தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழக முதல்வருக்கு அனுப்பிய கடிதம் 

கடந்த 19ஆம் திகதி தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்ட 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட ஒரு கூட்டுக் கடிதம் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய உப தூதரகத்தில் கையளிக்கப்பட்டது.திருச்சி சிறப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த மூன்று அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு தமிழக முதல்வரிடம் அக்கூட்டுக் கடிதம் கோரிக்கை விடுத்திருந்தது.திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத்தமிழர்களின் நலன்களைக் கவனிக்கும் ஒரு வழக்கறிஞரின் பங்களிப்போடு அக்கூட்டுக் கடிதம் தயாரிக்கப்பட்டது. கடந்த 17 ஆம் தேதி உத்தியோகப் பற்றற்ற விதத்தில் தமிழக முதல்வரிடம் கையளிக்கப்பட்டது.பின்னர் 19ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் உள்ள உபதூதரகம் ஊடாக அனுப்பப்பட்டது.தமிழ்த்தேசிய நிலைப்பாட்டை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் 12பேர் ஒன்றாக இணைந்து அப்படி ஒரு கடிதத்தை அனுப்பியமை முக்கியமான ஒர் அடைவு.உடல்நலக் குறைவு காரணமாக சம்பந்தர் கையெழுத்திடவில்லை.

2021ஆண்டும் ஒரு கூட்டுக் கடிதம் தயாரிக்கப்பட்டது.அந்த ஆண்டு நடக்கவிருந்த ஐநா மனித உரிமைகள் கூட்டத் தொடரை  முன்னிட்டு அந்த ஆண்டு ஜனவரி மாதம் அக்கடிதம் அனுப்பப்பட்டது.கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளின் பின் மீண்டும் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து ஒரு கூட்டுக் கடிதத்தை  தமிழக முதல்வருக்கு அனுப்பியிருக்கிறார்கள்.

அதிகம் கவனத்தை ஈர்க்காத அந்த முயற்சி மகத்தானது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் சிறப்பு முகாம் கைதிகளின் விடயத்தில் ஒன்றிணைந்த  அதே கட்சிகள் ஏனைய  எல்லா விடயங்களிலும் ஒன்றிணையும் என்று கற்பனை செய்யத் தேவையில்லை. தமிழரசுக் கட்சிக்குள் நடப்பவை முழுத் தமிழ் அரசியலுக்கும் பொருந்தும். தமிழ் மக்களுக்கு இப்பொழுது எதிரிகள் வெளியில் இல்லை .சொந்த வீட்டுக்குள்தான் இருக்கிறார்கள்.ஒரு தேர்தல் ஆண்டில் தமிழ் மக்கள்  ஒருமித்து முடிவெடுக்க முடியாத ஒரு நிலை.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில், தமிழ் மக்கள் மத்தியில் மூன்று விதமான முடிவுகள் காணப்படுகின்றன.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேர்தலைப்  புறக்கணிக்கின்றது. ஆனால்,அந்த முடிவை மக்கள் மயப்படுத்த வேண்டும் என்று அக்கட்சி சிந்திக்கவில்லை.அதாவது தன்னுடைய முடிவு சரி என்று மக்களை ஏற்றுக்கொள்ளச் செய்து தேர்தலைப் புறக்கணிக்கும் ஒரு மக்கள் மக்கள் ஆணையைப் பெற அக்கட்சி முயற்சிக்கவில்லை.

தமிழரசுக் கட்சி இரண்டாகி நிற்கிறது.ஒரு பிரிவு சஜித்தோடு நிற்பதாகத் தோன்றுகிறது.மற்றொரு பிரிவு தமிழ்ப் பொது வேட்பாளருக்குக் கிட்டவாக நிற்கிறது. குத்துவிளக்கு  கூட்டணிக்குள்,ஈபிஆர்எல்எப்   தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற முடிவை எப்பொழுதோ எடுத்துவிட்டது.ஏனைய கட்சிகள் அது தொடர்பாக தமது உத்தியோகபூர்வ நிலைப்பாடுகளை அறிவிக்கவில்லை. விக்னேஸ்வரன்,பொது  வேட்பாளரை ஏற்றுக்கொள்கிறார். இப்படியாகத்  தமிழ்த் தரப்பில் மூன்று நிலைப்பாடுகள் உண்டு.

ஆனால் அவை நிலைப்பாடுகள்தான்.கருத்துருவாக்கம் என்ற செயற்பாட்டுக்கும் அப்பால் என்பதற்கும் அப்பால் அதை நோக்கிய கட்டமைப்புகள் எவையும் இதுவரை உருவாக்கப்படவில்லை.அதாவது கிட்டத்தட்ட ஆறு மாதங்களில் வரக்கூடிய ஒரு தேர்தலை எதிர்கொள்வதற்கு தமிழ்த் தரப்பு இப்படித்தான் தயாராகக் காணப்படுகின்றது.

அதேசமயம் தென்னிலங்கையில் பிரதான கட்சிகள்  ஜனாதிபதித் தேர்தலை நோக்கி திட்டமிட்டு உழைக்கின்றன.ஜேவிபிதான் முதலில் உற்சாகமாக உழைக்க தொடங்கியது. “அரகலய”வின் விளைவு அது. அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய  பசில் அதிகரித்து எதிர்பார்ப்போடு உழைத்து வருகிறார். அமெரிக்காவிலிருந்து வந்த பசில் தமது பேர பலத்தை அதிகரிக்கும் நோக்கத்தோடு கருத்து தெரிவித்தார்.ஜனாதிபதித் தேர்தலை முதலில் வைப்பதற்குப் பதிலாக பொதுத் தேர்தலை முதலில் வைக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார். ஏனென்றால் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் மக்களுக்கு முற்கற்பிதங்களை ஏற்படுத்தும். முன் முடிவுகளை உருவாக்கும். ஒரு வெற்றி அலையானது தொடர்ந்து அடுத்தடுத்த தேர்தல்களிலும் எதிரொலிக்கும். எனவே ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பொதுத் தேர்தலிலும் மக்கள் வாக்களிக்கக்கூடும். ஒரு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெறுவாராக இருந்தால்,அவர் பொருளாதாரத்தை மறுசீரமைப்பதற்காக கிடைத்த வெற்றியாக அது காட்டப்படும்.அதனால் ரணிலின் பேரபலம் அதிகரிக்கும். அதன்பின் நடக்கக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் தாமரை மொட்டுக் கட்சி, ரணிலோடு பேரம் பேசி வேண்டிய அமைச்சுகளைப் பெறுவது கடினமாகலாம்.  எனவேதான் முதலில் ஒரு பொதுத் தேர்தலை வைக்க வேண்டும் என்று அவர்கள் கேட்கிறார்கள்.

ஒரு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் வெற்றி பெறுவாராக இருந்தால் அது அவருடைய சொந்தக் கட்சியின் வாக்கு வங்கியால் அல்ல என்பது அவருக்கே தெரியும்.தாமரை மொட்டுக்களின் பலமின்றி வெற்றிபெற முடியாது என்ற நிலைதான் இப்பொழுதுவரை உண்டு.அவருடைய சொந்தக் கட்சியின் பலம் அவருக்கு குறைவு. எனவே அவருடைய சொந்தப் பலம் எது என்பதனை அவருக்கு உணர்த்தும் விதத்தில் ஒரு பொதுத்  தேர்தலை முதலில் வைத்தால் அதில் ரணில் தன்னுடைய சொந்தப் பலம் எது என்பதைக் கண்டுபிடித்து விடுவார். அப்பொழுது அவருடைய பேரம் குறைவாக இருக்கும். அந்த நேரத்தில் ராஜபக்சங்கள் அவருடன் பேரம் பேசுவது இலகுவாக இருக்கும். நாமலை பிரதமராக நியமிக்கும்படி கேட்கலாம்.

எனவே முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடந்தால் அதில் ரணிலுக்குப் பேர பலம் அதிகரிக்கும். முதலில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தால் அதில் ரணிலின் பேரம் குறையும். எனவே ரணிலின் பேரத்தைக் குறைப்பதுதான் ராஜபக்சகளின் திட்டம். இதை இன்னும் ஆழமாகச் சொன்னால் அடுத்த நாடாளுமன்றத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதுதான் அவர்களுடைய திட்டம்.

எனவே ராஜபக்சத்தை தங்களுடைய பேரபலத்தை நிரூபிப்பதற்குத் தயாராகி வருகிறார்கள் என்று பொருள்.இதை அதன் சாராம்சத்தில் சொன்னால், ராஜபக்சக்கள் தற்காப்பு நிலையில் இருந்து வலிந்து தாக்கும் நிலையை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்று பொருள். கடந்த 2021 ஆம் ஆண்டு “அரகலய”வின் பொது  அவர்கள் பின்வாங்கும் நிலையில் இருந்தார்கள். சொந்தத் தேர்தல் தொகுதிகளிலேயே அவர்களுக்குப் பாதுகாப்பு இருக்கவில்லை.படை முகாம்களில் அவர்கள் அடைக்கலம் தேட வேண்டி வந்தது. ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய வெளிநாடு ஒன்றுக்கு தப்ப வேண்டி வந்தது. ஆனால் அவ்வாறான தற்காப்பு நிலையில் இருந்து இப்பொழுது வலிந்து தாக்கும் ஒரு நிலையைத் தாங்கள் அடைந்து விட்டதாக அவர்கள் நம்புகிறார்கள். எனவே அதை நோக்கித்தான் அவர்கள் திட்டமிடுகிறார்கள். கோட்டாபயவின் புத்தகமும் அந்த அடிப்படையில் எழுதப்பட்டதுதான்.

ஆனால் அமெரிக்காவிலிருந்து வந்த பசில் நினைத்தபடியெல்லாம் அரசியலை நகர்த்த முடியாது என்பதைத்தான் அண்மையில் அமெரிக்காவுக்கு சென்று வந்த மைத்திரியின் சர்ச்சைக்குரிய கூற்று வெளிப்படுத்துகின்றதா?மைத்திரி கூறுகிறார், ஈஸ்டர் குண்டு வெடிப்புத் தொடர்பாக தனக்கு ரகசியங்கள் தெரியும் என்று. அவர் ஏன் அவ்வாறு கூறுகிறார் ?அதுவும் ஒரு ஜனாதிபதித் தேர்தல் வர இருக்கும் பின்னணியில் ஏன் அப்படிக் கூறுகிறார்? ஏனென்றால், ஈஸ்டர் குண்டு வெடிப்பைப்பற்றிப் பேசினால் அதன் விளைவின் விளைவுகள் ராஜபக்சக்களைத்தான் பாதிக்கும்.

ராஜபக்சக்கள் தற்காப்பு நிலையில் இருந்து வலிந்து தாக்கும் நிலைக்கு முன்னேறுவதை,மேற்கு நாடுகள் விரும்பவில்லையா?அப்படிப் பார்த்தால், மைத்திரி கிளப்பிய சர்ச்சையும் “சனல் நாலு” வீடியோவை போன்றதுதானா? இதை இன்னும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால்,ராஜபக்சக்களை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்குச் சவாலாக  எழாதபடி பார்த்துக் கொள்வதுதான் மேற்கு நாடுகளின் திட்டமா ? அதாவது ரணிலுடைய வழிகளை இலகுவாக்கிக் கொடுத்தல்?

மேற்கு நாடுகளும் மேற்கத்திய பெரு நிறுவனங்களாகிய பன்னாட்டு நாணய நிதியம் போன்றனவும் ரணில் பதவியில் தொடர்ந்துமிருப்பதைத்தான் விரும்புவதாகத் தெரிகிறது.மேற்கத்திய பாரம்பரியத்தில் வந்த அவரைக் கையாள்வது இலகுவானது என்று அவை நம்புகின்றன.கத்தியின்றி ரத்தமின்றி,தேர்தலின்றிக் கிடைத்த ஆட்சிமாற்றத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் தொடர விரும்புகின்றன.எனவே மேற்கு நாடுகளின் விருப்பத் தெரிவு ரணில்தான்.

ராஜபக்சக்கள் தாம் வலிந்து தாக்கும் நிலைக்கு வளர்ந்து விட்டதாக நம்பினாலும்கூட, தங்களுக்குப் பொருத்தமான முன் தடுப்பு ரணில் விக்கிரமசிங்கதான் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். எனவே, அவர்கள் ரணிலுடன் தமது பேரத்தை அதிகப்படுத்த விரும்பினாலும், ரணிலை விட்டால் அவர்களுக்கு வேறு தெரிவில்லை.அப்படித்தான் மகா சங்கத்திற்கும், படைத்தரப்புக்கும். அதாவது உள்நாட்டிலும் அனைத்துலக அளவிலும் மேற்கு நாடுகள் மத்தியிலும் ரணில் விக்கிரமசிங்கவுக்குத்தான் அதிகம் வரவேற்புக் காணப்படுகின்றது.அதனால்தான் ராஜபக்சக்கள் அவருடைய வழிகளைத் தடுக்காமல் இருக்க மைத்திரி அவ்வாறு பேச வைக்கப்படுகின்றாரா?

ஆயின்,இந்த விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன?ரணில் விக்கிரமசிங்க எல்லாப் பேரரசுகளையும் சம தூரத்தில் வைத்துக் கையாளக்கூடிய ஒருவர். அப்படிப்பட்ட ஒருவர் இந்தியாவைப் பொறுத்தவரையிலும் கையாளக் கடினமானவர். அப்படிப் பார்த்தால் இந்தியா ரணிலை ஒரு விருப்பத் தெரிவாக எடுக்க முடியாது.

அது ரணிலுக்கும் விளங்கும்.அதனால்தான் அவர் ஜனாதிபதித் தேர்தலில் இந்தியா தனக்கு எதிராகப் போகாமல் தடுப்பதை நோக்கமாகக் கொண்டு இந்தியாவுடன் குறிப்பிடத்தக்க அளவுக்கு இணங்கிப் போக முயற்சிக்கின்றார். யாழ்ப்பாணத்தின் மூன்று தீவுகளிலும் இந்திய நிறுவனங்களுக்கு மீளப் புதுப்பிக்கும் எரிசக்தி திட்டங்களை வழங்கும் உடன்படிக்கைகள் கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி கையெழுத்திடப்பட்டன. அதுபோலவே ராமர் பாலம் என்ற விடயத்திலும் ரணில் உண்மையாக இருக்கிறார் என்ற ஒரு தோற்றம் வெளிக்காட்டப்படுகிறது. ராமர் பாலத்தை கட்டப் போவதாக ரணில் இந்தியாவை நம்ப வைக்கின்றார். தன்னை நம்பத் தயாரற்ற  ஒரு பக்கத்து பேரரசுக்கு நாட்டை  முழுமையாகத் திறக்கத் தயார் என்று காட்ட  ரணில் முற்படுகிறாரா?

இந்தியப் பொருளாதாரம் அண்மை ஆண்டுகளில் வளர்ச்சி கண்டு வருகிறது. தமிழகத்திலும் அதுதான் நிலைமை. இவ்வாறு ஒரு பெரிய பொருளாதாரத்தோடு சிறிய இலங்கைத் தீவை நிலத்தால் இணைத்தால், இலங்கைத் தீவு விழுங்கப்பட்டு விடும் என்ற ஒரு பயத்தை சிங்கள மக்கள் மத்தியில் இலகுவாகத் தூண்ட முடியும். இந்த விடயத்தை ரணில் எப்படிக் கையாள்வாரோ தெரியவில்லை. ஆனால் அவர் ஒரு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி. பாலங் கட்டத் தயார் என்று சொன்னதிலிருந்து அவர் பின்வாங்க முடியுமா இல்லையா என்பது இந்தியா அந்த விடயத்தை எப்படிக் கையாளப்போகிறது என்பதில்தான் தங்கியிருக்கின்றது.

புதுடில்லி ஜேவிபியை அழைத்து கதைத்தமையும் ரணில் மீது அழுத்தத்தைப் பிரயோகிக்கும் நோக்கிலான ஒரு நடவடிக்கைதான்.ரணிலுக்கு எதிராகக் கையாளப்படத்தக்க சக்திகளை இந்தியா அரவணைக்கிறது என்று பொருள்.

எதுவாயினும், அடுத்த ஜனாதிபதித் தேர்தல் வரையிலும் இந்தியா தனக்கு நெருக்கடிகளைத் தரக்கூடாது என்று ரணில் கருதுவதால், அவர் இந்தியாவை எப்படியும் சுதாகரிக்கத்தான் முயற்சிப்பார்.

இவ்வாறாக தென்னிலங்கையில் ஜனாதிபதித் தேர்தலை நோக்கி கட்சிகள் வியூகங்களை அமைத்து உழைத்து வருகின்றன. தமிழ்த் தரப்பிலோ பிரதான கட்சி நீதிமன்றத்தில் இருந்து வீட்டுக்கு  வரமுடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது.ஒரு கட்சி புறக்கணிப்பு என்று சொல்லிவிட்டு ஒதுங்கி விட்டது.தமிழ்ப் பொது வேட்பாளரை  முன்னிறுத்தும் கட்சிகள் கருத்துருவாக்கம்  என்ற கட்டத்தைத் கடந்து அதற்கான கட்டமைப்பு சார்ந்த நடவடிக்கைகளில் இன்னமும் இறங்கவில்லை. தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது கடந்த வாரக் கட்டுரையில் கூறப்பட்டது போல,தமிழ் ஐக்கியந்தான்.கடந்த 15 ஆண்டுகளாக முடியாமல் போன காரியம் அது.கடந்த மாதம் தமிழக முதல்வருக்கு அனுப்பப்பட்ட கூட்டுக் கடிதத்தைப் போல,அரிதாக ஏதாவது நடக்கும். மற்றும் படி கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதில் எல்லாக் கட்சிகளுமே தோல்வியடைந்து விட்டன.இந்த லட்சணத்தில் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை நோக்கி இதே கட்சிகளை எப்படி ஒருங்கிணைப்பது? அல்லது கட்சிகளைக் கடந்து மக்கள் அமைப்புகள் அதை முன்னெடுக்க வேண்டுமா ?

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *