ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய அறிக்கை கடந்த 27ஆம் திகதி வெளிவந்திருக்கிறது.கடந்த கிழமை தமிழ்க் குடிமக்கள் சமூகங்களும் மூன்று தமிழ்த் தேசியக் கட்சிகளும் கூட்டாக முன்வைத்த கோரிக்கைகளில் முக்கியமான சிலவற்றை மனித உரிமைகள் ஆணையரும் பரிந்துரைத் திருக்கிறார்.இந்த அறிக்கையானது இதற்குமுன் வெளிவந்த மனித உரிமை ஆணையர்களின் அறிக்கைகளோடு ஒப்பிடுகையில் முன்னேறியிருக்கிறது.குறிப்பாக போர்குற்றம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிரான பயணத் தடைகள் ;சொத்து முடக்கம் பற்றிக் கூறப்படுகிறது.அதோடு ‘யுனிவேர்சல் ஜுரிடிக்சன்’-அதாவது குற்றமிழைத்த ஒருவரை நாட்டுக்கு வெளியிலும் விசாரிப்பது-தொடர்பாகக் கூறப்பட்டுள்ளதுடன் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்வது பற்றியும் கூறப்பட்டுள்ளது.அதாவது தண்டணைகள் பற்றி அல்லது தண்டிப்பதற்கான விசாரணைகள் பற்றிப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மனிதஉரிமைப் பேரவையிலிருந்து விடயத்தை வெளியில் எடுக்கலாம் என்ற நம்பிக்கையையை இவ்வறிக்கை ஊக்குவிக்கிறதா?
ஆனால் இந்த அறிக்கையின் தொடர்ச்சியாகவே மனித உரிமைகள் பேரவையின் உத்தியோகபூர்வ நடவடிக்கைகளும் அமையுமா என்பதே இங்குள்ள முக்கிய கேள்வியாகும். ஏனெனில் இதற்கு முன்னரும் ஐநா மனித உரிமை ஆணையர்களின் அறிக்கைகள் காட்டமானவைகளாக இருந்திருக்கின்றன.ஆனால் அந்த அறிக்கைகளின் பின் நிறைவேற்றப்பட்ட ஐநா தீர்மானங்கள் மென்மையானவைகளாகவும் அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்பு சார் உறவுகளை காப்பாற்றும் நோக்கிலானவைகளாகவுமே அமைந்திருந்தன.இம்முறையும் ஐநா.மனித உரிமைகள் பேரவையின் நடவடிக்கைகள் அவ்வாறுதான் அமையுமா?
இந்த அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசாங்கம் தற்காப்பு நடவடிக்கைகளில் ஏற்கனவே இறங்கிவிட்டது.கடந்த வாரம் இலங்கை ஜனாதிபதி ஓர் ஆணைக்குழுவை நியமித்திருக்கிறார்.ஏற்கனவே உருவாக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் நடவடிக்கைகளை விசாரிப்பதற்கான ஆணைக்குழு அது.இலங்கைத்தீவின் நவீன அரசியலில் ஆணைக்குழுக்கள் எனப்படுபவை அபகீர்த்தி மிக்க ஒரு பாரம்பரியத்துக்குரியவை.அது ஒரு கண்துடைப்புப் பாரம்பரியம்.பாதிக்கப்பட்ட மக்களை பேய்க்காட்டும் ஒரு பாரம்பரியம். இம்முறை அதன் அடுத்தகட்ட வளர்ச்சியாக ஆணைக்குழுக்களை விசாரிப்பதற்கு ஒரு ஆணைக்குழுவை ஜனாதிபதி நியமித்திருக்கிறார். இதன்மூலம் அவர் ஐநாவை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறாரா?
இந்த ஆணைக்குழுவின்மூலம் மட்டும் அல்ல அவர் பதவியேற்றதிலிருந்து கடந்த ஆண்டு முழுவதும் அவர் நிலைமாறுகால நீதி தொடர்பில் எவ்வாறான அணுகுமுறைகளைக் கொண்டிருந்தார் என்பதனை தொகுத்துப் பார்த்தால் அவர் கடந்த ஆண்டு முழுவதும் ஐநா வை எதிர்கொள்ளத் தயாராகி வருவதை காணமுடியும்.அவர் உத்தியோகபூர்வமாக ஐநாவின் 30/1 தீர்மானத்திலிருந்து விலகப்போவதாக அறிவித்திருக்கலாம். ஆனால் நடைமுறையில் அந்த தீர்மானத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளை அப்படியே தொடர்ந்தும் அவற்றின் நலிவுற்ற நிலையிலும் பேணிவருகிறார்.எனவே இதன்மூலம் தான் நிலைமாறுகால நீதி தொடர்பில் ஒரு உள்நாட்டு பொறிமுறைக்கு தயார் என்ற செய்தியை அவர் கடந்த ஆண்டு முழுவதும் ஐநாவுக்கு வழங்கி வந்திருக்கிறார்.எனவே கடந்த ஓராண்டு கால ஆட்சியைத் தொகுத்துப் பார்த்தால் அரசாங்கம் ஐநாவை சுதாரிக்க தயாராக இருப்பதாகவே தோன்றுகிறது.ஆணைக்குழுக்களை விசாரிக்கும் ஆணைக்குழு இதில் ஆகப் பிந்திய ஒரு சுதாகரிப்பு நடவடிக்கை ஆகும்.
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்குத் தரத் தயாராகுவதும் இந்தியா அனுப்பிய தடுப்பூசிகளை ஜனாதிபதி தானே விமான நிலையத்துக்கு நேரில் சென்று பெற்றுக் கொண்டமையும் அரசாங்கம் ஜெனிவாவை முன்னோக்கி இந்தியாவை மகிழ்விக்க முற்படுவதைக் காட்டுகிறது.
இப்படித்தான் ஐநாவின் சிறப்புத் தூதுவர்களின் அறிக்கைகளும் கடுமையானவைகளாக அமைவதுண்டு.ஏனெனில் சிறப்புத்தூதுவர்கள் துறைசார் நிபுணத்துவம் மிக்கவர்கள்.அவர்கள் தமது துறைசார் ஒழுக்கத்துக்கூடாக சேகரித்து பகுப்பாய்வு செய்யப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அறிக்கைகளை வெளியிடுகிறார்கள்.ஆனால் ஐ.நா தீர்மானங்கள் அவ்வாறானவை அல்ல.அவை அரசுகளின் தீர்மானங்கள்.அரசுகள் எப்பொழுதும் அரசுக்கும் அரசுக்கும் இடையிலான ராணுவ;பொருளாதார நலன்களின் அடிப்படையில்தான் முடிவுகளை எடுக்கின்றன. எனவே ஐநா மனித உரிமைகள் ஆணையம் உட்பட சிறப்புத்தூதுவர்களின் அறிக்கைகளுக்கும் ஐ.நா தீர்மானங்களுக்கும் இடையில் இடைவெளிகள் உண்டு..
இந்த இடைவெளியை தமிழ் மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.இந்த இடைவெளிதான் தமிழ் மக்கள் அதிகம் வேலை செய்ய வேண்டிய இடம்.உலக சமூகம் தமிழ் மக்களுக்கு வழங்கக்கூடிய நீதியின் வரையறைகளை அது உணர்த்துகிறது.
எனவே ஐநா மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கையின் தொடர்ச்சியாக மார்ச் மாதம் ஐநா மனித உரிமைகள் பேரவையின் நடவடிக்கைகள் அமைய வேண்டும் என்ற கட்டாயமில்லை.மாறாக இப்படிப்பட்ட அறிக்கைகள் அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க உதவும்.அரசாங்கம் இந்த அறிக்கைகளின் கடுமையை உணர்ந்து தன்னை சுதாகரித்துக் கொள்ள முடியும்.அவ்வாறு சுதாகரித்துக் கொள்ளும் பட்சத்தில் ஐநா தீர்மானங்கள் அரசாங்கத்தோடு எப்படியெல்லாம் ‘என்கேஜ்’ பண்ணலாம் என்று சிந்திப்பவைகளாகவே அமையும்.அல்லது அரசாங்கம் இந்த அறிக்கைகளுக்கு கோபமான எதிர்வினைகளை காட்டினால் அதற்காகவும் ஐநா மனித உரிமைகள் பேரவை அரசாங்கத்தை தண்டிக்கும் என்று சொல்ல முடியாது.
முதலாவதாக அரசாங்கத்தைத் தண்டிக்கும் ஆணை மனித உரிமைகள் பேரவைக்கு இல்லை.இரண்டாவதாக அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கும் ஆணையும் மனித உரிமைகள் பேரவைக்கு இல்லை.மனித உரிமைகள் பேரவை எனப்படுவது ஓர் அரசாங்கம் இணங்கினால் மட்டுமே அந்த நாட்டுக்குள் இறங்கி வேலை செய்யலாம்.குறிப்பிட்ட அரசாங்கத்தின் ஒப்புதலோடுதான் மனித உரிமைகள் பேரவை அந்த நாட்டுக்குள் செயற்படும்.எனவே அரசாங்கத்துக்கு எதிராக எதையும் செய்யக் கூடிய ஒரு ஆணை அந்த அவைக்குக் கிடையாது.
இது காரணமாகத்தான் தமிழ் குடிமக்கள் சமூகங்களும் மூன்று தமிழ் தேசியக் கட்சிகளும் பொறுப்புக்கூறலை ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு வெளியே கொண்டு போக வேண்டும் என்று கேட்டன.நிலைமாறுகால நீதிப் பயில்வின் தோல்விகள் காரணமாகவும் கடந்த 10ஆண்டுகளுக்கு மேலான மனித உரிமைகள் பேரவையின் செயற்பாடு எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத ஒரு பின்னணியிலும் பொறுப்புக்கூறலை மனித உரிமைகள் பேரவைக்கு வெளியே கொண்டு போக வேண்டும் என்று பாதிக்கபட்ட மக்கள் தரப்பிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அக்கோரிக்கையின் சாராம்சம் வருமாறு…..
முதலாவதாக இலங்கையை இனப்படுகொலை, மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள், யுத்த குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களை விசாரிப்பதற்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றமும் உட்பட வேறு பொருத்தமானதும் செயற்படுத்தக்கூடியதுமான சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைகளுக்குப் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஐ. நா. பொதுச்சபை, ஐ. நா. பாதுகாப்புச்சபை போன்றவை எடுக்க வேண்டுமென்று புதிய தீர்மானத்தில் உறுப்பு நாடுகள் வலியுறுத்த வேண்டும்.
இரண்டாவதாக,ஐ. நா.மனித உரிமைப் பேரவையின் தலைவர் இவ்விடயத்தை மேற்கூறப்பட்ட நடவடிக்கைக்காக மீளவும் ஐநா.செயலாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மூன்றாவதாக,ஐ. நா. மனித உரிமை உயர்ஸ்தானிகரின் அலுவலகம் இலங்கையில் தொடர்ந்து நடைபெறுகின்ற மீறுதல்களைக் கண்காணிக்க இலங்கையில் அதன் அலுவலகமொன்றை ஸ்தாபித்தல் வேண்டும்.
நாலாவதாக,மேலே முதலாவதாக கூறப்பட்டதிற்கு பங்கமில்லாமல் ஐ. நா.பொதுச் சபையின் உப பிரிவாக, சீரியா சம்பந்தமாக உருவாக்கப்பட்ட சாட்சிகளை சேகரிக்கிற பொறிமுறை போன்றதொன்றை (IIIM) கடுமையான 12 மாத அவகாச நிபந்தனையோடு ஏற்படுத்துதல்…….இதுதான் அக்கூட்டுக் கோரிக்கையின் சாராம்சம்.
அதேசமயம் அந்தக் கோரிக்கைகளில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் விமர்சனங்கள் எழுகின்றன.ஆனால் அந்த ஆவணம் எந்த அடிப்படையில் தயாரிக்கப்பட்டது என்பதைக் குறித்து ஆழமாக விளங்கிக் கொள்ளும் பொழுது அதன் மீது நிகழும் பெரும்பாலான விமர்சனங்களுக்கு இடமிருக்காது. ஐநாவுக்கு ஒரு பொதுக் கோரிக்கையை முன்வைப்பது என்று முடிவெடுத்தபோது மூன்று கட்சிகளும் குடிமக்கள் சமூகங்களும் முதலில் இணங்கிக் கொண்ட விடயம் பொறுப்புக்கூறலை ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு வெளியே கொண்டு போக வேண்டும் என்பதுதான்.அந்த அடிப்படையில்தான் அப்பொது ஆவணம் தயாரிக்கப்பட்டது.எனவே மனித உரிமைகள் பேரவைக்கு எழுதப்படும் கடிதத்தில் அதை அழுத்திக் கூறுவது என்று முடிவெடுக்கப்பட்டது.இவ்வாறு மனித உரிமைகள் பேரவைக்கு ஒரு கூட்டுக் கோரிக்கையை முன்வைத்தபின் அதையடுத்து மேலும் இரண்டு அல்லது மூன்று கடிதங்களை ஐநா பொதுச் சபைக்கும் பொதுச் செயலருக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கும் எழுதுவது என்றும் அப்போது தீர்மானிக்கப்பட்டது.பொதுச் சபைக்கு எழுதப்படும் கடிதத்தில் இணைக்கப்படும் விடயங்களை மனித உரிமைகள் பேரவைக்கு எழுதும் கடிதத்தில் தவிர்க்கலாம் என்றும் யோசிக்கப்பட்டது.
அதே சமயம், தமிழ் மக்களின் விடயம் விவாதிக்கப்படும் ஒரு உலகப் பொதுமன்றத்தில் தமிழ் மக்கள் தமது எல்லா கோரிக்கைகளையும் முன் வைப்பது நல்லது என்று ஒரு கருத்தும் கூறப்பட்டது.எனினும் மனித உரிமைகள் பேரவையோடு சம்பந்தப்பட்ட விடயங்களை முதலாவது கடிதத்தில் கேட்டுக் கொள்வது என்றும் ஏனைய விடயங்களை அடுத்தடுத்த கடிதங்களில் குறிப்பிடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.அதன்படி மேலும் சில கடிதங்களை இம்மூன்று கட்சிகளும் கூட்டாக எழுத வேண்டியிருக்கும்.ஆனால் முதலாவது கடிதத்தின்பின் நிகழும் வாதப்பிரதிவாதங்களை வைத்துப்பார்த்தால் அவ்வாறு அடுத்தடுத்தகட்ட ஒருங்கிணைத்த முயற்சிகளுக்குப் போகும் பக்குவம் தமிழ்க் கட்சிகளிடம் உண்டா என்ற கேள்வி எழுகிறது.பதினோரு ஆண்டுகளுக்குப்பின் உலக சமூகத்தை நோக்கித் தயாரித்த ஒரு பொதுக்கோரிக்கையின் மகத்துவத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு உண்டு.
அவ்வாறு தமிழ்த்தரப்பு ஒருமித்த தரப்பாக கோரிக்கைகளை முன்வைத்து ஒருமித்த தரப்பாக விவகாரங்களை கையாளுமாக இருந்தால் அரசுகளை நோக்கி வெற்றிகரமாக லொபி செய்ய முடியும்.அது மட்டுமல்ல அண்மைக்காலங்களில் அதிகரித்துவரும் நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் உட்பட காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி;அரசியல் கைதிகளுக்கான நீதி போன்ற விடயங்களிலும் ஒருமித்துச செயற்பட முடியும்.கடந்த ஞாயிற்றுக்கிழமை காணிப் பிரச்சினைகளுக்காக ஒன்றாகத் திரண்டு போராடும் நோக்கத்தோடு தமிழ் கட்சிகளில் ஒரு பகுதியினர் நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் கூடினார்கள்.அதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பங்குபற்றவில்லை.
தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட மூன்று கட்சிகள் அரங்கில் உள்ளன என்றால் அதன் பொருள் மூன்று விதமான வேறுபட்ட நோக்கு நிலைகளை அவை பிரதிபலிக்கின்றன என்பதுதான். மூன்று பேரும் ஒன்றாக ஒரே கட்சியாக நிற்க முடியாத ஓர் அரசியல் சூழல் உள்ளது என்பதுதான்.இந்த வேற்றுமைகளில்தான் ஒர் இணக்கப்பாட்டை காண வேண்டியிருக்கிறது.
ஐநாவை எதிர்கொள்வதற்கு எப்படி மூன்று கட்சிகளையும் ஒரு பொது உடன்பாட்டுக்கு கொண்டுவர முடிந்ததோ அப்படியே இனிமேலும் அடிப்படையான முக்கிய விடயங்களில் கட்சிகளை ஒன்றிணைக்கலாம் என்ற நம்பிக்கை இப்போதும் உண்டு.தமிழ்த்தரப்பு முன்வைத்த கோரிக்கைகளுக்கும் மனிதஉரிமைகள் ஆணையாளரின் அறிக்கைக்கும் இடையில் காணப்படும் ஓரளவு பொதுத்தன்மை அந்த நம்பிக்கையை அதிகப்படுத்துகின்கிறது.