தமிழ்க் கட்சிகளின் கூட்டு நிலைக்குமா?

 

கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பல்கலைக்கழக மாணவர்கள் ஈடுபட்டார்கள். ஒரு கட்டத்தில் 5 கட்சிகள் கூட்டாக ஒரு பொது ஆவணத்தில் கையெழுத்திட்டன.

ஐந்து கட்சிகளும் கூட்டாக கையொப்பமிட்ட பின் அதில் பங்குபற்றிய ரெலோ அமைப்பின் பிரதானி சிறீகாந்தா பல்கலைக்கழக மாணவர்களை நோக்கி பின்வரும் தொனிப்படக் கூறினார்….முன்பு விடுதலைப் புலிகள் இயக்கம் துப்பாக்கிகள்; பீரங்கிகள் ; படைபலத்தை வைத்துக் கொண்டு   தமிழ்க் கட்சிகளை ஒருங்கிணைத்தது. ஆனால் இன்றைக்கு நீங்களோ துப்பாக்கிகளோ பீரங்கிகளோ படைபலமோ  எவையும் இன்றி எங்களை ஒருங்கிணைத்திருக்கிறீர்கள். நீங்கள் அவர்களை மிஞ்சி விட்டார்கள்.” என்று.

அதில் ஓருண்மை உண்டு. மக்கள் பிரதிநிதிகளாக காணப்படுகின்ற அதாவது தேர்தல் மூலம் மக்கள் அதிகாரத்தை பெற்றுக் கொண்ட அரசியல்வாதிகளை ஒற்றுமை படுத்துவது என்று சொன்னால் அதற்கு அவர்களை விட அதிகமான அதிகாரத்தைப் பெற்ற அல்லது மக்கள் அங்கீகாரத்தைப் பெற்ற மதிப்புக்குரிய ஒரு தரப்புத் தேவை. தனிய நன் நோக்கோ நல்ல இலட்சியங்களோ மட்டும் அவ்வாறான ஒற்றுமையை உருவாக்கப் போதாது என்பதை தான் கடந்த ஐந்து ஆண்டு கால அனுபவம் நிரூபித்திருக்கின்றது. கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளில் அதிகமாக ஈடுபட்டவன் என்ற அடிப்படையில் என்னுடைய அனுபவமும்  அதுதான்.

தமிழ் கட்சிகளை ஒருங்கிணைப்பது என்று சொன்னால் அவ்வாறு ஒருங்கிணைக்கும் தரப்புக்கு ஏதோ ஒரு அதிகாரம் இருக்க வேண்டும். அல்லது ஏதோ ஒரு அங்கீகாரம் இருக்க வேண்டும். அவ்வாறான அங்கீகாரமும் சமூக அந்தஸ்தும் இல்லாத ஓர் அமைப்பு அல்லது தரப்பு ஐக்கியத்தை ஏற்படுத்த முடியாது. குறிப்பாக தேர்தல் அரசியல் எனப்படுவது கோடிக்கணக்கான ரூபாய்களை முதலீடு செய்யும் ஒரு வியாபாரம் ஆக மாறி விட்டது. இதில் காசைக் கொட்டி போட்டியிட்டு வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகள் எந்த அதிகாரமும் இல்லாத வெறும் நன் நோக்கத்தையும் இலட்சியத்தையும் மட்டும் கொண்டிருக்கின்ற இலட்சியவாத அமைப்பு அல்லது சில தனி நபர்கள் முன்னெடுக்கும் ஐக்கிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பார்களா?

இதுதான் பல்கலைகழக மாணவர்களுக்கும் நடந்தது. பதின் மூன்று அம்சக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு கையெழுத்திட்ட ஐந்து கட்சிகளையும் குறிப்பாக கூட்டமைப்பை அந்த ஐக்கியத்துக்குப் பொறுப்புக் கூற வைக்க  பல்கலைக் கழக மாணவர்களால் முடியவில்லை. கூட்டமைப்பு அந்த உடன்படிக்கையை ஒருதலைபட்சமாக மீறிய போது  அதைத் தடுக்கவோ அல்லது அதைத் தொடர்ந்து ஏனைய கட்சிகள் தன்னிச்சையாக செய்யப்பட்ட பொழுது அதைத் தடுக்கவோ பல்கலைக்கழக மாணவர்களால் முடியவில்லை. அதற்குரிய அதிகாரமும் முதிர்ச்சியும் அனுசரணையாளர்களுக்குத்  தேவையான தொழில்சார் திறனும் மாணவர்களிடம் இருக்கவில்லை.

இப்படிப்பட்டதோர் அரசியல் பாரம்பரியத்தின் பின்னணியில்தான் திலீபனின் நினைவு நாளை முன்னிட்டு மாவை சேனாதிராசாவின்  ஒருங்கிணைப்பில் மறுபடியும் கட்சிகள் ஒன்றுபட்டிருக்கின்றன. ஒன்றுபட்ட கட்சிகளின் எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால் இது ஒப்பீட்டளவில் ஒரு பெரிய கூட்டாக தோன்றும். முன்னைய கூட்டுக் க்களில் இணைய மறுத்து முரண்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி இம்முறை இணைந்திருக்கிறது. எனவே இந்த ஒருங்கிணைப்பு முயற்சி  ஒரு முக்கியமான முதல் அடி வைப்பாக சிலரால் சிலாகித்துக் கூறப்படுகிறது.

ஆனால் அது உண்மையல்ல. இது ஒரு கொள்கை கூட்டு அல்ல. தேர்தல் கூட்டும் அல்ல. இது ஒரு விவகார மையக் கூட்டு. அதாவது நினைவு கூர்தலுக்கான உரிமையை மீட்டெடுப்பதற்கான ஓர் அரசியல் விவகாரத்தை முன்வைத்து கட்சிகள் ஒருங்கிணைந்தன என்பதே சரி. அவ்வாறு ஒருங்கிணைய வேண்டிய நிர்ப்பந்தத்தை  மூன்று அம்சங்கள் ஏற்படுத்தின. முதலாவது திலீபன் ; இரண்டாவது தேர்தல் தோல்வி ; மூன்றாவது ராஜபக்சக்கள்.

முதலாவதாக திலீபனின் பெயரால் கட்சிகள் ஒன்றிணைந்தன.  திலீபனை நினைவு கூர்வதற்கு அரசாங்கம் சட்டத்  தடை விதித்தது.கட்சிகள் முதலில் அதை ஒரு சட்ட விவகாரமாகவே  அணுகின. எனினும் ஒரு கட்டத்தில் அதனைத் தவிர்க்க முடியாதபடி ஓர் அரசியல் விவகாரமாக அணுக வேண்டிய நிப்பந்தம் ஏற்பட்டது. அதன் விளைவாக சாவகச்சேரியில் ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள். முதலில் தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் தான் அடையாள உண்ணாவிரதம் என்று கூறப்பட்டது. அதன்மூலம் ஊடகங்களையும் அரசாங்கத்தையும் திசை திருப்பி விட்டு சாவகச்சேரியில் அடையாள உண்ணாவிரதம் முன்னெடுக்கப்பட்டது. ஏனைய பகுதிகளில் உண்ணாவிரதத்துக்கு நீதிமன்றம் தடை விதித்திருந்த பின்னணியில் சாவகச்சேரியில் அவ்வாறு ஒரு தடை விதிக்கப்பட்டிருக்கவில்லை. ஒருங்கிணைந்த கட்சிகள் அங்கே தமது எதிர்ப்பை காட்டின.

சாவகச்சேரியிலும் கூட அரசாங்கம் நினைத்திருந்தால் அங்கு கூடியிருந்தவர்களைத் தூக்கிக் கொண்டு போய் சிறையில் வைத்திருக்கலாம். ஆனால் அரசாங்கம் அதைச் செய்யத் துணியவில்லை. அப்படிச் செய்வதன் மூலம் அங்கு போராடிய கட்சித் தலைவர்களை  தியாகிகளாக்க அரசாங்கம் விரும்பவில்லை. அவ்வாறு அவர்களைக் கைது பண்ணி இருந்திருந்தால்  அது உலகின் கவனத்தை ஈர்க்கும் ஒரு செய்தியாக மாறியிருந்திருக்கும். அதை அரசாங்கம் விரும்பவில்லை. எனவே சாவகச்சேரியில் நடந்த உண்ணாவிரதத்தை அரச தரப்பு தடுக்கவில்லை. அது ஒரு மக்கள் மயப்பட்ட உண்ணாவிரதம் அல்ல. ஆனாலும் கட்சிகள் அதை ஐக்கியமாக முன்னெடுத்தன.

இந்த உண்ணாவிரதத்தை விடவும் முக்கியத்துவம் வாய்ந்தது திங்கட்கிழமை நடந்த கடையடைப்பு. அது ஒரு மக்கள் மயப்பட்ட போராட்டம். தமிழ் மக்கள் ஒற்றுமையாகத் திரண்டு முஸ்லிம் மக்களோடு இணைந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். எனவே திலீபனின் பெயரால் கட்சிகளை ஒருங்கிணைப்பது வசதியாக இருந்தது. அது மாவைக்கும் வெற்றி ; ஏனைய கட்சிகளுக்கும் வெற்றி.

இரண்டாவது காரணம் தேர்தல் தோல்வி. நடந்து முடிந்த தேர்தலில் தமிழரசுக் கட்சி அதன் ஏகபோகத்தை இழந்து விட்டது. கட்சித் தலைவரும் செயலாளரும் தோற்றுப் போய் விட்டார்கள்.கட்சிக்குள் மாவை தந்து தலைமையை உறுதிப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.  அதுமட்டுமல்ல கூட்டமைப்பில் இருந்து வெளியேறியவர்கள் வெல்ல முடியாது என்றிருந்த மாயை உடைக்கப்பட்டு விட்டது. மட்டக்களப்பில் வியாழேந்திரன் ; யாழ்ப்பாணத்தில் விக்னேஸ்வரனும் இரண்டு கஜன்களும் வெற்றி பெற்று விட்டார்கள். எனவே கூடமைப்புக்குத் தன்னைப் பலப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம். மாவை சேனாதிராஜாவிற்கு கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் தன்னைப் பலப்படுத்த வேண்டிய ஒரு தேவை.

தமிழரசுக் கட்சிக்கு மட்டுமல்ல ஏனைய கட்சிகளுக்கும் தேர்தல் முடிவுகள் ஒரு பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளன. கட்சிகள் சிதறினால் தென்னிலங்கைக் கட்சிகளின் தமிழ் முகவர்கள் வாக்குகளை அள்ளிக் கொண்டு போவார்கள் என்பது நடந்து முடிந்த தேர்தலில் நிரூபிக்கப்பட்டது. எனவே அந்த அடிப்படையில் சிந்தித்தால் அதில் எல்லாத் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும் ஒரு தோல்வி இருக்கிறது. எனவே தோல்வியிலிருந்து மீண்டெழுவதற்கு எல்லாக் கட்சிகளுக்கும் இப்படி ஓர் ஐக்கியம் தேவைப்பட்டது.

மூன்றாவது காரணம் ராஜபக்சக்கள். யுத்த வெற்றி வாதம் தனிச்  சிங்கள வாக்குகளை முன்வைத்து மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்குக் கிட்டவாக வந்து நிற்கிறது. சிங்கள பௌத்த பெருந் தேசிய வாதத்தின் ஆகப் பிந்திய வடிவமே யுத்த வெற்றி வாதம். எனவே அதை எதிர்கொள்வதற்கு தமிழ்த் தரப்பிலும் ஒரு திரட்சி அவசியம். கட்சிகள் சிதறிக் கிடந்தால் யுத்த வெற்றி வாதத்தின் தமிழ் நண்பர்கள் தமிழ் வாக்காளர்களை மேலும் பங்கு போட்டு விடுவார்கள். நடக்கவிருக்கும் மாகாண சபைத் தேர்தலில் இது மேலும் சவால்களை ஏற்படுத்தும். எனவே இதுவும் கட்சிகளை ஒருங்கிணைத்தது. அடக்குமுறை அதிகரிக்கும் போது அதற்கு எதிராக ஒரு திரட்சியும் ஏற்படும். அதுதான் நடந்து முடிந்த கடையடைப்பு.

எனவே மேற்சொன்ன மூன்று காரணங்களையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் தமிழ் கட்சிகளை திலீபன் ஒருங்கிணைத்திருக்கிறார் ;தோல்வி ஒருங்கிணைத்திருக்கிறது ; ராஜபக்சக்கள் ஒருங்கிணைத்திருக்கிறார்கள். அதாவது இக்கட்டுரையில் ஏற்கனவே கூறப்பட்டபடி கட்சிகள் ஒருங்கிணையத் தேவையான அழுத்தங்களை மேற்படி மூன்று காரணிகளும் உருவாக்கின.

இதில் திலீபனைத் தவிர்த்து ஏனைய இரண்டு அம்சங்களும் இனி வரக்கூடிய ஐந்து ஆண்டுகளுக்கு தொடர்ந்தும் இருக்கப் போகின்றன. எனவே தமிழ் கட்சிகள் ஐக்கியப்படுவதற்கான தேவையும் தொடர்ந்தும் இருக்கும். ஆனால் இங்கு உள்ள பிரச்சினை என்னவென்றால் அந்த ஐக்கியம் ஒரு தேர்தல் கூட்டாகவோ அல்லது விவகார மையக்  கூட்டாகவோ இருக்கும் பட்சத்தில் நீடித்து இருக்காது. மாறாக அது ஒரு கொள்கைக் கூட்டாக இருக்க வேண்டும். தேர்தல் தேவைகளுக்குமப்பால் தமிழ் மக்களின் தேசியத் திரட்சிக்கான ஒரு ஐக்கியமாக இருக்க வேண்டும். அந்தக் கொள்கை கூட்டுக்கு  பரந்த மனம் கொண்ட ; எல்லா தரப்புகளையும் அரவணைத்து செல்கின்ற பெருந் தலைவர்கள் தலைமை தாங்க வேண்டும். ஆனால் அரங்கில் இப்பொழுது காணப்படும் பெரும்பாலான தலைவர்கள் கட்சித் தலைவர்களே. கட்சிகளைக் கடந்த பெருந் தலைவர்கள் யாருண்டு? அப்படி யாரும் இல்லையென்றால் தந்திரோபாயக் கூட்டைத் தவிர வேறு தெரிவு இல்லை?

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *