அலப்பறை கிளப்புறோம் : யாழ்ப்பாணத்தின் சுவை மாறுகின்றதா?

கடந்த நான்காம் திகதி யாழ்ப்பாணம் டில்கோ ஹோட்டலில் ஒரு விருந்து இடம்பெற்றது.”அலப்பறை கிளப்புறோம்” என்ற தலைப்பில் ஒழுங்கு செய்யப்பட்ட “டிஜே பார்ட்டி”அது. அந்நிகழ்வை குறித்து யாழ்.மாநகர சபை நிர்வாகமும் கச்சேரியும்  ஹோட்டல்  நிர்வாகத்தோடு தொடர்புகொண்டு கேட்டிருக்கின்றன. அந்த நிகழ்வை ஒழுங்குபடுத்தும் “Shuttle Vibe”  என்ற கொழும்புமைய   நிறுவனத்தோடு கதைக்குமாறு கூறி அந்த நிறுவனத்தின் தொடர்பிலக்கத்தை ஹோட்டல் நிர்வாகம் கொடுத்திருக்கிறது. நிகழ்வில் “டிஜே” இசை வழங்குனரோடு சிலர் தொலைபேசியில் எடுத்துப் பேசியிருக்கிறார்கள். மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி அவருடைய வீட்டுக்குச் சென்ற இருவர் மிரட்டியிருக்கிறார்கள்.போலீஸ் பாதுகாப்போடு அந்த நிகழ்வை நீங்கள் நடத்தினாலும் நிகழ்வு முடிந்த பின் நீங்கள் வெளியே வரத்தான் வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது.எனினும் நிகழ்வு குறித்த தினத்தில் நடந்திருக்கிறது.

அந்நிகழ்வில் மொத்தம் 100க்கும் குறையாதவர்கள் பங்குபற்றியதாகவும் அவர்களில் எட்டுப் பேர்களே பெண்கள் என்றும் ஹோட்டல் நிர்வாகம் கூறுகின்றது.அந்த எட்டுப் பேர்களில் இரு பெண்கள் தமது துணைவர்களோடு வந்தார்கள் என்றும்,இருவர் சகோதரிகள் என்றும்,நால்வர் ஒரே உறவு வட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.அங்கு மது பரிமாறப்பட்டுள்ளது.ஆனால் போதைவஸ்து பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுவது பிழையான தகவல் என்றும் ஹோட்டல் நிர்வாகம் கூறுகின்றது.

அந்நிகழ்வை எதிர்ப்பவர்கள் இரண்டு நோக்கு நிலைகளிலிருந்து அதை எதிர்க்கிறார்கள்.முதலாவது பண்பாட்டு நோக்கு நிலையில் இருந்து. இரண்டாவது அரசியல் நோக்கு நிலையில் இருந்து. அதாவது இது மாவீரர் மாதம் என்பதனால் இது போன்ற நிகழ்வுகளை ஒழுங்கு செய்யக்கூடாது என்று.

மாவீரர் வாரம் இம்மாத இறுதியில் வருகிறது.மாதத்தின் முதல் வாரத்தில் தீபாவளி வருகிறது.கடந்த வாரம் முழுவதும் யாழ் நகரத்தின் தெருக்களில் ஜனங்கள் நிரம்பி வழிந்தார்கள்.ஆனால் அதற்காக தீபாவளியைக் கொண்டாடுபவர்கள் மாவீரர் நாளை அனுஷ்டிக்க வரமாட்டார்கள் என்பதல்ல. ஏன் டிஜே பார்ட்டியில் ஆடிக் களித்திருப்பவர்கள் நினைவுகூர  மாட்டார்கள் என்று எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.

பொதுவாக ஒரு மக்கள் கூட்டம் அப்படித்தான் இருக்கும். முதலாவதாக அது மகிழ்ந்திருக்க விரும்பும். ஆடக் கிடைத்த சந்தர்ப்பங்களையும் பாடக்கிடைத்த சந்தர்ப்பங்களையும் அனுபவிக்கக்கிடைத்த சந்தர்ப்பங்களையும் யாரும் இழக்க விரும்புவதில்லை.அதே சமயம் தங்களுக்காக உயிர் நீத்தவர்களை அவர்கள் மறந்துவிடுவதுமில்லை.ஜனங்களை,அவர்களை அவர்களாக விளங்கிக் கொள்ளவேண்டும்.அவர்களுடைய ஆசாபாசங்கள்;விருப்பு வெறுப்புக்கள்;சின்னச்சின்னச் சந்தோசங்கள்;சலனங்கள்…போன்ற எல்லாவற்றுக்குள்ளாலும் விளங்கிக்கொள்ள வேண்டும். ஒரு மக்கள் கூட்டத்தை இதைச் செய்யாதே என்று கட்டளையிட முடியாது. அவ்வாறு கட்டளையிடுவது ஒரு போர்க்காலத்தில் சாத்தியமாக இருக்கலாம். ஆனால் ஆயுத மோதல்களற்ற ஒரு காலகட்டத்தில் அதை எப்படிச்  செய்வது?

தீபாவளியை,வருசப் பிறப்பைக் கொண்டாடுமாறு;ஆடி அமாவாசையை,சித்ராப் பௌர்ணமியை அனுஷ்டிக்குமாறு யாரும் மக்களுக்குக் கட்டளையிடுவதில்லை.நல்லூர் கோயிலுக்கு மடுத் தேவாலயத்துக்கு போகுமாறு யாரும் மக்களுக்குக் கட்டளை இடுவதில்லை. துர்கா மணி மண்டபத்தில் நடக்கும் சுழலும் சொற்போர்களுக்கு,விவாத மேடைகளுக்கு மக்களை யாரும் வாகனம் விட்டு ஏற்றிக்கொண்டு போவதில்லை.இவற்றையெல்லாம் சனங்கள் தாமாகவே செய்கிறார்கள். ஏனென்றால் அவையனைத்தும் மதப் பண்பாட்டினடியாக, நம்பிக்கைகளினடியாக மக்கள் மயப்பட்ட விடயங்கள்.எனவே நினைவு கூர்தலை மக்கள் மயப்படுத்துவது எப்படி என்பதுதான் இங்குள்ள பிரச்சினை.

நினைவுகளை;நினைவுகளின் அடியில் மண்டிக்கிடக்கும் துக்கத்தை; கோபத்தை எப்படி அரசியல் ஆக்கசக்தியாக மாற்றுவது என்று சிந்திக்கும் எல்லாக்கட்சிகளும்,அரசியல் செயற்பாட்டாளர்களும் நினைவு கூர்தலை எப்படி மக்கள் மயப்படுத்துவது என்று சிந்திப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

கலை இலக்கியங்கள்,திருவிழாக்கள்,கொண்டாட்டங்கள் போன்றன மக்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்புவதை காட்டுகின்றன. எனவே பொருத்தமான விதங்களில் மக்களை மகிழ்விப்பதற்குரிய கலைபண்பாட்டுத் தரிசனத்தை கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் கொண்டிருக்க வேண்டும்.

பூகோளமயமாதலின் விளைவாக,தொழில்நுட்பப் பெருக்கத்தின் விளைவாக சமூகங்களின் ருசி ரசனைகள் மாறி வருகின்றன.டிஜே பார்ட்டி எனப்படுவது அவ்வாறான ஒன்றுதான்.டி.ஜே. என்பது டிஸ்க் ஜோக்கி எனப்படும் ஆங்கில வார்த்தையின் சுருக்கம்.அதன் பொருள்,ஒரு விருந்தில் அல்லது பொதுமக்கள் கூடும் இடங்களில் சுவாரசியமாக பாடல்களை இசைப்பது.அதற்கேற்ப ஆடுவது.1935இல் ஓர் அமெரிக்கர் அதை அறிமுகப்படுத்தினார்.1943இல் முதலாவது டிஜே பார்ட்டி இங்கிலாந்தில் இடம் பெற்றது.

தமிழ்ப்பகுதிகளில் டிஜே இசை என்பது ஏற்கனவே உள்ள சினிமா பாடல்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை ஆடுவதற்கு ஏற்றாற்போல ரீமேக் செய்வதுதான்.அதில் குறிப்பாக தாளம் தூக்கலாகக் கேட்கும்.டும்டும்டும் என்று.அது இதயத்தில் அறைவது போலிருக்கும்.ஆனால் அதற்கு ஒரு தலைமுறை ஆடுகிறது.இளையவர்கள் மட்டுமல்ல நடுத்தர வயதினரும் சேர்ந்து ஆடுவார்கள்.

ஆடுவது நல்லது. அது உடலிறுக்கத்தையும் மன இறுக்கத்தையும் நீக்கும். ஈகோவைத் தளர்த்தும்.அது ஒரு நல்ல உடற்பயிற்சியும் மனப் பயிற்சியும் ஆகும்.ஆனால் எதற்கு ஆடுகிறோம்?எப்பொழுது ஆடுகிறோம்?எங்கே ஆடுகிறோம் ? பெரும்பாலான இளையோர் ஒன்றுகூடல்களில் டிஜே ஆட்டம் இருக்கும்.அங்குள்ள ஒலி பெருக்கிகள் அதிரும் பொழுது அது காதுக்கு இதமாக இருக்கிறதா அல்லது மனதுக்கு இதமாக இருக்கிறதா என்பதைக் குறித்து யாருக்கும் கவலையில்லை.ஆடுவதற்கு ஒர் இசை தேவை அவ்வளவுதான்.அதேசமயம் எமது நரம்புகளும் காதுகளும் மரத்துப்போய் விட்டன எதையும் அது காட்டுகின்றதா?நல்ல இசையை கேட்கும் காதும் நல்ல இசையை ரசிக்கும் மனமும் மரத்துக் கொண்டு போகின்றனவா?அது ஒரு ருசி மாற்றம்.ரசனை மாற்றம்.இதுபோல இன்னுமொரு மாற்றத்தை இங்கு சுட்டிக் காட்டலாம்.

கரஞ்சுண்டல் வண்டில் என்பது நமது சிறுபிராய ஞாபகங்களோடு சேர்ந்து வருவது.பெற்றோமக்ஸ் விளக்கின் ஒளியில் மணியொலித்தபடி இரவுகளில் எமது தெருக்களில் அது வரும்.அதை லாலா மிட்டாய் வண்டில் என்றும் அழைப்பதுண்டு.உறைப்பும் புளிப்பும் கலந்த,சூடு பறக்கும் கரஞ் சுண்டலின் பிறப்பிடம் வட இந்தியா என்று கூறப்படுகிறது.அதில் பயன்படுத்தப்படும் கடலை  இடத்துக்கிடம் வேறுபடுவதாக விடயம் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இப்பொழுது நமது திருவிழாக்களில் கரஞ்சுண்டல் கிடைப்பது அரிது. நல்லூர் திருவிழாவில் கடைசி மூன்று நாட்களில்தான் கரஞ்சுண்டல் கிடைப்பதுண்டு.பதிலாக ஸ்பெஷல் என்ற ஒன்று விற்கப்படுகிறது.

கொஞ்சம் மரவள்ளிச் சீவல்;கொஞ்சம் பகோடா: சில சிறிய உருண்டையான கடலை வடைகள்; சிறிய புளித்த கோதுமை மா வடைகள்; அவித்த நூடில்ஸ்….என்று பலதையும் பத்தையும் ஒரு தட்டில் போட்டு அதன் மீது சிறிதளவு கரஞ்சுண்டலைக் கொட்டி ஏதோ ஒரு குழம்பை ஊற்றித் தருவார்கள். அதுதான்  ஸ்பெஷல்.ஆனால் மொறு மொறுவென்று இருக்கும் மரவள்ளிச் சீவலுக்குள்,பொரித்த சிறிய கடலை வடைக்குள் ஏதோ ஒரு பெயர் தெரியாத குழம்பை ஊற்றினால் என்ன நடக்கும்? மொறு மொறுவென்று இருப்பது இழகிப் போய்விடும்.அதற்குள் கரஞ் சுண்டலையும் கலக்க எல்லாமே பதம் கெட்டுவிடும். ஒர் உணவின் சுவையை அதன் பௌதீகப் பண்பிலிருந்து பிரிக்க முடியாது.ஆனால் ஒவ்வொரு தின்பாண்டத்தினதும் தனித்துவமான பௌதீகப் பண்பைக் கெடுத்து ஒன்றடிமன்றடியாக எல்லாவற்றையும் ஒன்றாக்கி விடுவது சுவையாக இருக்குமா?ஆனால் அதைத்தான் புதிய சுவை என்று கூறி விற்கிறார்கள்.சனங்களும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.அது ஒரு ருசி மாற்றம்;ரசனை மாற்றம்.

டிஜே பார்ட்டியைப் போலவே,அதுவும் யாழ்ப்பாணத்தின் மாறிவரும் சுவையைக் காட்டுகின்றதா? எங்களுடைய செவிகள் ஏன் மரத்துப்போயின? எங்களுடைய சுவை நரம்புகள் ஏன் மரத்துப் போயின? நெஞ்சை உதைக்கும் இசைக்கு எப்பொழுது ஆடப் பழகினோம்? ஒரு சமூகத்தின் புலன்கள் மரத்துப்போய் கூருணர்வு மழுங்கிப் போனால் பிறகு என்ன நடக்கும்?அதை ஏனைய சமூகங்கள் இலகுவாக வேட்டையாடி விடும்.அல்லது தோற்கடித்து விடும்.

இது யாழ்ப்பாணத்திற்கு மட்டுமல்ல,உலகம் முழுவதுமான பூகோளமயமாதலின் விளைவுகளில் ஒன்று.இவ்வாறு மாறிவரும் ருசி ரசனைகளைக் கவனத்தில் எடுத்துத்தான் கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் கலை பண்பாட்டு இயக்கங்களும் தமது படைப்புகளை உருவாக்க வேண்டியிருக்கிறது.

போர்க்காலங்களில், குறிப்பாக ஒரு ஆயுதப்பின் போராட்டத்தின்  விளைவாகத் தோன்றிய ஒரு கருநிலை அரசு நிலத்தைக் கட்டுப்படுத்திய காலகட்டத்தில்,மாவீரர் நாளை ஓர் அரச நிகழ்வாக அனுஷ்டித்து வந்தது. ஆனால் இப்பொழுது மனங்களைக் கட்டுப்படுத்தினால்தான் நிலங்களைக் கட்டுப்படுத்தலாம்.அரசியலை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம். எனவே மாறிவரும் அரசியல்,பொருளாதார,தொழில்நுட்பச் சூழலுக்குள் தமிழ் மக்களுடைய மனங்களை எப்படிக் கவர்வது என்று கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் குடிமக்கள் சமூகங்களும் சிந்திக்க வேண்டும். அதற்கு வேண்டிய கலை பண்பாட்டுக் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்

ஒரு மக்கள் கூட்டம் எதை ரசிக்க வேண்டும்? எதை ருசிக்க வேண்டும்? எதைக் எப்பொழுது கொண்டாட வேண்டும்? எப்படிக் கொண்டாட வேண்டும்? எப்பொழுது கொண்டாட வேண்டும் போன்ற விடயங்களில்,மக்களைப் பொருத்தமான இடங்களில் வழிநடத்தத் தேவையான கலை பண்பாட்டுத்  தரிசனங்களை கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் கொண்டிருக்க வேண்டும்.

மாணவர்கள் மத்தியில் எதை விவாதப் பொருளாக மாற்றுவது என்பதனை கல்விச் சமூகம் தீர்மானிக்க வேண்டும்.நாட்டில் எத்தனை தமிழ் கட்சிகளிடம் மாணவ அமைப்பு உண்டு?எத்தனை தமிழ் கட்சிகளுக்கு பல்கலைக்கழகங்களில் மாணவ அமைப்பு உண்டு? அண்மை நாட்களாக சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருட்களாக மாறியிருக்கும் விவாத மேடைகள்,டிஜே பாட்டிகள் போன்றவை யாவும் தமிழ் மக்களுக்கு ஒரு விடயத்தை உணர்த்துகின்றன.நீதிக்காகப் போராடும் ஒரு சமூகம்,தனக்கு வேண்டிய கட்டமைப்புகளை உருவாக்கத் தவறிய வெற்றிடத்தில்தான் இவ்வாறெல்லாம் நடக்கின்றன.கலை பண்பாட்டு அமைப்புக்கள்,மாணவ அமைப்புகள்  போன்றன அவ்வாறான தேச நிர்மானத்துக்குரிய கட்டமைப்புகள்தான்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *