நடந்து முடிந்த பொதுத்தேர்தலோடு இச்சிறிய தீவு அமெரிக்க மற்றும் இந்தியப் பங்காளிகளுக்கு மிக விசாலமாகத் திறக்கப்பட்டுவிட்டது.
இவ்வாண்டு ஜனவரி 8 ஆம்திகதியுடன் அது ஓரளவுக்குத் திறக்கக்கப்பட்டிருந்தாலும் அதில் நிச்சயமின்மைகள் காணப்பட்டன. தோற்றகடிக்கப்பட்ட பின்னரும் மகிந்த பலமாகக் காணப்பட்டார். ஆட்சி மாற்றத்திற்குத் தலையிடி கொடுக்கக்கூடிய அளவிற்கு அவர் பலமாகக் காணப்பட்டார்.
ஆனால் இப்பொழுது நிலமை முன்னரை விட ஸ்திரமாகிவிட்டது. மகிந்த இப்பொழுதும் பலமாகத்தான் உள்ளார். ஆனால் அவர் இனி அதிகாரத்திற்கு வருவதென்றாhல் 5 ஆண்டுகளுக்காவது காத்திருக்க வேண்டியிருக்கும். எனவே இத்தகைய பொருள்படக்கூறின் சிங்கள மக்களின் அரசியற் பரப்பானது மிகப் பிரகாசமான வழிகளில் மேற்கிற்கும், இந்தியாவிற்கும் அகலத் திறக்கப்பட்டுவிட்டது.
2009 மே மாதம் வரையிலும் தமிழ் அரசியலானது வெளித்தலையீடுகளுக்கு அதிகளவு மூடப்பட்டிருந்தது.ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்ததும் அது திறக்கப்பட்டு விட்டது. ஆனால், ஆயுத மோதலை முடிவுக்குக் கொண்டு வந்த மகிந்த சகோதரர்கள் யுத்த வெற்றி வாதத்திற்கு தலைமை தாங்கத் தொடங்கினர். யுத்த வெற்றி வாதத்திற்கு தலைமை தாங்கிய ஒரு அரசாங்கமானது மேற்கு நாடுகளைவிட சீனாவையே அதிகம் நெருங்கிச் செல்ல முடிந்தது.
மேற்கு நாடுகளில் பலமடைந்து காணப்பட்ட தமிழ் டயஸ்போறாவும் இதற்கொரு காரணம் எனவே ராஜபக்ச அரசாங்கமானது ஒப்பீட்டளவில் கூடுதலான பட்சம் சீனாவை நோக்கியே வளைந்தது.
அந்த அரசாங்கம் மேற்கிற்கும் குறிப்பாக இந்தியாவுக்கும் கதவுகளைத் திறந்து விட்டது தான் ஆனால் அவை வெறும் இராஜியக் கதவுகள் தான். இதயக் கதவுகள் சீனாவுக்கே திறக்கப்பட்டிருந்தன. மேற்குடனும் இந்தியாவுடனும் உறவாடியபோதும், சீனாவுடனான காதலைக் கைவிட ராஜபக்சக்கள் தயாராக இருக்கவில்லை.
ஆனால், ஆட்சி மாற்றத்தோடு சீன விரிவாக்கமானது ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. திறந்த சந்தைப் பொருளாதார கட்டமைப்புக்கு ஊடாக சீனா செய்த முதலீடுகள் தொடர்ந்தும் இருக்கும் தான் ஏனெனில் பொருளாதார ஒழுக்கத்தைப் பொறுத்தவரை இப்பொழுது உலகம் ஒரு அலகுதான். ஆனால் ராஜ பக்சக்களின் ஆட்சிக் காலத்தில் இச் சிறு தீவில் சீனா அனுபவித்து வந்த உரித்துடமை இப்பொழுது இல்லை.
இத்தகைய பொருள் படக்கூறின் இச் சிறு தீவானது ஒப்பீட்டளவில் விசாலமான வழிகளில் அமெரிக்க இந்தியப் பங்காளிகளுக்குத் திறக்கப்பட்டிருக்கிறது.
தமிழ் அரசியல் பரப்பானது 2009 மே மாதத்துடன் வெளித்தரப்புக்களுக்குத் திறக்கப்பட்டு விட்டது. எனினும் நடந்துமுடிந்த தேர்தலோடு மிஞ்சியிருந்த சிறு தடைகளும் அகற்றப்பட்டுவிட்டன. தனது அரசியல் இலக்குகளில் விட்டுக்கொடுப்பற்ற மக்கள் முன்னணி தோற்கடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கூட்டமைப்புக்கு மாற்றாக இப்போதைக்கு எந்த ஒரு கட்சியும் எழுச்சி பெற முடியவில்லை என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இது முதலாவது.
இரண்டாவது – சுமந்திரன் பெற்ற வெற்றி. இதன் மூலம் சம்பந்தனின் அரசியல் வாரிசு மக்கள் ஆணையைப் பெற்றிருக்கிறார்.
மூன்றாவது – சுரேஸ் பெற்ற தோல்வி. இதன் மூலம் சம்பந்தனைக் கேள்வி கேட்கக்கூடிய பங்காளித்; தலைவர் பலவீனமடைந்திருக்கிறார்.
நான்காவது – இம்முறை தேர்தல் பரப்புரைகளில் துரோகிகளாக சித்தரிக்கப்பட்ட அனேகர் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
எனவே எல்லாவற்றையும் கூட்டிக் கழித்து பார்த்தால் சம்பந்தனின் வழிகள் யாவும் இலகுவாக்கப்பட்டிருக்கின்றன. அவர் எதைச் செய்யத் திட்டமிட்டிருக்கிறாரோ அதற்கு மக்கள் ஆணை கிடைத்திருக்கிறது. அதாவது தமிழ் அரசியல் பரப்பு முற்றாகத் திறக்கப்பட்டிருக்கிறது.
எனவே இப்போதுள்ள நிலைமைகளை தொகுத்து மதிப்பிட்டால் ஒரு விடயம் தெளிவாகப் புலப்படும். ஆட்சி மாற்றத்தை, அதன் அடுத்தடுத்த கட்டங்களுக்கு பலப்படுத்துவது என்றால் ஒரே ஒரு தரப்பை சமாளித்தால் போதுமானதாக இருக்கும். அது ராஜபக்ச தலைமையிலான சிங்கள பௌத்த கடும் போக்குவாதிகள் தான்.
தமிழ்த் தரப்பில் அவ்வாறான சக்திகள் எதுவும் பலமானதாக இல்லை. தமிழ் டயஸ்போறாவானது ஐக்கியம் இன்றிச் சிதறிக் காணப்படுகிறது அதில் ஒரு பகுதியை மேற்கு நாடுகள் ஏற்கெனவே வெற்றிகரமாகக் கையாளத் தொடங்கி விட்டன.
டயஸ்போறாவுக்கும் தாயகத்துக்கும் இடையிலான இடைவெளி குறையக்குறைய தாயகத்தை நோக்கிய வேட்கையின் தீவிரமும் குறையும். எனவே டயஸ் போறாவில் உள்ள நிதிப் பலமுடைய தரப்புக்களை இலங்கைத் தீவில் முதலீடு செய்யுமாறு தூண்டுவதன் மூலமும், முன்னைய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டிருக்கும் டயஸ்போறா அமைப்புக்கள் சிலவற்றின் மீதான தடையை அகற்றுவதன் மூலமும் அப்படியொரு நிலைமையை ஊக்குவிக்க முடியும்.
ஏற்கெனவே இது தொடர்பான பேச்சுக்கள் நடைபெற்றதாகத் தகவல்கள் உண்டு. எனவே தமிழத்; தேசியத்தின் கூர் முனைபோலக் காணப்பட்ட டயஸ்போறாவை எப்படி மிதப்படுத்துவது என்பது பற்றி இனித் தீவிரமாகச் சிந்திக்கப்படும்.
அதே சமயம் தாயகத்தில் மைத்திரி உருவாக்கியிருக்கும் ஒப்பீட்டளவில் அதிகரித்த சிவில் வெளியை ரணில் மேலும் பலப்படுத்தவே முயற்சிப்பார்;.
குறைந்த பட்சம் அப்படியொரு தோற்றத்தையாவது மேற்கு நாடுகளுக்குக் காட்ட வேண்டி இருக்கம்.
இவ்வாறு பெருப்பிக்கப்படும் தமிழ் சிவில் வெளியை தமது அரசியல் இலக்குகளில் விட்டுக்கொடுப்பற்ற தரப்புக்கள் கைப்பற்றுவதை மேற்கத்தைய – இந்தியப் பங்காளிகளும் விரும்ப மாட்டார்கள். மைத்திரியும் ரணிலும் விரும்ப மாட்டார்கள். எனவே அதிகரித்துவரும் சிவில் வெளியை செயற்பாட்டு இயக்கங்கள் கையாள முன்பு அதை ஐ.என்.ஜி.ஓ. க்கள் மூலம் இட்டு நிரப்பும் வேலைத் திட்டங்கள் இனி முடுக்கிவிடப்படும.; மேற்கு நாடுகளின் அனுசரணையுடன் உருவாக்கப்படும் சிவில் குழுக்களின் மூலமும் மேற்படி செயற்பாட்டு வெளி இட்டு நிரப்பப்படும். மன்னிப்புப் பற்றியும் இன நல்லிணக்கம் பற்றியும் தமிழ் மக்களுக்கு வகுப்பெடுப்பதற்கு புதிது புதிதாக ஆட்கள் தோன்றி வருவார்கள்.
இப்படியாக தமிழ் அரசியல் தரப்பில் ஒரு புறம் டயஸ்போறாவை மிதப்படுத்தும் அதே சமயம் இன்னொரு புறம் உருவாகக்கூடிய சிவில் வெளியை இலட்சியப் பிடிப்பும் அர்ப்பணிப்பும் மிக்க செயற்பாட்டு இயக்கங்கள் கைப்பற்றுவதைத் தடுப்பதன் மூலமும் மாற்றத்தின் வலுச்சமநிலையை தொடர்ந்தும் ஸ்திரமாகப் பேணலாமா என்று அமெரிக்க இந்தியப் பங்காளிகள் சிந்திப்பார்கள்.
அதே சமயம் தென்னிலங்கயில் ராஜ பக்ச தலைமையிலான சிங்கள பௌத்த கடும்போக்கு வாதிகளை எப்படிக் கட்டுக்குள் வைத்திருப்பது?
ஒரு புறம் ராஜபக்ச குடும்பத்து உறுப்பினர்கள் மீதான எல்லாவித வழக்குகளும் விசாரணைகளும் முடுக்கிவிடப்படும்.இதன் மூலம் அவர்களை ஒரு வித முற்றுகைக்குள் முடக்கி வைத்திருக்கலாம்.
இன்னொரு புறம் ராஜபக்சகள் எந்தெந்த உணர்ச்சிகரமான விடயங்களில் சிங்களக் கடும்போக்காளர்களைத் துண்டக்கூடுமோ அந்தந்த விடயங்களில் சிங்களக் கடும்போக்காளர்களுக்கு நோகாமல் காய்களை நகர்த்தலாம்.
இரண்டு பிரதான உணர்;சிகரமான விடயப் பரப்புக்களை ராஜபக்சகள் அரசாங்கத்துக்கு எதிராகத் திருப்பி விட முடியும். முதலாவது போர்க் குற்ற விசாரணைகள.; இரண்டாவது இனப்பிரச்சினைக்கான தீர்வு.
இதில் போர்க்குற்ற விசாரனைகள் பொறுத்து மேற்கு நாடுகள் தம்மீது அழுத்தப் பிரயோக உத்தியாகவே அவற்றைப் பயன்படுத்துகின்றன என்பது ராஜபக்சகளுக்கும் நன்கு தெரியும் இலங்கைத் தீவில் போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் அணைத்துலக விசாரணை ஒன்றை நடாத்தி அதன்மூலம் குற்றவாளிகiளைத் தண்டிக்கத் தேவையான அரசியல் திடசங்கற்பம் மேற்கு நாடுகளிடையே இப்போதைக்கு இல்லை என்பது வெளிப்படையானது. எனவே தண்டிக்கும் விசாரணைப் பொறிமுறைக்குப் பதிலாக மன்னிக்கும் ஒரு விசாரணைப் பொறிமுறை அல்லது கண்துடைப்பு விசாரணைப் பொறிமுறை அல்லது நல்லிணக்கப் பொறி முறை ஒன்றைத்தான் அமெரிக்க – இந்திய – மைத்திரி – ரணில் கூட்டு ஏற்பாடு செய்யும்.
சிங்கள பௌத்த மேலான்மை வாதத்தின் மீது கட்டியெழுப்பப்ட்டிருக்கும் இலங்கைத் தீவின் அரசுக்கட்டமைப்பானது அதன் வெற்றி நாயகர்களை ஒருபோதும் தண்டிக்கவிடாது.
அதாவது உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை எனப்படுவது சிங்களத் தலைவர்களின் தெரிவு மட்டுமல்ல அது அமெரிக்க இந்தியப் பங்காளிகளின் தெரிவும் தான்
இதனால் தமக்கு பெரும் பாதிப்பு வராது என்பது ராஜபக்சக்களுக்கும் நன்கு தெரியும.; இருந்தாலும் சிங்கள வெகுஜனத்தை வைத்து தமக்கொரு கவசத்தை உருவாக்கிக் கொள்வதற்கும் தமது அரசியல் எதிரிகளை எதிர் கொள்வதற்கும் இந்த விடயத்தை ஒரு கருவியாக அவர்கள் தொடர்ச்சியாக வெற்றிகரமாகக் கையாண்டு வருகிறார்கள்.
எனவே அவர்கள் இந்த விவகாரத்தை உணர்ச்சிகளைத் தூண்டும் ஒரு கருவியாகக் கையாளக்கூடாது என்றால் அதற்கு இப்பொழுதுள்ள ஒரே வழி உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைதான். அதற்கு கூட்டமைப்பின் உத்தியோக பூர்வ சம்மதத்தைப் பெற்றால் சரி.
மற்றது, இனப்பிரச்சினைக்கான தீர்வு. இது விடடயத்தில் ராஜ பக்சக்களும் ஹெல உறுமயவும்,ஜே.வி.பி.யும் எதிர்ப்புக் காட்டுவார்கள் அரசாங்கத்துக்குள்னிருந்தும் எதிர்ப்புக் கிளம்பும்.
வட – கிழக்கை இணைக்க முயற்சித்தால் முஸ்லிம்களும் எதிர்ப்பார்கள். எனவே எல்லா விதமான எதிர்ப்புக்களையும் சமாளிப்பதென்றால் உடனடியாக இறுதித் தீர்வைப்பற்றி வெளிப்படையாக உரையாட முடியாது. படிப்படியாக நகர்வதைப் போன்ற மாயத் தோற்றத்தை எற்படுத்தவேண்டியிருக்கம். அல்லது விக்டன் ஐவன் கூறுவதைப் போல நொண்டி நொண்டித்தான் முன்னேற வேண்டியிருக்கும்.
நொண்டாமல் முன்னேறுவது என்றால் அதற்கு தமிழர்களையே பலியாடுகளாக்க வேண்டியிருக்கும். ஏனெனில் இப்பொழுது தமிழ் மக்கள் மத்தியில் கடும்போக்காளர்கள் அல்லது தமது இலட்சியத்தில் விட்டுக்கொடுப்பற்ற சக்திகள் எவையும் பலமாக இல்லை.
எனவே சிங்களக் கடும்போக்காளர்களை சமாதானப்படுத்துவதற்காக தமிழ் மக்களை பலியிடுவதன் மூலம் தான் மாற்றத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிகளைப் பாதுகாக்க முடியும்.
ஆனால் சம்பந்தன் வாக்குக் கேட்கும் போது கூறினார் அடுத்த ஆண்டு தாங்கள் பயணத்தை முடிக்கப்போவதாக. நொண்டி நொண்டி நடந்து அடுத்த ஆண்டுக்குள் பயணத்தை முடிக்க முடியுமா? அல்லது தமிழர்களின் நலன்களைப் பலியிட்டு நொண்டாமல் நடந்து பயணத்தை முடிப்பதா?
01.09.2015
யாழ்ப்பாணம்