தமிழரசுக் கட்சியை அக்கட்சிக்காரர்களிடமிருந்தே காப்பாற்றுவது யார்?

சில மாதங்களுக்கு முன்பு தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த பசுபதிப்பிள்ளை நினைவு நாள் கிளிநொச்சியில் அனுஷ்டிக்கப்பட்டடது. அதில்  நினைவுரை ஆற்றிய இக்கட்டுரையாசிரியர் ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டியிருந்தார். இரண்டு தேர்தல்கள் நடந்தால் அவை தமிழ் மக்களின் தோல்வியை வெளிக் கொண்டுவரும் என்று.ஒன்று,தமிழரசுக் கட்சிக்குள் நடக்கும் தேர்தல்.இரண்டாவது,மாகாண சபைத் தேர்தல்.அண்மையில்,தமிழரசுக் கட்சிக்குள் நடந்த தேர்தல் தமிழ் அரசியலின் சீரழிவை வெளிக்கொண்டு வந்திருக்கிறது.

அரசியல் விமர்சகர் ஜோதிலிங்கம் கூறுவதுபோல,தமிழ்மக்கள் மத்தியில் கட்சிகள் கிடையாது,தேர்தலில் வாக்குக் கேட்கும் குழுக்கள்தான் உண்டு என்பது சரியா?ஏனென்றால் கட்சிகளுக்குரிய கட்டுக்கோப்பு; யாப்பு; கூட்டுப் பொறுப்பு என்பன இருந்திருந்தால் பொதுச் செயலாளர் தெரிவில் அப்படி ஒரு குழப்பம் நடந்திருக்காது.

அந்தக் குழப்பம் பின்வரும் விடயங்களை நமக்கு உணர்த்துகின்றது.முதலாவது, தமிழரசுக் கட்சி ஒரு கட்டுக்கோப்பான கட்டமைப்பாக இல்லை.அது சிதைந்து போய்விட்டது.ஒரு பொது முடிவை எடுக்க முடியாத அளவுக்கு கட்சி அதன் கூட்டுணர்வை இழந்துவிட்டது. இரண்டாவது,சிறீதரனின் தலைமைத்துவத்தை அவருடைய எதிரணி ஏற்றுக்கொள்ளவில்லை.அவர்கள் தோல்வியை ஏற்றுக்கொள்ளத்  தயாரில்லை.அதாவது தொகுத்துப் பார்த்தால் தமிழரசுக் கட்சி தலைவருக்கான தேர்தலோடு இரண்டாகி நிற்கின்றது.

ஆனால் இதுவிடயத்தில் தமிழரசுக் கட்சியின் சீத்துவக்கேட்டை விமர்சிக்கும் ஏனைய கட்சிகள் மட்டும் ஜனநாயகக் கட்டமைப்பாக உள்ளனவா? அங்கேயும் பரம்பரைத் தலைவர்கள்;கேள்விக்கிடமற்ற நிரந்தரத் தலைவர்கள் என்ற ஏற்பாடுகள்தானே உண்டு ?கட்சி மாநாடுகள் வைக்கிறார்கள்.ஆனால் திரும்பத் திரும்ப ஒருவரே தலைவராகத் தெரிவு செய்யப்படலாமென்றால் அதன் பொருள் என்ன?கட்சிக்குள் வேறு தலைவர்கள் வரவில்லை என்பதா?அல்லது இருக்கின்ற தலைவர் கடவுளா?

எனவே தமிழரசுக் கட்சியை விமர்சிக்கும் யோக்கியதை ஏனைய கட்சிகளுக்கு கிடையாது.தமிழரசுக் கட்சியைப் பின்பற்றி ஏனைய கட்சிகளும் தமது உயர்மட்டப் பொறுப்புகளை தேர்தல்மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும். உட்கட்சி ஜனநாயகத்தைப் பாதுகாக்கவில்லையென்றால், தமிழ் அரசியலின் ஜனநாயக இதயத்தைப் பலப்படுத்த முடியாது. தமிழ் அரசியலின் ஜனநாயக இதயத்தைப் பலப்படுத்தவில்லையென்றால் தமிழ்த் தேசியத்தைப் பலப்படுத்த முடியாது. ஏனென்றால், தேசியத்தின் இதயம் ஜனநாயகம்தான்.தேசியவாதம் தொடர்பான மேற்கத்திய அறிஞர்களின் மேற்கோள்களின்படி, தேசியவாதத்தின் உள்ளடக்கம் ஜனநாயகமாக இருக்க வேண்டும். கட்சிகளுக்குள் ஜனநாயகம் இல்லையென்றால், அவை தங்களைத் தேசியக்கட்சிகள் என்று கூறிக் கொள்வதில் பொருள் இல்லை. எனவே தமிழரசுக் கட்சிக்குள் நடந்த தேர்தல் எல்லா விதமான விமர்சனங்களோடும் முற்போக்கானது.

அது ஜனநாயகத்தின் மீது கொண்ட நம்பிக்கையால்,அல்லது கட்சிக்குள் உட்கட்சி ஜனநாயகம் செழித்தோங்கியிருக்கிறது என்பதற்காக நடத்தப்பட்ட ஒரு தேர்தல் அல்ல.கட்சிக்குள் ஜனநாயகமே இல்லை;கூட்டு முடிவுகள் எடுக்கப்படுவதில்லை;தனியோட்டங்கள்தான் உண்டு; சுமந்திரனும் சம்பந்தரும் தங்களுக்கு இடையே பேசி முடிவுகளை எடுத்தார்கள்;சுமந்திரன் யாரையும் பொருட்படுத்தாமல் தனியோட்டம் ஓடினார்;என்ற குற்றச்சாட்டுக்கள் பல ஆண்டுகளாக இருந்து வருகின்றன.

ஆனால் சுமந்திரன் கூறுகிறார், கூட்டுப் பொறுப்பு என்று கூறி ஏனைய கட்சி முக்கியஸ்தர்களையும் அழைத்துக்கொண்டு சந்திப்புகளுக்குச் சென்றால், சந்திப்பு முடிவதற்கு இடையில் ஊடகங்களுக்குத் தகவல்கள் கசிய விடப்படுகின்றன என்று.அதாவது கட்சியின் முக்கியஸ்தர்கள் கூட்டுப் பொறுப்புடன் நடந்து கொள்வதில்லை என்று.அவ்வாறு கட்சியின் கூட்டுப் பொறுப்பை சிதைத்தமைக்கு அவருடைய தனி ஓட்டங்கள்தான் காரணம் என்று கட்சியின் மேல்மட்ட உறுப்பினர்கள் கூறுகிறார்கள்.

இவ்வாறு கட்சிக்குள் ஜனநாயகம் சிதைந்து போயிருந்த ஒரு காலகட்டத்தில்,தலைமைப் பொறுப்புக்கான தேர்தலை நடத்த வேண்டும் என்ற நிலைமைகளை சுமந்திரனை உருவாக்கினார்.அவர் அதை உருவாக்கக் காரணம் கட்சிக்குள் ஜனநாயகத்தை பலப்படுத்த வேண்டும் என்பதற்காகவா? அல்லது கதிரைகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் சம்பந்தரையும் மாவையும் கதிரைகளை விட்டு அகற்ற வேண்டும் என்பதற்காகவா?நடப்பு நிலைமைகளைத் தொகுத்துப்பார்த்தால், இருவரையும் கதிரைகளை விட்டு அகற்றுவதற்காகத்தான் சுமந்திரன் ஒரு தேர்தலை நோக்கி நிலைமைகளை நகர்த்தினார் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.ஒரு தேர்தல் நடந்தால் அதில்,தான் வெல்வேன் என்று அவர் உறுதியாக நம்பினார்.அதற்குரிய வேலைகளை அவர் ஏற்கனவே செய்துவிட்டார்.எனவே,வெற்றி நிச்சயம் என்று நம்பியபடியால்தான் அவர் தேர்தலை நோக்கி நிலைமைகளை நகர்த்தினார். தனக்கு வெற்றி நிச்சயம் என்பதனால்,கட்சியை ஒரேடியாகத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடலாம் என்று அவர் நம்பினார்.

ஆனால் சிறீதரன் தொடக்கத்திலிருந்து நம்பிக்கை தளராமல் உழைத்தார்.கடைசிக் கட்டத்தில் தளம்பிக் கொண்டிருந்த வாக்காளர்கள் தமிழ்த் தேசிய உணர்வுக்குப் பயந்து விட்டார்கள்.தமிழ்த் தேசிய உணர்வின் அடிப்படையில் சிறீதரன் வெல்லலாம் என்ற சந்தேகத்தில்,தளம்பிக் கொண்டிருந்த வாக்காளர்கள் சுமந்திரனுக்கு எதிராக முடிவெடுத்தார்கள்.வீட்டுச் சின்னத்துக்கு விழும் வாக்குகள் ஒரு கூட்டுணர்வின் அடிப்படையில் விழும் வாக்குகளே.அக்கூட்டுணர்வுதான் தமது ஆதரவுத் தளம் என்று நம்பும் அரசியல்வாதிகள் அதற்குப் பயப்படுவார்கள்.ஆனால் அதற்காக,அதை ஒரு முழுமையான கொள்கை வெற்றியாக வியாக்கியானம் செய்யத் தேவையில்லை.குறிப்பாக இது கட்சிக்குள் நடந்த தேர்தல்.இதில் பங்குபற்றியவர்கள் அரசியல்வாதிகள். பொதுமக்கள் அல்ல. அதாவது அரசியல் விலங்குகள்.அரசியல் விலங்குகள் கொள்கைக்கு உண்மையாக இருக்கும் என்றெல்லாம் கற்பனை செய்யத் தேவையில்லை.

அது சுமந்திரன் எதிர்பாராத தோல்வி.அவருடைய ஆதரவுத் தளம் நலன்களின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டது.கட்சிக்குள் நுழைந்ததிலிருந்து அவர் எப்பொழுதும் ஒரு “கிங்மேக்கராகவோ” அல்லது பட்டத்து இளவரசனாகவோதான் தன்னைக் கட்டமைத்துக் கொண்டார். அதற்கு சம்பந்தரும் ஆதரவு. கட்சிக்குள் இரண்டாம் மூன்றாம் நிலைகளில் இருப்பதற்கு அவர் பழக்கப்படவில்லை. தோற்கடிக்கப்பட்ட பின் அவரைப் பொறுத்தவரை அவரைவிடத் தகுதி குறைந்தவர் என்று அவர் கருதிய சிறீதரனின் கீழ் அவர் செயற்பட வேண்டியுள்ளது. அதற்கு அவருடைய “ஈகோ” இடம் கொடுக்குமா?

மேலும் இத்தோல்வியானது,அவருடைய எதிர்காலத் தேர்தல் தோல்விகளையும் தீர்மானிக்ககூடும். அப்படிப்பட்டதோர் சூழலில்,அவர் தேசியப் பட்டியல் ஆசனத்தைக் குறி வைக்கக்கூடும்.அதற்கு செயலாளர் அவருடைய ஆளாக இருக்க வேண்டும். அதனால்தான் தன்னைச் செயலாளராக நியமிக்கக் கேட்டிருக்கிறார்.அது நடக்கக்கூடிய காரியம் இல்லையென்று அவருக்கே தெரியும்.ஆனால் அதன்மூலம் கிழக்கில் உள்ள தன்னுடைய ஆளை செயலாளராக நியமிக்குமாறு நிர்பந்திக்கலாம் என்பதை அவர் சரியாகவே கணித்திருந்தார்.இது அவர்  எதிர்காலத்தில் தேசியப் பட்டியல் ஆசனத்தைக் கைப்பற்றுவதற்கான முஸ்தீபு.அதாவது சுமந்திரன் கட்சிக்குள் தொடர்ந்தும் தனது முதன்மையைத் தக்கவைக்க முற்படுகிறார் என்று பொருள்.அவர் சிறிதரனுக்கு எழுதிய பகிரங்கக் கடிதத்தில் அது தெரிகிறது.

கடிதம் எழுத வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது? சிறிதரனோடு அதை நேரடியாக காதும் காதும் வைத்ததுபோல ஏன் பேச முடியவில்லை?அது இருவரும் தூரமாக இருப்பதைக் காட்டுகின்றதா?அதனை பகிரங்கப்படுத்துவதன்மூலமும்,அதை எழுத்தில் முன்வைப்பதன்மூலமும்,குறிப்பாக கடிதத்தில் சில சட்ட நுணுக்கங்களைச் சுட்டிக்காட்டுவதன் மூலமும் எதிர்காலத்தில் சிறீதரனின் அணிக்கு எதிராகச் சட்டரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்ற மிரட்டல் அங்கே உண்டா?

கட்சிக்குள் தன்னுடைய முக்கியத்துவத்தைத் தக்கவைக்க முடியவில்லை என்றால் அவர் கட்சிக்கு வெளியே போவாரா?ஒரு புதிய கட்சியை உருவாக்குவாரா? அதாவது தமிழரசுக் கட்சி உடையுமா? சுமந்திரன் ஒரு “கிங் மேக்கர்”தான்.ஒரு “கிங்கைப்”போல ஒரு புதிய கட்சியைக் கட்டியெழுப்புவாரா?

ஆனால் செயலாளர் தெரிவில் ஏற்பட்ட குழப்பம் மக்கள் மத்தியில் சுமந்திரனுக்குப் பாதகமான விளைவுகளைத்தான் ஏற்படுத்தியிருக்கின்றது. சுமந்திரன் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்து அளாப்புகிறார் என்ற அபிப்பிராயம் மேலெழுந்திருக்கிறது. அவர் சிறீதரனுக்கு எழுதிய கடிதம் சாதாரண மக்களை அதிகம் சென்றடையாது.அரசியல் ஈடுபாடுடைய; அரசியல் கட்டுரைகளை வாசிக்கின்றவர்கள் மத்தியில் அதற்கு ஒரு கவனிப்பு இருக்கும்.ஆனால் சாதாரண வாக்காளர்கள் சுமந்திரனை ஓர் அளாப்பியாகத்தான் பார்க்கிறார்கள்.

சிறீதரனைப் பொறுத்தவரை அவர் பழைய கூட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.ஆனால் ஏனைய கட்சிகளை ஒருங்கிணைக்க முன்பு அவர் தன்னுடைய சொந்தக் கட்சிக்குள் தன்னுடைய நிலையைப் பலப்படுத்தி கட்சியை ஒரு கட்டிறுக்கமான நிறுவனமாகக் கட்டியெழுப்ப வேண்டியவராகக் காணப்படுகிறார்.கட்சி இரண்டாக உடைவதைத் தடுப்பதென்றால் இப்போதைக்கு சுமந்திரன் அணியை அனுசரித்துப் போகவேண்டும்.

கடந்த சில தசாப்தங்களுக்குள் தென்னிலங்கையில் இரண்டு பாரம்பரியக் கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஏற்கனவே சிதைந்து விட்டன.அது ஈழப் போரின் நேரடி விளைவு.ஆனால் தமிழ்மக்கள் மத்தியில் ஈழப் போரின் நேரடி விளைவாக இரண்டு பாரம்பரிய கட்சிகளும் இப்பொழுதும் அரங்கில் நிற்கின்றன.அவை பண்புருமாற்றத்துக்குத் தயாரா?

பல ஆண்டுகளுக்கு முன் தமிழகம்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் யாழ்ப்பாணம் வந்திருந்தபொழுது தனிப்பட்ட சந்திப்பின்போது இக்கட்டுரை ஆசிரியரிடம் சொன்னார்…”உங்களுடைய தலைவர்களில் பலர் தீர்ந்துபோன சக்திகள்-spent forces-என்று”.தீர்ந்துபோன சக்திகளை வைத்துக்கொண்டு கட்சிகளைப் புதுப்பிக்கலாமா ?

பல தசாப்தங்களுக்கு முன்பு செல்வநாயகம் சொன்னார்…தமிழ் மக்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று.ஆனால் இப்பொழுது அவருடைய கட்சியை அவருடைய கட்சிக்காரரிடம் இருந்தே காப்பாற்றுவது எப்படி?

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *