்பந்தரும் உடந்தை தான்.

எனவே இப்பொழுது உள்ள கேள்வி சம்பந்தர் ஒரு கிழக்கு தலைவர் இல்லையா? அல்லது திருகோணமலை கிழக்கின் எழுச்சிக்குள் அடங்கவில்லையா? இன்னும் ஒன்றை கேட்கலாம். முஸ்லிம்கள் கிழக்கின் எழுச்சிக்குள் அடங்குகிறார்களா இல்லையா? அண்மைய தேர்தல் முடிவுகளில் முஸ்லிம்களுக்கு எதிரான தமிழ் உணர்வுகளும் செல்வாக்குச் செலுத்தின என்பதனை திட்டவட்டமாக மறக்கமுடியுமா ?

சரி இனி அடுத்த விடயப் பரப்புக்கு போகலாம்.
மிதவாதத் தலைவர்கள் மட்டுமல்ல ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்கங்களும் குறிப்பாக புலிகள் இயக்கமும் யாழ் மேலாதிக்க சிந்தனையின் தொடர்ச்சியே என்ற தொனிப்படப்  பதில் கூறப்பட்டிருக்கிறது. அப்படி என்றால் அந்த இயக்கத்தின் புலிகள் என்ற பெயரை ஏன் பிள்ளையான் தனது கட்சிக்கு வைத்துக் கொண்டிருக்க வேண்டும்? வெருகல் ஆற்றின்  இரு தீரங்களிலும் ரத்தம் சிந்திய பின்னும் அந்தப் பெயரை  என் தேர்தெடுத்தார்கள்? வாக்கு வேட்டைத் தேவைகளுக்காக அந்த பெயர் எடுத்துக் கொள்ளப்பட்டதா?  அல்லது எதன் தொடர்ச்சியாக காட்ட அந்தப் பெயரை தமது கட்சிக்கு வைத்தார்கள்? 

அடுத்த கேள்வி அதிகம் கோட்பாட்டு  ரீதியிலானது .தமிழ் தேசியவாதத்தை யாழ் மேலாதிக்கத்தின் சித்தாந்தமாக ஸ்டாலின் ஞானம் கருதின் அவர் தமிழ் மக்களை ஒரு தேசமாகக் கருதவில்லையா? அப்படியென்றால் தமிழ் மக்கள் யார்? இனப்பிரச்சினைக்கு எந்த அடிப்படையில் தீர்வைத் தேட வேண்டும்?

ஆனால் அவருடைய பதிலில் தேசியவாதம் பற்றிய அவருடைய விளக்கத்தின்படி அவர் தேசியவாதத்தை தவறு என்று கூறுவதாக விளங்கிக் கொள்ள முடியவில்லை. எனினும் தேசியவாதம் சரியா பிழையா என்ற முடிவுக்கு முதலில் வரவேண்டும். தேசியவாதம் பிழை என்றால் இங்கே ஒரு முக்கிய கேள்வி எழுகிறது.

ஒடுக்கப்படும் ஓர் இனத்தின் தேசியவாதத்தில்  இருக்கக்கூடிய உள்ளொடுக்குமுறைகளுக்காக  ஒடுக்கும் பெரிய ஓர்  இனத்தின் பெருந் தேசிய வாதத்தோடு  கூட்டுச் சேர்வதை எப்படி நியாயப் படுத்தலாம்?

ஒரு பிராந்திய மேலாதிக்கத்துக்கு எதிராக ஒரு பேரினவாதத்தின்  ஒடுக்கும் இயந்திரத்தோடு  கூட்டுச் சேர்வதை எப்படி நியாயப் படுத்துவது? அதுவும் தனிச் சிங்கள வாக்குகளால் நாடாளுமன்றத்தில்  மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கட்டியெழுப்பத்  துடிக்கும் ஒருபெருந் தேசியவாதத்தோடு?

அபிவிருத்தி அரசியல் என்றழைக்கப்படுவது அவ்வாறு கூட்டுச் சேர்வதன்  மூலமே சாத்தியமாகக்கூடிய ஓர் அரசியல் பொருளாதார கள யதார்த்தம் ஒன்று நாட்டில் உள்ளது. அதைத்தான் வியாழேந்திரன் கூறுகிறார். இது விடயத்தில் வியாழேந்திரனுக்கும் பிள்ளையானின் கட்சிக்கும் இடையில் உள்ள வேறுபாடு என்ன ?கருணாவுக்கும் பிள்ளையானின் கட்சிக்கும் இடையில் உள்ள வேறுபாடு என்ன?

சரி தேசியவாதத்தை பிழை என்று கூறவில்லை யாழ் மேலாதிக்க வாதத்தின் முகமூடியாக காணப்படும் தேசியவாதம் தான் பிழை என்று வைத்துக் கொண்டால் கிழக்கு மையத்திலிருந்து தேசியத் திரட்சியைக்  கட்டி எழுப்பலாம். யாழ் மேலாதிக்கத்தால் ஒடுக்கப்பட்ட ஒரு தரப்பு தேசியவாதத்தை கட்டியெழுப்பும் பொழுது ஸ்டாலின் ஞானம் வைக்கும் விமர்சனங்கள் வராது. அவரே கூறுகிறார் பேரினவாதம் எனப்படுவது முழுச் சிங்கள மக்களையும் பிரதிபலிக்கவில்லை. அதைப்போலவே யாழ் மேலாதிக்க வாதம் என்பதும் முழு யாழ்ப்பாணத்தையும் பிரதிபலிக்கவில்லை என்று. அப்படி என்றால் கிழக்கு மைய தேசிய வாதம் வடக்கில் இருக்கக்கூடிய மேலாதிக்க சிந்தனையற்ற யாழ்ப்பாணத்தவர்களையும் ஒடுக்கப்படும் மக்களையும் இணைத்துக்கொண்டு ஒரு தேசியத் திரட்சிக்கு போக வேண்டுமா ?அல்லது தென்னிலங்கை மைய ஒடுக்கும் பேரினவாத கட்சிகளோடு கூட்டுச்  சேர வேண்டுமா ? இதில் எது சரி?

தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னதாக ஸ்டாலின் ஞானம் முகநூலில் ஒரு குறிப்பை எழுதி இருந்தார். பிள்ளையானை சிறையில் சென்று சந்தித்ததாகவும் அம்பாறையில் ஏன் போட்டியிடக் கூடாது என்பதற்கு பிள்ளையான் சொன்ன காரணத்தையும் அவர் அதில் எழுதியிருந்தார். அதாவது அம்பாறை மாவட்டத்தின் வாக்குகளை நாங்களும் போட்டியிட்டு சிதறடிக்க கூடாது என்ற பொருள்பட.

உண்மைதான் அம்பாறையில் மட்டுமல்ல திருகோணமலையில் மட்டுமல்ல யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல ஒட்டு    மொத்த தமிழ் இன  வாக்குகளும்  சிதறக் கூடாது என்று சிந்தித்தால் அதை வடக்குக்  கிழக்கை  இணைப்பதால் ஏற்படுத்த முடியுமா ? அல்லது பிரிப்பதால் ஏற்படுத்த முடியுமா ? வடக்கு-கிழக்கைப் பிரித்தாள  முயலும்  தெற்கை  நோக்கிக்  கிழக்கைத் திருப்பவதால் ஏற்படுத்த முடியுமா?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *