வரும் ஜெனிவா கூட்டத்தொடரை எதிர்கொள்ளும் பொருட்டு தமிழ் தேசிய நிலைப்பாட்டை கொண்ட மூன்று கட்சிகள் இணைந்து ஒரு பொது ஆவணத்தை உருவாக்கியுள்ளன.கடந்த பத்தாண்டுகளில் தமிழ் தரப்பில் இவ்வாறு ஒரு ஆவணம் உருவாக்கப்பட்டிருப்பது இதுதான் முதல் தடவை. குறிப்பாக கடந்த எட்டு ஆண்டு காலப்பகுதிக்குள் ஜெனிவாவில் தமிழ்மக்கள் எதைக் கேட்க வேண்டும் என்பது குறித்து நீண்ட ஆலோசனைகளின்பின் உருவாக்கப்பட்ட ஓர் ஆவணம் இது.இம்முயற்சிகளின் தொடக்கம் தமிழ் டயஸ்போறாதான். லண்டனை மையமாகக் கொண்டியங்கும் தமிழ் அமைப்பு ஒன்று முதன்முதலாக அப்படி ஒரு ஆவணத்தை உருவாக்கி சுமந்திரனுக்கு வழங்கியதாகத் தெரிகிறது.கிட்டத்தட்ட ஒன்றரை பக்கமுடைய அந்த வரைபை சுமந்திரன் ஏழு பக்கங்களுக்கும் குறையாமல் திருத்தி எழுதி கஜேந்திரகுமாருக்கு விக்னேஸ்வரனுக்கு வழங்கியதாக தெரிகிறது.அவர் வழங்கிய ஆவணத்தை விக்னேஸ்வரனும் கஜேந்திரகுமாரும் நிராகரித்து விட்டார்கள். இவ்வாறானதொரு பின்னணியில் ஏற்கனவே அந்த ஆவணத்தை தயாரித்த லண்டனை மையமாகக் கொண்ட அமைப்பு தாயகத்தில் இருக்கக்கூடிய தமிழ் அரசியல்வாதிகளையும் கட்சிகளையும் தனித்தனியாக அணுகி தனது ஆவணத்திற்கு ஆதரவை கேட்டிருக்கிறது.
அதேசமயம் விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணி நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் ஆலோசனைகளைப் பெற்று ஓர் ஆவணத்தை தயாரித்திருக்கிறது.
இது தவிர தமிழ் டயஸ்போராவுக்குள்ளிருந்து குறிப்பாக ஐரோப்பவுக்குள்லிருந்து மற்றொரு ஆவணம் தயாரிக்கபட்டு அதற்கு 200க்கும் அதிகமான தமிழ் டயஸ்போறா அமைப்புக்கள் ஒப்புதலளித்திருந்தன.
இவ்வாறு தாயகத்திலும் டயஸ்போராவுக்குள்ளும் ஆவணங்கள் தயாரிக்கபட்டுக் கொண்டிருந்த ஒரு பின்னணியில் தாயகத்திலிருந்தும் தமிழ் டயஸ்போராவிலிருந்தும் ஒழுங்கு செய்யப்பட்ட மெய்நிகர் சந்திப்புகளின்போது இது தொடர்பில் ஆழமாக உரையாடப்பட்டது.இந்த உரையாடல்களையும் மேற்சொன்ன ஆவணங்களையும் தொகுத்துப் பார்த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது.அது ஒரு மகிழ்ச்சிக்குரிய விடயம்.என்னவெனில் இம்முறை ஜெனிவாவை எதிர்கொள்வதற்காக தமிழ் தரப்பு அதிகம் அறிவுபூர்வமாகவும் ஆழமாகவும் உரையாடியிருக்கிறது என்பதுதான். அனைத்துலகச் சட்டங்களைப் பற்றியும் ஐ.நா.சட்டங்களைப் பற்றியும் பரிகார நீதியை பெறுவதற்கான அனைத்துலக வாய்ப்புகளைக் குறித்தும் ஆழமாகவும் அறிவுபூர்வமாகவும் உரையாடல்கள் நடத்தப்பட்டன.எனினும் இந்த உரையாடல்களின் தொகுக்கப்பட்ட விளைவாக தாயகமும் டயஸ்போராவும் இணைந்த ஓர் ஆவணத்தைத் தயாரிக்க முடியவில்லை என்பதனை இங்கே சுட்டிக்காட்டவேண்டும்.
இதில் சில நடைமுறைப் பிரச்சினைகள் இருந்தன. முதலாவது சட்டப் பிரச்சினை. டயஸ்போராவிலிருக்கும் அமைப்புகளோடு தாயகத்தில் செயற்படும் அமைப்புக்களும் கட்சிகளும் சேர்ந்து ஒரு பொது ஆவணத்தில் பகிரங்கமாக கையெழுத்திடும்பொழுது அதனால் வரக்கூடிய சட்டச் சிக்கல்கள். ஏனெனில் டயஸ்போராவில் இருக்கும் அமைப்புகளில் ஒரு பகுதி இலங்கைத் தீவில் சட்டரீதியாக இயங்க முடியாதவை. எனவே தாயகத்தில் இருப்பவர்கள் டயஸ்போரா அமைப்புகளோடு சேர்ந்து இது போன்ற ஆவணங்களை தயாரிப்பதில் அடிப்படை வரையறைகள் இருந்தன. இதுதவிர கஜேந்திரகுமார் தாயகத்திலிருந்து அதிலும் குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் இருந்து உருவாக்கப்படக்கூடிய ஆவணங்களுக்கு அதிகம் ஆதரவாக காணப்பட்டார்.
இவ்வாறானதொரு பின்னணியில் தாயகத்தில் ஜெனிவாவை எதிர்கொள்ளும் நோக்கத்தோடு மூன்று கட்சிகளையும் இணைக்கும் வேலைகள் தொடங்கப்பட்டன. இதன்போது தமிழ் தரப்பில் மூன்றுவிதமான நிலைப்பாடுகள் அவதானிக்கப்பட்டது.
முதலாவது கஜேந்திரகுமார் அணி அவர்கள் பொறுப்புக்கூறலை ஜெனிவாவிற்கு வெளியே கொண்டு போகவேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக காணப்பட்டார்கள்.நீதிகோரும் பொறிமுறையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திடம் கொண்டு போக வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினார்கள்.
அடுத்த நிலைப்பாடு கூட்டமைப்பினுடையது. ஒப்பீட்டளவில் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சி அது. கடந்த எட்டு ஆண்டுகளாக தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக ஜெனிவாவுக்கு சென்றுவந்த கட்சி அது. அதுமட்டுமல்ல ஜெனிவா தீர்மானங்களில் ஒப்பீட்டளவில் அதிகளவு பங்களிப்பை செலுத்திய கட்சியும் அது. மிகக் குறிப்பாக 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தில் கூட்டமைப்பும் ஒருவிதத்தில் உத்தியோகப்பற்றற்ற பங்காளிதான்.அதன்படி கூட்டமைப்பு நிலைமாறுகால நீதியை ஏற்றுக்கொண்டது. எனினும் கடந்த ஆறு ஆண்டு கால அனுபவத்தின் அடிப்படையில் அக்கட்சி தனது நிலைப்பாட்டிலிருந்து மாறியிருப்பதாக தெரிகிறது. நிலைமாறுகால நீதிச் செய்முறைகள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை என்பதை அக்கட்சி ஏற்றுக்கொள்கிறது.எனவே ஜெனிவாவுக்கு வெளியே போக வேண்டும் என்ற ஏனைய கட்சிகளின் நிலைப்பாட்டை கூட்டமைப்பு ஆதரிக்கிறது.
ஆனால் ஜெனிவாவை கடப்பதில் இருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து அக்கட்சியின் பேச்சாளர் சுமந்திரனிடம் தனிப்பட்ட முறையில் கேள்விகள் உண்டு என்றும் தெரிகிறது. எனவே ஜெனிவாவை ஒரேயடியாக கைவிடாமல் அங்கே குறிப்பிடத்தக்க அளவிற்கு என்கேஜ் பண்ணிக்கொண்டு படிப்படியாக ஏனைய வாய்ப்புகளை நோக்கி நகரலாம் என்பது அக்கட்சியின் நிலைப்பாடாக காணப்பட்டது.
மூன்றாவது நிலைப்பாடு விக்னேஸ்வரன் அணிக்குரியது. அவர்களும் ஜெனிவாவை விட்டு வெளியே போக வேண்டும்; அனைத்துலக நீதிமன்றங்களை அணுக வேண்டும்; சிறப்பு தீர்ப்பாயங்களை உருவாக்க வேண்டும் ; சிறப்பு தூதுவர்களை நியமிக்குமாறு கேட்கவேண்டும்; சர்வசன வாக்கெடுப்பை கேட்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தார்கள். அதோடு சேர்த்து ட்ரிபிள்ஐஎம் என்று அழைக்கப்படும் ஒரு தகவல் திரட்டும் பொறிமுறையும் உருவாக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். அதாவது சாராம்சத்தில் விக்னேஸ்வரனின் அணியும் ஜெனிவாவை விட்டு வெளியே போக வேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டிருக்கிறது.ஆனால் ஜெனிவாவை செங்குத்தாக முறிக்கக் கூடாது என்று அவர்கள் கருதுவதாகத் தெரிகிறது. இப்போது இருக்கின்ற ஒரே உலக பொது அரங்கில் இப்பொழுது இருக்கின்ற வாசல்களையும் மூடிவிட்டால் அடுத்த கட்டம் என்ன என்ற கேள்வி அவர்களிடம் உண்டு.அதனால் ஜெனிவாவை குறிப்பிடத்தக்க அளவிற்கு என்கேஜ் பண்ணிக்கொண்டு ஏனைய வாய்ப்புகளை நோக்கிப் போக வேண்டும் என்பதே அக்கட்சியின் நிலைப்பாடு ஆகும்.
இம்மூன்று நிலைப்பாடுகளுக்குமிடையிலும் ஒரு பொது உடன்படிக்கை கண்டுபிடிப்பது அதிகம் சவால் மிகுந்தது அல்ல.ஏனெனில் அடிப்படை அம்சங்களில் மூன்று தரப்பும் ஒரே கோட்டில் சந்திக்கின்றன. இதுதொடர்பாக நடந்த மூன்று சந்திப்புகளிலும் படிப்படியாக இந்த இணக்கம் ஏற்பட்டது. இது விடயத்தில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கூட்டமைப்பு ஒப்பீட்டளவில் ரிலாக்ஸ்ஆக இருந்தது என்பதே உண்மை. கூட்டமைப்பின் சார்பாக சந்திப்புக்களில் பங்குபற்றிய சுமந்திரன் நமது கட்சியின் ஏகபோக இழக்கப்பட்டிருக்கும் ஒரு பின்னணியில் புதிய மாற்றங்களோடு சுதாகரிப்பதற்கு தயாராக காணப்பட்டார்.கஜேந்திரகுமார் மற்றும் விக்னேஸ்வரன் அணியினரின் நிலைப்பாடுகளுக்கு குறிப்பிடத்தக்களவு விட்டுக் கொடுத்தார்.கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த விவகாரத்தை உத்தியோகபூர்வ ஏக தரப்பாகக் கையாண்டு வந்த கூட்டமைப்பு இம்முறை விவகாரங்களை மாற்று அணிகள் கையாளும் பொழுது நாங்கள் பேசாமல் இருந்து நடப்பதை கவனிப்போம் என்று முடிவெடுத்து அமைதியாக அமர்ந்திருந்ததா?
முதலாவது சந்திப்பில் சுமந்திரன் மிக நீண்ட உரை நிகழ்த்தினார். ஆனால் பின் வந்த சந்திப்புகளில் அவர் அதிகம் கதைக்கவில்லை. அதிகம் வாதத்திலும் ஈடுபடவில்லை.வாதப்பிரதிவாதங்கள் கஜேந்திரகுமார் விக்னேஸ்வரன் அணிகளுக்கிடையில்தான் ஏற்பட்டன.அதுகூட ட்ரிபிள் ஐ.எம் என்றழைக்கப்படும் ஒரு பொறிமுறை தொடர்பானதுதான். இறுதியில் அதற்கும் உடன்பாடு எட்டப்பட்டது.கால வரையறையோடு அந்த பொறிமுறையை ஏற்றுக்கொள்ள கஜேந்திரகுமார் சம்மதம் தெரிவித்தார்.எனவே மூன்று தரப்புக்களும் இணைந்து உருவாக்கிய இறுதி ஆவணம் தயாரிக்கப்பட்டது.
இந்த ஆவணத்தில் உள்ள முக்கியத்துவங்கள் வருமாறு.
முதலாவது- கடந்த 10 ஆண்டு காலப்பகுதிக்குள் தமிழ்த் தரப்பு ஐக்கியமாக ஒரு முடிவை எடுத்திருப்பது. தமிழ் மக்கள் மத்தியில் இவ்வாறு தமிழ்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட சக்திகள் தங்களுக்கிடையே இருக்கக்கூடிய வேறுபாடுகளை கைவிட்டு ஒரு விஷயத்துக்காக ஒன்றுபட்டிருப்பது என்பது. அதுவும் வெளிவிவகாரக் கொள்கை தொடர்பில் ஓர் அணியாக திரண்டிருப்பது என்பது ஒரு முக்கியமான மாற்றம்
இரண்டாவது தமிழ் தரப்பு இதற்கு முந்திய ஐநா கூட்டத் தொடர்களில் பரிகார நீதியா?நிலைமாறுகால நீதியா?என்பதில் இருவேறு நிலைப்பாடுகளோடு காணப்பட்டது.ஆனால் இம்முறை தாயகத்தில் தமிழ் மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட பதின்மூன்று பிரதிநிதிகளைக் கொண்ட மூன்று கூட்டணிகள் பரிகார நீதிதான் வேண்டும் என்று உணர்த்தும் விதத்தில் ஓர் ஆவணத்தை தயாரித்திருக்கிறார்கள்.
மூன்றாவது முக்கியத்துவம். இதற்கு முந்திய ஐநா கூட்டத் தொடர்களில் ஐநாவில் என்ன கிடைக்கும் என்று பார்த்து அதற்கேற்ப தமிழ்த் தரப்பு தனது கோரிக்கைகளை சுதாகரிக்கும் ஒரு போக்கே அதிகம் காணப்பட்டது. ஆனால் இம்முறை நிலைமாறுகால நீதி பொய்த்துப்போன ஒரு சூழலில் இப்போதிருக்கும் அரசாங்கம் நிலைமாறுகால நீதியே வேண்டாம் என்று கூறும் ஒரு பின்னணியில் தமிழ் தரப்பு தனது உச்சமான கோரிக்கைகளை ஐநா வை நோக்கி முன்வைத்திருக்கிறது. அதாவது பாதிக்கப்பட்ட மக்களின் நோக்கு நிலையில் இருந்து உச்சமான கோரிக்கைகள் ஒருமித்த குரலில் முன்வைக்கப்படுகின்றன.
நாலாவது முக்கியத்துவம் -நடந்தது இனப்படுகொலை என்பதனை கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டிருப்பது. இது கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக காணப்படாத ஒரு போக்கு. இம்முறை கூட்டமைப்பு மாற்று அணியுடன் சேர்ந்து நடந்தது இனப்படுகொலை என்பதனை ஏற்றுக் கொள்ளும் ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
இந்த நான்கு மாற்றங்களையும் கருதிக் கூறின் கடந்த எட்டு ஆண்டுகளில் இப்பொது ஆவணம் ஒரு முக்கியமான அடைவு.கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலையொட்டி தமிழ்க்கட்சிகள் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஒத்துழைப்போடு உருவாக்கிய 13 அம்சக் கோரிக்கையும் ஒரு முக்கியமான ஆவணம்.ஆனால் அதில் கையெழுத்திட்ட கட்சிகளே அதைப் பின்னர் கைவிடும் ஒரு நிலைமை தோன்றியது.அதுபோல இந்த ஆவணத்துக்கும் நடக்கக்கூடும். ஏனெனில் ஜெனிவாவில் தமிழ் மக்கள் கேட்பது கிடைக்கப் போவதில்லை. சீனாவோடு நிற்கும் ராஜபக்ச அரசாங்கத்தை எப்படி வழிக்கு கொண்டு வரலாம் என்று சிந்திக்கும் இணைக்குழு நாடுகள் எடுக்கப்போகும் முடிவு என்பது தமிழ் மக்களுக்கு முழுத் திருப்தியான ஒன்றாக இருக்கும் என்று ஊகிக்கத் தேவையில்லை. அவ்வாறான ஒரு முடிவை நோக்கி தமிழ் கட்சிகளை வளைத்தெடுக்க முடியுமா என்று சம்பந்தப்பட்ட இணைக்குழு நாடுகள் இனிமேலும் முயற்சிக்கலாம்.அவ்வாறு முயற்சிக்குமிடத்து இந்த ஆவணம் எந்த ஒரு கட்சியும் தனி ஓட்டம் ஓடுவதை தடுக்கும் சக்தி மிக்கதா இல்லையா என்பதை இனிவரும் மாதங்களே தீர்மானிக்கும்.
மேலும் இந்த ஆவணம் தொடர்பில் சில விமர்சனங்களும் வருகின்றன. அதில் முக்கியமான விமர்சனம் இந்த ஆவணத்தில் தாயகத்தில் உள்ள எல்லா த்தமிழ்த்தேசியக் கட்சித் தலைவர்களும் கையெழுத்திடுவதில் எழுந்த சர்ச்சைகள்.தமிழ் கூட்டணிகளின் தலைவர்கள் கையெழுத்திட்டால் போதுமா அல்லது ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சித் தலைவர்களும் கையெழுத்திட வேண்டுமா என்பதில் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு முடிவை எட்ட முடியவில்லை. இது தமிழ் மக்கள் ஒரு தேசமாகத் திரள்வதிலுள்ள சவால்களை நிரூபித்த ஆகப்பிந்திய உதாரணம்.
அடுத்தது-இந்த ஆவணத்தில் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் கையெழுத்திடவில்லை என்பது. அது குறித்து இக்கட்டுரையில் ஏற்கனவே பார்த்தோம். கடந்த பத்தாண்டுகளில் பரிகார நீதி மற்றும் நிலைமாறுகால நீதி ஆகியவற்றை நோக்கிய நகர்வுகளை பொறுத்தவரை புலம்பெயர்ந்த தமிழ் தரப்புகளின் உழைப்பே அதிகம். ஜெனீவாமைய அரசியலை அதிகம் முன்னெடுத்தது தமிழ் டயஸ்போராதான்.தாயகத்தில் அதற்குரிய அரசியல் சூழல் இருக்கவில்லை. நிதிப் பலமும் தொடர்புகளும் இருக்கவில்லை. இதை இன்னும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால் 2009 மேக்குப்பின் அஞ்சலோட்டக் கோலை தமிழ் டயஸ்போரா அமைப்புக்களே தங்கள் கைகளில் வைத்திருந்தன என்ற ஒரு தோற்றம் எழுந்தது. ஆனால் இம்முறை தாயகத்திலிருந்து அதுவும் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் உள்ள குடிமக்கள் சமூகங்களோடு இணைந்து கட்சிகள் ஒரு பொது ஆவணத்தை உருவாக்கியிருக்கின்றன. ஆனால் இந்த ஆவணம் புலம்பெயர்ந்த தமிழ் தரப்புகளின் கையெழுத்துக்களை கொண்டிருக்கவில்லை.
இது தொடர்பில் புலம்பெயர்ந்த தமிழ் தரப்புக்களும் தாயகத்தில் இருக்கும் தரப்புக்களும் ஒரு முடிவுக்கு வர வேண்டும். இரண்டு தரப்பும் ஒன்றிணைந்து செயற்படக்கூடிய இடையூடாட்டப் பொறிமுறைகளை உருவாக்க வேண்டும். அப்பொறிமுறைகள் இலங்கைத்தீவில் சட்டரீதியாக தடை செய்யப்படாதவைகளாகவும் இருக்கவேண்டும். அனைத்துலக அளவிலும் அவை சட்டரீதியாக தடை செய்யப்படாதவைகளாக இருக்கவேண்டும். அவ்வாறான ஒரு பொறிமுறையின்கீழ் தாயகம்-டயஸ்போறா-தமிழகம் ஆகிய மூன்று தரப்புக்களும் இணையும் போதே இந்த ஆவணத்தில் கேட்டிருப்பதைப் போன்ற ஒரு பொறுப்புக்கூறும் பொறிமுறையை நோக்கி உலக சமூகத்தை ஈழத் தமிழர்களால் உந்தித்தள்ள முடியும்.
ஏனெனில் உலக நீதி என்பது தூய நீதி அல்ல.அது பரிகார நீதியானாலும்சரி நிலைமாறுகால நீதியானாலும்சரி எதுவானாலும் சரி அது அரசுகளின் நீதிதான். அரசுகளின் நீதி என்பது அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்புசார் உறவின் பாற்பட்ட நிலையான நலன்களின் அடிப்படையிலானது.அது தூய நீதியே அல்ல.சம்பந்தப்பட்ட அரசுகளின் பொருளாதார ராணுவ நலன்களின் அடிப்படையிலானது.எனவே அரசுகளின் நீதியை வென்றெடுப்பதற்கு அரசற்ற தரப்பாகிய தமிழ் மக்கள் தாயகம்; டயஸ்போரா;தமிழகம் ஆகிய மூன்று பரப்புகளையும் வெற்றிகரமாக ஒருங்கிணைக்க வேண்டும்.அரசுகளை வென்றெடுத்தால்தான் அரசுகளின் நீதியையும் வென்றெடுக்கலாம். ஏனெனில் மூத்த அரசறிவியலாளர் ஒருவர் கூறுவதுபோல அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்துக்குப் போவது என்பது சின்னப் பிள்ளைகளுக்கு நிலைக் கண்ணாடியில் நிலவைக் காட்டுவது போன்றதல்ல.