பாரம்பரியக் கடலில் ஒரு பகை எல்லை  ?

கடந்த வாரம் கொல்லப்பட்ட தமிழக மீனவரின் குடும்பம்

மீனவர்கள் எல்லை தாண்டுவது என்பது உலகம் முழுவதும் உள்ள ஒரு விவகாரம்.மீனிருக்கும் இடத்தை நோக்கி மீனவர்கள் வருவார்கள்.அப்பொழுது அவர்கள்  அரசியல் எல்லைகளை மதிப்பதில்லை. தமிழகத்துக்கும்  ஈழத்துக்கும் இடையிலான கடல் எனப்படுவது இரு பகுதி மீனவர்களாலும் பகிரப்படும் ஒரு பாரம்பரியக் கடலாகும். அதில் பாரம்பரிய மீன்பிடி முறைகளின் மூலம் மீன் பிடிக்கப்படும் வரை பிரச்சினை பெரியளவில் எழவில்லை. மாறாக சட்டத்துக்கு விரோதமான நவீன மீன்பிடி நுட்பங்களை பயன்படுத்தும் ஒப்பீட்டளவில் அளவால் பெரிய தமிழகப்படகுகள் ஈழத்துக் கடற்பரப்புக்குள் நுழைந்த போதுதான் அது முதலாவதாக வள அபகரிப்பாக மாறுகிறது.இரண்டாவதாக சூழலியல் விவகாரம் ஆகிறது.மூன்றாவதாக சட்டவிரோதமான முறைகளைப் பயன்படுத்துவதால் அது ஒரு சட்டப்பிரச்சினையாக மாறுகிறது.இவை அனைத்தினதும் தொகுக்கப்பட்ட விளைவாக அது இருதரப்பு மீனவர்களுக்கும் இடையிலான மோதலாக மாறுகிறது.

ஆனால் அது அது தனிய மீனவர்களுக்கிடையிலான ஒரு விவகாரம் அல்ல. அது ஒரு காலத்தில் பாரம்பரிய கடலாக இருந்தாலும் இப்பொழுது சர்வதேச கடல் எல்லையால் பிரிக்கப்படுகிறது. எனவே அது அரசுகளின் கடல் எல்லை பற்றிய ஒரு விவகாரம். அதனால் அதனை தீர்த்துக் கொள்ள வேண்டியது இருதரப்பு அரசுகளும்தான் இது முதலாவது. இரண்டாவதாக கடற் சூழலுக்கு தீங்கான முறைகளின் மூலம் மீனைப் பிடிக்கும் பொழுது அது சுற்றுச்சூழல் பொறுத்து சட்டப் பிரச்சினை ஆகிறது.அதற்குரிய சட்டங்களை இயற்றி மீனவர்களை சட்டத்துக்கு பணிய வைப்பதும் அரசுகளின் பொறுப்புத்தான். ஆனால் இதில் சம்பந்தப்பட்ட அரசுகள் இரண்டும் விவகாரத்தை தங்களுடைய மட்டத்தில் தீர்த்துக் கொள்ளவில்லை என்பதுதான் இங்கேயுள்ள பிரச்சினை. அதனால் அது மீனவர்களின் பிரச்சினையாக வெளிப்படுகிறது.அதை மீனவர்கள் மட்டும் தீர்த்துக் கொள்ள முடியாது.தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைகளில் மீனவப் பிரதிநிதிகள் அமர்ந்திருக்க வேண்டும். ஆனால் முடிவெடுக்க வேண்டியது சம்பந்தப்பட்ட அரசுகள்தான்.ஏனென்றால் அது அனைத்துலக எல்லைகள் சம்பந்தப்பட்டது.எனவே,அரசுகள் முடிவெடுக்க வேண்டிய ஒரு விடயத்தை மீனவர்களின் தலையில் சுமத்திவிட்டு பாரம்பரியமாக  ஒரே கடலைப் பகிர்ந்த மீனவர்களை இப்பொழுது எதிரிகள் ஆக்கியிருக்கிறார்களா ?

தமிழக மீனவர்கள் ஈழப் போராட்டத்துக்காக தாயகத்துக்கு வெளியே ரத்தம் சிந்திய ஒரு தரப்பாகும். தமிழக மீனவர்களின் ஆதரவு இல்லாமல் ஈழத்தமிழர்கள் போராடியிருக்கவே முடியாது. தமிழகம் ஈழப்போராட்டத்தின் பின்தளமாக செயற்பட்டபொழுது அப்பின்தளத்திற்கு கடல் வாசல் மட்டுமே இருந்தது.தரை வாசல் இருக்கவில்லை.வான் வாசலும் இருக்கவில்லை. ஏனென்றால் அப்பின்தளமானது சட்டப்பூர்வமானது அல்ல. இதனால் அக்கடல் வாசலின் முன்னரங்கச் செயற்பாட்டாளராக;இடைத்  தொடர்பாளராக;இறங்கு துறையாக;இன்னபிறவாக இருந்தது தமிழக மீனவர்கள்தான்.

போராட்டத்திற்கு தேவையான வழங்கல்கள் தொடக்கம் காயக்காரரை ஏற்றி இறக்குவது வரையிலும் அவர்களுடைய பங்களிப்பு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இருந்திருக்கிறது.ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஈழத்தமிழ் அகதிகள் தமிழகத்தை நோக்கி சென்ற காலத்தில் உதவியதும் தமிழக மீனவர்கள்தான். ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் தமிழக மீனவர்கள் பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்;காயப்பட்டிருக்கிறார்கள்;ரத்தம் சிந்தியிருக்கிறார்கள்.அவ்வாறு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 800க்கும் குறையாது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.இவ்வாறு ஈழத்தமிழர்களுக்காக ரத்தம் சிந்திய;காயப்பட்ட கொல்லப்பட்ட; தொழிலை சொத்துக்களை இழந்த ஒரு சமூகத்தை அதன் ஈழத்துச் சகோதரர்கள் பகைவர்களாக பார்ப்பது என்பது எங்கேயோ பிழை நடப்பதைத்தான் காட்டுகிறது.ஒரு பாரம்பரிய கடலில் நிரந்தரமாக ஒரு பகை எல்லைக் கோட்டை வரைய விரும்பும் சக்திகள் கடந்த 12 ஆண்டுகளில் வெற்றி பெற்று வருவதைத் தான் காட்டுகிறது.

ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்தபின் இருந்த கொஞ்ச நஞ்ச வளங்களோடு கடலுக்குப் போன ஈழத்து மீனவர்கள் கடலில் தமிழகத்தின் மிகப் பலமான ரோலர்களை எதிர் கொள்ள வேண்டிய ஒரு நிலைமை ஏற்பட்டது. ஒரு பாரம்பரிய கடலை பாரம்பரிய மீன்பிடி முறைகளின் மூலம் நுகரும் வரை அது ஒரு விவகாரமாக இருக்கவில்லை. ஆனால் பாரம்பரிய முறைகளை கடந்து நவீன சட்டவிரோதமான முறைகளை கையாளும் ஒப்பீட்டளவில் பெரியபடகுகள்  ஈழத்துகடலுக்குள் நுழைந்த போதே அது விவகாரமாக மாறியது.அப்பெரிய படகுகள் ஈழத்து மீனவர்களின் கடல் செல்வத்தை மட்டும் கவர்ந்து செல்லவில்லை,அதைவிட ஆழமான பொருளில் ஈழத்துக்கடலின் வளம் பொருந்திய கர்ப்பத்தையும் விறாண்டி செல்கின்றன.  இதனால் பாதிக்கப்பட்ட ஈழத்து மீனவர்கள் தமிழக மீனவர்களுக்கு எதிராகத் திரும்பும் ஒரு நிலைமை தோன்றியிருக்கிறது. அண்மையில் பாதிக்கப்பட்ட பருத்தித்துறை முனைப்  பகுதியைச் சேர்ந்த ஒரு மீனவர் சங்கப் பிரதிநிதி இதை யாரும் தடுக்காவிட்டால் நாங்கள் மனிதக்  குண்டுகளாக மாறி இந்திய மீனவர்களின் படகுகளை தகர்ப்போம் என்று எச்சரிக்கும் அளவுக்கு நிலைமை விகாரமடைந்து விட்டது.இந்த விவகாரத்தை தமிழ் அரசியல்வாதிகள் சிலர் பிரச்சினையின் ஆழத்தை விளங்கிக் கொள்ளாமல் கையாள முற்படுகின்றார்களா?

