அரசுகளின் நீதி

அனைத்துலக விசாரணை எனப்படுவது ஈழத்தமிழர்களின் ஒரு கூட்டுக் கனவு. தமிழர்களில் பெரும்பாலானவர்கள் அப்படி ஒரு விசாரணையைத்தான் கோரி நிற்கிறார்கள். தமிழ் மக்களின் ஆணையைப் பெற்ற கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் அப்படி ஒரு விசாரணை தான் கோரப்பட்டிருக்கிறது. ஆனால் அதே சமயம் கூட்டமைப்பு ஆட்சிமாற்றத்தின் பங்காளியாகக் காணப்படுகிறது. எனவே மாற்றத்தைப் பாதுகாக்க வேண்டிய கூட்டுப் பொறுப்பு கூட்டமைப்புக்கு உண்டு. மாற்றத்தைப் பாதுகாப்பது என்றால் அனைத்துலக பொறிமுறையை ஆதரிக்க முடியாது. ஏனெனில் மாற்றத்தின் பிதாக்களான மேற்கு நாடுகளும், இந்தியாவும் தூய அனைத்துலக பொறிமுறையை ஏற்றுக் கொள்ளவில்லை. தென்னிலங்கையில் உள்ள சிங்களத் தலைவர்கள் மட்டும்தான் தூய அனைத்துலக பொறிமுறையை எதிர்க்கிறார்கள் என்பதல்ல.

அமெரிக்க இந்திய பங்காளிகளும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இப்படிப் பார்த்தால், கூட்டமைப்பானது மாற்றத்தின் பங்காளியாக இருந்து கொண்டு அனைத்துலக விசாரணையை ஆதரிக்க முடியாது. கூட்டமைப்பில் உள்ள குறிப்பிடத்தக்களவு முக்கியஸ்தர்கள் அனைத்துலக விசாரணைக்கே ஆதரவாகக் காணப்படுகிறார்கள். ஆனால் அக்கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டின்படி அது மாற்றத்தின் பங்காளி என்பதால் பன்னாட்டு விசாரணையை அக்கட்சியானது உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படி ஏற்றுக் கொண்டாலும் அது ஓர் அகமுரண்பாடே.

தமிழ் வாக்காளர்கள் இந்த அகமுரண்பாட்டை விளங்கி வாக்களித்திருப்பார்களா? இல்லை என்றே தோன்றுகிறது. ஏனெனில் மக்கள் முன்னணியின் அனைத்துலக விசாரணைக்கான கையெழுத்து வேட்டையில் ஒன்றரை இலட்சத்துக்கும் மேலானவர்கள் கையெழுத்திட்டிருக்கிறார்கள். கூட்டமைப்புக்குச் சார்பான பலரும் கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள் சிலரும் இக்கையெழுத்து வேட்டையில் பங்கு பற்றியிருக்கிறார்கள். சில வாரங்களுக்கு முன் மக்கள் முன்னணியைத் தேர்தலில் தோற்கடித்த அதே மக்களில் ஒன்றரை இலட்சத்திற்கும் குறையாதவர்கள் இக்கையெழுத்துப் போராட்டத்தில் இணைந்திருக்கிறார்கள். இந்த முரண்பாட்டை எப்படி விளங்கிக் கொள்வது?. நாடாளுமன்றத்துக்குப் போவதற்குக் கூட்டமைப்பு. தெருவில் இறங்கிப் போராடுவதற்கு மக்கள் முன்னணி என்று மக்கள் நம்புகிறார்களா?

அதே சமயம், நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் இப்படி ஒரு கையெழுத்துப் போராட்டத்தை நடாத்தியது. அதிலும் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பங்குபற்றியிருக்கிறார்கள். தவிர, வடமாகாண சபையும் தமிழக அரசும் அனைத்துலக விசாரணைக்கு ஆதரவாக தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன. இப்படிப் பார்த்தால் பன்னாட்டு விசாரணைக்கான கோரிக்கை எனப்படுவது தனிய ஈழத்தமிழர்களின் கூட்டுக் கனவு மட்டுமல்ல. பெரும் தமிழ் பரப்பில் அதற்கு பலமான ஓர் ஆதரவுத்தளம் உண்டு.

ஆனால் சிங்கள மக்களைப் பொறுத்தவரை அவர்களில் பெரும்பாலானவர்கள் அனைத்துலக விசாரணையை ஏற்றுக்கொள்ளவில்லை. குறிப்பாகக் கடும்போக்காளர்கள் எந்த ஒரு விசாரணையையுமே ஏற்றுக் கொள்ள வில்லை.

அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் மற்றும் இந்தியாவைப் பொறுத்தவரை அவர்களும் தூய அனைத்துலக விசாரணைக்கு ஆதரவாக இல்லை. மேற்படி நாடுகளின் எந்த ஓர் உத்தியோகபூர்வ அறிக்கையிலும் அப்படி ஒரு அனைத்துலக விசாரணைக்கான வாக்குறுதி எதுவும் இதுவரையிலும் வழங்கப் பட்டிருக்கவில்லை. உலகப் பொதுமன்றமான ஐ.நாவின் உத்தியோகபூர்வ ஆவணங்களிலும் அப்படிப்பட்ட வாக்குறுதிகள் கிடையாது.

எனவே, மேற்கண்ட அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால் ஈழத்தமிழர்களின் கூட்டுக் கனவுக்கு எதிரான ஒரு பன்னாட்டு யதார்த்தமே தற்பொழுது காணப்படுகிறது. கடந்த வாரம் வெளியிடப்பட்ட ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் அறிக்கையும் அதைத்தான் பிரதிபலிக்கிறது.

முதலாவதாக, அந்த அறிக்கையானது இலங்கைத் தீவில் நிகழ்ந்த ஆட்சி மாற்றத்தைப் பாதுகாக்க முற்படுகிறது.

இரண்டாவதாக அது தமிழ் மக்கள் அனைத்துலக நீதியின் மீது நம்பிக்கை இழந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வோடு தயாரிக்கப்பட்டிருக்கின்றது. மூன்றாவதாக அது சிங்களக் கடும் கோட்பாளர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கி விடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வோடு தயாரிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் மக்களின் நோக்கு நிலையில் இருந்து பார்த்தால் அந்த அறிக்கை பின்வரும் சாதகமான அம்சங்களைக் கொண்டிருக்கிறது.

01.இலங்கை அரசிற்கு எதிராகக் குறிப்பாக அதன் பாதுகாப்புத்துறை மற்றும் நீதி பரிபாலன துறை என்பவற்றுக்கு எதிராகப் பாரதூரமான குற்றச்சாட்டுக்களையும் நம்பிக்கையீனங்களையும் வெளிப்படுத்தும் முதலாவது உத்தியோகபூர்வ அனைத்துலக ஆவணமாக அது காணப்படுகிறது.

02.அதை ஓர் அடிச்சட்டமாக வைத்துக்கொண்டு ஈழத்தமிழர்கள் தமது நீதிக்கான பயணத்தைத் தொடரக் கூடிய வாய்ப்பான வெளிகள் பலவற்றை அந்த அறிக்கை திறந்து விட்டுள்ளது.

03.கலப்புப் பொறிமுறை ஒன்றை முன்வைப்பதன் மூலம் அது ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சினையானது அனைத்துலக மயநீக்கம் செய்யப்படுவதற்கான வாய்ப்புக்களை குறைந்த பட்சமாகவேனும் தடுக்கிறது.

இனிப் பாதகமான அம்சங்களைப் பார்க்கலாம்.

01.நடந்து முடிந்தது ஓர் இனப்படுகொலையே என்பதை அந்த ஆவணம் உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொள்ளவில்லை.

02.போர்க்குற்றம் சாட்டப்படுவோரின் பெயர்களோ, பதவி நிலைகளோ, பொறுப்புக்களோ சுட்டிப்பாகக் கூறப்படவில்லை.

03.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கூறுவது போல அது ஒரு மனிதஉரிமை மீறல் விசாரணை அறிக்கையாகவே காணப்படுகிறது. குற்றவியல் விசாரணை அறிக்கையாக அல்ல. ஆனால் இது தொடர்பில் ஐ.நா. பேச்சாளரான ரவீனா சம்தாஸினியை தந்தி, தொலைக்காட்சி பேட்டி கண்டபோது அவர்

‘அடுத்த கட்டமாக குற்றவியல் விசாரணைகள் நடத்தப்பட வேண்டியிருக்கிறது. அதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் ‘

என்று பதில் கூறினார்.

04.கலப்புப் பொறிமுறையின்படி உள்நாட்டு நீதிபரிபாலன அமைப்பும் இணைந்து செயற்படும் பொழுது குற்றம் சாட்டப்பட்ட தரப்பே நீதி வழங்கும் தரப்பின் ஒரு பகுதியாக காணப்படும்.

05.இலங்கை அரசுக் கட்டமைப்பின் பாதுகாப்புத் துறை, மற்றும் நீதி பரிபாலனதுறை மீது பாரதூரமான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் இவ் அறிக்கையானது அதே கட்டமைப்புக்களுடன் இணைந்து ஒரு கலவையான விசாரணைப் பொறிமுறையை உருவாக்கப்போவதாகக் கூறுவது ஒரு அக முரண்பாடாகும்.

06.ஆட்சி மாற்றத்தை வெளிப்படையாக ஆதரிக்கும் இவ்அறிக்கையானது அரசுத் தலைவரை பாராட்டும் அதே சமயம் குற்றச் செயல்களுக்குப் பொறுப்பான கட்டமைப்புக்கள் தொடர்ந்தும் நிலவுவதைச் சுட்டிக் காட்டுகிறது. ஆனால், மேற்படிக் கட்டமைப்புக்கள் வெற்றிடத்தில் இருந்து வரவில்லை. அவை இலங்கை அரசுக் கட்டமைபபின் பிரிக்கப்படவியலாத பகுதிகளே. அதாவது சிங்கள பௌத்த பேரினவாதக் கட்டமைப்பை பாதுகாக்கும் கவசங்களே அவை. எனவே மாற்றப்பட வேண்டியது அந்த அரசுக் கட்டமைப்புத்தான். ஆனால் இந்த அறிக்கையானது அந்த மூலகாரணத்தில் நேரடியாகவும், துலக்கமாகவும் கை வைக்கவில்லை.

இவையாவும் தமிழ் நோக்கு நிலையில் இருந்து முதன்நிலை வாசிப்பின் போது துலக்கமாகத் தெரிந்த சாதகமான மற்றும் பாதகமான அம்சங்கள். சட்டக் கண்கொண்டு நோக்கும் ஒருவருக்கு மேலும் நுணுக்கமான விடையப் பரப்புக்கள் தெரியவரக் கூடும்.

இந்நிலையில், தமிழ் மக்கள் இந்த இந்த ஆவணத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள்?

தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் இப்படி ஒரு அறிக்கைதான் வரப் போகிறது. ஐ.நா எனப்படுவது ஓர் அரசுகளின் அரங்கம். அரசுடைய தரப்புக்கள் கூட்டுச் சேர்ந்து அரசற்ற தரப்புக்களின் மீது எப்பொழுதும் தீர்வுகளைத் திணிக்கின்றன. அல்லது தீர்மானங்களை அறிக்கைகளை முன்வைக்கின்றன. அரசற்ற தரப்புக்கள் இக் குருரமான யதார்த்தத்தை எதிர்கொண்டு எவ்வாறு மீட்சி பெறுகின்றன என்பதை தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஏறக்குறைய 28 ஆண்டுகளுக்கு முன் இந்திய உடன்படிக்கை செய்யப்பட்ட போதும் இப்படி ஒரு நிலை வந்தது. அப்பொழுது புலிகள் இயக்கம் அந்த உடன்படிக்கையை கடுமையாக எதிர்த்தது. அதற்கு எதிராக ஒரு கட்டப் போரையும் நிகழ்த்தியது. ஆனால் மாகாணசபைகள் ஏறக்குறைய கால் நூற்றாண்டுக்கும் மேலான ஒரு யதார்த்தமாக உருவாகிவிட்டன. அந்த யதார்த்தத்தின் பிரகாரம் வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சர் இப்பொழுது வடமாகாணசபை கோறையானது என்று கூறுகிறார். அது மட்டுமல்ல, இனப்படுகொலை தொடர்பாகவும், அனைத்துலக விசாரணைகள் தொடர்பாகவும் கட்சித் தலைமைக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தவல்ல தீர்மானங்களையும் நிறைவேற்றி வருகிறார்.

இதை இப்படி எழுதுவதன் அர்த்தம் இக்கட்டுரையானது மாகாணசபையை ஏற்றுக் கொள்கிறது என்பதல்ல. பதிலாக அரசுடைய தரப்புக்கள் அரசற்ற தரப்புக்களின் மீது தீர்வுகளையும் விசாரணைப் பொறிமுறை களையும் திணிக்கும் போது அதை அரசற்ற தரப்பாகிய தமிழர்கள் எப்படி இறந்த காலத்தில் இருந்து பெற்ற பாடங்களின் அடிப்படையில் எதிர்கொள்ன வேண்டும் என்பதை அழுத்திக் கூறுவதற்காகவே இங்கு இந்த உதாரணம் சுட்டிக்காட்டப்படுகிறது.

வரலாறு மறுபடியும் ஒரு சுத்து சுத்திவிட்டு விட்ட இடத்திலேயே வந்து நிற்கிறது. தமிழர்கள் ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் ஐ.நாவின் அறிக்கை எனப்படுவது ஓர் அனைத்துலக யதார்த்தம். இப்பொழுது தமிழர்கள் முடிவெடுக்க வேண்டும். ஒரு கலப்புப் விசாரணைப் பொறிமுறையை புறக்கணித்துவிட்டு வெளியில் இருந்து பகிஸ்கரிப்பதா? அல்லது அதில் ஈடுபட்டு அதன் போதாமைகளை அம்பலப்படுத்துவதா?

ராஜதந்திரம் எனப்படுவதற்கு நவீன அரசியலில் பங்கேற்றல் (engagement) என்று ஓர் விளக்கம் உண்டு. கலப்பு விசாரணைப் பொறிமுறையில் பங்கேற்பதன் மூலம் தமிழர்கள் அதன் போதாமைகளை அம்பலப்படுத்தலாம்.

இப்போதிருக்கும் அரசாங்கத்தின் மீது ஐ.நா அறிக்கையானது நம்பிக்கைகளைத் தெரிவித்துள்ளது. ஆனால் ஐ.நாவால் பாரதூரமாகக் குற்றம் சாட்டப்படும் பாதுகாப்புக் கட்டமைப்பின் பிரதான தளபதியாக இருந்த ஒருவருக்கு ‘பீல்ட் மார்ஷல்’ விருது வழங்கியது இந்த அரசாங்கம்தான். இப்படியாக யுத்த வெற்றி நாயகர்களைக் கௌரவிக்கும் ஓர் அரசாங்கமானது அவர்களை விசாரிக்கும் ஒரு கலப்புப் விசாரணைப் பொறிமுறைக்கு எவ்வளவு தூரம் விசுவாசமாக ஒத்துழைக்கும்?.

பயங்கரவாத தடைச்சட்டத்தை தன்னுள் கொண்டிருக்கும் ஒரு நீதி பரிபாலன கட்டமைப்பானது எவ்வளவு தூரத்திற்கு அனைத்துலகத் தரத்துக்கு விரிந்து கொடுக்கும்.?

உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையிலும், கலப்பு விசாரணைப் பொறிமுறையிலும் இருக்கக் கூடிய அடிப்படையான பலவீனம் என்னவெனில் இவ்விரண்டிலும் குற்றம் சாட்டப்பட்ட தரப்பே நீதி வழங்கும் தரப்பாகவும் இருக்கப் போகின்றது என்பதுதான். சிங்கள பௌத்த பேரினவாதக் கட்டமைப்பு அதன் வெற்றி நாயகர்களை கைவிடுமா? காட்டிக்கொடுக்குமா?

இக்கேள்விகளுக்கான விடைகளே கலப்பு விசாரணைப் பொறிமுறையின் போதாமைகளை வெளிப்படுத்தும். எனவே, தமிழ் மக்கள் இக்கலப்பு விசாரணைப் பொறிமுறையை எதிர்கொள்வதற்கு அல்லது அதை இன்னும் ஆழமான பொருளில் சொன்னால் அதில் பங்கேற்பதன் மூலம் அதை அம்பலப்படுத்துவதற்கு உரிய சுய பொறிமுறைகைளையும், நிபுணத்துவ அறிவையும் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

வடமாகாண சபையும் தமிழக அரசும் அனைத்துலக விசாரணைக்கு ஆதரவாக தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன கலப்பு விசாரணைப் பொறிமுறை ஒன்றை எதிர்கொள்வதற்குத் தேவையான நிபுணத்துவ அறிவை திரட்ட முற்படும் தரப்புக்கள் வடமாகாணசபையிடமும், தமிழக அரசிடமும் உதவி கேட்கலாம். தாயகம், தமிழகம், புலம்பெயர்ந்த சமூம் ஆகிய மூன்று பரப்புக்களும் கூட்டாகச் சிந்தித்து ஒரு பொது வேலைத்திட்டத்தை வகுத்து கலப்பு விசாணைப் பொறிமுறையை எதிர்கொள்ளலாம்.

எனவே போர்க்குற்ற விசாரணை தொடர்பில் தமிழர்கள் இரண்டு தடங்களில் செயற்பட வேண்டியிருக்கிறது. இந்த இருதடக் கொள்கையின்படி ஒரு தடத்தில் அனைத்துலக விசாரணை ஒன்றைக் கோரும் போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும். இதில் ஆகக் கூடியபட்சம் படைப்புத்திறனோடு சிந்தித்து புதுமையான போராட்டங்களை முன்னெடுப்பதன்;மூலம் அனைத்துலக மக்கள் சமூகத்தின் கவனத்தை ஈர்த்துக் கொள்ள முடியும்.

ஐ.நா. அறிக்கையில் ஒரு அக முரண்பாடு உண்டு. குற்றம் சாட்டப்படும் உள்நாட்டுக் கட்டமைப்புக்களோடு இணைந்து ஒரு கலப்புப் பொறிமுறையை உருவாக்குவதன் மூலம் நீதியை நிலைநாட்டலாம் என்று நம்புவதே அது. இது அனைத்துலக மக்கள் சமூகத்தின் அபிப்பிராயத்திற்கும், அனைத்துலக அரசியலுக்கும் இடையிலான முரண்பாட்டையே பிரதிபலிக்கின்றது. ஈழத் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுவிட்டது என்பது ஓர் அனைத்துலக அபிப்பிராயமாக உருவாகி வருகிறது. ஆனால், அந்த அநீதியை விசாரிப்பதற்கான ஒரு பொறிமுறையைக் குறித்து முடிவெடுக்கும்பொழுது அனைத்துலக அரசியல் நலன்களே முன்நிற்கின்றன. அனைத்துலக நீதி எனப்படுவது அனைத்துலக அரசியல்தான்.

எனவே, நீதிக்கான தமது போராட்டத்தை ஈழத்தமிழர்கள் விட்டுக்கொடுப்பின்றி முன்னெடுக்க வேண்டும்.இதன் மூலம் அனைத்துலக அபிப்பிராயத்தை அரசுகளின் மீது அழத்தம் கொடுக்கும் ஒரு சக்தியாக மாற்ற வேண்டும். இது ஓரு தடம்.

அடுத்த தடம் அனைத்துலக அரசியலின் விளைவாகக் கிடைத்திருக்கும் கலப்பு விசாரணைப் பொறிமுறைக்குள் பங்கேற்று அதை வெற்றிகரமாக அம்பலப்படுத்துவது.

இப்பொழுது அரசுடைய தரப்புக்கள் தமது நீதியை எங்கிருந்து தொடங்கக் கூடும் என்பது துலக்கமாகத் தெரிகிறது. அதே சமயம் அரசற்ற தரப்பாகிய ஈழத்தமிழர்கள் நீதிக்கான தமது போராட்டத்தை எப்படி முன்னெடுக்கப் போகிறார்கள்?

தமிழ் ராஜதந்திரமானது அதன் கெட்டித்தனத்தையும், தீர்க்கதரிசனத்தையும் நிரூபிப்பதற்கு மேலும் ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *