நிலாந்தன். ஈழத்தின் அரிதான பல்துறை ஆளுமைகளில் ஒருவர். கவிதை, ஓவியம், நாடகம், விமர்சனம், அரசியல் பத்தி எழுத்து என பல தளங்களில் தீவிரமான செயற்பாடுடைய ஓர் அரசியல் போராளி. மண்பட்டினம், வன்னிமான்மியம், யாழ்ப்பாணமே.. ஓ..யாழ்ப்பாணமே என இதுவரை மூன்று கவிதை நூல்கள் வந்திருக்கின்றன. ஓவியம், மனிதகுல வரலாறு, கவிதைத்துறை சார்ந்து தலா ஒவ்வொரு புத்தகங்கள் அச்சுக்கு தயாராக இருக்கின்றன. ‘பிள்ளையார் ஓவியங்கள்’ என்ற போர் ஓவியங்களின் தொகுப்பை காட்சிப்படுத்தியுள்ளார். கலாச்சாரம், கலைஇலக்கியம், அரசியல் சார்ந்த ஏராளம் கட்டுரைகளை அனேகமான ஈழத்து சஞ்சிகைகள், பத்திரிகைகளில் மிக நீண்ட காலமாக எழுதிவருகிறார். இந்த பல்துறை சார்ந்த அனேக படைப்புக்கள் இன்னும் நூலாக்கப்படாமலேயே உள்ளன. துரதிஸ்டவசமாக தனது பெருமளவான படைப்புக்களை யுத்த இடப்பெயர்வுகளின்போது இழந்துவிட்டார். தமிழீழ விடுதலைப்போராட்டம் தொடர்பில் நேர்மறை என்ற இருதுருவங்களாக உருவாகியுள்ள அணிகள் மத்தியகு களப்பணியாளர்களில் ஒருவர். தமிழீழவிடுதலைப்போராட்டத்தின் சமாந்தரப்பயணிகளில் ஒருவர். அந்தப் போராட்டத்தின் எழுச்சி, வீழ்ச்சி, அதற்கான பின்னனி, தமிழ்தேசியம், அதன் அவசிய திருத்தங்கள் பற்றியெல்லாம் பேசுகிறார். தற்போது யாழ்ப்பாணத்தில் வசிக்குமிவர், எப்பொழுதும் எதையும் அச்சமின்றி பேசும் சூழல் இலங்கையிலில்லை என்றுணர்வதால் சில கேள்விகளை தவிர்க்குமாறு கேட்டிருந்தார். சில சந்தர்ப்பங்களில் சுய பாதுகாப்பிற்காக, இருண்மையான வார்த்தைகளை உபயோகித்திருக்கிறார்.
கேள்வி : நீங்கள் பல்துறை சார்ந்த ஆளுமை. உங்கள் இளமைக்காலம் பற்றி, குறிப்பாக உங்கள் ஆளுமை உருவாக்கத்தில் அந்தச் சூழல் செலுத்திய தாக்கம் பற்றி சொல்லுங்கள்?
நிலாந்தன் : யுத்தம்தான் என்னை கண்டுபிடித்தது. அல்லது யுத்தத்தை நான் கண்டு பிடித்தேன் என்று வேண்டுமானாலும் சொல்லலாம். வீட்டில் யாரும் என்னை கண்டுபிடிக்கவில்லை. பாடசாலையிலும் யாரும் என்னை கண்டுபிடிக்கவில்லை. ஏடு தொடங்கப்பட்ட அன்றே அடிக்கப்பட்டவன் நான். அப்பொழுது எனக்கு மூன்று வயதிருக்கும். எனக்கு ஏடு தொடக்குவதற்காக ஊரிலுள்ள சிறு பாடசாலைக்கு அழைத்துச்சென்றார்கள். அங்கிருந்த ஆசிரியர் எனக்கு ஏடு தொடக்க முற்பட்டார். நான் பிடிவாதமாக மறுத்து விட்டேன். நீண்ட நேர முயற்சிக்கு பின் அவர் சலித்து போய் ‘உங்களுடைய பிள்ளைக்கு என்னால் ஏடு தொடக்க முடியாது. நீங்களே கொண்டு போய் ஏட்டை தொடக்குங்கள்’ என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டார். இயலாமையுடனும் அவமானத்துடனும் என்னை வீட்டுக்கு கூட்டி வந்த தகப்பனார் தானே எனக்கு ஏடு தொடக்க முயற்சித்தார். எங்களுடைய வீட்டில் ஒரு சிறு காளி கோயிலுண்டு. அதில் வைத்து எனக்கு ஏடு தொடக்க முயற்சித்தார். அப்பொழுதும் நான் உடன்படவில்லை. நயத்தாலும் பயத்தாலும் முயற்சித்தார்கள். நான் மறுத்துவிட்டேன். பொறுமையிழந்த எனது தந்தை என்னை தாறுமாறாக அடித்துவிட்டு ‘இதோ நான் கொழும்பிற்குப்போகிறேன்’ எனக் கூறி தனது பயணப்பையையும் எடுத்து கொண்டு வீட்டை விட்டு போகலானார். அப்பொழுது அவர் கொழும்பில் வேலைபார்த்து கொண்டிருந்தார். அவர் வீட்டு வாசலை கடக்கும் போதுதான் நான் ஏடு தொடக்க சம்மதித்தேன். அப்பொழுது கூட எனது தகப்பனார் ஏடு தொடக்கியதாக ஞாபகமில்லை. நானே எதையோ அரிசியில் எழுதினேன்.
இப்படித்தான் தொடங்கியது எனது கற்றல். இதிலிருந்து தொடங்கி அதிகாரத்திற்கும் தண்டனைகளுக்கும் எற்றுக் கொள்ளப்பட்ட நம்பிக்கைகளுக்கும் ஸ்தாபிக்கப்பட்ட புனிதங்களுக்கும் எதிராக உருவானேன். எல்லாருமே, எல்லாமுமே என்னை, எனது இயல்பிற்கு மாறாக வளைக்கவோ முறிக்கவோ முயற்சிப்பதாகவே எனக்குத்தோன்றியது. இதனால் தொடக்கத்திலிருந்தே ஒரு முரணியாக, ஒத்தோட மறுப்பவனாக, புனிதங்களை இகழ்பவனாக வளரத் தொடங்கினேன். வீட்டிலும் யாரும் என்னைக்கண்டுபிடிக்கவில்லை. பாடசாலையிலும் யாருமென்னைக் கண்டுபிடிக்கவில்லை. யுத்தம்தான் என்னை கண்டுபிடித்தது. எனக்குள்ளிருந்த தீராக்கோபத்திற்கு யுத்தம்தான் ஒரு பொருத்தமான அரங்கத்தை உருவாக்கித்தந்தது. யுத்தம் என்னை செதுக்கியது. மு.திருநாவுக்கரசு. சு. வில்வரத்தினம், மு..பொன்னம்பலம் போன்ற பலரையும் யுத்தம்தான் எனக்கு அறிமுகப்படுத்தியது. இவர்களினூடாகவே அ.யேசுராசாவும்; பத்மநாப ஐயரும் மாற்குவும் ஏனையவர்களும் அறிமுகமானார்கள்.
இவர்கள் எல்லோருமே என்னை ஏதோ ஒரு விதத்தில் செதுக்கினார்கள். யுத்தம் என்னை சனங்களிற்குள் இறக்கியது. அது என்னை சனங்களின் மொழியிலேயே பேசத்தூண்டியது. நான் வழமைகளையும் மரபுகளையும் மீறத்தேவையான துணிச்சலையும் கோட்பாட்டு விளக்கத்தையும் பெற்றேன். இங்கிருந்து உருவானவைகள்தான் எனது பரிசோதனைகள். யுத்தம் எனது வேர்களை அறுத்தது. சதா இடம்பெயர வைத்தது. பாண்டவரை விட பெரிய வனவாசம் எனக்கு. வயதுகளை இழந்து வனங்களிடை திரிந்தேன். கனவுகளை நம்பி யாகக் குதிரைகளைத் தொலைத்தேன். அஞ்ஞானவாசங்கள், வனவாசங்கள் தலைமறைவுக்காலங்கள் உறங்குகாலங்கள் என எழுச்சியும் வீழ்ச்சியும் மாறிமாறி வந்தன. இத்தகைய மறைவுகாலங்கள் உறங்குகாலங்கள் முடியும் போதெல்லாம் எதையாவது எழுதிக்கொண்டோ, எதையாவது சொல்லிக் கொண்டோ எதையாவது வரைந்து கொண்டோ வெளிப்படுவேன். எதைச்சொல்கிறேன், எப்படிச்சொல்கிறேன் என்பதையெல்லாம் குறிப்பிட்ட மறைவுகாலமே தீர்மானிக்கிறது. சிலசமயம் நிறங்களினூடாக வெளிப்படுவேன். சில சமயம் வார்த்தைகளினூடாக வெளிப்படுவேன். சில சமயம் நாடகத்தினூடாக வெளிப்படுவேன். ஆனால் அதற்காக நானொரு கவிஞனோ, ஓவியனோ, காட்டூனிஸ்டோ, ஆய்வாளனோ அல்ல. நான் இன்னமும் செதுக்கி முடிக்கப்படாத ஒரு சிற்பம். அவ்வளவுதான்.
கேள்வி : ‘மரணத்துள் வாழ்வோம்’ என்ற ஈழக்கவிஞர்களின் தொகுப்பில் இடம்பெற்ற ‘கடலம்மா’ என்ற கவிதைதான் முதன்முதலில் உங்கள் பற்றிய பரவலான கவனத்தை ஈர்த்தது. ஈழத்தமிழர்களின் பெரும் சோகங்களில் ஒன்றான ‘குமுதினி படகுபடுகொலை’ பற்றிய அந்தக் கவிதையே, அந்தச் சம்பவம் குறித்த அதிக அதிர்வை ஏற்படுத்திய படைப்பாக பரவலாக குறிப்பிடப்படுகிறது. அதை எழுதியதற்கான சூழ்நிலை மற்றும் அந்த நாட்கள் பற்றி சொல்லுங்கள்?
நிலாந்தன் : குமுதினிப்படகில் கொல்லப்பட்டவர்களின் இறுதிச்சடங்கில் உதவுவதற்காக தீவுப்பகுதி வர்த்தகர்களிடம் இருந்து பணம் சேர்க்கப்பட்டது. இந்தப் பணத்தில் செலவளிக்கப்பட்டது போக எஞ்சிய மிகுதியை என்ன செய்வது என்று யோசிக்கப்ட்டது. அந்தச் சிறுதொகைக்கு அஞ்சலித்துண்டுப் பிரசுரம் ஒன்று வெளியிடுவது என்று முடிவெடுக்கப்பட்டது. அதில் மூத்த கவிஞர்களாக சு.வி , மு.பொ போன்றவர்களது கவிதையை போட்டு எஞ்சியிருந்த இடத்தை நிரப்புவதற்காக ‘கடலம்மா’ போடப்பட்டது. இடத்தை நிரப்ப எழுதப்பட்டதே அது. மு.பொவும், சு.வியும் அதை பார்த்து விட்டு பெரிதும் பாராட்டினார்கள். யேசுராசா அதை அலையில் போட்டார். ஐயர் அதை மரணத்தில் வாழ்வோம் தொகுப்பில் போட்டார். ஆனால் இப்பொழுது திரும்பி பார்க்கையில் தெரிகிறது, அந்த எழுத்தின் கடைசி வரிகளில் நம்பிக்கை வலிந்து செருகப்பட்டிருக்கிறது. அது இயல்பாக முடியவில்லை.
கேள்வி : ‘மரணத்துள் வாழ்வோம்’ உக்கிரமாய் வலுப்பெற்ற 1980களின் நடுப்பகுதியை பிரதிபலித்த இலக்கிய பிரதி. அந்த தொகுதியில் எழுதிய பல கவிஞர்களுள் குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒரு சிலரைத்தவிர, பலரும் மரணத்துள் வாழ முடியாமல் புலம்பெயர்ந்து போயினர். மரணத்துள் வாழ்ந்து, இறுதிப்போர் வரை யுத்தத்தினுள் வாழ்ந்த உங்களது அனுபவத்தில் மரணத்துள் வாழ்வது என்பது என்னவாய் அர்த்தப்பட்டது? களத்தில் போர் நடக்காத இன்றைய பொழுதில் அதை எவ்வாறு எதிர் கொள்ள முடிகிறது?
நிலாந்தன் : மரணத்தின் ருசி மிகத்தெரிந்த மக்களில் நானுமொருவன் என்பதினால் சொல்கிறேன். வாழ்க்கை மகத்தானது. இன்பமானது. வாழ்ந்து கடக்கப்பட வேண்டியது. எவ்வளவுக்கெவ்வளவு மரணத்தின் ருசி தெரிகிறதோ அவ்வளவிற்கவ்வளவு உயிரின் பெறுமதியும் தெரியவரும். ரொட்ஸ்கி கூறியது போல “ஒரு விடுதலை போராட்டத்திற்காக சாகத்தயாரக இருந்தால் மட்டும் போதாது. வாழத்தயாராகவும் இருக்க வேண்டும்.”
கேள்வி : ஈழவிடுதலை போராட்டத்தில் யாழ்ப்பாணத்தை மையமாய்க் கொண்டிருந்த-யாழ்ப்பாணத்தை மையமாய் வைத்து சிந்தித்த தலைமைகளின் தவறுகள் மாற்று அரசியல் தரப்புக்களின் கடும்விமர்சனத்திற்கு உள்ளனவை. போர்நிறுத்த காலத்தில் கூட பிரதேசவாதம் போராட்டத்தில் பாரியதொரு விழ்ச்சிக்கு காரணமாய் அமைந்திருந்தது. இந்த விமர்சனங்கள் குறித்த உங்கள் பார்வை என்ன?
நிலாந்தன் : ஈழத்தமிழ் ஆயுத போராட்டத்தின் தொடக்கம், அது வளர்த்தெடுக்கப்பட்ட களம், அது வளர்த்தெடுக்கப்பட்ட விதம் மற்றும் அது அதிகம் பிரதிநிதித்துவப்படுத்திய படித்த மத்தியதர வர்க்கம் எது என்பவற்றின் அடிப்படையில் பார்த்தால் யாழ்ப்பாண மைய கண்ணோட்டம் எனப்படுவது தொடக்க காலங்களில் ஒரு சமூக பொருளாதார அரசியல் யதார்த்தம் என்றோ அல்லது அது ஒரு படைத்துறை யதார்த்தம் என்றோதான் கூற வேண்டும்.
படைத்துறை தீர்மானங்களிற்கு கீழ்ப்படிந்தே அரசியல் தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்ற தலைகீழ் சமன்பாட்டின்படி நிகழ்த்தப்பட்ட ஆயுதப்போராட்டத்தில் படைத்துறைப் பெரும் செயல்களை பொறுத்தவரை அதாவது நவீன தமிழ் வீரம் மற்றும் தமிழ் தியாகத்திற்கு மேற்படி யாழ்ப்பாண மைய கண்ணோட்டம் இடைஞ்சலாக இருக்கவில்லை.
ஆனால் ரணில்-பிரபா உடன்படிக்கைக்கு பின் உருவாகிய புதிய சூழ்நிலையில் பிரதேச வேறுபாடுகள் பிரதேச வாதமாக மாறக்கூடிய ஏதுநிலைகளை உய்த்துணர்வதில் போதியளவு தீர்க்கதரிசனம் காட்டப்படவில்லை. அது போலவே பிரதேச வாதமானது ஒரு அருவருப்பான ஆயுத மோதலாக அல்லது சகோதர சண்டையாக வெடித்தெழுவதை தடுப்பதிலும் போதியளவு தீர்க்கதரிசனம் காட்டப்படவில்லை. இதுவே நாலாம் கட்ட ஈழப்போரின் தோல்விக்குரிய பிரதான காரணங்களில் ஒன்றாக மாறியது.
யாழ்ப்பாண மைய கண்ணோட்டம்; அல்லது படைத்துறை தீர்மானங்களிற்கு கீழ்படியும் அரசியல் தீர்மானம்; பிரதேச வேறுபாடுகள் பிரதேச வாதமாக வெடித்து கிளம்பியமை அல்லது பிரதேச வாதத்தை ஆயுதமோதலாக வளர விட்டமை போன்ற எல்லா அம்சங்களும் ஒரே வேரிலிருந்து வெளிக்கிளம்புகின்றன. அது என்னவெனில் தமிழ் தேசியத்தின் போதாமைகளே. அது பற்றி பின்வரும் கேள்வி ஒன்றிற்கு விரிவாக சொல்லப்பட்டுள்ளது
கேள்வி : யாழ்ப்பாண இடப்பெயர்வு உள்ளிட்ட கடந்தகாலத்தின் பல இடப்பெயர்வுகளை உங்கள் படைப்புகள் உச்ச படைப்பெழுச்சியுடன் பதிவு செய்திருக்கின்றன. அவற்றில் மக்களது பாடுகளை, அவர்கள் கொண்ட இழப்பின் துயரங்களை எல்லாம் எதிர்காலம் குறித்த நம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடிந்திருக்கிறது. உங்கள் படைப்புகளில்-அந்த நம்பிக்கை நீங்கள் நம்பிய அரசியலில் இருந்து வந்தது. இறுதிப்போர் உக்கிரமாய் தொடர்ந்த போது கூட உங்களது வரிகள் நினைவிற்கு வந்திருந்தன.
காடே
நல்ல காடே
அவர்களை கைவிடாதே.
கடலே
நல்ல
கடலே
அவர்களை கைவிடாதே
மழை
நீச மழை
எனது மக்களை நெருக்குகிறதே
குற்றமற்ற எனது மக்கள்
துக்கத்தால்
சித்தப்பிரமை பிடித்தவர்
போலாயினரே
வனப்பெலா மிழந்து
விதவைகள் போலவே
மண்நகரின் தாழ்வாரத்தில்
மழையில் நனைந்து நனைந்து…
இப்படியான பாதிப்பூட்டும் பதிவுகள் வன்னி மான்மியத்தில் குறிப்பாக மண்பட்டினங்கள் போன்ற கவிதைகளில் இருந்தன. ஆனால் காடும் கடலும் சகலதரப்புக்களும் கைவிட்டு முள்ளிவாய்க்காலுக்குள் வந்தடங்கிய மக்களின் இடப்பெயர்வு, இறுதிப்போர் மற்றும் அதன் முடிவு- இவ்வாறான ஒரு மனித அழிவை கண்ட உங்களால் – உங்கள் படைப்புக்களாய் அந்த அனுபவத்தை எவ்வாறு எதிர்கொள்ள முடிகிறது? முக்கியமாக நீங்கள் நம்பிய ஒரு அரசியலின் வீழ்ச்சியின் பிற்பாடு? எதிர்காலம் குறித்த உங்கள் நம்பிக்கைகள் எதுவும் புலப்படாத காலத்தில்?
நிலாந்தன் : நாம் நம்பிய அரசியல் வீழ்ச்சியுற்றதாக யார் சொன்னது? நாம் நம்பிய அரசியல் என்று நீங்கள் கருதுவது எதனை? எல்லா படைத்துறை தோல்விகளும் அரசியல் தோல்விகளாகிவிடுவதில்லை. எல்லா பிரச்சனைகளிற்கும் யுத்தகளமே இறுதி தீர்வாக அமைந்து விடுவதுமில்லை. ஆயுதபோராட்டம் தோற்கடிக்கப்பட்டதன் விளைவாக உருவாகிவரும் புதிய பிராந்திய மற்றும் சர்வதேச சூழலானது தமிழர்களிற்கு பிரகாசமான வாய்ப்புகளை திறந்து வைத்திருக்கிறது. வீரத்தை தூக்கியது ஒரு காலம், அது ஒரு வீரயுகம். அது முடிந்து விட்டது. இனி அறிவை தூக்க வேண்டும். இனி அறிவுதான் ஆயுதம். அறிவுதான் சக்தி. அறிவுதான் பலம். புத்திமானே பலவான்.
கேள்வி : யாழ் சமூகத்தின் சாதிய அதிகார கட்டுமானங்களில் தமிழீழ விடுதலை போராட்டத்தினால் ஏதேனும் மாற்றங்களை கொண்டு வர முடிந்தது என்ற நம்பிக்கையை வைத்திருக்க கூடியதாக உள்ளதா இன்றைய சூழல்?
நிலாந்தன் : சுமார் முப்பத்தெட்டு ஆண்டுகால ஆயுத போராட்டமானது ஆயிரம் ஆண்டுகால சாதியின் வேர்களை எப்படி அதிரடியாக அறுக்க முடியும்? ஆனால் சாதி மைய சிந்தனைகளில் அது திரும்பிச் செல்லவியலாத அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.
கேள்வி : உங்களது பிள்ளையார் ஒவியங்களை பார்த்திருக்கிறேன். உங்களது ஓவியங்களது கருப்பொருளாக பிள்ளையார் வந்தது எப்படி அமைந்தது? அவரை வரைதலிலும் போரின் தாக்கம் இருக்கிறதா? அல்லது யுத்தப்பிண்ணனி மனநிலையிலிருந்து விடுபட விரும்பும் மனதின் குறியீடாக இருந்தாரா பிள்ளையார்?
நிலாந்தன் : எனது பிள்ளையார் ஓவியங்கள் அனைத்தும் போர் ஓவியங்களே.
கேள்வி : உங்களது ஓவிய முயற்சிகள் தற்பயிற்சியில் வந்தவை என்று கூறியிருக்கிறீர்கள். ஓவியத்தின் மீதான ஈர்ப்பிற்கு மாற்கு மாஸ்டர் போன்றவர்களின் காலம் காரணமாய் அமைந்ததா?
நிலாந்தன் : என்னுடைய தாத்தா நன்றாக படம் வரைவார். அவரிடம் இருந்து பெற்றதே இது. பாடசாலையில் அ.ராசையாவிடம் தனியே சில ஆண்டுகள் ஒவியம் பயின்றேன். அப்பொழுது எனது வகுப்பில் நான் ஒருவன்தான் ஒவியத்தை ஒரு பாடமாக எடுத்திருந்தேன். பின்னாளில் யேசுராசாவினூடாக மாற்குவிடம் நெருக்கம் எற்பட்டது. நான் அவரது மாணவன் அல்ல. ஆனால் என்னை செதுக்கியவர்களில் அவரும் ஒருவர்.
கேள்வி : உங்களது ஒவியங்கள் இப்போது கைவசம் இருக்கின்றனவா?
நிலாந்தன் : அனேகமாக இல்லை. இருபத்திமூன்று தடவைகளிற்கு மேல் இடம்பெயர்ந்துள்ளேன். இந்த இடப்பெயர்வுகளின் போது எனது படைப்புக்கள் எதனையுமே நான் எடுத்து வரவில்லை.
கேள்வி : உங்களை பாதித்த பாதிக்கிற ஒவியர்களை பற்றி?
நிலாந்தன் : நிறங்கள் வடிவங்களினூடாக நிறங்கடந்த வடிவங்கடந்த அனுபவங்களை பகிரும் எல்லா ஓவியர்களையும் எனக்கு பிடிக்கும்.
கேள்வி : முகாமிலிருந்து வெளியே வந்ததும் உங்களை போன்றவர்கள் எழுதிய கருத்துக்கள் தமிழ்தேசிய மனநிலையால் எடுத்து கொள்ளப்பட்ட விதத்தை எவ்வாறு எதிர்கொண்டீர்கள்? குறிப்பாக யுத்தத்தின் சாட்சிகள் எவ்வித பரிசீலனையுமின்றி துரோகிகள் ஆக்கப்பட்டமை. மற்றது துரதிஸ்டவசவமாக அத்தகையதொரு மனநிலையே நீங்கள் நம்பிய தேசியவாத கலாச்சாரத்தின் கூறு என்கிற போது?
நிலாந்தன் : முதலாவதாக ஒன்றைச்சொல்ல வேண்டும். விமர்சனங்கள் வரட்டும். அவை அறிவு பூர்வமானவையோ இல்லையோ ஆக்கபூர்வமானவையோ இல்லையோ முதலில் அபிப்பிராயங்கள் வரட்டும். ஏனெனில் மாறுபட்ட அபிப்ராயங்களும் அவற்றின் மீதான விமர்சனங்களுமே அரசியலின் அடித்தளத்தை அறிவுபூர்வமானதாக மாற்றும். மாறுபாடுகளே பன்மைத்துவத்தின் அடித்தளம். பன்மைத்துவமே ஜனநாயகத்தின் அடித்தளம். எனவே ஈழத்தமிழர்கள் மத்தியில் உண்மையான அக ஜனநாயகத்தை உருவாக்க விமர்சனங்கள் வரட்டும்.
இரண்டாவது – நீங்கள் குறிப்பிடும் தமிழ்த்தேசிய மனோநிலை பற்றியது. உண்மையில் அது ஒரு தேசிய மனோநிலையல்ல. அது ஒரு கறுப்பு வெள்ளை மனோநிலை. ஒரு சராசரி தமிழ் மனம் தனது பக்தி இரத்தத்திலிருந்து பெற்ற கறுப்பு வெள்ளை சிந்தனா முறையது. பக்தி இரத்தமானது எதையுமே தேவர்-அசுரர், கதாநாயகன்-வில்லன், தியாகி-துரோகி என்று வகிடு பிரித்து பார்க்கவே முயலும்; அது எதையுமே இந்த அளவுகோல்களிற்கு தோதாக தட்டையாக்கியே பார்க்கும். இந்த கறுப்பு வெள்ளை சிந்தனை முறையைதான் பலரும் தேசிய உணர்வாக மாறாட்டம் செய்கிறார்கள். இல்லை. இது ஒரு தேசிய மனோநிலையே அல்ல. நாங்கள் என்றைக்குமே இதை நம்பியதும் இல்லை. எங்களுடைய இந்த நிலைப்பாடு விடுதலை புலிகள் இயக்கத்தின் உயர்மட்டத்திற்கு நன்கு தெரியும். வன்னியிலிருந்த எதையும் புத்திபூர்வமாக அணுகும் எவருக்கும் இது தெரியும்.
ஆயின் உண்மையான தேசிய மனோநிலையென்றால் என்ன? இதை இன்னும் ஆழமாக பார்க்க வேண்டும்.
கேள்வி : தேசியம் என்றால் என்ன?
தேசியம் எனப்படுவது அதன் பிரயோக வடிவத்தில் ஒரு மக்கள் திரளின் கூட்டுப்பிரக்ஞை ஆகும்.
அது இனப்பிரக்ஞையாகவோ மொழிப்பிரக்ஞையாகவோ மதப்பிரக்ஞையாகவோ அல்லது பிராந்திய பிரக்ஞையாகவோ அல்லது வேறெந்த பிரக்ஞையாகவோ கூட இருக்கலாம். முக்கியமாக அது வேர் நிலையில் முற்போக்கானதாகவே இருக்க வேண்டும் என்றில்லை. ஆனால் அந்த பிரக்ஞையை நெறிப்படுத்தி தலைமை தாங்கும் அரசியல் இயக்கம் அல்லது கட்சி அதை முற்போக்கானதாக பண்பு மாற்றம் செய்ய வேண்டும்.
உதாரணமாக, தனது வேரில் இனவெறியாக அல்லது மதவெறியாக அல்லது பிராந்திய வெறியாக அல்லது மொழி வெறியாக உருவாகும் ஒரு அடி நிலை தேசிய உணர்வை அதாவது கீழிருந்து மேலெழும் அந்த கூட்டு பிரக்ஞையை மேலிருந்து கீழிறக்கப்படும் ஜனநாயகத்தின் மூலம் ஒளிபாய்ச்சி புதிய ஊட்டச்சத்தை இறக்கி அதில் இருக்ககூடிய வேர்நிலை நோய்க்கூறான அம்சங்களை மெல்லமெல்ல இருள் நீக்கம் செய்ய வேண்டும்.
அதாவது மேற்கத்தைய ஆய்வாளர்கள் கூறுவது போல “தேசியத்தின் உள்ளடக்கம் ஜனநாயகமாக இருக்க வேண்டும்.”
அத்தகைய ஒரு தேசியம்தான் எப்பொழுதும் சர்வதேசியமாக விரியும் தன்மையுடையதாக காணப்படும். இல்லையெனில் அது தனக்குள் உட்சுருங்கும் குறுந்தேசியமாக இறுகிக்கட்டி பத்திவிடும்.
இதெல்லாம், குறித்த தேசிய பிரக்ஞைக்கு தலைமை தாங்கும் அமைப்பின் மனவிரிவில்தான் தங்கியுள்ளது. வெளிவிரியும் தேசியம்தான் எப்பொழுதும் சமயோசிதமான வெளியுறவு கொள்கைகளை கொண்டிருக்கும். மாறாக உட்சுருங்கும் தேசியமானது, கையாளப்பட வேண்டிய தரப்புக்களை எல்லாம் பகை நிலைக்குத்தள்ளி ஒரு கட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டு அழிக்கப்பட்டுவிடும்;. இந்த விளக்கத்தின் பின்னணியில் வைத்து நீங்கள் கேட்ட கேள்விக்குரிய விடையை கண்டுபிடிக்கலாம்.
கேள்வி : இறுதிப்போரின் தோல்வி-விடுதலைப்புலிகளின் வீழ்ச்சி புலத்திலும் பலரை பாதித்தது. புலிகள் மீது விமர்சனங்களை கொண்டிருந்தவர்கள் உட்பட. இவை இந்த போராட்டத்தில் தமது வாழ்வின் ஏதோ ஒரு பகுதியை, இளமையை, நண்பர்களை, உறவுகளை இழந்தவர்களது தாக்கமாக இருந்தது. கிட்டத்தட்ட உங்கள் வாழ்வின் பெரும்பகுதியையே போருக்குள் செலவழித்த உங்களது தலைமுறை இந்த தோல்வியை- உங்கள் கண்முன் நிகழ்ந்த மனித அழிவை அதன் தாக்கத்தை எப்படி எடுத்து கொண்டீர்கள்? அதிலிருந்து மீளல் இந்த சமூகத்தில் சாத்தியப்படுகிறதா?
நிலாந்தன் : மரணத்துள் மெய்யாகவே வாழ்ந்த எவருக்கும், மரணத்தின் ருசி மிகத்தெரிந்த எவருக்கும் மரணம் ஒரு முடிவல்ல எனத்தெரியும்.
வரலாற்று பிரக்ஞை அல்லது வரலாற்ற உணர்வு எனப்படுவது மரணத்தை ஒரு முடிந்த முடிவாக ஏற்றுக் கொள்ள மறுப்பதிலிருந்தே முகிழ்ந்தெழுகிறது. மரணத்தை ஒரு முடிவாக ஏற்றுக் கொண்டால் வரலாறு எனப்படுவது வெறுமனே நாயகர்கள் அல்லது தலைநகரங்களின் பெயர்ப்பட்டியலாக சுருங்கி போய்விடும்.
எனவே வரலாற்று பிரக்ஞை உடைய எந்த ஈழத்தமிழரும் நந்திக்கடலை ஒரு முடிவாக அல்லது நந்திக்கடலோடு ஈழத்தமிழர்களின் வரலாறு உறைந்து போய் விட்டதாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பதிலாக அதை அவர்கள் ஒரு யுக மாற்றமாகவே பார்ப்பார்கள்.
நந்திக்கடலின் பின் ஈழத்தமிழ் அரசியலில் நான்கு முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. முதலாவது, இந்தியாவிற்கும் ஈழத்தமிழ் அரசியலிற்குமிடையிலிருந்த சட்டப்பூட்டு திறக்கப்பட்டு விட்டது.
இரண்டாவது அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் ஈழத்தமிழர்களை நோக்கி அதிகம் நெருங்கி வருகின்றன.
மூன்றாவது, பிராந்திய இழுவிசைகளிற்கிடையில் சிக்கியே ஈழப்போராட்டம் சின்னாபின்னமாகியது. இப்பொழுது ஈழப்போராட்டம் இல்லாத வெற்றிடத்தில் இரு பிராந்திய பேரரசுளிற்குமிடையிலான இழுவிசைக்குள் கொழும்பு சிக்கியிருக்கிறது.
நாலாவது, ஈழத்தமிழர்களின் அரசியலானது ஒரு புதிய பன்மைத்துவத்தை நோக்கி அதாவது அக ஜனநாயகத்தை நோக்கி செல்ல தேவையான கதவுகள் போதியளவு திறக்கப்பட்டு விட்டன.
எனவே தமிழர்கள் உள்ளேயும் வெளியேயும் தங்களுடைய புதிய பலங்களை ஒருங்கு திரட்ட வேண்டிய ஒரு காலகட்டம் இது. இத்தருணத்தில் ஒரு பழைய யுகத்தின் புதைமேட்டில் குந்தியிருந்து இறந்த காலத்தை மம்மியாக்கம் (mummfy) செய்யவதை கைவிட்டு, வரலாற்று பிரக்ஞை மிக்க எல்லா ஈழத்தமிழர்களும் இறந்த காலத்திலிருந்து பெற்ற படிப்பினைகளின் அடிப்படையில் ஒரு புதிய யுகத்தின் புதிய பாடுபொருளை தேடத்தொடங்க வேண்டும்.
கேள்வி : ஆரம்ப கட்டத்தில் இடதுசாரி சிந்தனைகளின், தலைவர்களின், நாடுகளின் தாக்கம் பெரும்பாலான இயக்கங்களில் இருந்திருக்கிறது. புளொட், ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எப் போன்றன இதில் முதன்மையானதாக இருப்பினும், புளொட் அதிதீவிரமாக இருந்ததென நினைக்கிறேன். வர்க்க விடுதலையின் வழியேதான் தேசியவிடுதலை சாத்தியமென்ற பார்வை அவர்களிற்கிருந்தது. இப்படியான தத்துவார்த்த சிக்கலெதுவும் புலிகளிற்குள் அதிகமிருக்கவில்லை. இந்த தன்மைதான் புலிகளை நீண்டகாலம் தாக்குபிடிக்க வைத்ததென சொல்லலாமா? பிற இயக்கங்களிலிருந்து புலிகள் வேறுபட்ட இடங்களெவை?
நிலாந்தன் : இலங்கைத்தீவில் வர்க்க முரண்பாட்டை விடவும் இனமுரண்பாடே மேலோங்கி நிற்கிறது. இத்தகைய ஓர் அரசியல்களத்தில் இனச்சாய்வுடைய ஓர் அமைப்போ கட்சியோதான் பெருந்திரள் வெகுசன அரசியலுக்குத்தலைமை தாங்க முடியும். மாறாக வர்க்க முரண்பாட்டை மையப்படுத்தும் எந்த ஒரு அமைப்பும் சிறுதிரள் இலட்சியவாதிகளின் மாற்று அரசியலைதான் முன்னெடுக்கலாம். இது தமிழ் மார்க்சியர்களிற்கும் பொருந்தும்; சிங்கள மார்க்சியர்களிற்கும் பொருந்தும்.
எனவே வர்க்க முரண்பாட்டை முதன்மைபடுத்தியது போல தோன்றிய இயக்கங்கள் ஒரு கட்டத்தில் இனமுரண்பாட்டை மையப்படுத்த தொடங்கின. சில இயக்கங்கள் ஈரூடக தன்மையுடன் காணப்பட்டன.
ஆனால் புலிகளிடம் இத்தகைய குழப்பங்கள் ஏதும் இருக்கவில்லை. அவர்கள் கோட்பாட்டு விளக்கங்களில் அதிகம் இறங்கியதில்லை. அதற்கு அவர்களிற்கு கால அவகாசமும் இருக்கவில்லை. அது ஒரு ‘அக்சன் ஓரியன்டட்’ இயக்கம். அவர்களுடையது ஒரு செயல் மைய அரசியல். செயல்படாது சித்தாந்த விவாதங்களில் ஈடுபட்டவர்களை விடுதலைப்புலிகள் சாகப்பயந்தவர்கள் என்றோ கதைகாரர் என்றோ இகழ்ந்தார்கள். செயலுக்கு போகாத அறிவை அவர்கள் சாக பயந்த கோழைகளின் அறிவென்று கூறி நிராகரித்தார்கள். நவீன தமிழ் வீரத்தையும் தமிழ் தியாகத்தையும் விடுதலைப்புலிகளே அதன் உச்சத்திற்கு இட்டு சென்றார்கள். அதே சமயம் தமிழ் வீரமும் தமிழ் அறிவும் ஒன்று மற்றதை இட்டு நிரப்பும் அரசியல் பொறிமுறை ஒன்றை உருவாக்க அவர்களால் முடியாது போய்விட்டது.
தமிழில் இது ஒரு சோகமான பாரதூரமான இடைவெளி. அதாவது கோட்பாட்டாளர்களிற்கும் செயற்பாட்டாளர்களிற்குமிடையில் காணப்பட்ட இடைவெளி. கோட்பாட்டாளர்களால் செயலிற்கு போக முடியவில்லை. செயற்பட்டவர்களிற்கு கோட்பாட்டு ஆழங்களிற்குள் இறங்க அவகாசம் இருக்கவில்லை. இந்த இரு வேறு ஒழுக்கங்களிற்கிடையிலான துரதிஸ்டமான இடைவெளி இன்று வரை தொடர்கிறது. சுமார் மூன்று இலட்சம் உயிர்களை கொடுத்த பின்னும் தொடர்கிறது. இதை வியட்நாமிய புரட்சியின் உதாரணத்திற்கு ஊடாக சொன்னால், தமிழில் கோசிமினும் ஜெனரல் ஹியாப்பும் சந்திக்கவேயில்லை எனலாம்.
கேள்வி : எமது சூழலில் இடதுசாரித்துவம் பெரும்பாலும் சிந்தனை சார்ந்த ஒரு முறைமையாகவே நிலவி வருகிறது. விதிவிலக்குகள் தவிர்த்து, செயற்பாட்டு ரீதியான அடையாளங்கள் மிகக்குறைவு. இந்த விபத்து எவ்வாறு நேர்ந்தது? பல இயக்கங்களின் தோல்விக்கு இதனையொரு காரணமாக கொள்ளலாமா?
நிலாந்தன் : இந்த உலகத்தின் அறிவனைத்தையும் கிரகித்து கொண்டாலன்றி ஒருவன் மார்க்சிஸ்டாக உருவாக முடியாதென்று மார்க்சிய மூலவர்கள் கூறுவார்கள். இத்தகைய தகைமையுடைய மார்க்சிஸ்ட்டுகள் இலங்கைத்தீவில் மிக அரிதாகவே தோன்றினார்கள். ஆனால் யாராலும் இலங்கைத்தீவில் இன யதார்த்தத்தை மீறிப் போக முடியவில்லை. இது தமிழ் இயக்கங்களிற்கும் பொருந்தும். ஆனால் புலிகள் அல்லாத தமிழ் இயக்கங்களின் தோல்விக்கு இது ஒரு காரணம் அல்ல. ஏனெனில் தமிழ் இயக்கங்கள் மத்தியில் மார்க்சிய சொல்லாடல்கள் இடம்பெற்ற அளவிற்கு மார்க்சிய உள்ளடக்கம் இருக்கவில்லை.
கேள்வி : இயக்கங்களினுள் உருவான மோதலின் அடிப்படை என்ன? வெறுமனே அதிகாரத்தை நிலைநிறுத்தும் செயற்பாட்டினால் நிகழ்ந்ததா? அல்லது வேறெதுவும் நிகழ்ச்சி நிரலின் விளைவா?
நிலாந்தன் : தமிழ் தேசியத்தின் உள்ளடக்கமாக ஜனநாயகம் இருக்கவில்லை. இந்த வெற்றிடத்திலிருந்தே மேற்படி உட்பகைகளும் அசிங்கமான சகோதர சண்டைகளும் தோன்றின. இத்தகைய பகை முரண்பாடுகள் எப்பொழுதும் வெளிசக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கே வசதியாக முடிவதுண்டு. இதைப்பற்றி பின்னரும் விரிவாகக்கூறப்படுகிறது
கேள்வி : ஈழத்தில் முதல்முதல் நிகழ்த்தப்பட்ட தெருவெளி நாடகம்-விடுதலைக்காளி. அதுவரை அந்த வெளிப்பாட்டு முறைமை இங்கு நிகழ்த்தப்பட்டிருக்கவில்லை. விடுதலைகாளியின் உருவாக்கத்திற்கு மூலகாரணமாக இருந்திருக்கிறீர்கள். இந்த முறைமையில் நிகழ்த்தனருக்கும் பார்வையாளர்க்குமிடையிலான இடைவெளி மிகக்குறைவானதாயிருக்கும். இந்த முறைமை இங்கு செயற்படுத்தப்பட்ட போது, மக்களிடையே தீவிர எழுச்சியிருந்த காலகட்டம். ஆயுத இயக்கங்கள் மக்களிடையே செல்லப்பிள்ளையாக இருந்தனர். அன்றைய சூழல். உங்களை இந்த முறைமை பற்றி சிந்திக்க தூண்டியது என கொள்ளலாமா? மாறுபட்ட வடிவமொன்றை சிந்திக்க வேண்டிய சூழல் ஏன் உருவானது?
நிலாந்தன் : அது திம்பு பேச்சுவார்த்தைக்காலம். அப்போதிருந்த யுத்தநிறுத்தம் நிச்சயமற்றது என்றும் சமாதானம் ஒரு மாயை என்றும் வெகுசனங்களிற்கு எடுத்து கூறவேண்டிய ஓர் உடனடித்தேவை எற்பட்டது. அதாவது சனங்கள் ஈழப்போரின் முதலாவது சமாதான முயற்சியை நம்பி அதில் கரைந்து போய்விடக்கூடாது என்ற அவசரம் எல்லா இயக்கங்கள் மத்தியிலும் காணப்பட்டது. எனவே சனங்களிற்கு அதிகம் பரிச்சயமான ஏதாவதொரு வடிவத்தினூடாக செய்தியை எப்படி கூறலாம் என்று சிந்தித்த போதே விடுதலைக்காளி உருவானது.
கோயில்களில் உருவேறிக்கலையாடும் ஒரு பாத்திரத்தின்; மத உள்ளடக்கத்தை அகற்றி விட்டு அந்த இடத்தில் அரசியல் உள்ளடக்கத்தை வைத்தேன். கலையாடியை உருவேற்றும் மற்றும் பலன் கேட்கும் பக்தர்களின் வழமையான பாடல்கள் மற்றும் சொல்லாடல்களிலும் இவ்விதம் உள்ளடக்கத்தை மாற்றினேன். அதோடு வடிவம் கருதி சில நாட்டாரியல் கூறுகளையும் இணைத்தேன். அவ்வளவுதான். மையத்தில் நின்றாடும் கலையாடியும் அவரை சுற்றி வட்டமாக நின்றாடும் பக்தர்களுமாக ஒரு வடிவம் உருவாகியது.
அப்போதிருந்த யுத்த நிறுத்த சூழல் அதை தெருக்களில் இறக்க மிக வசதியாக இருந்தது. மாறிய புதிய அரசியல் சூழலின் உடனடி தேவை கருதி அவசரமாக உருவாக்கப்பட்டதே விடுதலைக்காளி. அது ஒரு நாடகமா இல்லையா என்பதை விடவும் அது குறிப்பிட்ட செய்தியை சனங்களிடம் உடனடியாக கொண்டு செல்கிறதா என்பதே உடனடித்தேவையாக இருந்தது. அந்த தேவைதான் வடிவத்தையும் தீரிமானித்தது. மற்றும்படி அதன் கலைத்துவ முழுமை குறித்து எனக்கும் விமர்சனங்கள் உண்டு.
கேள்வி : உங்கள் நோக்கம் அப்போது வெற்றியடைந்ததாக நினைக்கிறீர்களா?
நிலாந்தன் : யுத்தநிறுத்தம் பொய்யானது என்ற செய்தியை எவ்வளவு கெதியாக, பரவலாக, அதிரடியாக சொல்ல முடியுமோ அவ்வளவு கெதியாக சொல்வது என்ற நோக்கத்தில் அது வெற்றி பெற்றது.
கேள்வி : விடுதலைப்புலிகள் உட்பட்ட எல்லா அமைப்புக்களின் மீதும் வாய்ப்பாடாக சுமத்தப்படும் பிரதான குற்றச்சாட்டு- போராட்டத்தை மக்கள் மயப்படுத்தவில்லை என்பது. ஆயுத போராட்டத்தின் செல்நெறி குறித்த உங்கள் பார்வை அப்போது எப்படியிருந்தது? பொதுவான பார்வை தவிர்ந்த வேறுவிதமான எண்ணங்களிருந்தனவா? (ஏனெனில் ஆச்சரியமளிக்கும் விதத்தில் போராட்டத்தின் ஆரம்ப கட்டத்திலேயே விடுதலை செயற்பாடுகள் சார்ந்து கலையை மக்களிடம் எடுத்து செல்ல முயன்றிருக்கிறீர்கள்)
நிலாந்தன் : அவை முதிரா இளம்பிராயத்தின் இறுதி வயதுகளும் அதற்கடுத்து வந்த வயதுகளுமாகும். எதையும் ஒரு கோட்பாட்டு வெளிச்சத்தில் வைத்து விளங்கிக்கொள்ள தேவையான முதிர்ச்சியோ அனுபவமோ அப்போது இருக்கவில்லை. ஆனால் நீதிநெறிகளின் பாற்பட்டும் மனச்சாட்சிக்குப்பயந்தும் முடிவுகளை எடுக்க முடிந்தது. குறிப்பாக மு. தளையசிங்கம் அணியுடனான நெருக்கம் அந்நாட்களில் எதையும் அறிவுபூர்வமாக சுய விமர்சனம் செய்யும் ஓர் ஒழுக்கத்தை உருவாக்கி தந்தது. ஒப்பீட்டளவில் நீதியாகவும் மனச்சாட்சியோடும் நடந்திருக்கிறோம் என்றால் அதற்கு பிரதான காரணங்களில் ஒன்று மு.த அணியுடனான சேர்க்கையும்தான்.
இலங்கைதீவின் அரசியல் யதார்த்தத்தின் படி இனமுரண்பாடு மிகக்கூர்மையாக இருந்த யுத்தகளத்தில் இனத்தனித்துவத்தையும் மொழித்தனித்துவத்தையும் இனமானவீரத்தையும் போற்றும் ஒரு யுத்த பொறி முறையே மேலோங்கி சென்றது. எதையும் கோட்பாட்டு வெளிச்சத்தில் வைத்து விளங்கிக் கொள்ளும் ஓர் ஒழுக்கம் பின்தள்ளப்பட்டிருந்தது
அது ஒரு தலைகீழ் சமன்பாடு. அதாவது இராணுவதீர்மானங்களிற்கு கீழ்படியும் ஒன்றாக அரசியல் தீர்மானம் இருந்தது என்பது. ஆனால் உலகில் வெற்றி பெற்ற எல்லா போராட்டங்களிலும் அரசியல் தீர்மானத்தை செயற்படுத்தும் ஒரு கருவியாகத்தான் தாக்குதல் பிரிவு இருந்திருக்கிறது.
எனவே ஈழப்போரில் பலமடைந்த வந்த தலைகீழ்சமன்பாடு காரணமாக முதலில் செயல் பின்னர் அதற்கு கோட்பாட்டு விளக்கம் என்ற போக்கே முன்னுக்கு வந்தது. இதற்கு சமாந்தரமாக நிக்கரகுவா உதாரணத்தை இங்கே கூறலாம். நிக்கரகுவா புரட்சியில் ஒரு போராளித்தலைவனாக இருந்து பின்னாளில் புரட்சி அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகித்த ஒருவர் ஒரு பேட்டியின் போது பின்வரும் தொனிப்பட கூறியிருந்தார்… “நாங்கள் போராட்டத்தை ஆரம்பித்த போது எங்களிற்கு எந்த கோட்பாடும் தெரிந்திருக்கவில்லை. ஆனால் எதிரியை தாக்கினால் முன்னேறலாம் என்பது அனுபவத்தில் தெரிந்தது. அது வெற்றிபெற வெற்றிபெற விளக்கம் தானாய் கிடைத்தது. அதாவது கல்லை மேலே எறிந்தால் அது கீழே வரும் என்பது ஓர் அனுபவம். அதற்கு புவியீர்ப்பு விசை பற்றி ஏதும் தெரிந்திருக்க தேவையில்லை.”
ஈழப்போரிலும் மேற்சொன்ன விளக்கத்திற்கே கூடுதல் ஆதரவு காணப்பட்டது. முதலில் செயல் என்பது முதலில் சண்டை என்றே பொருள் கூறப்பட்டது. எனவே படைத்துறை சாதனைகளே எல்லாவற்றையும் தீர்மானித்த ஒரு களமது. அதில் கோட்பாடுகளை முன்னிறுத்தியவர்கள் கதைகாரர்கள் என்றோ சாகப் பயந்தவர்கள் என்றோ இகழப்பட்டார்கள். முதிராஇளம்வயதிலிருந்த என்னை போன்ற எல்லாருமே அந்த யுத்த சாகச அலைக்குள் ஒரு கட்டம் வரைக்கும் அள்ளுண்டு போனவர்கள்தான்..
கேள்வி : இலங்கையின் சுதந்திரத்திற்கு பின்பாக வேகமாக உருக்கொண்ட தமிழ்தேசியம் குறித்த பார்வை, ஆயுத போராட்ட காலத்தில் மிக தீவிரமாக தன்னை வடிவமைத்துக் கொண்டது. பின்னாட்களில் புலிகளும் தமிழ்தேசியமும் பிரிக்க முடியாத அடையாளங்களாகி விட்டிருந்தன. இப்போது புலிகள் இல்லை. இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டுவிட்டனர். மே.18இன் பின்னான தமிழ் தேசியத்தின் நிலையென்ன? அது காலாவதியாகி விட்டதாக நினைக்கிறீர்களா?
நிலாந்தன் : தேசியம் என்பது ஒரு சமூகத்தின் கூட்டு பிரக்ஞையாகும். ஒரு சமூகம் எந்தெந்த பொது அடையாளங்கள் தனித்துவங்கள் காரணமாக ஒரு திரளாக உருவாகிறதோ அந்த அடையாளங்கள் சிதைக்கப்படும் போதோ அல்லது அந்த அடையாளங்கள் காரணமாகவே நசுக்கப்படும் போதோ தோற்கடிக்கப்படும் போதோ அந்த அடையாளங்களின் மீதான விழிப்பு மேலும் தீவிரமாகும். இலங்கைத்தீவின் அனுபவத்தின்படி நந்திகடலின் பின்னரும் தீவு இரண்டாக பிளவுபட்டேயிருக்கிறது. அது வென்றவர்களிற்கும் தோற்றவர்களிற்குமிடையிலான பிளவாகும். விடுதலைபுலிகள் அதிகாரத்திலிருந்த போது அவர்களை விமர்சித்தவர்களும் எதிர்த்தவர்களும் கூட நந்திகடலின் பின் அந்த தோல்வியை தங்களுடையதும் கூட என்று உணர தலைப்பட்டுள்ளார்கள். எனவே தமிழ் தேசிய உணர்வு முன்னரை விட கூர்மையடைந்திருக்கிறது என்பதே கள யதார்த்தம்.
கேள்வி : ஆயுதப்போராட்டத்தின் வீழ்ச்சிக்கு காரணங்கள் என்னவாக இருக்கின்றன?
நிலாந்தன் : ஆயுதப்போராட்டத்தின் வீழ்ச்சிக்குப் புற காரணிகளும் அகக்காரணிகளுமுள்ளன.
புறக்காரணிகளாவன…
ஓன்று, சீனா இலங்கைக்குள் ஆழக்காலூன்றி விடும் என்ற அச்சத்தை அமெரிக்காவும் இந்தியாவும் பகிர்ந்து கொண்டமை.
இரண்டு, செப்ரெம்பர் பதினொன்றுக்கு பின்னர் உலகில் உள்ள தீவிரவாத இயக்கங்களிற்கெதிராக உருவாக்கப்பட்ட உலகளாவிய வியூகம்.
மூன்று, பலசாலிகளிற்கு சேவகம் செய்யும் தொழில்நுட்ப வளர்ச்சி.
இவற்றைச்சிறிது விரிவாக பார்க்கலாம்.
முதலாவதின்படி, யுத்தம் தொடங்கியதும் அமெரிக்காவோ அல்லது இந்தியாவோ எட்ட நின்றால் சிறிலங்கா சீனாவை நோக்கிப்போய்விடும் என்ற அச்சம் காரணமாக இரு சக்தி மிக்க நாடுகளும் சிறிலங்காவை பலப்படுத்துவதென்ற முடிவை எடுத்தன.
கடைசிக்கட்ட யுத்தத்தில் என்ன நடந்தது என்பது உலகின் பலசாலி நாடுகள் அனைத்திற்கும் தெரியும். சானல்4 இல் வெளியில் வந்ததை விட பல மடங்கு ஆவணங்கள் அவர்களிடம் உண்டு. இதை இப்பொழுது விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்திவருகிறது. சீனாவின் உள்நுழைவு விகிதத்தை இயன்றளவு மட்டுப்படுத்துவதற்காக தமிழர்கள் பலியிடப்பட்டார்கள் என்பதே உண்மை
இரண்டாவது காரணம், இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக உருவாக்கப்பட்ட உலகாவிய யுத்த வியூகம். செப்ரெம்பர் 11க்கு பின் மேற்கு நாடுகள் எதிர்கொண்ட அச்சுறுத்தல் எனப்படுவது உலகளாவியது. அல்கெய்தா ஓர் உலகளாவிய இயக்கம். அது திறந்த போர்க்களமும் உலகளாவியது. இந்த உலகளாவிய அச்சுறுத்தலை எதிர்கொள்ள உலகின் சக்திமிக்க நாடுகள் அனைத்தும் தமது தெரிந்தெடுக்கப்பட்ட வளங்கள், மூளைகள் என்பவற்றை ஒன்று திரட்டி உலகளாவிய வியூகம் ஒன்றை வகுத்தன. படைத்துறை, புலனாய்வு மற்றும் தகவல் பரிமாற்றதுறைகளில் உருவாக்கப்பட்ட இந்த உலகளாவிய வியூகத்திற்கெதிராக உள்நாட்டில் தமது அரசுகளிற்கெதிராக போராடிய அமைப்புக்கள் நின்று பிடிக்க முடியவில்லை.
விடுதலைப்புலிகள் ஒரு உலகளாவிய நிகழ்ச்சி நிரலை உடைய இயக்கமல்ல. அதனது போர்ப்பரப்பு உலகளாவியதுமல்ல. இது அமெரிக்காவிற்கும் தெரியும். இந்தியக்கதவுகள் பூட்டப்பட்டிருந்த நிலையில் விடுதலைப்புலிகள் அதிகமதிகம் மேற்கை நோக்கிச்சாய்ந்தார்கள். மேற்கில் எழுச்சி பெற்று வந்த கவர்ச்சி மிக்க துடிப்பான நிதிப்பலமுடைய புலம்பெயர் சமூகமும் இதற்கு ஒரு காரணம். இதனால் மேற்கு நாடுகள் விடுதலைப்புலிகளுடன் ஒரு வித மென்போக்குடன் நடந்து கொண்டன.
ரணில்-பிரபா ஒப்பந்தத்தில் விடுதலைப்புலிகள் ஒரு தரப்பாக எற்றுக் கொள்ளப்பட்டமையை இங்கு சுட்டிக்காட்டலாம். இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் நிலைமை அப்படி இருக்கவில்லை.
ஆனால் சமாதானம் முறிக்கப்பட்டதும் நிலைமை தலைகீழானது. ரணில் தோற்கடிக்கப்பட்டதால் இச்சிறு தீவில் தமது நிலை பலவீனமடைந்ததுடன் சீனா உள்நுழைவதற்குரிய கதவு அகல திறக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் கருதின.
மேலும் சமாதானத்தின் மூலம் விடுதலைப்புலிகளை பன்மைத்துவத்தை எற்றுக்கொள்ள செய்வதோடு தற்கொலைப்படையை கலைக்குமாறு தூண்டுவதுதே மேற்கு நாடுகளின் உள்விருப்பமாக இருந்தது.
ஆனால் சமாதானத்தை முறித்ததன் மூலம் இலங்கைத்தீவில் தமது நிகழ்ச்சி நிரல் தலைகீழாக்கப்பட்டு விட்டதாக அவைகருதின. எனவே இலங்கையரசாங்கம் சீனாவில் தங்கியிருந்த யுத்தம் செய்யும் ஒரு நிலை தோன்றுவதை தடுப்பதற்காக இந்தியாவும் அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகளும் கொழும்பை நேரடியாகவோ அல்லது மறைமுகமகாவோ விகித வேறுபாடுகளுடன் கையாளத்தொடங்கின.
இது தவிர்க்க முடியாதபடி ஏற்கனவே மேற்கு நாடுகள் உருவாக்கி வைத்திருந்த உலகளாவிய வியூகத்தினுள் விடுதலைப்புலிகள் இயக்கத்தையும் சிக்க வைத்து விட்டது.
மூன்றாவது, பலசாலிகளிற்கு சேவகம் செய்யும் தொழில்நுட்பம். தகவல் தொழில்நுட்பம் ஒரு கீழ்ப்படிவுள்ள சேவகன். ஆனால் கண்டுபிடிக்க கடினமான உளவாளி. அது ஒரு வலையமைப்பு. அந்த வலையமைப்பை பயன்படுத்தி மீன்பிடிக்கும் எவனையும் மீனாக மாற்றவல்ல ஒரு வலையமைப்பு. கூகிள் ஏர்த் போன்ற வளர்ச்சிகளின் பின் உலகம் நிர்வாணமாக்கப்பட்டுவிட்டது. அரசல்லாத எந்த ஓர் ஆயுத அமைப்பும் கடலிலோ வெட்ட வெளிகளிலோ சண்டை செய்வது கடினமாகி வருகிறது. ஜி.பி.எஸ் பின்தொடரும் தொழில்நுட்பமானது போராட்ட இயக்கங்களை நிழல் போல பின்தொடர்ந்து வருகிறது. விடுதலைப்புலிகள் இயக்கம் தகவல்தொழில்நுட்பத்தை கெட்டித்தனமாக கையாண்ட ஓர் இயக்கம். ஆனால் இறுதியில் அந்த வலையமைப்பிற்குள் அவர்களும் சிக்குண்டார்கள்.
இனி அகக்காரணிகளை பார்க்கலாம்…
அகக்காரணம் ஒன்றுதான். இந்த தாய்க்காரணத்திலிருந்தே ஏனைய எல்லா காரணங்களும் கிளை விடுகின்றன. அது என்னவெனில் தமிழ்தேசியத்தின் உள்ளடக்கத்தை ஜனநாயகத்தால் நிரப்ப தவறியமைதான்.
எந்த ஒரு தேசிய பிரக்ஞையும் அதன் வேர்நிலையில் இனமானம், இனத்தூய்மைவாதம், இனவீரம், இனஎதிர்ப்பு மொழித்தூய்மை, பிராந்திய, சாதி வேறுபாடுகள், பால்அசமத்துவம் போன்ற இன்னோரன்ன அம்சங்களின் சிக்கலான உணர்ச்சிகரமான கலவையாகவே காணப்படுகிறது. தமிழ் தேசியமும் இதற்கு விதிவிலக்கல்ல.
ஆனால் இந்த வேர்நிலை உணர்ச்சிகரமான அம்சங்களை படிப்படியாக அறிவுபூர்வமான ஜனநாயகத்தால் மாற்றீடு செய்ய வேண்டிய பொறுப்பு அந்த தேசியவிடுதலைப்போராட்டத்தை முன்னெடுக்கும் அமைப்புக்கே உரியது. ஆனால் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் அப்படி செய்வதற்கு தேவையான அகபுற காரணிகள் பலவீனமாக காணப்பட்டன. இவற்றில் மூன்று முக்கிய காரணிகளை பார்க்கலாம்
1. போதுவான தமிழ் உளவியல் எத்தகையது என்பது. அது எப்பொழுதும் பக்தி இரத்தத்தின் பாற்பட்ட உணர்ச்சிகரமான ஒரு மனோநிலைதான். அது எதையும் கறுப்பு வெள்ளையாகவே பார்க்கும். ஆனால் கறுப்பு வெள்ளை அணுகுமுறை பன்மைத்துவத்திற்கு எதிரானது. ஜனநாயகத்திற்கு தடையானது.
2. விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரு இராணுவ மையசிந்தனையுடையதாக காணப்பட்டது. பொதுவாக சராசரி தமிழ் உளவியலின் ஒரு கூறாக காணப்படும் ‘மிலிட்டரி மென்ராலிற்றி’யை விடுதலைப்புலிகள் சரியாக அடையாளம் கண்டு தலைமை தாங்கினார்கள்.
பிரிட்டிஸ் ஆள்பதிகளால் பாராட்டப்பட்டதும் நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் வெற்றிகரமாக கையாளப்பட்டதுமான மேற்சொன்ன ‘மிலிற்றரி மென்ராலிற்றி’க்குத்தலைமை தாங்குவது என்று முடிவெடுத்த ஓர் இயக்கத்தில் அரசியல் எனப்படுவது இராணுவ தீர்மானங்களிற்கு கீழ்படியும் ஒன்று என்ற ஒழுக்கமே மேலோங்கி காணப்படும். அப்படிப்பட்ட ஓர் ஒழுக்கத்தைப் புனிதமாகப்பேணி தமிழ் வீரத்தையும் தமிழ் தியாகத்தையும் அவற்றின் நவீனகால உச்சங்களிற்கு கொண்டு போன ஓர் இயக்கம் கறுப்பு வெள்ளை சிந்தனை முறைக்கு வெளியே வருவது இலகுவானதல்ல.
3. இந்திய காரணி. முதலாம் கட்ட ஈழப்போர் எனப்படுவது பெருமளவிற்கு இந்தியாவின் நிகழ்ச்சி நிரலிற்குள் நடந்ததொன்றுதான். விடுதலைப்புலிகள் அதனை சில சமயங்களில் வெற்றிகரமாக குழப்பிய போதும் கூட அந்த குழப்பங்களை தனக்கு சாதகமாக்கி தனது இலக்கை இந்தியா அடைந்தது. அதாவது அமெரிக்கா சார்பு ஜெயவர்த்தனவை தன்னிடம் மண்டியிட வைத்தது.
எனவே இந்திய தலையீடு காரணமாக 83 ஜூலைக்கு பின் தமிழர்களின் போராட்டம் திடீரென வீங்கியது. இது ஏற்கனவே சில ஆய்வாளர்களினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. படிப்படியான வளர்ச்சியின்றி திடீரென புடைத்து வீங்கியதால் எதையும் நிதானிக்க முடியவில்லை. 83 யூலைக்கு பின்னரான பெரும் உணர்ச்சிச்சூழலில் எல்லா இயக்கங்களும் நிதானமிழந்து வீங்கின. ஜெயவர்த்தன அரசை பணிய வைப்பதென்ற இந்திய நிகழ்ச்சி நிரலின்படி படைத்துறை சாதனைகளும் சாகசங்களும் உடனடித்தேவைகளாக காணப்பட்டன. இதுவும் இயக்கங்களிற்குள் தாக்குதல் பிரிவானது அரசியல் பிரிவை விட அதிகாரம் உடையதாக மாறக்காரணமாகியது. இதனால் உட்கட்சி ஜனநாயகம் செழித்தோங்க முடியாது போயிற்று. இது போன்ற பல காரணங்களினாலும் தமிழ் தேசியத்தின் உள்ளடக்கத்தை ஜனநாயகத்தால் நிரப்ப முடியாது போயிற்று.
படைத்துறை சிந்தனையே முதன்மை பெற்றதால் அரசியல் பிரிவென்பது சக்தி மிக்க யுத்த எந்திரத்தி;ன் ஒரு முக்கியத்துவம் குறைந்த அலகாக மாறியது. இதனால் தமிழ் வீரத்திற்கும் தமிழ் அறிவிற்குமிடையில் சமநிலைகாண்பது கடினமாகியது. இது காரணமாக ஒரு ஸ்திரமான தீர்க்கதரிசனமுடைய வெளியுறவுக்கொள்கையை வகுக்க முடியாது போயிற்று.
மேலும் சகோதரச்சண்டைகளும் நேசமுரண்பாடுகளும் பகை முரண்பாடுகளாக வளர்ச்சியடைவதை தடுக்க முடியவில்லை.
உட்கட்சி ஜனநாயகமின்மையால் உட்கட்சி மோதல்களையும் தலைமைத்துவ போட்டிகளையும் வெளிச்சக்திகள் இலகுவாக கையாள முடிந்தது.
முஸ்லீம்கள் தொடர்பாகவும் பிரதேசவாதம் தொடர்பாகவும் தீர்க்கதரிசனம் மிக்க ஒரு தேசிய கொள்கையை வகுக்க முடியாது போயிற்று. எல்லாவற்றிலும் இறுதியாக நாலாம் கட்ட ஈழப்போரில் கட்டாய ஆட்சேர்ப்பில் இடம்பெற்ற எல்லா அனர்த்தங்களிற்கும் கொடுமைகளிற்கும் இதுவே காரணம். அதாவது “தமிழ் தேசியத்தின் உள்ளடக்கம் ஜனநாயகமாக” இருக்க தவறியமை.
இந்த இடத்தில் ஒன்றைச்சொல்ல வேண்டும். விடுதலை புலிகளின் இடத்தில் வேறு எந்த இயக்கம் இருந்திருந்தாலும் இதுதான் நடந்திருக்கும். சிலசமயம் இதை விட மிக மோசமாகவும் நடந்திருக்க கூடும்.
மேற்சொன்ன அனைத்து பிரதான காரணங்களையும் சொல்லப்படாத உப காரணங்களையும் சமயோசிதமாகக்கையாண்டு சிறிலங்கா அரசாங்கமானது யுத்தகளத்தில் எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி செயற்படுவதற்கான லைசன்சையும் முன்னைய எந்த ஒரு அரசாங்கத்திற்கும் கிடைத்திராத அரிதான வாய்ப்புகளையும் பெற்றுக் கொண்டது. இதுவே நந்திக்கடல் விழ்ச்சிக்கு காரணம்.
கேள்வி : ஈழத்தமிழ் சமூக அமைப்பை பார்த்தீர்களானால் சாதியரீதியில், பிரதேச ரீதியில், மத ரீதியில் ஆழமாக பிளவுகளை தன்னக்தே கொண்டுள்ள சமூகம். அரசியல்,சமூக ரிதியிலான எந்த முடிவு மேற்கொண்டாலும் இதில் ஏதாவதொன்றுடன் சேர்த்தே அடையாளப்படுத்தப்பட்டது. அல்லது, ஒன்றிலிருந்து எதிர்க்குரல் கிளம்பியது. ஆக அக முரண்பாடுகளுடன் கூடிய சமூகமாகவே அதிருந்தது. இந்த குழப்பம், நமது பொதுப்பிரச்சனையான இன ஒடுக்கலிற்கெதிரான போராட்டத்தில் என்ன விதமான தாக்கங்களை செலுத்தியது?
நிலாந்தன் : தமிழ் தேசியத்தின் உள்ளடக்கம் ஜனநாயகமாக இல்லாத வெற்றிடத்தில் அக முரண்பாடுகள் பிரதான வெளிமுரண்பாடுகளை மேவியெழுவதை தவிர்ப்பது கடினம்.
கேள்வி : தமிழ் தேசியம் தன்னை சுதாகரித்து கொண்டு மிண்டெழும் என நம்புகிறீர்களா? ஆமெனில். அது தன்னை சுயவிமர்சனம் செய்து மீளுருவாக்கம் பெருகையில் என்னவிதமான அம்சங்களை களைய வேண்டியிருக்கும்? ஏவற்றை இணைத்த கொள்ள வேண்டியிருக்கும்? சமகால சூழலில் அதற்கான ஏதுநிலையுண்டா?
நிலாந்தன் : மீண்டும் மீண்டும் சொல்லுவேன். தமிழ் தேசியம் வீழ்ச்சியுறவில்லை. அதை முன்னெடுத்த ஒரு ஆயுதம் ஏந்திய அமைப்பே வீழ்ச்சியுற்றிருக்கிறது. அந்த வீழ்ச்சியால் தமிழ் தேசிய உணர்வுகள் மேலும் கூராக்கப்பட்டிருப்பதே யதார்த்தம்
கேள்வி : ஆயுத போராட்ட வரலாற்றை பார்த்தீர்களானால் 1980 களில் களத்தில் சுமார் நாற்பது இயக்கங்களிருந்தன. 1990களில் அது ஒற்றையிலக்கமாகி விட்டது. இரண்டாயிரத்தில் புலிகள் மட்டுமேயிருந்தன. இப்போது புலிகளுமில்லை. எனக்கு இரண்டு கேள்விகளுண்டு. 1) ஈழத்தின் சமூக அமைப்பு ஆயுத போராட்டத்திற்கு ஏற்ற ஒன்றில்லையா? 2) நமது பூகோள அமைவிடத்தின்படி ஆயுத போராட்டமோ தனிநாடோ சாத்தியமில்லையா?
நிலாந்தன் : முதலாவது கேள்விக்கான பதில் எற்கனவே கூறப்பட்டுள்ளது. சராசரி தமிழ் உளவியலின் ஒரு கூறாக காணப்படும் ‘மிலிற்றரி மென்றாலிற்றி’ ஆயுத போராட்டத்திற்கு எப்பொழுதும் சௌகரியமாக இருந்தது. இந்த சராசரித்தமிழ் உளவியலிற்கே விடுதலைப்புலிகள் இயக்கம் தலைமை தாங்கியது. ஆனால் ஈழத்தமிழர்கள் ஒரு சிறிய இனம் என்பதால் ஆயுத போராட்டத்தை ஆக குறைந்த காலத்திற்குள் உச்சத்திற்கு கொண்டு போய்விட வேண்டும் என சில ஆய்வாளர்களினால் சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால் பிராந்திய தலையீடுகளினாலும் எற்கனவே கூறப்பட்ட அகக்காரணங்களினாலும் போராட்டம் அதன் சக்திக்கு மீறி நீண்டு செல்ல தொடங்கியது.
சிறிய இனமாகிய ஈழத்தமிழர்களில் ஏறத்தாள மூன்றில் ஒரு பகுதியினர் புலம்பெயர்ந்து போய்விட்டனர். அவர்களிடம் இருந்து டொலர்கள் வந்தன. படையணிகள் வரவில்லை. ஆனால் டொலர்களினால் சண்டை செய்ய முடியாது. எவ்வளவு டொலர்கள் வந்தாலும் சண்டை செய்ய மனிதர்கள்தானே வேண்டும்?
புலம்பெயர்ந்த தமிழர்கள் போக எஞ்சிய சனத்தொகையில் பெரும்பகுதி அரச படைகளின் கட்டுப்பாட்டிற்குள் போய்விட்டது. இவை தவிர கிழக்கில் இருந்து கிடைத்து வந்த ஓர்மம் மிக்க ஆட்பலமும் இல்லை என்றாகியது.
இந்நிலையில் வன்னியில் சுற்றிவளைக்கப்பட்டிருந்த சுமார் மூன்று இலட்சத்து இருபதாயிரம் சனங்களே இறுதிகட்டத்தை எதிர் கொண்டார்கள். சாவினால் சப்பித்துப்பப்பட்டார்கள். எனவே நாலாம் கட்ட ஈழப்போரில் ஏற்பட்ட ஆட்பற்றாக்குறைகாரணமாக மேற்கொண்டவாறு கேட்க முடியாது.
இரண்டாவது கேள்விதான் முக்கியமானது. அதாவது இந்தியா. இந்தியா இந்த பிராந்தியத்தின் பேரரசு. இந்த பிராந்தியத்தில் நிகழ்ந்த எல்லா ஆயுதபோராட்டங்களின் இறுதி முடிவையும் இந்தியாதான் தீர்மானித்தது. தீர்மானிக்கிறது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னரான சுமார் அரை நூற்றாண்டிற்கு மேலாக இந்த பிராந்தியத்தில் நிகழ்ந்த எல்லா ஆயுதபோராட்டங்களையும் எடுத்துப்பார்த்தால் ஒன்றில் இரத்தகளரியில் முடிந்திருக்கும். அல்லது இரத்தகளரியின் பின் வலிந்து திணிக்கப்பட்ட ஓர் அரை குறை தீர்வில் முடிந்திருக்கும்;.
கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக, போராடும் இனங்களின் புதைகுழியாகவே இந்த பிராந்தியம் காணப்படுகிறது. இந்த அரைநூற்றாண்டு கால பகை பிராந்திய யதார்த்தத்தை உள்வாங்கி தீர்க்கதரிசங்களுடன் முடிவுகளை எடுக்க தவறின் தோற்கடிக்கப்பட்ட போராட்டங்களின் பட்டியலில் இணைய வேண்டியதுதான்.
இந்திய மாநிலங்களில் தோன்றிய எல்லா ஆயுத போராட்டங்களும், இலங்கை தீவில் நிகழ்ந்த இரண்டு ஜே.வி.பி கிளர்ச்சிகளும், தமிழர்களின் ஆயுத போராட்டமும் இதற்கு போதிய உதாரணங்களாகும்.
எனவே சுமார் அரை நூற்றாண்டுக்கும் மேலான பகை பிராந்திய வியூகத்துள் தமிழீழ விடுதலைப்போராட்டம் சிக்குண்டுள்ளது. இந்த வியூகத்தை தமக்கு சதகமானதாக மாற்ற தேவையான ராஜீய நுட்பங்களில் தமிழர்கள் இன்னமும் தேறக்கிடக்கிறது.
இந்தியா இலங்கை தீவை ஒரு முழு அலகாகத்தான் பார்க்கிறது. இதில் கொழும்பை ஒரு மையமாகக்கருதி கையாள்வதே இந்தியாவின் ராஜதந்திர செயற்தந்திரமாக உள்ளது. கொழும்பைக்கையாள முடியாத ஒரு நிலை வரும்போது தமிழர்களை ஒரு துருப்புச்சீட்டாக பயன்படுத்தி கொழும்பை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவார்கள். ஜெயவர்த்தன காலத்திலும் இதுதான் நடந்தது. ஜெயவர்த்தன கைக்குள்வந்ததும்; தமிழர்கள் கைவிடப்பட்டனர். பின்னர் நந்திக்கடலிலும் இதுதான் நடந்தது. கொழும்பை அரவணைக்க தவறினால் கொழும்பு சீனாவை உள்ளே கொண்டு வந்துவிடும் என்ற அச்சம் காரணமாகவும் தமிழர்கள் கைவிடப்பட்டனர். நந்திகடலின் முன்னரும் இதே நிலைதான். நந்திக்கடலின் பின்னரும் இதே நிலைதான். அதாவது கொழும்பை மட்டும் ஒரு மையமாகக்கருதி கையாள்வதன் மூலம் முழு இலங்கை தீவையும் இந்தியா கையாள முனைகிறது.
இந்த பல தசாப்பத கால இராஜதந்திர நடைமுறையில் தமிழர்களையும் ஒரு மையமாக கையாள வேண்டிய தேவை புதுடில்லிக்கு இன்று வரை ஏற்படவில்லை. அப்படி ஒரு நிலைமையை உருவாக்கும் முயற்சிகளில் அதாவது தங்களையும் இந்தியாவால் தவிர்க்கப்பட முடியாத ஒரு மையமாகக் கட்டியெழுப்பவதில் ஈழத்தமிழர்கள் எப்பொழுது வெற்றி பெறுகிறார்களோ அப்பொழுதுதான் இலங்கை தீவில் இப்போதுள்ள கள நிலைமைகளில் மாற்றம் எற்படும். அல்லது தென்னாசிய பிராந்தியத்தின் இப்போதுள்ள கள நிலைமைகளில், அதாவது பிராந்திய இழுவிசைகளிற்கிடையிலான சமநிலையில் ஏதும் திடீர்திருப்பம் ஏற்பட வேண்டும்.
நேர்காணல் : பிரதீபா, யோ.கர்ணன்
நன்றி : வல்லினம்
1 Comment