கடந்த கிழமை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் தமது ஆதரவாளர்களுடன் மீனவர்களுக்கு ஆதரவாக ஒரு போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.ஆனால் அந்தப்போராட்டம் அதிகம் மக்கள் மயப்படவில்லை. அதோடு, அந்தப்போராட்டம் பின்வரும் விடயங்களை நமக்கு உணர்த்தியிருக்கிறது.

முதலாவது கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லை. தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதற்குத் தலைமை தாங்கினார்கள்.அதாவது கூட்டமைப்புக்குள் ஐக்கியம் இல்லை என்பதனை அது உணர்த்தியிருக்கிறது.

இரண்டாவது தமிழரசுக் கட்சியின் தலைவர் அதில் பங்கு பற்றவில்லை. அவருடைய ஆதரவாளர்களையும் காணமுடியவில்லை. அதாவது தமிழரசுக் கட்சிக்கு உள்ளேயும் முரண்பாடுகள் உண்டு என்பதனை அது காட்டி இருக்கிறதா? அப்படிப் பார்த்தால் மீனவர்களுக்காகவும் விவசாயிகளுக்காகவும் போராடப்போய் முடிவில் கூட்டமைப்புக்குள்ளும் ஐக்கியமில்லை,தமிழரசுக் கட்சிக்குள்ளும் ஐக்கியம் இல்லை  என்ற செய்திகளை உலகத்துக்கும் சமூகத்துக்கும் உணர்த்துவதில்தான் முடிந்திருக்கிறதா?

அது கூடப்பரவாயில்லை.கூட்டமைப்பு ஓர் ஐக்கியப்பட்ட அமைப்பாக இல்லை என்பது உலகறிந்த உண்மை.ஆனால் தங்களுக்குள் ஐக்கியப்படமுடியாத அரசியல்வாதிகள் போதாகுக்றைக்கு ஒரு பிராந்திய உறவை மேலும் பகை நிலைக்கு கொண்டு போகும் விதத்தில் ஒரு போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்களா?அப்போராட்டம் தமிழக மீனவர்களுக்கு எதிரானது அல்ல அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிரானதே என்று கூறப்பட்டாலும்கூட அது அதன் தர்க்கபூர்வ விளைவை கருதிக் கூறின் தமிழக மீனவர்களுக்கு எதிரானதுதான். ஏனென்றால் தமிழக  மீனவர்களிடமிருந்து ஈழத்து மீனவர்களை டக்ளஸ் தேவானந்தா காப்பாற்றவில்லை என்பதனால்தான் அவருக்கு எதிரான போராட்டம் என்ற அடிப்படையில் இறுதியிலும் இறுதியாக அந்தப் போராட்டம் தமிழக மீனவர்களுக்கு எதிரானதுதான்.போராட்டம் நடந்து முடிந்த அடுத்தநாள் அதாவது கடந்த செவ்வாய்க்கிழமை காரைநகர்  கடலில் தமிழகப் படகொன்று மூழ்கடிக்கப்பட்டிருக்கிறது.இருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.ஒருவர் காணாமல் போயிருக்கிறார்.தமிழ் அரசியல்வாதிகள் கடலில் இறங்கி எதிர்ப்பைக் காட்டிய அடுத்தடுத்த நாள் இது நடந்திருக்கிறது.

இந்த விடயத்தை மீனவர்கள் மட்டத்தில் தீர்க்க முடியாது.இதில் அனைத்துலக எல்லைகள் சம்பந்தப்படுகின்றன. தவிர சட்டவிரோத மீன்பிடி முறைகள் சம்பந்தப்படுவதால் இந்த பிரச்சினைக்கு ஒரு சட்ட பரிமாணமும் உண்டு. எனவே சட்டத்தை அமுல்படுத்தும் அரசுகள்தான் இந்த விடயத்தை பேசித்தீர்க்க வேண்டும்.கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தோடு இணக்கமாக இருந்த காலகட்டத்தில் 2017இல் இது தொடர்பாக உருவாக்கப்பட்ட ஒரு சட்டத்தை அமுல்படுத்துவதில் யாருமே அக்கறை காட்டவில்லை.அச்சட்டத்தை அமல்படுத்தினால் ஒரு பகுதி மீனவ வாக்காளர்களின் ஆதரவை இழக்க நேரிடும் என்று சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்பு அரசியல்வாதிகளும் அஞ்சினார்கள். இப்படித்தான் இந்தப் பிரச்சினை அதன் அடுத்தடுத்த கட்ட வளர்ச்சிக்கு போனது.

இதனால் பாதிப்பு யாருக்கு என்று சொன்னால் ஈழத்தமிழர்களுக்குத்தான். எப்படியென்றால்- சிறிய,தொழில்நுட்ப வளம் குறைந்த படகுகளை வைத்து மீன் பிடிக்கும் ஈழத்தமிழர்கள் இதனால் தொழிலை இழக்கிறார்கள்; தொழிற்  சாதனங்களை இழக்கிறார்கள். இது முதலாவது இழப்பு.

இரண்டாவது இழப்பு – ஈழத்துக்குக்  கடலின் கர்ப்பம் விறாண்டப்படுகிறது.பெரிய றோலர்கள் கடலின் கருவளத்தை விறாண்டி எடுக்கின்றன,ஈழத்து தமிழர்கள் நீண்ட கடல் எல்லையைக் கொண்ட ஒரு மக்கள் கூட்டம். அவர்களுடைய கடலின் கர்ப்பம் குலைந்தால் எல்லாமே குலைந்துவிடும்.

மூன்றாவது இழப்பு – ஈழத்தமிழர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் இடையிலான பிராந்திய உறவு-கனெக்ரிவிற்றி அறுக்கப்படுகிறது. இது நீண்ட எதிர்காலத்தில் ஈழத்தமிழர்களை பலவீனப்படுத்தும்.எப்படியென்றால் ஒரு பாரம்பரிய கடலை தங்களுக்கிடையே பகிர்ந்த மீனவர்கள் பகைவர்கள் ஆக்கப்படும்பொழுது அது ஈழத்தமிழர்களை இலங்கைத் தீவுக்குள் குறுக்கி விடும்.ஈழத் தமிழர்களின் பிரதான அரசியல் பலங்கள் இரண்டு. ஒன்று தமிழகம் மற்றது புலம் பெயர்ந்த தமிழ்ச்சமூகம் .புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகம் பௌதிக ரீதியாக தொலைவிலுள்ளது.அருகே இருப்பது தமிழகம்தான்.அதிலும் மிக அருகே இருப்பது தமிழக மீனவர்கள்தான்.இந்தப் புவியியல் அருகாமை geographical proximity என்பது ஒரு முக்கியமான விடயம். ஈழத்தமிழர்களின் புவிசார் அரசியலானது மேற்படி  புவியியல் அருகாமையின் அடிப்படையிலானது.அந்த புவியியல் அருகாமை காரணமாக தமிழகத்துக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையில் ஏற்படக்கூடிய இணைப்பு அதாவது கனெக்ரிவிற்றி என்பது நீண்ட எதிர்காலத்தில் ஈழத் தமிழர்களுக்கான அரசியல் இலக்குகளை அடைவதில் ஒரு முக்கிய காரணியாக செயல்படக்கூடியது.

சில வாரங்களுக்கு முன் இலங்கைக்குவிஜயம் செய்த இந்திய வெளியுறவுச் செயலர் அவரைச் சந்தித்த தமிழ் அரசியல் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் மத்தியில் பேசிய விடயங்களில் ஒன்று கனெக்ரிவிற்றி  பற்றியதாகும்.கலாச்சாரப் இணைப்பு;வர்த்தக இணைப்பு உள்ளிட்ட எல்லாவிதமான இணைப்புகளை குறித்தும் அவர் பேசினார். அதில் அவர் மீள் இணைப்பு-re connectivity-பற்றியும் பேசினார்.ஆனால்  இரு மீனவ சமூகங்களுக்கு இடையிலான பகைமை என்பது அவ்வாறான இணைப்புகளை அறுக்கக் கூடியது. ஈழத் தமிழர்களுக்கும் தமிழகத்திற்கும் இடையிலான இணைப்பை அறுக்கும் சக்திகளுக்கு தமிழ் அரசியல்வாதிகளும்  சேவகம் செய்யக்கூடாது. இந்த அரசியல்வாதிகள் மக்களோடு சேர்ந்து ஒரு போராட்டத்தை முன்னெடுப்பதற்கு முதலில் தமிழகத்தில் உள்ள சம்பந்தப்பட்ட அமைச்சர்களோடும் தமிழக தலைவர்களோடும் பேசியிருக்கலாம்தானே? அப்படி ஒரு சந்திப்பை அவர்கள் ஏன் செய்யவில்லை?தமிழக அமைச்சர்களுக்கு ஒரு சர்வதேசக் கடல்எல்லை குறித்துப் பேச அதிகாரம் இல்லையென்றால் மத்திய அமைச்சரவையில் உள்ள  சம்பந்தப்பட்ட அமைச்சர்களோடு தமிழ்க்கட்சிகளின்  தூதுக்குழு ஒன்று ஏன் பேச்சு நடத்தக் கூடாது?

எல்லாருமாக சேர்ந்து இரு மீனவர் சமூகங்களுக்கும் இடையிலான இணைப்பை அறுத்து ஈழத்தமிழர்களை தனிமைப்படுத்த முயலும் சக்திகளுக்கு சேவகம் செய்கிறார்களா?இப்பிரச்சினையை அதன் அனைத்துப் பரிமாணங்களுக்கூடாகவும் அணுகித் தீர்க்கவேண்டும்.முதலாவதாக பாதிக்கப்படும் ஈழத்து மீனவர்கள்.இரண்டாவதாக சிதைக்கப்படும் கடலின் கருவளம்.மூன்றாவதாக அறுக்கப்படும் இணைப்பு. அதாவது இது முதலாவதாக ஒரு மனிதாபிமானப்  பிரச்சினை.இரண்டாவதாக சுற்றுச்சூழல் சார்ந்த ஒரு சட்டப்பிரச்சினை.மூன்றாவதாக ஈழத்தமிழர்களின் அரசியல் எதிர்காலம் பொறுத்து கனெக்ரிவிற்றியை அறுக்கும் பிரச்சினை.இம்மூன்று பரிமாணங்களையும் விளங்கி அதை அதற்குரிய வழிகளினூடாக அணுக வேண்டும். சம்பந்தப்பட்ட இரண்டு அரசுகளுக்கும் நிர்ப்பந்தம் கொடுக்க வேண்டிய பொறுப்பு ஈழத்து அரசியல்வாதிகளுக்கும், செயற்பாட்டாளர்களுக்கும்,ஊடகங்களுக்கும் உண்டு.அதேபொறுப்பு தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவுச் செயற்பாட்டாளர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும்  ஊடகங்களுக்கும் உண்டு.

 

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *