ஒரு பொது நினைவுச்சின்னத்தை ஏன் உருவாக்க முடியாது?


சுதந்திரப் பூங்கா-Freedom Park- தென்னாபிரிக்கா

 

போரில் உயிர்நீத்த அனைவருக்குமாக ஒரு பொதுவான நினைவுச் சின்னத்தை உருவாக்கப் போவதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது.தமிழ்க் கட்சிகளில் சில அதை எதிர்க்கின்றன;சில அதை ஆதரிப்பதாகத் தெரிகின்றது.

போரில் உயிர் நீத்த எல்லாருக்குமான நினைவுச் சின்னம் என்பது உலகில் ஏற்கனவே பல நாடுகளில் உண்டு.குறிப்பிட்ட நாட்டில் அல்லது குறிப்பிட்ட பிரதேசத்தில் போரில் உயிர்நீத்த அனைவருக்குமானதாக அது அமையும். அதற்கு முகம் இருக்காது.ஆளடையாளம் இருக்காது.அது போர் வெற்றியையும் பிரதிபலிக்காது;தோல்வியையும் பிரதிபலிக்காது.குறிப்பாக,நிலைமாறுகால நீதியின் ஒரு பிரிவாகிய இழப்பீட்டு நீதியின் கீழ் அவ்வாறு நினைவுச் சின்னங்களை உருவாக்குவதற்குப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிமையுண்டு.

ஆனால் இலங்கைத்தீவைப் பொறுத்தவரையிலும் நிலைமாறுகால நீதி தொடர்பான வாதப்பிரதி வாதங்களின்போது ஒரு விடயம் சுட்டிக்காட்டப்படுவதுண்டு. இலங்கைத்தீவில் நிலை மாற்றம் ஏற்படவில்லை என்பதே அது.இலங்கைத்தீவில் ஆயுத மோதல்கள்தான் முடிவுக்கு வந்திருக்கின்றன.உளவியல் மோதல் இப்பொழுதும் உண்டு.ஆயுத மோதல் ஒரு காரணம் அல்ல.அது விளைவுதான்.ஆயுத மோதல்களுக்கு காரணம் இன ஒடுக்குமுறைதான்.எனவே இன ஒடுக்குமுறை முடிவுக்கு வரும்பொழுதே இலங்கைத் தீவில் நிலை மாற்றம் ஏற்படும்.அதாவது போருக்கு பிந்திய,அல்லது பிணக்குக்கு பிந்திய,என்று அழைக்கத்தக்க ஒரு நிலை இலங்கைத்தீவில் இப்பொழுதும் ஏற்படவில்லை

உதாரணமாக,தென்னாபிரிக்காவில் கறுப்பின மக்களுக்கு அரசியல் விடுதலை கிடைத்தது.பொருத்தமான பொருளாதார விடுதலை இன்றுவரை கிடைக்கவில்லை.ஆனாலும் கறுப்பின மக்கள் ஒப்பீட்டளவில் அரசியல் விடுதலையை அனுபவிக்கும் ஒரு சூழல் அங்கே உருவாகிவிட்டது.அதனால்தான் நிலைமாறுகால நீதியை அங்கே ஒப்பீட்டளவில் வெற்றிகரமாகப் பரிசோதிக்க முடிந்தது.

ஆனால் இலங்கைத்தீவில் நிலைமை அப்படியல்ல.இலங்கைத்தீவில் ஆயுத மோதல்கள்தான் முடிவுக்கு வந்திருக்கின்றன.மோதல்களுக்குக் காரணமான இன ஒடுக்குமுறை இப்பொழுதும் உண்டு.அதனால்தான் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக சிங்களபௌத்த மயமாக்கலுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.சிங்கள பௌத்த மயமாக்கல் எனப்படுவது இனக் ஒடுக்குமுறையின் ஒரு பகுதிதான்.தமிழ் மக்களை ஒரு தேசமாக வனையும் அம்சங்களை அழித்து ஒழிப்பது,தமிழ்மக்களின் தேசியா இருப்பை அழிப்பதுதான் இன ஒடுக்குமுறையின் பிரதான இலக்கு.

இலங்கைத்தீவைப் பொறுத்தவரையிலும் அரசாங்கம் கூறுவதுபோல 2009க்கு பின்னரான காலகட்டத்தை பிணக்கிற்குப் பின்னரான அதாவது இனப்பிரச்சினைக்குப் பின்னரான காலகட்டம் என்று அழைக்க முடியாது. அதுபோலவே அரசுசார்பற்ற நிறுவனங்கள் அழைப்பதுபோல போருக்கு பின்னரான காலகட்டம் என்றும் அழைக்க முடியாது.மாறாக நான் எனது கட்டுரைகளில் திரும்பத் திரும்ப வலியுறுத்துவதைப்போல,ஆயுத மோதல்களுக்குப் பின்னரான காலகட்டம் என்பதுதான் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் உளவியல் மோதல்கள் இப்பொழுதும் உண்டு.

ஆயுத மோதல்களின்போது கைப்பற்றப்பட்ட நிலங்கள் இப்பொழுதும் அரசு படைகளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றன.அங்கெல்லாம் அவர்கள் விகாரைகளை அமைத்து சிங்களபௌத்த மயமாக்கலை முன்னெடுத்து வருகிறார்கள்.உயர் பாதுகாப்பு வலையங்கள் இப்பொழுதும் உண்டு. இலங்கைத்தீவின் மொத்தப் படைக் கட்டமைப்பில் மூன்றில் இரண்டு பகுதி வடக்குக் கிழக்கில்தான் உண்டு.போர் முடிவுக்கு வந்துவிட்டது என்றால் எதற்காக அளவுப் பிரமாணத்துக்கு அதிகமாக படையினரை தமிழ்ப் பகுதிகளில் பேண வேண்டும்? கண்ணுக்குத் தெரியாத ஒரு எதிரிக்கு எதிராக அரசாங்கம் தொடர்ந்தும் தன்னை தயார் படுத்தி வருகின்றதா?

அதுதான் பிரச்சினையே.அரசாங்கம் தமிழ்மக்கள் தேசமாக இருப்பதனை அச்சுறுத்தலாகப் பார்க்கின்றது. அதனால்தான் தமிழர்கள் தேசமாக இருப்பதை அழிக்கும் விதத்தில் சிங்கள பௌத்த மயமாக்கலை திணைக்களங்களுக்கூடாக முன்னெடுக்கின்றது. எனவே இலங்கைத்தீவில் கடந்த 14 ஆண்டுகளாக நிலவி வரும் அரசியற் சூழலை ஆயுத மோதல்களுக்கு பின்னரான ஒரு காலகட்டம் என்றுதான் அழைக்க வேண்டும். இங்கு நிலை மாற்றம் ஏற்படவில்லை.

அவ்வாறு நிலை மாற்றம் ஏற்படாத ஒரு நாட்டில், போரில் உயிர்நீத்த எல்லாருக்குமாக ஒரு நினைவுச் சின்னத்தை உருவாக்க முடியாது.அதை போரில் சம்பந்தப்பட்ட அனைவரும் அல்லது போரால் பாதிக்கப்பட்ட அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள் என்பதற்கில்லை.அவ்வாறு எல்லாரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு சூழல் எப்பொழுது தோன்றும் என்றால், மெய்யான பொருளில் நிலைமாற்றம் ஏற்படும் பொழுதுதான்.இங்கு நிலை மாற்றம் எனப்படுவது இன ஒடுக்குமுறை முடிவுக்கு கொண்டு வரப்படுவதுதான். அதாவது இலங்கைத்தீவின் பல்லினத்தன்மையை ஏற்றுக்கொள்ளும் ஓரு யாப்பை உருவாக்குவதுதான்.

எனவே இப்பொழுது விடயம் தெளிவாகத் தெரிகிறது.இலங்கைத்தீவின் பல்லினச் சூழலை;பல்மதச் சூழலை;பல மொழிச் சூழலை உறுதிப்படுத்தாதவரை;நல்லிணக்கத்தை அதன் மெய்யான பொருளில் கட்டி எழுப்பாதவரை; எல்லாருக்கும் பொதுவான ஒரு நினைவுச் சின்னத்தை உருவாக்க முடியாது.

ஏனெனில் போரில் உயிர் நீத்தவர்கள் என்பது ஒரு பொதுவான வகை. அதற்குள் போராளிகள் வருவார்கள்.படைத்தரப்பு வரும். பொதுமக்கள் வருவார்கள். சில சமயங்களில் வெளிநாட்டவர்களும் வருவார்கள்.அதன்படி போருக்கு பின்னரான ஒரு பொது நினைவுச் சின்னம் எனப்படுவது கொன்றவர்களையும் கொல்லப்பட்டவர்களையும்; காணாமல் ஆக்கப்பட்டவர்களையும் அவர்களைக் காணாமல் ஆக்கியவர்களையும்;இனப்படுகொலை புரிந்தவர்களையும் இனப்படுகொலைக்கு ஆளாகியவர்களையும் ஒன்றாக நினைவுகூரும் சின்னங்களாகவே அமைய முடியும்.

தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் பட்சத்தில் அப்படி ஒரு நினைவுச் சின்னத்தை குறித்து தமிழ் மக்கள் சிந்திக்கலாம்.ஆனால் நீதிக்கான வாய்ப்புகள் மிகக் குறைவாக காணப்படும் ஒரு நாட்டில்,யுத்த வெற்றி நினைவுச் சின்னங்களைக் கொண்டாடும் ஒரு நாட்டில், கொலை செய்தவரையும் கொல்லப்பட்டவரையும் ஒன்றாக ஒரு சின்னத்துக்குள் கொண்டு வருவது சாத்தியமே இல்லை.அதுமட்டுமல்ல பொத்தாம் பொதுவான ஒரு நினைவுச் சின்னம் எனப்படுவது இனப்படுகொலையால் உயிரிழந்தவர்களை போரில் உயிர் இழந்தவர்கள் என்ற ஒரு பொதுவான வகைக்குள் அடக்கிவிடும். இனப்படுகொலையால் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும்போது அங்கே இனப்படுகொலைக்கு எதிரான நீதியைக்கோரும் ஓர் அரசியல் இருக்கும். ஆனால் போரில் உயிர் நீத்தவர்கள் என்று வரும்பொழுது அங்கெ இனப்படுகொலை என்ற சுட்டிப்பான அம்சம் போர் என்ற பொதுவான அம்சத்தில் பின்தள்ளப்பட்டுவிடும்.இது தமிழ் மக்களைப் பொறுத்வரை அவர்களுடைய நீதிக்கான கோரிக்கையை மழுங்கடிக்கும் ஒரு நடவடிக்கை என்றே பார்க்கப்படும்.ஏனென்றால் இனப்படுகொலைக்கு நீதி கிடைத்தால்தான் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் சாத்தியப்படும்.நல்லிணக்கத்தை உருவாக்கினால்தான் ஒரு பொது நினைவுச் சின்னம் சாத்தியப்படும்.

எனவே முதலில் மூன்று இனங்களுக்கும் இடையிலே மெய்யான பொருளில் நல்லிணக்கத்தை ஸ்தாபிக்கும் விதத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.இது முதலாவது விடயம்.இரண்டாவது விடயம்,தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் என்ற அடிப்படையில் போராட வந்து அதில் உயிர்நீத்த அனைவருக்குமாக ஒரு பொது நினைவுச்சின்னத்தை உருவாக்கக்கூடிய சூழல் இன்றுவரை உருவாகவில்லை என்பதனை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும்.அப்படி ஒரு நினைவு சின்னத்தை உருவாக்குவது என்றால் அதற்கு முதலில் தமிழ்மக்கள் மத்தியில் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்குமான ஒரு பொது நினைவு நாளை கண்டுபிடிக்க வேண்டும்.ஆனால் இப்பொழுதும் தமிழ்த் தேசிய அரசியலில் ஒவ்வொரு இயக்கங்களுக்கும்,கட்சிக்கும்,தனிநபர்களுக்குமான நினைவு நாட்களும் நினைவுச் சின்னங்களுந்தான் உண்டு.ஒரு பொதுவான நினைவு நாளை கண்டுபிடிக்கும் அளவுக்கு தமிழ்த்தேசிய அரசியலின் ஜனநாயக இதயம் இனிமேற்றான் செழிப்படைய வேண்டியிருக்கிறது.அதனால் ஒரு பொது நினைவுச் சின்னத்துக்கு இப்பொழுதும் வாய்ப்பில்லை.

சுதந்திரப் பூங்கா-Freedom Park- தென்னாபிரிக்கா

 

அவ்வாறான ஒரு பொது நினைவுச் சின்னத்தை குறித்து நான் ஏற்கனவே எழுதியுள்ளேன்.அதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் முன்வைக்கும் வாதம் என்னவென்றால்,தியாகிக்கும்,துரோகிக்கும் ஒரேடியாக நினைவுச் சின்னத்தை அமைப்பதா என்பதுதான்.

அவர்களுக்கு பொது நினைவுச் சின்னம் என்றாலே என்னவென்று தெரியவில்லை.உலகில் இதுவரை உருவாக்கப்பட்ட இதுபோன்ற பொது நினைவு சின்னங்களுக்கு முகம் கிடையாது. தனிப்பட்ட கட்சி அல்லது இயக்க அடையாளம் கிடையாது.அந்நினைவு சின்னம் அரூபமானது.அது தமிழ் மக்களுக்காக போராட வந்த எல்லோருக்குமானது.ஒரு இயக்கத்துக்கு உரியது அல்ல.ஒரு கட்சிக்கு உரியது அல்ல.அது பொதுவானது.ஒரு தேசத்துக்கானது. ஆனால் அப்படி ஒரு நினைவுச் சினத்தை சின்னத்தை தமிழ் மக்கள் இன்றுவரை கண்டுபிடிக்க முடியாதிருக்கிறார்கள்.

அப்படி ஒரு நினைவுச் சின்னத்தை குறித்து உரையாடும் பொழுது இங்கு தென்னாபிரிக்க உதாரணத்தைக் காட்டலாம்.தென்னாபிரிக்காவில் “சுதந்திரப் பூங்காவில்” அவ்வாறான ஒரு சின்னம் உண்டு.அந்த நாட்டின் வெவ்வேறு பிராந்தியங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட அந்தந்த பிராந்தியங்களின் மண்ணின் இயல்பைப் பிரதிபலிக்கும் பாறைகள் அங்கே ஓர் ஒழுங்கிற்குள் வைக்கப்பட்டுள்ளன.அந்தப் பாறைகளுக்கு இடையிலான நிலப்பரப்பிலிருந்து புகை எழுந்தபடியிருக்கும்.தென்னாபிரிக்கர்களைப் பொறுத்தவரை புகையானது இறந்தவர்களின் ஆத்மாக்களோடு தொடர்பு கொள்வதற்கான ஒரு ஊடகமாகக் கருதப்படுகிறது.தென்னாபிரிக்காவில் சுதந்திரப் பூங்கா என்று அழைக்கப்படும் நினைவு வளாகமானது இனப்படுகொலைக்கு எதிரான ஒரு நினைவு வளாகமாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.அந்த வளாகம் அமைந்திருக்கும் நிலப்பரப்புக்கு நேர் எதிராக தென்னாபிரிக்கர்களை அடிமை கொண்ட டச்சு ஆக்கிரமிப்பாளர்களின் நினைவுச் சின்னம் காணப்படுகிறது.

தென்னாபிரிக்காவில் கறுப்பின மக்களுக்கு அரசியல் விடுதலை கிடைத்துவிட்டது.அதைவிட முக்கியமாக அங்கே நெல்சன் மண்டேலா என்ற ஒரு மகத்தான ஆளுமை இருந்தது.அது பண்புருமாற்றத்துக்கு-Transformation- தலைமை தாங்கியது.நிலைமாறு கால நீதிச் செய்முறைகளுக்கு தலைமை தாங்கியது. எனினும் அங்கே போரில் ஈடுபட்ட வெவ்வேறு இனக்குழுக்களுக்கு இடையே ஆறாத காயங்கள் இப்பொழுதும் உண்டு.பகையும் வன்மமும் பழிவாங்கும் உணர்ச்சியும் உண்டு.இந்த அடிப்படையில் சிந்தித்தால் தென்னாபிரிக்காவில் ஒரு சுதந்திரப் பூங்காவை உருவாக்கியது போன்று இலங்கைத்தீவில் தமிழ் மக்கள் ஒரு நினைவு வளாகத்தை உருவாக்க முடியுமா ?

நிச்சயமாக இல்லை.ஏனென்றால் இங்கே நிலைமாற்றம் அல்லது பண்புருமாற்றம் ஏற்படவில்லை.அது,மூன்று இனங்களுக்கிடையில் மட்டுமல்ல, தமிழினத்துக்குள்ளும் இனிமேற்றான் ஏற்பட வேண்டியிருக்கிறது. இவ்வாறான ஓர் அரசியற் சூழலில் பொதுவான ஒரு நினைவுச் சின்னத்தை குறித்த உரையாடல்களுக்கு இலங்கைத்தீவும் தயாராக இல்லை;தமிழரசியலும் தயாராக இல்லை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *