இது டயாஸ்பொறக்களின் காலம். அதாவது புலம்பெயர்ந்த சமூகங்களின் காலம். அல்லது நாடு கடந்து ஒரு தேசமாக அல்லது தேசத்துக்கு வெளியே ஓர் உளவியல் தேசமாக வாழும் மக்களின் காலம். புலப்பெயர்ச்சி என்பது பொதுவாக இரண்டு காரணங்களால் ஏற்படுகிறது. முதலாவது போர். இரண்டாவது பொருளாதார காரணங்கள். ஈழத்தமிழர்களின் புலப் பெயற்சி பிரதானமாக இரண்டு அலைகளை கொண்டது. முதலாவது 1983க்கு முந்தியது. பெருமளவிற்கு கல்வி மற்றும் பொருளாதார காரணங்களுக்கானது. இரண்டாவது 83 ஜூலைக்கு பின்னரானது. அது முழுக்க முழுக்க போரின் விளைவு. எனினும் அதற்குள் போரை ஒரு சாட்டாக வைத்துக்கொண்டு பொருளாதார காரணங்களுக்காக புலம் பெயர்ந்தவர்களும் உண்டு.
உலகில் இன்று மிகக் கவர்ச்சியான டயாஸ்பொறக்களில் ஒன்றாக தமிழ் டயாஸ்பொற பார்க்கப்படுகிறது. மனிதகுலத்தின் மீது அதிக தாக்கத்தை செலுத்தியது யூத டயாஸ்பொறதான்.வரலாற்றில் மிகநீண்ட காலத்துக்குரியதும் யூத டயாஸ்பொறதான். டயாஸ்பொற என்ற வார்த்தை யூதர்களுக்குத்தான் அதிகம் பயன்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான ஒரு புலப் பெயர்ச்சி அது. அதன் விளைவாக யூதர்கள் அதிகமதிகம் ஐரோப்பிய மயப்பட்டார்கள். யூத டயஸ்போறா என்பது கிறிஸ்துவுக்கு முன்னரே தொடங்கியது இரண்டாம் உலக மகா யுத்தம் வரையிலும் நீடித்திருந்தது. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அதாவது இரண்டு மில்லீனியங்களுக்கும் மேலாக யூதர்கள் புலம்பெயர்ந்தார்கள்.ஆசியாவில் தோன்றிய யூதர்கள் கடந்த இரண்டாயிரம் ஆண்டு காலப்பகுதிக்குள் அதிகம் ஐரோப்பிய மயப்பட்டார்கள். இவ்வாறு யூதர்கள் ஐரோப்பிய மயபட்டதன் விளைவுகள்தான் அணுக்குண்டு; மார்க்சிசம்; சிக்மன் பிராய்டின் உளவியல் கோட்பாடு முதற்கொண்டு உலகின் ஒரு தொகுதி அறிவியல் சாதனைகள் ஆகும். இந்த அர்த்தத்தில்தான் கடந்த நூற்றாண்டை யூதர்களின் நூற்றாண்டு என்று வரலாற்றாசிரியர்கள் வர்ணிப்பதுண்டு.
ஒரு டயாஸ்பொற தனது தாய் நிலத்தில் ஒரு தேசத்தை கட்டியெழுப்ப முடியும் என்பதனை யூதர்கள் கடந்த நூற்றாண்டில் நிரூபித்தார்கள்.யூத டயாஸ்பொறவிலிருந்து தொடங்கி மனிதகுல வரலாற்றில் டயஸ்போறாக்களின் காலம் என்பது துலக்கமான விதங்களில் மேலெழுந்துவிட்டது. ஆசிய ஆப்பிரிக்க லத்தீன் அமெரிக்க நாடுகளை பொறுத்த வரையிலும் பல நாடுகளில் டயஸ்போரா சமுகங்கள் தத்தமது தாயகங்களில் அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் செல்வாக்கு செலுத்தும் ஒரு போக்கு வளர்ச்சியுற்று வருவதை காணலாம்.ஈழத்தமிழர்களின் மத்தியிலும் தாயகத்தில் அரசியல்,சமூக,கலை பண்பாட்டுச் செயற்பாடுகளின்மீது டயாஸ்பொறவின் தாக்கம் நிர்ணயகரமானதாகக் காணப்படுகிறது.
குறிப்பாக 2009க்கு பின் தமிழ் அரசியலின் மையம் தமிழ் டயாஸ்பொறவா? என்று மயங்கும் அளவுக்கு நிலைமைகள் வளர்ந்துவிட்டன. போரில் தோற்கடிக்கப்பட்ட பின் தாயகத்தில் வாழும் தமிழர்களுக்கு உளவியல் ரீதியாகவும் நிதி ரீதியாகவும் தெம்பூட்டியது தமிழ் டயாஸ்பொறதான். 2009க்கு பின் தோல்வியை ஒப்புக் கொள்ளாத தமிழ் கூட்டு உளவியலின் கூர்முனையாக தமிழ் டயாஸ்பொற தன்னைத் தொடர்ச்சியாக முன்னிறுத்தி வருகிறது. மிகச் சில தசாப்தங்களுக்குள் நிகழ்ந்த ஒரு வளர்ச்சி இது.
இந்த வளர்ச்சியை விளங்கிக் கொள்வதற்கு இங்கே ஒரு உதாரணத்தைக் கூறலாம். 83 ஜூலைக்கு முன்பு பிரித்தானிய விமான நிலையம் ஒன்றில் நடந்த சம்பவம் அது. பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்படுவதற்காக ஒரு தொகுதி ஈழத்தமிழர்கள் விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்கள். தாங்கள் நாடு கடத்தப்படுவதைத்த தடுப்பதற்காக அவர்கள் திடீரெண்டு விமானநிலையத்தில் தங்களுடைய ஆடைகளை அகற்றி அரை நிர்வாணமாக நின்று தமது எதிர்ப்பை காட்டினார்கள். அதன் விளைவாக அவர்களை நாடு கடத்தும் முயற்சி நிறுத்தப்பட்டது. ஆனால் அப்படி ஒரு காட்சியை இனி எந்த ஒரு அமெரிக்க அல்லது ஐரோப்பிய விமான நிலையத்திலும் கற்பனை செய்ய முடியாது. ஏனென்றால் அன்று பிரித்தானியாவின் விமான நிலையத்தில் நிர்வாணமாக நின்றவர்களுக்கு தங்களை மற்றவர்கள் பார்ப்பார்கள் என்ற கூச்சம் இருக்கவில்லை. அதாவது அங்கே அவர்களுக்கு ஒரு சமூக இருப்போ கலாச்சார இருப்போ இருக்கவில்லை. ஒரு சமூக அல்லது கலாச்சார இருப்பு அல்லது அந்தஸ்து இருந்தால்தான் வெட்கம் வரும். மற்றவர்கள் தங்களை பார்ப்பார்கள் மற்றவர்கள் தங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற வெட்கம் ஏற்படும். ஆனால் அன்றைக்கு நிர்வாணமாக நின்ற தமிழர்கள் உதிரிகளாக நின்றார்கள். ஒரு சமூகமாக நிற்கவில்லை.
ஆனால் இன்றைக்கு ஈழத் தமிழர்களின் நிலை அப்படியல்ல. அப்படி எந்த ஒரு விமான நிலையத்திலும் நிர்வாணமாக நிற்க முடியாது. ஏனென்றால் ஒரு புலம் பெயர் தமிழர் அவ்வாறு நின்றால் அதை அவருடைய அடுத்த தலைமுறை அனுமதிக்காது.அல்லது அந்தப் பிள்ளையின் பிள்ளை அனுமதிக்காது. அந்தப்பிள்ளைகளுக்கு அங்கே ஒரு சமூக அடையாளமும் அந்தஸ்தும் உண்டு. அவர்கள் அந்த சமூகத்துக்குரியவர்கள். உன்னுடைய பெற்றோர் அல்லது உறவினர்கள் இப்படி நிர்வாணமாக நிற்கிறார்கள் என்று நாளைக்கு அவர்களுடைய பள்ளிக்கூடத்திலோ அல்லது வேலைத்தளங்களிலோ அந்தப் பிள்ளைகளின் நண்பர்கள் சொல்லிக்காட்டுவார்கள்.மேலும்,பெரும்பாலான விமான நிலையங்களில் ஈழத்தமிழர்கள் ஏதோ ஒரு வேலை பார்க்கிறார்கள். தவிர அந்த விமான நிலையங்களில் வந்து போகும் பயணிகளில் யாரோ ஒரு அல்லது பல முதல் தலைமுறை அல்லது இரண்டாம் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்தவர் இருப்பார்.
அதாவது ஈழத்தமிழர்கள் இப்பொழுது நாட்டுக்கு வெளியே ஒரு சமூகமாக,தேசமாக பரந்து வாழ்கிறார்கள். புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் தேர்தலில் நிற்கிறார்கள்.நாடாளுமன்ற உறுப்பினர்களாக வருகிறார்கள். உள்ளூராட்சி சபை உறுப்பினர்களாக வருகிறார்கள். உள்ளூர் பிரமுகர்களாக வந்துவிட்டார்கள். உலகப் பிரபலங்கள் ஆகவும் வந்துவிட்டார்கள். இதற்கு ஆகப் பிந்திய ஓர் உதாரணத்தை இங்கு காட்டலாம். தமிழ்நாட்டின் திரைத்துறை தலைநகரமாகிய கோடம்பாக்கத்தில் அண்மையில் நடந்த ஒரு சம்பவம். நகைச்சுவை நடிகர் வடிவேலு இயக்குனர் ஒருவரோடு ஏற்பட்ட முரண்பாடு காரணமாக நடிப்பதில் இருந்து விலகி இருந்தார். அந்தப் பிணக்கை தீர்த்து வைத்தது ஒரு புலம்பெயர் பெரு வணிகர்தான் தமிழ் திரை உலகின் மீது புலம்பெயர் சமூகத்தின் செல்வாக்கை இது காட்டுகிறதா?
1990 க்குப் பின் தமிழ் டயஸ்போறாவானது ஈழ விடுதலைப் போரின் காசு காய்க்கும் மரமாக மாறியது.குறிப்பாக தமிழ்நாட்டுக்கும் ஆயுதப் போராட்டத்துக்கு இடையே சட்டப் பூட்டு ஏற்பட்டபொழுது ஆயுதப்போராட்டம் ஐரோப்பாவை நோக்கி நிச்சயமற்ற கடல் வழிகளின் ஊடாகத் திறக்கப்பட்டது. அதிலிருந்து அதிகரித்த அளவில் ஈழப்போராட்டம் மேற்குமயப்பட்டது. ஈழப்போராட்டத்தின் காசுகாய்க்கும் மரமாக தமிழ் டயாஸ்பொற காணப்பட்டது.இன்றும் தாயகத்திலுள்ள கட்சிகள் செயற்பாட்டாளர்களின் மீது ஏதோ ஒரு விதத்தில் தமிழ்டயாஸ்பொற தாக்கம் செலுத்துகிறது.
குறிப்பாக 2009க்குப்பின் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்து நீதிக்கான போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருவது தமிழ் டயாஸ்பொறதான். 2009க்கு பின் தாயகத்தில் காணப்பட்ட அச்சச்சூழல் காரணமாக தமிழ் டயாஸ்பொறவிடமே போராட்டத்தின் அஞ்சலோட்டக் கோல் ஒப்படைக்கப்பட்டதாக ஒரு தோற்றம் நிலவியது. குறிப்பாக ஜெனிவா மைய அரசியலில் மிகவும் வினைத்திறனோடு செயற்படுவது டயாஸ்பொறதான்.
இவ்வாறான ஒரு முக்கியத்துவத்தைக் கருதித்தான் கடந்த வாரம் இலங்கைத் தீவின் ஜனாதிபதி அமெரிக்காவில் வைத்து தமிழ்ச் டயாஸ்பொறவை நோக்கி அழைப்பு விடும் ஒரு நிலைமை தோன்றியிருக்கிறது. அன்மையில் ஐநா கூட்டத்தொடரில் உரையாற்றுவதற்காக சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அங்கே பொதுச்செயலர் செயலரை சந்தித்தபின் வெளியிட்ட கருத்துக்கள் அதைத்தான் நமக்கு உணர்த்துகின்றன. ஜனாதிபதி அமெரிக்காவில் நின்ற நாட்களுக்கு சற்று முன்பின்னாக நோர்வேயில் ஒரு தமிழ்ப்பெண்ணான ஹம்சாயினி நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருப்பதையம்,கனடாவில் ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஹரி ஆனந்தசங்கரி மீண்டும் தெரிவு செய்யப்பட்டிருப்பதையும் சுட்டிக் காட்ட வேண்டும்.
தமிழ் டயாஸ்பொற ஒரு தவிர்க்க முடியாத சக்தியாகவும் அழுத்தப் பிரயோக சக்தியாகவும் காசுகாய்க்கும் மரமாகவும் தாயகத்தில் கட்சி அரசியல் மற்றும் செயல்வாத நடவடிக்கைகளில் நிர்ணயகரமான செல்வாக்கைச் செலுத்தும் ஒரு சூழலில் உலகப் பேரரசு ஒன்றின் தலைநகரிலிருந்து ஜனாதிபதி அந்த அழைப்பை விடுத்திருக்கிறார்.டயாஸ்பொறவை கையாண்டால் நிலைமையை குறிப்பிடத்தக்க அளவுக்கு சமாளிக்கலாம் என்று ஒரு முடிவுக்கு அரசாங்கம் வந்துவிட்டதாகத் தெரிகிறது.
ஆனால் இந்த அரசாங்கம்தான் சில மாதங்களுக்கு முன்பு டயாஸ்பொற அமைப்புக்களையும் நபர்களையும் தடைசெய்தது.அவ்வாறு தடை செய்யப்பட்ட நபர்களும் அமைப்புகளும் ஏற்கனவே முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் தடை நீக்கப்பட்டவர்களே.அவர்களை தடையை நீக்கிய ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் மேற்கத்தைய நாடுகளுடன் இணைந்து தமிழ் டயாஸ்பொறவை வசப்படுத்த முயற்சித்தது.அதன்மூலம் தமிழ் டயாஸ்பொறவில் பிரிவினைகளையும் ஏற்படுத்தியது. ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களால் பிரித்தாளும் தந்திரம் மிக்க ஒருவராக பார்க்கப்படுகிறார்.அவர் தமிழ் டயாஸ்பொறவை குறிப்பிடத்தக்க அளவுக்குப் பிரித்தாண்டார்.அதன்மூலம் ஜெனிவாக் கூட்டத்தொடர்களில் புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகம் இரண்டுபட்டு நின்றது.இது ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஐநாவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் தமிழ் மக்களை கையாள்வதற்கான வழிகளை ஒப்பீட்டளவில் இலகுவாக்கி கொடுத்தது.
ஆனால் ராஜபக்சக்கள் மறுபடியும் ஆட்சிக்கு வந்தபின் அந்த அமைப்புகளையும் தனி நபர்களையும் மறுபடியும் தடை செய்தார்கள். எனினும் அவ்வாறு தடை செய்யப்பட்ட ஓர் அமைப்பின் தலைவரான கத்தோலிக்க மதகுரு இப்பொழுதும் யாழ்ப்பாணத்தின் தெருக்களில் லேடிஸ் சைக்கிளில் வழமைபோல நடமாடித் திரிகிறார். கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த புதிதில் தன்னை மூன்றில் இரண்டு தனிச் சிங்கள வாக்குகளால் வெற்றி பெற்ற ஓர் அரசாங்கமகவே கட்டிக்கொண்டது.ஆனால் ராஜபக்சக்களின் இரண்டாவது ஆட்சிக்காலத்தின் தொடக்கத்திலிருந்தே வைரஸ் அரங்கினுள் பிரவேசித்தது. இதனால் ஏற்கனவே சரிந்து போயிருந்த பொருளாதாரம் மேலும் திணறியது. தவிர மேற்கு நாடுகள் மற்றும் ஐநா வின் அழுத்தமும் அதிகரித்தது. இவற்றின் விளைவாக ராஜபக்சக்கள் மேற்கையும் ஐநாவையும் நோக்கிய தமது அணுகுமுறைகளை தளர்த்த தொடங்கினார்கள். பசில் ராஜபக்சவை முன்னிறுத்தி ராஜிய மாற்றங்களை அவர்கள் முன்னெடுத்தார்கள். பசில் ராஜபக்ச, புதிய வெளியுறவு அமைச்சர் ஜி எல் பீரிஸ் ,இந்தியாவுக்கான தூதர் மிலிந்த மொரகொட போன்றோரை முன்னிறுத்தி அரசாங்கம் மேற்கையும் இந்தியாவையும் ஐநாவையும் சுதாகரிக்கும் வேலைகளை தொடங்கியது.அந்த வேலைகளின் ஒரு பகுதியாகவே ரணில் விக்கிரமசிங்கவின் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அதே உபாயத்தை அதாவது தமிழ் டயாஸ்பொறவை அரவணைத்துப்பிரிக்கும் உத்தியை அரசாங்கம் கையிலெடுத்திருக்கிறதா?
அமெரிக்காவில் ஜனாதிபதி ஆற்றிய உரை அதைத்தான் நமக்கு உணர்த்துகிறது.அவர் உள்ளகப் பொறிமுறைக்கு புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகத்திடம் ஆதரவை கேட்கிறார்.அதோடு தமிழ் டயஸ்போறாவை நாட்டில் வந்து முதலீடு செய்யுமாறு கேட்கிறார்.இது ஒரு உத்தி மாற்றம்.அரசாங்கம் தமிழ் டயாஸ்பொறவின் இன்றியமையாத் தன்மையை விளங்கியிருப்பதை இது உணர்த்துகிறது.
இது விடயத்தில் டயாஸ்பொறவும் உட்பட முழுத்தமிழ் சமூகமும் மாறிவரும் புதிய சூழலை தொகுத்தும் பகுத்தும் கற்றுக்கொள்ளவேண்டும். எந்த அமெரிக்கா சவேந்திர சில்வாவை நாட்டுக்குள் வரக்கூடாது என்று பயணத் தடை விதித்ததோ அதே அமெரிக்காவில் கோட்டாபய ராஜபக்ஷ ஐநா பொதுச்செயலரை சந்திக்கிறார். ஐநாவில் உரை நிகழ்த்துகிறார். ஏறக்குறைய இதே காலப்பகுதியில்தான் சற்று முன்னதாக அவருடைய தமையனார் மஹிந்த ராஜபக்ச இத்தாலிக்கு போயிருந்தார். அங்கேயும் அவர் ஓர் அனைத்துலக மாநாட்டில் உரை நிகழ்த்தினார்.தமிழர்கள் இங்கே ஒரு முக்கியமான விடயத்தை கவனிக்க வேண்டும். இந்த இரண்டு சகோதரர்களும் அரசியல் தீர்மானம் எடுத்து வழிநடத்திய ஒரு யுத்ததத்தில் உத்தரவுக்கு கீழ்படியும் கருவியாக செயல்பட்ட ஒரு தளபதியை அமெரிக்கா நாட்டுக்குள் வரக் கூடாது என்று தடை செய்திருக்கிறது. அவரைப் போல மேலும் சில தளபதிகளை மேலும் சில மேற்கு நாடுகளும் குறிப்பாக ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும் தடை செய்திருப்பதாக அறியமுடிகிறது.
ஜனாதிபதியின் மூளை என்று கருதப்படும் வியத்மக சிந்தனைக் குழாத்தின் இணையதளத்தில் கலாநிதி பாலித கோகன்ன-இப்பொழுது சீனாவுக்கான தூதுவராக இருப்பவர் -ஆற்றிய உரை ஒன்று உண்டு. அதிலவர் அவ்வாறு தமது தளபதிகள் வெளிநாடுகளில் படிக்கும் தமது பிள்ளைகளை சந்திக்க முடியாதிருப்பதைக் குறித்து கருத்துக் கூறியுள்ளார்.இவ்வாறு தளபதிகளை நாட்டுக்குள் வரவிடாது தடுக்கும் மேற்கத்தைய அரசுகள் அந்த தளபதிகளுக்கு உத்தரவிட்ட அரசியல் தலைவர்களை நாட்டுக்குள் அனுமதிப்பதை எப்படிப் பார்ப்பது? ஏய்தவர்களை தண்டிக்காமல் அம்புகளை தண்டிக்கும் இந்த அரசியலில் இருந்து தமிழ் மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அமெரிக்காவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதியை அந்நாட்டின் அரசுப் பிரதானிகள் சந்திக்கவில்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். மேற்கு நாடுகள் இலங்கை தொடர்பாக எவ்வாறான அணுகுமுறையைக் கொண்டிருக்கின்றன என்பதை இது உணர்த்துகிறது.ஓர் அரசுடைய தரப்பாக சிங்கள மக்களுக்குள்ள வசதி வாய்ப்புகளையும் இது காட்டுகிறது.இந்த அரசியலை சரியாக விளங்கிக் கொண்டால்தான் ஜனாதிபதியின் அழைப்பை எவ்வாறு அணுகுவது என்பது குறித்து தமிழ் டயாஸ்பொற ஒரு பொருத்தமான முடிவை எடுக்கலாம்.
ஜனாதிபதியின் அழைப்புக்கு தமிழ் டயாஸ்பொறவிலுள்ள எட்டு அமைப்புகள் பதில் வினையாற்றியுள்ளன.இது விடயத்தில் தமிழ் டயாஸ்பொற ஒரே கட்டமைப்பாக இல்லை.தமிழ் டயாஸ்பொற எனப்படுவது ஒன்றுபட்ட ஒரு கட்டமைப்பல்ல.அதில் பல அடுக்குகள் உண்டு. பல்வேறு கருத்து நிலைகள் உண்டு. இந்த பல்வகைமையை ரணில் விக்கிரமசிங்க தனக்கு வசதியாகக் கையாண்டார்.இப்போதுள்ள அரசாங்கமும் அவ்வாறு கையாளத்தக்க வாய்ப்புகள் அதிகம் உண்டு.தாயகத்து கட்சிகள் செயற்பாட்டாளர்களுக்குள்ள அதே நோய் டயாஸ்பொறவிலும் உண்டு. இது விடயத்தில் டயாஸ்பொற தன் பலமுணர்ந்து,தேவையுணர்ந்து தீர்க்கதரிசனத்துடன் ஒன்றுபட்டு முடிவெடுக்குமா?