வள்ளுவரிலிருந்து வெடுக்குநாறி மலைக்கு?

வவுனியா வெடுக்குநாறி மலையில் வழிபாட்டுருக்கள் சிதைக்கப்பட்டமை திட்டவட்டமாக  ஒரு பண்பாட்டுப் படுகொலைதான். ஆனால் அந்தத் தீமைக்குள் ஒரு நன்மை உண்டு.அச்சம்பவம் தமிழ் மக்களை உணர்ச்சிகரமான ஒரு புள்ளியில் ஒன்றுதிரட்டியுள்ளது.இதுதொடர்பாக சைவ மகாசபை ஒழுங்குபடுத்திய எதிர்ப்பில் ஒரு கிறிஸ்தவ மதகுரு காணப்பட்டார். கத்தோலிக்கத் திருச்சபையின் நீதிக்கும் நல்லிணக்கத்துக்குமான அமைப்பு அது தொடர்பாக ஒரு அறிக்கையும் வெளியிட்டிருக்கிறது.இது,அண்மை நாட்களாக தமிழ்மக்கள் மத்தியில் மதரீதியான அகமுரண்பாடுகளைத் தூண்டி வரும் சக்திகளின் வேகத்தை ஒப்பீட்டளவில் தடுக்குமா? ஒருபுறம் சிங்கள பௌத்த மயமாக்கல் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.இன்னொருபுறம்,இந்து-கிறீஸ்தவ முரண்பாடுகள் ஊக்குவிக்கபடுகின்றன.

கடந்த வாரம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஆவிக்குரிய சபைப் போதகரான போல் தினகரன், அவர் கலந்து கொள்ளவிருந்த மத நிகழ்ச்சியை ரத்துச்செய்ய வேண்டியிருந்தது.அதற்கு வெளிப்படையாகச் சொல்லப்பட்ட காரணம் அவர் வணிக விசாவில் வந்தமைதான் என்று கூறப்பட்டது.ஆனால் வெளியில் சொல்லப்படாத காரணம் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டியங்கும் ஈழத்துச் சிவசேனாவின் எதிர்ப்புதான் என்று ஊகிக்கப்படுகிறது.அல்லது சிவசேனையின் வற்புறுத்தலால் அவ்வாறு அப்போதகரை விசாரிக்க வேண்டி வந்தது என்ற ஒரு தோற்றம் உண்டாகக்கூடிய விதத்தில் அரசாங்கம் காய்களை நகர்த்தியிருக்கிறது என்றும் கூறலாம். போதகர் போல் தினகரன் இதற்கு முன்னரும் வந்து போயிருக்கிறார். அப்பொழுதெல்லாம் அவருக்கு வணிக விசாதான் வழங்கப்பட்டது.சுற்றுலா விசாவில் வருகை தருபவர்கள் மதப் பிரச்சார நிகழ்வுகளில் பங்கு பற்றுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.

அவருக்கு விசாவை வழங்கியது சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகம்.அந்த விசாவை வழங்கும்பொழுது அவர் என்ன தொழிலுக்காக யாப்பாணத்துக்குப் போகிறார் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்கும்.அவர் நேரடியாக யாழ்ப்பாணம் வரவில்லை.முதலில் கொழும்புக்குத்தான் வந்தார்.கொழும்பில் நான்கு நாட்கள் இருந்தார்.அங்கே ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்தார்.அவருக்காகப் பிரார்த்தனை செய்தார்.அவர் பிரார்த்தனை செய்யும்பொழுது ரணில் விக்கிரமசிங்க அவருக்குமுன் அடக்க ஒடுக்கமாக நிற்கும் ஒளிப்படம் சமூகவலைத்தளங்களில் பகிரப்படுகிறது.அதன்பின் அவர் யாழ்ப்பாணத்துக்கு வந்தார்.பலாலி விமன நிலையத்தில் அவர் கிட்டத்தட்ட 4 மணித்தியாலங்கள் விசேஷமாக விசாரிக்கப்பட்டிருக்கிறார்.அவரை விசாரிப்பதற்கு என்று இரண்டு அதிகாரிகள் கொழும்பிலிருந்து விசேஷமாக வருகை தந்ததாகவும் ஒரு தகவல்.அந்த விசாரணையின் விளைவாக அவர் ஏற்கனவே மானிப்பாயில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மத நிகழ்ச்சியை ரத்துச் செய்துவிட்டு தமிழ்நாட்டுக்குத்ர் திரும்பி விட்டார். இதுதொடர்பில் அந்த மத நிகழ்வை ஒழுங்கு படுத்தியவர்கள் ஜனாதிபதியோடு தொடர்புகொள்ள முற்பட்ட போதும் திருப்தியான பதில் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதற்கு முன்னரும் அவரைப் போன்ற போதகர்கள் இலங்கைக்குள் வந்திருக்கிறார்கள்.அவர்கள் அனைவரும் வணிக விசாவோடுதான் வந்திருக்கிறார்கள். இப்பொழுது மட்டும் வணிக விசா ஏன் ஒரு விவகாரமாக காட்டப்படுகிறது? அப்படியென்றால் அவரைப் போன்ற போதகர்கள் எந்த விசா எடுத்துக்கொண்டு நாட்டுக்குள் வரவேண்டும்? அதிலும் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் நடக்காத ஒரு விசாரணை ஏன் பலாலி விமான நிலையத்தில் நடந்தது?யாழ்ப்பாணம் ஒரு தனி நிர்வாக அலகா?அவ்வாறு பலாலி விமான நிலையத்தில் ஒரு விசேஷ விசாரணையை நடத்தியதன்மூலம் சிவசேனையிடமிருந்து நெருக்குதல் வருகிறது,அதனால்தான் அவ்வாறு விசாரிக்க வேண்டி வந்தது என்று காட்ட அரசாங்கம் முயற்சிக்கின்றதா?

எந்த ஜனாதிபதி,போதகர் போல் தினகரனிடம் ஆசீர்வாதங்களைப் பெற்றாரோ,அவருடைய அரசாங்கத்தின் இரண்டு அதிகாரிகள் போதகரை பிந்நேரம் நான்கு மணியிலிருந்து இரவு 8 மணிவரை விசாரித்திருக்கிறார்கள் என்றால் ரணில் விக்கிரமசிங்க இதில் யாருக்கு உண்மையாக இருந்திருக்கிறார்?போதகர் தினகரனுக்கா?அல்லது ஈழத்துச் சிவசேனைக்கா?

நிச்சயமாக அவர் இரண்டு தரப்புக்கும் உண்மையாக நடக்கவில்லை. மாறாக,அவர் சிங்கள பௌத்த அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு விசுவாசமாக நடந்திருக்கிறார்.அதன்படி தமிழ் மக்களுக்கிடையே அக முரண்பாடுகளைத் தூண்டும் விதத்தில் நிலைமைகள் கையாளப்பட்டிருக்கின்றன.சிவசேனை நெருக்கடிகளை கொடுத்தபடியால்தான் அந்த மத நிகழ்வை நடத்த முடியாத ஒரு நிலைமை ஏற்பட்டது என்று ஒரு தோற்றம் ஏற்படக்கூடிய விதத்தில் நிலைமைகள் நகர்த்தப்பட்டிருக்கின்றன. அதாவது ஆவிக்குரிய சபைகளுக்கும் சிவசேனைக்கும் இடையிலான முரண்பாட்டை கூர்மைப்படுத்தும் உள்நோக்கம் உண்டா?

ஈழத்துச் சிவசேனை மேற்படி போதகரின் வருகையைப் பலமாக எதிர்த்தபடியால்தான் அவர் அவ்வாறு விசாரிக்கப்பட்டார் என்பது உண்மையென்றால் இந்த விடயத்தில் ஈழத்துச் சிவசேனைக்கு ஏதோ ஒரு வெற்றி கிடைத்திருக்கிறது என்று பொருள்.அதாவது தமிழ்மக்கள் மத்தியில் அகமுரண்பாடுகளை ஊக்குவிக்கும் ஒரு வெற்றி.

ஆனால்,அதே ஈழத்துச் சிவசேனையால் குருந்தூர் மலையில் கட்டியெழுப்பப்பட்டிருக்கும் கட்டுமானங்களை ஏன் அகற்ற முடியவில்லை? அல்லது வெடுக்குநாறி மலையில் சிவனாலயம் சிதைக்கப்படுவதை ஏன் தடுக்க முடியவில்லை?திருகோணமலையில் கன்னியா வெந்நீரூற்றில்,உயர் பாதுகாப்பு வலையங்களில் சைவ மரபுரிமைச் சின்னங்கள் சிதைக்கப்படுவதை ஏன் தடுக்க முடியவில்லை?

இதுதான் கேள்வி.சிங்கள பௌத்த மரபுரிமை ஆக்கிரமிப்புக்கு எதிராக ஈழத்துச் சிவசேனையால் வெற்றி பெற முடியவில்லை. அதாவது சிவசேனை எந்த எந்த விடயங்களில் வெற்றி பெற வேண்டும் என்பது அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல்களின்படிதான் நடக்கிறது.அதனால்தான் ஈழத்துச் சிவசேனைக்கு சிங்கள பௌத்த தீவிரவாத மதகுருவான ஞானசார தேரர் இணக்கமானவராக தெரிகிறார்.ஆனால் சக கிறிஸ்தவர்கள் விரோதிகளாகத் தெரிகிறார்கள்.வடக்கு கிழக்கு இணைப்பை எதிர்க்கும் கிழக்கு மைய கட்சிகளுக்கு வடக்கு விரோதியாகத் தெரிகிறது.ஆனால் ராஜபக்சக்கள் நண்பர்களாகத் தெரிகிறார்கள்.

இப்பொழுது கூட்டிக்கழித்துப் பார்த்தால் விடை தெளிவாகக் கிடைக்கும். தமிழ் மக்களை பிரதேச ரீதியாக; சமய ரீதியாக; சாதி ரீதியாகப் பிரித்துக் கையாள முற்படும் சக்திகள் அதாவது தமிழ்மக்கள் மத்தியில் உள்ள அக முரண்பாடுகளை உருப்பெருக்கி அரசியல்செய்ய முற்படும் சக்திகள் ராஜபக்சங்களுக்கும் சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்துக்கும் நண்பர்களாக இருக்கிறார்கள்.ஆயின் யாருடைய நிகழ்ச்சி நிரலை அவர்கள் முன்னெடுக்கிறார்கள்?

கடந்த சில வாரங்களாக நான் எழுதிய கட்டுரைகளுக்கு எனது நண்பர் ஒருவர் வாட்ஸ் அப்பில் பதில்வினையாற்றியிருந்தார்.கிறிஸ்தவ சிறு சபைகளின் மதமாற்ற நிகழ்ச்சி நிரல்தான் ஈழத்துச் சிவசேனை போன்ற அமைப்புக்களின் வளர்ச்சிக்கு காரணம் என்று அவர் கருதுகிறாரோ தெரியவில்லை.அவர் படித்தவர்,பொறுப்பான அரசு உத்தியோகத்தில் இருப்பவர்,குறிப்பாக தன் தொழில் வரையறைகளைத் தாண்டி சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக மகத்தான தொண்டைச் செய்பவர்.ஆனால் மதம் மாற்றும் சபைகளுக்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டோடு காணப்படுகிறார்.தமிழ்த் தேசியத்தை மதப் பல்வகைமைகளின் மீது கட்டியெழுப்ப வேண்டும் என்ற எனது விளக்கமானது மதம் மாற்றிகளுக்கு சாதகமானது என்று அவர் கருதுகிறாரோ தெரியவில்லை.

இந்த இடத்தில் ஒரு விடயத்தைத் தெளிவுபடுத்த வேண்டும். இக்கட்டுரையானது கோட்பாட்டு ரீதியாக மத மாற்றத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.ஆனால் எந்த மதத்தை பின்பற்ற வேண்டும் என்பது ஒருவருடைய தனிப்பட்ட உரிமை.அந்த ஜனநாயக உரிமையில் யாரும் தலையிட முடியாது.

நான் மிகவும் மதிக்கும் ஒரு ஆன்மீகவாதி ஒருமுறை சொன்னார்…. மதமாற்றம் அறியாமையின் மீதே நிகழ்கிறது என்று.எல்லா மதங்களும் ஒரே இறுதியிலக்கை நோக்கித்தான் வழிநடத்துகின்றன.தான் பிறந்த மதத்தைப் பற்றிய சரியான விளக்கம் உள்ள ஒருவர்,இன்னொரு மதத்திற்கு மாற வேண்டிய தேவை இருக்காது.மதம் மாறும் ஒருவர் தன் மதத்தைப் பற்றியும் விளங்கிக் கொள்ளாதவர்;மாறிய மதத்தைப் பற்றியும் விளங்கிக் கொள்ளாதவர் என்று அவர் கூறுவார்.

அறியாமை தவிர மதமாற்றத்திற்கு வறுமை,சமூக ஏற்றத் தாழ்வுகள், நலன் சார் தேவைகள்..போன்ற காரணங்களும் உண்டு.இந்த விளக்கத்தின் அடிப்படையில் பார்த்தால் மதமாற்றத்தின் பின்னணியில் இருக்கும் அறியாமை, வறுமை, சமூக ஏற்றத்தாழ்வுகள் போன்றவற்றை அகற்ற வேண்டிய பொறுப்பு மதமாற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் மதப்பிரிவினருக்கு உண்டு. அதுமட்டுமல்ல தம்மை குறிப்பிட்ட ஒரு மதத்தின் காவலர்களாக காட்டிக் கொள்ளும் அனேகர் தமது மதம் கூறும் பேருண்மைகளை அறியாதவர்களே. உண்மையான ஆன்மீகவாதிகள் வெறுப்பை விதைப்பதில்லை, மகிழ்ச்சியையும் அன்பையும்தான் விதைக்கின்றார்கள்.

ஆனால்,சில நாட்களுக்கு முன்,ஈழத்துச் சிவசேனையின் தலைவர் தனது இல்லத்தில் நடத்திய ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் மதமாற்றிகளை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று கூறியதாக ஒரு செய்தி வெளிவந்தது.அவர் அவ்வாறு கூறிய காலகட்டத்தில் புதிய பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கான சட்டமூலம் வெளியிடப்பட்டிருந்தது.தமிழ் மக்கள் பயங்கரவாத தடைச்சட்டமே வேண்டாம் என்று கோரிக்கை வைக்கும் ஒரு காலகட்டத்தில் அச்சட்டத்தை பயன்படுத்தி தமிழ் மக்களில் ஒரு பிரிவினரைத் தண்டிக்க வேண்டும் என்று ஒருவர் கேட்கிறார்.ஆயின் அவர் யார் ?அவருடைய எதிரிகள் யார்? நண்பர்கள் யார்?

ஏற்கனவே தமிழ்மக்களை பிரதேச வாதத்தின் பெயரால் பிரிக்கும் சக்திகள் தென்னிலங்கையில் உள்ள கட்சிகளின் ஆதரவோடு கிழக்கில் பலமடைந்து வருகின்றன.இப்பொழுது வடக்கை மதரீதியாகப் பிரிக்கும் சக்திகள் துடிப்பாக உழைக்கத் தொடங்கிவிட்டன.தமிழ்மக்கள் மத்தியில் உள்ள தமிழ்த்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் அதைக் குறித்து கருத்து தெரிவிக்கத் தயங்குகின்றன.இந்தவிடயத்தில் தலையிடத்தக்க வல்லமையோடு சிவில் சமூகங்களும் இல்லை.

இப்படிப்பட்டதோர் அரசியல் சமூக ஆன்மீக வெற்றிடத்தில்,நேச முரண்பாடு எது?பகை முரண்பாடு எது?என்ற வேறுபாடு தெரியாமல் தமிழ்ச்சமூகம் ஆளையாள் கடித்துக் குதறிக் கொண்டிருக்க,அனாவசியமான விடயங்களில் சக்தியை வீணாக்கிக் கொண்டிருக்க,சிங்கள பௌத்த மயமாக்கல் புதிய வேகத்தில் முன்னெடுக்கப்படுகிறது.கிண்ணியா வெந்நீரூற்றில், மயிலத்தமடு மாதவனையில்,குருந்தூர் மலையில்,நெடுந்தீவில்,கச்சதீவில் என்று பரவலாகத் சிங்கள பௌத்த மயமாக்கல் நடந்துகொண்டிருக்கிறது.இதில் ஆகப்பிந்திய வெடுக்குநாறி மலை விவகாரம்.அது தமிழ்மக்களைத்  தற்காலிகமாகவேனும் ஒரு புள்ளியில் ஒன்றிணைத்திருக்கிறது என்பது சற்று ஆறுதலான விடயம்.ஒரு தீமைக்குள் கிடைத்த நன்மையது.கடந்த வாரம் திருவள்ளுவருக்குத் திருநீறு பூசலாமா  இல்லையா என்ற விவகாரத்தில் தலையைப் பிய்த்துக்கொண்டிருந்த ஒரு சமூகம் இப்பொழுது வெடுக்குநாறி மலையை நோக்கித் திரும்பியுள்ளதா?

 

Related Articles

1 Comment

Avarage Rating:
 • 0 / 10
 • Sundar , 05/04/2023 @ 8:18 PM

  நான் போதகர் தினகரனோடு எல்லா விடயங்களிலும் ஒத்து போகிறவன் இல்லை! ஆனால் நடந்த சம்பவங்கள் பல கேள்விகளை விட்டு சென்றுள்ளது!!

  1) பொதுவாக கிறித்தவர்களும் இந்து சமயத்தினரும் தமிழர்களின் எல்லா அமைப்புகளிலும் (எல்லா கல்வி நிலையங்கள், அரசியல் கட்சிகள், எல்லா சாதிய மட்டங்கள் etc etc காணப்படுவதால் பாரிய அளவில் பிரிவினைகள் வந்தது இல்லை.

  2) வடகிழக்கு தமிழர்களின் அரசியல் சமூக, மொழி வாழ்விற்கு கிறித்தவர்கள் பெரிய அளவில் பங்களிப்பு அளித்து உள்ளார்கள். யுத்த காலத்தில் நேரடியாக களத்தில் மக்களோடு வாழந்து உள்ளனர். ( புலவன் மறவு அந்த நேரம் எங்கு மறைந்து வாழ்ந்தார் என்பது தெரியவில்லை)

  3) கிறித்தவம் தமிழ் மக்களை பெருமளவு வெளி மக்களோடு தொடர்பு கொள்ள வைத்து உள்ளது. அது ஓர் சிங்கள கிராமத்தில் வாழும் மக்களோடும் சரி, ஐரோப்பிய அல்லது உலகசமூகத்தில் உள்ள எந்த மூலையில் உள்ள மக்களோடாகட்டும் சரி தொடர்பு கொள்ள வைத்து உள்ளது. நண்பர்களை தந்து உள்ளது!

  4) மிகவும் கீழ் மட்டத்தில் (பொருளாதார சமூக, கல்வி) அநே தமிழ் மக்கள் கொழும்பு மாநகரிலும், இலங்கையின் எல்லா பட்டணங்ளிலும் கிராமங்களிலும் வாழ்கிறார்கள். எந்த அரசியல் வாதிக்கும் அதை குறித்த மனப்பாரத்தை பெரிதளவு காணமுடியவில்லை. அரசியல் ஆதாயத்திற்காகவே சில முயற்சிகளை செய்கின்றனர்.அரசியல் ரீதியாக விடுதலைக்காக போராட எதிர்ப்புக்கள் உண்டு. ஆனால் சமூக, கல்வி, பொருளாதாரத்திற்காக ஓர் பெரும் இயக்கத்தை ஏன் அரசியல் வாதிகளால் தொடங்க முடியவில்லை?

  5) இந்த சூழலில் அநேக நற்செய்தி கிறித்தவர்கள் தங்கள் சொந்த பணத்தை செலவு செய்து சிறிய அளவில் சரி மாற்றத்தை உருவாக்க முயலுகிறார்கள் என்பதை நான் அறிவேன். அவர்களுக்கு கிறிஸ்து அறிவிக்கபட வேண்டும் என்ற நோக்கம் உள்ளது. மற்றபடி பணம் கொடுத்து யாரையும் கிறித்தவனாக்க முடியாது. பணம் வாங்கி கிறித்தவனானவன் கிறித்தவனே அல்ல.
  பணத்தினால் அர்ப்பணிக்கப்பட்ட கிறித்தவ வாழ்வு வாழ முடியாது.

  6) இதுவரை புலவன் மறவு போன்றவர்களால் இலங்கையில் சனார்த்தன இந்துத்துவாவை நிறுவ முடியவில்லை. தமிழ் நாட்டு மக்களை போல் இலங்கை மக்களும் தெளிவாக உள்ளனர் என நம்புகிறேன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *