மறுபடியும், மார்ச் மாதத்தை நோக்கி ஈழத்தமிழர்களின் எதிர்பார்ப்புக்கள் பெருகத் தொடங்கிவிட்டன. அமைச்சர் பீரிஸின் இந்திய விஜயம் அமெரிக்கப் பிரதானிகளின் இலங்கை விஜயம் என்பவற்றின் பின்னணியில் ஜெனீவாவில் ஏதோ பெரிய திருப்பம் ஏற்படப்போகிறது என்ற விதமாக ஊகங்களை ஊடகங்கள் உற்பத்தி செய்யத் தொடங்கிவிட்டன. இதில் உண்மையை விடவும் ஊடகங்கள் உருவாக்கும் மாயத்தோற்றமே பெரிதாகிக்கொண்டு வருகிறது. குறிப்பாக, படித்த, பத்திரிகை வாசிக்கின்ற, இணையத் தொடர்புடைய நடுத்தர வர்க்கத்தினர் ஊடகங்களின் தலைப்புச் செய்திகளின் பின் எடுபடத் தொடங்கிவிட்டார்கள்.
தமிழர்கள் இப்படியாக வெளியிலிருந்து வரக்கூடிய மீட்சிகளுக்காக காத்திருப்பது என்பது இதுதான் முதற்றடவையல்ல. இலங்கைத் தீவின் நவீன வரலாற்றில் தமிழர்கள் தாங்கள் இனரீதியாக ஒடுக்கப்படுவதாக நம்பத் தொடங்கியபோது தோன்றிய ஒரு காத்திருப்பு இது. தென்னிலங்கையில் காலத்துக்குக் காலம் நிகழ்ந்த இன வன்முறையில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் இந்தியாவை நோக்கி காத்திருப்பதிலிருந்து இது தொடங்கியது. பின்னர் ஆயுதப் போராட்டத்தின் எழுச்சியோடு, குறிப்பாக, திருமதி இந்திராகாந்தியின் காலத்தில் இக்காத்திருப்பு ஒரு புதிய வளர்ச்சியை அடைந்தது. இந்தியா ஒரு படை நடவடிக்கை மூலம் பங்களாதேசைப் பிரித்ததுபோல இலங்கைத்தீவிலும் ஒரு படை நடவடிக்கையை மேற்கொள்ளும் என்ற காத்திருப்பு 1987 வரை மிக வலிமையாகக் காணப்பட்டது.
ஐ.பி.கே.எவ்.உடனான மோதல் மற்றும் ரஜீவ் காந்திபடுகொலை செய்யப்பட்டமை என்பவற்றின் விளைவாக இந்தியாவின் கதவுகள் மூடப்பட்டதைத் தொடர்ந்து மேற்கத்தேய கதவுகள் ஓப்பீட்டளவில் அகலத் திறக்கப்பட்டன. எழுச்சிபெற்று வந்த புலம்பெயர் தமிழ்ச் சமூகமும் அதற்கு முக்கிய காரணம். தொடக்கத்தில் புலம்பெயர் சமூகமானது ஈழப்போரின் காசு காய்க்கும் மரமாகத்தான் காணப்பட்டது. அதன் பின் மூன்றாம் கட்ட ஈழப்போரின்போது அதுவொரு பிரித்துப்பார்க்க முடியாத நிதிப் பின்தளமாக மாறியது. மூன்றாம் கட்ட ஈழப்போரின் முடிவில் மேற்கு நாடுகளின் அனுசரணையுடனான சமமான முயற்சிகளின் பின்னணியில் அது, அபிப்பிராயங்களை உருவாக்கவல்லதும், தீர்மானங்களில் செல்வாக்குச் செலுத்தவல்லதுமான ஓர் இரண்டாவது பின்தளம் என்று அழைக்கப்படக்கூடிய வளர்ச்சியைப் பெற்றது. இதனால் ஈழத்தமிழர்களின் காத்திருப்பு என்பது மேற்கையும் நோக்கித் திரும்பியது.
அதைப் போலவே அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின்போதும் ஓபாமாவிற்கான தமிழர் அமைப்பின் மூலம் அமெரிக்காவின் முடிவுகளில் செல்வாக்குச் செலுத்தலாம் என்றவொரு நம்பிக்கை வன்னிப் பெருநிலத்தில் சாதாரண தமிழ் மக்கள் மத்தியில் பரவலாகக் காணப்பட்டது. ஓபாமாவின் பதவியேற்பு உரையின்போது அவர் ஈழத்தமிழர்களைப் பற்றிக் குறிப்பிடுவார் என்றொரு வதந்தியும் உலவியது. அரச ஊழியரான எனது நண்பர் ஒருவர் அப்பொழுது என்னிடம் வந்து எரிச்சலடைந்தவராகக் கேட்டார். ‘ஓபாமாவை ஏன் இப்படி முரட்டுத்தனமாக நம்பவேண்டும்… ஒபாமா என்ன இவர்களுடைய வகுப்பறைச் சகபாடியா…” என்று ஒபாமா பதவிக்கு வந்தார். எதுவும் நடக்கவில்லை. பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கிய வணங்காமண் கப்பலும் வன்னிக் கரைகளுக்கு வந்துசேரவில்லை.
முடிவில் எல்லாக் காத்திருப்புகளும் வீண் என்றானபோது நந்திக் கடலை நோக்கி நடக்கத் தொடங்கிய இறுதி நாட்களில் படித்த மற்றும் அபிப்பிராயத்தை உருவாக்கவல்ல தமிழர்களின் மத்தியில் மேலுமொரு காத்திருப்பு மிஞ்சியிருந்தது. அதாவது, R2P என்று சுருக்கமாக அழைக்கப்படும் Responsible to Protect எனப்படுகின்ற ஐ.நா. கோட்பாட்டுக்கமைய ஒரு வெளித்தலையீடு நிகழ முடியும் என்பதே அது. ஆனால், நிலம் சிறுத்துக்கொண்டே போனது. யூதர்களின் நவீன வரலாற்றை ‘ ‘எக்ஸோடஸ்” என்ற நாவலாக எழுதிய லியன் ஊரிஸ் தனது நாவலில் கூறியதுபோல, அதிசயங்கள், அற்புதங்களின் காலம் எனப்படுவது எப்பொழுதோ முடிந்துவிட்டிருந்தது. அம்பலவன் பொக்கணை நெடுஞ்சாலை வழியாக கைகளை உயரத்தூக்கியபடி நடப்பதே இறுதித் தெரிவாக இருந்தது.
இப்படியாக சுமார் அரைநூற்றாண்டுக்கும் மேலாக ஏதோவொரு வெளிச் சக்திக்காக காத்திருந்த ஜனங்கள் நந்திக் கடற்கரையில் விடுதலைப்புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டு சுமார் 4 ஆண்டுகள் ஆன பின்னும்கூட, மறுபடியும் வெளியிலிருந்து வரக்கூடிய மீட்சி ஒன்றுக்காக காத்திருப்பது என்பதை எப்படி விளங்கி;கொள்வது?
முதலில் மேற்படி காத்திருத்தலின் புவிசார் சமூகப் பண்பாட்டு வேர்களைக் கண்டுபிடிப்போம். அதன் பின் இப்போதுள்ள மேற்கை நோக்கிய காத்திருத்தலின், அரசியல் அடிப்படைகளை ஆராய்வோம். முதலாவதாக மேற்படி காத்திருத்தலின் அரசியல் சமூக பண்பாட்டு அடிப்படை எதுவென்பது?
இந்து சமுத்திரத்தில் இந்தியாவின் தெற்கு மூலையில் தமிழகத்துக்கு கீழே இருக்கும் ஈழத்தமிழர்களின் புவிசார் அரசியல் அமைவிடம்தான் இதற்குரிய அடிப்படைக் காரணம். இவ்வமைவிடம் காரணமாக ஈழத்தமிழர்கள் எப்பொழுதும் தங்களைத் தமிழகத்தின் பின்னணியில் வைத்துச் சிந்தித்து வந்திருக்கிறார்கள். பெரும்பான்மைச் சிங்களவர்கள் மத்தியில் தங்களைச் சிறுபான்மையினராக உணரும்போதெல்லாம், தமிழர்கள் சிங்கள சமூகத்தினரைவிடவும் பெரியதும், வலியதும் ஆகிய தமிழகத்தின் தொடர்ச்சியாக தங்களை அடையாளப்படுத்துவதன் மூலம் இச்சிறு தீவில் தங்களை நிலைநிறுத்த முயன்றுள்ளார்கள். இலங்கை – இந்திய உடன்படிக்கையின் விளைவாக ஏற்பட்ட புதிய எதிர்மறையான அரசியற் சூழலில் மேற்படி ஈழ- தமிழக உறவில் குறிப்பாக அரசியற் தளத்தில் ஓர் இடைவெளி ஏற்பட்டிருந்தாலும்கூட வேர்நிலை உறவில் அதாவது இனத்துவ மற்றும் சமூக கலை பண்பாட்டுத் தளங்களில் பாரதூரமான விரிசல்கள் ஏதும் ஏற்படவில்லை.
1990களிலிருந்து புலம்பெயர் தமிழ்ச் சமூகம் ஒரு நிதிப்பலமுடைய பின் தளமாக எழுச்சிபெற்றபோதும் அது ஓர் இரண்டாவது பின்தளமாகத்தான் காணப்படுகின்றது. உடனடியான முதல்நிலைப் பின்தளமாக தமிழகமே தொடர்ந்தும் காணப்படுகின்றது.
இத்தகைய ஒரு பின்னணியில் தமிழகத்துடன் தங்களை இணைத்து அடையாளப்படுத்துவதிலிருந்து தொடங்கியதே இந்தியாவுக்காகக் காத்திருத்தல் என்பது. பிந்திய தசாப்தங்களில் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் ஒரு பலமான இரண்டாவது பின்தளமாக மேலெழுந்தபின் மேற்குக்காகக் காத்திருப்பதுமாக மேற்படி காத்திருத்தலானது மைய இடப்பெயர்ச்சிக்கு உள்ளாகியது. இதுதான் ஈழத்தமிழர்களுடைய காத்திருப்பு அரசியலின் பின்னணி.
இந்தியாவை நோக்கிக் காத்திருப்பதிலிருந்து தொடங்கியது இப்பொழுது அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகளை நோக்கிக் காத்திருப்பதாக மையமாற்றம் கண்டுள்ளது. கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் தமிழ்ச் சினிமாவில் உச்சக்கட்டத்தை நோக்கிக் காட்சிகள் உணர்ச்சிகரமாகக் கட்டியெழுப்பப்படுவதுபோல, எதிர்பார்ப்புக்கள் கட்டியெழுப்பப்பட்டு வருகின்றன.
ஆனால், இது தமிழ்ச் சினிமாவைப் பார்பதைப் போன்றது அல்ல. தமிழர்கள் இந்த இடத்தில் நிதானமாகவும், விஞ்ஞானபூர்வமாகவும் சிந்திக்கவேண்டும். இது முழுக்க முழுக்க மேற்கு நாடுகளின் முன் முயற்சிதான். இதில் புலம்பெயர் தமிழர்களுடைய பங்களிப்பென்பது ஒப்பீட்டளவிற்; குறைவு. சாதாரண தமிழர்களில் பலர் நம்புகின்றார்கள் இவையெல்லாம் புலம்பெயர்ந்த தமிழர்களின் முன் முயற்சிகளின் திரட்டப்பட்ட விளைவென்று. ஆனால், அது ஒரு சிறிதளவு உண்மை மட்டுமே. இப்படியொரு தீர்மானத்தைக் கொண்டு வருவது என்பது மேற்கு நாடுககளின் முகவர்களாகத் தொழிற்படும் சில அரச சார்பற்ற நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மேற்கு நாடுகளின் ராஜதந்திரிகள், கொள்கை வகுப்பாளர்கள் மத்தியில் எடுக்கப்பட்ட ஒரு முடிவுதான். இதில் தமிழர்கள் வெறும் கருவிகள் மட்டுமே. அதாவது, மேற்குநாடுகளின் உலகளாவிய நிகழ்ச்சி நிரலின் கருவிகளாக தமிழர்கள் கையாளப்படுகிறார்கள். 1980களில் எப்படி பிராந்தியப் பேரரசின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப தமிழர்கள் கருவிகளாகக் கையாளப்பட்டார்களோ அப்படித்தான் இதுவும். சீனாவை நோக்கிச்சரியும் இலங்கை அரசாங்கத்தை வழிக்குக் கொண்டு வருவதற்கான நிர்ப்பந்தங்களை பிரயோகிப்பதே மேற்கு நாடுகளின் இறுதி இலக்காகும்.
தமிழர்களிற்பலர் நம்புவதைப்போல, இலங்கை அரசாங்கத்தைத் தண்டிப்பது மேற்கு நாடுகளின் முதல்நிலை நோக்கம் அல்ல. கடந்த ஆண்டும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனால் பெரிய திருப்பங்கள் எதுவும் ஏற்படவில்லை. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் 35 வீதத்தை மட்டுமே நிறைவேற்றியிருப்பதாக அரசாங்கம் கூறுகிறது. இந்நிலையில் இவ்வாண்டும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படும். அது கடந்த ஆண்டைவிட சற்றுக் கடுமையாக இருக்கக்கூடும். நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான கட்டமைப்புக்களை உருவாக்குவது, அவற்றுக்கான கால எல்லைகளை உடைய செயன்முறை வரைபடத்தை உருவாக்குவது போன்ற திசைகளிலேயே அதிகம் சிந்திக்கப்படக்கூடும். ஆனால், அரசாங்கம் ஏற்கனவே, இந்தியாவைச் சமாளிக்கும் முயற்சிகளில் இறங்கியிருப்பது தெரிகிறது. இதன் மூலம் வரப்போகும் தீர்மானத்தின் கடுமையைத் தணிக்க அல்லது மேலும் ஒரு கால அவகாசத்தைப் பெற அவர்கள் முயற்சிக்கக்கூடும். மேற்கு நாடுகளைப் பொறுத்த வரை அவர்களுக்கு தெரிவுகள் குறைவாகவே காணப்படுகின்றன. அரசாங்கத்தை வளைப்பதே அவர்களுடைய நோக்கம். முறிப்பது அல்ல.
இந்நிலையில், தமிழர்கள் என்ன செய்யப்போகிறார்கள்? வரப்போகும் தீர்மானம் உடனடிக்குத் தமிழர்களுக்குச் சாதகமாகவே அமையும். அதன் மூலம் தமிழர்களின் கோரிக்கைகளுக்குச் சர்வதேச அந்தஸ்தும் அங்கீகாரமும் அதிகரிக்கக்கூடும். ஆனால், விவகாரம் அதைவிட ஆழமானது. கடந்த சுமார் மூன்று தசாப்தங்களுக்கு மேலான தமிழர்களின் காத்திருப்பு அரசியலின் மறுபக்கம் எனப்படுவது அவர்கள் சக்தி மிக்க அரசுகளின் நிகழ்ச்சி நிரல்களின் கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள் என்பதே. வெளிச்சக்திகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கும் தமது நிகழ்ச்சி நிரலுக்கும் நடுவே நலன்சார் சமநிலை ஒன்றைக் கண்டு பிடிப்பதன் மூலம் வெளிச்சக்திகளை தமது நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்பட வைப்பதில் ஈழத்தமிழர்கள் இன்று வரையிலும் போதிய வெற்றியைப் பெறத் தவறிவிட்டார்கள். இலங்கை அரசாங்கம் தன்னை விடப் பலமான நாடுகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கிடையில் எப்படி வெற்றிகரமாகச் சுழித்தோடுகின்றது என்பதை தமிழர்கள் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. அரசாங்கம் இந்தியாவைச் சமாளிக்கும் வேலைகளை ஏற்கனவே தொடங்கிவிட்டது.
இந்நிலையில், சக்தி மிக்க மேற்குநாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கும் தமது நிகழ்ச்சி நிரலுக்கும் இடையில் ஒரு பொதுப் பரப்பைக் கண்டுபிடித்து அதைப் பலப்படுத்துவதென்றால், தமிழர்கள் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விவகாரம் உண்டு. இப்பொழுது கொழும்புக்கு எதிராக காய்களை நகர்த்துவது போலத்தோன்றும் பெரும்பாலான மேற்குநாடுகளில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடை இன்று வரையிலும் அகற்றப்படவில்லை. அதே சமயம், நாடுகடந்த தமிழீழ அரசிற்கு சட்ட ரீதியான சவால்கள் எதுவும் இதுவரை தோன்றவுமில்லை. எனவே, ஈழத்தமிழர்களுக்கான மேற்கு நாடுகளின்செய்தி மிகத் தெளிவானது. அதாவது ஆயுதப் போராட்டம் அல்லது ஆயுதமேந்திய நடவடிக்கை எதற்கும் அவர்கள் ஆதரவு தரப்போவதில்லை. பதிலாக ஜனநாயக விழுமியங்களை அடித்தளமாகக் கொண்ட செயற்பாடுகளுக்குத்தான் ஆதரவுண்டு. இப்போதுள்ள நிலைமைகளின் படி விடுதலைப்புலிகளுக்குப் பின்னரான ஈழத்தமிழ் அரசியல் எனப்படுவது ஜனநாயக அடித்தளத்தின் மீதுகட்டியெழுப்பப்படும் ஒன்றாக அமைந்தால் மட்டும்தான் தமிழர்களின் நிகழ்ச்சி நிரலுக்கும் சர்வதேச சமூகத்தின் நிகழ்ச்சி நிரலுக்கும் இடையில் ஒரு நலன் சார் பொதுப்பரப்பை பலப்படுத்த முடியும். இதில் ஈழத்தமிழர்கள் தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் அல்லது இதற்கு எதிர்த்திசையில் சிந்திக்கும் ஒவ்வொரு கணமும் அவர்களை அரசியல் அனாதைகளாக்கிவிடும். ஏனெனில் சீனாவை நோக்கிச் சாயும் கொழும்பை வளைத்தெடுப்பதே மேற்குநாடுகளினதும், இந்தியாவினதும் உடனடி இலக்காகும். இது விடயத்தில் சீனாவைக் கைவிடுவது என்ற ஒரு முடிவை கொழும்பு எடுக்குமாயிருந்தால் முழு உலகமுமே ஈழத்தமிழர்களைக் கைவிட்டுவிடும். ஏற்கனவே, நந்திக் கடற்கரையில் கைவிட்டதைப்போல.
03/01/2013
உதயன்