பான் கி மூனும் தமிழர்களும்

Ban-Ki-moon-660x330

ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் கொல்லப்பட்ட பொழுது ஐ.நா. பொதுச்செயலராக பான் கி மூனே இருந்தார். ஆயுத மோதல்கள் முடிவிற்கு வந்த பின் அவர் வவுனியாவிற்கு வந்தார். புகைந்து கொண்டிருந்த யுத்த களத்தை அவர் வானிலிருந்து கொண்டே பார்த்தார். தான் பார்த்தவற்றைப் பற்றி பின்வருமாறு கூறினார்…..”நான் உலகம் முழுவதும் பயணம் செய்ததோடு இது போன்ற பல இடங்களுக்கும் விஜயம் செய்திருக்கிறேன்.ஆனால் நான் பார்த்தவற்றிலேயே மிகப்பயங்கரமான காட்சிகள் இவைதான்”……என்று..அதன் பின் அவர் மகிந்த ராஜபக்;ஷவிடம் சில வாக்குறுதிகளைப் பெற்றார். அதற்கடுத்த ஆண்டு ஐ.நா மன்றில் ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டது. வெல்லக் கடினமான ஓர் ஆயுதப் போராட்ட அமைப்பை வெற்றி கொண்டதற்காக வழங்கப்பட்ட பாராட்டுப்பத்திரம் அது.
ஆனால் பான் கி மூனுக்கு கொடுத்த வாக்குறுதிகளை ராஜபக்ஷ விசுவாசமாக நிறைவேற்றவில்லை. பெயருக்கு ஒரு நல்லிணக்க ஆணைக்குழுவை அவர் உருவாக்கினார். இலங்கைக்கு வர முயன்ற ஐ.நா.சிறப்புத் தூதுவர்களை அவர்; முழு விருப்பத்தோடு வரவேற்கவில்லை. அவ்வாறு வருகை தரும் சிறப்புத் தூதுவர்கள் எங்கெல்லாம் சென்றார்களோ அங்கெல்லாம் கண்காணிக்கப் பட்டார்கள். அவர்களை சந்தித்த தமிழ் மக்களும் கண்காணிக்கப்பட்டார்கள். ராஜபக்ஷவின் அமைச்சரான மேர்வின் டி சில்வா நவிப்பிள்ளை அம்மையாருக்குத் திருமணம் செய்து வைக்கப் போவதாக அறிவித்திருந்தார். ராஜபக்ஷவின் காலத்தில் சிங்கள பொது சனங்களின் உளவியல் எனப்படுவது பெருமளவிற்கு ஐ.நாவிற்கு எதிராக திருப்பி விடப்பட்டிருந்தது. ராஜபக்ஷ பான்கிமூனுக்கு வாக்குறுதி அளித்தபடி நிலைமாறு நீதிச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தயாராக இருக்கவில்லை. மாறாக யுத்த வெற்றியை முதலீடாகக் கொண்டு யுத்த வெற்றி வாதம் ஒன்றுக்கு அவர் தலைமை தாங்கத் தொடங்கினார். அது சிங்கள, பௌத்த மேலாண்மை வாதத்தின் ஆகப் பிந்திய உச்சமாகக் காணப்பட்டது. அது மேற்கையும், இந்தியாவையும் ஒப்பீட்டளவில் தூரத்தே வைத்து விட்டு சீனாவைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டது.

article-doc-fq97m-4N1PgJL5lz5cf0f313acf2ee8d2e-260_634x424
எனவே வெற்றிவாதத்திற்கு எதிராக ஐ.நா திரும்பியது. பின்வந்த ஆண்டுகளில் வெற்றி வாதத்திற்கு எதிராக அது இரண்டு தீர்;மானங்களை நிறைவேற்றியது. முடிவில் கடந்த ஆண்டு நிகழ்ந்த ஆட்சி மாற்றத்தோடு இலங்கைத் தீவில் ஐ.நாவிற்கு இருந்த தடைகள் அகற்றப்பட்டன. நிலைமாறு காலகட்ட நீதிச் செயற்பாடுகளை வேகமாக முன்னெடுப்பதற்கு ரணில், மைத்திரி அரசாங்கம் ஒப்புக்கொண்டது. இவ்வாறு நிலைமாறு காலகட்ட நீதிச் செயற்பாடுகள் ஒப்பீட்டளவில்; மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வரும் ஒரு காலச் சூழலில் பான்கிமூன் மறுபடியும் இலங்கைக்கு வந்திருக்கிறார்.

முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட போது ஐ.நாவால் அதைத் தடுக்கமுடியவில்லை. அல்லது ஐ.நா அதைத் தடுக்க விரும்பவில்லை. முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றது இனப் படுகொலைதான் என்பதையும் ஐ.நா ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே இனப்பிரச்சினைக்கான தீர்வு எனப்படுவது இனப்படுகொலைக்கு எதிரான ஒரு பரிகார நீதியாகத்தான் அமைய வேண்டும் என்ற தமிழ் மக்களில் ஒரு பகுதியினரின் கோரிக்கையினையும் ஐ.நா ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக ஆட்சி மாற்றத்தோடு இலங்கைத் தீவின் அரசியற் சூழலில் நிலை மாற்றம் ஏற்பட்டிருப்பதாக ஐ.நா நம்புகிறது. இந்நிலைமாறு காலகட்டத்திற்குரிய நீதிச் செயற்பாடுகளுக்கு ஊடாகவே ஈழத் தமிழர்கள் விவகாரத்தை ஐ.நா அணுகி வருகிறது.
இப்படிப் பார்த்தால் ஐ.நாவின் செயற்பாடுகளுக்கும் ஈழத் தமிழர்களின் அபிலாiஷகளுக்கும் இடையே தொடர்ந்தும் ஓர் இடைவெளி இருந்து வருவதைக் காணலாம்.

வன்னியில்  நிலமைகள் ஒரு மனிதப் பேரழிவை நோக்கிச் செல்வதை ஐ.நா முன்கூட்டியே அனுமானித்திருந்தது. வன்னி கிழக்கில் ஒரு வாகரையை உருவாக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது என்பதை கிளிநொச்சியில் நிலை கொண்டிருந்த சில ஐ.நா அதிகாரிகள் முன்கூட்டியே கணிப்பிட்டிருந்தார்கள். கிழக்கில் வாகரையில் அரசாங்கம் எப்படி பொது மக்களைப் பிழிந்து புலிகளிடமிருந்து பிரித்தெடுத்ததோ அவ்வாறே வன்னிக்கிழக்கிலும் நடக்கக்கூடும் என்ற ஓர் அச்சம் கலந்த எதிர்பார்ப்பு அந் நாட்களில் சில ஐ.நா அதிகாரிகள் மத்தியில் காணப்பட்டது.

கிழக்கின் வாகரைக்கும், வன்னியில் உருவாக்கப்படவிருந்த வாகரைக்குமிடையே பயங்கரமான வேறுபாடுகள் இருந்தன. கிழக்கில் இருந்து பின்வாங்கிய புலிகளுக்கு வன்னியில் ஓரு தாய்த்தளம் இருந்தது. ஆனால் வன்னியில் ஒரு வாகரை உருவாக்கப்படுமிடத்து புலிகளுக்கு தப்பிச் செல்ல இடமிருக்காது. எனவே அவர்கள் தங்களுடைய முழுப் பலத்தையும் பிரயோகித்து எதிர்ப்பார்கள். அப்பொழுது அரசாங்கத்தின் பிதுக்கி எடுக்கும் உத்தியானது ஒரு பெரும் படுகொலைக் களத்தை திறக்கும் என்பதை அந்நாட்களில் கிளிநொச்சியில் நிலைகொண்டிருந்த ஐ.நா அதிகாரிகளில்; சிலரும் ஐ.என்,ஜி.ஒ அதிகாரிகளில்; சிலரும் முன்கூட்டியே சரியாகக் கணித்திருந்தார்கள்.

எனவே முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது ஏற்கெனவே எதிர்பார்க்கப்படாத ஒன்றல்ல. ஆனால் சாதாரன சனங்கள் தான் அப்பாவித்தனமாக ‘ஐ.நா வரும்’, ‘வணங்காமன் கப்பல் வரும்’ என்றெல்லாம் கற்பனை செய்து கொண்டிருந்தார்கள். ஐ.நாவின் பொது மக்களைப் பாதுகாப்பதற்கான சட்டத்தின் பிரகாரம் இறுதியிலும் இறுதியாக தாங்கள் காப்பாற்றப் படுவோம் என்றதொரு நம்பிக்கை சாதாரண சனங்கள் மத்தியில் பலமாகக் காணப்பட்டது. ஆனால் ஐ.நா வரவில்லை. கால்களில் இடறும் பிணங்களைக் கடந்து கைகளை உயரத் தூக்கியபடி வட்டுவாகல் பாலத்தின் வழியே சரணடைவதைத் தவிர வேறு தெரிவுகள்; எதுவும் தப்பிப் பிழைத்த எவருக்கும் இருக்கவில்லை. ஐ.நாவைக் குறித்தும், உலகப் பொது அமைப்புக்களைப் குறித்தும் கட்டியெழுப்பி வைத்திருந்த விம்பங்கள் யாவும் உடைந்து போன நாட்கள் அவை. இது தொடர்பில் 2012இல் ஜ.நா. உள்ளக மீளாய்வு அமர்வின் அறிக்கையில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது….. “அதன் பொறுப்புக்களை நிறைவேற்றுவதில் ஜ.நா. வின் கட்டமைப்பு தோல்வியடைந்து விட்டது”

colombo-sept-2-2016-un-secretary-general-ban-ki-452295
அப்பொழுது இருந்த அதே பான் கி மூன்தான் இப்பொழுதும் இருக்கிறார். 2009ல் புலிகள் தோற்கடிக்கபட்ட பின் இலங்கைக்கு வந்தார். இப்பொழுது ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்ட பின் வந்திருக்கிறார். அவர் முதலில் வந்த பொழுது தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டிருந்தது. இப்பொழுது தமிழ் மக்கள் அரசியல் ரீதியாகவும் தோற்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் மக்களின் பிரச்சினை எனப்படுவது ஐ.நாவின் பொதுச் சபைக்கோ அல்லது பாதுகாப்புச் சபைக்கோ எடுத்துச் செல்லப்படவில்லை. மாறாக மனித உரிமைகள் ஆணையகத்தினாலேயே அது கையாளப்பட்டு வருகின்றது. இப்பொழுது அது நிலைமாறு கால நீதிச் செயற்பாட்டுக்குள் குறுக்கப்பட்டு விட்டது. அதாவது ஐ.நாவின் உலகப் பொதுவான ஒரு கருவிப் பெட்டிக்குள் தமிழ் மக்களுடைய பிரச்சினை அடைக்கப்பட்டு விட்டது.
நிலைமாறு கால நீதிச் செய்முறைகளில் பங்கேற்றுவரும் ஒரு கிறிஸ்தவ மதகுரு யஸ்மின் சூக்காவிடம் கேட்டாராம் “சிங்கள, பௌத்த பேரினவாதத்தையும், தமிழ் தேசிய விவகாரத்தையும் நிலைமாறு கால நீதிச் செய்முறைகளுக்குள் எங்கே வைத்துப் பார்ப்பது?”……என்று. அதற்கு யஸ்மின்சூக்கா சொன்னாராம் ‘மீள நிகழாமை என்ற பகுதிக்குள் அதை உள்ளடக்கலாம்’ என்று. நிலைமாறு கால கட்ட நீதிச் செய்முறைகளுக்கான நான்கு பெருந்தூண்களில் மீள நிகழாமையும் ஒன்றாகும். அதாவது எவையெல்லாம் திரும்பத் திரும்ப நிகழ்வதனால் ஒரு நாட்டில் பிரச்சினைகள் தோன்றுகின்றனவோ அவையெல்லாவற்றையும் திரும்ப நிகழாத படி தடுப்பது என்று பொருள்படும். இவ்வாறு யஸ்மின் சூக்கா கூறியதன் அடிப்படையில கேட்டால் இலங்கைத் தீவின் துயரங்கள் எல்லாவற்றினதும் ஊற்றுக்கண் சிங்கள, பௌத்த மேலாண்மை வாதந்தான். அதுதான் மூல காரணம். அந்த மூல காரணம் தொடர்ந்தும் இருப்பதை தடுப்பதைத்தான் இலங்கைத் தீவை பொறுத்தவரை மீள நிகழாமை என்று கூற முடியும். ஆயின் சிங்கள, பௌத்த மேலாண்மை வாதத்தை கடந்த பதினெட்டு மாத காலப்பகுதிக்குள் எவ்வளவு தூரத்திற்கு தோற்கடிக்க முடிந்திருக்கிறது?

குறிப்பாக நல்லாட்சி என்று கவர்ச்சியாகப் பெயர் சூட்டப்பட்டிருக்கும் கடந்த ஓராண்டு காலப் பகுதிக்குள் சிங்கள, பௌத்த மேலாதிக்க வாதத்தை எவ்வளவு தூரம் தோற்கடிக்க முடிந்திருக்கிறது? இது தொடர்பாக தென்னிலங்கையைச் சேர்;ந்த ஒரு மனித உரிமைச் செயற்பாட்டாளரோடு கதைத்துக் கொண்டிருந்த போது அவர் ஒரு விடயத்தை சுட்டிக் காட்டினார். மைத்திரிபால சிறிசேனவின் நூறு நாள் வாக்குறுதிகளில் ஒன்று தலதா மாளிகைக்கு முன்னால் செல்லும் வீதியைத் திறப்பது ஆகும். புலிகள் இயக்கத்தின் தாக்குதலுக்கு பின் இந்த வீதி மூடப்பட்டது. புனித பிரதேசத்திற்கு ஊடாகச் செல்லும் இவ் வீதி இப்பொழுதும் மூடப்பட்டிருக்கிறது. இவ்வீதி மூடப்பட்டிருப்பதனால் கண்டி நகருக்கான போக்குவரத்து நெரிசல் மிகுந்ததாக மாறி இருக்கிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை வேளைகளில் பாடசாலைகள், அலுவலகங்களுக்கு செல்வோர் மற்றும் வருவோர் இவ் வீதி மூடப்பட்டிருப்பதனால் அதிகம் சிரமப்படுவதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.

சிங்கள மக்களின் பண்பாட்டுத் தலைநகரில் இவ்வாறு போக்குவரத்து நெரிசல் ஏற்பட காரணமாக இருக்கும் இவ் வீதித் தடையை அகற்றுமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். ஒரு புறம் போக்குவரத்து நெரிசல் இன்னொரு புறம் அதனால் ஏற்படும் சூழல் மாசாக்கம். இவை இரண்டையும் கவனத்தில் எடுத்து சிறிசேன அந்த வீதியை மறுபடியும் திறப்பதாக தனது நூறு நாள் வாக்குறுதியில் உறுதியளித்திருந்தார். ஆனால் அவரால் அதை இன்று வரையிலும் நிறைவேற்ற முடியவில்லை. ஏனெனில் மகா சங்கத்தின் ஒரு பிரிவினர் அந்த வீதி திறக்கப்படுவதை எதிர்க்கிறார்களாம். ஒரு புனித பிரதேசத்திற்கு ஊடாக பொதுப் போக்குவரத்து வீதி ஒன்று செல்வதை அவர்கள் விரும்பவில்லையாம். மூடியது மூடியபடியே இருக்கட்டும் என்று அவர்கள் கேட்கிறார்களாம். ஆனால் ஒரு காலம் அது திறக்கப்பட்டுத்தானே இருந்தது என்பதும் அதனால் அதன் புனிதத்திற்கு எந்தப் பங்கமும் நேரவில்லை என்பதையும் மற்றத் தரப்பினர் சுட்டிக் காட்டுகிறார்கள்.

மேற்படி விடயத்தை சுட்டிக் காட்டிப் பேசிய மேற் சொன்ன மனித உரிமை செயற்பாட்டாளர் பின்வருமாறு கேட்டார். ‘ஒரு பண்பாட்டுத் தலைநகரத்தின் வீதியை தான் வாக்குறுதி அளித்தபடி திறக்க முடியாதிருக்கும் ஒரு ஜனாதிபதி அவர்’ என்று. இது ஜனாதிபதி சிறிசேனவின் பலவீனத்தைக் காட்டும் ஒன்றா? அல்லது மகா சங்கத்தின் பலத்தைக் காட்டும் ஒன்றா?

இத்தகையதோர் பின்னணிக்குள் யஸ்மின் சூக்கா கூறுவது போல சிங்கள பௌத்த மேலாண்மை வாதம் கோலோச்சும் ஓர் அரசியல் மற்றும் படைத்துறைச் சூழலை எதிர் கொள்வது எப்படி? பான் கி மூனின் வருகையையொட்டி காங்கேசன் துறை சாலை நீட்டுக்கும் அதிரடிப்படையினர் நிறுத்தப்பட்டிருந்தார்கள். ஐ.நா. கூறும் நிலைமாறு காலம் இதுதானா? மூலகாரணத்தை விளைவுகளோடு சமப்படுத்தி விளைவுகளைக் கையாளும் பொறிமுறைகளுள் ஒன்றுக்கூடாகவே மூல காரணத்தையும் கையாள முடியும் என்று ஐ.நா நம்புகிறதா? அவ்வாறு கையாள முயல்வதால் தான் நிலைமாறுகால நீதிச் செயற்பாடுகள் அதிக பட்சம் அரசியல் நீக்கம் செய்யப்படும் ஏது நிலைகள் தோன்றி இருப்பதை ஐ.நா எவ்வாறு பார்க்கிறது? 2009ல் வானிலிருந்தபடி யுத்த களத்தை பான் கி மூன் பார்த்தார். அப்பொழுது அது ஒரு பருந்துப் பார்வை. இப்பொழுது அவர் தமிழ் அரசியல் களத்தை எப்படிப் பார்க்கிறார்? பிரித்தானியாவின் புகழ் பெற்ற கடற்படைத் தளபதியான ஒற்றைக்கண் நெல்சன் பார்;த்ததைப் போலவா? தளபதி நெல்சன் தான் பார்க்க விரும்பாத பக்கத்தை நோக்கி தன்னுடைய குருட்டுக் கண்ணை வைத்துக் கொள்வாராம். பான் கி மூனும் அப்படித்தானா?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *