ரணில் விக்கிரமசிங்க ஒரு தந்திரசாலி என்பது தமிழ் மக்களின் மனதில் ஆழப் பதிந்த ஒரு படிமம்.எனவே அவர் தந்திரசாலி என்று தெரிந்து கொண்டும் அவருடைய பொறியில் போய் விழுவது என்பது சுத்த முட்டாள்தனம். ஒரு தந்திரசாலியை எதிர்கொள்வதற்கு தமிழ்த் தரப்பும் தந்திரமாக யோசிக்க வேண்டும். ரணிலை எதிர் கொள்வதற்கு தமிழ் தரப்பு தயாராக வேண்டும்.
கஜேந்திரக்குமார் கூறுகிறார்,ரணில் கூட்டாட்சிக் கட்டமைப்பை உருவாக்கத் தயார் என்று அறிவித்தால் தாங்களும் பேசத்தயார் என்று. ரணில் அதைச் செய்ய மாட்டார். அதை செய்துவிட்டு அவர் ஜனாதிபதியாக இருக்க முடியாது.எனவே பேச்சுவார்த்தைகளை அவர் அங்கிருந்து தொடங்கப் போவதில்லை. அந்த நிபந்தனையை கைவிடாத வரை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட முடியாது. விக்னேஸ்வரன் கூறுகிறார் உயர்ந்தபட்ச கூட்டாட்சி அதாவது கொன்பெடரேஷன் என்று. ரணில் அதைத் தர மாட்டார்.அதுதான் விக்னேஸ்வரனின் மாறாத நிலைப்பாடு என்றால்,அக்கட்சி ஒரு கட்டத்துக்கு மேல் பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியாது.அடுத்தது கூட்டமைப்பு கூட்டமைப்பும் சமஷ்ரி என்றுதான் கூறுகிறது.ஆனால் ஏற்கனவே 2015 இலிருந்து2018 வரையிலும் லேபல் இல்லாத ஒரு சமஸ்ரி,அல்லது “ஒற்றையாட்சிக்குள் சமஸ்ரி” என்று கூறிக்கொண்டு யாப்புருவாக்க முயற்சியில் ஈடுபட்டது.அதன் விளைவாக அடுத்து வந்த தேர்தலில் அக்கட்சி தமிழ்மக்கள் மத்தியில் தனக்கிருந்த ஏகபோகத்தை இழந்தது.தனது ஆசனங்களில் ஆறை இழந்தது.எனவே கூட்டமைப்பு அதே தவறை மறுபடியும் விடுமா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
அதேசமயம்,சிங்களத் தரப்பு எதைத் தரும்?ரணில் விக்ரமசிங்க இதுவரையிலும் சமஷ்ரிக்குத் தயார் என்று கூறவில்லை.சஜித் தெளிவாகக் கூறுகிறார் 13 வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவது என்று.மஹிந்த ராஜபக்ச தெளிவாகக் கூறுகிறார் 13 பிளஸ் என்று. சிங்களமக்கள் மத்தியில் உள்ள பிரதான கட்சிகள் அனைத்தும் 13ஐச் சுற்றியே சிந்திக்கின்றன.அதாவது ஒற்றையாட்சிக் கட்டமைப்பை மாற்றியமைக்க அவர்கள் இப்பொழுதும் தயாரில்லை. மேலும் 13ஐ வலியுறுத்துவதன் மூலம் இந்தியாவையும் அவர்கள் வெற்றிகரமாகக் கையாளலாம் என்று நம்புகிறார்கள்.தமிழ் மக்களுக்கும் இந்தியாவுக்கும் இடையே பிளவை அதிகப்படுத்தலாம் என்று அவர்கள் சிந்திக்க முடியும்.
எனவே வரும் 13ஆம் தேதி பேச்சுவார்த்தை மேசைக்கு வரப்போகும் தரப்புகள் எதைக் கேட்கின்றன அல்லது எதைத் தரக்கூடும் என்பவற்றின் அடிப்படையில் தொகுத்துப் பார்த்தால் ஒன்று தெளிவாகத் தெரிகிறது. இப்பேச்சுவார்த்தைகள் ஒரு கட்டத்துக்கு மேல் வளர முடியாது. அப்படி வளர்வதாக இருந்தால் இரண்டு தரப்பும் விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும்.இதில் சிங்களத் தரப்பு ஒற்றையாட்சியை விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும். தமிழ்த் தரப்பு முழுச் சமஸ்ரி என்ற கோரிக்கையில் இருந்து இறங்கிவர வேண்டி இருக்கும். அதாவது பொழிவாகச் சொன்னால் 13-க்கும் சமஸ்டிக்கும் இடையில் இணக்கப் புள்ளியொன்றைக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும்.
ஆனால் இதிலோர் அடிப்படையான கோட்பாட்டுப் பிரச்சினையும் நடைமுறைப் பிரச்சினையும் உண்டு. அதாவது,ஒற்றையாட்சியும் சமஷ்டியும் ஒன்றாக இருக்க முடியாது.அப்படியிருந்தால் அது சமஷ்ரி அல்ல.ஒற்றையாட்சிதான். மேலும் இலங்கைத்தீவின் யாப்பு மரபு எனப்படுவது தமிழ் மக்களுக்கு எதிரானது.எனவே யாப்பில் தெளிவாக்க கூறப்படாதவற்றை அவர்கள் எப்படி வியாக்கியானம் செய்வார்கள் என்ற அனுபவம் தமிழ் மக்களுக்கு உண்டு.இந்த அடிப்படையில் சிந்தித்தால் ரணில் தொடங்கப் போகும் பேச்சுவார்த்தைகள் எங்கேயோ ஒரு கட்டத்தில் தேங்கி நிற்கும் வாய்ப்புக்களே அதிகம்.
அதாவது பொழிவாகச் சொன்னால் கஜேந்திரகுமாரின் நிபந்தனையை ஏற்றுக் கொண்டால் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவே முடியாது.அதேசமயம் விக்னேஸ்வரன் மற்றும் கூட்டமைப்பின் முன்மொழிவுகளை ஏற்றுக் கொண்டால் பேச்சுவார்த்தைகள் ஒரு கட்டத்துக்கு மேல் முறிந்து போகும். மொத்தத்தில் பேச்சுவார்த்தைகள் முறிந்து போகும் ஆபத்தே அதிகம்.
ஆனால் அதற்காக தமிழ்த் தரப்பு பேசாமல் இருக்க முடியாது. பன்னாட்டு நாணய நிதியத்தை கவர்வதற்கும், மேற்கு நாடுகளைக் கவர்வதற்கும் ரணில் ஒரு நாடக மேடையைத் திறக்கப் போகிறார்.அதில் பங்காளிகளாக மாறி தமிழ் பிரதிநிதிகளும் தமது மக்களுக்கு நடிக்க போகிறார்களா? அல்லது அந்த நாடக மேடையை உலக சமூகத்துக்கு அம்பலப்படுத்துவதா? என்ற முடிவை இப்பொழுது தமிழ்த் தரப்பு எடுக்க வேண்டும்.
பேச்சுவார்த்தைகளை நிராகரிப்பதை விடவும்,பேச்சுவார்த்தைகளை அம்பலப்படுத்துவதே தமிழ்த் தரப்பின் பேர பலத்தை அதிகப்படுத்தும். ஏனெனில், பேச்சுவார்த்தைகளை நிராகரிக்கும் பொழுது அதை உலக சமூகம் பொதுவாக வரவேற்பதில்லை.ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் விடுதலைப்புலிகள் இயக்கம் பேச்சுவார்த்தைகளை நிராகரித்தது உண்டு. தேர்தல்களை புறக்கணித்ததும் உண்டு. அதற்கு ஒரு தர்க்கம் உண்டு. அந்த இயக்கத்தின் பிரதான ஒழுக்கம் ஆயத்தப் போராட்டந்தான். அந்த இயக்கம் ஒரு நிலத்தை கட்டுப்படுத்தியது. ஒரு கருநிலை அரசை வைத்திருந்தது. தேர்தல் அல்லது பேச்சுவார்த்தை எனப்படுவது அவர்களை பொறுத்தவரை பிரதான ஒழுக்கமில்லை.
ஆனால் தமிழ்க்கட்சிகளின் பிரதான ஒழுக்கமே தேர்தல்தான்.இங்கு மக்கள் இயக்கம் கிடையாது.இருப்பவையெல்லாம் தேர்தல் கேட்கும் கட்சிகளே. தேர்தல் தான் அவர்களுடைய பிரதான ஒழுக்கம்.இனப்பிரச்சினைக்குத் தீர்வைப் பெறுவதற்கு பேச்சுவார்த்தைகளைத் தவிர வேறு எந்த வழியையும் அவர்கள் கடந்த 13 ஆண்டுகளாக உருவாக்கியிருக்கவில்லை.தேர்தல் மைய அரசியலிலும் தமிழ் மக்கள் ஒரு தேசத்திரட்சியாக இல்லை. வடக்கு கிழக்கு இணைப்பை அரசாங்கத்தோடு நின்று எதிர்க்கக்கூடிய கிழக்கு மையத் தமிழ் அரசியல்வாதிகள் இருவர் இப்பொழுது நாடாளுமன்றத்தில் உண்டு.எனவே வடக்கு கிழக்கு இணைந்த தாயகம் என்ற கோட்பாடு சோதனைக்கு உள்ளாகும் ஒரு காலகட்டம் இது.மேலும் கடந்த 13 ஆண்டுகளாக தமிழ்மக்கள் தங்களுடைய போராட்டம் நீதிக்கானது என்று கூறி வருகிறார்கள்.ஆனால் நீதிக்கான போராட்டத்தில் தமிழ் மக்களின் பலங்களில் ஒன்றாக காணப்படும் தமிழ் டயாஸ்போறா ஒரு பலமான திரட்சியாக இல்லை.அதோடு மேற்கு நாடுகளும் தமிழ் மக்களுக்கு இனப்படுகொலைக்கு எதிரான பரிகார நீதியை பெற்றுத்தரும் வாய்ப்புகள் இதுவரையிலும் கனியவில்லை.
மேற்கு நாடுகள் மட்டுமல்ல,ஐநா போன்ற உலகப் பொது மன்றங்கள் மட்டுமல்ல,எந்த ஒரு வெளித்தரப்பும் தமிழ்மக்களுக்கு நீதியைப் பெற்று தர மாட்டார்கள்.தமிழ் மக்கள்தான் தங்களுக்கு வேண்டிய நீதிக்காக போராட வேண்டும்.ஆனால் கடந்த 13 ஆண்டுகளில் நிலைமை எவ்வாறு உள்ளது? ஐநா தமிழ் மக்களுக்கு பரிகார நீதியைப் பரிந்துரைக்கத் தயாரில்லை.மாறாக நிலைமாறுகால நீதியைத்தான் பரிந்துரைத்தது.அது வென்றவர்கள் தோற்றவர்களுக்கு வழங்கும் ஒரு நீதி.இரண்டாம் உலகமகா யுத்தத்தின் பின்னிருந்து நூரம்பேர்க் தீர்ப்பாயத்தில் தொடங்கி அண்மைக்கால கம்பூச்சியத் தீர்ப்பாயங்கள் வரையிலும் நிலைமாறுகால நீதி எனப்படுவது வென்றவர்கள் தோற்றவர்களுக்கு வழங்கும் ஒரு நீதிதான்.
எனவே தொகுத்துப் பார்த்தால்,கடந்த 13ஆண்டுகளாக நீதிக்கான போராட்டத்தில் அனைத்துலக சமூகம் தமிழ் மக்களுக்கு விசுவாசமாக நடந்ததா அல்லது தமிழ் மக்களை ஒரு கருவியாகக் கையாண்டதா?என்ற சந்தேகமும் உண்டு.இதில்,அனைத்துலக சமூகத்தில் தங்களுக்குள்ள வரையறைகளை தமிழ் மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.மேலும்,பிராந்தியப் பேரரசாகிய இந்தியாவானது, கொழும்பில் இருக்கும் அரசாங்கத்தை எப்படிக் கையாளலாம் என்றுதான் சிந்திக்கின்றது.தமிழ்மக்களை ஒரு தரப்பாக ஏற்றுக் கொள்ளவில்லை.கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் வைகோவின் கேள்விக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் வழங்கிய பதிலில் அந்தத் தொனி உண்டு.தமிழகம் அண்மை ஆண்டுகளில் ஈழத் தமிழர்களுக்காக பெரியளவில் நொதிக்கவில்லை. தமிழ் கட்சிகளும் அதற்காக வேலை செய்யவில்லை.
எனவே கூட்டிக் கழித்து பார்த்தால் ஈழத் தமிழர்கள் ஒப்பீட்டளவில் பலவீனமாக காணப்படுகிறார்கள். தமது பலம் எது பலவீனம் எது என்பதை குறித்து ஈழத் தமிழர்களிடம் சரியான மதிப்பீடு இருக்க வேண்டும். கற்பனையில் திழைக்க முடியாது.கடந்த 13 ஆண்டுகளில் தமிழ்க் கட்சிகள் இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பெறுவதற்கு பேச்சுவார்த்தை என்று ஒரே ஒரு வழியைத்தான் நம்பியிருக்கின்றன.பேச்சுவார்த்தைகளை எதிர்க்கும் கட்சிகள் மக்கள் இயக்கத்தை உருவாக்கி,தொடர்ச்சியாகப் போராடி,தியாகம் செய்து, தமது பேரபலத்தை அதிகப்படுத்திக் காட்டட்டும்.
இவ்வாறான பரிதாபகரமான ஓர் அரசியற் சூழலில் பேச்சுவார்த்தைகளை நிராகரிப்பதைவிடவும் பேச்சுவார்த்தைகளில் இறங்கி அவற்றை அம்பலப்படுத்துவதுதான் அனைத்துலக சமூகத்தின் மத்தியில் தமிழ் மக்களின் அந்தஸ்தை உயர்த்தும்.ரணில் ஒரு நாடக மேடையை திறக்கிறார்.அதில் சேர்ந்து நடிப்பதல்ல தமிழ் தரப்பின் வேலை.அதை ஒரு நாடகம் என்று அம்பலப்படுத்த வேண்டும்.யுத்தத்தைப் போலவே பேச்சுவார்த்தையும் ஒரு கலைதான்.அது ஒரு கூட்டு ஒழுக்கம்.யுத்தத்தைப் போலவே பேச்சுவார்த்தைகளுக்கும் வியூகங்கள் உண்டு.எனவே ரணில் வகுக்கும் வியூகத்துக்கு எதிர் வியூகத்தை தமிழ்த் தரப்பும் வகுக்க வேண்டும்.