வன்னியில் – மல்லாவியில் சில மாதங்களுக்கு முன் நிகழ்ந்த சிவில் சமூக பிரதிநிதிகளுடனான சந்திப்பு ஒன்றின்போது, வளவாளர் ஒருவர் கேட்டார், ”நிலைமாறு கால கட்ட நீதி என்றால் என்ன? அதைப் பற்றி யாராவது இதற்கு முன் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா?’ என்று. அதற்கு ஓர் இளம்பெண் சொன்னார், ”ஏதோ ஒரு பத்திரிகைச் செய்தியில் ஒரு முறை வாசித்ததாக ஒரு சிறு ஞாபகம்’ என்று…
இது தான் நிலைமை. தமிழ் மக்களில் பெரும்பாலானவர்களுக்கு நிலைமாறு கால கட்ட நீதி என்றால் என்னவென்றே தெரியாது. தமிழ் அரசியல்வாதிகளில் எத்தனை பேருக்கு இது பற்றி விளக்கம் உண்டோ தெரியவில்லை. தமிழ் புத்திஜீவிகளில் சிறு தொகுதியினருக்கும், என்.ஜி.ஓக்களில் சில பகுதியினருக்கும் அதுவொரு காசு காய்க்கும் மரம். இதில் மிகச் சிறிய அளவிலான தமிழ் புத்திஜீவிகளும் செயற்பாட்டாளர்களும் ஊடகவியலாளர்களுமே நிலைமாறு கால கட்ட நீதி பற்றி கேள்வி எழுப்பி வருகிறார்கள்
.
நிலைமாறு காலகட்ட நீதியை தமிழ் மக்களின் நலன்களின் அடிப்படையில் இரண்டு விதமாக நோக்க வேண்டும். முதலாவதாக, இது நிலைமாறு காலகட்டம்தானா? என்ற கேள்வி. இரண்டவதாக, இதை ஒரு நிலைமாறு காலகட்;டம் என்று சொல்லிக்கொண்டு, பெருமளவிற்கு என்.ஜி.ஒக்களிடமே அதை ஒப்படைத்திருப்பது தொடர்பானது.
முதலாவதாக, இது நிலைமாறு காலகட்டம்தானா? என்பது. ஐ.நா.வின் வரைவிலக்கணத்தின்படி, போரிலிருந்து போரின்மையை நோக்கி அல்லது அரசியல் ஸ்திரமின்மையிலிருந்து அரசியல் ஸ்திரத்தை நோக்கி அல்லது கொடுங்லோட்சியிலிருந்து ஜனநாயகத்தை நோக்கிச் செல்கின்ற இடைப்பட்ட கால கட்டமே நிலைமாறு கால கட்டம் எனப்படுகிறது. இக்கால கட்டத்தில் முன்னைய கால கட்டங்களில் பாதிப்புற்ற மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கான செயற்பாடுகளே நிலைமாறு காலகட்ட நீதி செயற்பாடுகள் என்றழைக்கப்படுகின்றன.
இந்த அடிப்படையில்தான்;, இலங்கை தீவில், இப்பொழுது நிலவும் காலகட்டத்தை ஐ.நாவும், மேற்கு நாடுகளும் நிலைமாறு காலகட்டம் என்று அழைக்கின்றன. அதிலும் குறிப்பாக, ஆட்சி மாற்றத்தின் பின்னரான கடந்த 16 மாத காலகட்டமே அதிகம் குவிமையப்படுத்தப்படுகிறது. ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரை போர் ஒரு விளைவுதான். ராஜபக்ஷவும் ஒரு விளைவுதான். ஆயுதப் போராட்டமும் ஒரு விளைவுதான். ஆட்சி மாற்றமும் ஒரு விளைவுதான். மைத்திரிபாலசிறி சேனாவும் ஒரு விளைவுதான். எனவே, விளைவுகளின் மாற்றம் எனப்படுவது தமிழ் மக்களைப் பொறுத்தவரை முழுமையானது அல்ல. அடிப்படையானதும் அல்ல. மூல காரணத்தில் ஏற்படக்கூடிய மாற்றமே தமிழ் மக்களைப் பொறுத்த வரை அடித்தள மாற்றமாக அமைய முடியும். ஆயின் மூலகாரணம் எது?
சிங்கள பௌத்த மேலாண்மை வாதம் தான் மூலகாரணம். அந்த கோட்பாட்டை அடிச்சட்டமாகக் கொண்டு கட்டியெழுப்பப்பட்டிருக்கும் சிங்கள அரசுக் கட்டமைப்பே மூல காரணம். அந்தக் கோட்பாட்டிற்கு சட்ட உடலமாகக் காணப்படும் அரசியல் அமைப்பே மூலகாரணம். அந்தக் கோட்பாட்டைப் பாதுகாப்பதற்கான ஒற்றையாட்சி முறைமையே மூலகாரணம்.
இந்த மூல காரணத்தில் மாற்றம் வராதவரை எந்தவொரு மாற்றமும் மேலோட்டமானதே. இந்த மூல காரணத்தில் ஏற்படக்கூடிய மாற்றத்தைத்தான் தமிழ் மக்கள் நிலைமாறு கால கட்டம் என்று ஏற்றுக்கொள்ளலாம். இந்த அடிப்படையில் பார்த்தால், இப்போது நிலவும் காலகட்டமானது அதன் முழுப் பொருளில் நிலைமாறு கால கட்டம் அல்ல. எனவே, இக்கால கட்டத்தில் தமிழ் மக்களுக்குரிய நீதியானது அதன் முழுப் பொருளில் கிடைக்கப்போவதில்லை. சிங்கள் பௌத்த மேலாண்மைச் சிந்தனையில் மாற்றம் ஏற்படாவிட்டால் அரசியல் அமைப்பில் ஒற்றையாட்சி முறைமை மாற்றப்பட்டமாட்டாது. வடக்கு கிழக்கு இணைப்பும் நெருக்கடிக்குள்ளாகும். பாதுகாப்புக் கொள்கையிலும் மாற்றம் வராது. காணிக் கொள்கையிலும் மாற்றம் வராது. இப்பொழுது நிலவும் சமூகப் பொருளாதார அரசியல் சூழல் இதுதான். ஆனால், இதைத் தான் மாற்றம் என்று ஐ.நா. கூறுகிறது. மேற்கு நாடுகள் கூறுகின்றன. இந்த மாற்றத்தை அடிப்படையாக வைத்து தமிழ் மக்களுக்குரிய நீதியை நிலைநாட்டப்போவதாகக் கூறிக்கொண்டு அதற்கென்று கோடிக் கணக்கில் பணம் உட்பாய்ச்சப்படுகிறது.
இதற்கென்று வெளியுறவு அமைச்சின் கீழ் யு.என்.யுனிட் என்று ஒரு பிரிவு பல மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டுள்ளது. அப்பிரிவின் கீழ் இலங்கைத்தீவிலுள்ள அனைத்துலக கவர்ச்சிமிக்க லிபரல் ஜனநாயகவாதிகளான இரண்டு செயற்பாட்டாளர்களின் பொறுப்பில் ஓர் உபகுழு உருவாக்கப்பட்டுள்ளது. நிலைமாறு கால கட்ட நீதி செயற்பாடுகளுக்கு பொறுப்பான அவ்வுபகுழு மாவட்டங்கள் தோறும் மேலும் உப குழுக்களை உருவாக்கி வைத்திருக்கிறது.
கடந்த ஆண்டு ஜெனிவாத் தீர்மானத்தில் அரசாங்கமும் ஒரு பங்காளி. எனவே, நிலைமாறு காலகட்ட நீதியை நிலைநாட்டுவதற்கான உறுதி மொழிகளை மனித உரிமைகள் ஆணையகத்திற்கு அரசாங்கம் வழங்கியது. அந்த உறுதி மொழிகளின்படி நிலைமாறு கால கட்ட நீதிக்கான நான்கு தூண்கள் என்று அழைக்கப்படும் நான்கு பிரதான விடயப் பரப்புக்கள் தொடர்பில் நடவடிக்கைககள் எடுக்கப்படும் என்று அரசாங்கம் ஐ.நா. உரிமைகள் ஆணையகத்திற்கு உறுதிமொழி வழங்கியது.
அதன்படி, காணாமற்போனவர்கள் தொடர்பாக விசாரணை செய்யும் அலுவலகம், உண்மை, நீதி, நல்லிணக்கம் மற்றும் மீள் நிகழாமை போன்றவற்றுக்கான ஆணைக்குழு, விசேட வழக்குத் தொடுப்போருக்கான நீதிப் பொறிமுறை, இழப்பீடுகளுக்கான அலுவலகம் போன்றவற்றை உருவாக்குவதாக அரசாங்கம் உறுதிவழங்கியது.
எனவே, அந்த அலுவலகங்களைத் திறப்பதற்கு அரசாங்கம் கடந்த ஜனவரி மாதம் 26ஆம் திகதி நல்லிணக்கம் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணி ஒன்றை நியமித்தது. அச்செயலணியின் நோக்கம் எதுவெனில், மேற்படி அலுவலகங்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றி பொதுமக்களுடைய கருத்துக்களை கேட்டு அரசாங்கத்திற்கு வழங்குவதே. எனவே, பிரதமரால் நியமிக்கப்பட்ட 11 அங்கத்துவர்களைக் கொண்ட நல்லிணக்கப் பொறிமுறைகள் தொடர்பான கலந்தாலோனைக்கான செயலணியானது கடந்த 11, 12,13ஆம் திகதிகளில் வலயச் செயலணி ஒன்றை உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள மக்களோடு கலந்துரையாடி அதில் பேசப்பட்ட விடயங்களை ஆவணப்படுத்தி, அவற்றை அரசாங்கத்திற்கு வழங்குவதே மேற்படி வலயச் செயலணியின் பணியாகும்.
இந்த அரசாங்கம் லிபரல் ஜனநாயகவாதிகளால் பாதுகாக்கப்படும் ஓர் அரசாங்கம். ராஜபக்ஷக்களின் ஆட்சிக்காலத்தில், அந்த ஆட்சிக்கு எதிராக தமிழ் மக்களின் பக்கம் நின்ற லிபரல் ஜனநாயகவாதிகள் பலரும் இப்பொழுது அரசாங்கத்தின் பக்கம் நிற்கிறார்கள். இவர்களில் ஒரு பகுதியினர் மேற்சொன்ன நிலைமாறு காலகட்ட நீதிச் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறார்கள். தமிழ் மக்கள் வாழும் நகரங்களுக்குச் சென்று சந்திப்புக்களை ஏற்படுத்தி, ”நீங்கள் எங்களை நம்புவதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்’ என்று கவர்ச்சியாகக் கேட்கிறார்கள். ஒற்றையாட்சி முறைமைக்குள் சமஷ;டிப் பெறுமானமுள்ள ஒரு தீர்வை எப்படி உருவாக்கலாம் என்று சிந்திப்பவர்களும் இவர்களே.
ஸ்கொட்லாந்தை முன்னூதாரணமாகக் கொண்டு ஒரு தீர்வை யோசிக்கலாம் என்று கூறுபவர்களும் இவர்களே. கூட்டமைப்பினர் ஸ்கொட்லாந்து போவதற்கு ஏற்பாட்டைச் செய்தது இப்படியொரு லிபரல் ஜனநாயகவாதியான புத்திஜீவிதான் என்று நம்பப்படுகிறது. அவர் பிரித்தானியாவின் ஒற்றையாட்சி முறைமையையும் இலங்கைத்தீவின் ஒற்றையாட்சி முறைமையையும் ஒப்பிட்டு இதில் இலங்கைத்தீவின் ஒற்றையாட்சி முறைமையானது பேரினவாதத் தன்மைமிக்கது என்று முன்பு கூறியிருக்கிறார். இப்பொழுது அவர் அந்த நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கியிருப்பதாக அவருடைய நண்பர்கள் கூறுகிறார்கள். அவர் இப்பொழுது இலங்கை அரசாங்கத்தின் யாப்பு உருவாக்கத்திற்கான ஆலோசகர்களில் ஒருவராக பணி புரிவதாகவும் கூறப்படுகிறது.
இப்படியாக, அனைத்துலக கவர்ச்சிமிக்க லிபரல் ஜனநாயகவாதிகளின் ஒத்துழைப்போடு நிலைமாறு காலகட்ட நீதிக்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அவர்கள் மாற்றம் என்று அழைக்கும் ஒன்றை ஆழமாக ஸ்தாபிப்பதற்காக பெருமளவு நிதியை செலவழித்து வருகிறார்கள். ஆனால், மூலகாரணத்தில் மாற்றம் வராத வரை இவ்வாறான செயற்பாடுகள் அகமுரண்பாடுகள் நிறைந்ததும் ஒன்று மற்றதுக்கு எதிரிடையானதுமான ஒரு போக்கையே உருவாக்கும் என்பதற்கு பின்வரும் மிகக் கூர்மையான ஓர் உதாரணத்தைச சுட்டிக்காட்டலாம்.
நிலைமாறு கால கட்ட நீதிக்கென்று கிட்டத்தட்ட 450 மில்லியன் டொலர்கள் தேவை என்று பல மாதங்களுக்கு முன் மதிப்பிடப்பட்டது. இந்நிதியானது நல்லிணக்கம், அமைதியைக் கட்டியெழுப்புதல், சமூக ஸ்திரத்தை ஏற்படுத்துதல், ஜனநாயக்கத்தைப் பலப்படுத்துதல் போன்ற நேர்மறையான அம்சங்களுக்கு பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டது. இது ஒரு வெளிநாட்டு நிதி. ஆனால், இலங்கைத்தீவின் கடைசி நிதி அறிக்கையைப் பார்த்தால், அதில் பாதுகாப்பு அமைச்சிற்கே அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இந்நிதியானது, ஆண்டுகள் தோறும் அது வளர்ந்து வந்த விகிதத்திற்கு ஏற்ப, இம்முறையும் அதிகரித்திருக்கிறது. இது அரச நிதி. அதாவது உள்நாட்டு நிதி. ஒரு புறம் படைத்துறையைப் பலப்படுத்துவதற்காக உள்நாட்டு நிதியின் ஆகக்கூடிய தொகை ஒதுக்கப்படுகிறது. அதேசமயம், இன்னொரு புறம் போரின் விளைவுகளை சீர்செய்வதற்காக வெளிநாட்டு நிதி உட்பாய்ச்சப்படுகிறது. அதாவது, உள்நாட்டு நிதியின் பெரும்பகுதி யுத்த எந்திரத்திற்கு ஒதுக்கப்படும் ஒரு குட்டித்தீவில் வெளிநாட்டு நிதியானது சமாதானப் பொறிமுறைகளுக்கு ஒதுக்கப்படுகிறதாம்? இதைவிட இலங்கைத்தீவின் நிலைமாறு காலகட்ட நீதிச் சூழமைவை விளங்கிக்கொள்வதற்கு வேறு கூரான உதாராணங்களைக் காட்ட முடியாது. இது முதலாவது.
இரண்டாவது, நிலைமாறு கால கட்ட நீதிப் பொறிமுறை எனப்படுவது ஓர் என்.ஜி.ஓ. செயற்பாடு மட்டும் அல்ல என்பது. மேற்கண்டவைகளின் அடிப்படையில் சிந்தித்தால் இலங்கைத்தீவில் நடைமுறையில் இருப்பது நிலைமாறு கால கட்டம் அல்ல என்பது தெளிவாகிறது. ஆனால், அதை நிலைமாறு காலகட்டம் தான் என்று ஸ்தாபிப்பதற்காக சிவில் அமைப்புக்களும் மனித உரிமை அமைப்புக்களும் என்.ஜி.ஒக்களும் களத்தில் இறக்கப்பட்டுள்ளன. நிலைமாறு கால கட்டம் எனப்படுவது முழுக்க முழுக்க ஓர் அரசியல் பதம். அது ஓர் அரசியல் செயற்பாடு. ஓர் அரசியற் தீர்மானத்தின் கீழ் என்.ஜி.ஒக்களை அதில் கருவிகளாகக் கையாளலாம். ஆனால், இப்போதுள்ள நடைமுறைகளின்படி அது பெருமளவிற்கு என்.ஜி.ஓ. வட்டாரங்களில் அதிகம் உச்சரிக்கப்படும் ஒரு சொற் தொகுதியாக மாறிவிட்டது. ஓர் அரசியல் விவகாரத்தை அதிக பட்சம் அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடாக மாற்றுவது என்பதும் ஓர் அரசியல்தான். இதன் மூலம் அதன் அரசியல் அடர்த்தி குறைக்கப்பட்டு நீர்த்துப்போகச் செய்யப்பட்டு, அது அரச சார்பற்ற நிறுவனங்களின் நிகழ்ச்சித் திட்டங்களின் ஒன்றாக சுருக்கப்பட்டு விடுகிறது. அதாவது, அது அரசியல் நீக்கம் செய்யப்படுகிறது. அப்படி அரசியல் நீக்கம் செய்வதே ஓர்அரசியல்தான்.
ஒரு வெளிப் பார்வையாளருக்க நாட்டில் நிலைமாறு கால கட்ட நீதிப் பொறிமுறைகள் செறிவாக முன்னெடுக்கப்படுவதாக ஒரு தோற்றம் ஏற்படக்கூடும். ஆனால், உள்நாட்டிலோ, விசாரணைக் குழுக்களின் முன் தோன்றுவதற்கு சாட்சிகளிடம் பயணச் செலவுக்கு காசு இல்லை. அவர்கள் ஒரு வேளைச் சாப்பாட்டை ஒறுத்து அந்தக் காசில் பயணம் செய்து விசாரணைக் குழு முன் தோன்றுகிறார்கள். இன்னொரு புறம், போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதியளவு இழப்பீடுகள் வந்துசேரவில்லை. சாட்சிகளுக்கு ஆலோசனை வழங்குவதற்கு போதியளவு சட்ட உதவி மையங்களும் இல்லை. சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான சட்டமும் இதுவரையிலும் நிறைவேற்றப்படவில்லை. பயங்கரவாதத் தடைச் சட்டமும் அப்படியேதான் இருக்கிறது. இதுதான் இப்பொழுது இலங்கைத்தீவின் நிலைமாறு காலகட்ட நீதிச் சூழமைவாகும்.
கடந்த திங்கட்கிழமை, 32ஆவது மனித உரிமைகளின் கூட்டத் தொடரில் உரை நிகழ்த்திய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர், இது தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்குள்ள கூட்டுப் பொறுப்பைச் சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால், நிலைமாறு கால கட்ட நீதிச் செய்முறைகள் இலங்கைத்தீவில் அதிகபட்சம் அரசியல் நீக்கம் செய்யப்பட்டு வருவதை அவர் அறிவரா? அல்லது மேற்கு நாடுகளின் உள்நோக்கமும் அதுதானா?