தமிழினியும் 2009 மே 18ற்குப் பின்னரான தமிழ்த்தேசியச் சூழலும்

புலிகள் இயக்கம் அதிகபட்சம் படைத்துறை ஒழுக்கத்தைக் கொண்ட ஓரியக்கம். படைத்துறை இரகசியங்களைப் பாதுகாப்பதற்காக முழு உலகிற்கும் ஒரு புது அனுபவமாகக் கிடைத்த சயனைற் மரபை அந்த இயக்கம் வளர்த்தெடுத்தது. எதிரியிடம் இரகசியங்கள் போகக்கூடாது என்பதற்காக தம்மைத்தாமே மாய்த்துக்கொள்ளும் ஒரு மரபை அந்த இயக்கம் கட்டி எழுப்பியது. இயக்க இரகசியங்கள் உயிரை விட மேலானவைகளாக மதிக்கப்பட்டன. எதிரியிடம் சரணடைவதை விடவும் உயிரைத் துறப்பதே மேலானது, புனிதமானது என்று நம்பப்பட்டது.

இயக்க இரகசியங்களுக்காக உயிரைத் துறத்தல் என்பது புலிகளிடம் இருந்து தொடங்கவில்லை. ஆனால் சைனட் அருந்துவது என்பதை ஒரு புனித மரபாக கட்டியெழுப்பியது புலிகள் இயக்கம் தான். போரின் இறுதிக்கட்டத்தில் புலிகள் இயக்க உயர் பிரதானிகளில் அனேகர் இந்த மரபுக்கு ஏற்ப ஒன்றில் போராடி இறந்தார்கள் அல்லது சயனைற் அருந்தினார்கள்.

ஆனால் தமிழினி, புலித்தேவன், நடேசன் போன்ற உயர் பிரதானிகள் அந்த மரபைப் பேணவில்லை. எனினும் நடேசன், புலித்தேவன் உள்ளிட்டோர் சரணடைய முற்பட்ட வேளை கொல்லப்பட்டு விட்டார்கள். ஆனால் தமிழினியைப் போன்றவர்கள் சரணடைந்த பின் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்கள்.

சரணடையாமை என்பதை ஒரு புனித மரபாகப் பார்க்கும் தமிழர்களில் ஒரு பகுதியினர் தமிழினியைப் போன்றவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு புனிதமான மரபை மீறியவர்களாகவே அவர்கள் பார்க்கப்பட்டார்கள். பலிக்களத்திலிருந்து தப்பியோடி வந்த பலியாடுகளாகவே பார்க்கப்பட்டார்கள். பலியாடு தப்பக்கூடாது. தப்பினால் அது தெய்வக்குற்றம் என்று நம்பும் தமிழர்களில் ஒரு பகுதியினர் தடுப்பில் இருந்து வந்தவர்களை ஒருவித அசூசையோடுதான் பார்த்தார்கள். குறிப்பாக கட்டாய ஆட்சேர்ப்பின் கசப்பான அனுபவங்களின் பின்னணியில் வைத்து சிந்திக்கும் தமிழர்கள் தமது பிள்ளைகளைக் கட்டாயமாகப்  போரிலிணைத்தவர்கள் அல்லது அச்செயலுக்குப் பொறுப்பாக இருந்தவர்கள் சரணடைந்து பின் தடுப்பிலிருந்து வந்தபொழுது அவர்களை மோசமாக விமர்சித்தார்கள். இத்தகைய விமர்சனங்களின் பின்னணியில் தடுப்பிலிருந்து வந்தவர்கள் அண்மையில் தேர்தலில் இறங்கிய பொழுது ஈழத்தமிழர்களில் பெரும்பாலானவர்கள்  அவர்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவில்லை.

முன்னாள் இயக்கத்தவர்களை வைத்து ஒரு கட்சி உருவாக்கப்பட்ட பொழுது இரண்டு பெரிய தமிழ்த்தேசியக் கட்சிகளும் புதிய கட்சியை சந்தேகத்தோடுதான் அணுகின. புதிய கட்சியைச் சேர்ந்தவர்கள் கூட்டமைப்பைச் சந்தித்த போது கூட்டமைப்பின் தலைமைப்பீடம் இது தொடர்பாக வெளிப்படையாகவே கருத்துத் தெரிவித்திருந்தது.

இக்காலப்பகுதியில் பி.பி.சி தமிழோசை மேற்படி புதிய கட்சி தொடர்பாக தமிழ்மக்களைப் பேட்டி கண்டது. இப்பேட்டியின் போது கருத்துத்தெரிவித்தவர்களில் பெரும்பாலானவர்கள் தடுப்பிலிருந்து வந்தவர்களை முழுமையாக அங்கீகரிக்கத் தயாராக இருக்கவில்லை. அப்பேட்டியைத் தொகுத்துக் கேட்கும்  எந்தவொரு சமூகச் செயற்பாட்டாளரும் இந்தச் சமூகத்திற்காக தான் தன்னைப் பூரணமாக தியாகம் செய்வது சரியா? என்று சிந்திக்கத்தூண்டும் அளவிற்கு அப்பேட்டியில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.

தடுப்பிலிருந்து வந்தவர்கள் தம்மைத் தடுத்து வைத்திருந்தவர்களோடு ஏதோ ஒரு தொடர்பினைப் பேணவேண்டியே இருக்கும். இதனால் சமூகம் அவர்களை எப்பொழுதும் ஒருவித அச்சத்தோடேயே பார்க்கும். 2009 மே மாதத்திற்குப் பின் இலங்கைத்தீவின் அரசியல் அரங்கில் அதிகபட்சம் ஆபத்துக்குள்ளாகக்கூடிய ஒரு தரப்பாக அவர்கள் காணப்படுகிறார்கள். அவர்களை வெற்றிகொண்டவர்களின் இரக்கத்தில் தங்கியிருக்கவேண்டிய ஒரு நிலை. இத்தகைய ஒரு பின்னணயில் அவர்கள் தேர்தலில் குதிக்கும் போது யாருடைய கருவிகள் அவர்கள்? என்ற சந்தேகங்கள் எழுந்தன.

தமிழினி தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட காலகட்டத்திலும் இவ்வாறாக ஊகங்கள் மேலெழுந்தன. அவர் அரசுதரப்புப் பிரதிநிதியாக தேர்தலில் இறங்கப்போவதாக செய்திகளும் வதந்திகளும் பரவின. அண்மையில் அவர் நோயுற்று இறக்கும்வரை அந்த வதந்திகளும், பழிச்சொற்களும் அவரைத் துரத்திக்கொண்டுவந்தன. இப்படிப் பார்;;த்தால் அவர் தன்மீது சுமத்தப்பட்ட எல்லாக் குற்றச்சாட்டுகளையும், பழிகளையும், அவதூறுகளையும் இறந்து கடந்துவிட்டார் எனலாமா?

ஆனால் அவரைப்போன்ற ஆயிரக்கணக்கான முன்னாள் இயக்கத்தவர்கள் தம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளையும் அவதூறுகளையும் வாழ்ந்தே கடக்கவேண்டியவர்களாகக் காணப்படுகிறார்கள்.

இந்த இடத்தில் இக்கட்டுரையானது சில முக்கிய கேள்விகளைக் கேட்க விரும்புகிறது.

தடுப்பிலிருந்து வந்தவர்களை விசாரணைக்கூண்டில் ஏற்றுபவர்கள் யார்? அல்லது இந்தக்கேள்வியைச் சற்று வளம் மாற்றி மேலும் கூராகக் கேட்கலாம். தடுப்பிலிருந்து வந்தவர்களை நிறுக்கக்கூடிய தகுதி யாருக்குண்டு?

அவர்கள் சாகாமல் உயிர்தப்பி வந்தது ஒரு குற்றமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் அவர்களை நோக்கிக் கேள்வி கேட்பவர்கள் எப்படி சாகாமல் தப்பினார்கள்? போர்க்களத்திலிருந்து ஏதோ ஒருவிதத்தில் முந்தித்தப்பியதனால் தான் அவர்கள் இப்பொழுது பத்திரமாக இருக்கிறார்கள். முந்தித்தப்பினவர்கள் கடைசியாகத் தப்பியவர்களைக் கேள்வி கேட்கிறார்கள். முந்தித்தப்பியவர்கள் நீதிபதிகளாகிய போது கடைசியாகத் தப்பியவர்கள் குற்றவாளிகளாகிவிட்டார்கள். எனவே இயக்க மரபைப் பின்பற்றி ஏன் சாகவில்லை என்று கேட்பதற்கு இப்பொழுது உயிருடன் இருப்பவர்களில் யாருக்குத் தகுதி உண்டு?

அப்படிக்கேட்கக்கூடிய தகுதி வீர சுவர்க்கத்தில் நிறுவப்படும் ஒரு நீதிமன்றத்திற்கு மட்டும்தான் இருக்க முடியும். சரணடையா மரபைப் பின்பற்றி உயிர்துறந்தவர்களும், சண்டையிட்டு உயிர் நீத்தவர்களும் தான் இப்பொழுது தடுப்பிலிருந்து வந்தவர்களை நோக்கி ஏன் சாகவில்லை? என்று கேட்க முடியும். பார்வையாளர்களாக, அனுதாபிகளாக, ரசிகர்களாக, குருட்டு விசுவாசிகளாகக் காணப்படும் முந்தித்தப்பியவர்கள்  கடைசியாகத் தப்பி வந்தவர்களை நோக்கி ஏன் சாகவில்லை என்று கேட்கலாமா?

ஆனால் அப்படிக் கேட்கிறார்கள். தடுப்பிலிருந்து வந்தவர்கள் ஒரு புனித மரபை மீறிய குற்றத்திற்காக கூனிக்குறுகி நிற்கிறார்கள். ஒருபுறம் அவர்களைத் தடுத்து வைத்திருந்தவர்கள் அவர்களைச் சதா பின்தொடர்கிறார்கள். இன்னொருபுறம் அவர்களைத் தூக்கிக்கொண்டாடிய சமூகத்தின் ஒரு பகுதியே கையில் தராசோடு நிற்கிறது.

தடுப்பிலிருந்து வந்தவர்களையும், இறுதிக்கட்டப் போரிற்குப் பின் வன்னியிலிருந்து வந்தவர்களையும் கேள்வி கேட்கும் எல்லோரும் முதலில் தங்களைத் தாமே ஒரு கேள்வியைக் கேட்டுக்கொள்ள வேண்டும். நாங்கள் எல்லோரும் சாகாமல் தப்பியது எப்படி? யாரோ பெற்ற பிள்ளைகளை தியாகிகளாக்கியதால் தானே? சிறுதொகைத் தியாகிகளையும், பெருந்தொகைப் பார்வையாளர்களையும் வைத்துக்கொண்டு நடாத்தப்பட்ட ஒரு போராட்டமே தமிழர்களின் ஆயுதப்போராட்டமாகும். யாருடையதோ பிள்ளை சாக, யாருடையதோ பிள்ளை கையைக் காலைக் கொடுக்க தங்களுடைய பிள்ளைகளைப் பொத்திப் பொத்திப் பாதுகாத்தவர்களே அதிகம். போராட்டத்தை ஏதோ ஒரு குத்தகை விவகாரத்தைப் போலக் கருதி ஒரு கொஞ்சம் வீரர்களிடமும், ஒரு கொஞ்சம் தியாகிகளிடமும் அதைக் குத்தகைக்குக் கொடுத்துவிட்டு அவரவர் தங்களுக்குரிய சௌகரிய வலையத்திற்குள் பத்திரமாக இருந்துவிட்டார்கள். 1980களில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை நடுத்தர வர்க்கத் தமிழர்கள் “கொம்பனி” என்று அழைத்ததை இங்கு நினைவு கூறலாம். இவ்வாறான ஒரு பார்வையாளர் மனோநிலையில் இருந்து கொண்டு தடுப்பால் வந்தவர்களை நிறுப்பவர்கள் மீதே இக்கட்டுரை கேள்விகளை எழுப்புகிறது.

தடுப்பிலிருந்து வந்தவர்களில் ஒரு பகுதியினரை அவர்களைத் தடுப்பில் வைத்திருந்தவர்கள் கையாள முடியும் என்பதை இக்கட்டுரை ஏற்றுக்கௌ;கிறது.ஆனால் முந்தித்தப்பினவர்கள் பிந்தித் தப்பியவர்களின் விசுவாசத்தை நிறுக்க முற்படுவதைத்தான் இக்கட்டுரை கேள்வி கேடகிறது.;

2009 மே 18க்குப் பின் ஈழத்தமிழர்கள் ஒருவர் மற்றவரை சந்தேகத்தோடு பார்க்கும் போக்கு அதிகரித்து விட்டது. யார் யாருடைய ஆளாக இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எல்லோரையும் பிடித்து ஆட்டுகிறது. ஆயுதப்போராட்டம் நிகழ்ந்தபோது ஒருவர் தனது விசுவாசத்தை நிரூபிப்பதற்கு போர்க்களம் இருந்து. போர்க்களத்தில் ஒருவர் தனது விசுவாசத்தை நேரடியாகவும், உடனடியாகவும் நிரூபிக்க முடிந்தது. ஆனால் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்தபின் ஒருவர் தனது விசுவாசத்தை அல்லது இலட்சியப்பற்றை உடனடியாக நிரூபிப்பதற்கு உரியகளம் எதுவும் கிடையாது. ஆயுதப்போராட்டம் அல்லாத ஒரு போராட்டக்களத்தில் ஒருவர் வாழ்ந்துதான் எதையும் நிரூபிக்கவேண்டியிருக்கும். ஆயுதப்போராட்டம் உருவாக்கிய அளவுகோள்களை வைத்துக்கொண்டு அதற்குப்பின்னரான ஒரு காலகட்டத்தை அளக்க முடியாது. ஆயுதப்போராட்டம் உருவாக்கிய விழுமியங்களை மாறா முற்கற்பிதங்களாக வைத்துக்கொண்டு ஆயுதமோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான ஒரு சமூகத்தை அளக்க முடியாது.

ஆயுதப்போராட்டக் காலகட்டத்தில் கூட 80களில் துரோகிகளாக முத்திரை குத்தப்பட்டவர்கள் 1990களிலோ அல்லது 2000 மாவது ஆண்டுகளிலோ மாமனிதர்களாகப் போற்றப்பட்டதை இங்கு சுட்டிக்காட்டலாம். 1980களின் இறுதியில் துரோகிகளாகச் சித்தரிக்கப்பட்ட சிலர் பிந்திய தசாப்தங்களில் தம்மீது ஒட்டப்பட்ட முத்திரையை வாழ்ந்து கடந்தார்கள். சிலர் இறந்து கடந்தார்கள். எந்த இயக்கம் அவர்களைத் துரோகி என்று சொல்லி சுடத்திரிந்ததோ அதே இயக்கம் அவர்களுக்கு மாமனிதர் விருதுகளையும் வழங்கியது. நேற்றைய துரோகி நாளைய தியாகியாகலாம். இன்றைய தியாகி நாளைய துரோகி ஆகலாம். மறைந்த கவிஞர் சு. வில்வரத்தினம் அடிக்கடி கூறுவார் தமிழில் துரோகி தியாகி ஆகிய இரண்டு வார்த்தைகளும் ஒத்திசையும் சொற்கள் என்று.

தமிழினியைப் போன்ற தடுப்பிலிருந்து வந்த பலருக்கும் இது பொருந்தும். அவர் தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட போது அவர்மீது அவதூறுகளை அள்ளி வீசிய ஊடகங்களைச் சேர்ந்தவர்களே அவருடைய இறுதி நிகழ்வில் அவருக்குப் புகழஞ்சலி செலுத்தினார்கள். அவர் தடுப்பிலிருந்து வந்தபொழுது தேர்தலில் இறங்கக்கூடும் என்று ஊகங்கள் கிளப்பப்பட்டன. அந்த ஊகங்களை உற்பத்தி செய்த அல்லது அந்த ஊகங்களை உருப்பெருக்கிய ஊடகங்கள் அவை தொடர்பில் தமிழினி என்ன கூறக்கூடும் என்பதைப் பிரசுரித்திருக்கவில்லை. தமிழினியும் அப்பொழுது வாய்திறக்கக்கூடிய சூழல் இருக்கவில்லை. எனவே தன்னுடைய சொந்த அபிப்பிராயங்களை வெளிப்படையாகப் பேசமுடியாத ஓரு சூழலின் கைதியாக இருந்த ஒருவரைக் குறித்து செய்திகளையும், ஊகங்களையும் பிரசுரித்த ஊடகங்கள்தான் அவற்றைப் பிரசுரிக்க முன்பு யோசித்திருக்க வேண்டும். ஊடகங்கள் மட்டுமல்ல அரசியல்வாதிகளும், புத்திஜீவிகளும், மூத்த படைப்பாளிகளும், செயற்பாட்டாளர்களும், மதகுருக்களும் சமூகத்தின் வெவ்வேறு மட்டங்களில் அபிப்பிராயங்களை உருவாக்க வல்ல பலரும் கடந்த ஆறு ஆண்டுகளாக இவ்வாறு பொறுப்பின்றிக் கருத்துத்தெரிவித்து வருகின்றார்கள். தம்மைத் தடுப்பில் வைத்திருந்தவர்களின் கண்காணிப்பு ஒருபுறம் தமது சொந்த சமூகத்தில் தம்மைநோக்கி வீசப்படும் குற்றச்சாட்டுக்கள் இன்னொருபுறம். இரண்டுக்குமிடையே கூனிக்குறுகி நிற்கிறார்கள் தடுப்பிலிருந்து வந்தவர்கள்.

தமிழினி இறக்கும்வரையிலும் இவ்வாறான நிலைமைகளை எதிர்கொள்ளவேண்டியிருந்தது. ஆனால் அவர் இறந்த பின் அவரைப் பழித்துரைத்த தரப்புக்களே அவரைப் போற்றும் ஒரு நிலை தோன்றியது. வடமாகாணசபையின் முதலமைச்சர் அவருக்கு அஞ்சலி செலுத்தி ஓர் அறிக்கையும் விட்டிருந்தார். புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் அவருக்கு அஞ்சலிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதாவது சாகாமல் சரணடைந்ததிலிருந்து தொடங்கி அவரைத் துரத்திக்கொண்டு வந்த அவதூறுகளையும், பழிச்சொற்களையும் அவர் இறந்துதான் கடக்கவேண்டியிருந்தது  என்று எடுத்துக்கொள்ளலாமா? நந்திக்கடற்கரையில் அவர் சயனைற் அருந்தவில்லை. தனது இயக்கத்தின் புனித மரபொன்றை அவர் பின்பற்றவில்லை. ஆனால் ஆறரை ஆண்டுகளின் பின்னரும் அவர் தனது இறப்பின் மூலம் தான் தன்னை எண்பிக்கவேண்டி இருந்ததா?
நன்றி-முகவரி-கனடா
29.10.2015

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *