வாலில்லாத காளை மாடும் இலையான்களும்

 

கடந்த ஒக்டோபர் மாதம் 10ஆம் ஒரு சூம் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. பரந்துபட்ட ஒரு மக்கள்  இயக்கத்துக்கான குறிக்கோள்கள் குறித்து அதில் ஆராயப்பட்டன. பேராசிரியர் அர்ஜுன பராக்கிரம உட்பட முஸ்லிம் தமிழ் வளவாளர்கள் உரையாற்றினார்கள். தமிழ்ப் பகுதிகளில் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்களும் அரசசார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்த செயற்பாட்டாளர்களும் அதில் பங்குபற்றினார்கள்.

இது நடந்து கிட்டத்தட்ட மூன்று கிழமைகளின் பின் இம்மாதம் மூன்றாம் திகதி ஒரு சந்திப்பு யாழ்ப்பாணத்தில் யு எஸ் ஹோட்டலில் இடம் பெற்றது. பேராதனை பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த புத்திஜீவிகளும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் பங்குபற்றினார்கள்.பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் துறையைச் சேர்ந்த தமிழ் மற்றும் சிங்கள புத்திஜீவிகளோடு ஐக்கிய மக்கள் சக்தி கூட்டமைப்பை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான  எரான் விக்ரமரத்ன அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, புத்திக பத்திரன போன்றோரும் அங்கே வந்திருந்தார்கள். யாழ் பல்கலைக்கழகத்தின் சில புத்திஜீவிகளும் உட்பட சுமார் முப்பது பேர்  அச்சந்திப்பில் கூடியிருந்தார்கள். அரசுக்கு எதிராக நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் ஒரு புத்திஜீவிகளின் அமைப்பை கட்டி எழுப்புவதே அவர்களுடைய நோக்கமாக இருந்தது. அவ்வாறான புத்திஜீவி அமைப்பொன்றை கட்டியெழுப்பும் வேலைகள் ஏற்கனவே பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தொடங்கிவிட்டன. அப்பல்கலைக்கழகத்தின்  பட்ட மேற்படிப்பு துறைக்குப்  பொறுப்பான ஒரு  புலமையாளரே அவ்வமைப்புக்குப் பொறுப்பாய் இருக்கிறார்.

கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு இந்த மாதத்தோடு இரண்டு ஆண்டுகள் முடிகின்றன. ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவருக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கிய ஒரு மக்கள் கூட்டத்தின் மத்தியிலிருந்து பரந்துபட்ட ஒரு மக்கள் இயக்கத்தை குறித்தும் நாடு முழுவதுக்குமான புத்திஜீவிகளின் ஒன்றிணைந்த எதிர்ப்பை குறித்தும் சிந்திக்க வேண்டிய ஒரு நிலைமை ஏன் ஏற்பட்டிருக்கிறது? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ராஜபக்ஷக்களுக்கு இந்த நாட்டு மக்கள் வழங்கிய மூன்றிலிரண்டு பெரும்பான்மை அதன் பொலிவை இழக்க தொடங்கிவிட்டதை அது  நமக்கு உணர்த்துகின்றதா?

அரசாங்கத்துக்கு தொடர்ச்சியாக எதிரிகள் முளைத்துக் கொண்டே இருக்கிறார்கள். மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த பொழுது தமிழ் மற்றும் முஸ்லிம் எதிர்ப்பு மட்டும்தான் இந்த அரசாங்கத்துக்கு இருந்தது. அந்த எதிர்ப்பை தனது மூன்றில் இரண்டு தனிச்சிங்கள பெரும்பான்மைக்கு கிடைத்த ஒரு வெகுமதியாக அரசாங்கம் காட்டிக் கொண்டது. அதன் விளைவாகவே தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரணியில் இணைந்து தமது எதிர்ப்பை காட்டினார்கள். அப்பொழுது சிங்கள மக்கள் மத்தியில் அதிகரித்த எதிர்ப்பு எழவில்லை.

ஆனால் பெருந்தொற்று நோய் அரசாங்கத்தின் தேர்தல் வெற்றிகளை நிர்வாணமாக்கி விட்டது. அதன் விளைவாக ஒருபுறம் வைரஸ் நெருக்கடி; இன்னொருபுறம் பொருளாதார நெருக்கடி ; மூன்றாவது முனையில் வெளியுறவு நெருக்கடி என்பவற்றோடு சேர்ந்து நாட்டுக்கு உள்ளேயும் ஆளும் கட்சிக்கு உள்ளேயும் புதிது புதிதாக எதிர்ப்புகள் கிளம்பின.

அரசாங்கம் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை ராணுவ மயப்படுத்தி நோய் தொற்றும் வேகத்தை ஓரளவுக்கு கட்டுப்படுத்தியிருக்கிறது. அதேபோல வெளியுறவு அணுகுமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி மேற்கு நாடுகள், ஐநா, இந்தியா போன்றவற்றோடு ஒப்பீட்டளவில் உறவுகளை சுமூகமாக்கிக் கொண்டது. ஆனால் நாட்டுக்குள்ளும் ஆளுங்கட்சிக்குள்ளும் எதிர்ப்புக்கள் புதிது புதிதாக கிளம்பிக் கொண்டே இருக்கின்றன.தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியாகப் போராடிக் கொண்டிருக்கின்றன.ஆசிரியர் தொழிற்சங்கத்தின்   விட்டுக்கொடுப்பற்ற போராட்டம் கடந்த புதன்கிழமை அரசாங்கத்தைப்  பணிய  வைத்திருப்பதாக தோன்றுகிறது.ஆசிரியர்கள் அதிபர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதன்மூலம் நடுத்தர வர்க்கத்தின் எதிர்ப்பை குறைக்கலாம் என்று அரசாங்கம் சிந்திக்கின்றது. இது விடயத்தில் ஜனாதிபதியைவிடவும் அவருடைய தமையனார் மஹிந்த ராஜபக்சவே சமரசம் செய்யத் தகுந்தவர் என்று  கருதி  அவருக்கூடாகவே அந்தப்போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.இது அரசாங்கத்தில் ஜனாதிபதியை விடவும் மகிந்த ராஜபக்சவே ஜனவசியம் மிக்கவராக உள்ளார் என்ற செய்தியை அழுத்தமாக உணர்த்துகின்றது.

எனினும் ஒரு தொழிற்சங்கத்தின்  போராட்டம்தான் முடிவுக்கு வந்திருக்கிறது.ஆசிரியர்கள் பெற்ற வெற்றி  ஏனைய  தொழிற்சங்கங்களுக்கு உற்சாகமூட்டும் முன்னுதாரணமாக அமையும்.இது தொழிற்சங்கங்களின் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தக்கூடும்.அதாவது அரசாங்கத்துக்கு மேலும் நெருக்கடிகள் காத்திருக்கின்றன என்று பொருள்.இது ஒருபுறம்.

இன்னொருபுறம் வைரஸ் தொற்று காரணமாகவும் பொருளாதார வீழ்ச்சி காரணமாகவும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.கிடைக்கிற பொருட்களுக்கும் விலை உயர்கிறது. ஏற்கனவே உயர்ந்த விலைகள் இறங்கவில்லை. மட்டுப்படுத்தப்பட்ட உரப்பாவனை காரணமாக அடுத்தடுத்த போக விவசாய உற்பத்திகள் பாதிக்கப்படலாம் என்று தெரிகிறது. அதனால் எதிர்காலத்தில் மரக்கரிகளுக்குத் தட்டுப்பாடு வரலாம் என்று எச்சரிக்கப்படுகிறது.

அதாவது அரசாங்கம் ஆட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் பலமுனை நெருக்கடிகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு தருணத்தில் எதிர்க்கட்சிகளும் புத்திஜீவிகளும் இணைந்து அரசாங்கத்துக்கு எதிராக பரந்துபட்ட எதிர்ப்பை காட்டுவதற்கு முற்படுகிறார்கள். வரும் 16ஆம் திகதி எதிர்க்கட்சிகள் அரசாங்கத்துக்கு எதிராக பெரியளவிலான ஓர் ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்து வருகின்றன.அரசாங்கம் தனிமைப்படுத்தற்  சட்டங்களை முன்னிறுத்தி  அப்போராட்டத்தை தடுக்கக்கூடுமா?

ஒரு நாடு எவ்வளவுக்கு எவ்வளவு ராணுவ மயப்படுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு பரந்துபட்ட அளவிலான சிவில் எதிர்ப்பும் தேவைப்படும்.இந்த அடிப்படையில் சிந்தித்தால் பரந்துபட்ட ஒரு மக்கள் இயக்கத்துக்கான தேவை இப்பொழுது அதிகம் உண்டு. இலங்கைத்தீவின் நவீன வரலாற்றைத் தொகுத்துப் பார்த்தால் சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தை தோற்கடிப்பதற்கு மூன்று இன மக்களும் இணையும் பொழுது மட்டுமே வெற்றி கிடைத்திருக்கிறது. 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தில் இது நிரூபிக்கப்பட்டது.எனவே இப்போதிருக்கும் அரசாங்கத்தை மூன்று ஆண்டுகளின் பின்னராவது தோற்கடிப்பது என்று சொன்னால் அதற்கு மூன்று இனத்தவர்களின் ஒன்றிணைவு அவசியம்.இந்த அடிப்படையில் சிந்தித்தால் நாடு முழுவதுக்குமான ஒரு பரந்து பட்ட மக்கள் இயக்கம் தேவை.ஆனால் இங்கே பிரச்சினை என்னவென்றால் அப்படி ஒரு மக்கள் இயக்கத்தை கட்டியெழுப்பும் பொழுது அதனை எந்த அடிப்படையில் கட்டியெழுப்புவது என்பதுதான்.

இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட சூம் சந்திப்பின்போது அது சுட்டிக்காட்டப்பட்டது. ஒரு பரந்துபட்ட மக்கள் இயக்கம் எனப்படுவது மூன்று இன மக்களையும் ஒருங்கிணைப்பது.அவ்வாறு ஒருங்கிணைக்க வேண்டுமென்றால் அது இலங்கைத்தீவின் பல்லினத் தன்மையை கட்டியெழுப்புவதற்கு உரிய தெளிவான வாக்குறுதிகளை அதன் இறுதி இலக்குகளாக கொண்டிருக்க வேண்டும்.இந்த நாட்டை பல்லினத்தன்மை மிக்கதாக கட்டி எழுப்புவது  என்றால் சிங்கள,தமிழ்,முஸ்லிம் மக்களை இச்சிறிய தீவின் சக பங்காளிகளாக ஏற்றுக்கொண்டு ஒரு யாப்பை  உருவாக்குவதுதான் ஒரே வழி. அதாவது கூரான வார்த்தைகளில் சொன்னால் இப்போதிருக்கும் ஓரினத் தன்மைமிக்க:ஒரு மதத்தை மேலுயர்த்துகின்ற: ஒற்றையாட்சிக்  கட்டமைப்புக்குப் பதிலாக பல்லினத்தன்மை மிக்க பல சமயப் பண்புமிக்க இரு மொழிகளை ஏற்றுக் கொள்ளுகின்ற ஒரு கூட்டாட்சிக்குரிய யாப்பை உருவாக்க வேண்டும். எனவே ஒரு பரந்துபட்ட மக்கள் இயக்கத்தை குறித்தோ அல்லது நாடு முழுவதற்குமான புத்திஜீவிகளின் எதிர்ப்பியக்கத்தை குறித்தோ சிந்திக்கும் எல்லா தரப்புக்களும் முதலில் தமிழ்மக்களுக்கு தரவேண்டிய வாக்குறுதி என்னவென்றால் ஒரு கூட்டாட்சி யாப்பை உருவாக்க தயார் என்பதுதான்.

ஆனால் கொடுமை என்னவென்றால் அப்படி ஒரு யாப்பை குறித்த வாக்குறுதி எதையும் தருவதற்கு சிங்களமக்கள் மத்தியில் உள்ள எதிர்க் கட்சிகளும் தயாரில்லை.பெரும்பாலான லிபரல் ஜனநாயகவாதிகளும் தயாரில்லை. அல்லது பெரும்பாலான முற்போக்கு சக்திகளும் தயாரில்லை.இது விடயத்தில் பல்லினத்தன்மை மிக்க ஒரு கூட்டாட்சிக் கட்டமைப்பை ஏற்றுக் கொள்பவர்கள் யார் என்று பார்த்தால் அது சிங்கள பெரும்பான்மைக்குள் காணப்படும் மிக மிகச்சிறிய ஒரு சிறுபான்மைதான்.

அச்சிறுபான்மை மிகவும் பலவீனமானது. அது சிங்கள பௌத்த பெருந் தேசிய வாதத்தின் கூட்டு உளவியலில் சிறு சலனத்தையோ அல்லது சிறு நொதிப்பையோ ஏற்படுத்தும் சக்தியற்றது.அப்படிப்பட்டதொரு மிகப் பலவீனமான சிறுபான்மையோடு இணைந்து தமிழ்மக்கள் சிங்கள பவுத்த பெருந் தேசியவாதத்தை தோற்கடிக்க முடியாது.

எனவே இப்பொழுது விடயம் மிகத் தெளிவாக தெரிகிறது. பரந்துபட்ட அளவிலான மக்கள் எதிர்ப்பு என்று பார்த்தால் அது முகமூடி அணிந்திராத இனவாதத்துக்கு எதிராக மனித முகமூடி அணிந்த இனவாதத்தோடு கூட்டுச் சேர்வதன் மூலம் மட்டும்தான் ஒப்பீட்டளவில் சாத்தியமாகக் கூடிய ஒன்றாகும். இதை இன்னும் தெளிவாகச் சொன்னால் சிங்கள பௌத்த ஒற்றையாட்சி கட்டமைப்புக்குள் மாற்றத்தை ஏற்படுத்த முடியாத அல்லது மாற்றத்தை ஏற்படுத்த விரும்பாத ஒரு மக்கள் இயக்கத்தைத்தான் பரந்துபட்ட அளவில் கட்டி எழுப்பலாம். அப்படி ஒரு மாற்றத்தைத்தான் மூவின மக்களும் சேர்ந்து 2015இல் ஏற்படுத்தினார்கள். ஆனால் மூன்று ஆண்டுகளே நீடித்த அந்த மாற்றமானது ஓரு நகைச்சுவை நாடகமாக முடிவடைந்தது.இப்பொழுது மறுபடியும் சிவில் சமூகங்களோடு இணைந்து ஒரு கூட்டு எதிர்ப்பை குறித்து சிந்திக்கப்படுகிறது.

அரசாங்கத்துக்குள் இருக்கும்   அதிருப்தியாளரான அமைச்சர் உதய கம்மன்பில கூறுகிறார் அரசாங்கம் இப்பொழுது வாலில்லாத ஒரு காளை மாடு என்று. மாட்டின் பலம் அதன் வாலில்தான் உண்டு என்று கூறப்படுவதுண்டு. அதேசமயம்  வாலில்லாத மாடு   இலையான்களையும்  நுளம்புகளையும் கலைக்க முடியாது.இப்போதுள்ள நிலைமைகளின்படி அரசாங்கம் ஒரு பலமிழந்த காளை மாடா?  அல்லது எதிர்க்கட்சிகள் இலையான்களா?

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *