ஒன்பதாந் திகதி என்ன காத்திருக்கிறது?

 

வரும் ஒன்பதாம் திகதியும் மக்கள் தெருவில் இறங்குவார்கள் என்ற தொனிப்பட சரத் பொன்சேகா  எச்சரித்திருந்தார்.அவர் அவ்வாறு கூறியதை அரகலயக்காரர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிகிறது.சரத் பொன்சேகா அரகலயவை “ஹைஜாக் “ பண்ணப் பார்க்கிறார் என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்தது.

கடந்த மூன்று மாத காலத்துக்கும் மேலான மக்கள் எழுச்சிகளின்போது ஒவ்வொரு ஒன்பதாம் திகதியும் அரசியல்வாதிகளுக்கு குறிப்பாக ராஜபக்ச குடும்பத்துக்கும் அவர்களுடைய ஆதரவாளர்களுக்கும் கெட்ட நாட்களாகக் காணப்பட்டன. இந்த அரசியல் எண்கணிதத் தர்க்கத்தின்படி வரும் ஒன்பதாம் திகதியும் அரசியல்வாதிகளுக்கு கெட்ட நாளாக  அமையுமா?

அந்த ஆபத்தை எதிர்கொள்ளும் தற்காப்பு முறியடிப்பு நடவடிக்கைகளில் ரணில் ஏற்கனவே இறங்கிவிட்டார்.அரகலயவை ஒடுக்கும் நடவடிக்கைகளை ரணில் இருமுனைகளில் முன்னெடுக்கிறார்.ஒருமுனை,அரகலய தோன்றக் காரணமாக இருந்த பொருளாதார நெருக்கடியைத் தற்காலிகமாகவேனும் தணிப்பது. இரண்டாவது, அரகலயச் செயற்பாட்டாளர்களை தொடர்ச்சியான அச்சுறுத்தலுக்குள் வைத்திருப்பது.

முதலாவது முனையில்,கடந்த சில வாரங்களுக்குள் ரணில் விக்ரமசிங்க பின்வரும் விடயங்களைச் செய்திருக்கிறார்.முதலாவது, மின்வெட்டு நேரத்தை குறைத்துக் கொண்டு வருவது.இரண்டாவது தலைநகரில் எரிவாயு விநியோகத்தை வழமைக்கு கொண்டு வந்தது.ஏனைய நகரங்களிலும் எரிவாயு விநியோகம் சீராகி வருகிறது. மூன்றாவது, வரிசையில் நின்றால் எரிபொருள் கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது.கியூஆர் கோட் முறைமைக்குள் எரிபொருள் ஒப்பிட்டளவில் கிடைக்கக்கூடியதாக இருப்பது.நாலாவது, பொருட்களின் விலைகளைப் படிப்படியாகக் குறைத்து வருவது. ஐந்தாவது, அரகலயவின் கோரிக்கையான நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை பலவீனப்படுத்தும் விதத்தில் 22 A  திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஆறாவது, சர்வ கட்சி அரசாங்கம் ஒன்றை உருவாக்கப் போவதாக அறிவித்திருப்பது.

மேற்கண்ட நடவடிக்கைகள் யாவும் அரகலய தோன்றக் காரணமாக இருந்த அம்சங்களை அகற்றுவது என்ற அடிப்படையில் முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பாக,அரகலயவை ஆதரித்த சிங்கள படித்த நடுத்தர வர்க்கத்தின் கஷ்டங்களையும் பயங்களையும் போக்குவது.இது முதலாவது முனை.

இரண்டாவது முனையில் அரகலய செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது. கடந்த ஒரு வாரத்துக்குள் மட்டும் இரண்டு பிணங்கள் காலிமுகத்திடலில் கரையொதுங்கின.அரகலய தொடங்கி இதுவரையிலும் இவ்வாறு ஆறு பிணங்கள் கரை ஒதுங்கியுள்ளன.இது முதலாவது. இரண்டாவது,தென்னிலங்கையில் பரவலாக துப்பாக்கிச்  சூட்டுச் சம்பவங்கள் நடக்கின்றன.இதில் கடந்த இரு மாதகாலப் பகுதிக்குள் 23பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். மூன்றாவது,அரகலய செயற்பாட்டாளர்கள் உதிரி உதிரியாகக் கைது செய்யப்படுவது. அவர்களில் சிலருக்கு நாட்டை விட்டு வெளியேறத் தடை விதித்திருப்பது.ஆசிரியர் தொழிற்சங்கத் தலைவரான ஸ்டாலினைக் கைது செய்யப்பட்டிருக்கிறார். தொழிற்சங்கங்கள் அரகலயவை தூக்கிநிறுத்தக்கூடாது என்று ரணில் சிந்திக்கிறார்.நாலாவது,அரகலயவின் பின்னணியில் நிற்பதாக கருதப்படும் முன்னிலை சோசலிஸக் கட்சியின் அலுவலகம் போலீசாரால் சோதனை இடப்பட்டுள்ளது.நாலாவது,கோட்டாகோகம கிராமத்தின் பருமனைக் குறைப்பது.அக்கிராமம் நாடு முழுவதுக்குமான அரகலயவின் குறியீட்டு மையம் ஆகும்.அரசுக்கு எதிராக ஒரு போராட்டம் தொடர்ச்சியாக நடப்பதை வெளியுலகத்துக்கு உணர்த்தும் ஒரு செயற்பாடாக அது காணப்பட்டது. ரணில் இப்பொழுது அதைச் சிறிதாக்கி வருகிறார்.அங்கே இப்போது நூற்றுக்கும் குறைவானவர்களே காணப்படுகிறார்கள்.

மேற்கண்ட நடவடிக்கைகளின்மூலம் ரணில் விக்ரமசிங்க அரகலயவை குறிப்பிடத்தக்க அளவிற்கு முறியடித்திருப்பதாகவே தோன்றுகிறது. அரகலயவின் முன்னனிச் செயற்பாட்டாளர்ர்கள் பலர் தலைமறைவாகியிருப்பதாகக் கருதப்படுகிறது. அரகலயவின் தொடக்கத்தில் இருந்து அதை ஆதரித்து வந்த மேற்கு நாட்டுத்  தூதரகங்கள் இப்பொழுது கைது நடவடிக்கைகளை கடுமையான வார்த்தைகளால் கண்டிப்பதில்லை. கைது நடவடிக்கைகளுக்கு எதிராக பார் அசோசியேஷன்-சட்டத்தரணிகள் அமைப்பு-முன்னரைப்போல பலமான எதிர்பைக் காட்டவில்லை.

கோத்தாபய அகற்றப்படும் வரையிலுமான போராட்டக்களத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களைப் பாதுகாப்பதில் சட்டத்தரணிகளின் சங்கம் பெரிய பங்களிப்பை நல்கியது. ஒருநாட் காலை  காலிவீதியில்  போலீஸ் வாகனத் தொடரணியொன்று காணப்பட்டது.போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தும் நோக்கத்தோடு அவ்வாறு அந்த வாகனத்தொடரணி நிறுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டது.அதற்கு எதிராக சட்டத்தரணிகள் சங்கம் ஆட்சேபணை தெரிவித்தது.பின்னர் அந்த வாகனப்பேரணி நீக்கிக்கொள்ளப்பட்டது. காலிமுகத்திடலில் போலீஸ் மற்றும் படைத்தரப்பிடமிருந்து போராட்டக்காரர்களை பாதுகாப்பதற்காக சட்டத்தரணிகளும் மதகுருகளும் கைகளை கோர்த்தபடி மனிதச் சங்கிலி அமைத்துக் கவசமாக நின்ற காட்சிகளும் உண்டு.கோத்தாபய அகற்றப்படுவதற்கு முன்புவரை அரகலய செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்படும் போதெல்லாம் சட்டத்தரணிகள் நூற்றுக்கணக்கில் நீதிமன்றங்களில் குவிந்தார்கள்.மீரிஹான சம்பவத்தின் பின்னரான கைது நடவடிக்கைகள் உட்பட சில கைது நடவடிக்கைகளின்போது 300க்கும் குறையாத சட்டத்தரணிகள் அவ்வாறு திரண்டுநின்று செயற்பாட்டாளர்களை பாதுகாத்தார்கள்.

ஆனால் இதுவெல்லாம் கோத்தா அகற்றப்பட முன்னரான கதைகள்.ரணில் வந்த பின்னரான கதைகள் வேறு.போராட்டத்தில் முன்னணியில் நின்ற மதகுரு அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளார்.பல செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.சட்டத்தரணிகள் சங்கம் அவர்களை பாதுகாப்பதற்கு முன்னரைப் போல ஒன்றிணைந்து தீவிரமாகச் செயல்படுவதாகத் தெரியவில்லை.

கைது செய்யப்படுவோர் வெவ்வேறு நீதிமன்றங்களில் பரவலாக முற்படுத்தப் படுத்தப்படுவதால்,சட்டத்தரணிகள் அவ்வாறு திரளமுடியவில்லை என்று ஒரு காரணம் கூறப்படுகிறது.எனினும் கொழும்புமைய சட்டத்தரணிகள் அமைப்பு பெருமளவுக்கு யூஎன்பிக்கு ஆதரவானது என்று கருதப்படுகிறது.மேலும் அரகலயவோடு தொடக்கத்திலிருந்தே இளம் சட்டத்தரணிகள் அமைப்புத்தான் அதிகம் நெருக்கமாக காணப்பட்டது என்றும் அவதானிக்கப்பட்டுள்ளது.

மேலும்,கைது செய்யப்படுவோரில் தனிப்பட்ட மற்றும் பொதுச் சொத்துக்களை நாசம் செய்த குற்றச்சாட்டுக்கு இலக்கானவர்களின் விடயத்தில் நீதிமன்றங்களில் வாதிடுவதற்கு சில இளம் சட்டத்தரணிகள் மட்டுமே தயாராக காணப்படுவதாகவும் ஒரு தகவல் உண்டு. அவை அரகலயவின் நிகழ்ச்சி நிரலுக்கு உட்படாத வன்முறைகள் என்று கருத்தும் ஒரு பகுதி சட்டத்தரணிகளும் உண்டு. அதாவது சட்ட மறுப்பை சட்டக்கண் கொண்டு பார்ப்பது.

ஒரு மக்கள் எழுச்சியின்போது இடம்பெற்ற சம்பவங்களை சட்டக்கண் கொண்டு பார்க்க முடியாது.ஏனென்றால் எல்லா மக்கள் எழுச்சிகளும் சட்ட மறுப்பாகத்தான் தோன்றுகின்றன.எனவே ஒரு மக்கள்திரளின்  சட்டமறுப்பு நடவடிக்கையை சட்டத்தின் தராசில் வைத்து நிறக்க முடியாது. அதை ஒரு சட்டப் பிரச்சினையாக வியாக்கியானம் செய்யவும் முடியாது.அது ஓர் அரசியல் பிரச்சினை.ஆனால் ரணில் விக்ரமசிங்க அதனை சட்டத்தின் தராசில் வைத்து நிறுக்கிறார்.அதற்கு எதிராக சட்டத்தரணிகள் அமைப்பு பலமான எதிர்ப்பை காட்டவில்லை.அதைச் சட்ட விவகாரமாகச் சுருங்குவது ஒருவிதத்தில் ரணில் வைத்த பொறிக்குள் சென்று விழுவதுதான்.

சட்டத்தரணிகள் மட்டுமல்ல, எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மத்தியிலும் குறிப்பாக சஜித் அணியினர் மத்தியிலிருந்தும் மேற்படி கைது நடவடிக்கைகளுக்கு எதிராக வலிமையான எதிர்ப்புக் காட்டப்படவில்லை. இந்த விடயத்தில் எல்லா அரசியல்வாதிகளும் ஒரு வர்க்கமாக நின்று சிந்திக்கிறார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்களை அழித்த, வீடுகளை எரித்த நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டவர்களை பாதுகாப்பதற்கு எதிர்க்கட்சிகளின் மத்தியிலும் பெரியளவு ஆர்வம் காட்டப்படவில்லை.

இவ்வாறான ஒரு அரசியல் சூழலில் ரணில் விக்கிரமசிங்க அரகலயவை அதன் ஆதரவுத்தளங்களில்  இருந்து பெருமளவுக்கு தனிமைப்படுத்தி வருகிறார் என்று தோன்றுகிறது. இந்த அடிப்படையில் தொகுத்துக் கணித்தால் வரும் ஒன்பதாம் திகதி மாபெரும் எழுச்சி ஒன்றுக்கான வாய்ப்புகளைத் தடுப்பதற்காக ரணில் கடுமையாக உழைக்கிறார்.

அரகலயக்காரர்கள் கூறுகிறார்கள் தற்பொழுது போராட்டம் ஓய்ந்து போய்விட்டதான ஒரு தோற்றம் வெளித் தெரிவது உண்மைதான் என்று. ஆனால் அரகலயவின் பேரெழுச்சிகளை தொகுத்துப் பார்த்தால் இடைவெளிகள் விட்டு மக்கள் குறிப்பிட்ட தினங்களில் தெருக்களில் லட்சக்கணக்கில் திரண்டு வந்தார்கள்,இப்பொழுதும் அரகலய சோர்ந்து போய்விட்டதாக தோன்றினாலும் அது மறுபடியும் ஒருநாள் மக்களைத்  வீதிகளுக்குக் கொண்டுவரும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.மஹிந்தவை அகற்றியது அரகலய -1.0 என்றும் ,பஸிலை அகற்றியது அரகலய-2.0 என்றும்,கோட்டாவை அகற்றியது அரகலய-3.0 என்றும், இனி ரணிலை அகற்றுவதும் முறமையை மாற்றுவதும் அரகலய-4.0 என்றும் அவர்கள் அழைக்கிறார்கள்.

ஆனால் கடந்த மூன்றுமாத காலத்துக்கும் மேலான தென்னிலங்கை அரசியற் களத்தைத் தொகுத்துப் பார்த்தால்,தெளிவான ஒரு பிரிகோட்டைக்  காணமுடிகிறது.கோத்தாவுக்கு முன்,கோத்தாவுக்கு பின் என்பதே அது. கோத்தாவுக்கு பின்னரான அரகலய பெருமளவுக்கு தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது.சோர்ந்துபோய்க் காணப்படுகிறது. கைது நடவடிக்கைகளுக்கு எதிராக அண்மைய வாரங்களாக ஒழுங்கு செய்யப்படும் போராட்டங்கள் பேரெழுச்சிகளாக அமையவில்லை.

வரும் ஒன்பதாந் திகதியும் அரசியல்வாதிகளுக்கு ஒரு கெட்ட நாளாக மாறுவதைத் தடுக்க ரணில் முயற்சிக்கிறார்.69 லட்சம் வாக்குகளால் வெற்றி பெற்ற ராஜபக்சக்களைத் துரத்திய ஒரு போராட்டத்தை, சுமார் 30,000 வாக்குகள் பெற்ற ஒருவர் முறியடிக்கப் போகிறாரா? ஒன்பதாம் திகதி பற்றிய அரசியல் எண்கணிதத்தைப் பொய்யாக்குவதில்  ரணில் வெற்றி பெறுவாரா?

 

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *